Friday, May 30, 2014

தந்தைக்கு ஒரு குறுந்தகடு.. (காணொளி)

அன்பு தந்தையே! எங்களிடமிருந்து உங்களையும், எங்கள் ஆருயிர் அன்னையையும்  கால(ன்)ம் பிரித்திருந்தும் உங்கள் இருவரின் அருகாமையையும் நான் எப்போதும் உணர்ந்து கொண்டேதான் இ்ருக்கிறேன். (என்னையும், என் குடும்பத்தை விட்டு கால(ன்)ம் பிரிக்கும் வரை) உங்களைப் பற்றி, உங்களது நல்ல குணங்களை பற்றி என் வாரிசுக்களுக்கு நிறையவே சொல்லி தாத்தா மாதிரி நல்ல குணங்களுடன் இருக்க வேண்டுமென்று, அன்புடன்தான் வளர்த்திருக்கிறேன். அப்படியே அவர்களும் வளர்ந்து வாழ்வில் நல்ல பெயருடன் தன் காலுன்றி நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆண்டவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையையும் தந்து சிறக்கச் செய்ய வேண்டுமென நான் தினமும் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் உங்களது ஆசிர்வாதத்தை தினமும் எங்கள் அனைவருக்கும் தந்து கொண்டுதான் இருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

             நான் இதற்கு முன் அன்னைக்கு ஒரு மடல் எழுதினேன். அதையும் நீங்கள் பார்த்து படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை நான் ஏன் சொல்கிறேனென்றால், என் அன்னையும் தங்களுடன்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான்! அன்னையும் நீங்களும் ஒருநாள் ௬ட விட்டு பிரியாமல் அன்புடனும், அனுசரணையுடனும்  வாழ்ந்ததை நாங்கள் பார்த்தவர்களாயிற்றே! அன்னையிடம்தான் நீங்கள் எத்துனை பாசமாக இருந்தீர்கள்! அன்னையும் அப்படித்தான்! உங்கள் மேல் உயிராக, உங்கள் சொல் தட்டி நடவாமல், உங்கள் பெருமைக்கு சிறிதளவும் பங்கம் விளைவிக்காது, உங்களின் உயிராக  இருந்தார்கள். மொத்தத்தில் ஒரு சிறந்த ஆதர்சன தம்பதிகளாக நீங்கள் வாழ்ந்தீர்கள்.
                    
             ஆதர்சன தம்பதி என்றதும் எனக்கு அந்தத் திரைப்படம், உங்களுக்கு மிகவும் பிடித்தமான சூரியகாந்தி திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில் நடித்த நடிகர்களின் நிறைவான நடிப்பும் அதில் வரும் “நான் என்றால்,அது அவளும், நானும்” என்ற பாடலும் தங்களை கவர்ந்ததை அடிக்கடி நினைவு ௬ர்ந்து சொல்லிக்  கொண்டேயிருப்பீர்களே! இப்போதும் அந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் சொன்னதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


            அந்த  திரைப்படத்தில், தன் மனைவியுடன் ஏற்பட்ட மனத்தகராறுடன், ஆதர்சன தம்பதிகள் என பாராட்டுக்கள் பெறும் ஒரு விழாவுக்கு தன் மனைவியுடனே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு உட்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் திரு முத்துராமனின் அற்புத முகபாவங்களையும்,  தன் மனைவி  இப்படி யெல்லாம் இருந்தால் நன்றாகவிருக்கும் என்பது போல் தன் மனதின் தாக்கங்களை அவர் பாடும் பாடல் வரிகளில் புலப்படுத்தும் பாங்கையும், அந்த பாடலை திறம்பட எழுதிய கவிஞர் வாலியையும், சிறப்பாக இசையமைத்த திரு. எம்.எஸ்.வி யையும், அந்தப் பாடலை என்றுமே மறக்க இயலாதபடி மிகவும் அருமையாக பாடியிருந்த திரு. எஸ்.பி.பி யையும், நீங்கள் சொல்லி சொல்லி பாராட்டுவதை இன்றும் நான் அருகிலிருந்து கேட்பது போல் அகம் மகிழ்கிறேன். அந்த பாடலை இதோ! உங்களுக்காக குறுந்தகிடில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டு ரசிக்கவும்.
      இந்த “பாடலின்படி உங்கள் அம்மா என்னுடன் வாழ்ந்திருக்கிறாள். பாடலின் வரிகள் எங்களை பார்த்து இயற்றிய மாதிரி எனக்குத் தோன்றும்!” என்று நீங்கள் அம்மாவை புகழும் போது அம்மாவின்  முகத்தில் தோன்றும் பெருமிதம் கலந்த நாணத்தை சொற்களால் என்றுமே விவரிக்க இயலாது. உணமையிலேயே ஆதர்சன தம்பதி பட்டத்தை பெற ௬டியவர்கள் நீங்கள்தாம் என நாங்கள் நினைக்கிறோம். உங்களை பெற்றோராக அடைந்ததில் மகிழ்வும் பெருமையுடன் ௬டிய கர்வமும் அடைகிறோம்.
     
      எங்களுக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால், நீங்களே மறுபடியும் எங்கள் பெற்றோராக அமையும் வாய்ப்பைத் தர வேணடுமென அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, நீங்களும் எங்கிருந்தாலும், எங்கள் நினைவாகவே இருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொண்டு, இந்த குறுந்தகிடை பதிந்து முடிக்கிறேன். பார்த்த விபரத்தை உங்களால் பகிர்ந்து கொள்ள இயலாவிடினும், விரைவில் கால(னின்)த்தின் உதவியுடன் தங்களிருப்பிடம் வந்து சேர்ந்த பின் பார்த்த விபரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். 
                                                          அன்புடன் 
 தங்கள் வாரிசு. 

ஓவியக் கவிதை - காதல்பரிசு...


நாடு விட்டு வெகுதூரம்
நான் விரைந்து வந்துமிங்கே,
நங்கை உந்தன் பூ முகத்தில்
நன்முறுவல் இல்லையடி….!

காலத்தில் வராதது இந்த
காரிகைக்கு கோபமன்றோ….!
காலத்தில் வராததால்,
கார்முகிலும், காரிருளும்
கடிதாக உனை சூழுமென,
கன்னி நீ அஞ்சி நின்றனையோ….!
காலத்தே நான் வந்திருந்தால்,
கருவண்டுகள் உனை சுற்றாதடி….!

பூவிருக்கும் இடமெல்லாம்,
புது தேனைதான் பருக
வண்டினங்கள் வட்டமிட்டு,
வலம் வருவது இயல்பன்றோ….!
உனை சுற்றும் ஒரு வண்டாக,
உன் காதலன் நானிருக்க, உன்
தலைசுற்றும் வண்டுகளால்
தவித்து நீ தளர்ந்தனையோ….!

படை நடத்தி எதிர் வீரர்களை
பந்தாடிய என் வீரம், இச்சிறு
படைவண்டுகளை சிறுபொழுதில்
பதம் பார்த்து விலக்குமடி….!
பதம் பார்ப்பேன் என்றவுடன்
பைங்கிளி உன் மதிமுகத்தில்
பரவுகின்ற இந்த வெட்கமதை,
பரிசாக நான் பெற்றேனடி….!
காதல் பரிசாக நான் பெற்றேனடி….!

இயன்ற வரை வெகு விரைவில்
இம்முறை நான் வந்திருந்தால்,
இன்பமுறும் இப்பரிசைபெறும்
இன்பமதை இழந்திருப்பேன்….

வணக்கம் நட்புறவுகளே !

                         என் எழுத்துக்கும், 2014 ம் ஆண்டு ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது கண்டு  நான் சந்தோசமடைந்திருக்கிறேன். முருகனருளால் எழுதிய  முருகனுக்கோர் முகில்  முதன் முதலில் என்னை வலைச்சரத்தில் ஏற்றி விட, பதிவுலகின் முன்ணனி பதிவர் சகோதரர் திரு வெங்கட் நாகராஜ்  அவர்கள்  பதிவின் மூலமாக வந்த “ஓவியக் கவிதை எழுத வாருங்கள்” என்ற அழைப்பிற்கு நான் எழுதி அனுப்பிய கவிதையை ஏற்றுக் கொண்டு அதை பதிவாக்கி பார்வையாக்கியதில், பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் பெறச் செய்ததில் எனது மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கிறது. அதை கண்டு ரசித்து வாழ்த்திய உள்ளங்களுக்கும் வாழ்த்தை பெறச் செய்த  சகோதரர் வெங்கட் நாகராஜூக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
               இந்தக் கவிதைக்கு முன்பாக  நான் அதே ஓவியக் கவிதைக்கு சற்று நெடியதாக எழுதியிருந்த “தோழியின்  சாதுரியம்” என்ற கவிதையை அனுப்ப வேண்டாமென்று( நெடியதாக இருந்ததினால் ) தோன்றியதால்  இதை எழுதி அனுப்பினேன். அதை மீண்டும் என் பதிவில் இட்டு மகிழ்வடைகிறேன்.

                                                           நன்றிகள் பலவுடன்… கமலா ஹரிஹரன்.

Thursday, May 15, 2014

அன்னையருக்கு ஏது தினம்!

அன்னையர் தினத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று மனது ஆவலுடன் பரபரத்து கொண்டேயிருந்தது. என்ன எழுதுவது? என்று இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளைகளையும் (நம்ம வடிவேலு பாணியில்) கசக்கிக்கொண்டேயிருந்தேன். அன்னையர் தினத்தை முதலில் கண்டு பிடித்து அறிமுகபடுத்தியதை பற்றி எழுதலாமா? இல்லை! அதை முதலில் கண்டுணர்ந்து பிரபல படுத்தியதை பற்றி எழுதலாமா? அல்லது, அன்னையர் தம் பெருமைகளை மனம் உணர்த்துவதை மடை திறந்த வெள்ளமாக (அது படிப்பவர்களுக்கு தண்டனையாக இருந்தாலும், ((முதலில் படித்தால்தானே அந்த பிரச்சனை!)) கொட்டலாமா? என்று சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்பதற்குள் அன்னையர் தினம் அருகிலேயே நெருங்கி விட்டது. சரி! ஏதாவது எழுதி விடவேண்டும்! இல்லையென்றால், கடலில் உண்டாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதிரி, அது உன்னை எளிதில் கடந்து சென்று விடுமென்று மனமானது எச்சரிக்க, கவலை மேக மூட்டமாக சூழ்ந்து கொண்டது.

            

       மழை வந்து செழிப்பாக்கும்! என்று எதிர்பார்க்கும் மனிதர்களை, வேண்டுமானால், காற்றழுத்த மண்டலம் எப்போதும் ஏமாற்றி விட்டு சுலபமாக கடந்து சென்று விடலாம்! ஏனென்றால், அதன் வாடிக்கையும் வேடிக்கையும் எப்போதுமே அப்படித்தான்! ஆனால் அதுவும், நான் ஒரு விசயத்தை பற்றி எழுதி பதிவுலகில் பெயர் (நல்ல) வாங்க வேணடுமென்பதும், ஒன்றாகி விடுமா?

      

      நினைவாற்றல்களை நிறையவே கொடு!..... என்று ஆண்டவனிடம் கொஞ்சம் அதிகமாகவே வேண்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அன்னையர் தினத்தை பற்றி ஏதாவது நல்ல நல்ல தகவல்கள், புதிய பாணியில் எழுத வேண்டும். நீ ஏதாவது உதவி செய்யேன் என்று மகனிடம் கேட்க நினைக்கும் போது, என் கருத்தை உணர்ந்து கொண்டவனாய், “நீயே! ஒரு அன்னை தானே! அம்மா! என் உதவி எல்லாம் உனக்கு எதுக்கு?” என்ற பதில் வந்தது!

               

      சரி படிப்பவர்களின் (படித்தால்…) தலையெழுத்தை நாம் மாற்ற முடியாது! வருவதை அனைவரும் அனுபவித்து தானே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்து நான் எழுத துவங்கும் போது, எனக்கு ஒரு தொலைபேசி வந்தது.    

            

      “வரும் ஞாயிறன்று அன்னையர் தினம் அம்மா! அதனால் சனி ஞாயிறு இரு தினங்களை உன்னுடன் கழிக்க ஆவலாக இருக்கிறது. அதனால் வெள்ளி இரவு கிளம்பி நானும், உன் மாப்பள்ளையும் அங்கு வருகிறோம்! என்ன சொல்கிறாய்?” என்றாள் என் மகள்.

      

      “சொல்ல என்ன இருக்கிறது? தாரளமாக புறப்பட்டு வா! என்றேன். சந்தோசத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை! இரு தினங்களும் அவர்களை வரவேற்பதிலும் பொழுதை அவர்களுடன் கழிப்பதிலேயுமே சந்தோசமாக கடந்து விட்டது. அதற்கு பிறகு என்ன? அன்னையர் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கடந்து விட்டது. (என்னை பார்த்து ஏளனம் செய்தவாறே!)     

         

      அன்னையர் தினத்தைப் பற்றி காலம் தாழ்த்தி எழுதினாலும், ஒன்று மட்டும் சொல்லிச் செல்கிறேன், அன்னை என்ற வார்த்தையின் பொருளை அன்று உணர்ந்தேன். அன்னையாக வாழும் அத்தனை தினங்களும் சிறப்பைத்தரும் அன்னையர் தினங்கள்தான். அன்னையருக்கு ஏது அன்னையர் தினம்….(தனியாக) எப்படி? என் கருத்து சரிதானே?

Friday, May 2, 2014

எழுதுகோல்


          பிறந்தவுடன் கண் திறந்தேன்!
பிறவி இதுவென்று உணர்ந்தேன்!
அன்புடன், அறிவையும் சுவாசித்தேன்!
அடைக்கலம் அதுவென்று அறிந்தேன்!
நிறங்களை நிமிடத்தில் கண்டு கொண்டேன்!
நிதசர்சனங்கள் இவையெல்லாம்!என்று சொன்னேன்!
கானம் பலவும் காதுடன் கேட்டேன்!
காதிலும் தேன் பாயுமென புரிந்து கொண்டேன்!
பாடும் பறவைகளுடன் பறந்தேன்!
பக்குவமான மனம் அமைய பெற்றேன்!
பச்சைப் புல்வெளியைப் பார்த்தேன்!
பகைமையில்லா மனதுடன் பரவசமாகி போனேன்!
தெய்வங்களை தரிசித்தேன்!
தென்றலெனும் வாழ்வடைந்தேன்!

நீலவானம், இரவில் சுடர்விடும் விண்மீன்கள்,
நீரின் அசைவுகள், அதில் நீந்தும் மீன்கள்,
உதிக்கும் சூரியன், அதன் புலரும் பொழுது,
உயர்ந்த மலைகள், அதை வருடும் அந்திச்செம்மை,
இரவின் இருள், அதன் குரலாய் நிசப்தம்,
இருண்ட வானம், அதன் வேராய் பெருமழை,
மரங்களுடன், மலர்கள், அதை தழுவும் மதியின் அழகு,
மதிய வெயில், அதன் இறுதியில் மாலை வேளை,
அடர்ந்த காடு, அதை குளிர்விக்கும் அருவி,
அழகிய சோலை, அதை மணக்கச் செய்யும் மலர்கள்,

இவை அனைத்தும், அழகென்று உவகையுற்றேன்!
இயற்கையின் சீதனமென்றும் தெரிந்து கொண்டேன்!     
அதிசயத்து, பலமுறை வியந்து நின்றேன்!
அற்புதமான உலகமென்றேன்! இன்னும்,
எத்தனையோ, படைப்பு கண்டேன்!
எளிதில்லை இது!!! என புரிந்து கொண்டேன்!
அள்ளக் குறையாத பல மொழிகள் பயின்றேன்!
ஆயினும் தமிழ் மேல் காதல் கொண்டேன்!

காட்சிகளின், எண்ணங்கள், தாக்கங்கள்,
கனவிலும் வந்து களிநடனம் புரிய,
கண் விரட்டும் உறக்கத்தையும்,
களைந்தெறிந்து, கற்பனையில் மிதந்திருந்தேன்!
கண்ணில் கண்டதை கவி பாடினேன்!
கதைகள் புனைந்து களிப்புற்றேன்!
காலத்தில் அதை பதித்து வைத்து,
கருத்துக்ளுக்கு காத்திருந்தேன்!
கசடுகள் நிறைந்த கவியென்றும்,
கட்டுக்கதைகள் இவையென்றும்,
கசப்புடன் காலம் சொல்லிச் செல்ல,
கனமான மனதுடன் உடல் நொந்தேன்!

இத்தனை பார்த்தும், ரசித்தும்,
இன்னும் ஏகமாய், ரசித்து பார்க்க நினைத்தும்,
மறந்து போனது ஒன்றுதான்! மற்ற,
மனிதரின் மனதை ரசிக்கவில்லை!
மமதையில்லா உள்ளம் பெறவில்லை!
மகிழ்ச்சியில், மனமது நிறைந்திட, அவர்தம்
மனவியல் படிக்கத் தவறி விட்டேன்!

எது எப்படியாயினும், இன்று வரை,
என்னுடன் உறவாடும் எழுதுகோல், என்
உறவை பிரிய மனமின்றி, தன்
உயிரையும் எனக்கு தந்தபடி, உன்
உற்றத் தோழன் நானிருக்க, உவகையான,
உள்ளத்துடன், உன் உதிரம் உலர்ந்து போகும் வரை.
உலகில், நீ ரசித்ததை, எல்லாம்
உண்மையுடன் உணர்த்தி விடு! அது
உன்னதமாகும் ஒரு நாளில்!!!! என்றது! அது
அன்புடன் சொன்னதில், அகம் குளிர்ந்து,

ஆசையாய், அதை அரவணைத்து, என்மன
ஆறா தழும்பையும், ஆற வைக்க, என்
ஆறாம் விரலாய் நீ இரு!!!! என யாசித்தேன்.......