Thursday, July 26, 2018

இயல்பு...

பிறப்பு என்பது சகஜமெனில் இறப்பும் இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டுமே இறைவனால் நிர்ணயக்கபட்டவை.  என்றுமே அவனுடைய ஆளுமைக்கு உட்பட்டவை. எத்தனையோ விஞ்ஞான மாற்றங்கள் வந்திருப்பினும் , இவைகளில் எந்த வித மாற்றமுமில்லை. அந்தந்த நொடிப் பொழுதில் ஜனன மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

 "மரணத்தின் சோகம் தாக்கிய ஒரு வீட்டில் உறவுகள் அழுது கொண்டிருப்பதை கண்ட பட்டினத்தார் "எதற்காக இவர்கள் அழுகிறார்கள்? இறந்த ஒரு பிணத்தைச் சுற்றி , நாளை இறக்கப் போகிற பிணங்கள் இப்படி அழலாமா?  என்று கேட்டாராம்." அவரின் ஞானம் தீடீரென முற்பிறவியின் கர்ம வினையால் உதித்தது.  அந்த ஞானம் நம்முள் தோன்ற  எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? அப்படியே எடுத்தாலும், அதற்கென ஒரு வேளையும், பொழுதும் ஆண்டவன் நமக்கு அமைத்து தர,  நாம் எத்தனை பிறவிகளில் எவ்வளவு புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ?

திருக்குறளில் நிலையாமை அதிகாரத்தில் அழிந்து போகும், செல்வம், பொருள் போன்றவற்றுடன் இறப்பையும் குறித்து திருவள்ளுவனார் கூறியுள்ளனவைகளில் சில...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

விளக்கம்......   உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

ஆனால்,  எத்தனையோ விதங்களில் சான்றோர்கள் இறப்பை பற்றி கூறினும் நம்மனம் பக்குவமடைய இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும். அது ஒன்றை உலகில் நமக்கு சாசுவதம். . 

இன்னமும் எத்தனையோ மகான்கள் இறப்பை மனதாற ஏற்றுக்கொள்ளச் சொல்லி அவர்களுடைய செய்கைகளி னாலும், உபதேசத்தினாலும், ஞான மார்க்கத்தில்  நம்மை வழி நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள். மனது பக்குமடையுமாறு நிறைய புராண கதைகள் கேட்டும், படித்தும் வளர்ந்துள்ளோம்.. ஆனாலும், இறப்பினால் ஏற்படும் பிரிவை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. .

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும், அடுத்த நொடிப் பொழுதை பற்றி கவலையுறாது, சந்தோஷத்தை தரும் பிறப்புகளும், வருத்தத்தை தரும் இறப்புகளும் உலகில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் வீட்டின் மகிழ்வுகளும், இழப்புகளும், என்றுமே முறையே சிறந்தது, கொடுமையானது  என்ற மனோபாவம் நிறைந்த சுயநல, பச்சாதாபத்தில் ஒவ்வொரு மனித மனங்களும் சுழன்று, முடிவில் அவற்றின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை சந்திக்கின்றன.

நம் விருப்பங்களும், அதன் விளைவாய் "அவனி" டத்தில் வைக்கும் விண்ணப்பங்களும் மட்டுமே நம்முடையதன்றி, நடப்பதனைத்தும் "அவன்" செயல்....

சென்ற சனியன்று காலை என் பெரிய நாத்தனார், எங்கள் குடும்பத்தில் மூத்தவர், (ஒரு வருடமாகவே உடல்நிலை முடியாமல் இருந்தார்.) இவ்வுலகை துறந்து விட்டதாக செய்தி வர, ஏற்பட்ட மன வருத்தத்துடன் என் வலையுலக உலா பயணம் தடைபட்டது.  அவரின் நினைவுகளில், என் பதிவில் வந்த கருத்துக்களுக்கும் உடனே  பதிலளிக்க இயலவில்லை என்பதையும், (நேற்று, இன்றாகத்தான் பதில் கருத்திட முடிந்தது.) அனைத்து வலைத் தளங்களுக்கும் வந்து பதிவுகளை படித்து கருத்துக்கள் இட முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிக்கவும்....

Saturday, July 21, 2018

புகைப்படங்கள் பகிர்வு.

மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து
வேகமாக மாயமாகி போரிடுவதால்
மேக நாதன் என்னும் பெயர்
சந்தேகமின்றி நிலைத்து போனதோ..
அசுரகுல பிள்ளை எனினும்.
அவனின் நல்லமனம் உன்னிடமும்
அதிகமாக அருகி தங்கிப் போனதை
அவனி உள்ளளோர் நன்குணர்வர்.
சித்து பல கற்று தேர்ந்து நீ
இந்திரஜித்து  எனும் புகழ் பரப்பியும்
இங்கேயுன்  மேகம் கண்ட ஆசையினால்,
மாயவித்தையை மறுபடி காட்டிட
மாறி மாறி வந்தனையோ...

மெளனமாய் இருந்த மேக நண்பனை
மெளனம் கலைத்து பேசி பார்த்து
தோற்றுப்போனதில், அழகான
ஊஞ்சலில் அமர வைத்து 
ஆசையாய் ஆட்டியபடியே 
அழகு பார்த்து கோபம் தீர்த்த 
காற்றுத் தோழனின் அதீத கவனிப்பில் 
சற்று மனமுருகி கரைந்தே 
போனான் மேக நண்பன்  வெளிச்சம் காட்டும் கண்ணாடியாம்
சூரியனை பாதரசம் துடைத்து நிமிடத்தில் 
மங்கிப் போகச் செய்தது மழை மேகம்
மேகக் குழந்தைகளைஅன்புடன்
தாலாட்டி சீராட்டியதால் வானம்
அன்னை என்ற அந்தஸ்தை 
அதிசுலபமாய்  பெற்றுக் கொண்டது

எங்களின் ஒவ்வொரு நிலையிலும்
எழிலான ஒவ்வொரு ண்ணங்ள்.
இவை இயற்கை எமக்களித்த  பரிசுகள்.
இப் பரிசினை, உங்கள் முன்னே 
பார்வையாக்கினோம்... உங்கள் 
படமெடுக்கும் அவாவை எங்கள் 
உள்ளம் உணர்த்தி போனதினால்..... 
தன்னிடம் இருப்பதை பகிரவும் ஒரு 
தயாள குணமும் வேண்டுமென்றோ... 
விரிந்து பரந்த இவ்வுள்ளம் எங்கள் 
வானத்தாயிடம் நிதமும் பெற்ற சீதனமாம்.இது வான வீதியின் அழகில் மயங்கி நான் எடுத்தப் புகைப்படங்கள். சுமாராகத்தான் வந்திருக்கிறது... அதற்கேற்றவாறு ஜோடியாக கை கோர்த்து கொண்டு  வர்ணனைகள், இலக்கணக் கவிதை, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என்ற எதிலும் சேராத ஒரு தத்து பித்து கவிதையாக உருவெடுத்து உங்கள் முன், (அதற்கு முன், என் முன்)  உருவெடுத்து நிற்கிறது. பொறுமையோடு சகித்து கொள்வோர்க்கு 
🙏

நன்றி.
=====*=====

Monday, July 16, 2018

உடைத்த அரிசி கொழுக்கட்டைகள்.

தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ,  ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு  கட்டளை இடுகிறது. என் மனசு மட்டுமில்லை... வீட்டிலுள்ளவர்களின் மனங்களுந்தான். சரி . நமக்கு தெரிந்த சிற்றுண்டி செய்யலாம் என்றால் வீட்டில் அனைவரிடமிருந்தும் ஒவ்வொரு வகை பட்டியல் கிளம்பி விடும்.  பரோட்டாவிலிருந்து, சப்பாத்தி, பூரி, வந்து இட்லி, தோசைக்கு தாவி, உப்புமா "போம்மா ஒரே போர்" என்ற விமர்சனம்  செய்து அப்புறம் உன் விருப்பம் உனக்கு எது சுலபமோஅதைச்செய்.. என பச்சை கொடி காட்டியதும், நாம் எது கொஞ்சம் மெனக்கெடனுமோ, அதை தேர்ந்தெடுப்போம்.  அதுதான் நம் ராசி... அரிசி உடைத்து உப்புமா கொழுக்கட்டை செய்யலாமென்று ஆரம்பித்த போது, ஆளாக்கில் எடுத்த அரிசிகள் பேச ஆரம்பித்தன. (பயம் வேண்டாம்... ஒரு கற்பனைதான். இந்த பதிவுக்காக மட்டும் என்னுள் எழுந்தவை.. )  

ஒரு வித்தியாசத்திற்காக இன்று எங்களை பயன்படுத்தி செய்யப்படும் பதார்த்தத்தை நாங்களே சொல்லுகிறோமே.... என்றன ஒவ்வொரு அரிசியும். 
அவைகளின் வேண்டுகோளுக்கு நான் அரை மனதாக இணங்கினாலும்,  "நானும் நடுநடுவில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கலாம் என்ற முடிவுடன் "சரி" என்றேன். 


நான்கு டம்ளர் பச்சரிசி  எடுத்துக் கொண்டு அலம்பி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் ஒரு பெரிய தட்டில் அரிசியை எடுத்து போட்டு உலர வைக்கவும்.
என் நா வழக்கத்தை மாறாது சொல்ல ஆரம்பித்ததும், 

"அட..சே.." இந்த மனிதர்களே இப்படித்தான் சரி யென ஒரு சொல் கூறி விட்டு உடனே மாறி விடுவார்கள்.. படபடவென அரிசிகள் ஒன்றுக்கொன்று பேசி நொடித்துக்கொண்டன. 

உடனே நான் அவசரமாக "ஸாரி" என்றதும்


இது  ஊறிக்கொண்டிருக்கும் அரிசிகளாகிய நாங்கள்...என்று அரிசிகளும் அவசரமாய் ஆரம்பித்தன. 

நாங்களே எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நாங்கள் உருவாகும் விதத்தை கூறுகிறோம் என்றதற்கு சரியென சொன்னீர்களே.. என ஊறும் அரிசிகள்"உர் "ரென கோபிக்க... 

"சரி, சரி" இனி நீங்களே துவங்கலாம் என சமாதானப்படுத்தி நான் அமைதியானேன். 


இதுவும் நாங்கள்தான் ..ஆனால் எங்களை ஒன்றிரண்டாக உடைத்து "உப்புமா" என்ற பெயர் சூட்டு விழாவுக்கு ஆஜர் ஆகச் சொல்லியதால், அவசரமாக மிக்ஸியில் புகுந்து சுற்றி  வந்ததில் சற்றே துகள்களாக மாறியிருக்கிறோம் .......சற்று களைப்பாக வேறு இருக்கிறோம். கொஞ்சம் நிதானிக்கிறோம்.... என்ற அவகாசத்தில்... 


ஒரு ப்ரெஷர்பேனில் கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் , காய்ந்த  மிளகாய் ஒரு ஆறு கிள்ளி போட்டு  தாளிக்கவும். கடுகு வெடித்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சம் பெருங்காயபொடி   போட்டு நான்கு பச்சைமிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து வதங்கி கொணடிருக்கையில், ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல் சேர்த்து சற்று பிரட்டியதும்  ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று என்ற கணக்கில் 12 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.  தண்ணீர் நன்றாக கொதித்ததும்........ என்று கோர்வையாக நான் மீண்டும் பழக்கதோஷத்தில் சொல்லிக் கொண்டே போகும் போது, 

அரிசிகள் சுயபுராணம் சொல்ல போவதாக சொன்னது நினைவு வந்து நிறுத்தி திரும்பி உடைத்து வைத்ததை பார்க்க, அனைத்து அரிசி குருணைகளும் என் மேலெழுந்த கோபத்தில், மெளன விரதத்தை  தாங்கள் கையாண்டு விட்டதாக அருகில் அஞ்சறைப் பெட்டியில் இருந்த கடுகு உ. ப,  வத்தல் போன்றவற்றிடம் கூறி மெளனமாகி விட்டதாக அவைகளும் ( இதுவும் ஒரு கற்பனையே..) பேச ஆரம்பித்தது... 

சரி.. "நானே கூறி முடித்து விடுகிறேன். "  என்று நான் ஆரம்பிக்க, 

"ஏன் நாங்களும் இதில் உண்டல்லவா? அரிசிகள் மெளன முடிவெடுத்தால், மிச்சத்தை நாங்கள் கூறி முடிக்க கூடாதா என்ன? "என உ. ப, வத்தல் கடுகு போன்றவை கோபத்தில் கடுப்பாக, அதிலும் கடுகு கொஞ்சம் கூட பொறுமையின்றி எண்ணெய்யில் போடாமலே மிகவும் கடுப்பாகி சிடுசிடுத்தது, 

நானும் வேறு வழியின்றி சிறு கடுகுதானே எனஅலட்சியபடுத்தாமல் கடுகுக்கு விட்டுக்கொடுத்து வாய் மூடிய மெளனியானேன். 

(கடுகு சிறுத்தாலும், காரம் குறைவதில்லையில்லையா...) அஞ்சரைப் பெட்டியில் நாங்கள் "வந்த கதை போன கதை" என அளவளாவி கொண்டிருந்த போது  எங்களை தனித்தனியே பிரித்தெடுத்து அழைத்து வந்து நெருப்பின் சூட்டுடன் விளையாடச் சொல்லி, பரிசாக தந்த " தாளிதங்கள்" என்ற மற்றுமொரு பெயரையும், வேறு வழியின்றி நாங்கள் சகித்துக் கொள்ளும் தருணத்தில், தேங்காய் துருவல் வேறு எங்களை எட்டி நோக்கி "நானும்" என்றபடி எங்களுடன் குதித்தது.


நாங்கள் சூட்டில் வறுபடுவது போறாதென்று  எங்களுடன் தேங்காய் பூவும் வறுபட்டு  தன் நிறத்தை "கலரிங்" செய்து பெருமைப்பட்டுக் கொண்டது.அதன் பின் எங்களின் கோபச்சூடு கொஞ்சம்  தணிந்த நேரத்தில், எங்களுக்கு குளிப்பாட்டுவது போல், தண்ணீரை எங்களுடன் கலந்ததும், எளிதில் கோபம் களைந்து குளிர்வானோம். ஆனால்,  பெயர் சூட்டு விழாவுக்கு மணியாகிறதென்றும்,  அனைவரும் ஆசி கூறி பின் சாப்பிட காத்திருக்கிறார்கள் என்பதாலும், மறுபடியும் அவசரபடுத்தி தண்ணீருடன் எங்களை கொதிப்படைய செய்து, எங்களுடன் முதலிலிருந்தே உடைபட்ட மனதுடன் வருத்தத்துடன் வாடிய முகத்துடன், மெளனச் சாமியாராக அமர்ந்திருந்த அரிசி குறுமணிகளையும்  எங்களுடன் சேர்த்து கிளறியதும்  நாங்கள் உப்புமா என்ற நாமகரணம் பெற்று அனைவரின் ஆசி(சை) களுக்காகவும், ஆனந்தமாக ரெடியாகி காத்திருந்தோம்..

ஒன்று சேர்ந்த எங்களை ஒரு தட்டில் ஆற அமர வைத்து அழகு பார்த்ததும் நாங்கள் அகமகிழ்ந்து போனோம். பிறகுதான் தெரிந்தது.... மறுபடியும் எங்களை உருமாற்றி எங்கள் பெயருடன் மற்றுமொரு புனைப்பெயரையும் இணைத்து விடத்தான் இத்தனை பிரயத்தனம் என்று புரிந்து கொண்டோம். எத்தனை பெயர்தான் என அலுத்துக்கொள்ளக்கூட எங்களுக்கு  அவகாசமில்லை. சின்ன சின்ன பந்துகளாக மாறிய பின் மற்றொரு சூட்டில் அமர்ந்து வெளிவந்ததும், "உப்புமா கொழுக்கட்டை" என்ற புதுப் பெயருடன் பளபளவென்றிருந்த எங்களைக் கண்டு எங்களுக்கே பெருமையாக இருந்தது. "நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்"  என்று கூடிப் பேசி மகிழ்ந்து கொண்டேயிருக்கையில்,  மொத்தமாக இருந்த நாங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சட்டென பிரிபவர்களை மாதிரி கொஞ்ச நேரத்தில் காணமல் போய்க் கொண்டேயிருந்தோம். கூட்டமாக குழுமியிருந்த நாங்கள் எங்கே  எப்படி போகிறோம்... என்று ஒன்றும் புரியாத நிலையில், கடைசியில் ஒன்றிரண்டு மீதமானவர்களுடன் அளவளாவி ஐயத்தை போக்கியதில், 

"நாம் பிறந்த பயனை அடைந்து விட்டோம். நமக்கு முன்னால் பிறந்த மனிதர்களின் சித்து வேலைகளில் இதுவும் ஒன்று. கடவுள்களின் துணையுடன், அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் புதிது புதிதாக  பெயர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப வைக்கப்பட்டு, அவர்களின் ஆத்ம பூஜைக்காக, அவர்களின் வாய் எனும் குகைக்குள் பயணித்து புண்ணியம் அடைவதே நமது பணியாக இறைவன் நம்மை  படைத்திருக்கிறார் என்ற தகவல்கள் புரிபட்டன . வேறு வழி... மீதமிருந்த நாங்களும் கடவுளின் கட்டளைப்படி கடைசி யாத்திரைக்கு பயணமாக, பக்குவமான மனதுடன் காத்திருக்க ஆரம்பித்தோம்.

"இதற்குத்தான் உங்களை அழகாக படமெடுத்த நானே சுலபமாகவும் உங்களை ஒரு உருவமாக உருவாக்கிய கதைகளை சொல்லி முடிக்கிறேன் என்றேன். கேட்டீர்களா? பிறந்ததிலிருந்து புரியாததையெல்லாம், புரிந்த மாதிரி நினைத்துக்கொண்டு, ஒன்றும் புரியாமலேயே நடித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு துணையாகத்தான் உங்களையும் ஆண்டவன் படைத்துள்ளான் என்பதை  உணர்ந்தும், உணராத மாதிரி வந்து சொல்லி உணர்ந்ததும் வீணில் மன வருத்தமடைய வேண்டுமா?" என நான் மெளனம் கலைந்து உபதேசம் செய்து கொண்டிருக்கையில், 

அங்கு மீதமிருந்த பல கொழுக்கட்டைகளும் ஆத்ம பூஜைக்காக குகை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தன.