Wednesday, May 11, 2022

இடுக்கண் வருங்கால்...

மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. 

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில்  நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளிலும் சந்திக்கும் போதும் அந்தப் பாடலின் வலி மிகுந்த அர்த்தம் புரியும்.  ஆனால் இந்த தடவை (போன வருடம் நடுவிலிருந்தே) வரும் ஒவ்வொரு உபாதைக்கும் இலவசமாக ஒன்றிரண்டை கூடவே தந்தபடி உடல் நலன்கள் படுத்தும் பாட்டில், அந்தப்பாடலும் ஆனந்தமாக ஹம்மிங் செய்தபடி என்னுடனே வந்து பாடிக் கொண்டிருந்தது. 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என தான் அநியாயமாக தவற விட்ட மார்கழியின்  குளிர் பனியை நினைவில் நிறுத்தியபடி, தை மாதத்தின் பொங்கலில் இருந்து ஆரம்பித்த ஜலதோஷம்  விடாமல் ஜுரத்தில் வந்து நின்றது. அத்துடன் சந்தோஷப்படாமல், கூடவே பல் வலியையும் துணைக்கு அழைத்தபடி மாறி மாறி ஆட்டம் போட்டு அனுபவித்தது. அப்போதுதான் வெளிநாட்டிலிருக்கும் அன்பு மகனின் தீடிர் வரவு. ஜூன் ஜூலையில் வரப்போவதாக சொன்ன( மகனும், மருமகளும் தீடிரென பத்து பதினைந்து நாட்களில் டக்கெட் புக் செய்து வந்து விட்டார்கள். எனக்கோ உடல் நிலை சரியாவேனா என ஒரேடியாக அடம் பிடிக்கிறது. என்னால் சரியானபடி இயல்பாக எல்லா வேலைகளையும் செய்தபடி அவர்களுக்கு வாய்க்கு ருசியாக சமைக்கவும் முடியவில்லை. சமைக்காமல் இருக்கவும் இயலவில்லை. ஜீரம் கண்ட பத்து நாட்களில் இருமலும், சளியுமாக இருந்த அந்த நேரத்தில்  எனக்கு சமைத்த பொருள் வாசனையும் தெரியவில்லை. நாவுக்கும் எவ்வித ருசியில்லை. ஆகா...... ஓ. மைகாட்.... இது தொற்றா என்ற பீதியில், இருந்த கொஞ்ச மன பலமும், உடல் பலமும்,.பயந்து ஓரங்கட்டியது. இருந்தும் விடாமல், எப்படியோ வீட்டு வேலைகளை பல்லைக் கடித்தபடி சமாளித்தபடி செய்து கொண்டிருக்க, வலது கடைவாய்யின் மேலிருக்கும் கடைவாய் பல்வலி மேலண்ணத்தில் ஒரு பெரிய கட்டியை உமிழ்நீர் கூட முழுங்க முடியாமல் உருவாக்கி டாக்டரிடம் அழைத்துச் சென்றது. (எதற்கும் மருவத்துவரிடம் போகாமல் பாட்டி வைத்தியங்கள் செய்து நாட்பட்ட காலப்போக்கிலாகவும் குணப்படுத்தி கொண்டிருந்த என்னை பயங்கர அந்த வலி கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு சென்றது எனக் கூட கூறலாம்.)) 

அவரானால் கண் எலும்பு, கன்னங்களில் எலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறதா என ஆராய, நன்றாக அழுத்திப் பார்த்ததில், வலி அதன் உச்சத்துக்கே போய் விட்டது. அவர் தான் கொடுக்கும் மூன்று வேளை பொழுதுக்கு ஐந்து நாட்களுக்கான ஆன்டி பயாடிக் மாத்திரைகளில் சரியாகி விடுமெனவும் , இருந்தும் இப்படியே வைத்திருக்க கூடாது கடைவாய் பற்களை அகற்ற வேண்டுமெனவும் அச்சுறுத்த எனக்குள் இருக்கும் (சமீபத்தில் கண்டுபிடித்திருக்கும்) இனிப்பின்  அளவை நாங்கள் சொன்னதும், அவரும் பிரமித்து விட்டார்.

(இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் கால் பாதம் மரத்தல், கால் வலி என தொடர்ந்து படுத்திக் கொண்டேயிருக்க, என் மன்னியும், மற்றும் உற்றார்களும், ஏன் நம் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும் சுகர் டெஸ்டுக்கு பரிந்துரைத்தார்கள். அதன்படி எடுத்துப் பார்த்ததில்,  அதன் அளவு எக்கச்சக்கமாக இருக்கவே அன்றிலிருந்துதான் நான் எ.பியில் அனைவருக்கும் வணக்கம் கூறுகையில் "இன்னாள் இனிமை நிறைந்த நன்னாளாக இருக்க வேண்டுமென்ற" அந்த வாசகத்தையே விட்டு விட்டேன். "எவ்வித கலக்கங்களும் இல்லாத நன்னாளாக"என்ற வாசகம் என்னையறியாமல் அன்றிலிருந்து அங்கு தினமும், இடம் பெற்று விட்டது. இப்போதும் பெறுகிறது:) ) (அப்பாடா.... இதற்கும் யார் கேட்கிறார்களோ இல்லையோ ஒரு விளக்கம் தந்தாகி விட்டது.) 

இனிப்பின் அளவை கேட்டு பிரமித்த அந்த மருத்துவர் " இன்னுமா அதற்குரிய மருந்துக்கள் எடுக்கவில்லை" என கடுப்புடன் கேட்டவர், அதன்பின் உடனே இரத்த அழுத்த அளவையும் எடுத்துப் பார்த்து விட்டு எங்களையும் பிரமிப்பில் ஆழ்த்தி விட்டார். அப்புறமென்ன.... அவர் முகத்தில் நிறைய கடுப்புடன் முதலில் பல் உபத்திரவதிற்கு மட்டும் மருந்து மாத்திரைகளை எழுதி தர, அவரிடமிருந்து அனேக வலிகளுடன் விடைபெற்றோம். 

அந்த மாத்திரைகள் எனக்கு சில ஒவ்வாமையை தந்தோடு, ஒரு வாரத்தில் பின் விளைவாக பைல்ஸில் கொண்டு விட்டது. அப்புறம் மறுபடியும் வேறொரு வலிகளுடன் கூடிய அவஸ்த்தைதான்....மறுபடி நான் ஆயுர்வேதத்திற்கு வழக்கப்படி மாறினேன். (அதற்கான  மருந்துகளும் அவ்வப்போது இந்த அவஸ்தைகளுக்கு ஏற்கனவே பல முறை எடுத்து பழக்கம்தான்..... ) அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் அனைவரும், ஊரிலிருந்து வந்த மகன் உட்பட மைசூர் பிரயாணத்திற்கு முன்பே கார் புக் செய்து கிளம்பவும், எனக்கு இந்த பயணத்தில் மைசூர் போகிற வழியில் ஸ்ரீ ரங்கபட்டிணா சென்று ஸ்ரீ அரங்கநாதனை தரிசிக்க ஆவல் எனச் சொன்னேன்." சரி.. அதற்குள் உனக்கு உடம்பு குணமாகி விட்டால் கிளம்பலாம்" என்று அவர்கள் சொல்லவும் வலிகளோடு நாட்களை அவனை தரிசிக்கும் ஆவலில், ஆசையில் கடத்தியும், ரங்கநாதன் என்னை அவனைப் போலவே அனந்தசயனமாக்கி அழகு பார்த்ததோடு சரி.... என்னை கிஞ்சித்தும் நடமாடி அசைய விடாமல் வேறு "அவன் "ரசிக்க ஆரம்பித்து விட்டான். வேறுவழி...... என் மகள் எனக்கு துணையிருக்க அவர்கள் அனைவரும் அரங்கனை தரிசிக்க கிளம்பிச் சென்றார்கள். அரங்கனை தரிசித்து விட்டு அப்படியே மைசூர் பயணத்திற்கும் சென்று வந்தார்கள். அதன் பின் வந்த நாட்களில்தான்  உடல் நிலைகள் நடுவே நானும் அவ்வப்போது அனைவரின் பதிவுகளுக்கும், எ.பிக்கும் வந்து "இடுக்கண் வருங்கால்...." என்ற வரிக்கேற்ப உலா வந்தேன். (அப்பாடா...... இப்பவாவது ஒரு வழியாக தலைப்பிற்கு ஏற்ற வரிகளுக்கு கிட்டத்தில் வந்து விட்டேன். :)) 

அதன் பின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக் கொடி காட்டி என்னுடன் சமாதானபடுத்திக் கொண்டதும், மகனுடனும், குடும்பத்துடனும் சில பயணங்கள்  அவசரமாக   (அதன் பிறகு மகன் தன் ஊருக்கு திரும்பி விடுவாரே) சென்றோம். அதைப்பற்றி அடுத்தப்  பதிவில் கூறுகிறேன். எப்படியோ நானும் என் அறுவை பதிவுக்கு இப்படியாகிலும் ஒரு வழி அமைக்க வேண்டுமே?

சரி... .அந்த இரண்டாவது தலைப்பிற்கு வருவோமா? இப்பவும்  ஒரு வாரமாக எனக்கு என்ன பிரச்சனையென்றால், அளவில்லா சுகருக்கு மருத்துவம் பெற ஒரு அலோபதி மருத்துவரிடம் சென்றால், அவர் மறுபடியும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து அதிக இரத்த அழுத்தத்திற்கு முதலில் பத்து நாளைக்கு ஒரு மருந்தும், கால்வலிக்கு மருந்தும் தந்திருக்கிறார். அதுவே எனக்கு ஒவ்வாமை தராமல் இருக்க வேண்டும். மறுபடி அடுத்த வாரம் இனிப்பை பரிசோதனை செய்து அதற்கான மருந்துகள் தந்து அது எனக்கு ஒத்து வருகிறதா எனப் பார்த்து,...... ஒத்து வராவிட்டால் வேறு மருந்தை பரிந்துரை செய்வாராம்..... ஆண்டவா..... மழை விட்டும்....... தூவானக்கதையாக ஏன் இப்படி?  கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறாய்? எனும் போது என் மனதுள் மறுபடி அந்த பாடல் ஒலிக்கிறது. 

ரொம்ப நாட்களாக (மாதங்களாக) எதுவும் எழுதி யாரையும் அதைப் படிக்கும் அவஸ்தைகளுக்கு உள்ளாக்கவில்லயே  எனத் தோன்றியதின் விளைவாக இந்தப்பதிவு எழுதி விட்டேன். "இத்தனை நாட்கள் கழித்து ஒரு பதிவு எழுதினால் இப்படியா ஒரே ரம்பமாக" என நீங்கள் மனதினுள் லேசாக நினைப்பது கேட்கிறது. ஏதோ இங்கு வந்து என் அன்பான உறவுகளாகிய உங்களிடம் சொன்னால் எனக்கொரு மன ஆறுதல். சந்தோஷம்.  அவ்வளவே... 

ஆகா......பதிவை படித்தவுடன் யாரோ அந்தப் பாடலைப் பாடுவது போல், என் காதிலும் கேட்கிறதே.....ஹா ஹா ஹா .  

அட....அது நீங்கள்தானா?:)))