அப்பாடா.. எப்படியோ வந்து விட்டேன்.. இந்த நம்பிக்கை பாலம் ஒன்றுதானே எப்போதும் எந்த காலத்திலும் நம் பலம்... நெட் பிரச்சனை காரணமாகவும், (தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி... தை பிறந்தவுடன் எனக்கும், இணைய தொடர்பு வழிகளுக்குமான வழிகள் மூடிக்கொள்ள வேண்டுமா? அதுதான் கொடுமை. . ) வேறு சில பல சொந்த காரணங்களுக்காகவும் என் வலையுலக பிரவேசத்திற்கு தடை போட்ட விதியும், அதன் சதியும் சற்றே அசந்து போய் இருந்த இடைப்பட்ட நேரத்தில் புகுந்து எப்படியும் வந்துருவோம்ல.....! (இங்குதான் என் பதிவை படிப்பவர்களின் விதியும், (எனக்காக வந்து படிப்பதைதான் கூறுகிறேன்.) சரியில்லை என்றுதான் நினைக்கிறேன்.:) )
சரி.. எப்படியோ வந்தாச்சு.. ஏதேனும் எழுதி கிழிக்காமல் போவதா? என ஒரு மனம் தேவையில்லாமல் இடிக்க, பதிலுக்கு "உன் தொல்லையில்லாமல் அனைவரையும் நிம்மதியாக இருக்க கொஞ்ச நாட்கள் சும்மாவேனும் இரேன்" என இன்னொரு மனம் (நமக்குத்தான் இந்த இரண்டு மனங்களை நாம் கேட்காமலேயே இறைவன் தந்திருக்கின்றானே ....) கிண்டலடித்து சந்தோஷம் அடைந்தது.
இதை கேட்டதும் எதாவது இரண்டு வரிகளை எழுதியேத்தான் ஆக வேண்டுமென கை விரல்கள் சும்மாயிராமல் பிடிவாதம் பிடிக்க, சரி... " கடன் வாங்கி கழித்தல்" முறையிலாவது வந்து விடலாமென முயன்றேன். (அதாவது என்னைத் தவிர்த்து கைபேசிக்கு மொபைல் டேட்டா வைத்திருக்கும் என் குழந்தைகளிடம் நெட் கடன் வாங்குவதன் மூலம்.. ) ஆனால், அதுவும் ஏனோ இத்தனை நாட்களாக சரியாக வரவில்லை. ( இந்த கடன் வாங்கி களித்தல் என்பது எனக்கு மட்டுந்தான் ராசியில்லை போலும்.....! என மன சமாதானமும் என்னால் அடைய முடியவில்லை. ஆனால், எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்படும் பணப் பற்றாக்குறையை சரி செய்ய நிறையவே பிறரிடம் கடன் வாங்கி உடனடியாக அதை கழிக்க மறந்தவர்களாய் தினமும் மனம் போனபடி களித்திருக்கிறார்கள்... களித்து கொண்டுமிருக்கிறார்கள்.....:) அதுவும் உண்மையிலேயே அவரவர்கள் யோகங்களை பொறுத்ததுதான் அமையும் போலும்... :) )
எப்போதும் எங்கள் வீட்டில், Wi-Fi வசதி தடையற இருந்ததினால், என்னுடைய கைபேசியில் இதுவரை வேறு எந்த பிற வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது ஒரு சூழ்நிலைக்காக ஒரு சிறிய இடமாற்றம். இடமாற்றத்தில், ஏகமாக வந்து குவிந்த வேலைகள் வேறு. ஆனால் இங்கும் எப்போதும் தடையற இருக்கும் இணைய தொடர்பு கொஞ்சமும் தாட்சண்யமின்றி, காலை வாரி விட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் என்னால் முன்பு மாதிரி எல்லோரின் வலைத்தளங்களுக்கு சரளமாக வர இயலவில்லை...ஆனாலும், இப்போது எனக்கு வலைத்தளத்திற்கு வந்து உங்கள் அனைவரின் பதிவுகளை பார்த்து மகிழ்ந்து, கருத்துக்கள் இடும் அடக்க முடியாத அபரிமிதமான ஆவலில், என் கைப்பேசிக்கும் சிறிது நெட் இணைப்பு தந்து வருகை தந்துள்ளேன். இதிலும் மிக தாமதமாகத்தான் எல்லா இணைய தொடர்புகள் வருகின்றன. இருந்தாலும், பழையபடி முன்பிருந்த இணைய தொடர்பு எளிதாக கிடைக்கும் வரை அவ்வப்போது இயன்ற வரையில் வரலாம் இல்லையா? இப்போது இந்த நெட் வகைகள் எவ்வளவோ வந்து விட்டது. எதை. எப்படி எடுப்பது என்பதில்தான் ஏகமான குழப்பங்கள்.. தாமதங்கள்.. தடுமாற்றங்கள்.. எப்படியோ நட்புறவுகள் அனைவருடனும் இன்று மனம் விட்டு பேச வைத்த இந்த மொபைல் டேட்டாவுக்கும் நன்றி. எப்போதும் என்னை மறக்காத அன்புள்ள சகோதர சகோதரிகளான உங்களனைவருக்கும் என் நன்றி.
பின்பு சும்மாவேனும் வந்து விட்டு போனால். நன்றாக இருக்காது என்பதினால், நான் படித்த சும்மா பதிவு ஒன்றுறையும் பகிர்ந்துள்ளேன். "நாங்களும் சும்மாயிருக்கிற நேரத்தில் இதை படித்துள்ளோம்.. எதற்கு இப்படி சும்மா.. சும்மாவென்று எங்களை சும்மா தொந்தரவு செய்கிறீர்கள்" என கேட்காது சும்மா இதையும் இன்னொரு தடவை படித்து விட்டோம் என ரசிக்கும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான. 🙏.
இதோ அந்த ப (பி) டித்த பதிவு.....
**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,
அது சரி *சும்மா* என்றால் என்ன?
அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*.
பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*
*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.
1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*
2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*
3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*
4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*
5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*
6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*
7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*
8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*
9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*
10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*
11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*
12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*
13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*
14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*
15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*
நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை
*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றன,
ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.
இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..
எதற்கும் *சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள.. நன்றி...
இந்த பதிவை படித்து விட்டீர்களா? எப்படியோ என் இணைய பிரச்சனை நடுவிலும் ஒரு பதிவை தேற்றி வந்து விட்டேன். கடவுளுக்கு நன்றி. பதிவைப் படித்து எப்படி உள்ளதென கூறும் உங்கள் அனைவரின் கருத்துரைகளுக்கும் நன்றி. 🙏..