Sunday, April 30, 2023

மரங்களின் ஆற்றாமை.

ஒத்தையடிப் பாதை மாறி 

ஓரங்கட்டும்  வாகனங்களை சாடி. 

ஊர்ந்து செல்லும் வழிகளை தவிர்த்து

ஊரெங்கும் சடுதியில் கடக்க

நாலு வழிச் சாலை போட்டாச்சு


மனம் போல் மரணித்தவரை

மனம் இல்லையெனினும்

சாலை வழி நடந்து சென்று

நாலு பேர் சுமக்கும் 

ஒரு நியதியும்

நாளடைவில் நின்று போயாச்சு. .


காத வழி பாதைதானே என்ற

கால் நடையான பயணத்தில்

காத தூரமும் கடக்க சோம்பலானதால்

கால்நடைகள் ஊறுதல் பெற்றதோடு, 

கார்களோடு உறவு கொள்வது   

கண்டபடிக்கு அமோகமுமாயாச்சு


மகிழ்வூந்து என்ற பெயரோடு,

மனம் நிறைவுறாது தவிக்கும்

அதன் மகிழ்வுக்கென அதற்கேற்ற 

அனேக பெயர்களையும் சூட்டியாச்சு


எங்களால் இயலாதது இவ்வுலகில் 

எதுவுமே இல்லையென 

மார்தட்டி மமதை கொள்ளும்

மனித வர்க்கமாக மாறியாச்சு.


இவர்களின் இறுமாப்புக்கு

இன்னல்கள் பலதையும்

இவர்கள் வாழ்வினது 

வசதிகளின் பெருக்கத்திற்கு  நாம்

வாழும் வாழ்வையும்  இழந்தாச்சு


அலட்சியமாய் வெட்டப்படும் நம்

அங்கஹீன வலிகளின்,

அவஸ்தையை உணராத

அன்பில்லா மாந்தர் என்றாயாச்சு


எம்மோடு ஒப்பிட்டு பேசவும் இனி, 

எந்தவொரு ஈரமில்லை எம் நெஞ்சில் 

எனினும் உங்களுடன் எம் வாழ்வு

என்று சபித்து விட்ட இறைவனுக்காக 

எந்த ஒரு மனகிலேசமுமின்றி

வாழும் முறையையும் கற்றாச்சு. 


எங்களின் நல்மனம் மனிதருக்கு

எந்நாளும் இனி வரவும் 

எள்ளளவும் வாய்ப்பில்லை என்ற

மரங்களின் முணுமுணுத்தலுக்கு

மறு பேச்சில்லை  என ஆகியாச்சு

.

சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சாலை வசதிகளுக்காக இயற்கையை அழிப்பது குறித்து  அருமையாய் எழுதி இன்று அவர் பதிவில் பகிர்ந்ததை படித்துப் போது, மனம் நொந்த மரமொன்று கூறுவதாக சொல்லப்படும்  இக்கவி என் மனத்துள் உருவாகியது. எழுத வேண்டாமென மனது எவ்வளவோ தடுத்தும் எழுதிதான் பார்க்கலாமே என என் கவிதை படைக்கும் ஆசை ஆற்றாமையுடன்  கூறியது. அதனால் மரங்களின் ஆற்றாமை என்ற தலைப்பையே வைத்தேன். இது எப்படி உள்ளதென கூறுங்கள். கருத்துரைக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏. 

Friday, April 28, 2023

பகல் கனவு.
ரவாரமிட்டபடி 

அங்குமிங்கும் 

ஆடி ஓடிய, அணில்கள் 

காணாமல் போயின!

காகங்களின் கரையல் சப்தம்,

கார் முகிலின் இடியோசையில், 

கரைந்தே போயின! 


 மற்ற பறவைகளின் 

பலவிதமான ஒலிகளும், 

பறந்தே போயின! 

பிறநில வாழ்

விலங்கினங்களும் 

விரக்தியுடன் இந்த

வில்லங்கத்தில் மாட்டாமல் 

ஒதுங்கி போயின!

காரணம் என்ன வெனில், இது,

கார்காலத்தின் ஆர்பாட்டந்தான்.


மழை! மழை! மழை!

எங்கும் மழை!

எத்திக்கும் மழை!

மழையரசி 

மகிழ்ச்சிப்பெருக்கில் தன்

மனந்துள்ள கொட்டித் தீர்த்தாள்.

மேள தாளத்துடன் 

ஆனந்தம் பொங்க

மேக வீதியில் வலம் 

வந்தபடியிருந்தாள்.


இதுகாறும் 

இவ்வுலக மாந்தர்க்கு

கடமையின் கருத்தை 

செவ்வனே விளக்கி வந்த

கதிரவனும் அரசியின் 

கட்டளைக்கு பணிந்து

மூன்று நாட்களாய் தன்,

முகம் காட்டாது

முடங்கிச் சென்ற வண்ணம் 

இருந்தான்.


மழை வேண்டி. 

இந்த மண்ணில்

பல வேள்விகளும்,

வேண்டுதல்களும் செய்த

மண்ணில் வாழ்

மக்களுக்கும், 

மழையரசியின்  

மட்டற்ற  சீற்றம் கண்டு,

மனதில் பக்தியோடு 

பயமும் உதித்தது.


பூமித் தாய்க்கு 

வேதனையையும்,

புவிவாழ் உயிர்களுக்கு 

சோதனையையும்,

மேலும் தரவிரும்பாத 

அன்னை தன்,

மேக குழந்தைகளை 

அதட்டி, அடக்கி,

துள்ளித் திரிந்த

மழை கற்றைகளை

தூறலாக போகும்படிச் செய்தாள்.


துளிகள் விழுந்த வேகத்தில்,

துள்ளி கண் திறந்தான் 

அந்த விவசாயி,


சுற்றிலும் பார்வையை 

சுழற்றி ஓட விட்டான்,

சுடும் நெருப்பாய்

சுட்டெரித்து கொண்டிருந்தான் 

சூரியன்.

மழைக்கு மாறாக

மாதவம் செய்தபடி

மனங்களித்து

மகிழ்ந்திருந்தான்


அக்குடிலின் வாயிலில்

குத்துகாலிட்டபடி

அமர்ந்தந்த 

நிலையிலும்,

இத்தனை உறக்கமா?

நீட்டி படுத்து நிம்மதியாக உறங்கி

நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது, 


இது

பகல் பட்டினியால்,

பரிதவித்து வந்த உறக்கம்,

பஞ்சடைந்த கண்கள்

பாவப்பட்டு மூடிக் கொண்டதால் 

வந்த மயக்கம்.

அந்த நித்திரையிலும் ஒரு

அற்புத கனவு!!! ஆனந்த கனவு.!!

இந்த மழை கனவு!!! 


இந்த பகல் கனவை

பார்த்த மனக்கண்களின்

மகிழ்ச்சியில் வந்தது இந்த

நீர்த் துளிகள் ! ஆனந்த 

கண்ணீர் துளிகள் !


பார்வை பட்ட இடமெல்லாம், .

பழுதடைந்த வயல் நிலங்களும், 

பயனற்ற கலப்பைகளும், 

பரந்த அப்பகுதியையே

பாழடைந்த சோலையாக்கின

எட்டாத கனவுடன், 

ஒட்டிய வயிறுடன், 

கண்களில் பசி சுமந்த

மக்களையும், கண்ட போது

கலக்கமடைந்தது 

அவன் மனது. 


இனி, இந்நிலை தொடர்ந்தால், 

பசியினால், பரிதவிக்கும்

மாந்தர் மட்டுமில்லாது,

அணில்களும் ஆடி ஓடாது!

காகங்களும் கரையாது!

பறவைகளும் பாடாது ! ஏனைய

ஜீவராசிகளும் தன் 

ஜீவனை இழந்து விடும் !


இறைவா! 

இவைகளுக்காகவாவது இந்த

பகல் கனவை

லிக்க வைத்து விடு... 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இது எப்போதோ பதிவுலகம் வந்த துவக்கததில் எழுதி அவ்வளவாக பார்வையை பெறாதது. சிறந்த பதிவர் சகோதரர் திரு. வை. கோபலகிருஷ்ணன் அவர்கள் மட்டுமே வந்து நன்றாக உள்ளதாக நவின்று விட்டுச் சென்றார். அவருக்கு இன்றும் என் மனமார்ந்த நன்றி. 

பொதுவாக கவிதைகள் நீளமானல் யார் கருத்திலும் நிலைபெறாது எனத் தெரியும். இங்கு கவியரசர்கள் (சகோதரர், துரைசெல்வராஜ் அவர்கள், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள்) இயற்றும் அற்புதமான கவிதைகளுக்கு முன் இதை கவிதை  எனச் சொல்லவும் நாணுகிறேன்.  இருப்பினும் எனக்குத் தெரிந்த வரிகளை மடக்கிப் போட்டு எப்போதோ ஈந்த இந்தக் ...... யை இப்போது ஒரளவிற்காகவாவது ரசிப்பீர்கள் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் பதிவாக்கி  காத்திருக்கிறேன்.  பார்வையிடும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

Saturday, April 22, 2023

கடலைக்காய் திருவிழா. .

ஓம் கணபதியே நமஃ. 

ஓம் நமசிவாய நம ஓம். 

வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே 

இது பசவன்குடி புல்டெம்பிள் நந்திகேஸ்வரர், தொட்ட கணபதி ஆலயம் குறித்த பகிர்வு. இந்த வருடம் பிறந்தது முதல் என்னால் வலையுலகிற்கு இயல்பாக வர முடியாத நிலைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடத்திலும் எப்போதும் போல் ஏதாவது பதிவுகள் கொஞ்சமாகவேனும் எழுத வேண்டுமென  எண்ணியிருந்தேன். அது கைகூடவில்லை. ஏனெனில் இறைவனின் விருப்பந்தானே எப்போதும் நம்மை அசைக்கும் கருவி. இருப்பினும்  இன்று என்னை எழுத வைத்த அந்த இறைவனுக்கு என் மனம் நிறைந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். 

என் நட்புகளாகிய நீங்களும்  வலையுலகில் பதிவெனும் எழுத்துகளோடு என் வரவை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

சகோதரி கோமதி அரசு அவர்கள் என்னை ஏதாவது பதிவு எழுதச் சொல்லி இரண்டு மூன்று முறை வலியுறுத்தி கூறி விட்டார்கள். அவர்களின் அன்புக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன்.(நன்றி சகோதரி. உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள்தான் மீண்டும் என் கைகளில் பதிவெனும் ஓலையில் எழுத  எழுத்தாணியை கொண்டு தந்துள்ளது.) 

எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். 

இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும். பயணம் முடிந்து விடும். 

மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும். 

இந்த திரைப்பட பாடல் வரிகள் எனக்கு மிக, மிக பிடிததமானவை. ஏனோ இதையும் இங்கு குறிப்பிடவும் விருப்பம் கொண்டு பதிந்து விட்டேன். 

நல்லதாக இனி எழுதும் பதிவுகளின் மூலமாக இப்போதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் வந்துள்ளேன். ஆனாலும் என்னை தினமும் மறவாத உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு. 🙏. 

இந்த பசவன்குடி கோவிலுக்கு முன்பு இங்கு வந்த புதிதில் அடிக்கடி சென்றுள்ளோம். (அந்த இடத்திற்கு இரண்டு கி. மீ தொலைவிலேயே அப்போது நாங்கள் இருந்ததினால், அடிக்கடி கால் நடையாகவே நடந்து சென்று விட்டு வந்து விடுவோம்.) இப்போது இன்னமும் தொலைவில் எங்கள் ஜாகை அமைந்து விட்டபடியால், ஓலாவில் எப்போதாவது பயணித்து தொட்ட கணபதியையும், நந்திகேஸ்வரையும் தரிசித்து விட்டு வருகிறோம். நடுவில் தொற்று காரணமாக இரண்டு மூன்று வருடம் எங்குமே செல்லவில்லை. அருகிலேயே ஒரு பெரிய பூங்கா இருப்பதால், மகன், மகளின் குழந்தைகளுக்கு ஓடி விளையாட ஒரு இடமும் கிடைத்த மாதிரி இருக்குமென்பதால் இந்த மாதிரி அந்த இடத்திற்கு அன்று விஜயம். இது தொட்ட கணபதி ஆலயம். அருள் தரும் பெரிய பிள்ளையார். ஒரே பாறையில் உருவாகி பெரிதான உருவத்துடன் அருள் புரியும் இவரை கோவில் வாசலிலிருந்தே அழகாய் சேவிக்கலாம். விநாயகரே எளிமையானவர். அதிலும் இவரை சந்திப்பதும் மிக எளிது. அடிக்கடி வெண்ணெய் காப்புடன் இவரது பிரதியோக தரிசனம் அனைவரும் கிடைக்கும். இதுதான் அழகிய பெரிய உயரமான நந்திகேஸ்வரர். பெங்களூரை நிர்மானித்த  நிறுவனர் கெம்பே கவுடாவால் 1537 ம் ஆண்டில், 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமுமாக ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட கம்பீரமான  சிலை. 

விநாயகரை வழிபட்டு விட்டு சற்றே உயரமான பாறை மேல் படிகளின்
மூலமாக ஏறினால் இவரை தரிசிக்கலாம். எல்லா சிவன் கோவிலிலும் நந்தி தேவர் சிவனை வணங்கியபடி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.இங்கு எம்பெருமானையும், தன்னையும் வணங்கப்போகும் மக்களை வரவேற்றபடி அவர் திருக்கோலம் கொண்டுள்ளார். கோவிலுக்குள் நுழைந்ததும் கம்பீரமாக காட்சி தரும் நந்திதேவரை வணங்கிய பின் அவரை சுற்றி வலம் வரும் போது, சர்வேஷ்வரன் லிங்க வடிவில் சிறியதாக அருள் காட்சி தருகிறார். நந்தியின் பின்பக்கமாக அமர்ந்திருந்து தன் வாகனமான நந்தி தேவருக்கு முதலில் தனிச்சிறப்பை தந்து, அவரை மக்கள் முதலில் ஆராதிப்பதைக் கண்டு, அதில் ஆனந்தம் அடைந்து அருள் பாலிக்கிறார்

இங்கு நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடர்ந்து மூன்று, நான்கு நாட்களாக நடக்கும். அப்போது மக்கள் கூட்டம் எப்போதும் சாலைகளில் நடக்கக் கூட இயலாமல் இருக்கும். போக்குவரத்து பேருந்துகளும் இடம் மாற்றி சுற்றிச் செல்லுமென கேள்வி. 

முன்பு, (கிட்டத்தட்ட 300,400 வருடங்களுக்கு முன்பு) பெங்களூரின் அக்கம்பக்கம் உள்ள கிராம விவசாயிகளின் ஆதாரமான கடலைத்தோட்டத்தின்  விளைச்சல்களை தொடர்ந்து ஒரு காளை மாடு சேதமாக்கியதில், விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்ததினால், இந்த நந்தி தேவருக்கு ஒவ்வொரு  வருடமும் நிலக்கடலை அறுவடையானதும், தங்கள் வண்டிகளில் கொண்டு வநது படைத்து விட்டு, மக்களுக்கும் குறைந்த விலைகளில் போணி செய்து வியாபாரம் செய்வதாய் வேண்டிய பின், அந்தக் காளையினால் பயிர்கள் சேதமின்றி வளர்ந்து விவசாயிகள் தங்கள்  கவலைகளிலிருந்து மீண்டு நல்ல நிலையை அடைந்தார்களாம். அதிலிருந்து இந்த முறை பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறதாம்.  இதை இங்கு வந்த பின் கேள்விபட்டுள்ளேன். ஆனால், அந்த சமயத்தில் அங்கு சென்றதில்லை. 

இது இப்போது நந்திகேஷ்வரரை தரிசிக்க பெரிய விநாயகரை வணங்கி விட்டு மேலே ஏறும் போது பக்கவாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தத்ரூபமாக கடலைக்காய் திருவிழாவை காட்டும் அழகிய சிலைகள். முன்பெல்லாம் நாங்கள் சென்றபோது  இல்லை. இப்போது புதிதாக அமைத்திருக்கிறார்கள் போலும். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்த வண்ணம் சென்றோம் . இதைக்குறித்து எனக்கு தெரிந்த தகவல்களோடு, இதையும்  இங்கு பகிர்ந்துள்ளேன். 

என்ன.. சகோதர, சகோதரிகளே, படங்களை ரசித்தீர்களா? அப்படியே அங்குள்ள பிரபலமான உணவகத்திற்கு  சென்று மசால் தோசைகள்  உண்பதற்காக வழக்கப்படி பெயர் கொடுத்து, உணவகத்திற்கு  வெளியே நிறைய நேரம் காத்திருந்த பின் எங்கள் இருக்கை கிடைத்ததும் உள்ளே சென்று தோசையை சாப்பிட்டு வீடு  வந்தோம். ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் இங்கு வந்ததும் சென்று சாப்பிட்ட அந்த ருசி நிறையவே மிஸ்ஸிங். தினசரி எல்லாம் மாறும் போது இது மட்டும் மாறாதிருக்க இயலுமா?ஆனால் விலை மட்டும் ஏற்றம். பதிவை ரசித்து கருத்திடப் போகும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏.