Sunday, August 21, 2022

ராஜாதி ராஜ மார்த்தாண்ட ....ராஜ கம்பீர.....

 முள்ளங்கி கோதுமை பரோட்டா..

இந்த முள்ளங்கி காய் நீர்சக்தி நிறைந்தது. இதில் நிறைய விட்டமின்களாக.  ஏ. பி. சி. இ. கே போன்ற விட்டமின்ககள் உள்ளது. மேலும், உடலுக்கு தேவையான நல்ல பயனுள்ள  பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், கால்சியம், இரும்பு சக்தி, போன்ற பலவகையான சக்தி தருபவைகளுமான தன்மையை கொண்டது இந்த வெள்ளை முள்ளங்கி காய். 

அனீமியாவை தடுக்கும். அதே போல் சீறுநீரக தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனைகளையும் குறைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதிக இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை இவைகளை கட்டுப்படுத்தும் குணமுடையவை. இதை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், செரிமான பிரச்சனைகளும் வராமல் இருக்கும். 

இத்தனை மருத்துவ குணங்களை உடைய இந்த முள்ளங்கி, து.பருப்புடன் சேர்ந்து சாம்பாராகவும் பரிமளிக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பொரியலாகவும் மாறி ஒத்துழைக்கும். சாதத்தில் கலந்து சாப்பிட காரத் துவையலாவும், மற்றும் ஜுஸாக செய்து அருந்தவும் சம்மதிக்கும். எப்படி செய்தாலும் உடலுக்கு நன்மைகளைத் தரும் காய் இது. இதனுடன் கிடைக்கும் முள்ளங்கி கீரையையும் பல விதங்களில் சமையல் செய்து சாப்பிடலாம். அதை வைத்து பொரித்த கீரைகூட்டாக செய்து சாதத்துடன் கலந்து உண்டால் அதன் ருசியும்  மணமும் வெகுவாகவே நம்மை கவரும். முள்ளங்கி கீரையை வைத்து  பொரியலும் செய்யலாம். இந்த முள்ளங்கியை வைத்து நான் கோதுமை பரோட்டாவாக செய்துள்ளேன். 

இத்துடன் என நான் மேலும் ஆரம்பிக்கும் முன்  "ப்ளீஸ், ப்ளீஸ்.. உன்னைப் போல் நானும்/ நாங்களும் கொஞ்சம் வாசகர்களுடன் கதைக்கிறோமே. .. எனக்கும் ஆசையாக உள்ளது... " என அந்த முள்ளங்கி கெஞ்சி கேட்டு கொண்டதினால், அவைகளுக்கு முடிந்த வரை வாய்ப்பு தர நான் சரியென சம்மதித்து ஒதுங்கி கொண்டேன். 


"சரி. .ரொம்ப சந்தோஷம்... முள்ளங்கி பரோட்டோவிற்காக கலந்து வைத்த கோதுமை மாவாகிய நான். ." என முதலில் நான் கலந்து வைத்த கோ. மா,அது வரை எங்கள் பேச்சுக்களை கவனித்தபடி அமைதியாக இருந்த நிலை மாறி அவசரமாக ஆரம்பித்ததும், அதனை சற்றே கோபமாக முறைத்தது முதலில்் ஆரம்பித்த முள்ளங்கி. "நானே அவர்களிடம் கெஞ்சி கொஞ்சம் நேரம் பேச முதலில் வந்துள்ளேன். அதற்குள் உனக்கு என்ன அவசரம்.. ?" என முள்ளங்கி "முள்" போன்ற தன் வார்த்தைகளை கொண்டு  தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும், எதிர்ப்பை தாங்க முடியாத கோ. மா மெளனமாக மறுபடி தன்  "கோமா" நிலைக்கே போய் விட்டது. 


" முள்ளங்கியாகிய என்னை நன்றாக அலம்பிய பின் லேசாக சற்று நிறம் மாறியுள்ள பகுதிகளை மட்டும் நீக்கியதும் சிறு துண்டுகளாக இப்படி அரிந்து வைத்திருக்கிறார்கள். ." 


"இதே போல்  வெங்காயத்தையும் நன்கு அலம்பி பின் தோல் நீக்கிய பின்  ஒரளவு பொடிதாக நறுக்கி வைத்துக் கொண்ட படம் இது. "நல்ல வேளை.....வெங்காயம் தன்னால் பிறரை என்றும் அழ வைத்த வருத்தத்தில் இருந்ததினால், நானும் உங்களோடு பேசுவேன்.. என்று கோ. மாவைப் போல் போட்டிக்கு வரவில்லை." மகிழ்வோடு முள்ளங்கி சத்தமாகவே முணுமுணுத்து கொண்ட அந்த சிறிய இடைவெளியில்,... 


"நறுக்கிய முள்ளங்கியுடன் அவரவர் காரத்திற்கு தகுந்தாற் போல் ஒன்றிரண்டு பச்சை மிளகாயும் எடுத்துக் கொள்ளவும். நான் அதிக காரம் வேண்டாம் என்பதற்காக ஒன்றை மட்டும் எடுத்துள்ளேன்." என நான் மறதியில் இயல்பாக ரெசிபியை பற்றி ஆரம்பிக்கவும், முள்ளங்கிக்கு வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல.... சரி.. சரி.. ஸாரி,..   ஸாரி. . என நான் பல தடவை கேட்ட பின்தான் அது மிக்ஸி எனும் ராட்டினத்தில்  ஜாலியாக ஏற சம்மதித்தது. 



" என்னுடன் துணையாக பச்சை நிற மிளகாயையும் சேர்த்து  மிக்ஸி ராட்டினத்தில்  பல சுற்றுகள் சுற்றி வர இவர்கள் செய்த ஏற்பாட்டினால் என் கோபம் சற்று சாந்தமாகியது. ஆனாலும், எப்படியும் அடுத்து பேச வரவிருக்கும் கடுகார் என்னை சற்றேனும் பேசவே விட மாட்டார் என்பதும் நான் அறிந்ததே....என்ன செய்வது? அவர் என்னை விட சற்று அதிக கோபக்காரர் எனப்பெயர் வாங்கியவர்." 


"ஒரு கடாயில் சிறிது சமையல் எண்ணெய்யுடன் ஒன்று சேர்த்த கடுகாகிய நான். ...இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன். நான் இல்லாவிட்டால், எந்த ஒரு சமையல் வகையும் வாசனை மிகுந்ததாகவே மாறாது என்ற பெருமை எனக்குண்டு... ஆனால், அதைப் பற்றி  இவர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்ளாது நான்" படபடக்கும் , கோபக்காரன். .." என்ற பட்டத்தை மட்டும் சுலபமாக தந்து விட்டனர். இது நியாயமா என வாசகர்களாகிய நீங்களே சற்று யோசிக்கவும். "


" இங்கேயும் நான்தான்.... இன்னமும்  நான் பெருமையோடு படபடவென்ற என் குண இயல்பை காண்பிப்பதற்காக பொறுமையோடு நான் காத்திருக்கும் போது என்னை கேட்காமலே இவர்கள் எடுத்த மற்றொரு கிளிக்." 


" என் கோபம் சற்று தணிந்த பின்  உ. பாவையும்  என்னுடன் சேர்த்தால்தான், சற்று வெட்கப்படும் அளவுக்கு மட்டும் அது முகம் சிவக்குமாம்.. ( ஏனென்றால் அது  உ. பாவை இல்லையா?:))))  ) இல்லையென்றால் என் கோபத்தை சமாளிக்க இயலாமல் அது அப்படியே முகம் வாடி கருகிப் போய் விடுமாம்.:))" 


 " மற்றவர்களை  அழ வைத்து விட்டோமே என முகஞ்சுணுங்கியபடி மகா வருத்தத்துடன் அமர்ந்திருந்த என்னையும், "அந்த இருவரையும் கொஞ்சம் சமரசம் செய்து வை. " என இவர்கள் கேட்டுக் கொண்டதால், காத்திருந்த அந்த இருவருடன் நானும் அந்த அறுசுவை களத்தில் இறங்கினேன்." 


" எப்போதும் தற்பெருமை பேசும் இந்த கடுகாரை விட நான் நிஜமாகிலும் வாசமானவர் என்பதை அந்த கடுகாரே ஒத்துக் கொள்ளும் நிலை வந்த போது, இத்தனை நேரம் மெளனமாக இருந்த முள்ளங்கியார்  "என்ன நான் இருப்பதை சற்றும் மறந்து விட்டீர்களா? என என் அருகில் வந்து விட, நான் விட்டுத் தருவதில் உள்ள மென்மையை உணர்ந்தபடி, மெளனமாகி விட வேண்டிய கட்டாயத்திலும், நான் உங்களை வேண்டுமென்றே அழ வைக்கவில்லை......பெருமைக்காக சொல்லவில்லை.. என் இயல்பே அப்படித்தான்.. புரிந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளையும் உங்கள் முன் வைத்தபடி ஒதுங்குகிறேன். வேறு வழி....?" 

 
இப்போது "முள்ளங்கியாகிய நான்  ராட்டினத்தில் ஆசை தீர சுற்றிய மகிழ்வோடு இவர்களுடன் சரி சமமாக கலந்து விட்டேன். எப்படியிருந்தாலும் என் பெயர்தான் இறுதி வரை நிலைத்து நிற்கப் போகிறது எனத்தெரியாமல் இவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். சரி. . சரி ஏதோ அறியா பிள்ளைகள். .பேசி விட்டு போகட்டும்.பொறுத்துக் கொண்டு இனி நான் சொல்வதை மட்டும் கேளுங்கள். ... என விண்ணப்பிக்கிறேன். என்ன சரிதானே. ...?"  


" அதன் பின் நான் இப்படியே என்றும் வெளுத்த கலராக இருப்பதை விரும்பாத இவர்கள் மஞ்சள் , மற்றும் மிளகாய் பொடியின் சிகப்பு , தனியாவின் தனித்துவமான கலர், போன்ற கலர்களோடு, மற்றும் என் கலரை ஒத்த உப்பின் கலர் இவைகளினால் என்னை அலங்கரித்து அழகு பார்த்தனர். உண்மையிலேயே இவர்கள் என்னுடன்  இணைத்த கலர்களில் என்னைக் கண்டு நானே மயங்கித்தான் போய் விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்". 


" இதோ.   நீங்களே சந்தேகமற ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து ரசியுங்கள்." 


"என்ன.   நான் சொல்வது சரிதானே. ... ஒவ்வொரு கலரும் சேரச் சேர நான் அழகில் எப்படி ஜொலிக்கக் போகிறேன் என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?" 


இதோ... முத்தாய்ப்பாக ஒரு டச்சப். அலங்காரம் முடிந்தவுடன் வாசமான நறுமணம் பூசுவது போல ஒரு இளஞ்சிவப்பு கலருடன் மீண்டும் ஒரு இணைப்பு. இதைக்கூட இவர்கள் ஏதோ நான் அறியாத மொழியில் எழுதியிருக்கிறார்கள். பாருங்கள்..."


"இப்போது நான் அமர அந்த கோ. மாவை "கோமா" தூக்கத்திலிருந்து எப்படியோ சுறுசுறுப்பாக எழுப்பி சிம்மாசனமாக இருந்து உதவ ஆணைப் பிறப்பித்தார்கள்." 


" அதுவும்  மெளனமாக விரிந்து பரந்து குறிப்பிட்ட அதன் எல்லைக்குள் அழகிய ஒரு சிம்மாசனமாக ஆயிற்று. பின்னே.. .. அழகான என்னை தாங்கிக் கொள்ள  அது கொடுத்து வைத்திருக்க வேண்டுமே..." 


" இதோ... ராஜாதிராஜாவாக நான் அமர்ந்து விட்டேன். இந்த ராஜ்ஜியத்தில் விரிந்து பரந்து எத்திக்கும் என் கொடியை நாட்டப் போகிறேன். "


" இதோ.. படிப்படியாக இவர்களால் என் ஆட்சியில் சில நல்ல மாற்றங்களோடு... "


என் கொற்றக்கொடியின் நிழலில்,  ..


மாற்றங்கள் பல கண்டு. .. 


ராஜ்ஜியம் முழுவதும் நல்லாட்சி விரிந்து பரவி.. ..


இந்த செங்கோலின் உதவியுடன் சிறப்பான ஆட்சியில்... 


எப்படி முழு நிலவின் பூரணத்துவத்தோடு. . 
 

பொங்கிப்
பூரித்து. . .


பூரித்த.. .


மகிழ்வில். ... 


மேலும் அழகு சேர்க்க நெய் எனும் திரவயத்துடனான  முகப்பூச்சுடன் மினுக்காக அடுக்கடுக்காக வந்த... 


"பெருமைகளில் முகம் சிவக்கும்படியான ஆட்சியாக அமைந்து விட்டது பாருங்கள். .. இப்போதுதான் என் மனதுக்குள் ஒரு மகிழ்வான, நிறைவான புளகாங்கிதம் வருகிறது. .இது நியாந்தானே... "" 
 

இந்த நல்ல கூட்டணி ஆட்சியை நீங்களும்  மனதாற வாழ்த்தி மகிழுங்களேன்.  உங்களின் நல்ல அன்பிற்கு எந்நாளும் எங்கள் நன்றிகள். 🙏.

இனி நான் மேற்கொண்டு சொல்ல என்ன இருக்கிறது? இதற்கு மேலும் ஏதாவது கூறி  விவரித்தால், வீடு தேடி வந்து எனக்கு மட்டும் அடி விழும் வாய்ப்புள்ளது என்பதால் 😀😀 அதி பொறுமையாக இதுவரை எங்களுரையை கேட்டு புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கு 👍👍நானும் நன்றி கூறி விலகுகிறேன்...:)🙏.

பி. கு. .(இன்னும் அதுவேறேயா? என இதையும் 😇😇😇 களுடன்  படிக்கும் அனைவரும் 🤔 யுடன் முணுமுணுப்பது கொஞ்சம் லேசாக காதிலும் விழுகிறது.:)))) ) 

இன்று எ. பியில் சகோதரி கீதாரெங்கன் ரோஜாகூட்டத்திற்கு நடுவே காத்திருந்த புறாவைப்பற்றிச் சொன்னதை படித்ததும், என் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் முள்ளங்கியைப் பற்றிய நினைவு வந்து விட்டது. 

தவிரவும் என் கைப்பேசி வேறு கொஞ்ச நாட்களாக என்னிடம் பிணக்கு காட்டி மகிழ்கிறது. அதன் மூடுக்கு தகுந்தாற் போல்  நான் அனைவரின் பதிவுக்கு சென்று படித்து கருத்துக்கள் தந்து, என் பதிவில் என் புராணங்களையும் வெளியிட்டு, அதற்கு வரும் (வந்தால்) கருத்துகளுக்கு பதிலளித்து மகிழும் வாய்ப்பையும் அவ்வப்போது முடக்கி இன்பம் காண்கிறது. எப்பவுமே எனக்கு நடக்க நடக்க நாராயணன் செயல்தான். வேறு என்ன செய்வது.? 

இது எ. பிக்கு அனுப்பலாமென்றால் இவ்வளவு பெரிதாக நீட்டி முழக்கியதை அனுப்ப கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இரண்டாவதாக, இந்த ரெசிபியை அன்றொருநாள் சகோதரி பானுமதி அவர்கள் எ. பியில் பகிர்ந்த நினைவு....அதனால் என் பதிவுகளை அன்புடன் படிக்கும் என் அபிமான சகோதர சகோதரிகளுக்காக இங்கேயே இதை பகிர்ந்து விட்டேன். நன்றி. 🙏. 

Sunday, August 14, 2022

பழைய நினைவுகள்.

வணக்கம் அனைவருக்கும். 

இன்றைய ஞாயிறு லால்பாக் பதிவை எ. பியில் பார்த்ததும்,  சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் அந்தப் பதிவொன்றுக்கு ஜூலை 31 ல் கருத்திட்ட அன்றே நான் எழுதி வைத்த இப்பதிவு  எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இப்போது பகிர்ந்து விட்டேன். படித்து கருத்திடும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

துரை செல்வராஜூ31 ஜூலை, 2022 அன்று பிற்பகல் 5:14

ஹிந்துப் பெண்களுக்கு பூக்கள் ஒரு இடைஞ்சலா!?...

தாழை மடல் வைத்து வைத்து பின்னிக் கொண்ட ஜடைகளைப் பார்த்து ரசித்த நாட்கள் எல்லாம் இனிமேல் வரவே வராது..

உண்மைதான்.. .இந்த கருத்தை எ. பியில்  அந்த ஞாயறன்று  நம் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள்  லால்பாக் பதிவில் தனது கருத்தாக பதிந்ததை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்தன. எங்கள் அம்மா தாழம்பூ, மல்லிகை, செவ்வந்தி, மாதுளை பூக்கள் (என் இளைய பிராயத்தில் எங்கள் பிறந்த வீட்டில் மாதுளை பூக்கள் மட்டும் பூக்கும் பெரிய மரம் போன்ற செடி நீண்ட நாட்கள் இருந்தது. ஆனால் தப்பித்தவறி அதில் ஒரு காய் கூட வந்ததில்லை. இப்படியும் அதில் சில வகைகள் உண்டென விபரம் தெரிந்த அக்கம்பக்கம் உள்ள அனைவரும் கூறினார்கள். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அது பூக்களை மட்டுமே வஞ்சனையின்றி தினமும் தந்து கொண்டிருந்தது. இறைவனுக்கும் மாலை தொடுத்து சார்த்துவோம். எனக்கும், அக்கம்பக்கம் உறவின் பெண்களுக்கும், எங்கள் அம்மா ஜடையில் வைத்து தைத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும்.  சிகப்பான அதன் நிறம் கண்களை கவரும். நீளமான ஜடையில் அதை வைத்து தைத்து, மல்லிகை சரத்தை நெருக்கமாக தொடுத்து தலையில் அம்மா அழகாக வைத்து விடுவதை, பின்புறம் ஒரு கண்ணாடியில் அது தெரியுமாறு காட்டி, முன்னால் இருக்கும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வோம். அப்போது வீட்டில் காமிரா இல்லை. புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு  சென்று புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் திறனும் இல்லை. இப்படியே காலங்கள் என்றும் இருந்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் மனதில் இருந்தது போலும்... அதனால், மனமெனும் காமிராவில் மட்டும் அது அழுத்தமாக பதிந்து கொண்டு விட்டது. இப்போது அதைச் சொல்லிச்சொல்லி ரசிப்பதை தவிர வேறு வழியில்லை. ) வைத்து ஜடையில் தைத்து விடுவார்கள். அது ஒரு காலம். இப்போது பெண்கள் அனைவரும் தங்கள் கூந்தலை வெறும் ஜடை பின்னிக் கொள்வதே உலக அதிசயமாக உள்ளது. 

சகோதரரின் இந்த பதிலை பார்த்ததும் எத்தனை விஷயங்கள் நம் காலத்தில் பார்த்து கேட்டு ரசித்திருக்கிறோம் என நினைக்கையில்  எனக்கு எப்போதோ வாட்சப்பில் வந்த உறவு யாரோ அனுப்பி வைத்த இந்த வாசகங்களும் நினைவுக்கு வந்தது. சுற்றி வரும் இதை நீங்களும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் படிக்காதவர்கள் இங்கும் படித்து ரசிக்கலாம் என பகிர்ந்துள்ளேன். 

இதோ அந்த வாட்சப் வாசகங்கள். . 
 
நாம்தான் கடைசி தலைமுறைகள்....

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

2.ஓனிடா டி வி பெட்டியை பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

3.செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!

5.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.

6.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .

9.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.

10.காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

11.நண்பர்களுக்கு, உறவுகளுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

12. 10th 12th ரிசல்ட் பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்

13.கதவு வச்ச டிவி யை பாத்த கடைசி தலைமுறை நாம தான்

14.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

15.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறைதான்.

16.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

17.ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்

18.நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது நாம்தான். 

19.கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

20.நொண்டி, கிட்டிப்புள் (கிள்ளித் தாண்டு) பம்பரம், கண்ணாமூச்சி, கோலி என பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

21. 1,2,5,10,20,25,50 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

22.தியேட்டரில் மண் தரையில் உட்கார்ந்து படம் பார்த்த கடைசி தலைமுறை நாமதான்,

23.ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்ட கடைசி தலைமுறை நாமதான்,

24.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான்

25.இதையெல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகளோடு  நம் கண்ணில் சிறுதுளி கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

இதை எழுதிப் பகிர்ந்தவருக்கு என் மனமார்ந்த நன்றி. அது போல் படித்து ரசித்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் . 🙏.