Showing posts with label Tamil posts. Show all posts
Showing posts with label Tamil posts. Show all posts

Sunday, July 6, 2014

(லேட்)டஸ்ட் ஆன பத்துக்கு பத்து...



வெளியூர் பயணங்களில் என் எழுத்துப் பயணம் தடை பட்டிருந்த இரு வாரங்களில், என்னையும் பத்தோடு ஒன்றாக, பதிந்திருந்ததை (பெயர் பட்டியலில்)  சகோதரரர் கில்லர்ஜியின் பதிவை பார்த்தறிந்தும் சற்று சந்தோசம் கலந்த திகைப்புக்குள்ளானேன்.

சந்தோசம்…. என்னையும் மதித்து நட்பு வட்டத்தில் சேர்த்திருப்பது.!!!

திகைப்பு….  இந்த கேள்விகெல்லாம், தகுந்தாற் போல் பதில் அளிக்க என்னால் இயலுமா?

பதில் எழுத அழைத்த அவரது அழைப்பை தட்ட இயலாமலும், காலம் கடந்த ( மறந்த ) ஒரு கதையை எப்படி மீண்டும் தொடர்வது என்று குழப்பமாகவும், இருந்தாலும், ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு பதிலை உருவாக்கி, ( நன்றாகத்தான் சமாளிக்கிறாய்? வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய்? உன்னை…… என்று மனசாட்சி பல்லை கடிக்க..!) சரி! ஒரு பதிவாகத்தான் இருக்கட்டுமே! என்ற எண்ணத்தில், எழுதி வெளியிட்டு விட்டேன்.

வலையுலகில் அறியாத பல நல்லதோர் விலாசங்களையும், இந்த தொடர் பதிவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் பரிபூரணமான, நன்றிகளையும், வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக என் தளத்திற்கு வந்து கருத்து ௬றியவர்கள் மிகவும் குறைவு! நானும் நிறைய தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் ௬றிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா? என்ற நப்பாசையும் என்னை எழுத தூண்டியது!
    
இதோ! கேள்விகளுக்கான, என் பதில்களை,
 
விமர்சிக்கும் உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 


உங்களுடைய 100 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?



முதலில் 100 ஆவது வயதை தொட விருப்பமில்லை! இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்கப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா? அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா? என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட! இத்தனை ஆசையா உனக்கு? ஒரு பேச்சுக்கு எழுத சொன்னதற்கே, இப்படி நீட்டி முழக்கிறேயே!! உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான்! )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன்! யாருமேயில்லை! (அதன் பின்தான் புத்தியில் உதித்தது! காதருகே பேசி சென்றது என் விதியென்று!!.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க! பின்னே எங்கேயிருந்து கொண்டாட்டம்!!!!. 
     
 
என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?



ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களிடமிருந்துதான், ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். நானும்அப்படித்தான்! ஆனால், கணணியின் மூலம் இணையத்தின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த பின் இதில் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். சந்தர்பங்கள் சுலபமாக என்னுடன் இணைந்து வர அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.


 

கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?



 சிரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம். “சிரிப்பும் புளிப்பும் சிறிதுள” என்று என் பாட்டி அடிக்கடி ௬றுவார்கள். “என்ன அர்த்தம்”? என்று நான் கேட்க “புளிப்பு ஒரு வயதுக்கு மேல் நம் உடம்புக்கும், பற்களுக்கும், ஒத்து வராது. அதுபோல் வாய் விட்டு சிரித்தலும், ஒருவயது வரைதான். அதன்பின் அனாவசியமாக எதற்கெடுத்தாலும் சிரிக்காது, அடக்கி, புன்னகைக்க மனம் பக்குவபட்டு விடும்.” என்று ௬றுவார்கள். பாட்டி சொன்னது அந்த காலத்தில், எனினும், அது என்னை பொறுத்த மட்டில் உண்மைகளாக போய் விட்டன. ஆனாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அனைவரிடம் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கடைசி என்பதேது?

 

 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?



முன்பெல்லாம், மாதம் ஒரு முறை அந்த நிலையை சந்தித்திருக்கிறேன். இப்போது தங்கியிருக்கும் இடத்தில் அந்த நிலை கடவுள் புண்ணியத்தில் இல்லை! அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது! சே! என்ன வேலைகளோ”!!! என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே!!!)

 

உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?


       

 “திருமணத்தன்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தீர்களோ! அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோசம் தினமும் உங்களை வந்தடையும்!” என்று மனதாறச் சொல்லி அவர்களை வாழ்த்துவேன்.

 

உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவீர்கள்?


ஒவ்வொரு வீட்டிலிருந்து ஆரம்பித்து, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என்று அனைத்துவிடங்களிலும், மனிதரை, மனிதர் நேசிக்கும் மனிதாபிமானம், உறவுகளை நேசித்தல், ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, அன்பு பரிமாற்றம், மரியாதையுடன் பழகுதல், போன்ற பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால், உலகத்துக்கென்று எந்த பிரச்சனை வரப் போகிறது?இயற்கையின் பிரச்சனைகள் என்றால், மனிதரின் இந்த இயற்கையான குணங்கள் அதை ஒரளவு சரி செய்யும் என நினைக்கிறேன்.  

 

நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?


 குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, அதில் எது சிறப்பாக இருக்கிறதோ! அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும்.! நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல! )


 

உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால், என்ன செய்வீர்கள்?

 
    தவறான தகவலை காலம் ஒரு நாள் திருத்தி காட்டும் என்ற நம்பிக்கையில், பொறுமையுடன் இருப்பேன். வேறு வழி! தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்க்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?)

 
 உங்கள் நண்பரின் மனைவி இறந்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்?


"உண்மையாக நேசித்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியரை விதி தன் ௬றிய வாள் கொண்டு இரு ௬றாக பிரித்து சந்தோசபட்டுக் கொள்கிறது. ஏனென்றால் அதன் பொழுது போக்கே அதுதான்.! “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்!” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் ௬றுவேன்.

குழந்தைகளற்ற நண்பறென்றால் வேறு விதமாக ஆறுதல் அளிக்க வேண்டியதுதான்.! “ஆறுதல்” என்பது மனப்புண்ணின் எரிச்சல் அகற்றும் சிறு காற்றுதான். மற்றபடி உருண்டோடும் காலங்கள்தாம், முடிந்தால் அவரை தேற்ற முயற்சிக்கும்.  


 


 உங்கள் வீட்டில் தனியாக இருந்தால், என்ன செய்வீர்கள்?

 
வீட்டின் வேலைகளே பெரும்பாலும் சரியாகவிருக்கும்.! அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது ஒட்டுவது, தைப்பது என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே!” என்று அனைவரிடமும் திட்டுகள் வேறு வாங்கி, தனிமையை சமாளித்திருக்கிறேன்.) செய்வது, என்று தனிமையை விரட்டிய காலம் போய் இன்று எதையாவது எழுதிக் கொண்டும், நடுவில் டி.வி யுமாக, தனிமையை போக்குகிறேன்.

         
                இதற்குள் இந்த தொடர் பதிவில் வலைத்தளத்தின் உறவுகள் அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...

Sunday, June 15, 2014

அப்பா…


நன்றி கூகிள்...
பெரியப்பா!..” என்று அழைத்தபடி ஓடி வந்து அவர் கைகளை பற்றிக் கொண்டாள் பிரியா.



“வாம்மா! உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்! எப்படி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” அவள் தோளை பற்றி லேசாக அணைத்தபடி, அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவள் பெரியப்பா சேகர்

பெரியம்மா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பு உறவுகள் அவளைச் சுற்றி நலம் விசாரித்து அன்பு கடலில் மூழ்கடித்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

“பிரியா! போய் குளித்து விட்டு சாப்பிட வா! உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் பண்ணியிருக்கேன்! சீக்கிரம் வா! சூடு ஆறிடும்.” என்று அன்பு கட்டளை இட்டபடி பெரியம்மா உள்ளே சென்றாள்.

அண்ணனும் அண்ணியும் “அதேயே சொல்லி விட்டு முக்கியமான  வேலை ஒன்றுக்காக வெளியில் சென்று வந்து விடுகிறோம்” என்று ௬றி அகல, தங்கை “உன் லக்கேஜை உன் அறையில் கொண்டு வைக்கிறேனக்கா!” என்றபடி மாடியேறி சென்றாள்.

“பெரியப்பா! தம்பி இன்னுமா வரவில்லை? என்ற பிரியாவுக்கு, “அவனுக்கு வேலை அதிகமா இருக்கிறதாலே, இன்னைக்கு புறப்பட்டு நாளை காலையிலே வந்துடுவாம்மா! மறுநாள்தானே நிச்சயதார்த்தம்! சரி! நீ போய் குளித்து விட்டு வா! சாப்பிடலாம்! என்ற பெரியப்பாவை கனிவுடன் பார்த்த பிரியா “சரி! இதோ! வந்து விடுகிறேன். நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள். நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்!” என்றபடி தன் அறைக்கு சென்றாள்.

             இரண்டு நாட்களும் வீடு கலகலப்பாக இருந்தது. தன் ஒரே தம்பியின் நிச்சியதார்த்தம், உறவினர் ௬ட்டத்தின் கலகலப்போடு நன்றாக முடிய, அவன் திருமண தேதியும், இரு மாதத்திற்கு பின் முடிவு செய்யபட்ட சந்தோஷத்தில், அவள் தம்பியும், வேலை பார்க்கும் தன் ஊருக்கு திரும்பிச்செல்ல, பிரியாவும் தானும் ஊருக்கு கிளம்ப போவதாக சேகரிடம் சொன்னாள்.

      “கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு பிரியா! அதனாலே நீ இப்ப வந்த மாதிரி வராம பத்து இருபது நாளுக்கு முன்னாடியே புறப்பட்டு வந்து விடு! எனக்கும் முன்பு மாதிரி தனியா எல்லா வேலையும் பண்ண முடியல்லை!” என்று இடையில் வந்து சொல்லிச் சென்ற பெரியம்மாவுக்கு “சரி பெரியம்மா!” என்றவள் “பெரியப்பா! உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்!” என்றவாறே அவரது அறையை நோக்கி நடந்தாள்.

    “அதற்கென்ன! பேசலாம் வா!” என்றபடி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற சேகர், “என்னம்மா பிரியா? நானும் பார்த்தேன்! நீ நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கறே! என்ன விஷயம்? என்றார்.

   “ பெரியப்பா! நேரடியாக நான் விஷயத்துக்கே வருகிறேன். உங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளோடு என்னையும் என் தம்பியையும் நீங்கள்தான் சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கி என்னையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இப்போ என் தம்பிக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து ஒரு அப்பா அம்மா ஸ்தானத்திலே நின்னு எல்லாம் பண்ணறீங்க! நடுவிலே இந்த ஆளுக்கு இங்கு என்ன பெரியப்பா வேலை? இவர் ஏன் என் திருமணத்திலேயும் கலந்துகிட்டாரு? இப்போ தம்பி நிச்சயத்திலேயும்…. இன்னமும் அவன் கல்யாணத்திலேயும் வந்து அசிங்கபடுத்துவாரா? பெரியப்பா! ஏன் எந்த விஷயத்தையும் அவருக்கும் சொல்லி அவரையும் ௬ப்பிடுறீங்க? என்று கோபமாக படபடத்தாள் பிரியா.   
        “ஏன்னா? அவன் உன் அப்பாம்மா! உன்னை பெற்றவன் அவன்… உங்களுக்கு நடக்கிற நல்லதுகளை பார்க்கிற உரிமை, சந்தோசம், திருப்தி அவனுக்கில்லியா? அதுக்கும் மேலே என் தம்பிக்கு நான் சொல்லி வரவழைக்காமே, இருக்க முடியுமா? சொல்லு!” என்று நிதானமாக ஆரம்பித்த பெரியப்பாவை இடைமறித்தாள் பிரியா.

               “அப்பாவா? அவரை அப்பா என்று அறிந்த நாள் முதல் கொண்டு மனதும் உடம்பும் ௬சுகிறது! பெரியப்பா! காதலிச்சு தன் விருப்படி, தன் பெற்றோர் பேச்சை ௬ட எதிர்த்து, கல்யாணம் செய்துகிட்ட அம்மாவை, கொன்ற கொலைகார பாவின்னு தெரிஞ்ச நாள் முதலாய் இவரும் போய் சேர்ந்திருக்க ௬டாதான்னு மனசு அடிச்சுக்குது, ஜெயில் வாசம் முடிஞ்சு எங்கேயோ கண்காணத இடத்திலே இருந்தவர், ஒருநாள் திடீர்னு எங்க ஞாபகம் வந்து இங்க வந்து, நான்தான் உங்கள் “அப்பான்னு” அறிமுகப்படுத்திண்டு நின்ன அந்த நாளை என்னாலே மறக்கவே முடியாது பெரியப்பா! நம்ம பெரியம்மா அந்த கதையெல்லாம் எங்களுக்கு சொன்ன, அந்த நிமிடத்திலிருந்து, அவரை பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல்லே பெரியப்பா! ஆனா, அதுவரைக்கும் எங்களுக்கு எந்த விபரமும் சரியா தெரியாததாலே உங்களைதான் பெரியப்பா நாங்க அப்பா, அம்மாவா நினைச்சு வாழ்ந்துகிட்டு வந்தோம். இப்பவும் உங்களை தவிர வேறு யாரையும்……மனசாலே ௬ட அப்பாவா ஏத்துக்க முடியாது!” என்றபடி கண்கள் கலங்க பேச முடியாது, இன்னமும் சற்றும், கோபம் குறையாத குரலில் தடுமாறினாள் பிரியா. 

  அவள் அருகில் வந்து அன்புடன், அவள் கைபிடித்து கட்டிலில் அமர வைத்த சேகர், “நீங்க எப்பவுமே என் குழந்தைகள்தான், பிரியா! அதுலே எந்த மாற்றமும் கிடையாது! என்றதும் “அப்படியானால், இனி அவரை நீங்க தம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லாதீங்க பெரியப்பா! தம்பியும் வருத்தபட்டான். நான்தான் உங்ககிட்டே பேசி உன் கல்யாணத்துக்கு அவரை வராமே தடுக்கறேன்னு, அவனை சமாதானபடுத்தி ஊருக்கு அனுப்பினேன் என்றாள் பிரியா.

         “இந்த கல்யாணத்தை மட்டும் அவன் பார்த்துட்டு அவன் பழையபடி தான் இது வரைக்கும் இருந்த இடத்துக்கே போயிடுவாம்மா! தன் குழந்தைங்க திருமணத்தை பார்க்கற வாய்ப்பை ௬ட அவனுக்கு நான் தராமல் போனால் எப்படி? அவ்வளவு பெரிய பாவத்தை நான் எப்படி செய்வேன்? பெரியப்பா குரல் கம்ம ௬றியதை கேட்டதும் பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

             “ யார் பாவி? நீங்களா? இல்லை அவரா? அந்த பாவி மேல் ஏன்தான் இப்படி இரக்கம் காட்டுறீங்களோ தெரியல! தம்பி திருமணத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு எங்கேயோ போவதற்கு முன், இப்போதே அவர் ஒரேடியாக போய் தொலைந்தால்தான் என்ன? கோபத்தில் வார்த்தைகள் பிரியாவிடமிருந்து வெடித்தன.

            “பிரியா!!!!! சேகர் ஆவேசமாக கத்தினார். பின் ஒரு நிமிடத்தில் சற்று சுதாரித்து கொண்டவராய் அவள் அருகில் வந்து கையை பிடித்தபடி, பிரியா! என் தம்பியை பற்றி உனக்கு தெரியாது! அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்!

பிரியா! உங்களுக்கெல்லாம் தெரியாத உண்மையை நான் இப்போது அவனுக்கு தந்த வாக்குறுதியையும் மீறி சொல்லத்தான் போறேன். இப்போது நீ புரிந்து கொள்ளும் வயதையும் அடைந்து விட்டாய்! உன் பெரியம்மா சொன்னபடி உன் அம்மாவை அவன் கொல்லவில்லை! அவனைதான் கொன்று சிதைத்து விட்டாள் உன் அம்மா. அந்த பழியை அவன் மீது சுமத்தி விட்டு நீங்கள் சின்ன குழந்தைகள்”னு ௬ட இரக்கம் இல்லாமே தாய் பாசத்தையும், உதறி தள்ளி விட்டு தன் சுகந்தான் பெருசா நினைச்சு என் தம்பியை விட்டுட்டு அவ எங்கேயோ போயிட்டா! விபரம் அறிந்து சென்றேன், அங்கே என் தம்பி “அண்ணா. இந்த ரெண்டு பேரையும், உன் குழந்தைகளோடு நல்லபடியா வளர்த்து ஆளாக்கிற சிரமத்தை உன்கிட்டே கொடுக்கறேன். அம்மா இருந்தும், இல்லையென்று ஆகி விட்டது. “அவள் ஓடிப் போனவள்!” என்ற பேரோடு இந்த குழந்தைகள் இங்கு வளர்வதை விட அம்மா இறந்து போயிட்டா! அப்பா எங்கேயோ போயிட்டார்! அதனாலே அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் இதுங்கற, பரிதாபத்திலேயே வளரட்டும். அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் வராமல் இருக்கும். இதை யாரிடமும் சொல்லாதே! எதையாவது சொல்லி சமாளிச்சுக்கோ! இந்த பிரச்சனைகள் முடிஞ்சதும் நான் எங்கேயாவது போய் என்னால் முடிஞ்ச அளவு உழைச்சு உனக்கு பணம் அனுப்புறேன். இந்த குழந்தைகளை காப்பாத்து!” அப்படின்னு என்கிட்டே சத்தியம் வாங்கிட்டு போனான். நானும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன் அம்மாவை, நல்லவளாக்கி, என் தம்பியை கெட்டவனாக்கி, ஊர் வாயை மூடி உங்களை வளர்த்தேன். உன் திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது வந்தவன், உங்களை பற்றி கேள்வி பட்டு எவ்வளவு சந்தோசபட்டான் தெரியுமா? “என் குழந்தைகளா இப்படி”ன்னு எவ்வளவு பூரிப்படைந்தான் தெரியுமா? உன் திருமணத்திற்கும் யாரோ ஒருவன் மாதிரிதான் வந்து பார்த்து வாழ்த்திட்டு போனான். எல்லோரின் உதாசீனத்தையும், வெறுப்பையும் பார்த்தவன், உடனே கிளம்பிச் செல்வதாகதான் சொன்னான். நான் தான் “உன் பையனுக்கும் திருமணம் ௬டி வருகிறது. இருந்து பார்த்து விட்டுப் போ!” என்று தடுத்தேன். அவன் கொடுத்த பணத்தில்தான் உன் திருமணத்தை சிறப்பாக செய்தேன். ஒரு சிறந்த அப்பா இடத்திலே இருந்து, மறைமுகமா மறைஞ்சிருந்து, மானசீகமா, நீங்க நல்லா வாழனுன்னு நினைச்சபடி, வாழ்ந்து வந்திருக்கான் என் தம்பி! அவனையா ‘ஒரேடியா’ போகனுன்னு நினைக்கிறே! மனசாற சபிக்கிறே பிரியா! சொல்லு? உணர்ச்சியுடன் கண்களில் நீர் மல்க கேட்டார் சேகர்.

தன் தாயின் தவறை மறைக்க, அதுவும் தங்கள் நலத்துக்காக, தங்களுக்கு அவப்பெயர் ஏதும் வரக்௬டாது என்பதை கருத்தில் கொண்டு, தன் வாழ்வையே தியாகம் செய்தது அப்பாவா? அவரையா இத்தனை நாள் தவறாக புரிந்து வெறுத்தோம்? இதயத்தில் ௬ரிய கத்தி கொண்டு அறுத்தது போல் பிரியாவுக்கு வலித்தது. தன் தாயினால் தன் அப்பா பட்ட துயரங்களை கேட்டதும் விக்கித்து போனவளுக்கு, இத்தனை நாள் தவறான கண்ணோட்டத்தில் தந்தையை நினைத்த தன் செய்கைக்கு மனதும் கனத்ததால் அவள் விழிகளி்ல் கண்ணீர் ஆறாக பயணித்து ஓடியது.

சட்டென்று எழுந்து பெரியப்பாவின் கைகளை பற்றியபடி, “பெரியப்பா இப்பவே, எங்கள் அப்பாவை பார்க்க போவோமா?” எனக்கு உடனே எங்கப்பாவை பார்க்கனும். அவர் காலில் விழுந்து கதறனும் போல இருக்கு!” என்றபடி விம்மி விம்மி அழலானாள் பிரியா.

நன்றி கூகிள்...