Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Monday, December 31, 2018

வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு....

இப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது.  அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ஓடுகிறதா? இல்லை நாம்தான் காலத்தை ஜெயிக்க விடாது செய்ய வேண்டுமென ஓடி ஓடி கண்மூடி திறப்பதற்குள் இறுதி மாதத்தில் விரைவாக வந்து நிற்கிறோமா? புரியவில்லை.... ஆனால் இன்னமும் ஒரு நாளுக்குள், மறுபடி ஒரு புது வருடத்தை சந்திக்கப் போகிறோம். சென்ற வருடத்தில், எவ்வளவு  சந்தோஷங்கள், எத்தனை மகிழ்வுகள், இல்லை,  எத்தனை பிரச்சனைகள், எவ்வளவு கவலைகள் என அனைத்தையும் சமமாகவோ, அல்லது, முறையே நிறையவோ, குறையவோ சந்தித்திருப்போம். அது போல அல்லாமல் இனி வரப் போகும் புது வருடமாகிய  2019 இனிதே பிறந்து எப்பொழுதும் வருட இறுதி மாதம் வரை அனைவருக்கும் மகிழ்வினை மட்டும் அள்ளி அள்ளி தந்து செல்ல வேண்டுமென மனதாற காலத்திடம் வேண்டிக் கொள்கிறேன். 

முந்தைய காலங்கள் என்பது ஒரு வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடத்தில் இருந்த செளகரியங்கள் "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன. இதோ கீழே நான் படிக்க நேர்ந்தவைகளை அனைவரும் உணர்ந்திருக்கலாம். (ஏன் அனைவரும் படித்தேயிருக்கலாம். அப்படி உணராதவர்கள் இனி உணரும் சந்தர்ப்பங்கள் வராது என இவை கூறுகின்றன.)

இந்த விஞ்ஞானமும் வருடத்திற்கு வருடம் முன்னேறிக் கொண்டுதான் உள்ளது. அதன் பயன்பாடும் நமக்கு தேவையாகத்தான் உள்ளது. ( கீழே காணும் இவையும் விஞ்ஞானம் வெற்றி கண்ட வாட்சப் என்ற பயன்பாட்டின் மூலம் வந்து படித்தவைதான்.) ஒன்றுமில்லை.. ஒரு கையடக்க கருவியில் இந்த  மாதிரி விஷயங்களை தொகுத்தோ, இல்லை தனித்தனியாகவோ, வெளியிட்டு பகிர்ந்து மகிழ்கிறோம். இதுவும்  விஞ்ஞான வளர்ச்சியினால்தான் சாத்தியமாகிறது.                                     
                           
                                ஆனால்,

இந்த விஞ்ஞான தரகரின் விபரீத வளர்ச்சியால், சோம்பேறித்"தனம்" என்ற ஒன்று உண்மையான "தனத்தை" விட அதிக செல்வாக்குடன் நம் உடம்பில் வாடகை எதுவும் எதிர்பாராமல் வந்தமர்ந்து குடியேறி விட்டன.  ஆக்கிரமித்து விட்டவைகளை சில சமயம் அகற்ற இயலாமல் தத்தளிக்கிறோம். நம்முடைய பெற்றோரின் சிரமங்களுக்கிடையே வளர்ந்து விட்டு தற்சமயம் சொகுசின் சுகம் புரிந்து விட்ட நாமும் நம்  இளைய தலைமுறையினருக்கு அதே சுகத்தை அது கெடுதல் என புரிந்து கொண்ட பின்னரும்   தக்கவைக்க பாடுபடுகிறோம்.

என்ன இருந்தாலும் உடல் உழைப்பும், அதனால் வரும் இன்பங்களும் இனியதல்லவா.!அந்த உழைப்புகளையும். இன்பங்களையும் முழுதாக நாமும் அனுபவியாமல், நம் சந்ததிகளுக்கும் அது என்னவென்றே தெரியாதபடிக்கு செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

இந்த மாதிரி வருடங்கள் உருண்டோடி, காலச் சுழற்சியில் மீண்டும் பழைய காலங்கள் ஏற்படலாம்.  அதைக்காண நம்மில் பின்வரும் எந்த தலைமுறை புண்ணியம் செய்திருக்கிறதோ.! அந்த கடவுளுக்கே வெளிச்சம்.. ஆனால் அந்த கடவுளே ஒளி உமிழும் பலவகையான விளக்குகளையும்,  மின்சார மணி எழுப்பும் ஓசைகளையும், தற்சமயம் மெளனமாய் அங்கிகரித்து வருகிறார்.
                   எது எப்படியாயினும் 
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்வான தருணங்களை நிறைய தர வேண்டுமென மனதாற ஆண்டவனிடம்  பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

       வலைத்தள சகோதர, சகோதரிகள்   
  அனைவருக்கும்  இனிதே பிறக்கவிருக்கும்
                           2019 ம் ஆண்டின்
                   புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

படித்ததை பிடித்ததால் பகருகிறேன்.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது…

அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டனர்…

 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…

அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

இது எல்லாமே உண்மைதானே. ! என எண்ணவும் தோன்றுகிறது

Friday, December 30, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில்  கால் பதித்து நடக்க ஆரம்பிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும், நாம், இந்த வருடம் அதன் முடிவை சந்திப்பதற்குள், இதையெல்லாம். சாதித்து முடிக்க வேண்டுமெனவும், வருடத்தின் முதல் நாள் தொடங்கி  இறுதி நாள் வரை, தினமும் இச்செயல்களை செவ்வனே செய்ய வேண்டுமெனவும்.நமக்குள் என்றும் வாய்பேசாது மெளனித்திருக்கும், சத்தியத்தை சாட்சி  துணையாக அழைத்துக்கொண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொள்கிறோம். ( அதை சாதித்து செயலாக்க முடிகிறதா என்பது வேறு விஷயம்.) சிலருக்கு அந்த வாய்ப்புகள் அமையப் பெற்று, மகிழ்ச்சியையும், நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தையும்  தரலாம். ஆனால், பெரும்பான்மையாக பலருக்கு ஒரிரு மாதங்கள் உறுதிமொழியின்படி நடந்து விட்டு அதன்பின் வருட இறுதியில், தவற விட்ட நாட்களை நினைத்து வருந்தி மறுபடியும் வரும்  வருடத்திற்காக தவம் இருப்பதே வாடிக்கையாக போய் விடுகிறது.

போகட்டும்! .நடந்து வரும் கடந்து போய் கொண்டிருக்கும் 2016 ல் எத்தனையோ வளர்ச்சிகளையும், உன்னதங்களையும் சந்தித்திருந்தாலும்,  சில இழப்புக்களும், இன்னல்களும்  தலைகாட்டி நம்மை  வருத்தியிருக்கின்றன. இனி உதயமாகும்   2017 ம் ஆண்டு எல்லா வளங்களையும்  வாரி வழங்கி அனைத்து மக்கள்தம்  கனவுகளுக்கும், ஆசைகளுக்கும், சாதிக்கும் எண்ணங்களுக்கும் உறுதுணையாக நின்றபடி சிறப்புடன் அமைய, இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். உலக அமைதியும், சகோதர ஒற்றுமையும்  எங்கும் தழைத்தோங்க இறைவனை வேண்டுவோம்.



வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும்  என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.











Thursday, September 17, 2015

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.



 

அண்டங்களை ஆட்சி செய்பவன்
ஆறுமுகத்தவனின் அண்ணனவன்
அகிலத்தை காத்து ரட்சிப்பவன்
அன்பிற்கு மட்டுமே அடங்குபவன்
ஐய்யனாம் முழுமுதற் கடவுளை
ஐயமின்றி மனதாற தொழுவோமாக..! 


வலையுலக சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


சில காரணங்களால் உங்களையெல்லாம்  வலையுலகத்தில் தொடர்ந்து இனிதாக உரையாட இயலாமல் போய் விட்டமைக்கு மன்னிக்கவும். இனியேனும் தொடர்ந்து எழுதி வலையில் பயணிக்கவும், எழுத்தெனும் சுவாசத்தை இடையறாது சுவாசிக்கவும் அவனருளையே எப்போதும் பணிவுடன் வேண்டுகிறேன். 
 

இவ்வினிய விநாயக சதுர்த்தியில் விநாயகர் அகவல் பாடி அவனருளை நாமனைவரும் பெறுவோமாக.!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.!

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

    அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

 
நன்றி... படங்கள்... ௬குள்.

Thursday, January 1, 2015

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வலையுலக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



அனைவரும் அனைத்து வளங்களும் பெற ஆண்டவனை துதிக்கின்றேன்.




தீயவைகளை களைந்து நல்லவைகளை பசுமையாய் சிறந்திட செய்ய வந்த இப்புத்தாண்டை வாழ்த்தி வணங்கி வரவேற்போம்.

வாழ்வின் இருள் நீக்கி ஒளியின் சப்தங்களுடன் ஆரவாரமாக வந்த இவ்வருடத்தை, இறைவனின் துணையோடு இறுதிவரை இனிமையான வசந்தமென அனைவரையும்  வாழ வைக்க வேண்டி மனதாற பிரார்த்திப்போம்.


                      வாழ்க வளமுடன்.
                       வளர்க வையகம்.