Showing posts with label சேவை அறுசுவை. Show all posts
Showing posts with label சேவை அறுசுவை. Show all posts

Tuesday, April 3, 2018

அரிசி சேவை......


நான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி தேவையான அளவு உப்பு சேர்த்து  கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.  
அரைத்த மாவை கொஞ்சம் நீர்க்க இதுபோல்
கரைத்து வைத்துக் கொள்ளவும். 


 தோசை மாவு பதத்திற்கும் சற்று நீர்க்க இருக்குமாறு அரசியும் துருவிய தேங்காயும் சேர்த்து அரைத்தெடுத்த மாவு.......  


தேன்குழல் அச்சில் ஓமப்பொடி தட்டுடன் 
சிறந்த சேவை செய்வதற்காக காத்திருக்கும் புண்ணிய கருவிகள்......  


 ஒரு கடாயை அடுப்பிலேற்றி அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி  சற்று காய்ந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை அதில் விட்டு கை விடாமல்  கொழுக்கட்டைக்கு  கிளறுவதை போல் கிளறி வைத்துக் கொள்ளவும். 


சூடு ஆறுவதற்கு முன்பாக கிளறி வைத்த மாவை எடுத்து குழலில் இட்டு இட்லித் தட்டில் இது போல் பிழிந்து  கொள்ள வேண்டும். சூடு ஆறுவதற்குள் முடிந்த அளவு பிழிந்து விடவும். ஆறிய மாவு கெட்டியாகி விட்டால் பிழிவது சிரமம். 


பிழிந்ததை குக்கரில் ஒரு பத்து நிமிடம் வைத்து ஆவியில் வெந்ததும்  எடுத்து தட்டில் கொட்டி விடவும். இப்படியே கரைத்து வைத்துள்ள மாவை சேவைகளாக்கி கொள்ளவும்.  அதன் பிறகு நம் விருப்பபடி  விதவிதமாய் தேங்காய் சேவை, வெல்லச்சேவை  லெமன் சேவை தயிர்சேவை என்று தயாரித்து கொள்ளலாம்.  


ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,  காய்ந்த மிளகாய் இரண்டு ஆகியவற்றை போட்டு தாளித்ததும்  பச்சை மிளகாய் இரண்டு, கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளி சேர்த்து  தேங்காய்  துருவல் ஒருகரண்டி போட்டு வதங்கியதும், உதிர்த்த சேவையை சேர்த்து உப்பு தேவைப்பட்டால் கொஞ்சம்கலந்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்ட பின்   அடுப்பை அணைத்து விடவும்..
சுவையான தேங்காய் சேவை ரெடி..... 


நான் முன்பெல்லாம் சேவை செய்தால், இந்த மாதிரி ஒரு நான்கு விதமாய் செய்வேன்.  இந்த  தடவை மிகவும் சுலபமாக இதை மட்டுந்தான் செய்தேன். 



கடைசியில் இந்த சேவை பிழியும் போது பிழிய வராமல் அடம் பிடித்த மாவை கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன், பெருங்காயம் ஒரிரு  சிட்டிகை,  கறிவேப்பிலை கிள்ளி சிறிதளவு சேர்த்து, நன்கு கலந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். நல்ல சுவையான காரக் கொழுக்கொட்டையையும் சுவைக்கலாம்.

நான் அதை படமாக்க மறந்து விட்டேன். அடுத்த தடவை நிறைய வெரைட்டி  சேவைகளுடன் சந்திக்கிறேன்... 
நன்றி.