நான் சின்ன வயதில் அம்மா வீட்டில் இருக்கும் போது நாங்கள்..(நாங்கள் என்றால், வீட்டிலுள்ள அங்கத்தினர்) திரைப்படங்களை அடிக்கடி திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பது கொஞ்சம் அரிதானதுதான். ஆனாலும், நல்ல குடும்ப படங்கள், பக்தி படங்கள், என்றால், வீட்டில், அதுவும் பள்ளி பரீட்சை முடிந்த விடுமுறை தினங்களில், அழைத்துச் செல்வார்கள். வேறு எவர்களோடும், (உறவு முறை, நட்பு) எங்களை அனுப்பியதில்லை. என் அண்ணாவுக்கு மட்டும் கல்லூரி காலங்களில் தன் நண்பர்களோடு செல்ல அனுமதி கிடைத்து விடும். அம்மா, பாட்டி இவர்களோடு நல்ல படமாக இருந்தால் நாங்கள் சேர்ந்து போவோம். ஆனால் எல்லாமே வந்து ஒரிரு ஆண்டுகள் ஆன பழைய படங்கள்தாம். அவர்களோடு சென்று அவர்கள் காலத்திலும் வந்த ஒரிரு படங்களையும் பார்த்துள்ளேன்.
அப்போதுள்ள நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வேறு பொழுது போக்குகள் என்றில்லை. அருகில் இருக்கும் கோவில்களில் ஏதேனும் விஷேடங்கள், என வந்தாலொழிய கோவில்களுக்கு தினமும் செல்லும் பழக்கமும் இல்லை. இப்போது போல் மூலைக்கு மூலை பார்க்,தெருவுக்கு தெரு விதவிதமான பேன்சி கடைகள் என எதுவும் உற்பத்தியாகவில்லை. வாகனப் பெருக்கங்ககளும் அவ்வளவாக இல்லை. க. கெ. கு. சு என்ற பழமொழிக்கேற்ப அங்கே உள்ள திரையரங்கம் ஒன்றுதான் வழி.
அப்போது தி. லி யில் சென்ட்ரல், பார்வதி,ரத்னா, பாப்புலர், , ராயல் தியேட்டர் என அனேக திரையரங்குகள். இருந்தன. அப்புறம் பூரணகலா, இன்னும் பல திரையரங்குகள் புதிதாக வேறு முளைத்து வந்தன. அங்கெல்லாம் சென்று கூட ஓரிரு படங்கள் பார்த்துள்ளோம். (இப்போது அந்த திரையரங்குகள் இருக்கிறதாவென தெரியவில்லை) பொதுவாக பெரிய நகரங்களில் தீபாவளிக்கு, பொங்கலுக்கென வெளியிடும் புதுப் படங்கள் இங்கு வருவதற்கே தாமதமாகி விடும். ஆனால், அப்போது வரும் அந்த படங்களை பார்க்க வேண்டுமென இருந்த ஆர்வங்கள் இப்போது என்னவோ சுத்தமாக இல்லை. அது வேறு விஷயம்.
ஒரு தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் படங்களை அடுத்த தீபாவளிக்குள்...!! , இல்லை, அடுத்த தீபாவளியன்று வேறு ஏதாவது திரையரங்கில் அதே படங்களை போட்டால், செல்வோம். அதற்கு கூட அந்த தீபாவளி, பொங்கல் நாளன்று செல்ல மாட்டோம். ஒரு வாரத்திற்கு மேலாகவே, திரை அரங்குகளில் ஒரே கூட்டமாக இருக்கும் என வீட்டில் பல அபிப்பிராயங்கள் சொல்வார்கள்.
தீபாவளி முடிந்து ஒரு மாதங்களுக்கு மேலாகவே தினசரி ஒவ்வொரு காட்சிகளுக்கும் வரும் கூட்டங்கள் ஆடி அடங்கிய மறுநாளோ, இல்லை, அதற்கடுத்த நாளோ,"இப்படம் இன்றே கடைசி" என்று திரையரங்கிலிருந்து அந்த படத்தை எடுத்து விடுவார்கள் என்ற ஒரு நிர்பந்த காலகட்டத்தில் அந்த படத்தை ஏற்கனவே ஒரு /பல முறை பார்த்தவர்கள் (வேறு யார்..? வீட்டின் அருகில் இருக்கும் சுற்றங்கள், நட்புகள்தான் ) "ஐயோ..! இன்னுமா நீங்கள் அந்த படத்தை பார்க்கவில்லை..? அதில் அந்த கதாநாயகன், கதாநாயகி நடிப்பும் அந்த கதையும், முடிவும், பாடல்களும் அவ்வளவு நன்றாக இருக்கிறது. இப்படி இதுநாள் வரை எப்படி பார்க்காமல் இருக்கிறீர்களே?" என வீட்டில் அம்மா, பாட்டியிடம் மதிய வேளைகளில் அங்கலாய்த்த பின், "ஒரு வேளை அதை பார்க்கா விட்டால் ஏதேனும், உலகமகா குற்றமாகி விடுமோ" என்ற அவர்களின், (சமயங்களில் நானும் அவர்களுடன் இணைந்து ஏற்படுத்தும்) நினைப்பின் அலசலில், " இன்று போகலாமா.?" என ஒரு மட்டும் முடிவு செய்து புறப்படுவோம்.
அந்த அளவுக்கு திரைப்படங்கள் பார்க்க தயக்கங்கள், கட்டுப்பாடுகள். இத்தனைக்கும் தரை டிக்கெட் விலை நாலணாதான். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. அந்த பெஞ்சில் பின்னாடி சாய்ந்து கொள்ள இரண்டு கட்டைகள் வைத்த பெஞ்ச் கட்டணம் முக்கால் ரூபாய், தனித்தனியாக உட்கார வசதியாக இருக்கும் சேர் ஒரு ரூபாய் என படிப்படியான வசதிகளுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் வேறு. அதில் அந்த முதலில் சொன்ன ஒருவருக்கு நாலணா என்றால், மூவர் சென்றால் கூட, முக்கால் ரூபாயாகி விடும். அது வீட்டின் அன்றாட இதர செலவுகளுக்கு பயன்படுமே என்ற நினைவுகள் வேறு வந்து படங்கள் பார்ப்பதை சில சமயம் தடை செய்யும். அப்போது வீட்டின் பணத்தட்டுப்பாடுகள் சினிமா பார்க்கும் ஆசைகளுக்கு பெரும்பாலும் தடை போடும்.
நாட்கள் செல்லச் செல்ல திரைப்படம் பார்ப்பதற்கான கட்டணங்கள், அணாவிலிருந்து ஒன்று, இரண்டென்ற ரூபாய்க்கு வந்து, ஐம்பது நூறாக மாறி, இன்று ஐநூறு, ஆயிரம் எனவும் வந்து விட்டது. அதுவும் முதல் நாளாகிய இன்றே பார்த்து விட வேண்டுமென்பவர்களுக்கு ஆயிரத்திலிருந்து மேலும் பல ஆயிரங்களை சேர்த்து தரும்படியாக (பிளாக் விற்பனையில்) சூழலைக் கூட தந்து விடும்.
எங்கள் திருமணத்திற்குப் பின் நான் சென்ற படங்களையும் எண்ணி கணக்கில் சொல்லி விடலாம். கூட்டு குடும்பம், குடும்பத்தில் பெரியவர்கள் என்ற மரியாதைகள், அவர்கள் விருப்பமின்றி வெளியில் செல்ல முடியாத சூழ்நிலைகள், என வாழ்ந்த போது சினிமாக்கள் எல்லாம் ஒரு கனவுதான்.(ஆமாம்.. இதில் இரவு நேர கனவு பலிக்குமா? பகல் நேர கனவு பலிக்குமா? "பகல் கனவு பலிக்காது" என்பார்கள்.ஏன் அப்படி? பகலில் அவ்வளவாக ஆழ்ந்த உறக்கம் வராது எனபதினாலா ? பகலில் சட்டென முழிப்பு வந்து விடும் போது கண்ட கனவுகள் சட்டென அது போலவே கரைந்து விட வாய்ப்புள்ளது என்பதாலா..? அதைப்பற்றி பிறகு ஒரு முறை விவாதிப்போம். :))) ) பிறகு வந்த காலங்களில், சிறு குழந்தைகளை அழைத்து செல்வதென்பதும், இயலாத காரியங்களாக போய் விட்டது.
முதன் முதலில் மக்களுக்காக தோன்றிய பொதிகை/ தூர்தர்ஷன் தொலைக்காட்சிகள்தான் ஏதோ ஒரு தமிழ் படத்தை ஞாயிறன்று மாலை இடையிடையே ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு இடையே ஒளிபரப்பி, என்னைப் போல் திரையரங்கம் சென்று திரைப்படம் பார்க்காதவர்களுக்காக புண்ணியம் தேடிக் கொண்டது. அப்போது எங்கள் புகுந்த வீட்டிலும் டி. வி கிடையாது. எதற்கு இடத்தை அடைத்துக் கொண்டு என வாங்கவில்லை. தெரிந்தவர் வீட்டிற்கு (ஒரளவுக்கு எங்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படியோ உறவு முறை என்ற சொந்தமும் கூட..!) சென்று, நான், எங்கள் நாத்தனார், அவரின் மகள், மகன் சமயத்தில் என் மாமியார் என அனைவரும் சேர்ந்து சென்று சில படங்கள் பார்த்திருக்கிறோம. அவர்கள் வீட்டில் அப்போதுதான் டி. வி. வாங்கியிருப்பார்கள் போலும். முகம் சுளிக்காமல் வரவேற்று உபசரிப்பார்கள்.
பின்னர் நாளடைவில் நாங்கள் சென்று வந்த அவர்கள் வீட்டிலும் இந்த மாதிரி நிறைய பேர் பார்க்க வரவே படம் பார்க்க தலைக்கு ஒரு ரூபாய், எட்டணா என வசூல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நல்லதொரு வரும்படிக்கான வழி.:)) (எங்களிடம் அவர்கள் கேட்கவில்லை. ஆனாலும் எங்கள் மனசாட்சி உறுத்தவே அதன் பின் அங்கு போவதற்கும் எங்கள் புகுந்த வீட்டில் தடையாகி விட்டது.)
அன்று மாலை படம் ஆரம்பித்து விடும் நேரம் நாங்கள் இருந்த சித்ர குளம் தெருவெல்லாம் மக்கள் கூட்டத்தையே காண முடியாது மயிலை கபாலீஸ்வரர் கோவில், மாட வீதிகள் எங்குமே காற்றாட கால் வீசி கூட்டங்களின் இடர்கள் இன்றி அன்று நடக்கலாம். மெரீனா, சாந்தோம் கடற்கரையில் கூட்டங்களின் இரைச்சகள் இல்லாத அலைகளின் ஓசையை மட்டும் ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். அப்படியும் ரசித்திருக்கிறோம். அது ஒரு காலம்.
அதன் பின் சில வருடங்களில் எங்கள் வீட்டில் எப்படியோ டி. வி (இத்தனைக்கும் அது சின்னதான பிளாக் அண்ட் ஒயிட் டி. வி தான்.) வாங்கியவுடன் அடுத்த ஞாயறு மாலையை ஞாயறு முடிந்த மறுநாளாகிய திங்களிலிருந்தே எண்ண ஆரம்பித்தோம். வரும் ஞாயறு நல்ல படமாக, இதுவரை பார்க்காத படமாக இருக்க வேண்டுமே என அனைவரின் எதிர்பார்ப்புகளும் இருக்கும். (ஆனால், பழைய படங்களின் அணிவகுப்பே தொடர்ந்து வரும்.)
அதன் பின் அனேக சேனல்களின் உதயங்கள் வந்து தொலை காட்சி பெட்டியை கலகலக்க வைத்தன. வாரம் ஒரு முறை ஒவ்வொன்றிலும் மாறுப்பட்ட படங்கள். அதன் பின் கேபிள் கனெக்ஷன்களின் உலா வரும் ஒளிக்கதிர்கள். தினமும் ஒரு படம்.... ! (ஆனால் பார்க்கத்தான் நேரம் இருக்காது.குழந்தைகள் அவர்களின் பள்ளி, படிப்பு, வேலைகள், கடமைகள் என அப்போது கீழே அமர கூட தயங்கும் கால்கள். ) வார விடுமுறைகளில் என்றாவது குடும்பத்துடன் அமர்ந்து நமக்கு பிடித்தமான படங்களை வாடகைக்கு எடுத்து டி. வியுடன் இணைத்துப் பார்க்கும் வசதிகள் என (அப்போதுதான் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான டிபன்கள், விதவிதமான சாப்பாடுக்கள், அதை எடுத்து பரிமாறும் வேலைகள் என எனக்கு அதே கடமைகள் காலோடு கையையும், கண்களையும் கட்டிப் போடும்.) காலம் தன் கால்களை வீசி முன்னேற ஆரம்பித்தது. ஆனால், எனக்கு திரைப்படங்களை பார்க்க மனதில் விருப்பங்கள் இல்லாமலும் போனது. ( அது இப்படி படங்களை பார்க்கும் நேரத்தில் நம்மால் பார்க்க கூட இயலாமல் போகிறதே என்ற விரக்தி தந்த வெறுப்பாக கூட இருக்கலாம்:)) இது அந்த வயதின் தாக்கம். )
இப்போது தொலைக்காட்சி பெட்டிகளே( டி. வி) விதவிதமான முன்னேற்றங்களை சந்தித்து வந்தும் கூட, அதில் இலவசமாக புது படங்களையே நம் சௌகரியபடி எப்போதுமே பார்க்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தும் கூட, படங்கள் பார்க்கும் ஆர்வம் எனக்கு போயே போச்சு...!
இத்தனை பீடிகை இப்போதெற்கு என்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். நீங்களும் என்னுடைய அந்த கால பழைய பல்லவிகளை கேட்டு, அதை நினைத்து சற்றே சலிப்பாவதற்குள் இந்த தீபாவளிக்கு நான் சற்றும் எதிர்பாராது மகன்கள் அன்று வெளி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படமான "அமரனை" பார்க்க ஆன்லைனில் டிக்கெட் எடுத்து விட்டதால், குடும்பத்துடன் சென்று வந்தோம் என்பதை சொல்லி விடுகிறேன்.
"படம் நன்றாக உள்ளது நீங்களும் கண்டிப்பாக வாருங்கள்" என சொன்னதில் அனைவரும் தீபாவளியன்றே மதியம் இரண்டாவது காட்சிக்கு சென்று வந்தோம்.
அன்று காலை அந்த படம் இங்கு ரீலீஸ் ஆகி, முதல் காட்சி வந்து பின் இரண்டாவது காட்சிக்கு நான் கடந்து வந்த என் இத்தனை வருட வாழ்நாளில், முதன்முறையாக சென்ற முதல் புது திரைப்படம்... ,! அதுவும் தீபாவளியன்றே சென்று வந்த திரைப்படம்..! என்றொரு பெருமையை அமரன் பிடித்தது. (பெருமை எனக்கா, இல்லை, அந்த படத்திற்கா, என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை உங்கள் கருத்தில் அவசியம் சொல்லுங்கள்.அன்புடன் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா)
இரண்டு நாள் கழித்து வந்த சென்ற ஞாயிறன்று மீண்டும் ஒரு திரைப்படம். நடிகர் மம்முட்டியின் மகன் நடித்த "லக்கி பாஸ்கர்" என்ற திரைப்படம். இது காலை 9 மணிக்கே ஆரம்பம் .! இதுவும் தீடிர் என்றுதான் நான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்தது.
முதலாவது படம் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உண்மை கதையை மையமாக கொண்டு எடுத்தது. இரண்டாவது படம் வீட்டுக்காக எதையும் செய்ய துணிச்சலுடன் செயல்படும் வகையை சார்ந்த படம். இரண்டுமே வெவ்வேறான இரு கோணங்கள். அதில் நடித்தவர்களின் உழைப்பையும், திரைப்படத்தின் மற்ற துறைகளில் சிறந்த அக்கறையுடன் செயல்பட்டவர்களையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
எனக்குத்தான் இரு நாட்களும், வீட்டின் வேலைகளோடு வெளியிலும் அலைந்து திரிந்ததில் மிக அசதியாக இருந்தது. அதனால் ஒரு வாரமாக காலையிலேயே பதிவுகளுக்கு வர இயலவில்லை.
இதனால், இத்தனை நாட்கள் எந்த படங்களையும் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது போய், இந்த இரு புது படங்களை அடுத்தடுத்து பார்த்த நிலையில், இப்போது படங்களை பார்க்கும் பழைய ஆசைகளும் மீண்டும் மனதில் தலை தூக்கி ஏற்படாமல் இருக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், ஆசைகள்தான் நம் அழிவுக்கும் ஒரு மூல காரணமல்லவா.. ?
சினிமா பற்றி ஆதி முதல் சொல்லிக் கொண்டு வரும்போதே நினைத்தேன்.. ஆனால் ஏதோ OTT சமாச்சாரமாக இருக்கும் என்று நினைத்தேன். முதல் நாளே இரண்டாம் காட்சி முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteநாங்களும் நேற்று - நேற்றுதான்! - அமரன் பார்த்தோம். அடுத்த வாரம் லக்கி பாஸ்கர் பார்ப்போம். OTT யில் தீராக் காதலும்,. லப்பர் பந்தும் பார்த்தேன்!
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/முதல் நாளே இரண்டாம் காட்சி முற்றிலும் எதிர்பார்க்கவில்லை./
ஹா ஹா ஹா. நானே எதிர்பார்க்கவில்லை. அதன் விளைவுதான் ஒரு பதிவாக மலர்ந்து விட்டது. நீங்களும் அமரன் பார்த்து விட்டது மகிழ்ச்சி. நேற்று கூட சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின பதிவில் "யாருக்கேனும் ஒரு கடிதம் எழுத வேண்டுமென்ற பதிவில்" சாய் பல்லவி என குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே எனக்கு இந்த படந்தான் நினைவுக்கு வந்தது. படத்தை பார்த்து விட்டீர்கள் என்றுதான் ஊகித்தேன். ஒரு வேளை அது வேறு யாராக்கும் எனவும் நினைத்தேன். :)) தினமும் அலுவலகம், வீடு என வேலைகளுடன் இருக்கும் தாங்கள் ஓய்வு நேரங்களில் ஒரு மாறுதலுக்காக படங்கள் பார்ப்பது மகிழ்வான விஷயம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தொலைகாட்சி வந்த புதிதில் நான் சினிமா பார்க்க என்று யார் வீட்டுக்கும் போனதில்லை. ஆனால் கிரிக்கெட் மேட்ச் பார்க்க தெரியாதவர்கள் வீட்டுக்கெல்லாம் கூட சென்றிருக்கிறோம். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய உடன் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கும்வரை எங்கள் வீட்டில் வந்து ஞாயிறு படங்கள், வெள்ளி ஒளியும் ஒலியும் எல்லாம் பார்ப்பார்கள். ஆனால் சட்டசட்சட்டென எல்லார் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி விட்டார்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். ஆம் அப்போது எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி விரைவாக வந்து விட்டது. அதுவும் பிளாக் அண்ட் ஒயிட் சட்டென கலர் டிவி யென அநேக மாடல்கள் என வந்து விட்டது. நாங்கள் பிலிப்ஸ்தான் முதலில் வாங்கினோம். சின்ன டிவி. அதுவே தொடர்ந்து 20 வருடங்களாக நன்றாக உழைத்தது. என் மகன்கள் அதில்தான் ஆர்வமுடன் கிரிகெட் பார்த்தனர். அதன் பின்தான் கலர் டிவி வாங்கினோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் தியேட்டரில் ரிலீசான அன்றே பார்த்த ஒரே திரைப்படம் அண்ணன் ஒரு கோயில். என் மாமா உபயம்.
ReplyDeleteதஞ்சையிலும் மதுரையிலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தபோது திறந்த வெளித்திரையரங்கில் நிறைய படம் பார்த்திருக்கிறேன்.
இப்போதும் கூட வீட்டு வேலைகள் செய்துகொண்டேதான் ஒழிந்த நேரத்தில் படம் பார்க்க வேண்டும் என்கிற நிலை இருப்பது வருத்தம் தருகிறது. படத்தை விடுங்கள்.. ஓய்வு வேண்டாமோ..
ReplyDeleteஎப்படியோ.... சுவாரஸ்யமாக சினிமாக்கள் பற்றி எழுதி என்னையும் அந்த நினைவுகளை அசைபோட வைத்து விட்டீர்கள்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வீட்டு வேலைகள்.. என் கடமைகள். அதை மறுக்கவும் இயலாது. ஒதுக்கவும் முடியாது. நாங்கள் அனைவரும் மகன்களுடன் திரைப்படங்கள் சென்ற சமயம் தீபாவளி. அதற்குரிய வேலைகள் என்று ஒரு சில எக்ஸ்ட்ரா வாக அமையுந்தானே..! அதனால் கூடவே வந்த அலுப்புக்கள்.
தாங்கள் பதிவை ரசித்து படித்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு உங்கள் பழைய நினைவுகள் வந்தமைக்கும் மகிழ்ச்சி. பழைய நினைவுகள் என்ன இருந்தாலும், நமக்கெல்லாம் ஒரு சொர்க்கம் மாதிரிதான். தங்களது அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திரைக்கு வந்த உடன் நீங்கள் பார்த்த இரண்டு படங்களையும் நான் இன்னும் பார்க்கவில்லை. என்னவோ தியேட்டருக்குச் செல்வதில் ஆர்வம் குறைகிறது, அடுத்த காம்பவுண்டில்தான் சினிப்ளெக்ஸ் இருக்கிறது. எனக்கு பொதுவாகவே தொலைக்காட்சியிலும் (ஓடிடி) எந்தப் படத்தையும் முழுமையாகப் பார்க்கும் பொறுமை கிடையாது. 15 நிமிடங்கள்தான் பார்ப்பேன். முழுப்படமும் பார்த்தது கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை திரைப்படம் ஒன்றுதான் (இடைவெளி விடாமல், கேசட் போட்டுப் பார்த்தது)
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
ஆ.. நீங்கள் இன்னமும் இந்தப் படங்களை பார்க்கவில்லையா? பக்கத்து காமபௌண்டில் இருப்பதால் கொஞ்சம் மாறுதலுக்காக போய் வரலாமே..!!
நானும் தொலைக் காட்சியில், (ஓடிடி) அவ்வளவாக படங்கள் பார்ப்பதில்லை. வீட்டில் அவர்கள் பார்க்கும் அந்த இரவு நேரங்கள் எனக்கு ஒதுது வராது. இரண்டாவதாக இப்போது வரும் படங்களை பார்க்க பொறுமையும் இல்லை. படம் எடுத்தவுடனேயே வன்முறைகள் பார்க்கப் பிடிக்காமல் போகிறது.
நீங்கள் பார்த்த கோகுலத்தில் சீதை நன்றாக இருக்குமென நினைக்கிறேன். அதில் வரும் பாடல்கள் நான் முன்பு ஒலியும், ஒளியும் காட்சிகளில் பார்த்துள்ளேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிவசக்தி, லக்ஷ்மி தியேட்டரை விட்டுவிட்டீர்கள். பாப்புலர் தியேட்டரில் என்ன படம் பார்த்தேன் என்பது நினைவில்லை. திருநெல்வேலி நினைவு எனக்கு வந்துவிட்டது
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
சிவசக்தி, லக்ஷ்மி தியேட்டர் நினைவில் வரவில்லை. தங்களின் இன்றைய எபி பதிவில் கூறியுள்ளேன். பார்வதியும், ரத்னாவுந்தான் அருகருகே இருக்குமோ? ஒரு தடவை திருமானமான பின்பு அம்மா வீட்டுக்கு போயிருந்த போது அனைவரும் பார்வதியில் ஒரு நல்ல படம் என்று போய் விட்டு ஹவுஸ் புல் ஆகி விட்டமையால் ரத்னாவில் நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்து வந்தோம். எங்கள் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. நன்றாக தூங்கி விட்டார்கள் அது மட்டும் நினைவில் உள்ளது..
உங்களுக்கும் தி. லி நினைவை பதிவு உண்டாக்கி விட்டதா? எனக்கு எழுதும் போதே அம்மாவின் நினைவுதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோயிலுக்குப் போகக்கூட அனுமதி கிடையாதா? நாங்கள் கீழநத்தம் என்ற கிராமத்தில் இருந்தபோது தினமும் கோயிலுக்குச் செல்வோம். ஜங்ஷனில் அப்படிச் சென்றது கிடையாது. போயிருந்தாலும் ஒன்றும் சொல்லியிருக்கமாட்டார்கள் (ஆண்களை நம்பி வெளியில் அனுப்பலாம். பெண்களை? ஹா ஹா ஹா)
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நாங்கள் தினமும் கோவில்களுக்கு செல்வதில்லை. வீட்டின் வேலைகளை சரியாக இருக்கும்.
/ஆண்களை நம்பி வெளியில் அனுப்பலாம். பெண்களை? ஹா ஹா ஹா)/
ஆகா.. ஆம். ஆம். ஆண்கள் இருக்கும் இந்த உலகத்தில் பெண்களை தனியே அனுப்ப தைரியம் நிறையத்தான் வேண்டும். அதுவும் அந்த காலகட்டத்தில்.... ஹா ஹா ஹா
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனைவியை அழைத்துக்கொண்டு படம் பார்க்கப்போனாலும் வீட்டுக்கு வந்ததும் நான் ரெஸ்ட் எடுக்கலாம், ஆனால் மனைவி வீட்டு வேலைகளைச் செய்யணுமே... எனக்கு பாவம் என்று தோன்றும். பெண்கள் வீட்டின் கண்கள்தாம்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்களின் ஆதங்கம் புரிகிறது. பெண்கள் வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கென கடமைகள் உள்ளதே..! ஆண்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், பின் அவர்களுக்கெனவும் பல வேலைகள் உள்ளது. .!! வாழ்க்கையே இரட்டை மாட்டு வண்டி போல ஓடினால்தானே சிறப்பாக இருக்கும்.
/பெண்கள் வீட்டின் கண்கள்தாம்./
ஆம்.. உண்மை. கூடவே இருக்கும் வாழ்க்கை துணை ரும் அந்த கண்களுக்கு இமையாக இருந்து துணை புரிய வேண்டும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா சூப்பர் அப்படி போடுங்க...ரெண்டுமே நல்லாருக்கும்னு தோணுது.
ReplyDeleteஹப்பா இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே மகிழ்வான விஷயம். வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டே பார்ப்பது என்பது மிகவும் வருத்தமான விஷயம் கமலாக்கா...(எனக்கும் சில வருடங்கள் வரை அப்படித்தான் இருந்தது கமலாக்கா....இங்கு பெங்களூர் வந்த பிறகுதான்....நான் லாப்டாப்பில் பார்க்க முடியும் என்றாலும் சில சமயம் முடியாமல் ஆகிவிடுகிறது. கணவ்ருக்கு சுத்தமாக ஆர்வம் கிடையாது சினிமாவில். என்றாலும் நாங்க ரெண்டு பேரும் பார்த்த படம் என்றால் விக்ரம் 2 படம் பிடிக்கலை.
அக்கா, சின்ன வயசில் னீங்க சொன்னது போலத்தான் நம் வீட்டிலும். படங்கள் பார்ப்பது அபூர்வம். கூட்டிக் கொண்டு போக மாட்டாங்க. திருவிழாவின் போது தேரடியில் பார்த்தவை ரெண்டே இரண்டு அதுதானே திரும்பத் திரும்ப ஒவ்வொரு திருவிழாவுக்கும் போடுவாங்க. சில சமயம் திடீரென்று திருவிழா அல்லாத சமயங்களில் போடுவாங்க தேரடியில் ஆனால் வீட்டில் அப்ப அனுமதி கிடைக்காது.
திருமணம் ஆன பிறகும் இல்லை. எப்போதாவது உறவினர் வந்தால் அவர்களுடன் நான் சென்றதுண்டு. திருவனந்தபுரத்தில் இருந்தப்ப. அப்படிப் பார்த்தவை மணிச்சித்திரத்தாழ், பரதம். டிவியில் போட்டாலும் வீட்டில் பார்க்கும் சூழல் இருந்தால்தான் பார்க்க முடியும்.
அதன் பின் வீட்டில் டிவி இருந்தாலும் படங்கள் பார்க்க முடியாது. மாமியார் வீட்டிற்கு வரப்ப, அலல்து வேறு உறவினர் வீட்டுக்கு போறப்ப பார்ப்பவைதான். மகன் வளர்ந்த பிறகு அவனுடன் ஜாக்கிசான் படங்கள் பார்த்திருக்கிறேன் சில ஆங்கிலப்படங்கள். மகன் இங்கு இல்லாததால் தியேட்டர் போவது இல்லை.
இப்ப லாப்ட்டாப்பில் ஃப்ரீயாகக் கிடைக்கும் படங்கள் பார்க்கலம் என்றால் அப்படி சில பார்த்தேன் ஆனால் சில சமயம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது
தீபாவளி ரிலீஸ் என்று பார்த்த அனுபவங்கள் சுத்தமாக இல்லை. கணவர் வரமாட்டார் என்றாலும் எனக்குத் தனியாகச் செல்லும் தைரியம் உண்டுதான் ஆனால் வீட்டருகில் உள்ள தியேட்டர்களில் பல படங்களும், மாலைக்காட்சி, இரவுக்காட்சிகள் என்றுதான் இருக்கும்.
பகல் காட்சிப்படம் என்றால் தூரமாக இருக்கும் தியேட்டர்களில் எனவே வாய்ப்பே இல்லை.
மைத்துனர் இங்கு வந்தப்ப பொ செ இரண்டாவது பாகம் பார்க்க அழைத்துச் சென்றார் ஆனால் அந்தத் தியேட்டரில் டிஜிட்டல் சவுன்ட் என்ன பிரச்சனையோ என் ஹியரின் எய்டிக்குப் பிரச்சனையோ தெரியலை டயலாக் சரியாகக் கேட்கலை.
எனக்குத் தியேட்டரில் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு தான் அரிது.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
தங்களின் விரிவான பதில் என் இளமை காலத்தோடுதான் ஒத்துப் போகிறது. வீட்டில் அம்மா, பாட்டியை தவிர்த்து வேறு யாருடனும் நான் எங்கேயுமே வெளியில் சென்றதில்லை. அப்பா திரைப்படங்களே பார்ப்பதில்லை.
/...(எனக்கும் சில வருடங்கள் வரை அப்படித்தான் இருந்தது கமலாக்கா....இங்கு பெங்களூர் வந்த பிறகுதான்....நான் லாப்டாப்பில் பார்க்க முடியும் என்றாலும் சில சமயம் முடியாமல் ஆகிவிடுகிறது. கணவ்ருக்கு சுத்தமாக ஆர்வம் கிடையாது சினிமாவில். என்றாலும் நாங்க ரெண்டு பேரும் பார்த்த படம் என்றால் விக்ரம் 2 படம் பிடிக்கலை./
எங்கள் வீட்டிலும், கணவருக்கு படங்கள் பார்ப்பது அவ்வளவாக பிடிக்காது. கல்யாணமான புதிதில் இரண்டு, மூன்று படங்களுக்கு கடனே என்றுதான் அழைத்துப் போனார். நான் சொன்ன அந்த உறவு வீட்டிற்கும் என்னுடன் படங்கள் பார்க்க வர மாட்டார். அதனால்தான் நாத்தனார் அவர்களுடன் போவேன். எங்கள் வீட்டில் டி. வி வாங்கியதும் ஞாயறில் பல படங்களை பார்த்தோம் . அப்போது கூட கணவர் படங்கள் பார்க்கப் பிடிக்காமல், வெளியில் சென்று விடுவார். பிறகு எனக்கும் கைக் குழந்தைகள் என பல வேலைகள் வரும். பிறகு நாளாக நாளாக எனக்கும் ஆர்வமில்லாமல் போய் விட்டது.
இப்போதும் அந்த ஓடிடியில் புதிதாக வரும் படங்களை எல்லாம் வாரந்தோறும் குழந்தைகள் பார்க்கின்றனர். எனக்குத்தான் அவ்வளவாக ஆர்வம் இல்லை. (மேலும் அவர்கள் வைக்கும் சத்தமின்மை என் காதுகளுக்கு போதாது. ஒரு காலத்தில் "பாம்பு செவி" என நான் பெயர் எடுத்தவள். இப்போது என் நிலைமை எனக்கே பரிதாபமாக உள்ளது.. ) நான் அவைகளை அந்த கால ஊமை படங்களை பார்ப்பது போல பார்க்க வேண்டும். அதனால் பார்ப்பதில்லை.
பொன்னியின் செல்வன் முதல் கதை பகுதி சினிமாவுக்கு சென்று உங்கள் நிலைதான் என்னுடையதும் ... :)) இரண்டாவது கதை பகுதி சினிமாவுக்கு குழந்தைகள் அழைத்தும் போகவில்லை.
இப்போது அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்ததால் இந்த இரு படங்களுக்கும் சென்று வந்தேன். "அமரன்" அவ்வளவாக டயலாக் காதுகளுக்கு எட்டவில்லை. "படம் பார்த்து கதை சொல்தான். "
இரண்டாவது படம் தெலுங்கு மொழி கொஞ்சம் சத்தமாக இருந்தது. அதனால் பரவாயில்லை. எப்படியோ நான் எதிர்பாராமல் எனக்கு அமைந்த, நான் சென்று வந்த படங்களைப்பற்றி உங்களிடம் கூறி விட்டேன். தங்களது விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா திரும்ப திரும்ப எனக்குத் தோன்றுவது உங்களுக்கு ஓய்வு மிக முக்கியம் என்பது. மனதிற்கும் உடலுக்கும் என்று தோன்றுகிறது. ப்ளீஸ் பார்த்துக் கொள்ளுங்கள்
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
தங்களது அன்பான அறிவுரைக்கு மிக்க நன்றி சகோதரி. எங்கள் வீட்டில் நான் செய்ய வேண்டிய வேலைகளை அனைவருமே எதிர்பார்க்கின்றனர். தவிரவும் அது என் கடமையும் கூட.. மற்றபடி நடுவில் பதிவுகள் எழுதி அனைவரிடமும் இப்படி வந்து பேசுவது ஒன்றுதான் என் மனப்புண்ணுக்கு மருந்தாக நினைக்கிறேன். அதனால்தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு நேரம் கிடைக்கும் இரவுகளில் கூட சமயங்களில் பதிவுகள் எழுதுகிறேன். .தாங்கள் சொல்வது போல ஓய்வும் அடிக்கடி எடுக்கிறேன். நீங்கள் என் நலத்திற்காக இப்படி சொல்வது கூட எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. என் சொந்த சகோதரி போல தாங்கள் காட்டும் பாசத்திற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடடா கமலாக்கா, புதுப்படம் ரிலீஸ் பண்ணிய அன்றே முதல் ஆளாகப் பார்த்து விட்டமையால், பழைய ஞாபகமெல்லாம் கிளறப்பட்டு விட்டதுபோலும்... பார்த்தீங்களோ காலம் எப்படி மாறிவிட்டதென்பதை.
ReplyDeleteஆனா ஒன்று அந்தக் காலத்தில் பெண்களைப் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிப் போக மாட்டினமே... உங்களை கடசிக் கட்டத்திலாவது கூட்டிப்போய்க் காட்டியிருக்கினமே என நினைச்சுத்தான் பெருமைப்படுங்கோ:).. அழகிய நினைவலைகள்.
வணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/அடடா கமலாக்கா, புதுப்படம் ரிலீஸ் பண்ணிய அன்றே முதல் ஆளாகப் பார்த்து விட்டமையால், பழைய ஞாபகமெல்லாம் கிளறப்பட்டு விட்டதுபோலும்... பார்த்தீங்களோ காலம் எப்படி மாறிவிட்டதென்பதை./
ஆமாம். ஆமாம். காலம் மாறிதான் விட்டது. நாலணா எட்டணாவுக்கு யோசித்த காலங்கள் இப்போது 500 களில் வந்து நிற்கிறது முதல் நாள் என்ற பெருமையாடு. ஹா ஹா ஹா. அதிசயமாக திரையரங்கிற்கே சென்று பார்த்த படங்கள் என்பதினால் உங்கள் அனைவரோடும் அதை பகிர்ந்து கொண்டேன். தாங்களும் வந்து பதிவை ரசித்து இட்ட கருத்துரைகள் என்னையும் பெருமைப்பட வைக்கிறது. தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
/உங்களை கடசிக் கட்டத்திலாவது கூட்டிப்போய்க் காட்டியிருக்கினமே என நினைச்சுத்தான் பெருமைப்படுங்கோ:)./
அந்த காலம் பெண்களை தனியாகவே, அடிக்கடி படங்கள் பார்க்கவோ கண்டிப்பாக அனுப்ப மாட்டார்கள். இப்போது பெண்கள் உலகம் சுற்றும் வாலிபி ஆகி விட்டார்கள்.
ஆமாம் "கடைசி காலம்" ஆகா முடிவே பண்ணி விட்டீர்களா? ஹா ஹா ஹா. நான்தான் அப்படி அடிக்கடி சொல்வேன். :))) பதிவை ரசித்து தாங்கள் தந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படம் நன்றாகத்தான் இருக்குதாம். நான் இன்னும் பார்க்கவில்லை, எனக்கு படம், நாடகங்களில் பெரிய ஆர்வமில்லை, அதிலும் தியேட்டர் என்றாலே நித்திரையாகிவிடுவேன் ஹா ஹா ஹா.... தொடர்ந்து ஒரேயடியாகப் பார்ப்பது கஸ்டம், வீட்டில் எனில் ஆடிப்பாடி நிதானமாகப் பார்க்கலாம்.
ReplyDeleteமெய்யழகன் பார்த்திட்டீங்களோ? அதுவும் நல்ல படம், நெட்பிளிக்ஸ் ல வந்திட்டுது இப்போ.
மெய்யழகன் படம் இரண்டு முறை பார்த்துவிட்டேன். ஆனால் பாருங்க... ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினியைவிட வயது அதிகமாயிட்டாங்களே... அதைத்தான் தாங்க முடியலை. ஹா ஹா ஹா
Deleteஆஆஆஆஆஆ ஹா ஹா ஹா உண்மை நெல்லைத்தமிழன், எனக்கு தேவதர்சினியின் நடிப்பு பிடிக்கும், இப்படத்தில் இதே யோசனை எனக்கும் வந்தது, வயதானவர்போலாகி இருக்கிறார் இதில்:))
Deleteவணக்கம் அதிரா சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இரு படங்களும் நன்றாகவே இருந்தது. நீங்கள் என்ன எங்கள் அம்மா மாதிரி திரையரங்கிற்கு சென்றால் படம் பார்க்காமல் நித்திரையாகி போவீர்களா? கொடுத்த காசுக்கு படத்தை எப்படியாவது பார்க்க வேண்டாமா?
மெய்யழகன் இங்கு வீட்டில் குடும்பமாக அமர்ந்து பார்த்தார்கள். நான்தான் உங்களைப் போல நடுவில் நித்திரையாகி விட்டேன். ஹா ஹா. பிறகு எழுந்தவுடன் தலையும் புரியாமல், காலும் புரியாமல் அவர்களோடு பார்த்து வைத்தேன். எப்பவாவது நேரம் கிடைக்கும் போது முழுதாக பார்க்க வேண்டும். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் நெல்லை சகோதரரே & அதிரா சகோதரி. உங்கள் இருவரின் மீள் வருகை களுக்கு மிக்க நன்றி.
Deleteயாருக்கு யாரை விட அப்படத்தில் வயதாகி விட்டது போல் தோன்றுகிறது...! அவர் ஸ்ரீ திவ்யா என்கிறார். நீங்கள் தேவதர்ஷினி என்கிறீர்கள். அவர் ஒன்று சொன்னால், நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். ஆக மொத்தத்தில் நம் அனைவருக்குமே வயதாகி விட்டது என நினைக்கிறேன். ஹா ஹா
அதிரா இந்த பதில் கண்டு கோபமாகி வருவதற்குள் நான் உறங்கச் செல்கிறேன். பை. பை... 🥱🥱. நன்றி இருவருக்கும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஹா ஹா ஹா அவரவரும் மனதில நினைச்சதை எழுதிட்டோம்... :) ஸ்ரீ திவ்யாவை நான் அவசரப்பட்டு, இது பாவனா.. இவ்ளோ குண்டாகிட்டா என்றெல்லாம் கற்பனை பண்ணிப் பின்பு பார்த்தால் அது ஸ்ரீ திவ்யா:)).. சரி விடுங்கோ நமக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:)
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி
ஹா ஹா ஹா மறுபடியும் தவறு. அது பாவனா இல்லை. தேவதர்ஷினி.
"நம் விருப்பத்திற்கு இப்படி பெயர் வைப்பவர்கள் எல்லாம் இன்றுதான் பிறந்துள்ளார்கள். இனி சுமார் இருபது வருடங்களில், அவர்கள் வானில் சினிமா தாரகைகளாக பிரகாசிப்பார்கள்" என எ. பி ஆசிரியர் சகோதரர் கௌதமன் அவர்கள் இன்றைய கேள்வி பதில்களில் குறிப்பிட்டுள்ளார். அது நினைவுக்கு வருகிறது. ஹா ஹா ஹா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.