Showing posts with label பொது.. Show all posts
Showing posts with label பொது.. Show all posts

Monday, July 13, 2026

மணம் வீசும் கதம்ப மாலை

 கதம்பம்.

பொதுவாக கதம்பமென்றால், பல் சுவை நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்துத் கலை நிகழ்ச்சியாகத்  தருவது, தத்தம் ஊர்களில் கிடைக்கும் பல்வேறு மணம் வீசும் மலர்களை கதம்ப மாலையாக்கி கட்டி இறைவனுக்குச் சூட்டுவது, பெண்கள் வீட்டின் விஷேடங்களுக்காக அந்த கதம்ப மாலைகளில் வீட்டை அலங்கரிக்கவும், கதம்ப மலர்ச் சரங்களைச் சூடி தங்களை அலங்காரம் செய்து கொள்வது  போன்றவையாலும் அப்பெயர் பெற்றது. 

மேலும், பல்வேறு காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து சமைத்து கதம்ப உணவும் தயார் செய்யலாம். இதையும் கதம்பச்சாப்பாடும், எனவும், எல்லாவிதமான காய்களை சேர்த்துச் செய்யும், கூட்டுக்கு கதம்ப கூட்டு எனவும், கதம்ப சாம்பார் எனவும் வகைப்படுத்தி ரசிப்போம். உண்போம். 

இங்கு (பதிவுலகில்) நம் பதிவுலக நட்புகளும், கதம்பமென்ற பெயரில், பல செய்திகளை தொகுத்து வாரம் ஒருமுறையோ, இல்லை மாதமிருமுறையோ தருகின்றனர். முன்பிருந்தே அவ்விதம் அடிக்கடி நானும் ஏதாவது எழுத நினைப்பேன். (ஆமாம்..! ஒரு செய்தியையே ஒழுங்காக முடித்துத் தர இயலவில்லை. இதில் உனக்கு பல செய்திகளை கதம்பமாக கட்டி எழுதும்  ஆசை வேறா? என என் மனது பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து  கண்டிக்கிறது./ கர்ஜிக்கிறது.😡 👺. :)) ) ஆனால், என்னால் இப்போதெல்லாம் என்னவோ எழுதவே இயலாமல் போய் விட்டது. அத்தோடு, சென்ற பதிவுக்கு முன் பதிவுக்கு வந்தவர்களை வரவேற்கவும், அவர்கள் கருத்துக்கு பதில் கருத்து தரவுமே அவகாசங்கள் ஏதும் இல்லாமல் போய் விட்டதை நினைத்து உண்மையிலேயே மிகவும். வருத்தமடைகிறேன்.இந்த இடத்தில் என் சகோதர சகோதரிகள் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும். 🙏. 

ஆனால், முன்பு போல் என் நட்பு பதிவர்களின் அனைத்து தளங்களுக்கும் சென்று கருத்துக்கள் மட்டும் அளித்து வருகிறேன்.அதுவே சில சமயங்களில் ஒரிரு பதிவுகளுக்கு என் பல பிரச்சனைகளில் செல்ல இயலாமலும் போய் விடுகிறது. அதற்கும் மன்னிக்கவும். 

சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தன் சிறப்புமிக்க கவிதைகள், அசத்தலான சிறுகதைகள், போன்றவைகளை  பதிவர்களாகிய நாங்கள் நேசிக்கும் "எங்கள் விருப்பமான எ. பியில்" வியாழனன்று சிறந்த பலர் படிக்காத செய்திகளை தொகுத்து கொடுப்பதுடன், செய்தியின் இணைப்பை இணைத்தும் தருகிறார். வெள்ளியிலும் அவ்வாறே அவர் பதிவு அலங்கரிக்கப்படுகின்றன. அமர்க்களப்படுகின்றன. அதிசயக்கப்படுகின்றன. ஆச்சரியப்படுத்தவும் வைக்கின்றன. 

அது போலவே வார முதல் நாளான திங்களில், "தின்ன தின்ன ஆசை" பிறக்கும் வண்ணம் பலரின் கைவண்ணங்களையும், அவரின் சொந்த தயாரிப்புகளையும் அவர் தளத்தில் பகிர்வதை காண முடியும்.

பின் மறக்கவியலாத பல சிறந்த எழுத்தாளர்களின்  பொக்கிஷங்களுடன், எழுத்தின் சிறப்பை உணர்த்(தி)த வரும்  இன்றைய (பதிவர்கள்) எழுத்தாளர்களின் பட்டியலோடு, மறுநாளைய செவ்வாயும் அங்கு மலர்கிறது. இங்கும் பல நேரங்களில் அவர் எழுதிய அற்புதமான கதைகளும், அன்று  கொடிகட்டிப் பறக்கும். 

நவகிரஹங்களில் படிப்பறிவான புதனின் பார்வையோடு, பதிவர்களின் பண்பட்ட கேள்வி பதில்கள், பக்குவப்பட்ட, பல உள்ளங்களின் தொகுப்பாக வெளி வரும் புகைப்படங்கள், சிறந்த சிந்தனை சிறதல்களுடன் வெளி வரும் கதைகள், அனுபவங்கள் என சகோதரர் கௌதமன் அவர்களின் முயற்சியில், மணம் வீசும் மலரொன்று புதன்தோறும் தன் மணம் பரப்பி நம் மனங்களை கொள்ளை கொள்ளும். 

வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி, ஞாயறாகிய இரு நாட்களும்  பல்சுவை களஞ்சியமாக திகழ்ந்து வரும் சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் தெய்வ பக்தியுடன் கலந்த  அறிவு பூர்வமான எழுத்துக்கள் அங்கு மலர்ந்து மணம் வீசுகின்றன. அவரால் அவர் சிறப்பாக சென்ற இடங்களில் எல்லாம் படமெடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நடமாடும் உண்மை சித்திரமாக அங்கு ஒளி வீசி கொண்டிருக்கின்றன. தெய்வீக பக்தியுடன், நாம் பார்த்தறியாத பல இடங்களிலுள்ள,பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை அறிமுகப்படுத்துவதிலும், பழங்கால சரித்திரங்களை நன்கு படித்தறிந்து அலசுவதிலும் இவருக்கு நிகர் இவரே. 

மேலும்  வாரம் ஒரு சிறந்த கதையாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் அதே சனிதோறும் எபியில்  பங்களிக்கிறார். பல சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை அவரால் படித்தறிய முடிகிறது. அவருடன் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் சகோதரர் ஜீவி அவர்களும் கைகோர்த்து கொண்டு பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தந்து படிப்பவர்கள் மனதை சந்தோஷமடைய வைக்கிறார்கள். 

இதில் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் தன் வலைத்தளத்தில், பல அனுபவங்கள்,அவர் எழுதிய சிறுகதைகள், ஆன்மிக கட்டுரைகள் என பகிர்ந்தளிக்கிறார். 

அதுபோல், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் தன் வலைப்பூவில், உளவியல் சம்பந்தமான கட்டுரைகள், அருமையான, யதார்த்தம் மிகுந்த பல சிறுகதைகள், தான் பார்த்து ரசித்த இடங்களின் இயற்கை வனப்புக்களைப் பற்றிய கட்டுரைகள், சிறந்த கற்பனை கதைகள் என எழுதி படிக்கும் வாசகர்களை மகிழ்வுறச் செய்கிறார். 

தன் வாழ்வின் சிறப்பான அனுபவங்களை, கதையாகவும், கவிதையாகவும் ஒருசேர திரட்டித் தந்து நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல மனமும், பண்பு நிறைந்த குணமும் கொண்டவரான சகோதரர் கில்லர்ஜி அவர்களின் பதிவை நாம் படிப்பதே ஒரு வரமென நினைக்க வேண்டுமென்ற வண்ணம்  அவரின் அற்புதமான கற்பனைகள் அவர் பதிவுகளில் சிறகடிக்கின்றன. என் ஆரம்பகால வலைத்தள வருகையிலிருந்து இன்று வரை என் எந்தவொரு பதிவுகளுக்கும் தவறாமல் வந்து படித்து, சிறந்த கருத்துகளை தந்து, என் எழுத்துக்களை ஊக்கமுற செய்தவர் இவர். இவரின் அன்பான நட்பும் என்னை மேன்மையுற செய்கிறது. 

தாம் "சந்தித்ததை, சிந்திக்கச் செய்யும்" வண்ணமாய் தன் எழுத்தால் கம்பீரநடை போடும் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்கள் தான் இதுவரைச் சென்ற பயணங்களின் கட்டுரைகள், மற்றும் பல செய்திகளைச் சொல்லும் கதம்பங்கள், தன் நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாக தம் நட்புகளின் அருமையான  எழுத்துக்கள் என அனைத்தையும் அவர் தம் வலைப்பூவில்  பகிர்ந்தளிக்கிறார். 

அவரின் துணைவியான ஆதி வெங்கட் அவர்களின் சிறப்பான பகிர்வுகளும், புதுமையான சமையல்களுடன் கலக்கி வரும் அவரின் எழுத்துக்களும் அவர் வலைப்பூவை சிறப்புறச் செய்கின்றன. அவர்களது குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக திகழ்கிறது.

சகோதரி கோமதி அரசு அவர்கள், அவர்கள் "பக்கமாக" அவர்கள் வலைப்பூவில் பல பதிவுகளுடன் சிறப்பாக பங்களித்து வருவதை வாழ்த்தவோ, பாராட்டவோ வார்த்தைகளே கிடையாது. அவர் பறவைகளின் நேசராக, பாசம் மிகுந்த அன்னையாக, நட்புகள், உறவுகள் அனைவரையும் எப்போதும் "வாழ்க வளமுடன்" என்ற அன்பான ஒரு  வார்த்தையாலேயே கட்டிப் போடும் அழகை விவரிக்க என்னிடம்  வார்த்தைகளே இல்லை. மாறாக என் பணிவான வணக்கங்களை அவருக்குத் தெரிவித்து மகிழ்கிறேன். 

சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் வலைத்தளம் மிக பிரசித்தி பெற்ற வலைத்தளம். அவரது "எண்ணங்களாக" அவரது பதிவுகளில் மலரும் மலர்கள் அனைத்தும் அதிக நறுமணமுள்ளவை.  அதில் அவரின் வாழ்வியல் அனுபவங்கள், ஆன்மீகம், சிறப்பான சமையல் என அவரின் பங்களிப்புகள் ஏராளமானவை. அவரது திறமையை பார்த்து அப்போதிலிருந்து இப்போது  வரை வியக்கிறேன். மதிக்கிறேன். அவர் என் நட்பானதை நினைத்து  மனது கொள்ளாத பெருமிதமும் அடைகிறேன். 

மேலும் வலைத்தளத்தில் தாம் அறிந்தவற்றை, நமக்குப் புரியும்படி தமது தெள்ளிய தமிழில், யார் மனமும் கோணாதபடிக்கு சிறந்த பதிவுகளை தந்து வரும் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களது எழுத்துக்களும் சிறந்த வகையை சார்ந்தவை. எத்தனை நயமான  குடும்ப கதைகள், கவிதைகள், என இவரின், கற்பனை சிந்தனைகளிலிருந்து தோன்றி வந்துள்ளது என்பதை கணக்கிடவே இயலாது. அது தவிர ஆன்மீகம், இறைபக்தி என்ற ஊற்று இவரின் மனதில் புறப்பட்டு, எழுத்தால் அது ஏனைய பதிவர்களை தெய்வ பக்தியில் மனம் குளிரச் செய்வதும் இவரின் வாடிக்கைகளில் ஒன்று. இவரின் எழுத்துக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். 

பதிவர்கள் வரிசையில், நீண்ட காலமாக தன் அனுபவங்களை, கதைகள் மாதிரியும், அவ்வப்போது உண்மை நிகழ்வாகவும், அன்புடன் சொல்லி வரும் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களது திறமையை மனம் நிறைந்து எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் அவர்களின் ஆன்மீக பதிவுகள், சமையல் பதிவுகள் என தம் பதிவை அலங்கரிப்பதில் வல்லவர். மொத்தத்தில் இவர் அன்பே உருவானவர். இவருடன் சமீப காலமாக நான் பெற்ற நட்பும், என்னை பெருமையடைய வைக்கும். 

அதிரடியாக வந்து பல கருத்துக்களை, பதிவுகளுக்கு தந்து தன் நகைச்சுவைப் பேச்சால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சகோதரி அதிரா அவர்களின் வலைப்பூவும், மறக்கவொண்ணா அவரின் பல திறமைகளை பறைசாற்றும். திறமையான அவரின் சமையல், பல அறிவார்ந்த விஷயங்கள், என பகிர்ந்தளிப்பதே அவர் பதிவுகளின் நோக்கம். அவரின் பதிவுகளை படிப்பதே நம் அறிவுக்கு விருந்தாக அமையும். மேலும் தன் நகைச்சுவைப் பேச்சால் நம் இதயங்களை கட்டிப் போடும் நுணுக்கங்கள் அறிந்தவர். வலையுலகில் இவரின் நட்பும் நான் செய்த பெருந்தவமே. 

இன்னமும் நான் முதலில் வலைத்தளமொன்றை ஆரம்பித்த போது, என் ஒவ்வொரு பதிவுக்கும் விடாமல் வந்து ஊக்கம் மிகுந்த கருத்துக்களைத் தந்து என் எழுத்துக்களை சிறப்புறச் செய்த "திருக்குறள் வித்தகர்"சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், மற்றும், கவிதையிலும்,,பல நல்ல கருத்துள்ள பதிவுகளாலும் தன் வலைத்தளத்தை செவ்வனே நடத்தி வரும்  சகோதரர் யதோ ரமணி அவர்கள், மற்றும் சிறந்த தன் வலைத்தளத்தில் பல செய்திகளையும், சிறப்பான கட்டுரைகளையும் தம் அனுபவங்களையும்  பகிர்ந்து வரும் சகோதரர் திரு.   DR.B.ஜம்புலிங்கம் அவர்கள் என அனைவருக்கும்  என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு.🙏. 

இது போக நான் எப்போதேனும் படித்து ரசித்த பதிவுகள்,மற்றும் அதன் உரிமையாளர்களான பதிவர்களுக்கும்,அதுபோல் என் பதிவுக்கும் அவ்வப்போது வந்து என்னை என் எழுத்துக்களை உற்சாகப்படுத்தி சென்றிருக்கும் அன்பான பதிவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

மேலும் நான் வலைத்தளம் ஆரம்பித்த போது வந்து கருத்துக்கள் தந்த பல பதிவர்கள் எதனாலேயோ அவர்களால்  வர இயலாமல் போய் விட்டது என் துரதிர்ஷ்டமே. 

இப்போது இவர்களின் அறிமுகங்கள்  ஏன் என அறிமுகமானவர்களுக்கே ஒரு கேள்வி வரலாம். என் வலைத்தள பிரவேசத்திற்குப் பின் எனக்கு கிடைத்த, என்றுமே வாடாத மணம் வீசும் மலர்கள் இவர்கள். அதனால் இவர்களைக் கொண்டே சிறந்ததொரு கதம்பமாக மாலை சூடி இங்கு  தொடுத்துள்ளேன். 

ஏனெனில் நான் என் வலைத்தளமென்ற ஒன்றை  ஆரம்பித்து, இந்த வருடத்துடன் பதினாறு வருடங்களாகி விட்டன. இது வரை நான் எழுத்துலகில்  சாதித்தது (வெறும் பூஜ்யந்தான்)  ஒன்றுமில்லையென்றாலும், இந்த காலகட்டத்தில், சிறப்பு மிக்க இத்தனை வலைத்தள நட்"பூ"களைப் பரிசாகக் பெற்றுள்ளேன். இன்று வரை இவர்கள் அனைவரும் நான் ஏதோ கோணல்மானலாக எழுதி வரும் என் எழுத்துக்களுக்கு உரமாக,உயிராக இருந்துள்ளனர்./ இருக்கின்றனர். அதனால், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த கதம்ப மலர் மாலை என் மனதில் ஒரு பதிவாக உருவானது. 🙏. 

இப்படியொரு கதம்பமாலை தொடுத்ததில் என் கவனப்பிசகாக ஏதேனும் தவறிருந்தாலும், குறையிருந்தாலும் அனைவரும் என்னை மன்னிக்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏. 

Wednesday, July 9, 2025

மலர்களின் படங்களும், பாடலும்

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

இளமங்கை வாழ்வில்

தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா


காதலின் ராணி

கலை தரும் வாணி

காதலின் ராணி

கலை தரும் வாணி

என் இதய வானில்

இன்ப ராணி, ராணி ராணி மகராணி

ஊரினில் உறவை தேடிடும் நினைவு

பருவ தேரினில் ஆடும்

தெய்வத்தின் கனவு

ஊரினில் உறவை தேடிடும் நினைவு

பருவ தேரினில் ஆடும்

தெய்வத்தின் கனவு

ஆசையின் பாசம்

பேசிடும் உரிமை

தன்மானத்தில் விளையும்

உலகினில் பெருமை

காதலின் ராணி

கலை தரும் வாணி

காதலின் ராணி

பூங்கொடி முகத்தில்

புன்னகை வெள்ளம்

அமுத தமிழிசை பாடும்

கவிதைகள் சொல்லும்

தலைமுறை புகழின்

குல நலம் காப்போம்

ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

பாரத வீரர் மார்பினில் இணையும்

பாவையின் மனமே கனிபோல் கனியும்

வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்

அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா. 


இப்பாடலின் வரிகளை படிக்கும் போதே எங்கோ எப்போதோ கேட்டு ரசித்த நினைவு உங்களுக்கும் வருமென நினைக்கிறேன். 

இநதப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்.. வள்ளி தெய்வானை இது 1973 ல் வெளிவந்த திரைப்படமாம்.முக்கிய கதாபாத்திரத்தில் ரவிசந்திரன், பிரமிளா நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் : என். எஸ் தியாகராஜன் பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா இந்தப்பபாடலை எழுதியவர் : தேன்கட்சி பாரதிசாமி. இந்த பாடலுக்கு ஏற்றபடி ஆடிப்பாடி நடித்திருப்பவர்கள் நடிகர் சசிக்குமார், மற்றும் நடிகை எம் பானுமதி. 

எங்கள் வீட்டு மாடியில் இங்கு குடியிருக்கும் ஒருவர் மாடித்தோட்டம் மாதிரி மொட்டைமாடியில் ஒரு பகுதியில் அமைத்திருக்கிறார். அதில் அழகான மலர்கள், காய்கள் எனப் பூத்து காய்த்திருந்தது. எனக்குத்தான் இதைப்பார்த்ததும் புகைப்படங்கள் எடுக்க ஆசை வருமே. அதன்படி அதையெல்லாம் எடுத்ததும் இந்தப்பாடல் (மலர்களின் ராஜா) எப்போதோ சிலோன்  வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்ததுதான். (கருப்பு வெள்ளை படந்தான்) மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உடனே பாடல், மற்றும் இந்தப் படத்தைப் பற்றிய விபரம் அறிய கூகுளில் முயன்றேன். அங்கு கிடைத்ததை பதிவாகவும் பதிந்திருக்கிறேன். இந்தப்பாடலில் இறுதி வரிகள் நம்தேசம் சம்பந்தபட்டதாக வருகிறது. படம் பார்த்தால்,அந்த வரிகளுக்கு என்ன சம்பந்தம் என்பது புரியுமோ என்னவோ..! எனக்கு இந்த பாடல் காட்சிகள் அன்றி பாடலை முழுதாக கேட்க பிடித்திருந்தது. (ஆனாலும், பாடலை காட்சிகளுடன் கீழே பதிவின்  கடைசியில் பகிர்ந்திருக்கிறேன். அனைவரும் கேட்டு ரசிக்கவும்.) அதனால் இங்கு பகிர்கிறேன். நீங்களும் இதை ஏற்கனவே கேட்டிருப்பீர்களோ என்னவோ..! ஒருவேளை நம் ஸ்ரீராம் சகோதரர் கண்டிப்பாக கேட்டு ரசித்ததிருப்பார் என நினைக்(நம்பு)கிறேன். 

இதில் தேசிய கொடிப்படம் மட்டும் கூகுளிலிருந்துதான் (பாடல், அதன் விபரங்களுக்கும் கூகுளுக்கு நன்றி. ) எடுத்தேன் மற்றபடி நான் மொட்டை மாடி தோட்டத்தில் எடுத்த அழகான மலர்களின் (சில படங்கள் என் ரசனைக்கேற்ப ஏற்கனவே என் கைப்பேசியில்  எடுத்ததையும் சேர்த்திருக்கிறேன் . ) படங்களுக்குப் பொருத்தமாக இந்தப் பாடல்  வரிகளை இணைத்து ஒரு புது முயற்சியாக இந்தப்பதிவு.

மலர்களின் ராஜா



அழகிய ரோஜா

  

இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா


காதலின் ராணி
கலை தரும் வாணி


என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி


ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு. 


ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை


தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை


காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி


பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்


தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்


ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்






மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா



பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்



வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்


அதை வென்றிட 
வேண்டும் 
தேசிய கீதம்


மலர்களின் ராஜா
அழகிய ரோஜா



இதோ அந்த அருமையான பாடல். 


என்ன நட்புகளே ....! படங்களையும், பாடலையும் பார்த்து, கேட்டு ரசித்தீர்களா? அப்படியாயின் ரசித்தமைக்கு மிக்க நன்றி. 🙏. 

Monday, June 2, 2025

நிலையுணர்ந்த நிதர்சனம்.

 பறவைகளின் பரந்த மனது. 

"ஏன் மெளனமாக இருக்கிறாய்? வந்ததிலிருந்து ஏதும் பேசவேயில்லையே..? களைப்பாக இருக்கிறதா?" 

"களைப்பு ஒருபக்கமிருக்கட்டும்.. எனக்கு ஒரே கவலையாக உள்ளது. மனதில் நிம்மதியே இல்லை." 

"ஏன்? உடல்நிலை ஏதும் சரியில்லையா? 

" பச்.. உடல் நிலை சரியில்லை யென்றாலும், யார்தான் நம்மை கவனிக்கப் போகிறார்கள்.? அந்த இயற்கையே நம்மை குணப்படுத்தி விடும். நாமும் எப்போதும் போல் அதுவரை பொறுமை காத்து விடுவோம்." 

"பின் வேறுதான்  என்ன?" 

"உனக்கு நம்மைச் சுற்றிலும் நடப்பது புரியவில்லையா? இல்லை, தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறாயா.? 

"தெரிகிறது. அப்படியே தெரிந்தும் புரிந்தும் என்ன செய்ய முடியுமென்கிறாய்? இது முழுக்க நம்மை இங்கிருந்து விரட்டுபவர்களின் சுயநலன்கள்.! இதில் நம் நலனைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?" 

"அதோ அந்த மரத்தில் கட்டிய நம் வீடு இவர்கள் வந்து, இதுவரை இங்கு சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த பச்சை பசும் நிலத்தை அவர்களின் வீடுகளை உருவாக்க வேண்டி, கொத்திச்சிதைத்து சமன் செய்த அமர்க்களத்தில், அதைக் கண்ட நம் பயத்தில், என்ன கதியாகி விட்டதென்று தெரியவில்லை அவர்களின் அந்த விரட்டலுக்குப் பயந்து, இப்போதைக்கு இந்தச் சின்ன செடியில் வந்து அடைக்கலமாகி உள்ளோம். விரைவில் இந்தச் செடியையும் களைந்து விடுவார்கள். பின் வேறு எங்கு போவது? "

" வேறு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியதுதான். அங்கும் இப்படித்தான் வந்து துரத்துவார்கள். அவர்களின் வீட்டில் இப்படியான துரத்தல்களுக்கு அவர்கள் வீட்டவர்களே பலியாகும் போது நம்மைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை..!" 

" என்ன சொல்கிறாய்? " யார் யாரை அவர்கள் வீட்டிலிருந்து துரத்தினார்கள்?"

நமக்காவது இப்படி சேர்ந்து இருந்து பின் நம் வாரிசுகளை பெற்று அரவணைத்து ஊட்டி வளர்த்து அவர்கள் ஒரளவு வளர்ந்ததும் அவரவர்கள் செல்லும் பாதையில் போக விடை தருவது அந்த  கடவுள் தந்த நியதியாக உள்ளது. மேலும் இது நாம் இந்த உலகுக்கு வரும் போதே பெற்று வந்த வரம். ஆனால், இந்த மனிதர்களுக்கு, பெற்ற உறவுகள், பிற உறவுகள் என அன்புடன்  அரவணைத்துச் செல்லும் பண்பை இறைவன் ஊட்டி அவர்களை இங்கு வாழ படைத்திருந்தும், அவர்கள் அதைப்பின் பற்றி வாழ்வதையோ, வாழ வேண்டுமென்பதையோ நினைத்து கவலையுறாமல், அவர்களும், வளர்ந்தபின் நமக்கு இறைவன் வகுத்துத் தந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். அதற்காகத்தான், அவர்களின் அந்த சுதந்திர  வசதிகளுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் தனித்தனி வீடுகளுக்காக, நம்மை, நம் இனத்தை, நம் சுதந்திரத்திற்கு இடையூறாக வந்து குறி வைத்து விரட்டுகிறார்கள். ஆனால், இதன் பலனை இறைவன் தரும் போது மட்டும் நொந்து கொள்வார்கள். என்ன செய்வது? எல்லாம் விதிப்பயன்.. .! 

அதோ பார்..! நம்மைப் போன்ற  ஓரினம் துணையை இழந்தோ, பிரிந்தோ தனிமையில் வாடுகிறது.மின்சார கம்பியில் மின்சாரம் நம் மீது பாயாத வேளை வரை இது மகிழ்ச்சிதான். ஆனால், அன்றொரு நாள் வேறு ஒரு நம்மினம் ...! அதுவும் அது மின்சார கம்பியில் வந்தமர்ந்த சட்டென்ற அந்த நேரம் என் கண்ணெதிரிலேயே...! அதன் முடிவும்..! அதைக்கண்டது முதல் இன்னமும் என் மனம் சரியில்லை. நமக்கென்று இந்த சோதனையை இறைவன் வகுத்தனா? இல்லை, இவையும் உலகில் அனைவருக்குமான விதியின் முடிவா? ஒன்றும் புரியவில்லை போ..! 

"பாவம் பரிதாபந்தான்..! அதைக் கண்டவுடன் உடனே சென்று காப்பாற்ற எந்த உபாயமும் நாம் கற்கவில்லயே.! . நீ சொல்வது போல இந்த  மனிதர்களின் கணக்கையும் ஆராய நாம் யார்? இறைவனின் மனக்கணக்கு அவர்களுக்கும் புரியாது. அப்படியே புரியும் போது, அவர்களின் வேதனை அவர்களுக்குத்தான். அதை மாற்ற அந்த இறைவனாலும் முடியாது. 

சரி... சரி.. வா..! கொஞ்சம் சற்று ஒய்வு எடுத்திருக்கிறோம். இப்போது நாம் பேசியதில், கொஞ்சம் மனதின் கவலையும், உடலின் களைப்பும் குறைந்துள்ளது. இனி வேற்றிடம் செல்ல நமக்கு மனதில் பலமும், உடலில் இறக்கைகள் என்ற ஆயுதத்தையும், நமக்கெனவே ஆதாயமாக தந்திருக்கிறார் அந்த இறைவன். அதைப் பயன்படுத்தி இப்போதைக்கு நல்ல மாற்றிடத்தை தேடிச் செல்வோம் வா..! "

கீழே பார்..! நம்மை அழிக்க காத்திருக்கும் இந்த மனிதர்களின் ஆயுதங்கள். அவை நாம் அமர்ந்திருக்கும் செடியை களைந்து அகற்ற வரும் முன், நம் கவலைகளை களைந்து  இறைவனிடத்தில் தந்து விட்டு இறைவன் நமக்காக  நமக்களிததிருக்கும் புது வாழ்வை ஏற்றுக் கொள்வோம். வா..! 


இப்படித்தான் அவைகள் பேசி இவ்வுலகில் வாழ்வதற்குரிய ஒரு விதமான மனமகிழ்வையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கி கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையின் பார்வைகளோடு, இப்புகைப்படங்களை எடுத்த நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.? பதிவை ரசித்த அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்.

Saturday, November 9, 2024

எதிர்பார்க்காத நிமிடங்கள்.

நான் சின்ன வயதில் அம்மா வீட்டில் இருக்கும் போது நாங்கள்..(நாங்கள் என்றால், வீட்டிலுள்ள அங்கத்தினர்) திரைப்படங்களை அடிக்கடி  திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பது கொஞ்சம் அரிதானதுதான். ஆனாலும், நல்ல குடும்ப படங்கள், பக்தி படங்கள், என்றால், வீட்டில், அதுவும் பள்ளி பரீட்சை முடிந்த  விடுமுறை தினங்களில், அழைத்துச் செல்வார்கள். வேறு எவர்களோடும், (உறவு முறை, நட்பு) எங்களை அனுப்பியதில்லை. என் அண்ணாவுக்கு மட்டும் கல்லூரி காலங்களில் தன் நண்பர்களோடு செல்ல அனுமதி கிடைத்து விடும். அம்மா, பாட்டி இவர்களோடு நல்ல படமாக இருந்தால் நாங்கள் சேர்ந்து போவோம். ஆனால் எல்லாமே வந்து ஒரிரு ஆண்டுகள் ஆன பழைய படங்கள்தாம். அவர்களோடு சென்று அவர்கள் காலத்திலும் வந்த ஒரிரு படங்களையும் பார்த்துள்ளேன். 

அப்போதுள்ள  நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வேறு பொழுது போக்குகள் என்றில்லை. அருகில் இருக்கும் கோவில்களில் ஏதேனும் விஷேடங்கள், என வந்தாலொழிய கோவில்களுக்கு தினமும் செல்லும் பழக்கமும் இல்லை. இப்போது போல் மூலைக்கு மூலை பார்க்,தெருவுக்கு தெரு  விதவிதமான பேன்சி கடைகள் என எதுவும் உற்பத்தியாகவில்லை. வாகனப் பெருக்கங்ககளும் அவ்வளவாக இல்லை. க. கெ. கு. சு என்ற பழமொழிக்கேற்ப அங்கே உள்ள  திரையரங்கம் ஒன்றுதான் வழி. 

அப்போது தி. லி யில்  சென்ட்ரல், பார்வதி,ரத்னா, பாப்புலர், , ராயல் தியேட்டர் என அனேக திரையரங்குகள். இருந்தன. அப்புறம் பூரணகலா, இன்னும் பல திரையரங்குகள் புதிதாக வேறு முளைத்து வந்தன. அங்கெல்லாம் சென்று கூட ஓரிரு படங்கள் பார்த்துள்ளோம். (இப்போது அந்த திரையரங்குகள் இருக்கிறதாவென தெரியவில்லை) பொதுவாக பெரிய நகரங்களில் தீபாவளிக்கு, பொங்கலுக்கென வெளியிடும் புதுப் படங்கள் இங்கு வருவதற்கே தாமதமாகி விடும். ஆனால், அப்போது வரும் அந்த படங்களை பார்க்க வேண்டுமென இருந்த ஆர்வங்கள் இப்போது என்னவோ சுத்தமாக இல்லை. அது வேறு விஷயம். 

ஒரு தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் படங்களை அடுத்த தீபாவளிக்குள்...!! , இல்லை, அடுத்த தீபாவளியன்று வேறு ஏதாவது திரையரங்கில் அதே படங்களை போட்டால், செல்வோம். அதற்கு கூட அந்த தீபாவளி, பொங்கல் நாளன்று செல்ல மாட்டோம். ஒரு வாரத்திற்கு மேலாகவே, திரை அரங்குகளில் ஒரே கூட்டமாக இருக்கும் என வீட்டில் பல அபிப்பிராயங்கள் சொல்வார்கள். 

தீபாவளி முடிந்து ஒரு மாதங்களுக்கு மேலாகவே  தினசரி ஒவ்வொரு காட்சிகளுக்கும் வரும் கூட்டங்கள் ஆடி அடங்கிய மறுநாளோ, இல்லை, அதற்கடுத்த நாளோ,"இப்படம் இன்றே கடைசி" என்று திரையரங்கிலிருந்து அந்த படத்தை எடுத்து விடுவார்கள் என்ற ஒரு நிர்பந்த காலகட்டத்தில் அந்த படத்தை ஏற்கனவே ஒரு /பல முறை பார்த்தவர்கள் (வேறு யார்..? வீட்டின் அருகில் இருக்கும் சுற்றங்கள், நட்புகள்தான் )  "ஐயோ..! இன்னுமா நீங்கள் அந்த படத்தை பார்க்கவில்லை..? அதில் அந்த  கதாநாயகன், கதாநாயகி நடிப்பும் அந்த கதையும், முடிவும், பாடல்களும் அவ்வளவு  நன்றாக இருக்கிறது. இப்படி இதுநாள் வரை  எப்படி பார்க்காமல் இருக்கிறீர்களே?" என வீட்டில் அம்மா, பாட்டியிடம் மதிய வேளைகளில் அங்கலாய்த்த பின், "ஒரு வேளை அதை பார்க்கா விட்டால் ஏதேனும், உலகமகா குற்றமாகி விடுமோ" என்ற அவர்களின், (சமயங்களில் நானும் அவர்களுடன் இணைந்து ஏற்படுத்தும்) நினைப்பின் அலசலில், " இன்று போகலாமா.?" என ஒரு மட்டும் முடிவு செய்து புறப்படுவோம். 

அந்த அளவுக்கு திரைப்படங்கள் பார்க்க தயக்கங்கள், கட்டுப்பாடுகள். இத்தனைக்கும் தரை டிக்கெட் விலை நாலணாதான். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. அந்த பெஞ்சில் பின்னாடி சாய்ந்து கொள்ள இரண்டு கட்டைகள் வைத்த பெஞ்ச் கட்டணம் முக்கால் ரூபாய், தனித்தனியாக உட்கார வசதியாக இருக்கும் சேர் ஒரு ரூபாய் என படிப்படியான வசதிகளுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் வேறு. அதில் அந்த முதலில் சொன்ன ஒருவருக்கு நாலணா என்றால், மூவர் சென்றால் கூட, முக்கால் ரூபாயாகி விடும். அது வீட்டின் அன்றாட இதர செலவுகளுக்கு பயன்படுமே என்ற நினைவுகள் வேறு வந்து படங்கள் பார்ப்பதை சில சமயம் தடை செய்யும். அப்போது வீட்டின்  பணத்தட்டுப்பாடுகள் சினிமா பார்க்கும் ஆசைகளுக்கு பெரும்பாலும் தடை போடும். 

நாட்கள் செல்லச் செல்ல திரைப்படம் பார்ப்பதற்கான கட்டணங்கள், அணாவிலிருந்து ஒன்று, இரண்டென்ற ரூபாய்க்கு வந்து, ஐம்பது நூறாக மாறி, இன்று ஐநூறு, ஆயிரம் எனவும் வந்து விட்டது. அதுவும் முதல் நாளாகிய  இன்றே பார்த்து விட வேண்டுமென்பவர்களுக்கு ஆயிரத்திலிருந்து மேலும் பல ஆயிரங்களை சேர்த்து தரும்படியாக (பிளாக் விற்பனையில்) சூழலைக் கூட தந்து விடும். 

எங்கள் திருமணத்திற்குப் பின் நான் சென்ற படங்களையும் எண்ணி கணக்கில் சொல்லி விடலாம். கூட்டு குடும்பம், குடும்பத்தில் பெரியவர்கள் என்ற மரியாதைகள், அவர்கள் விருப்பமின்றி வெளியில் செல்ல முடியாத சூழ்நிலைகள், என வாழ்ந்த போது சினிமாக்கள் எல்லாம் ஒரு  கனவுதான்.(ஆமாம்.. இதில் இரவு நேர கனவு பலிக்குமா? பகல் நேர கனவு பலிக்குமா? "பகல் கனவு பலிக்காது" என்பார்கள்.ஏன் அப்படி? பகலில் அவ்வளவாக ஆழ்ந்த உறக்கம் வராது எனபதினாலா ? பகலில் சட்டென  முழிப்பு வந்து விடும் போது கண்ட கனவுகள் சட்டென அது போலவே கரைந்து விட வாய்ப்புள்ளது என்பதாலா..? அதைப்பற்றி பிறகு ஒரு முறை விவாதிப்போம். :)))    ) பிறகு வந்த காலங்களில், சிறு குழந்தைகளை அழைத்து செல்வதென்பதும், இயலாத காரியங்களாக போய் விட்டது. 

முதன் முதலில் மக்களுக்காக தோன்றிய பொதிகை/ தூர்தர்ஷன் தொலைக்காட்சிகள்தான் ஏதோ ஒரு  தமிழ் படத்தை ஞாயிறன்று மாலை இடையிடையே ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு இடையே ஒளிபரப்பி, என்னைப் போல் திரையரங்கம் சென்று  திரைப்படம் பார்க்காதவர்களுக்காக புண்ணியம் தேடிக் கொண்டது. அப்போது எங்கள்  புகுந்த வீட்டிலும் டி. வி கிடையாது. எதற்கு இடத்தை அடைத்துக் கொண்டு என வாங்கவில்லை. தெரிந்தவர் வீட்டிற்கு (ஒரளவுக்கு எங்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படியோ உறவு முறை என்ற சொந்தமும் கூட..!) சென்று, நான், எங்கள் நாத்தனார், அவரின் மகள், மகன் சமயத்தில் என் மாமியார் என அனைவரும் சேர்ந்து சென்று சில படங்கள் பார்த்திருக்கிறோம. அவர்கள் வீட்டில் அப்போதுதான் டி. வி. வாங்கியிருப்பார்கள் போலும். முகம் சுளிக்காமல் வரவேற்று உபசரிப்பார்கள். 

பின்னர் நாளடைவில்  நாங்கள் சென்று வந்த அவர்கள் வீட்டிலும் இந்த மாதிரி நிறைய பேர் பார்க்க வரவே படம் பார்க்க தலைக்கு ஒரு ரூபாய், எட்டணா என வசூல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நல்லதொரு வரும்படிக்கான வழி.:)) (எங்களிடம் அவர்கள்  கேட்கவில்லை. ஆனாலும் எங்கள் மனசாட்சி உறுத்தவே அதன் பின் அங்கு போவதற்கும் எங்கள் புகுந்த வீட்டில் தடையாகி விட்டது.)

அன்று மாலை படம் ஆரம்பித்து விடும் நேரம் நாங்கள் இருந்த சித்ர குளம் தெருவெல்லாம் மக்கள் கூட்டத்தையே காண முடியாது மயிலை கபாலீஸ்வரர் கோவில், மாட வீதிகள் எங்குமே காற்றாட கால் வீசி கூட்டங்களின் இடர்கள் இன்றி அன்று நடக்கலாம். மெரீனா, சாந்தோம் கடற்கரையில் கூட்டங்களின் இரைச்சகள் இல்லாத அலைகளின் ஓசையை மட்டும் ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். அப்படியும் ரசித்திருக்கிறோம். அது ஒரு காலம். 

அதன் பின் சில வருடங்களில் எங்கள் வீட்டில் எப்படியோ டி. வி  (இத்தனைக்கும் அது சின்னதான பிளாக் அண்ட் ஒயிட் டி. வி தான்.) வாங்கியவுடன் அடுத்த  ஞாயறு மாலையை  ஞாயறு முடிந்த மறுநாளாகிய திங்களிலிருந்தே எண்ண ஆரம்பித்தோம்.  வரும் ஞாயறு நல்ல படமாக, இதுவரை பார்க்காத படமாக இருக்க வேண்டுமே என அனைவரின் எதிர்பார்ப்புகளும் இருக்கும். (ஆனால், பழைய படங்களின் அணிவகுப்பே தொடர்ந்து வரும்.) 

அதன் பின் அனேக சேனல்களின் உதயங்கள் வந்து தொலை காட்சி பெட்டியை கலகலக்க வைத்தன. வாரம் ஒரு முறை ஒவ்வொன்றிலும் மாறுப்பட்ட படங்கள். அதன் பின் கேபிள் கனெக்ஷன்களின் உலா வரும் ஒளிக்கதிர்கள். தினமும் ஒரு படம்.... ! (ஆனால் பார்க்கத்தான் நேரம் இருக்காது.குழந்தைகள் அவர்களின் பள்ளி, படிப்பு, வேலைகள், கடமைகள் என அப்போது  கீழே அமர கூட தயங்கும் கால்கள். ) வார விடுமுறைகளில் என்றாவது குடும்பத்துடன் அமர்ந்து நமக்கு பிடித்தமான படங்களை வாடகைக்கு எடுத்து டி. வியுடன் இணைத்துப் பார்க்கும் வசதிகள் என (அப்போதுதான்  வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான டிபன்கள், விதவிதமான சாப்பாடுக்கள், அதை எடுத்து பரிமாறும் வேலைகள் என எனக்கு  அதே கடமைகள் காலோடு கையையும், கண்களையும் கட்டிப் போடும்.) காலம் தன் கால்களை வீசி முன்னேற ஆரம்பித்தது. ஆனால், எனக்கு திரைப்படங்களை பார்க்க மனதில் விருப்பங்கள் இல்லாமலும் போனது.  ( அது இப்படி படங்களை பார்க்கும் நேரத்தில் நம்மால் பார்க்க கூட  இயலாமல் போகிறதே என்ற விரக்தி தந்த வெறுப்பாக கூட இருக்கலாம்:))  இது அந்த வயதின் தாக்கம். ) 

இப்போது தொலைக்காட்சி பெட்டிகளே( டி. வி) விதவிதமான முன்னேற்றங்களை சந்தித்து வந்தும் கூட, அதில் இலவசமாக புது படங்களையே நம் சௌகரியபடி  எப்போதுமே பார்க்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தும் கூட, படங்கள் பார்க்கும் ஆர்வம் எனக்கு போயே போச்சு...! 

இத்தனை பீடிகை இப்போதெற்கு என்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். நீங்களும் என்னுடைய அந்த கால பழைய பல்லவிகளை கேட்டு, அதை நினைத்து சற்றே சலிப்பாவதற்குள் இந்த தீபாவளிக்கு நான் சற்றும் எதிர்பாராது மகன்கள் அன்று வெளி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படமான "அமரனை" பார்க்க ஆன்லைனில் டிக்கெட் எடுத்து விட்டதால், குடும்பத்துடன் சென்று வந்தோம் என்பதை சொல்லி விடுகிறேன். 

"படம் நன்றாக உள்ளது நீங்களும் கண்டிப்பாக வாருங்கள்" என சொன்னதில் அனைவரும் தீபாவளியன்றே மதியம் இரண்டாவது காட்சிக்கு சென்று வந்தோம். 

அன்று காலை அந்த படம் இங்கு  ரீலீஸ் ஆகி, முதல் காட்சி வந்து பின் இரண்டாவது காட்சிக்கு நான் கடந்து வந்த என் இத்தனை வருட வாழ்நாளில், முதன்முறையாக சென்ற முதல் புது திரைப்படம்... ,! அதுவும் தீபாவளியன்றே சென்று வந்த திரைப்படம்..! என்றொரு  பெருமையை அமரன் பிடித்தது. (பெருமை எனக்கா, இல்லை, அந்த படத்திற்கா, என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை உங்கள் கருத்தில் அவசியம்  சொல்லுங்கள்.அன்புடன் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா) 

இரண்டு நாள் கழித்து வந்த  சென்ற ஞாயிறன்று  மீண்டும் ஒரு திரைப்படம். நடிகர்  மம்முட்டியின் மகன் நடித்த "லக்கி பாஸ்கர்" என்ற  திரைப்படம். இது காலை 9 மணிக்கே ஆரம்பம் .! இதுவும் தீடிர் என்றுதான் நான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்தது. 

முதலாவது படம் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உண்மை கதையை மையமாக கொண்டு எடுத்தது. இரண்டாவது படம் வீட்டுக்காக எதையும் செய்ய  துணிச்சலுடன் செயல்படும் வகையை சார்ந்த படம். இரண்டுமே வெவ்வேறான இரு கோணங்கள். அதில் நடித்தவர்களின்  உழைப்பையும், திரைப்படத்தின் மற்ற துறைகளில் சிறந்த அக்கறையுடன் செயல்பட்டவர்களையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். 

எனக்குத்தான் இரு நாட்களும், வீட்டின் வேலைகளோடு வெளியிலும் அலைந்து திரிந்ததில் மிக அசதியாக இருந்தது. அதனால் ஒரு வாரமாக காலையிலேயே பதிவுகளுக்கு வர இயலவில்லை. 

இதனால், இத்தனை நாட்கள் எந்த படங்களையும் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது போய், இந்த இரு புது படங்களை அடுத்தடுத்து பார்த்த நிலையில், இப்போது  படங்களை பார்க்கும் பழைய ஆசைகளும் மீண்டும் மனதில் தலை தூக்கி ஏற்படாமல் இருக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், ஆசைகள்தான் நம் அழிவுக்கும் ஒரு மூல காரணமல்லவா.. ? 

Thursday, July 11, 2024

நாணும் நிலவு.

 நிலா, நிலா. அழகு நிலா.. 




இது மூன்றாம் பிறையில் 

முத்தெனவே முளைத்து வந்த நிலவு.

பொதுவாக மூன்றாம் பிறை

பார்க்கச் சிறந்தது. ஆயினும், 

பார்வையில் படாமல் 

பார்ப்பதரிது என எண்ண வைப்பது. 


மேல் திசை காதல் பார்வையால்

மேக குவியலில் முகம் மறைத்து

மேகங்களுடனே நகர்ந்து, தன் மனது

மோகத்தையும் வெளி காட்டாது

மறுநாள் நாலாம் பிறையில், தன் 

மனதை வெளிப்படுத்த எவ்வித 

தயக்கமின்றி, தடங்களின்றி அது

உற்சாகமாய் உதித்து வருவது

உலகறிந்த விஷயமாகும்.  


இப்படி காணக் கிடைக்காதது அன்று 

இவ்வாறாக கண்களில் பட்டது.

ஆழ் கடலில் உறங்கச் சென்ற 

ஆதவனின்  வெப்பத்தில் 

கசிந்துருகி கனிந்துருகி, அந்த

நீலக்கடலின் நிறம் பெற்று 

நிறம் மாறியதோவென

நினைக்க வைத்த வானம். 


எப்போதும் தன்னிலை உணர்ந்து

தன்னை அரவணைத்துச் செல்லும்

தன் நண்பனான மேகப் 

பொதிகளை  காணாததால் தன்

பொலிவினை சிறைப்பிடித்து

தன் காதலை தங்குதடையின்றி

தக்க வைத்து விட்டார்களே என்ற 

நாணம் கொண்டு நீலவானத்தின்

போர்வைக்குள் மறைந்தெழுந்து

ம(மு)கிழ்ந்திருந்த நிலவு. 




ஆறாம் பிறையில் மாறா காதலுடன் 

முகம் மலர்ந்து, உடல் வளைத்து

நாணும் நிலவும் ஒருவித அழகு. 

நாணம் பெண்களுக்கும் ஒரு அழகு.

அம்புலியும் அழகும் இணைந்த  

அதிசயத்தால் "நிலவு ஒரு 

பெண்ணாகி உலவுகின்ற அழகோ" 

என்ற பாடலும் உதித்ததோ ? 


எத்தனை நிலவு பாடல்கள்.. 

அத்தனையும் நிலவின் 

அசையாத சொத்துக்கள்.

நிலவிருக்கும் வரை நம்

நினைவிலிருந்து நீங்க மறுக்கும் 

நிதர்சனமான வைரங்கள். 



நிலா பாடல்களை நித்தமும் ரசித்து நினைவு கூர்பவருகளுக்கு நிலா சார்பில் எனது வாழ்த்துகளும், நன்றிகளும். 🙏. 

Tuesday, February 20, 2024

கண்களுக்கு விருந்து.

பெங்களூர் லால்பாக் எப்போதுமே ஒரு தனிஅழகுதான். அடர்த்தியான மரங்களும், வண்ணமிகு பூக்களுமாக பார்வையில் கண்கொள்ளா காட்சிகளாக விழ, காலாற நடந்தாலே மனதின்  இறுககங்கள் சற்று குறையும்.இங்கு வந்த பின் சில  தடவைகள் சென்றுள்ளோம். ஆனால், வருடந்தோறும் ஆகஸ்ட் ஜனவரி மாதங்களில வரும் மலர் கண்காட்சிக்கென்று சென்று ரசித்ததில்லை. முதலில் செல்லும் போதெல்லாம் அங்குள்ள பசுமையை கண்களால் ரசித்து விட்டு வந்ததோடு சரி... அப்படி கண்கள் எடுக்கும் புகைப்படங்களும், மனதில் சிறிது காலம் பதிந்திருந்து, பிறகு நாங்கள் வேறு மற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு கண்கள் இயந்திரதனமான எடுத்து தள்ளும் புகைப்படங்களின் பாதிப்பால் மாயமாகி மறைந்து போகும். இப்போது (இப்போது என்றால்.. சமீபத்தில் அல்ல...! இது ஒரு வருடத்திய (வருடம் சென்ற வருடமா, அதற்கு முந்தைய வருடமா என நினைவில்லை. வருடத்தை எப்படியாவது நினைவுபடுத்தி கூறினால், என்னை அடிக்கவே வந்து விடுவீர்கள்.:)))) ) நவம்பரில் சென்று வந்த போது எடுத்த படங்கள்..) என் கைப்பேசியில் நிறைய படங்களை என் கண்களுக்கு அவ்வளவாக வேலையை தராமல் எடுத்து குவித்து விட்டேன். (இப்படி ஆங்காங்கே எடுத்த படங்கள் அளவுக்கதிகமாக என் கைப்பேசியில்  தங்கி இருப்பதாக கூகுளாரும், என் குழந்தைகளும் நாளும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.அது வேறு விஷயம்.. .. ) அதை அவ்வப்போது என் பக்கம் பகிரவும் சமயங்கள் எனக்கு வாய்க்கவில்லை. 

 சகோதரி கீதாரெங்கன் அவர்கள் அவரின் தளத்தில் கொஞ்ச மாதங்களுக்கு முன் லால்பாக் மலர் கண்காட்சி படங்களைபகிர்ந்து கொண்டதை பார்த்ததும்,,  (அவர் அவரின் பதிவில் பகிரந்தே வருடங்கள் ஆகிவிட்டது. இதில் அவர் பதிவை பார்த்ததும் என்ற வசனம் ஒரு உலகமகா ரீல்.... என முணுமுணுக்க வேண்டாம். ஹா ஹா.) எனக்கும் நான் அங்கு ஏதோ எடுத்ததையெல்லாம் பகிரலாமே எனத் தோன்றியது. அடர்த்தியான பெரிய மரங்களும், நீண்ட பல வயதான மரங்களை வைத்து செய்த மரச்சிற்பங்களுமாக இங்கு  நிறைந்துள்ளதை பொதுவாக அனைவருமே (அதிலும் இங்குள்ளவர்கள்) அறிந்திருப்பீர்கள். இருப்பினும், என் கைப்பேசியில் ஏதோ  தலை சிறந்த புகைப்படக்கலை நிபுணர் மாதிரி நான் எடுத்ததை பகிரலாமே என பகிர்ந்து விட்டேன். 

ஆழமாக வேரூன்றி அங்குமிங்கும் ஓடியவாறு  இருக்கும் பல பல வருடங்களை கடந்த மரங்கள் பிரமிபூட்டுகின்றன. பால்கனியில் ஒரு தொட்டியில் ஒரு செடியை வாங்கி வைத்து விட்டு தினமும் அது வளருகிறதா,.. தினமும் நாம் விடும் தண்ணீர் அதற்கு போதுமா.... வேறு என்ன உரம் வைக்கலாம்.. என தெனாலிராமன் குதிரை வளர்த்த விதமாக நா(ம்)ன் வளர்க்கும் போது, இவ்வளவு பெரிய மரமாக வளர எப்படியெல்லாம்  பராமரித்து வருகிறார்கள் என ஒவ்வொரு மரங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன பூத்துக் குலுங்கும் பல வகையான பூக்கள், நடந்து செல்ல ஒழுங்கான பாதைகள் அமைத்தல் என இந்தப் பூங்காவின் பராமரிப்பு கண் கொள்ளா காட்சிதான். நடப்பதற்கு மட்டும்  கால்களில் நல்ல வலு இருந்து விட்டால், சுற்றி வர ஒருநாள் போதாது. 

நானே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? புகைப்படங்களை (ஏற்கனவே நேரில் பார்த்து ரசித்திருப்பினும்) பார்க்க வேண்டாமா என நீங்கள் கேட்பது புரிகிறது. (இப்படியாவது ஒரு பதிவு எழுத காரணம் கிடைத்து விட்டதென எழுத ஆரம்பித்த போது  சந்தோஸப்பட்டேன். .இப்போதுதான் இதை வெளியிடும் சந்தர்ப்பம் அமைகிறது. அதற்கு சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ) 































நம் பதிவுலகில் சகோதர, சகோதரிகள் கேமிராவில் எடுத்துப் பதிவாக்கும் புகைப்படங்களுக்கு முன் இது வெறும் சாதாரணந்தான். ஆனாலும், பதிவை படித்து படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்னமும் அங்கு எடுத்த படங்களை அடுத்தப் பதிவில் பகிர்கிறேன். (என்ன கொடுமைப்பா.... இது... என நீங்கள் பொறுக்க இயலாமல் கூவுவது கேட்கிறது... ஹா ஹா.) நன்றி.