Sunday, January 23, 2022

முரண்பாடுகள் .

எப்போதும் இந்த சண்டைதானா ....? வர வர இதற்கு ஒரு முடிவு காணவே இயலவில்லையே.. ?" காலையில் எழுந்ததுமே மனம் புழுங்கியபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் தேன்மொழி.

கண்ணாடியில் தன் முகம்  பார்த்துக் கொண்டிருந்த முத்தரசனின் மனமும் இதே யோசனையுடன் கூடிய  வேதனையில்தான் இருந்தது. 

"அழகாய் அதிலும் அருமையாய்  இருந்த அந்த இளமை காலம் இனி வரவே வராதோ...?"  என ஒரு நொடி தோன்றியதும் , கண்ணாடியில் தன் முகம் பார்க்கப் பிடிக்காமல், மனது வெறுப்பில் சுடு தணலில் நின்ற மாதிரி சுணங்கி கொண்டது. 

"என்ன பேசாமல் காலையிலிருந்து இப்படியே கண்ணாடியை பார்த்தபடி இருந்தால்,  பொழுதுக்கென்று சாப்பிடும் வயிற்று பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா?சமைத்து வைத்ததெல்லாம் ஆறி அவலாக வேறு போகிறது...." முணுமுணுப்பது போல் சொன்னாலும், தேன்மொழியின்  பேச்சு  மாறி சற்றே கோபக் கூக்குரலாய் கேட்டது முத்தரசனின் காதுகளில். 

"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? தினசரி நானுந்தான் நாள் தவறாது உழைக்கிறேன். நம் உடம்பு  சிறிதளவாவது பலமாக இருக்க உன் வாயையும் நீ சிறிது கட்டிக் கொள்ள வேண்டும்...! காலையிலேயே இப்படி நாவுக்கு ருசிக்க செய்ததை சாப்பிடுவதா? அது மட்டுமின்றி பிறகு வேண்டுமென்றே என்னையும், வசை பாடும் வார்த்தைகளால் தோண்டித் துருவி ஆயிரம் ரணமாக்கி, நீயும் உன்னை வீணில் காயப்படுத்தி கொள்கிறாய்.... பிறகு  எதுவுமே அடிக்கடி முடியவில்லையே என்ற புலம்பல் வேறு..! " கொஞ்சம் கோபம் வரப்பார்த்தது முத்தரசனின் வார்த்தைகளில். 

" ஆமாம்... என்னவோ... உன்னைத்தான் நான் எப்போதும் குறை சொல்வதாய்  நீயாக கற்பனைச் செய்து கொள்கிறாய்...! எனக்கென்று வரும் என் வேதனைகளை நான் வேறு யாரிடம் புலம்பி தீர்த்துக் கொள்வதாம்....? " தேன்மொழியின் வார்த்தைகளில் சற்று வேகம் தெறித்ததும், முத்தரசன் வேறு வழியின்றி அடங்கிப் போக ஆரம்பித்தான். 

பதிலுக்குப் பேசப்பேச இப்போதெல்லாம் அது வீண் சண்டையில்தான் முடிகிறது. இறுதியில் வேதனையும் வருத்தமுந்தான் முத்தரசனுக்கு பரிசாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

  "சரி.. சரி நம்மிருவருக்குள் இப்போதே சண்டை வேண்டாம். இப்போதைக்கு உன்  வாயாற வேண்டியதை  திருப்தியாக  நீ உண்டு கொள். என்னை மட்டும் தொந்தரவு செய்யாதே...! "

" எப்படி நீயும் என் அருகில் இருக்கும் போது உன்னை மட்டும் விட்டு, விட்டு நான் எப்படி எனக்கு வேண்டியதை சாப்பிடவாம்....? அதுதான் எனக்கும் உனக்கும் கட்டிப் போட்ட வாழ்நாள் பந்தமென்ற ஒன்று இருக்கிறதே...! என்றாள் கடுப்பான தேன்மொழி. 

" அதை நினைத்துத்தான் எனக்கும்  எப்போதும் சங்கடமாக உள்ளது. அன்பான உறவாகவும் இருக்க முடியவில்லை. சட்டென உதறி விட்டும் போகவும்  முடியவில்லை. " அவனின் பதிலாக வார்த்தைகளின் முணுமுணுப்பை கேட்டதும், 

"என்ன சொல்கிறாய் ? சரியாக கேட்கவில்லை. ஏன் இப்படி பல்லை கடித்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறாய்..? சொல்வதை சத்தமாகத்தான் சொல்லேன். ..! " என  தேன் மொழி புலுபுலுவென பிடித்துக் கொண்டாள். 

" ஒன்றுமில்லை... ஏதோ என் மனக்குறையை சொன்னேன்... சரி வா.. இருப்பதை, வாய்க்கு ருசிப்பதை சாப்பிடலாம். .. ! என்றபடி, கண்ணாடியை விட்டு நகர முற்பட்டான் . 

"ஆமாம்... இந்தக் மனக்குறைவுக்கொன்றும் தினசரி குறைவில்லை." முகம் வளைத்து சுற்றி முணங்கி கொண்டாள் தேன்மொழி. 

இரவு. ... வீட்டில் அனைவரும் படுக்கையை விரித்து துயல துவங்கி விட்டனர். அமைதியான  அந்த பொழுதில், தேன்மொழி அவன்  உள்ளத்தின் வேதனை முனகல் கண்டு மறுபடி ஆரம்பித்தாள்.  "என்னவாயிற்று? ஏன் இப்படி அமைதியாக தூங்காமல், என்னையும் படுத்துகிறாய் ?" 

"ஒன்றுமில்லை..  காலை, மதிய உணவுகள் கொஞ்சம் ஒத்துக்கல்லை.." 

"ஏன் நன்றாய்தானே இருந்தது. அதில் என்ன பிரச்சனை உனக்கு....? என் நாவுக்கு எல்லாமே சுவையாகத்தான் இருந்தது... எனக்காக எதையும் விட்டுத் தந்துப் போகும் சுபாவம் உனக்கு இப்போதெல்லாம் வருவதேயில்லை..." என்றவள் தன் மனதில் அதன் ருசியை நினைத்தபடி அதில் திளைத்தாள்.  

"என்னையும் சாப்பிட வேண்டுமென்று தொந்தரவு செய்கிறாய்.... உன் ருசி வேறு..... உன் ரசனை வேறு.... உன் ஆரோக்கியமும் வேறு.... உன்னளவுக்கு என்னால் ஒத்துப் போக முடியுமா . என்பதை யோசிக்கவே மாட்டேன் என்கிறாய்...!" என்றான் சிறிது வலி தந்த கடுகடுப்புடன். 

"சரி... சரி.. பேசிப் பேசி உள்ளே அமைதியாய் தூங்கும் நம் குழந்தை மெளனமொழியை எழுப்பி விடாதே.  .. உன்னால் எனக்கும் அவளுக்கும்  இப்போதெல்லாம் தினமும் ஏதோவொரு  பிரச்சனை.... அவள் சின்னவள்தானே என்ற அலட்சியம் உனக்கு என்றுமே அதிகம்.... பேசாமல் வலிகளை பொறுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்...!! நாளைக் காலையில் உன் பிரச்சனை எல்லாம்  சரியாகி விடும்..... " என்று உணவின் ருசியோடு ஒன்றியிருந்த தன் நினைவுகளை  கெடுத்து விட்டானே  என்ற கோபம் தலைக்கேற கடுகடுத்தாள் அவள். 

" ஏன் இப்படி கோபப்படுகிறாய்.. ? உனக்கு கொஞ்சமும் ஆறுதலாக பேசத் தெரியாதா? நீ இப்படி இப்போதெல்லாம், தினமும் வெறுப்போடு  பேசியே என் நிம்மதி போய் விட்டது. நம் இளமை கால  ஆரம்பத்தில், நான் பிறரிடம் பேசும் போதெல்லாம்  அடக்கவொடுக்கமாய் என் பின்னால் நின்றபடி அவரவருக்கு தக்கபடி பதில் சொல்வாய்....! அப்போது எனக்குப் பெருமையாயிருக்கும்....ஆனால், வரவர உன் பேச்சுகளில், என் உறவையே விரும்பாதவள் போல் அவ்வப்போது என்னையே ஒதுக்குகிறாய்...!  நான் என்ன சொன்னாலும், என் செயல்களில் ஏதோவோரு குற்றம் காணுகிறாய்..   காரணம்...! இப்போது கொஞ்ச நாட்களாக நான் உன் கண்களுக்கு  முன்பு இருந்ததை விட  அழகற்றவனாகி விட்டேன். இல்லையா..? அதனால்தான் இப்படி.. என்னை அவமதிக்கிறாய்.. இல்லையா... " படபடவென்று சொன்ன அவன் வார்த்தை அழுத்தங்களில், அவன் மனவலி, உடல் வலி இன்னமும் அதிகமானது அவனுக்கு தெரிந்தது. 

" இதற்குத்தான் எவ்வளவு  அழகாக இருந்தாலும், ஆரோக்கியமாகவும்  இருக்க வேண்டுமென்பது.... புரிகிறதா..? அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில், அப்போது என்னைப்பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் எல்லோரிடமும் வலிய போய் சிரித்து, சிரித்துப் பேசினாய்..... அப்போது எனக்கு எப்படி வலித்திருக்கும்....?" அவளின் பழைய நினைவை அவன் மீட்டெடுத்து தந்த நினைவலைகளுக்குள் வந்து கோபமாய் சிடுசிடுத்தாள். 

" ஆமாம்.. ஆரோக்கியதிற்கு என்ன குறைச்சல்... உன்னுடன் வந்து வாழ ஆரம்பித்த போது, எனக்கு உன்னை விட ஒரு வயது குறைவு வேறு...!!!! ஆனால், அதற்காக நீயோ, நானோ அன்று குறையேதும் பட்டுக் கொள்ளவில்லை. அழகான திடமான ஆரோக்கியத்துடன்தான்  நம் ஆரம்பகால உறவு தொடர்ந்தது.. . அப்போதெல்லாம்  உன்னுடன் நான் ஒற்றுமையாக வாழவில்லையா?  நம் ஒற்றுமையை பார்த்து நம் குடும்ப உறவுகளும், நம்மை சுற்றியுள்ளவர்களும் புகழவில்லையா? எல்லாம் இத்தனை காலம் நல்லபடியாகத்தான் போயிற்று. ...! ஏதோ.. என் போதாத நேரம்....!! இப்போதெல்லாம்  உன்னிடம் அன்பை இழந்து வெறும் வசவுகளை மட்டுந்தான்  கேட்க வேண்டுமென்ற சாபங்கள் பெற்று வந்து விட்டேன்  போலும்.....!!!!"அவன் தனக்கும் கோபம் எப்போதேனும் இப்படி வருமென நிரூபித்தான்.

" சரி... இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்..? உனக்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லையென்றால், அன்றைக்கு நம் உறவுகள்  சொல்லியபடி,  உன் விருப்பப்படி பிரிந்து என்னை விட்டு வாழ வகை செய்து கொள்... அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை...." அவள் சட்டென்று சற்று விட்டேத்தியாக கூறியதும் அவன் ஒரு நிமிடம் தன்  வலி மறந்து அதிர்ந்துப் போனான். 

" என்ன இப்படி பட்டென்று  சொல்லி விட்டாய்.... .? இதுதான் இத்தனை நாள் நாம் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாது சேர்ந்து வாழ்ந்தற்கு அடையாளமா.. .? அதை நினைவில் கொண்டு நீ இத்தனை நாள், வாழ்க்கையில், உன் கோபங்களுக்கிடையே  எத்தனையோ தடவைகள் மரியாதை குறைவாக என்னை அதட்டி பேசிய  போதெல்லாம் கூட நான் இப்படி வருத்தப்பட்டதில்லையே. .. இன்று என்னை கொஞ்சமும் அன்பின்றி, உன் விருப்பப்படி பிரிந்து போவதானால் போ.. என்கிறாயே....நான் விரும்பி வேண்டும் விருப்பமா இது..? " அவன் குரல் உடைந்து அழாத குரலில் குமுறினான். 

" பின்னே என்ன செய்வதாம் ? எப்படியும் ஆயுசு பரியந்தம் நாம் இணையாக சேர்ந்து வாழப் போவதில்லை....இதுவரை நாம், நீ சொல்கிறபடி, ஒற்றுமையுடனும், பிறர் கண்டு பொறாமைபடும்படிக்கும் நல்லபடியாக வாழ்ந்தாகி விட்டோம். எனக்கு மட்டும் உன்னைப் பிரிய ஆசையா? இல்லை, நீ இல்லாமல் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்தாயா.... ? நானும் நிலை குலைந்துதான் போவேன்.. நீயும் முன்னைப் போலில்லாமல், என்னையும், நான் சங்கடமில்லாமல் உண்டு உடுப்பதையும் எப்போதும் குறை கூறிக் கொண்டேயிருக்கிறாய்.... நான் பிறப்பிலிருந்தே இறைவன் எனக்களித்த என் கடமையைத்தான் செய்கிறேன்.  உனக்கு என்னுடன் இருந்து ஒத்துழைத்து வாழ முடியாவிடில், அல்லது, விருப்பமில்லாவிட்டால், இல்லை, உன் வலிகளும், உன் ஆசைகளுந்தான்  பெரிதாக தோன்றும் போது, நம் குடும்ப உறவுகள் சொல்படி கேட்டு அவர்களின்  குடும்ப மருத்துவரை சென்று பார்த்து நாம்  நிரந்தரமாக பிரிவதற்கு ஏற்பாடு செய்து கொள்... என்றேன்...  நான் கூறுவது சரியா, தவறா. . என நீயே இன்று இரவு முழுவதும் விழித்திருந்து யோசித்துப் பார்த்துக் கொள்.." என்று மடமடவென முடிவெடுத்தது போல  பேசிய தேன்மொழி" எனக்கு தூக்கம் வருகிறது.. . .." என்றபடி மெளனமானாள். 

ஒரு நிமிடம் தெறிக்கும் வலிகளையும் பொருட்படுத்தாது திகைத்து நின்றான் முத்தரசன். 

" இவள் பேசுவதும் நியாந்தானே.....!!  உலகில்  வாழும் அனைவரைப் போலவும் தனியாகத்தான் பிறந்தோம்.... தனியாகத்தான் பிரியப் போகிறோம்....உறவுகள் என்றும் நிரந்தரமல்ல.. ..!!! இடையில் வரும் உறவுகளால் பிரிவையும், பாசத்தையும் அதையும் தங்கள் சுயநலங்களுக்காக காட்ட முடியுமே தவிர்த்து நம் தலைவிதியை அவர்களால்  மாற்ற முடியுமோ...? " என்ற வேதாந்த தத்துவத்தில் ஆழ்ந்த முத்தரசன் "கோபத்துடன் பேசினாலும் அவள் பேச்சில் வெளிப்பட்ட உண்மையை உணர்ந்தவனாய், "இனி தன் வலிகளை பெரிதுபடுத்தி, இல்லை, தன் உயிரே கூட போனாலும், அவள் விருப்பத்திற்கு தடைகளை போடக் கூடாதென்ற" உறுதியை எடுத்தபடி, நாளைப் பொழுதில் விடியும் நல்லதொரு விடியலை எதிர்பார்த்து வேறு வழியில்லாமல் வலியுடன் தூங்க முயற்சித்தான். 

வணக்கம் சகோதர சகோதரிகளே. ..

கதையை புரிந்து கொள்ள முடிந்ததோ ..? ஒன்றுமில்லை....!! இப்படி வலிகளுடன் வேதாந்தமும், தத்துவங்களும் சேர்ந்து  இணைந்து நம் மனதில் தோன்றி விட்டால், நம்மால் பொறுக்க  முடியாத வலிகளைக் கூட ஒரளவு பொறுத்தபடி சமாளித்து விடலாம் என்பது என்னை ஆண்டு வரும்  தற்போதைய  காலமாகிய இந்த "பல்லவர்களின் ஆட்சியில்" நான் பெறும்/பெற்று வரும் கீதோபதேசங்கள். அதன்படி  தூங்காத இரவுகளில்,  என் கற்பனை குதிரையுடன் கடிவாளம் ஏதுமின்றி பயணித்ததில் சேர்ந்து  எழுந்த கதை   இவை. ..  .:))  புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். புரிந்து படித்ததற்கு சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றிகள். 🙏. 

இது போன வருடமே என் ப(ல்)ல தொந்தரவுகளின் காரணத்தால் பிறந்த கதை. இந்த கதையை படிக்கும் பொறுமை அப்போது அனைவருக்கும் இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகள் இருந்து கொண்டேதான் இருந்தன. சரி.. நாமும் இதைப் படிக்கச் சொல்லி தொந்தரவு தர வேண்டாமென இதை தூக்கி கிடப்பில் போட்டு விட்டேன். இப்போது மறுபடியும் பத்து நாட்களாக என்னை மிகவும் இந்த கதையின் விஷயங்கள் தொந்தரவிப்பதால், எங்கோ மறைவில்  கிடந்த  இந்தக்கதையை  அது நினைக்க வைத்து விட்டது. :)))) 

இடுக்கண் வருங்கால் நகைத்துதானே ஆக வேண்டும். அதுவும் நட்புகளோடு சொல்லி மனம் விட்டு சிரிக்கும் போது  வலி தரும் வேதனைகள் குறைந்து விடும் அல்லவா...!! ஆனால் இப்போதும் உங்கள் அனைவருக்கும் தொந்தரவு தருவதற்கு பொறுத்துக் கொள்ளவும். அதெல்லாம் ஒன்றுமில்லையென ஆர்வத்துடன் படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள் . 🙏. 

Wednesday, January 19, 2022

காலம் மாறிப் போச்சு.

 மறுபடியும் பிரவேசம். 

இது எப்போதோ எழுதப் பெற்று தனக்கு (கவிதை மாதிரி உள்ள அதற்கு... ) வர வேண்டிய ஆதரவு மதிப்பெண்களை இழந்த கவிதை. இப்போதும் பெரும்பான்மையாக இல்லாவிடினும், சிறிதளவாவது கிடைக்கும் (அதுதான் ஆதரவு....! ) என்ற நம்பிக்கையில், ஆசை மலர்களை மனதுக்குள் சூடியபடி கிளை பரப்பி மறுபடி துளிர்தெழுந்துள்ளது.  

சகோதரர் ஸ்ரீராம் ரெற்றோ கவிதை என எ.பியில் பகிர்ந்துள்ளதை பார்த்ததும், "நானும் பழையனவைதானே...!! என்னையும் மறு முறை ஒரு தடவை தூசு தட்டி வெளியிட்டால்தான் என்ன..? " என என்னிடம் அது முறையிட அதன் வார்த்தையை அரைமனதாக அங்கீகரித்து பதிவுக்குள்அனுப்பலாமா வேண்டாமா என தயங்கியபடி யோசித்தேன்.

 "இது அந்த மாதிரியா என்பதெல்லாம் எனக்கு தெரியாதே. .!!!! அது எங்கே...   நீ எங்கே.....!!!! நீயாக இப்படியொன்றை கற்பனை செய்து கொண்டால் எப்படி? மேலும், உன்னை நான்  அன்று உருவாக்கிய வரிகளில், வார்த்தைகளில் குற்றங்கள் குறைகள் இருக்கலாமே. .!!! " என முதலில் பிகு செய்தபடி  ரொம்பவே தயங்கினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....! என்பது யாரும் அறியாததல்லவே.. ." என்ற அதன் ஆழமான  மறு பதிலில் அதன் பின் எழுந்த என் மறுபேச்சுகள் பயனின்றி போகவும் தைரியமாக அதுவே பதிவுக்குள் வந்தமர்ந்து விட்டது.:)))) 

இதோ அந்தக் கவிதை.. .

காலம் மாறிப் போச்சு... 

கடல் போன்ற வீடு...! அதில்

கணக்கற்ற நிறைய மனிதர்கள்...!

சுற்றங்களும், சுகங்களுமாக,

சுமை தாங்கும், உறவுகள்..!


அன்பும் , அரவணைப்புமாக ,

அரண் போன்ற மனங்கள்...!

தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,

தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்...!


பாட்டும், கதையுமாக, பேத்திகளை,

பாசத்துடன் பார்த்துப் பார்த்து 

பாரபட்சங்கள் ஏதுமின்றி, 

பக்குவமாக்கும் ,பாட்டிகள்...!


விடியலில் உதிக்கும் விறகடுப்பு,

வீதி அசந்து உறங்கும் வரை,

அனல் கக்கும் அதிசயம்,

அண்டை அசலெங்கும் தொடரும்..!!!! 


உணவுகளுக்கும், பஞ்சமில்லை...!!

உடைகளுக்கும். வஞ்சமில்லை....!!

உறவுகளின், உணர்வுகளும்,

உரிமைகளும் , என்றுமே, 

அங்கு உடைந்ததில்லை....!!


நான்.. நீ...என்ற பேதமில்லை….!அங்கு

நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை...!

மதிப்பும் , மரியாதையும் 

குறைந்ததில்லை...!!

மற்ற சண்டைகளும் என்றும் 

வந்ததில்லை..!!.

       

ஆனால் , இது அந்தக் காலம்....!

இன்று அந்த கடல்கள், கணிசமாக வற்றி,

கரையோரங்களும்,கவனிப்பின்றி,

கடுகளவாய் சிறுத்து விட்டது...!!


அடுப்பும், மரித்து விட்டது...!!மக்களின்,

உடுப்பும், மாறி விட்டது...!! மனிதரின்

சுயநலமெனும் போர்வைக்குள்,

சுற்றங்களின்  சுகங்களும்,

சுமைகளும், சிறிதளவும் சிரமமின்றி,

சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன...!


௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,

௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,

நான்.... நீ... என நாலும் ௯றிக்கொண்டு,

நான்காய் பிரிந்ததில், நன்றாகவிருந்த

நாகரீகங்கள் , தடு(தடம்)மாறி விட்டதில்,

நலம் குலைந்த நகர(நரக)மாயிற்று...!!

        

"என் வாழ்விலேயே இப்படி மாறிப் போன

 இந்த காலத்தின் கோலங்கள்..!!

உன் காலத்தில் எப்படி மாறுமோ?.." என்று

புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,

புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,

காதருகே, கால் கடுக்க நின்றபடி

காதுகளில் ஓதியபடிதான்  உள்ளது..!!! 


"விபரறிந்து பாட்டி... நீ..! அன்று

விசனத்துடன் சொன்ன வாக்கு ... .! 

விந்தை நிறைந்த இவ்வுலகில்

விரைவாய் அவ்வாறே மாறிப் போனதில்

வியப்பொன்றும் இல்லையம்மா...!!!" 


கடல் கடந்து சென்று வாழ்வதுதான், 

தன் கருமம் எனக்௯றி, 

காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை....!!


காசிருந்தும், கார்கள் பலவிருந்தும், 

எங்கள் கால் பதிக்க அங்கு  இடமில்லை, 

என்றான் மற்றொருவன்....!!


இல்லத்தில் இணைந்திருந்து 

இன்பமாக வாழ பழகியிரு ....! என்

இல்லத்தில் பிறகு உங்களை 

இணைத்துக் கொள்கிறேன் 

என்றான் ஒரு பிள்ளை....!! 


சிறிய பிரச்சனை எனக்கு...!! 

அது தீர்ந்து முடிந்ததும்

சில காலத்துக்குள் நீங்கள் 

என்னுடன்தான் …!! என்றான் 

இன்னொருவன்....!! 


இயந்திரமயமான இக்காலத்தில்,

இளமை விரட்டிய, எங்களுக்கு , 

இந்த இல்லம் என்ற ஒன்றிடம்

இல்லாமலிருந்தால், இன்னும் பல

இன்னல்களுடன் இணைந்திருப்போம்....!            


நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,

நான்கும் நாலுவிதமாய் போனதில் , 

இன்று முகமறியாத ,

உறவுகளுடன் வாழ்க்கையும்,

முதுமையுடன் அன்பாய்

முறியாமல் தொடர்கின்றது....!!


உன் சோகத்தை சுமக்க , பாட்டி...!அன்று

உன் பேத்தி நானிருந்தேன்....!!

என் வார்த்தை உரைக்க வகையாய், 

என் பேத்தி  இன்று

என் அருகிலேயே இல்லையே.....!!!! 


இந்த இல்லத்தின் உறவுகளுக்கும் 

இன்று இதே நிலமைகள்தான்...!!

இந்நிலை எந்நாளில் மாறுமோ? அந்த

இறைவனுக்கே வெளிச்சம்...!!! 


கடல் போன்ற வீடு....!!அதன்

காலங்கள் மாறிப் போச்சு...!!என, நீ. .

கடவுளிடம் புலம்புவது இப்போதும் என்

காதுகளில் ஒலிக்கிறது … பாட்டி!!!!  ஆம்!

காலம் மாறித்தான் போச்சு...! அது 

கணிசமாக மரித்தும் போச்சு....!!!!

***********************************************************************                       

கவிதை நன்றாக இருந்தால், (இல்லாவிட்டாலும்) இதற்கு ஆதரவு தர வேண்டுமாய் சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இனி வரும் காலங்களும் ஏதாவது ஒரு வகையில் மாறிப் போக வாய்ப்பு உள்ளதால், இது மூன்றாம் முறையாக இங்கு வருவதற்கு சற்று அதிகமாகவே வெட்கப்படுமாம்:))))  எனவே படித்துப் பார்ப்பவர்களுக்கும், ஆதரவாக விமர்சிப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Wednesday, January 12, 2022

இட்லி புராணம்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  

உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டாலும், நாம் உண்ணும் உணவுகள், நாட்டுக்கு நாடு, மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபட்டிருந்தாலும், நம்மை பொருத்த வரைக்கும் எது உடம்புக்கு கெடுதல் செய்யாதது எனப் பார்த்தால் அது இந்த இட்லிதான். நம் வீட்டில் மட்டுமல்ல.  அனைவரின் வீடுகளிலும், சின்ன குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், எளிதில் ஜீரணமாகும் உணவு. ஆனால்  இந்த உணவு நாகரீகம் தொட்டு இப்போது அனைவருக்கும் பிடிக்காத உணவாகப் போய் விட்டது. 


அந்த காலத்தில் பொதுவாக "இன்று உங்கள் வீட்டில் காலை என்ன உணவு"?  எனக் கேட்டால் இதன் பெயரைத்தான் சொல்வார்கள். பிறகு நாகரீகம் பரவ பரவ இட்லி தோசையானது. அதன் பின் சில வீடுகளில், "இட்லியா? பயங்கர போர்.. தோசை அல்லது, வேறு ஏதாவது சிற்றுண்டி செய்தால்தான் எங்கள் வீட்டில் பிடிக்கிறது. தினமும் இட்லியென்றால், அதாலேயே நான் அடி வாங்க வேண்டியதுதான்"  என அலுத்துக் கொள்ளுவார்கள். 



இந்தப் படம் மட்டும் பதிவுக்காக கூகுளில் எடுத்தது.  
நன்றி கூகுள். 

இட்லி பாத்திரத்தில் துணிகட்டி இட்லி வார்த்தால் அது எப்போதுமே நல்ல ருசியாக இருக்கும். அதுவும் கல்லுரலில் அரிசியையும் அதற்கேற்றவாறு  (அரிசி நாலுக்கு பருப்பு ஒன்று என்ற கணக்கில்)  உ. பருப்பையும் அரைத்தெடுத்து தேவையான உப்பு போட்டு கலந்து வைத்து, மறு நாள் காலை மாவு பொங்கி வந்ததும், விறகடுப்பில் அதற்கென்றிருக்கும் இட்லிி கொப்பரையில்/வாணலியில் துணி கட்டிய இட்லி தட்டுக்களில் வார்த்த  இட்லி  வாசனையாகவும், அவ்வளவு  மென்மையானதாகவும், இருக்கும் 

அத்தகைய இட்லி தட்டுகள் வார்க்குமிடத்தில் சிறு சிறு துவாரங்களுடன் இருக்கும். அந்த துவாரத்தில் துணியின் உதவியுடன் நீராவியில் வேகுவதால், இந்த இட்லி நோயாளிகளுக்கு கூட மருந்தாக இருந்து உதவும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கால்வாசி இந்த உணவுதான் அன்றைய காலத்தில் பரிந்துரைக்கப்படும். 

எங்கள் அம்மா காலத்தில் அவருடைய ஒரு விபரமறியாத உறவுச் சிறு பெண் ஒருவர்  தன் திருமணத்திற்கு  ( அந்த காலத்தில் பன்னிரண்டு, பதிமூன்று வயதிற்குள் திருமணமாகி விடுமே...!! ) பின் புகுந்த வீடு சென்றதும். அங்குள்ள நிர்பந்தத்திலும் , சமையலில் அவ்வளவாக  அனுபவமில்லாத காரணத்தாலும்,  இட்லி தட்டுக்களில் துணி கட்டாமல் இட்லி வார்த்து விட்டாராம். சிறிது நேரத்தில் இட்லி வெந்துள்ளதாவென கொப்பரையை திறந்து பார்த்த பின் அவருக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி தட்டுக்களில் ஊற்றிய மாவெல்லாம் காணாமல் போய், கூழாக வடிவெடுத்து இட்லி பாத்திரத்தில் கொதித்து கொண்டிருக்க ... பிறகு என்ன ....!! வழக்கப்படி அவரது தாய்க்கு அந்தப் பெண் மணமாகி சென்ற வீட்டில் அர்ச்சனைகள்... பாவம் அவர்....!! என எங்கள் அம்மா அச்சம்பவத்தை சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். 

அதன் பிறகு காலங்கள் வளர வளர, இந்த இட்லியை துணிகட்டி வார்ப்பது, பிறகு அதை சுத்தப்படுத்துவதுதான் இட்லி என்ற உணவை ரசிக்க வைக்கவில்லையோ என இட்லி வார்க்கும் தட்டில் புதுமைகள் வந்தன.  துவாரங்கள் இல்லாத தட்டுக்களில் சிறிது ந. எண்ணெய் தடவி அப்படியே அதில் மாவை ஊற்றி அடுக்கடுக்காக அடுக்கி ஒரே சமயத்தில் இருபது முப்பது இட்லிகளுக்கும் மேலாக வார்க்கும் தட்டுக்கள் விற்பனைக்கு வந்தது. அது மக்களை ஈர்க்கவே மறுபடி இட்லி அனைவருக்கும் பிடித்தமானதாக உலா வந்தது. 

அப்படியும் இந்த மாதிரி இட்லி தட்டுக்கள் வந்தும், என் குழந்தைகள் காலத்தில் ஒரே மாதிரி அளவுள்ள எவர்சில்வர் கிண்ணங்களிலோ , சின்ன டம்ளார்களிலோ எண்ணெய் தடவி விதவிதமான வடிவங்களில் அவர்களுக்கு இட்லி செய்து தந்திருக்கிறேன். அவர்களும் வழக்கத்துக்கு மாறாக இருக்கக் கண்டு அதை விரும்பி சாப்பிட்டுள்ளனர். 


இது எங்கள் வீட்டில் குழந்தைகளுக்காக வாங்கிய குட்டித் தட்டுகள்.
 
பிறகு நாளாவட்டத்தில்,அந்த இட்லிகளும்  பிற மேல்நாட்டு உணவுகளால், ஒதுக்கப்பட ஆரம்பிக்கவே, குழந்தைகளை கவரும் விதத்தில் சின்னச்சின்ன இட்லி தட்டுக்கள் என பார்க்கவே விதவிதமாக  அளவுகளில் அழகாக இட்லி தட்டுக்கள் வந்தன. வேறு வழியில்லாமல் அவர்களது குழந்தைகளுக்காக மீண்டும் இட்லிகள் தனது பயணத்தை தொடர்ந்தன.  சில உணவகங்களில் கூட இந்த இட்லிகள் பிரசித்தமாகியது.  ( நான் கூட சென்னையிலிருந்து சுற்றிச் சுற்றி இடம் பெயர்ந்து இங்கு வந்த பின் ஒரு தடவை மீண்டும் சென்னை சென்ற போது சாம்பாரில் மூழ்கி பவனி வந்த இந்த குட்டி இட்லிகளை விரும்பி ஒரு தடவை சாப்பிட்டுள்ளேன்.) ஆனாலும் இப்போது, மறுபடியும்  பல நாகரீகமான உணவுகள் மக்களை  ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டதால், குழந்தைகள் கூட எந்த வடிவத்தில் இட்லி என்றாலும் முகஞ்சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.

 ( இந்த இடத்தில் ஒன்று சொல்லப் பிரியப்படுகிறேன்.எங்கள் பிறந்த வீட்டில் தினமும் காலை ஆகாரம் இட்லிதான். சோம்பலில்லாமல் அம்மா, பாட்டி உடம்புக்கு நல்லதென இதை ஒரு கடமையாகவே செய்தார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை தோசை, அடை, உப்புமா வகைகள் என வந்தால் அதிசயந்தான். இப்படியே பிறந்ததிலிருந்து பத்தொன்பது வயது வரை தினமும் இட்லிகளை சாப்பிட்டிருப்பதால், நான் இன்றும் ஒரு இட்லி பிரியை.:))))  ) 


இது அந்த குட்டித் தட்டில் வார்த்து வேக வைக்க தயாரான இட்லிகள்

இதன் வடிவங்கள் எப்படி மாறினாலும் அதன்  சுவை ஒன்றுதானே. !!! 
இதற்கு அம்மியில் அரைத்த தேங்காய், பச்சை  மிளகாய் சட்னி, இல்லை, தக்காளி வெங்காய சட்னிகள், இல்லை கொத்தமல்லி சட்னி. இல்லை இஞ்சி துவையல் என அனைத்தும் பொருத்தமாக இட்லியுடன் இணைந்து அதை நன்றாக சுவைத்து சாப்பிடச் செய்யும்.  ( இந்த நாலுமே இருந்தாலும் தப்பில்லை என்போரும் உண்டு. அவர்கள் இந்த இட்லியை விருப்பமுடன் விரும்புபவர்கள்.) பிறகு சாம்பார்,.. அதுவும், சின்ன வெங்காயம் தக்காளி இவற்றுடன் மணக்கும் சாம்பார் வேண்டுமென்ற கோரிக்கைகள் பல வீடுகளில் உதயமாகி அதுவும் இட்லியுடன் கோலோச்சி வந்தது/வருகிறது.  ஆனால், இத்துடன் இட்லி மிளகாய் பொடி என்ற ஒன்று கண்டிப்பாக இதனுடன் இணைய வேண்டும். ஏனெனில் இது "இட்லி" என்ற அதன் முழுப்பெயரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமையை உடையது. அதனால்  சிலருக்கு மற்றவைகளை சற்று வேண்டாமென ஒதுக்கினாலும் இதை (இ. மி. பொ) முதலிடத்தில் வைத்துக் கொள்ளப் பிடிக்கும்.  

"தப்பு..!  தப்பு!! இது தோசை மி. பொடி. அதன் பெயரை மாற்றி அந்த இட்லி அந்தப் பொடியை தன் பெயருடன் இணைத்து தனதாக்கி கொண்டு விட்டது" என்று தோசை "பொடி வைத்து" சொல்லலாம். ஏன்.. பேச்சோடு சண்டைக்கு, அதன் மேலும் கைகலப்புக்கு கூட வரலாம்... :)))) எது எப்படியோ...!! இந்தப் பொடியுடன் ந. எண்ணையை கலந்து இட்லியை அதில் புரட்டி ஊற வைத்து சாப்பிடுவதே  சாப்பாட்டின் ஒரு கலையென வாதிடுபவர்கள் கண்டிப்பாக உண்டு.
 

இது அன்றைய தினம் இந்த குட்டி இட்லிக்காக அவசரமாக தயார் செய்த இ.மி.பொ. 

முறையே ஒரு கரண்டி இரு கரண்டியென க. ப, உ. பவுடன் "கொஞ்சம் சீக்கிரம்" என படபடக்கும் கடுகுடனும் அவசரமாக ரெடியாகிறது. 


"நான் இல்லாமலா? இட்லி என்ற பெயர் எங்களுடன் இணைவது இருக்கட்டும்....!! அடுத்து நான் இல்லாமல் இதற்கு இ. மி. பொ என்ற முழுப்பெயரும் கிடைத்து விடுமா என்ன?" சற்றே ஆணவச் சி(வ)ரிப்புடன் கேட்கும் மிளகாய்கள். 


"எப்போதுமே முதலில் நான்தான்" என்ற அதே சி(வ)ரிப்புடன் மிக்ஸி என்ற ராட்டினத்தில் ஏறிய மிளகாய். கூடவே அது அழைத்ததும் பாரபட்சம் பார்க்காமல் வெள்ளை மனதுடன் வந்து உடனமர்ந்த உப்பு." 


"இந்த எள் இல்லாவிடில்  என் ருசியை அவ்வளவாக நான் தரமாட்டேன் என்று சொல்லி இ. மி. பொடி சுவை தர மறுத்து விடும்." எனவே அந்த அவசரத்தில் எள்ளை ஊற வைத்து களைந்து அதையும் சேர்த்து விடலாம் என்ற என் நினைப்புடன் அதை நிறைவேற்றியதும், வந்து அதிகாரமாக அமர்ந்திருக்கும் எள். 


எல்லாமுமாக சேர்ந்து தயாராகி  "இட்லிகள் எங்கே. .? " என அதை பார்க்கும் தவிப்பில் இருக்கும் இ. மி. பொடி. 


குட்டி குட்டி இட்லிகளுடன் அதன் துணையாகிய இ. மி. பொடியும் சேர்ந்த களிப்பில் போதுமான எண்ணெய்யும்  கலந்த மினுமினுப்புடன்  பெருமிதமாக நாம் அட்சதை தூவ காத்திருக்கும் காலை உணவு.. 

இனி என்ன..!!! உங்களுக்கும் இந்த இட்லி பிடித்திருந்தால் தாராளமாக எடுத்து சாப்பிடலாம். 

இவ்வருட முதலில் காலை ஆகாரத்திற்கேற்ற இட்லி பதிவை அலசி ஆரம்பித்திருக்கிறேன். பதிவை ரசித்தவர்களுக்கும், ந. எண்ணெய் சேர்ந்த  இட்லி மிளகாய் பொடியுடன் இட்லிகளை எடுத்து பிடித்தோ/பிடிக்காமலோ சாப்பிட்டவர்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். 🙏.

அனைவருக்கும் அட்வான்ஸ் போகிப்பண்டிகை, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.