Showing posts with label அவல் உப்புமா. நகைச்சுவை.. Show all posts
Showing posts with label அவல் உப்புமா. நகைச்சுவை.. Show all posts

Saturday, October 12, 2019

அவ(ளு)லும், நானும்....

அவல் உப்புமாவும்,
கூடவே கூட்டும்...

"அவல் உப்புமாவா" என ஆவலோடு வருபவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.  அவலை  சுத்தப்படுத்தி, சட்டென ஒரு தடவை நீருற்றி ஒரு அலம்பு அலம்பி வடித்து  அதை ஊற வைத்து விதவிதமாய் உப்புமா செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.!

 பொதுவாக தட்டை அவல், லேசான அவல் என்றால் அலம்பும் போதே ஊறிவிடும்.  ஆனால், கெட்டி அவலென்றால் ஒரு ஒரிரு வினாடிகள் குளியலைப் பொருட்படுத்தாது நம்முடன் ஒத்துழைக்கும். நான் இங்கு உப்புமாவிற்காக, எடுத்துக் கொண்டிருப்பது எதையும் சற்று தாங்கும் திடமான மனதுடையவைதான்.

இந்த உப்புமா செய்வதற்காக கொஞ்சம் கொத்தமல்லி விரைகள், தேவையான காரத்திற்காக மி. வத்தல், கொஞ்சம் மிளகு, சீரகம், சுவைக்காக கடலைப் பருப்பு ஒரு டீ ஸ்பூன், உளுத்தம்  பருப்பு ஒரு டீ ஸ்பூன் முதலியவற்றை எடுத்துக் கொண்டேன்.

கறிவேப்பிலை நான்கு ஆர்க்கு சுத்தப்படுத்தி அலம்பி வைத்த பின், ஒரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சாமான்களை  போட்டு வறுத்து, கடைசியில் கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்த சாமானகள் நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உ. ப இரண்டொரு சிட்டிகை பெருங்காயம் (இல்லை  சிறு துண்டு பெருங்காயம்) தாளித்து கொண்டு, ஊற வைத்த அவலைப் போட்டு, தேவையான உப்பையும்  ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு, இந்த அரைத்து வைத்த பொடியிலிருந்து காரத்தின் அளவை பொறுத்து கொஞ்சம்  கொஞ்சமாக சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். அந்த காரம்,  உப்பு, எண்ணெய் சேர்த்து மணம் வீசும் நேரம் அடுப்பை நிறுத்தி, ( இந்த இடத்தில் அடுப்பை அணைக்கவும் என்றுதான் முதலில் எழுதினேன். "உப்புமா ரெடி செய்து சாப்பிடும் நேரத்தில் அடுப்பை போய் அணைத்தால் என்ன ஆவது?  அப்புறம்  "அவள் பறந்து போனாளே"..! என நான் பாடும்படி இருக்கும் என அவல்  கடுமையாக எச்சரிக்க, " நிறுத்து" என்று நான் சற்று  கடுப்பாக, " உனக்காக இவ்வளவு நேரம் உன்னுடன் ஒத்துழைத்தேன். சின்னதாக ஒரு  அறிவுரைக்கு இவ்வளவு கடுப்பா? அதையே அங்கேயும் போடு" என்றது புன்னகையுடன் திடமனதினை உடைய அவல்...! வேறு வழி.! அவச்(ல்) சொல்லால் என்னை பயமுறுத்தியதால் "நிறுத்தி" அங்கே பேசாமல் அரங்கேறியது. ஹா. ஹா ) உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி பின்னர் பறிமாறவும்.


வறுக்க தயாராக, வறுபடும் எண்ணத்தை  தங்களுக்குள் உண்டாக்கியபடி, "கடனே" என புகைப்படத்திற்கு போஸ் தரும் க. ப, உ. ப, சீரகம், கொ. ம. விரைகள். மி. வ, மிளகு முதலியவை.


மனதிடத்தை தன்னுள் ஊற வைத்தபடி, நமக்காக எதையும் தாங்கும் மனோ நிலையில், நீரில் மூச்சடக்கி ஊறிக் கொண்டிருக்கும் அவல்.


முன்பெல்லாம் "ஒருவருக்காக செய்யும் நற் பயன்களை பெற்ற பின்  தூக்கி எறியப் படுபவர்களை எனக்கு உதா"ரண" மாய் காட்டி, காட்டி என்னையும், "ரண"ப் படுத்தினீர்கள். இப்போது என்னை நல்ல விதத்தில் பயன்படுத்துவது கண்டு சந்தோஷம் அடைகிறேன்." என மலர்ச்சி காட்டி காத்திருக்கும் கறிவேப்பிலை.


" வறுக்கும் வேதனை பொறுக்கும் எங்கள் வலிகளின் விலை என்ன? " கேள்வி கேட்கும் சாமான் வகையறாக்கள்.


" இப்படி போட்டு வறுத்த பின்பாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..! இப்போதும் வெறும் மெளனந்தானா? என மெளனம் கண்டு முகம் சிவக்கும் அதே சாமான் வகையிறாக்கள்.


" தட்டில் மாற்றி குளிர வைத்தால் நாங்கள் சமாதானமாகி விடுவோம் என்ற நம்பிக்கையா? விடுவோம்...விடுவோம்.. ஆனால், எங்களுக்கும், மின் விசிறி போட்டு கொஞ்சம் உபசாரம் செய்யுங்கள்.. இல்லையென்றால், கொதிக்கும் சூட்டை சற்றேனும் குறைக்க விட மாட்டோம்..! என பிகு செய்யும் அதே சா. வகை.


"மறுபடியும் எண்ணெயுடன் கடாய்.. இதே வேலைதானா ? அவர்கள் போதாதென்று நாங்களுமா ? கோபத்தில் தன் கூடவே  உ. பாவை துணைக்கழைத்து கொண்டு படபடக்கும் கடுகு...


இவர்களின் கோபங்களை குறைக்க மனதிடத்தை ஊறி வளர்த்துக் கொண்ட அவலை (அவ(ள்)ல் வருவாளா..?) என கேட்டு  காத்திராமல் அழைத்து வந்து கடாயில். சேர்த்ததும்,  கோபம் தணிந்த கடுகு படபடப்பு அடங்கி அமைதியானது. 


வெந்தணலில் வறுத்த சூட்டை மின் விசிறியின்  சில்லென்ற காற்றில் பறக்க விட்டு, மனம் குளிர அனுபவித்தபடி இருந்த சந்தோஷத்திலேயே, மிக்ஸியில் பொடியாகி வந்ததும் தெரியாமல், குதூகலமாக தட்டில் ஒன்று கூடி குவிந்திருக்கும் மி. வ, உ. ப  க. ப., மி, சீ, கொ. ம. வி.


அழகுள்ள இந்த பிரபஞ்சத்திற்கு அணிகலன்களாக  இயற்கையும் ஒளி வீசி நட்பாகி களித்திருப்பது போல், அவலுடன் நட்பாக ஒன்று கூடி களித்த பொடிகள்.


முழுமை பெற்ற நிலையில், அவ(ள்) ல் தயாரிப்பு..(இல்லை.. இல்லை என் தயாரிப்பான, ) உப்புமா.


இது வேறு கதை. பொடித்த பொடி அதிகமாக தோன்றவே, பாதியை அவலுடன் சேர்க்காமல் எடுத்து வைத்திருந்தேன். அன்றைய காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்த அவலுக்கு தொட்டுக் கொள்ள ஏதும் தேவையில்லையெனினும், மதியத்திற்கு தயாரான  சாதம்" என்னால் தனியாக  பவனி வர இயலாது" என்று மிகவும்  கவலைப்பட்ட காரணத்தால், 


போரடித்துக் கொண்டு கு. சா. பெட்டியில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த காரட், பீன்ஸ்  கோஸிடம் சாதத்திற்கு துணையாக வர "சம்மதமா" எனக் கேட்டவுடன்,


சம்மதித்த அவைகளுடன் அந்த மீதமிருந்த பொடிகளுடன் கொஞ்சம் தேங்காயை அரைத்து விட்டு ஒரு கூ..ட்..டா..க.....


நாம பேசாமல் குளிர் காய்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். "சம்மதமா.. ! உங்களுக்கு சம்மதமா..! நீங்கள் எங்களுடன் வழித்துணையாக கூட வர சம்மதமா?" என்று" கண்ணால்" பாடி மயக்கி கூட்டாக ஆக்கி விட்டு எத்தனை படங்களாக இஷ்டத்துக்கும் "சுட்டு சுட்டு" வேறு பொசுக்குகிறார்கள்?

போகட்டும்... ! எப்படியிருந்தாலும், "ஒன்பது வாட்டி மாத்தி, மாத்தி படமெடுத்ததை வேஸ்ட்டாக்காமல் விட மாட்டா இந்த கமலாக்கா.. ! " என்று தேம்ஸ் பட்டமகிஷி வந்து காரசாரமாக கமெண்ட்ஸ் தரப் போறாங்க பார்.!! என்று கூடி பேசி மகிழும் கூட்டணிகள்.( ஹா. ஹா. ஹா.)

ஆகா....! இப்படி ஒன்னு இருக்கோ.. ! ஆனாலும் வளைத்து வளைத்து எடுத்ததை ஒன்று கூட விட மனமில்லை பாருங்கள். கோர்வையாகத்தானே இணைத்து எழுதியிருக்கிறேன். பார்த்து, படித்து தரும் பாராட்டுகளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றிகள்... 🙏...