Thursday, January 14, 2016

இயற்கை கடவுள்


தட்சிணாயனம் ஆறு மாத காலம் முடிந்து உத்தராயணம் துவங்கும் நாளே தைத்திங்களின் முதல் நாள். தினமும் சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைந்து முறையே ஏற்படுத்தும் பகல் இரவுகளில் மனிதன் முதற்கொண்டு சகல ஜீவ ராசிகளும் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,, ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும், தை முதல் ஆடி வரை உத்தராயணம் பகல் பொழுதாகவும், நம் புராணங்கள் பகருகின்றன.
பொதுவாக இறை வழிபாட்டில் நம் கவலைகளையும், மனதின் எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக இறைவனிடம் ஒப்படைக்கும் சமயத்தில், நம் மனதில் ஓர் இனம் புரியாத நிம்மதி உண்டாகும். தேவர்களில் ஒருவரான இந்த இயற்கைக் கடவுளாம் சூரியனை தினமும் வழிபட்டு வருவது சிறப்பாயினும், தை மாதத்தின் முதல் நாள் அதற்கு  மிகவும் உகந்தாக கருதப்படுகின்றது. அந்த தை மாதத்தில், சூரியன் தென் திசையிலிருந்து வட திசை வாயிலாக தன் பயணத்தை துவக்குகிறார். ஆண்டின் முதல் ஆறு மாத காலம் தானியங்களின் வளம் பெருக, பூமியின் செழிப்பிற்காக மழையிலும், பனியிலுமாக தன் ஒளி குறைத்துக்கொண்டு பயணிக்கும் சூரியன் பிரகாசமான ஒளியுடன் தை மாதம் முதல் பவனி வருவதால், அன்றைய தினம் அவருக்கு நம் நன்றியை செலுத்தும் விதமாக சிறப்பாக வழிபட்டு வருவது பொங்கல் பண்டிகையாக உருவானது.
நம் வாழ்வின் இருளை அகற்றி, ஆடி துவங்கி மார்கழி வரையிலான காற்றையும், மழையையும், குளிரையும் களைந்தெறிந்து விட்டு புதுப்பொலிவுடன் பிரகாசமாக துவங்கும் இந்நாளில், நாம் ஒருவருக்கொருவர் மனதாற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு மனித நேயங்கள் எந்நாளும் தழைத்தோங்க, அச்சூரியக்கடவுளின் பாரபட்சமற்ற தன்னலமற்ற பகல் இரவு என்று தோன்றும் கடமையின் செயலைப் போல நாமும் அன்புடன் செயலாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நம்முன்னோர்கள் துவக்கி வைத்த பண்டிகையாகக் ௬ட இருக்கலாம்.
நாராயணனின் அம்சமாக விளங்கும் சூரிய நாராயணனை வணங்குவது நம் தேக ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கை வளத்திற்கும் நல்லது.  சூரியனை, ஆதவன், அருணன். பாஸ்கரன் என்றும், உதித்தலின் காரணப் பெயராக, பகலவன், செங்கதிரோன் என்றும் இன்னும் ஏராளமான பல பெயர்களிலும் விளிப்பர். அவரின் போற்றுதலுக்குரிய ஆதித்திய ஹிருதயம்படித்து தினமும் அவரை வழிபட்டு வந்தால் நம் கண் பார்வை நம் வாழ்நாள் உள்ளளவும் சிறப்பாக அமையும்.
 இதிகாசங்களில் ராமாயணத்தில் ஸ்ரீ ராம பிரான் பதினான்காண்டு வன வாசத்தில் சூரியனை வழிபட்டு ஆதித்தய ஹிருதயம் ஜபித்து தன் பகையை வென்றார் எனவும், மஹாபாரதத்தில், பிதாமகரான பீஷ்மர் பாரத போரில் அடிபட்ட நிலையிலும், அம்பு படுக்கையில் காத்திருந்து, உத்தராயணம் துவங்கும் தை மாத்தில், சூரியனின் ரதம் வடதிசை திரும்பும் அந்நாளில், சப்தமி திதியில் தம் உயிரை உடலை விட்டுப் பிரியச் செய்தார், எனவும் ௬றுகிறது. மேலும் மனித குலத்திலும் உத்தராயணத்தில் மரணம் ஏற்பட்டால், இறைவனை அடைந்து பிறப்பில்லா முக்தியை அடையலாம் என்பதும் ஒரு நம்பிக்கையாக பேசப்படுகின்றது.
இவ்விதமான சிறப்புக்களை பெற்ற இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டுடன் இணைந்து ஆரம்பிக்கும் இந்த தைத்திருநாளை, தமிழர் திருநாளை, சங்கடங்கள் தகர்த்தெறியும் மஹா சங்கராந்தியை  சூரிய நாராயணனின் அருள் பார்வையுடன் அனைத்து வளங்களும் முழுமையாக அமையப் பெற்று, அனைவரும் களிப்புடன் கொண்டாட அவன்அருளையை வேண்டித்தொழுகிறேன்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

 படம்: நன்றி கூகுள்.

Friday, January 1, 2016

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2016வணக்கம் நட்புறவுகளே.!

கடமைகளை நிறைவாக முடித்து இன்றுதான் கணினி முன் வந்தேன். "எல்லோருக்கும் கடமைகள் இல்லையா? இருப்பினும் அனைவரும் வலையுலக சொந்தங்களை விட்டு விடாமல், தொடர்ந்து எழுதுவதும், கருத்திடுவதுமாக அதையும் ஒரு கடமையாகக் கருதி செயல்பட்டு வரவில்லையா? நீ மட்டும் வித்தியாசமாக கடமைகள்என்ற பெயரிட்டு எப்போதாவது எட்டிப்பார்ப்பது உன் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது."  என மனசாட்சி வேறு குத்திக்காட்டுகிறது. என்ன செய்வது.? மனதின் அந்தக் ௬வலை மெளனமாக ஏற்றுக் கொண்டவளாய், மீண்டும் வலையில் பிரவேசிக்க முயற்சிக்கிறேன். சரியா.?


என் மகனின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. என் மகனின் திருமணத்திற்கு பாசத்துடன் என் தளம் வந்து வாழ்த்துரைத்த அனைத்து சகோதர, சகோதரிகளின் அன்பு செஞ்சங்களுக்கும்  மனம் நிறைந்த களிப்புடன் ,  நன்றிகள் பல ௬றக் கடமை பட்டுள்ளேன்.
        

                                                         
                          நன்றி…. நன்றி…..நன்றி….


என் மகனின் திருமண நாளை நினைவு வைத்துக்கொண்டு அன்றைய தினம் ( நவம்பர் 18) ஒரு சகோதர பாசத்துடன் மீண்டும் என் தளம்  வந்து  வாழ்த்துப் பரிசளித்த சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்களுக்கு மறுபடியும் என் நெஞ்சம் நிறைந்த மகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                             
                  
             நன்றி….நன்றி சகோ....வலையுலகின் ஒரு ஓரத்தில் சுற்றி வரும் என்னையும் மறவாது என்னைபாச மிகுந்த சகோதரிஎன்ற அறிமுகத்துடன், சகோதரர் திரு. கில்லர்ஜி துவக்கி வைத்தகடவுளைக் கண்டேன்.” தொடர் பதிவோடு சுற்றி வர, பத்ததோடு ஒருவராக என்னையும் அழைத்திருந்த சகோதரர் திரு. பரிவை குமார் அவர்களின் அன்பான அழைப்பைக் கண்டு உண்மையில், திகைப்புடன் ௬டிய மகிழ்வடைந்து போனேன். “என்னால் இதுவெல்லாம் சாத்தியமா? என்ற திகைப்புடன், வலைதளத்தில் என்னையும் அன்பாக, பாசமாக ஒரு உறவாக நினைவு வைத்திருக்கிறார்களே என்ற பெருமிதத்தில் மிகவும் மனம் மகிழ்வடைந்து போனேன். என்னையும் உங்களில் ஒருவராக மதித்தழைத்த சகோதரர் பரிவை குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                               
                            மிக்க நன்றி. சகோ....


வலையுலகமும், வலையுலக உறவுகளும் மட்டுமின்றி, உலகில் வாழும் அத்தனை உயிர்களும் நலமே வாழ அந்த ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு , என்னால் முடிந்த போது கண்டிப்பாக அந்தப் பதிவை எழுதுகிறேன் ( நான்தான் அனைவரும் மறந்து விட்ட  அத்தொடரின் கடைசியாக இருப்பேன் என்ற போதும்…. இருப்பினும், கடவுளைக்காண எனக்கும் மிகவும் விருப்பமென்பதினாலும்….) எனவும் ௬றிக் கொள்கிறேன்.


 இந்த கடந்த வருடம் எத்தனையோ நிகழ்வுகளினூடே,சோதனையாக கடும் மழையினால் ஏற்படுத்திய வெள்ளச்சேதங்கள், தமிழக மக்களுக்கு உண்டான கடும் சோதனைகளை கண்டு, கேட்டு மனது பதைக்கிறது. இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல..! ஆண்டவனுக்கும் சில நேரம் வஞ்சம் தீர்த்து மகிழும் மனம் இருக்கிறதோவென அனைவரையும் புலம்ப வைத்து விட்டது. வலியச்சென்று மனித நேயத்துடன் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,மனதாற நன்றிகளையும், உளம் நிறைந்த வாழத்துக்களையும் தெரிவிக்க நாம் கடமைபட்டுள்ளோம்.  ௬டிய விரைவில் மறுபடி நிலைமை சீரடைந்து மக்கள்  பழையபடி தங்கள் பழைய நிலைய அடைய மனதாற பிரார்த்திப்போம். இனி "இது போன்ற சோதனைகளை எக்காலத்திலும் எவருக்கும் தந்து விடாதே!" என்று மன்றாடிக் கொண்டபடி இப்புவியில் இனி பிறந்த இப்புத்தாண்டில்  அனைவரும் நலமே வாழவேண்டுமென இறைவனிடம் நம்       விண்ணப்பங்களையும் சமர்பிப்போம்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டான 2016 வளங்களை மட்டும் கொண்டு சிறப்பாக அமைய என் மனமார்ந்த வேண்டுதலுகளுடன் ௬டிய, வாழ்த்துக்கள்..

                வாழ்க நலம்....வளர்க மனித நேயங்கள்...
.