Showing posts with label கைமாறு. Show all posts
Showing posts with label கைமாறு. Show all posts

Monday, August 4, 2014

அன்னைக்கு என்ன கைமாறு, செய்யப்போகிறோம்…?


அன்னையே! எனதருமை அன்னையே…!
அன்னையே! இயற்கை அன்னையே…! நீ,
ஆதி அந்தம் முதற்க்கொண்டு,
அன்போடும், அறிவோடும், அழகோடும்,
அருளோடும், ஆத்மார்த்தத்தோடும்,
பாசத்தோடும், பரிவோடும், பண்போடும்,
பந்தத்தோடும், பலகாலம், பக்குவமாய்,
பார்த்துப்பார்த்து, பிரியமாய், பயிராக்கிய,
பசுமையான மரங்கள், நாங்கள்..!!!  அதன்,

பிரதிபலிப்பாய், எழுந்த உன் உளச்சோர்வுக்கு,
பிரதிபலனாய், எங்கள் பதில் எதிர்சேவை
என்னவென்று, அறிந்து கொள்ளும்
எண்ணத்தில், ஆவலான உள்ளத்துடன்,
பலகாலம், காத்துக்காத்து நொந்திருக்கிறாய்…!
பதிலுக்கு நாங்கள் உனக்களித்தது,,?
பரிசென்று சொல்லும்படி எதுவுமில்லை..!!
நலமே வாழ, நாங்கள் நினைத்து,
நலமின்றி, உன்னைச் செய்ததுதான்..!!
“நாகரீகம்” என்ற பெயரில், உன்
நலம் குலைத்த நற்செயல்கள்தாம்..!!

செயற்கை என்ற போதை தலைக்கேறி, எங்களை
செயலிழைக்க வைத்ததினால், எங்கள்
செய்கைகளும் நிலைத்தடுமாறி, நாங்கள்
இயற்கையென்ற ஒன்றை இல்லாமல் செய்து விட,
இயன்றவரை அரும் பாடுபட்டுள்ளோம்…!  நீ

மண்ணாகி, பல பயன்கள், அளித்தாய்…!
மழையாகி, உள்ளம் குளிர, வைத்தாய்…!
மரமாகி, இனிய நற்கனிகள்  தந்தாய்…!
மலையாகி, பெரும் அரணென, காத்தாய்…!
மலராகி, நறுமணம், நுகரச் செய்தாய்…!
ஒளியாகி, கடும் இருளைச் சுமந்தாய்…!
ஒலியாகி, தாலாட்டி ,சீராட்டி, மகிழ்ந்தாய்…!
கடலாகி, மனம் களிப்புற, பிறந்தாய்…!
கானகமாகி, பல உயிரையும், படைத்தாய்…!   இப்படி,

தாயாகி, தவிப்புடன், வளர்த்த உன்னைத்
தவிக்க விட்டதினால், தாளாத வருத்தம், உனைத் 
தழுவும் சோகமான, ஒரு தினத்தின் முடிவில்,
தன்னைத்தானே அடித்து வருத்திக்கொள்ளும்,
உவகையுடன், நீயே உருவாக்கிக்கொண்டும்,
உருக்குலைந்திடவும், எங்கள் உளம் நடுங்கிடவும், “என்
சீற்றம் இதுதானென்றும், நான் சினம் கொண்டால்,
சிக்கலென்றும்,” எங்கள் சிந்தைதனில் உணர்விக்கும்
இயற்கை சீற்றங்களையும், “நீ” உளமாற ஏற்று,
இயல்பாக, அணைத்துக்கொண்டனையோ…?

காட்டுடன், காட்டின் வளங்களும்,
கண்டும், காணாமல் போவதினால்,
கண்டு நெஞ்சம் கொதிப்படைந்து,
“காட்டுத்தீயை” கடும் காற்றுடன் கலந்து,
காய்ந்த வனம் முழுதும் பற்ற வைத்து,
காடுகள் சடுதியில் காணாமல் போவதை,
கண்டு உள்ளம் களிப்படைந்தாயோ…?

மண்ணுடன் அதன் மகத்துவமும்,
மக்கி மறைந்து போவதினால், உந்தன்
பூவினும் மெலிதான மனம் பொறுக்கமாட்டாமல்,
பூமியின் ஆதாரத்தை சற்று அதிர்வித்து,
“பூகம்பம்” எனும் பூமிஅதிர்வை தோற்றுவித்து,
பூரித்து மனம் மகிழ்கின்றாயோ…?

கரை புரண்டோடும் பெருங்கடலுடன்,
கடலின் செல்வங்களும், உயிர்களும்,
கணிசமாக வற்றி வதைந்து போவதினால்,
கவலை கொண்ட கனத்த மனத்துடனே,
“சுனாமி” என்ற கொடும் பெயருடனே,
சுழன்றடித்து சுற்றிச்சூழ்ந்து விட்டு,
ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து பின்னர்,
அமைதி கொண்டு அடங்கிப்போனாயோ…?

நாம் வளர்த்து விட்ட செல்வங்கள்,
நன்றி, விசுவாசம், மறந்து போனதினால்,
அன்னையை நினைக்காத நிலைகண்டும்,
அவமதிப்பை, கொடுக்கும் பிழைபொறுத்தும்,
பொங்கும் மனம் பொறுக்க மாட்டாமல்,
பொங்கி தணிந்தால்தான், பொறுக்கவும் முடியும்
என்பதினால், உனக்குள் எழுந்த கோபத்தீயை,
“எரிமலை” என்ற பெயருடனே, மாமலைகளை
எரிய விட்டும், எட்டும் இடமெங்கும் சிதறவைத்தும்,
எளிதாக இறக்கி விட்டு நெஞ்சம் தணிந்தாயோ….? இப்படி,

உன்னை நீயே வாட்டி வதைத்துக்கொண்டும்,
உனக்கு சோதனைகள் பல கொடுத்துக்கொண்டும்,
வேதனைகள் பல சுமந்துகொண்டும், எங்களுக்காக
வேண்டியபடி, பல காலம் தவமாற்றியிருந்தும், அவ்
வேதனை வெகுமதியை, உனக்கு பரிசாக அளித்ததையன்றி
வேறென்ன வெகுவாக சாதித்து விட்டோம்..? முடிந்தால்,

இனியேனும், இவர்கள் திருந்தி வாழவேண்டுமென்று,
இதுவாவது விரைவில் பலித்து விடவேண்டுமென்று,
இயன்றவரை இறைவனிடம் வேண்டிக்கொள்…!
இந்த வேண்டுதலுக்கேனும், எங்கள் இதயம்
இன்றில்லாவிடினும், என்றேனும் ஓர்நாள், சிறிது
இளகுமாவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்………!
இயற்கை அன்னையின் இனிய செல்வங்கள்,
இவர்கள்தாம்”, என்ற இனிமைச்சொற்கள், உன்
இதயம் குளிர, இமைகள் பனிக்க, இருகரம் குவித்து,
இதமாக, உன்னை சரணடையுமாவென்று பார்க்கலாம்……….!