Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts
Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts

Friday, August 28, 2020

காக்கும் கடவுள்..

 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா.

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்  வசிக்கும் அனைவரிடமும்  பணம் வசூலித்து  சென்ற வருடம் கொண்டாடிய பிள்ளையார் சதுர்த்திவிழா.  பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு வாரத்தில்,  ஒரு ஞாயறன்று, (அன்றுதான் அனைவரது வீட்டிலும் எல்லோரும் அலுவலகம், பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருப்பார்கள்.) காலை பூஜையுடன் ஆரம்பித்து, அன்று மாலை நடைபெற்ற சிலை கரைப்பு வரை அனைவருக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடுநடுவில் நடத்தி, (பெரியவர்களுக்கு என்று  சில நிகழ்ச்சிகள். . சின்னவர்களுக்கு என்று தனியாக ) மிக  சின்ன குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ்  ஸ்லோகம் சொல்வது, என பங்கேற்க வைத்து  இறுதியில் ஓவியம், கலர் வரைபவர்களுக்கென்று ஊக்கமளித்து, இறுதியில்  அனைவருக்கும் பரிசு தந்து ஒரே உற்சாகமாக அன்றைய நாளை கொண்டாடினோம்.  


இதில் எங்கள் வீட்டு சின்னக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் தங்கள் ஓவிய திறமையை காட்டிய  சில படங்கள்.. உங்கள் பார்வைக்காக..! 








இத்தனையிருந்தும் அன்று மதிய உணவு இல்லாமலா?  மதிய உணவாக இதெல்லாம்.. . இன்னும் சில அயிட்டங்கள் தட்டில் இடமில்லாததால்,( வயிற்றிலும்)  வாங்கிக் கொள்ளவில்லை. . 



அனைவரும்  சாப்பிட்டான பின்  இந்த ஓவிய போட்டிகள்.. . பெரிய குழந்தைகள் பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்து பிள்ளையாரை  அழகாக வரைந்தனர்


இது சென்ற தடவையே பகிர வேண்டுமென படங்கள் எடுத்து வைத்திருந்தேன். வழக்கப்படி எழுத இயலாமல், இந்த வருடம் ஸ்ரீ விநாயகர் ஆக்ஞையால், எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.. அவனன்றி ஒர் அணுவும் அசையாது அல்லவா. ..!

இந்த தடவை இந்த மாதிரி கொண்டாட்டம் இந்த தொற்றினால் இல்லாமல் போய் விட்டது.  அவரவர்கள் வீட்டில் சத்தமின்றி பிள்ளையார் போய் அமர்ந்து தனக்கு தேவையான பூஜைகளைப் பெற்றுக் கொண்டு  அமைதியாக சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

எங்கள் வீட்டிலும் தனியாக பிள்ளையார் சிலை வாங்கவில்லை. வீட்டில், பூஜையறையில், என் மாமியார் காலத்திலிருந்து இருந்து வரும் கற்சிலை விநாயகர்தான்  இந்த தடவை நாங்கள் செய்த பூஜைகளை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 

இவர்தான் அது... 


இந்த தடவை இவரை சிறப்பான பூஜைக்காக வரவேற்க காலை வாசலில் போட்ட இளசும்  பழசுமான கோலம். 


நாங்கள் செய்த பூஜைகளை ஏற்றபடி இன்முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர். 


அவருக்காக தயாராகி கொண்டிருந்த  அவருக்கு மிகவும் பிடித்தமான, நமக்கும் மிகவும் பிடித்தமான பிரசாதம். 

 
பஞ்ச பூதங்களும் இணைந்து பூரணத்துவம் பெற்று அழகான அகிலமாய்  உருவானதைப்போல வெல்லம், தேங்காய், இருவகை பருப்புகள். ஏலக்காய் ஆகிய ஐந்தினால் இணைந்து திரண்ட வெல்லப்பூரணம்... .  


அண்டமெல்லாவற்றையும் தன் வயிறேனும் பேழைக்குள் அடக்கியபடி, அவைகளுக்கு தீங்கெதுவும்  வராமல் காத்து ரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகத்துடன், விநாயகரின் அரும்பெரும் கருணையை காட்டும் விதமாய் பூரணத்தை தன்னுள்ளே அடக்கியபடி காட்சியளிக்கும் கொழுக்கட்டைகள். 


வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் அவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் என்பதால், என்னால் இயன்ற வரை கூடவே கொஞ்சம் நைவேத்தியமாக, புளியிட்ட அவல். உளுந்து வடை, கொண்டைக்கடலை சுண்டல், மகாநேவேத்தியம், பருப்பு என செய்தேன். கூடவே சாம்பார் வைக்க நினைத்து, மணியாகி விடவே, அதை மதியத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அவசரத்திற்கு குலதெய்வ சிற்றுண்டியும் நைவேத்தியத்தில் அன்று இடம் பிடித்தது. பிள்ளையார். "இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல்  ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 


ன்னும் அவருக்கு புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எள்ளோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், ஆமைவடை என்னும் பருப்பு வடை, நான் செய்துள்ள தேங்காய் பூரண கொழுக்கட்டையுடன், காரக் கொழுக்கட்டை எள்ளு இனிப்பு கொழுக்கட்டை, லட்டு. பாயாசம், போன்ற இனிப்புகள் எல்லாம் செய்து அவரை உண்ண வைக்க எனக்கு ஆசைதான். "முன்பு இந்த மாதிரி நிறைய வகைகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது இயலவில்லை.... எனவே இதையெல்லாம் மானசீகமாக உனக்கு நைவேத்தியத்தில் இணைத்து அர்ப்பணிக்கிறேன்." என நான் மானசீகமாக அவரிடம் பேசியதை அவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டி நான் செய்து வைத்த சிற்றுண்டிகளை சுவைக்க ஆரம்பித்தார். 

இவ்விதமாக இந்த தடவை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளினால் விநாயக சதுர்த்தி வைபவம் நல்லபடியாக நடைப்பெற்றது. ஒவ்வொன்றிக்கும் ஒரு தூண்டுகோலை தந்து நம்மை ஊக்குவிப்பவன் இறைவன். விநாயக சதுர்த்திக்கு முன்பே சென்ற வருட பழையதை எழுதி பின் இந்த வருடம் வீட்டில் கொண்டாடிய  விநாயக சதுர்த்தி பதிவையும் இணைக்க வேண்டுமென ஆரம்பித்து எழுத நேரமில்லாமல் பாதியில் எழுதி  வைத்திருந்த என்னை சகோதரர் நெல்லைத் தமிழன் வடிவில் விநாயகர் வந்து இன்று என்னை முழுவதுமாக  எழுத வைத்தார். "பிள்ளையார் பதிவை எழுதவில்லையா?" என்று கேட்டு நான்  எழுதி முடிக்க ஊக்கப்படுத்திய  விநாயகருக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனம் நிறைந்த  நன்றிகள்.🙏 . 🙏. 

சற்றே பெரிய பதிவாகி போன இதைப்படித்து கருத்திடும் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், என் பணிவான நன்றிகள். 🙏. 🙏. 

ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும். 

Thursday, September 17, 2015

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.



 

அண்டங்களை ஆட்சி செய்பவன்
ஆறுமுகத்தவனின் அண்ணனவன்
அகிலத்தை காத்து ரட்சிப்பவன்
அன்பிற்கு மட்டுமே அடங்குபவன்
ஐய்யனாம் முழுமுதற் கடவுளை
ஐயமின்றி மனதாற தொழுவோமாக..! 


வலையுலக சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


சில காரணங்களால் உங்களையெல்லாம்  வலையுலகத்தில் தொடர்ந்து இனிதாக உரையாட இயலாமல் போய் விட்டமைக்கு மன்னிக்கவும். இனியேனும் தொடர்ந்து எழுதி வலையில் பயணிக்கவும், எழுத்தெனும் சுவாசத்தை இடையறாது சுவாசிக்கவும் அவனருளையே எப்போதும் பணிவுடன் வேண்டுகிறேன். 
 

இவ்வினிய விநாயக சதுர்த்தியில் விநாயகர் அகவல் பாடி அவனருளை நாமனைவரும் பெறுவோமாக.!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.!

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

    அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

 
நன்றி... படங்கள்... ௬குள்.

Friday, August 29, 2014

விநாயகர் வழிபாடு...





வலைத்தள உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


நன்றி ஓம் சக்தி விநாயகர் மந்திர்
முழுமுதற்க் கடவுளே…!
மூஷிக வாகனனே…!
முருகனுக்கு, மூத்தோனே…!
முக்கண்ணனுக்கு, புதல்வனே…!
மூவுலகிற்கும், வித்தகனே…!
உமையவளின், துணைவேண்டி
உருவான அரும்பாலகனே….!
அண்ட சராசரங்களையும்,
அகிலங்கள், அனைத்தையும்,
அடக்கமாய்  தனக்குள்,
அடக்கி வைத்திருப்பவனே….!
எளிமையின், சிகரமாய்,
எத்திக்கும் நிற்பவனே…!
எங்கேயும், எதிலுமாய்,
முண்ணிலையில், இருப்பவனே…!
பிடித்து வைத்தவிடத்திலெல்லாம்,
பிரியமாய் அமர்ந்திருப்பவனே….!
முடிந்ததை, பிரசாதமாக்கினாலும்
முகஞ்சுழிக்காமல், ஏற்றுக்கொள்பவனே…!
எண்ணிய செயல்களில்,
இடர்தனை களைபவனே….!
பண்ணிய பாவங்களின்,
பலன்களை அறிந்தவனே...!
வினைகளை வேரறுத்து
வெல்லும், வழி வகுப்பவனே…!
விநாயகனே…! வேழ முகத்தோனே…!
இன்று உந்தன் வரவிற்காய்,
இதயம் நிரம்ப அன்பு வைத்து,
இல்லந்தோறும் விருந்து வைப்பர்…!
ஷ்ட தெய்வமாய் உனைப்போற்றி
கஷ்டம் நீங்கவே வழி படுவர்….!
அகிலம் காத்து, குறைத்தீர்க்கவே, நானும்
அனைவரின் சார்பிலும் வணங்குகின்றேனே….!