வணக்கம் வலையுலக நட்புறவுகளே!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தைமகளின் வருகை.....
தங்க மகள் போன்ற தை மகளாம்,
தளிர் நடை பயின்று வந்தாளாம்.
பூமித்தாயின் இன்முகம் காட்டிய
பாசமிகு வரவேற்றலில், குளிர்வூட்டும்
புன்சிரிப்பில், அகம் மலர கண்டாளாம்.
பொங்கும் மங்கலம் இனியென்றும்
எங்கும் எதிலும் தங்குமென பூரித்து
மனமகிழ்வு கொண்டாளாம்.
பசுமை செறிந்த செடி கொடிகளையும்,
பழுத்து நிறைந்த பழவினங்களையும்,
பூத்துக் குலுங்கும் மலர் வகைகளையும்,
பரவசமாக பார்த்ததுமே, இத்தனையும்,
பூமித்தாயாம் எனதன்னை எனக்காக
தந்த சீதனமென பெருமையுடன் நின்றாளாம்.
தாயின் ஏனைய செல்வங்களை,
தனித்தே சென்று சந்தித்துப் பேசி
நலம் நவின்று விட்டு வருவோமென,
துள்ளும் நடையில் சுற்றி வருங்கால்,
பழையன முற்றிலும் களைந்தகற்றி,
புதியன மட்டிலும் புதிதாய் படைத்து, தன்
வரவுக்கு கட்டியமாய் பல வண்ணங்களையும்
வார்த்தெடுத்து வைத்திருப்பதும், கண்டு
மங்களம் நிறைந்த மணமான மஞ்சளையும்,
மதிமுகம் கொண்ட பண்பான பெண்டிரையும்,
கொஞ்சிடும் அழகில் மழழைகள் அனைவரையும்,
விஞ்சிடும் பொருளனைத்தும் ஒருங்கே புதைந்த
வீரத்தமிழையும், அத்தமிழர்தம் மரபும் , கண்டு
புத்தம் புது துகில்களை மாந்தர்களும்
பூரண மன நிறைவோடு தாம் உடுத்தி,
புதுப்பானை நிறைத்த புத்தரிசி பொங்கலையும்,
தித்திக்கும் நல் கரும்பை தோகையுடனே வைத்து,
திகட்டாத நல்லெண்( ண )ணெய் தீபச் சுடர்களோடு,
களிப்புடனே பண்டிகையை கொண்டாடி பின்னர்,
களமிறங்கும் வீர செயலனைத்தும், கண்டு
பொங்கிய மகிழ்வில் மனமது நிறைய,
பொங்கும் மங்கலம் இனியென்றும்,
எங்கும் எதிலும் தங்கி நிற்கட்டுமென
வாயார வாழ்த்திச் சென்றனளாம்.
பொங்கும் மங்கலம் எங்கும் தழைத்திட வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

