Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts
Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts

Wednesday, June 13, 2018

நினைவுகள்....


         கூட்டுக் குடும்பங்கள் சிறந்ததெனினும், தற்போதைய சூழ் நிலைகளில் நம்மால் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொருவரின்  வேலைகள், கனவுகள்,  கற்பனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், அவசியங்கள் போன்றவை விரிந்து பரந்து  உலகளவு வியாபித்து விட்டது. நெருங்கிய உறவுகளே எப்போதோ சந்தித்து கை குலுக்கி கொள்கிறோம். அவசியமானதை கைபேசியில் பேசி,  கணினி திரையில் மனசுக்கு தோன்றும் போது பார்த்துப் பேசி உறவுகளை தொடர்பில் வைத்துள்ளோம்.  அதுவும் என்று நம் நினைவிலிருந்து கழன்று கொள்ளுமோ தெரியவில்லை. 

இதை எழுதும் போது என் பெற்றோர் (1973ல் இருக்குமென நினைக்கிறேன்.)  மதுரையில் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது, திருமணத்தில் சந்தித்த மற்றொரு உறவுகாரர்கள் அவர்கள் வீட்டுக்கு அழைத்ததின் பேரில் அங்கு செல்ல சம்மதித்து அவர்கள் வீட்டுக்கு சென்றார்களாம். 

அது மிகப் பெரியவீடு  வீட்டில் நான்கைந்து அண்ணன், தம்பிகள். அவர்களின் மனைவிகள் ஆளாளுக்கு மூன்று நான்கு குழந்தைகள், மனைவிகளின் சொந்தங்கள். கணவர்களின் உறவுகள் என வீடே ஒரு கல்யாண மண்டபமாய் கலகலத்துப் கொண்டிருந்ததாம்.... அண்ணன் தம்பி குழந்தைகள் ஜாடையில் ஒருவரை ஒருவர் ஒத்துப் போனதில்,  எத்தனை அறிமுகப்படுத்தியும், அவர்களை புரிந்து கொள்ள சற்று  கடினமாக இருந்ததாம். 

அவர்கள் என் அப்பா வழி உறவு என்றாலும், என் பெற்றோருக்கு அனைவரும் அவ்வளவாக  அறிமுகமில்லை. என் அப்பாவுக்கு அவர்களின் பெற்றோர் ஒன்று விட்ட வழி உறவுகள்.. அவர்கள வறுப்புறுத்தி அழைத்ததினால் இரவு தங்கி விட்டு மதியம் திரும்பி விட்டனர். மதிய சாப்பாடு பந்தி போல அனைவரும் அமர்ந்து சாப்பிட்டார்களாம்.  பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருந்தது என வந்த பின் அவர்களின் உறவின் பெருமையை சொல்லி, சொல்லி என் அப்பா அதிசயித்து கொண்டே இருந்தார்.

கிட்டதட்ட 30,  35 பேருக்கு தினமும் சமையல் செய்து பறிமாறி, வீடு வாசல் சுத்தம் செய்து,  ஒவ்வொருவரும் அத்தனைப் பொழுதும்  அந்த குடும்பத்துக்காகவே கழித்து, நாட் கிழமை என்று பண்டிகை காலங்களையும் வரவேற்று,  இதில் எந்த  விதமான மனஸ்தாபத்துக்கும் இடம் தராமல் புன்னகைத்து மன மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொண்டு, "எப்படித்தான் இவர்கள்" என நாங்கள் அந்த உறவின் பெருமையை  நினைத்து வியந்து போனது இன்னமும் என் நெஞ்சில்  பசுமரத்தாணி போல உள்ளது.

இன்று கணவன் மனைவி அவர்களின் குழந்தைகள், அதற்கு மேல் ஒரு உறவு என்றாலே அந்த வீட்டை ஒரு அதிசய பொருளாக பார்க்கிறார்கள்.  காலம் மாறி விட்டது.  நான் முதலில் சொன்ன காரணங்கள் கூட்டுக்குடும்ப வேர்களை தாக்கி  அந்த மரங்களை செல்லரிக்க செய்து  வீழ்த்தி விட்டன.

அந்த பெருங்குடும்பத்தை நானும் பார்க்க வேண்டுமென அம்மாவிடம் எத்தனையோ முறை அவர்களைப்பற்றி பேச்சு வரும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை.. வாழ்க்கைப் படகு திசைகள் மாறி பயணித்துதானே போகும். நினைவுகள் மட்டும் வருத்தமான சுமைகள், மகிழ்வான சுமைகள்  என சுமைகளை சுமந்து கொண்டு படகுடனே பயணிக்கும். 

(வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.)

அன்று  நடக்காத ஒன்றை,  தெரியாத முகங்கள் ஏற்படுத்திய  உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும்  உறவின் பெருமையை அறிய வைக்க  இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம்  அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும்  எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது.  இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து)  ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.

என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு  பதிலளித்து  எனக்கு புன்னகைக்க ம‌ட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும்  உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. )  இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு  சிரிக்க கற்றுக் கொண்டேன்.   ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்பிக்கிறேன். 


அனைவரைப் பற்றியும் வலைத்தள உறவுகள் பற்றியும் என் குடும்பத்திலுள்ளவர்களிடமும்  கூறியுள்ளேன். நல்லவர்களை பற்றி சிறப்பாக கூறுவது இயல்புதானே. என் வலைத்தள எழுத்துகளுக்கு உதவியாய் இருக்கும் என் குழந்தைகளிடமும் கூறியுள்ளேன். ஒருவேளை மரணம் வந்து என் எழுத்துகளையும், என்னையும் பிரித்தால் அதையும் பகிர்ந்து அனைவருக்கும் தெரிவித்து விடும்படியும் சொல்லியிருக்கிறேன்.  எதுவும் அவன் செயல் அல்லவா.. நம் கையில் என்ன உள்ளது....

படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Thursday, May 17, 2018

அன்னை ...


இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக்காது.. கடக்கவும் விட மாட்டோம். 

கடந்த ஒருவார காலமாக  காய்ச்சல், பல்வலி, இருமல் என உடல்நல குறைபாடு. இதில் ஒவ்வொரு நாளும் நம் கடமைகளை செய்யும் போது (சமையல், இதர வேலைகள்)  வேலைகளில் விருப்பபின்மை இல்லாது, ஏதோ சுவாரஸ்ய குறைவோடு,  என்னை நான் கடந்து கொண்டிருந்த போது  அன்னையர் தினம் என்னை கடந்து விட்டது. அதற்காக பதிவெல்லாம் ரெடி பண்ணி எழுத நினைத்தது இயலாமல் போய் விட்டது. 

என் சிறு வயதில் விடாமல் 20 நாட்களுக்கும் மேலாக துரத்திய ஜுரமொன்றில், என் அன்னை என்னை நினைத்து கலங்கியது இன்னமும் என் நினைவின் அடித்தளத்தில் பதிந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி தெருவுக்கு தெரு டாக்டர்  என்ற வசதி கிடையாது. ஒரு காய்ச்சலுக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, அரத்தை, இஞ்சி இதை விட சிறந்ததாக எதுவும் கிடையாது என்ற நம்பிக்கையே காய்ச்சலை அலறி அடித்து ஓடிப் போகச் செய்து விடும்.  ஆனால் அந்த தடவை அது அலறாமல், தைரியமாக டாக்டரை சந்திக்காமல் நகர மாட்டேன் எனவும், ,எந்தவசதியும் இல்லாத எங்கள் இடத்திலிருந்து, சோர்ந்திருந்த என்னை தூக்கிக் கொண்டே நடந்து,  நீண்ட தொலைவிலுள்ள மருத்துவரிடம் சென்று காண்பித்து,  அவர் பரிசோதனை செய்த பின் "டைப்பாயிடு" எனவும் அதற்கும் கலங்கி, (அப்போது  அந்த ஜுரம் அனைவரையும் பயமுறுத்துவது ) எனக்கு குணமாகிற வரைக்கும் கண்ணின் மணியென காத்த என் அம்மாவின் நினைவு இப்போதும் ஜுரம் வந்தவுடன் வந்து விட்டது.  அன்னையிடம் சொல்லி ஆறுதல் பட முடியாததை இந்த அன்னை பதிவில் உங்களைவரிடமும்  சொல்லி,  மன ஆறுதல் அடைகிறேன். 

அன்னையர் தினம் கடந்து விடினும், அன்னையை தினமும்  மனந்தனில் சுமப்பவர்களுக்கு
தினமும் அன்னையர் தினமே..... 


படித்ததில் பிடித்ததாக மற்றொன்றும்.. 

வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும்.  நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான்.  தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம். அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள்.

தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான்.

அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள்.

மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான்.

சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.  நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய்.

உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம்.  

தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது.
தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான்.  நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

Thursday, May 10, 2018

கைபேசி.. ...

நினைவுகளின் சுவாரஸ்யங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவும் நினைவுகள் சார்ந்த பதிவின் ரகந்தான்.

அந்த காலத்தில் பொதுவாக  நட்பு மற்றும் உறவுகளுக்குள் தொடர்பென்பது கடிதங்கள் வாயிலாகத்தான். கார்டு, இன்லேன்ட் கவர்கள் இதற்கு பயன் பட்டது. கொஞ்சம் அதிகப்படியாக கதை அடிக்கும் பழக்க முள்ளவர்கள் வெள்ளைத் தாளில் எழுதி (இது அவரவர் விருப்பம். எத்தனை தாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கவர் ஒட்டி அதற்கு தகுந்த ஸ்டாம்ப் ஓட்டுவதற்கு  வசதி படைத்தவர்கள் எவ்வளவு தாள் வேண்டுமானாலும் கதைகள் எழுதலாம்.) அனுப்புவார்கள். இப்படி போய் சேரும் கடிதங்கள் இரண்டொரு நாளில் தகவலை கொண்டு சேர்த்து விடும். ஒரு திருமணம், நல்லசெய்திகள் விழாக்கள் இவற்றை பகிர்ந்து கொள்ள பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே,  உறவுகள் வெகு தூரமாயின் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் தெரிவித்து விருந்தோம்பும் பழக்கங்கள் இருந்தது. மற்றபடி உறவுகள் சந்தித்து கொண்டு அளவளாவி மகிழ்வது இந்த குறிப்பிட்ட சந்தர்பங்களில்தான். அங்கே சந்தோஷம்  அள்ள அள்ள குறையாத நதியாக பிரவாகம் எடுத்தபடி இருக்கும்.

இந்த கார்டு, கவர் போக விரைவில் தகவல் சென்று சேர வேண்டுமென்பதற்காக தந்தி முறையும் இருந்தது. ஆனால் இதை முக்கால்வாசி ஒருவர் தவறி விட்டாலோ, அல்லது, உடல் நலகுறைபாடு காரணமாக மிகவும் மோசமுற்ற நிலையில் ஒருவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போதோ,  என்ற அவசரத்திற்கு மட்டுமே இதை பயன் படுத்தினர்.  நல்ல விஷயங்களை  பெரும்பாலும் இது தாங்கி வருவது அரிதுதான்.

இதை கூறியதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் வசித்தது சிறுஊர்தான். (பிறந்த வீடு ) கிராமமும் இல்லா, நகரமும் இல்லா ஒரு நடுத்தரம்.  ஒரு சமயம்  உறவின் இல்லத் திருமணத்திற்கு எங்கள் அப்பா சென்று விட்டு வந்து ஒருமாதம் சென்றிருக்கும்.  ஒருநாள் நடுநிசியில் தந்திச்செய்தி வந்து அக்கம் பக்கம் அனைவரும் நித்திரையில் எழுந்து வந்து என்னவோ ஏதோ வென்று விசாரிக்க வந்து விட்டனர். அந்தளவுக்கு தந்தி என்றால் அப்போது பயம். விஷயம் ஒன்றுமில்லை... திருமணத்திற்கு வந்திருந்த ஒரு உறவு எங்கள் வீட்டிலும் பெண் இருப்பதை தெரிந்து விசாரித்த பின்,  'எனக்கு தெரிந்த விடத்தில் ஒரு நல்ல பையன் வீட்டார் இருக்கிறார்கள். அவர்களை இந்த முகவரியில் அனுகவும்' என்ற சுபச் செய்தி தாங்கி வந்திருந்த செய்தி .. பகலில் மூடிய தாளில் செய்தி வந்தால் ஒரளவு பயத்தை வெளிக்காட்டாது படித்தபின் சந்தோஷமோ, சஞ்சலமோ  எந்த உணர்வுக்கும் தயாராகலாம். அது இரவில், அதுவும் நடுநிசியில்  பேயும், நாயும் பாய் போட்டு படுத்துறங்கும் வேளையில் வந்தால், நாங்கள் பதறாமல் என்ன செய்ய முடியும்? அந்த விஷயத்தை தலை போகிற அவசரத்தோடு, அர்த்த ராத்திரி வந்து சேரும்படியாகவா  அனுப்ப வேண்டும்  அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் வாய்க்கு அவலாக பத்து நாட்களுக்கு மென்று கொண்டிருந்தனர்.  அதன் பின் அந்த உறவின் பெயரை சொன்னாலே, ஓ.. அர்த்த ராத்திரியில் அலற அடித்தவரா? என்ற பட்டப் பெயர்தான் அவருக்கு.

ஆனால், இப்போதெல்லாம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காலம் மாறி விட்டதில், கடிதங்களின் தந்திகளின் தொடர்புகள் அறவே நின்று விட்டதோ என எண்ண வைக்கிறது. நல்லது, கெட்டது அனைத்திற்கும் தொலை பேசிதான். அதுவும் இந்த கைபேசியும், கையும் பிரிக்க முடியாத ஒட்டுதல் நட்பு ஆகி விட்டது. அது அழைத்து வரவழைத்த எங்கு சென்றலும்,((நல்லது, கெட்டது போன்ற விடங்களுக்கு தான்..) சம்பந்த பட்டவர்களுடன் அந்தந்த விஷயங்கள் குறித்து இரண்டொரு வார்த்தைகள் பேசுவது சரி,... அதன் பின் கையும், பேசியும் இணைபிரியாத நண்பர்களாகி, வேறு வேறு உறவுகளுடனோ, நட்புடனோ விவாதத்திற்கு ரெடியாகி விடுவார்கள்.

விஷேசங்களுக்காக வந்திருக்கும் குறிப்பிட்ட உறவுகளுடன் வேறு ஒரு உறவின் இல்ல விஷேடங்களுக்கு செல்லும் போது பேசிக் கொள்ளலாம் என்ற தைரியத்தையும் இந்த கைப்பேசி கற்றுக்கொடுக்கும். உயிர் இல்லாமல் கூட எப்படியோ வாழ்ந்து விடலாம் (அது எப்படி என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது. உடல் தானம் என்றெல்லாம் இருக்கிறதே..)  உயிர் இல்லாவிடினும் உடல் இயங்கும்.
கைபேசி இல்லாவிடில் கைகள் இயங்காது
உயிர் போனா திருப்பி வாங்க முடியாது... கை பேசி போனா மறுபடி உடனே வாங்க லைன்னா  உயிரே போய் விடும். இதெல்லாம் கைபேசியின் புகழ் மாலைகள்... அஷ்டடோத்திரங்கள்.

இத்தனை புகழ் இதற்கு தேவையா எனக் கேட்போருக்கு, 'ஆமாம்' என்பதே என் கருத்து. ஏனெனில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல்..'  .கணினியில் எலி பிடித்து  அதன் வாலாட்டி, கீ போர்ட் அடித்து, நம் நினைவு சிதறும் போது காலாட்டி, கண்மூடி யோசித்து பதிவெழுதி பதிலெழுதி அதை தேய்க்கடித்து  அதனை விட்டு டேப்லெட் தாவி, அதுவும் டேப்லெட் போட முயற்சிக்கும் போது கைபேசியுடன் இணைந்து, பதிவுகள் பல எழுதி பல மணி நேரங்கள் தினமும் பேசியுடன், பேசாமல் பயணிக்கிறேன். அதனை வைத்து கொண்டு அதன் மூலம் பிறருடன் பேசியோ,  அதனை கீழே வைத்து விட்டு அனைவருடன் பேசவோ இயலாத ஒரு நிலையில், கைபேசி எனது கை கணினியாகிப் போனது. பின் என் புகழ் மாலைகள் கைபேசிக்கு எப்படி தேவையில்லாமல் போகும்.... கைப்பேசி என் தொல்லை பொறுக்காது கையறு நிலைக்கு வரும் முன், முதலில் கை கொடுத்த கணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....




Friday, April 27, 2018

நினைவுகள்....

காலங்களுக்கு ஏற்றபடி பழக்க வழக்கங்கள் எத்தனையோ  மாறுதல்கள் வந்தாலும், பழைய நினைவுகள், அதனுடைய சுவையான அனுபவங்கள், அதன் நிழலாக சின்ன சின்ன சந்தோஸங்கள்  இத்தனையும் ஞாபகம் வராமல் இருப்பதில்லை.

சின்ன வயதிலிருந்தே எனக்கு பிள்ளையார் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு விருப்பமாய், பய பக்தியாய், ஒரு உறவின் அருகாமையோடு அதைவிட மேம்பட்டு சொல்லப்போனால்,  இதமாக தோளணைக்கும் சினேகிதத்தோடு, அவருடன் உரையாடி வணங்கி மகிழ்வது என் பழக்கம் . ( இதிலென்ன அதிசயம் எங்களுக்கும் அப்படித்தானே! ! என்று அனைவரும் எண்ணலாம்...)  உண்மை. !அனைவருக்கும் அவரது எளிய மனப்பான்மை மிகவும் பிடிக்கும். அவருக்கு பெரிய அழகான கோவில்கள்தான் வேண்டுமென்பதில்லை . சின்னதாய் இடமிருந்தாலும்,  நாலுசுவர்களுக்கு மத்தியிலும், நாலு கம்பியில் சட்டமடித்த சின்ன கதவுக்கு அப்பால் வீட்டு வெளிவாசல் மதில்சுவரகளில் சிறிதளவு இடத்தில் கூட தன் தேவையைபற்றி  கவலையுறாது புன்னகைபூத்த விழிகளோடு நமக்காக அமர்ந்திருப்பார். சிலுசிலுவென காற்றடிக்கும் குளக்கரையிலும், அரச மரத்தின் கீழும் நாம் எங்கெல்லாம் அழைக்கிறோமோ அங்கெல்லாம் அவர் வரத் தயங்குவதில்லை. கடும் வெய்யிலோ, கடும்பனி பெரும்மழையோ எதையும் பொருட்படுத்தாது நமக்காக மரத்தடியில் அமர்ந்து நாம் வேண்டுவனவற்றை அருள தயங்குவதில்லை. அண்ட சராசரங்களையும், பஞ்ச பூதங்களையும்  தன்னுள் அடக்கியவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகி விடுமா என்ன......

''பிடித்து வைத்ததெல்லாம் பிள்ளையார்'' என்ற பேச்சு வழக்குபடி எந்தப் பொருளைக்கொண்டும் அவரை நினைத்து பிடித்து வைத்தாலும், அந்த பொருளில் அவர் ஆவாஹனம் ஆகி நம்முடைய பூஜைகளை ஏற்றபடி, வேண்டும் வேண்டுதல்களை பரிபூரணமாக தந்தருள்வார். ஆடம்பர அலங்காரமெல்லாம் அவருக்கு தேவையில்லை.  வாசமுள்ள மலர்களால்  அவரை பூஜித்தால்தான் நம் வாழ்வை சிறக்க செய்வார் என்றில்லை. எளிய  அருகம்புல் மாலையானாலும், எருக்கன்பூவில் தொடுத்த மாலையானாலும், மகிழ்வோடு அணிவித்தால் போதும்  மனமுவந்து ஏற்றுக்கொள்வார். எளிய தெய்வம், முழுமுதல் தெய்வம், யானை முகத்தோன், கண நாதா இப்படி என்ன வேண்டுமானாலும் இவரை சொல்லலாம்.. ஓம் எனும் ஒரு மந்திரத்தில் அடக்கமானவர்.




இந்தப் பிள்ளையாரை பற்றி கேட்டு சொல்லி வளர்ந்ததினால், என் மகளுக்கும் பிள்ளையார் என்றால் மிகவும் இஸ்டம். அவளின் பதிநான்காவது வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு பிள்ளையார் படம் வெறும் வெற்றுத்தாளில் 
வீட்டில் இருக்கும் கலர்பென்சில்களை கொண்டு வரைந்த படம் இது. முழுமனதாக விருப்பமாக வளர்ந்திருக்கிறாள். பிள்ளையாரை பற்றி  நிறைய சொல்லியிருப்பதால் அவள் உள்ளத்திலிருப்பது அப்படியே படமாக  அவர் அவதரித்திருப்பதாக எனக்கு தோன்றியது. வேறு மாற்றங்கள் செய்தால் படத்தின் தன்மை மாறுபட்டு விடும் என்பதினால், எவ்வித திருத்தங்களும் செய்யாமல், (கலர் மாற்றம்) அப்படியே பூஜையறையில் படங்களோடு வைத்திருந்தேன். ஊர், வீடு மாற்றங்களினால், பேக்கிங் பண்ணும் போது அது புத்தகங்களோடு கலந்திருந்து விட்டு இப்போதுதான் மறுபடியும் என் கண்ணில்பட்டது. இதை பார்த்தவுடன் அன்றைய நாளின் நினைவுகள், அவளை பாராட்டியது அத்தனையும் நினைவுக்கு வந்தது. பழைய நினைவுகள் என்றுமே இனிதானவையில்லையா ? அந்த இனிமையை ஒரு பதிவாக உங்களுடன் பகிர்ந்துள்ளேன். என் மகள் வரைந்த பிள்ளையாரை நீங்களும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

மிகவும் நன்றியுடன் 
உங்கள்  சகோதரி.....