Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Thursday, March 8, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 5)

இல்லம் களைக்கட்டி இருந்தது.  இல்லத்தில் படித்துக்கொண்டருந்த மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.குளிக்காமல் அடம் பிடித்துக்கொண்டிருந்த சின்னக் குழந்தைகளை சமாதானபடுத்தி குளிக்க வைத்து ஆடைகளை  அணியச் செய்து  விழாவுக்கு ரெடியாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் பார்வதியும் மற்றொருவரும். கைகள் சரிவர கடமையை செய்து கொண்டிருக்க மனம் தியாகுவையும், ராஜுவையும் சுற்றி வந்தது.

அன்று பார்வதி அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதும் கோகிலாவும் சற்று நெகிழ்ந்து போனாள்."இவ்வளவு பாசத்தை மனசுலே வச்சிகிட்டு , சொல்லாமே ஏன் இப்படி தவிச்சிருக்கே! நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு உன் ஒருத்தியாலேதான் சகஜமா இருக்கிற மாதிரி காமிச்சிட்டிருக்க முடியும் அத்தை " என்றவளாய் அவள் அருகில் வந்து தோள்களை அணைத்துக் கொண்டதும், பார்வதி இன்னமும் நொறுங்கி போனாளன்றே சொல்லவேண்டும். மனதின் பாரத்திற்கு கண்கள்தான் வடிகால் என்றே சொல்ல வேண்டும்..  அன்று அவளிடம் சொல்லி வருத்தப்பட்டதும்,  மனசு லேசானதை உணர்ந்தாள்.வயது காரணமாக தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தள்ளாமையை தவிர்த்து மனசளவில் எதற்கும் தைரியமாயிருக்கும் தான், தியாகுவை பார்த்ததிலிருந்து சற்றே நொறுங்கி தளர்ந்திருப்பதை ஒத்துக்கொண்டாள்.

விழா ஆரம்பிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாலும், விழாவுக்கு கோகிலாவும் வருவதாய் சொன்னதை நினைவு கூர்ந்ததாலும், மனதுக்குள் எழுந்த யோசனைகளை அகற்றிவிட்டு, தனக்களிப்பட்டிருக்கும் அடுத்தடுத்த வேலைகளைமும்மரமாக கவனிக்க ஆரம்பித்தாள் பார்வதி.

குழந்தைகளின்  கலை நிகழ்ச்சிிகள் முடிந்து ,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவித்து,. அனைத்து குழந்தைகளும் இனிப்பு வழங்கி, இல்லத்தை தொடங்குவதற்கு ஆதரவாக இருந்திருந்தவர்கள் ஒரிரு வார்த்தைகள் பேசியபின் , இல்லத்தை ஏற்று நடத்தும் கோகிலாவின்  குடும்ப நண்பருமான இல்லத்தின் நிர்வாகி, வந்திருந்தவர்களை வரவேற்று பேசி இல்லம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்த முன்னேற்றங்களை கூறி இல்லத்தற்காக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி கூறி அதில் பணி புரியும் ஆசிரிய பெருமக்களையும், சிப்பந்திகளையும் பாராட்டி பேசினார். .பார்வதியின் சேவைகளை உயர்த்திப் பேசியவர்," என் குடும்ப நண்பரின் மனைவி கோகிலா, "என் அத்தை இவர், இவருக்காக இவ்வில்லத்தில் ஒரு வேலை கொடுங்கள்! " என்றதையும், அவர் வேலையில் சேர்ந்த நாள் முதற்க்கொண்டு இத்தனை வயதிலும் அவரது அயராத உழைப்பைக்கண்டு தான் வியந்து போனதையும் கூறி, அது மட்டுமல்ல! அவருக்கு மாத ஊதியமாக கொடுக்கும் பணத்தில் அவர் செலவுக்கு போக மிகுதியை சேர்த்து வைத்து இல்லத்திற்கே தானமாக கொடுக்கும் அவர் பண்பையும் குறிப்பிட்டு பேசியதும், கரவொலி எழுந்தது. விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்த கோகிலாவும் பெருமிதத்துடன், எழுந்து வந்து, பாராட்டுகளினால் சற்று சங்கோஜத்துடன் நின்றிருந்த பார்வதியை அணைத்துக்கொண்டாள்.

"பிறகு ஒரு விஷயம்!"  என அவர் மறுபடியும் ஆரம்பித்ததும், அனைவரும் அமைதியாகி அவரை நோக்கவும், "ஒருவாரம் முன்பு ஒருவர் நம் இல்லத்துக்கு வந்து கணிசமாக உதவித்தொகையை தந்ததோடு, நம் இல்லத்திலே ஒரு வேலையும் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தாராள மனது கொண்ட அவர் செய்த உதவியை சொல்லி பிரகடனபடுத்தக் கூடாதென்றுதான்  சொன்னார். ஆனால் என் மனதில் கூற வேண்டுமென்று நினைத்ததால், சொல்லி விட்டேன்.. இவரை பிள்ளையாய் பெற்றெடுத்த அவரின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ? இத்தனை சின்ன வயதில் அவருடைய சேவை உள்ளம் பாராட்டப்பட வேண்டிய  ஒன்று என நான் நினைக்கிறேன்.! அவரும் நம் பார்வதி அம்மா மாதிரி கோகிலாவுக்கு  உறவு என்று சொல்லி,, அவர்தான் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்விடம் அவரை அழைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்த விழைகிறேன். தயவு செய்து அவர் மேடைக்கு வரவும்." என்றதும் கரவொலிக்கிடையே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடைக்கு வந்து வணங்கியவரை கண்டு பார்வதியின் முகத்தில் சிறு சலனம் தென்பட்டது

நீ  செஞ்சது  உனக்கே சரின்னு படறதா? உன் கடமையை செய்யாமல், எனக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தாய் ? என சற்று கோபமாக கேட்ட பார்வதி "இதற்கு நீயும் அவனுக்கு துணையாக இருந்திருக்கிறாய்? அன்று வந்த போது   என்கிட்டே  ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அத்தனையும் மறைக்கனும்னு எப்படி தோணுச்சு உனக்கு? என்று  கோகிலாவை பார்த்தும், சற்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பார்வதி.

"இந்த கேள்வியையே  எத்தனை நேரம் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் பாட்டி? " என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தான் தியாகு.

இல்லத்தில் அவனை மேடையில் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிய பார்வதி விழா முடிந்து தன் இதர வேலைகளும்  நிறைவுற்றதும் கோகிலாவுடன் கூட சரிவர பேசாமல் வீடு வந்தடைந்தாள். பேரனை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னையறியாமல் தன்னுள் மகிழ்ச்சி எழுந்த போதும்,  இன்னமும் தன்னை வறுப்புறுத்தும் நோக்கத்தில், அவன் எப்படியோ கோகியை சந்தித்து, அவள் ஆதரவையும் சம்பாதித்துக்கொண்டு அதே இல்லத்தில்  நற்பெயரும் பெற்றபடி...... இருக்கட்டும்!  இந்த கோகியும் தன்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் மறைத்திருக்கிறாளே!  என்றெல்லாம் எண்ணியபடி  இருந்தாள்.

மறு நாள் காலையிலேயே தன்னை சந்திக்க வந்திருந்த இருவரிடம்  வருத்தமும் கோபமுமாக கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

கோகிலாவும் வந்து அவளருகில் அமர்ந்தபடி , "அத்தை! உன்னை தேடி வந்த தியாகு நீ உன் உறுதியான முடிவை சொன்னதும் , என்னசெய்வதென்று தெரியாமல்  என் வீட்டுக்கு வந்து என்கிட்டே எல்லா விபரமும் கூறினான். அவனுடைய அன்பான பேச்சும்,  உன்மேலே வச்சிருக்கிற மரியாதையையும் பார்த்ததும்,  என் அண்ணா உனக்கு செஞ்ச துரோகத்தைக்கூட நான் கொஞ்ச நேரம் மறந்துட்டேன். இரண்டாவதா, அவனுக்கு கிடைச்சிருக்கிற தண்டனையை கேட்டதும் , "தான் ஆடாட்டாலும் , தன் சதை ஆடும்னு" சொல்வாங்காளே! அந்த மாதிரி எனக்குள்ளும் ஒரு பச்சாதாபம் உருவாயிடிச்சு! அதுக்கப்புறமா, தியாகு இல்லத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி விடுங்கள்! என்று சொன்னதும் என்னாலே தட்ட முடியலே! அதைப்பத்தி பேசலாம்னு அன்னைக்கு நான் வந்தப்போ, நீயும் அதை சொல்லி வருத்தப்பட்டதுனாலே தியாகு கூடவே ஒருநாள் இங்கு வந்து பேசாலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே இவன்......என்றவளை இடைமறித்தபடி தியாகு ," பாட்டி! இங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கல்லைன்னா, நான் போயிடுறேன். "என்றான் சற்று உடைந்த குரலில்.

மூவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அங்கு ஒரு கனத்த மெளனம் நிலவியது. ஒவவொருவருக்கும் தான்  செய்தது  தவறோவென மனதுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்வது போல் அமைதியாயிருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் தியாகுதான் மெளனத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.

" பாட்டி! நான் உங்களை பார்த்ததில்லை!ஆனால் அப்பா உங்களைப்பற்றிச் சொல்லும் போது நானகவே என் மனசுக்குள் உங்களை ஒரு உருவத்தை கற்பனை செஞ்சு வளர்ந்து வந்தேன். உங்களை பாக்கனும், உங்களோடு பேசி உங்க அன்பு  நிழல்லே வாழனுன்னு,  மனசுலே ஆசையை வளர்த்துகிட்டேன். அதனாலே உங்களை எப்படியாவது என்னோடே அழைச்சிகிட்டு போகனுன்னு முடிவோட புறப்பட்டு வந்தேன். இங்க வந்து பாத்த போது நான் நினைச்ச மாதிரிதான் நீங்களும் இருந்தீங்க!  ஆனா, என்னோட முடிவுபடி உங்களை கூட்டிண்டு போற விசயத்துலே மட்டும் நான் தோத்துட்டேன். அதனாலதான் உங்களை பிரிய மனசில்லாமே, நீங்க வேலை பாக்கிற இல்லத்திலேயே உங்க பார்வையிலே படற மாதிரி இருக்கலாம்னு தோணிச்சு!  கோகிலா அத்தையும் இங்கே இருக்குறாங்கன்னு நா உங்களைபத்தி விசாரிக்கும் போதே தெரிஞ்சுகிட்டதாலே, அவங்களை போய் சந்தித்து பேசினேன்." அவங்க உதவியோடுதான் இல்ல நிர்வாகிகிட்டே வேலையில் சேரவும் சம்மதம் வாங்கினேன். என்கூட நீங்க வரதற்கு பிரியப்படாத போது, நான் உங்க கூட இருக்க நினைக்கிறது தப்பா பாட்டி?. நெகிழ்ச்சியுடன் அவன் கேட்டதும், பார்வதியின் கண்களும் குளமாயின.

"இல்லைப்பா! ஆனால் உங்கப்பா அங்கே எப்படி உன்னை விட்டுட்டு தனியா சிரமபடுவான். நீ அவனுக்கு ஆதரவா இருந்து பாத்துண்டாதானே நல்லாயிருக்கும்.". மகனின் மேல் உள்ள பாசம் பார்வதியை சுமூகமாக பேச வைத்தது.

"பாட்டி! அங்கே அப்பாவை கவனிச்சிக்க அம்மா இருக்காங்க!  அம்மாவின் சொந்தங்கள் அருகருகே இருக்காங்க! ஆனா இங்கே உங்களுக்குன்னு கோகி அத்தையை தவிர யார் இருக்காங்க? இப்போதிலிருந்து உங்களுக்காக  நானும் இருக்கேன். அப்போ அப்பா உன்னை விட்டுட்டு ஏதோ சுயநல புத்தியிலே போனதுனாலே நீங்க எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சு இருக்கீங்கன்னு கோகி அத்தை சொன்னாங்க! அந்த பாவத்துக்கு பிராயசித்தமா  நான் அப்பாவை விட்டு இருக்கிற வேதனையை கொஞ்ச நாள் அப்பாவும் அனுபவிக்கட்டுமே! அப்படி சோர்வா நின்ன நேரத்திலே கூட நீங்க மனசை தளர விடாமே இல்லத்துலே உங்க வயசுக்கும் மீறிய வேலை செஞ்சு.. உங்க உழைப்பையே  தானமாக்கி தந்து  அந்த புண்ணியந்தான் அப்பா உயிரை காப்பாத்தியிருக்குன்னு நான்நினைக்கிறேன்! .அன்னைக்கு இல்லத்தோட நிர்வாகி பெருமையா உங்களை பத்தி பேசுனப்போ, நான் சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து அவர்கிட்டே பெருமைபட்டம் வாங்கினது  கூட சின்ன செயலா ஆயிடுத்து.!  தனியொரு மனுஸியா நின்னு வாழ்ந்து காட்டின உங்களுக்கு இந்த வயசான காலத்துலே ஆறுதலுக்கு பிடிசிக்கறதுக்கு ஒரு கரம் வேண்டாமா? அந்த கரமா நான் உங்களோடு எப்பவும்  இருக்கேன். உங்க மனசு மாறி நீங்க எப்போ அப்பாவை பார்க்கப்போகலாம்னு சொல்றீங்களோ அது வரைக்கும் நான் அந்த பேச்சை எடுக்க மாட்டேன். சத்தியமா உங்களை விட்டுட்டு போகவும் மாட்டேன். உங்க கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா  நான் நிறைவேத்தி வைக்கிறேன்." தியாகு பேச பேச பார்வதியின் மனம் இளகியது. கண்களில் கண்ணீருடன் மெளனமாயிருந்தாள்.

கோகிலா,"என்ன அத்தை! தியாகு இவ்வளவு கெஞ்சுறான்! நீ பதிலேதும் சொல்லாமே அமைதியா இருக்கே! என்றதும்,  கண்களை துடைத்தபடி எழுந்து கொண்ட பார்வதி,"கோகி!  என்னோட மன உறுதி என் பேரனுக்கும் இருக்கு! ஆனா அவன் உறுதிக்கு முன்னாடி நான் தோத்துப்போயிட்டேன்.! எனக்கு இந்த வயசான காலத்துலே பக்க பலமா என் பேரனை துணைக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி வரலாம்! வா! தியாகு! நீயும் வா ! கோவிலுக்குச் சென்று வரலாம் என்றபடி பாசத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். இனி  தன் வாழ்வு சற்று ஆனந்தமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் உடல் வலு கொஞ்சம் கூடியதை உணர்ந்தாள் பார்வதி. மூவரும் நிறைந்த மனதுடன் ஆண்டவனை தரிசிக்க கிளம்பினார்கள்.
முற்றும். 

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:1234

Tuesday, March 6, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 4)

சற்று ஆசுவாசபடுத்திக் கொண்டவள் விழி நீரை  துடைத்துக் கொண்டவள் அவன் கைகளை பிடித்து தன் நெஞ்சொடு அணைத்த வண்ணம், "தியாகு! என் செல்லமே! உன்னை என் கண்ணுலே காமிச்சு கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நா ரொம்ப கடமை பட்டிருக்கேன். எத்தனையோ கெடுதல்களிலும் அவன் சிலது நல்லது பண்ணியிருக்கான். அதுலே இதுவும் ஒண்ணு.  உன்னோட அப்பா என் பிள்ளையாய் பிறக்காமே,  நான் எடுத்து வளர்த்ததுக்கே அவன் இந்த துன்பத்துக்கு ஆளாகியிருக்கான். ஏன்னா என் நேரம் அப்படி ! நான் பிறந்து வந்த வேளை அப்படி! மத்தபடி உன்னை பார்த்ததிலே நான் ரொம்பவே சந்தோஸபடறேன். ஆனா அவ்வளவு சட்டுனு உதறிட்டு உன் கூட என்னாலே வர முடியாது! ஏன்னா இந்த குழந்தைகளோடு என் காலம் முடிஞ்சு போகனுமுன்னு நான் பிரார்த்தனை செய்துகிட்டே இங்கே வேலையிலே சேர்ந்து ரொம்ப வருடங்கள் ஆச்சு. எல்லாத்தையும் ஒரளவு மறந்து ஒரு தவ வாழ்க்கை மாதிரி வாழ்ந்துண்டு வர்றேன்.அவ்வளவு சுலபமா இதை உதறி எறிஞ்சிட்டு என்னாலே வெளியேற முடியாது. ராஜுவை நினைச்சா எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு! ஆனா என்னை விட பத்து மடங்கா கவனிக்க அவன் பிள்ளை இருக்கான். அந்த நிம்மதி இந்தப்பிறவியிலே எனக்கு போதும். அந்த நினைப்போடு  எஞ்சிய காலத்தை கழிச்சிடுவேன். நீ என் பிள்ளை மாதிரி இல்லாமே ரொம்ப தைரியமா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கே...! நீ நல்லா இருக்கனுப்பா!  பத்திரமா போயிட்டு வா! அப்பாவை நல்லபடியா கவனிச்சுக்கோ!" என்றவள் மேலும் அங்கிருந்தால், தன் உறுதி தளர்ந்துவிடுமோ என்ற ஐயத்தில் வரவேற்பு அறையை விட்டு அகன்று உள்ளே சென்று மறைந்தாள்.

அவள் பேச்சில் கட்டுண்டவன் மாதிரி் அமைதியாயிருந்த தியாகு மேற்கொண்டு செய்வதறியாமல் சற்று நேரம்  சிலையாய் நின்றிருந்தான்.

சில வார காலம்  நிமிடமாய் ஓடியது தெரியவில்லை. பார்வதிக்கு..... ! ஆனால் ஒவ்வொரு  நாளும்  சில மணி நேரமாவது தியாகுவின் முகமும் பேச்சுக்களும் அவள் முன் வந்து நின்று போயின. ராஜு தன்னுடன் இருக்கும் போது அவனுக்கு மணமுடித்து,  அவன் குழந்தையை எடுத்து வளர்த்து என்று எல்லோரையும் மாதிரி அவளும் கனவு கண்டாள். அதெல்லாம் பொய்த்துப் போய் விட்டது என மனசை தேற்றிக்கொண்டு வாழக்கற்றுக் கொள்ளும் போது எதிரில் வந்து நின்று" பாட்டி" என உரிமை கொண்டாடி, மனதை சலனப்படுத்துகிறான்.  அமைதியாக பேசி மனதை அலைக்கழிக்கிறான். இன்னமும் இவனை மறந்து பழையபடியாக எவ்வளவு நாட்களாகுமோ? என்ற எண்ணத்தில் பெருமூச்செறிந்தாள். இந்த கவலையில் கோகிலாவும் இத்தனை நாட்களாக தன்னை பார்க்க வராதது நினைவுக்கு வரவே "அவளுக்கு என்ன பிரச்சனையோ? " என்று எண்ணியபடி இல்லத்துக்கு கிளம்ப எத்தனித்தாள்.

அப்போது "அத்தை"! என்ற குரலோடு கோகிலா வீட்டினுள் நுழையவும்,  " வா கோகி! இப்பத்தான் உன்னை நினைச்சேன். உனக்கு நூறு வயது!" என்றபடி அன்போடு அவளை வரவேற்றாள் பார்வதி.

" வேண்டாம் அத்தை! உன் வாய் பேச்சு பலிச்சிட போறது.அப்புறம் கஸ்டப்படறது நானில்லையா? " என்று சிரிப்போடு சொன்னவள்" நீ அதுக்குள்ளே கிளம்பிட்டியா!  ரொம்ப. நாளாச்சா? அதான் இன்னைக்கு உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்." என்றவளிடம் ," சரி உக்காந்துக்கோ! நானும் உன்னை பாக்கனும்னு நினைச்சேன் .இல்லத்துலே ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணிடிருக்காங்க! அதான் சீக்கரமா கிளம்பறேன். சரி! ஒரு அரை மணி தாமதமா  போனா தப்பில்லை!  நா சொல்லிக்கிறேன். என்று அவளருகில் அமர்ந்தவள்," கொஞ்சம் இரு என்று அடுக்களைக்குள் சென்று ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை கொண்டு வந்து தந்தாள். "என்னஅத்தை! இன்று இனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது." என்று அதை வாங்கிக்கொண்டாள் கோகிலா.

"இன்று அவன் பிறந்த நாள்! அவன் இங்கு இருக்கும் போது அவனுடைய பிறந்த நாளன்னைக்கு அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பாரத்து செஞ்சேன் .அன்று கட்டாயம் இந்த இனிப்பிருக்கும். அவன் என்னை விட்டு போனதிலிருந்து, கோவிலுக்கு செல்லும் போது அவனுக்காக வேண்டுவதோடு சரி!  இன்னைக்கு கோவிலுக்கு சென்ற போது அவன் பெயரில் அர்ச்சனை பண்ணினேன். வீட்டிலும் பாயசம் செஞ்சு விளக்கேற்றி சுவாமிக்கு படைத்து ..... என்னவோ போ! எனக்கு மனசே சரியில்லை! பத்து நாளைக்கு மேலா  உன்கிட்டே சொல்லனும்னு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டேயிருக்கேன்... .அவன் விபத்துலே கால்களை இழந்து என்னை, எனக்கிழைத்த தப்பை நினைச்சபடி,  தவிச்சிண்டு இருக்கானாம். அவன் பிள்ளை எப்படியோ நான் இங்கிருக்கிற விபரத்தை சேகரிச்சிண்டு வந்து "அப்பா இந்த மாதிரி உன்னை நினைச்சி வருத்தப்படுறார். என்னோடவந்துடுன்னு" வறுப்புறுத்தினான். நான் தான் எனக்கு அங்கெல்லாம் சரி வராதுன்னு திருப்பி அனுப்பிட்டேன். என்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கான்னு சொல்றான். நான் இங்கே இருபது வருஷமா ஆண்டவன்கிட்டே மனசுக்குளளே கதறிண்டிருக்கேன்.என் உயிர் பிரியருதுக்குள்ளே ஒரு தடவை அவனை கண்ணுலே காட்டுன்னு!  அது சரி! அதெல்லாம் எப்படி அனுமன் மாதிரி நெஞ்சை பிளந்து காட்ட எனக்கு சக்தி இருக்கா?  உறவெல்லாம் ஒவ்வொருத்தரா போன நிலையிலே இவன்தான் ரத்தமும் சதையுமான என் உடம்புலே உயிரா , சுவாசமா இருக்கான்னு எப்படி அவனுக்கு விளக்குவேன் அது புரிஞ்சிருந்தா அவன் என்னை விட்டு போவானா? எந்த ஒரு பிரச்சனையே வரட்டுமே! அப்படியே வந்தாலும், இந்த உறவை வெட்டிண்டு "அப்புறமா பாத்துக்கலாம்னு மனசை இறுக்கிண்டு, நாளை தள்ளிப் போட்டுகிட்டு இருந்திருப்பானா?  நான் இங்கே ஒருநாள் பட்ட வேதனையை அவன் நாளொன்றுக்கு ஒரு நிமிடமாவது பட்டிருப்பானா? ." மேற்கொண்டு பேச முடியாமல் கண்களில் இத்தனை நாளாக மனதை இரும்பாக்கி கண்களை வற்ற வைத்ததின் விளைவாய்  வெளியேற வழியின்றி தவித்துக் கொண்டிருந்த கண்ணீர் சுனை காத்திருந்த மாதிரி கொட்ட ஆரம்பித்தது.

இத்தனை நாட்களாக மனதில் இறுக்கிய சோகங்கள் கரைந்து போகும் வரை அவள் அழட்டும் என கோகிலா வாளாதிருந்தாள்.

(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:123


Sunday, March 4, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 3)

"பார்வதி அம்மா உங்களை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்!" காவலாளி வந்து சொன்னவுடன், மதிய உணவு உணடதும்  தூங்காமல்  இருந்த சில குழந்தைகளை தூங்க பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி எழுந்து அருகிலிருந்த உதவியாளரை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வரவேற்பறையை நோக்கி நடந்தாள்.

இவள் சென்றதும் இவள்தான் பார்வதி என புரிந்து கொண்ட வந்தவன் இவள் அருகில் வந்து," பாட்டி என் பெயர் தியாகு!  நான்தான் உங்களை தேடி வந்திருக்கிறேன். நீங்கள்தான் பார்வதி என நினைக்கிறேன்!"  என்று சரளமாக பேச ஆரம்பிக்கவும்,  "உரிமையுடன் பாட்டி எனஅழைக்கும இவன் யார்? என்றபடி அவனை ஏறிட்டு கூர்ந்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாயிருந்தது.

"நீ....யாரப்பா? உன்னை.எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!  .... நீ ராஜுவோட பிள்ளைதானே ? எனக்கு தெரியும் என்றாவது ஒருநாள் அவனை பார்ப்போம்ன்னு உள் மனசு சொல்லிண்டேயிருக்கு. எங்கே அவன்?  அவன் எப்படிப்பா இருக்கான்? நல்லா இருக்கானா? பார்வதி சற்றே உணர்ச்சிவசப்பட்ட குரலில் படபடத்தாள்.

என்ன இருந்தாலும், சொந்த மகனைப் போல் வளர்த்து , வயிற்றில் பிறந்தவனை பறி கொடுத்ததிலிருந்து   அவனையே உயிராக நினைத்து வாழ்ந்து வரும் போது பிரிந்தவனாயிற்றே!  அந்த நாட்களை நினைத்த மாத்திரத்தில். அவன் மேல் இருந்த கோபங்கள், வருத்தங்கள் நொடியில் காணாமல் போக, பாசத்தினால் அவன் நலம் விசாரிக்கையில் பார்வதியின் குரல் தளர்ந்து கண்களில் நீர் துளிகள் வெளிப்பட்டன.

தான் நினைத்தது ஒரளவு நடக்கும் என்ற நம்பிக்கை தியாகுவின் மனதில் தோன்றியது. பார்வதியின் இரு கரம் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டவன் "என்னை ஆசிர்வதியுங்கள் பாட்டி!" என்றவனாய் அவள் காலில்  விழுந்தான். சட்டென்று "நன்றாயிருப்பா" என்றவள், "நீ யாரப்பா சொல்லவேயில்லையே? நானாக ஏதோ நினைத்து கேட்டதற்குக் கூட நீ பதில் சொல்லவில்லையே? " சட்டென அவள் குரலில் சுதாரிப்பு தெரிந்தது.

எழுந்து நின்ற தியாகு அவள் கைகளை பிடித்தபடி, "பாட்டி! நான்தான் உங்க பேரன். உங்க ராஜுதான் என் அப்பா! இளமையிலே அவர் செஞ்ச தப்புக்கு அவர் தண்டனை அனுபவிக்கிறார். அதனாலே அவர் நினைசாலும் இங்கே வரமுடியலே.  அவர் தப்பையெல்லாம் அவர் சொன்னதுனாலே அதை சரி பண்ண  அவருக்கு   பதிலா நா வந்திருக்கேன். உங்க கால்லே  விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் இந்த  பிறவியிலே நல்லகதி கிடைக்கும்னு சொல்லிகிட்டே இருக்கார் பாட்டி! அதனாலே செய்த தப்புக்கெல்லாம் பிராயசித்தமா உங்களை எங்களோடவே நிரந்தரமாக  வச்சுக்க ஆசைப்பட்டு உங்களை அழைச்சிகிட்டு போக வந்திருக்கேன். எங்களையெல்லாம் மன்னிச்சு ஏத்துகிட்டு எங்க கூட வந்து தங்குவீங்களா பாட்டி?" என்று உள்ளம் உருக பேசிக் கொண்டே போனவனை தடுத்த பார்வதி, "என்னப்பா ஆச்சு அவனுக்கு? என்றாள் பதட்டமான குரலில்.

"பாட்டி! அவர் எந்த சூழலில் உங்களைவிட்டு  சென்றார் . சென்றவிடத்தில் வந்த ஏமாற்றங்கள், சறுக்கல்கள் அதன் பின் அம்மா வீட்டு உறவின் மூலம் அவர் சற்று நிமிர்ந்து நி்ன்றது , அதனால் வந்த வசதிகளும், கண்டிப்புகளும் உங்களை மறக்க வைத்த சந்தர்பங்களை உருவாக்கியதையும், நான் பிறந்து வளர்ந்து ஒரளவு அனைத்தையும் புரிந்து  கொள்ளும் பக்குவம் அடைந்ததும் என்னிடம் கூறியிருக்கிறார்....நல்லா போய்கிட்டே இருந்த எங்கள் வாழ்க்கையில் அப்பாவுக்கு மீண்டும் ஒரு பலமானஅடி.! . இதில் அவர் உயிர் பிழைத்து இரு கால்களை இழந்து தவிக்கிறார்.. எப்படியோ என் படிப்பு முடிந்து  ஒரு வேலையும் பார்ககிறேன்.. பழையதை நினைத்து வருத்தப்படும் போதெல்லாம் ,"நம்பிக்கையுடன் காத்திருந்த அம்மாவை  விட்டு விட்டு வந்த பாவந்தான் இப்படியாகி விட்டது. நிர்கதியாய் எனக்காக காத்திருந்த அம்மாவை தவிக்கவிட்டு ஒடி வந்த கால்களை ஆண்டவன் எடுத்துக்கொண்டு ஒரடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைமையை உண்டாக்கி விட்டான் ! .இனி எப்படி அவங்க முகத்திலே முழிப்பேன், எப்போ எப்படி சந்திச்சு அவங்ககிட்டே மன்னிப்பு கேட்பேன்! அப்படியே கேட்டாலும், அவர்கள் என்னை மன்னித்து தன் மகனா ஏத்துப்பாங்களா?   என்று சொல்லிச்சொல்லி வருத்தபடுவார். உறவுகளையெல்லாம் மறந்து தொலைத்து விட்ட ஒரு நிலையிலே உங்களை எப்படியாவது கண்டு பிடிச்சு ,அப்பாவுக்கு அந்த பாக்கியத்தை என் மூலம் ஏற்படுத்தி தரலாம்னு அங்கே இங்கே விசாரிச்சு இப்போ உங்ககிட்டே வந்து நிக்கிறேன் பாட்டி!. எனக்காக என்கூட வருவீங்களா பாட்டி.!  கெஞ்சிய குரலில் சுருக்கமாக தான் அங்கு வந்த விபரத்தை கூறினான் தியாகு.

கண்ணில் வழிந்த நீரை துடைத்தெறிய மறந்து அவன் கூறியதை கேட்ட பார்வதியின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. "தன்னை விட்டு விட்டு சென்றதற்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ? கடவுளே இது உனக்கே நியாயமாயிருக்கிறதா? அன்று கோகி கூட "கடவுள் அவனுக்கு தண்டனை கொடுப்பான்னு" சொன்னாளே!  அதுக்காக இப்படியா?  ஐயோ! இதை என் பிள்ளை எப்படி இதுநாள் வரைக்கும் தாங்கியிருப்பான்! "வளர்த்த பாசத்தில் மனசுக்குள் சோகம் தாக்கி சற்றே நிலை குலைய செய்தது. "கடவுளே! இன்னும் என்னை என்னவெல்லாம் சோதிக்கப் போகிறாய்?"எனப் பெருமூச்சு விட்ட போது கனத்த மனசில் வலி தெரிந்தது.
(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:12


Friday, March 2, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 2)

வளர்ப்பு மகனின் அன்பான அரவணைப்பு  அவளுடைய  மனக்காயத்தை சிறிது குணப்படுத்தியது.  "நான் இருக்கிறேன். அம்மா ! நீ அழுதது போதும். இனி உன் கண்களில்  கண்ணீரின்  நிழல் கூட படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று உருக்கமாக சொன்ன சொல்லில்,  இதயம் கரைந்து  விழிகளில் நீர் எட்டிப்பார்த்தது. அவன் கைகளை பிடித்து,  அவனை லேசாக அணைத்தபடி , அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..நீ.எனக்ககுன்'னு, இருக்கிற  தைரியத்தில் தான் எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்கடா!  போதும் !  நீ ஒருத்தனாவது, ஆயுசோட இருக்கனும்டா!''என்று அழுது கொண்டே சொன்னவள் தன்னை  சிறிது நேரத்தில் ஆசுவாசபடுத்திக்கொண்டாள். காலம் மெள்ள நகர்ந்தது.. தன் சொந்த மகனைப்போல்  படிப்பில் இவன் ஆர்வமாக படிக்காவிடினும்,  படிப்புகேற்றபடி  அவன் வேலைதேடி  சோர்ந்து போனதும் , அவனை தட்டிக் கொடுத்தபடி,. ஆறுதலுடன் தேற்றினாள்.


ஒருநாள் தான் நண்பர்களுடன்  சேர்ந்து பிஸினஸ்  தொடங்க போவதாக கூறியதும், தன் கணவரின் சேமிப்பிலிருந்து  அவன் கேட்ட தொகையை எடுத்து தந்து ஊக்கப்படுத்தினாள்.  சற்று சறுக்கலும், சொஞ்சம் செழிப்புமாக  அவன் வளர்ந்து வரும் போது, சொந்தத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து  அவனுக்கு திருமணம் செய்து விட்டால்,  "அக்காடா'' என்று நிம்மதியாக இருக்கும் வாழ்நாளை  கழித்து விடலாமே  என்று  தோன்றியது..வடக்கே வேலை விசயமாக சென்று வருகிறேன் என்று போனவன் அப்படியே தன் உறவையும், ஊட்டி வளர்த்த அன்பையும் முறித்துக் கொள்வான் என கனவீல் கூட நினைக்கவில்லை. நாள் செல்லசெல்ல அவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை..அறிந்தவர் தெரிந்தவர் கேட்கும்போது கூட ,அவனை விட்டுக்கொடுக்காமல், " வருவான். ! வாழ்க்கையில் ஜெயித்து விட்டு நீ கொடுத்த பணத்தை பன்மடங்காக்கி உன்னிடம்  கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். அதை நிறைவேற்றும்  மனதோடு இருக்கிறானோ என்னவோ"!  என தனக்காவும் சேர்த்து சொல்லி சமாதானபடுத்திக் கொள்வாள்.


காலம் யாருக்காகவும் காத்திராமல் இயல்பான வேகத்தில் ஓடிய ஒரு நாளில்., நாத்தனாரின் கணவர் வகை சொந்தமான ஒருவர் ஒரு நாள் இவளை இங்கு சந்தித்த போது.. " உங்களுக்கு விசயமே தெரியாதா?  அவன் வடக்கிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நல்ல வசதியோடு வாழ்கிறான்.ஒரு குழந்தைக்கும் தந்தையாகி விட்டான். " என்ற செய்தியை கூறியதும் அவள் சற்று அதிர்ச்சியடைந்து போனாள். வாழ்க்கையில் எத்தனையோ  இடிகளை பொறுத்துக் கொண்டவளுக்கு இந்த இடி சற்று நேரே தலையில் விழுந்த பிரமையை ஏற்படுத்தியது. ஆனாலும் பொறுத்துதான்  ஆகவேண்டும்! வேறு என்ன செய்வது என்ற மனநிலையை உண்டாக்கி கொண்டாள். "பெற்றவனை பிரித்து அழைத்துக்கொண்ட ஆண்டவனுக்கு வளர்த்தவனை பிரிக்க கஸ்டமா என்ன ?"என்று தோன்றிய நிலையில், இறைவனிடம் சென்று நாலு கேள்வி கேட்டு புலம்ப தூண்டிய மனதை " உன் விதி! அவன் என்ன செய்வான்?" எனக்கூறி சாமாதானபடுத்திக்கொண்டாள்.

பழைய நினைவுகளுடன் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் "அத்தை" என அழைத்துக்கொண்டே கோகிலா வரவும் எழுந்து அமர்ந்தாள் .

"அத்தை உடம்புக்கு என்ன ? நீ இன்னைக்கு வரல்லைன்னு இல்லத்திலே சொன்ன உடனே ஓடி வர்றேன். நீ அங்கேதானே இந்த நேரத்திலே இருப்பேன்னு உன்னைப் பார்க்க நேரே அங்கேதான் போனேன் . என்னாச்சு?" என்றபடி படபடத்த அவளை  நோக்கி லேசாக புன்னகைத்தாள் பார்வதி.

"எனக்கு ஒன்றுமில்லை கோகி! காலையிலே லேசா தலை சுத்தின மாதிரி இருந்திச்சு.  எப்பவும் சாப்பிட்ட உடனே போயிடுவேன்..இன்னிக்கு என்னமோ கொஞ்சம்... ஒன்னுமில்லே! என்னாலேயும் அங்க போகமே ஒருநாள் கூட இருக்க முடியாது.. ஏதோ உன் புண்ணியத்திலே பழசை மறந்து நான் நிம்மதியா இருக்க ஆண்டவன்  வழி பண்ணியிருக்கான். அதை கெடுத்துக்கிற மாதிரி நா நடந்துப்பேனா? நாளைக்கு கண்டிப்பா நா அங்கேயிருப்பேன். என்றாள் சிறிது தடுமாறிய  குரலில்.

"ஐயோ அத்தை! இப்போ உன்னை நா ஏன் அங்கே போகலைன்னு கேக்கவா வந்தேன். உனக்கு என்னாச்சோ, ஏதோன்னு ஓடி வந்திருக்கேன். உனக்கு முடியலைன்னா  நீ பேசாமே எங்கூட வந்து தங்கிடு. நா எப்போதிருந்தே அதைதான் சொல்றேன். நீதான் பிடிவாதமா அதை தட்டி கழிச்சிட்டு இப்படி இல்லத்துலே சேவை செய்யற வேலையை  ஏத்துண்டு தன்னந்தனியா இப்படி கஸ்டப்படறே ...நா உன்னை.... "என்று மேற்கொண்டு பேசிச் சென்றவளை கைகளை பிடித்து  தன் தளர்ந்த கைகளில் ஏந்திக் கொண்டாள் பார்வதி.

"எனக்கு தெரியாதா கோகி!  எவ்வளவோ மனோபலத்துடன் இருந்த நான் கையிருப்பும் கரைஞ்சி அதுக்கப்புறம் என்ன பண்ண போறொம்னு திகைச்சு நின்ன வேளையிலே தெய்வம் மாதிரி நீ வரல்லைன்னா, என் வாழ்க்கை அதோகதியா ஆயிருக்கும்.நீ எப்படியோ என்நிலை தெரிஞ்சி  இங்கே வந்து உன் கையோட கூட்டிக்கிட்டு போவேன்னு ஒத்தகாலோடு நின்னதையும் என்னாலே மறக்க முடியுமா?  நீ கூட்டுக்குடும்பத்திலே மூத்தவளா நின்னு எல்லோரையும் எப்படி கட்டி காப்பாத்திகிட்டு வர்றேங்கிறதே அப்பதான் நா தெரிஞ்சிகிட்டேன். இதிலே நா வேறே!  உனக்கு பாரமா அங்கேவர மாட்டேன்னு நா பிடிவாதமா நின்னதும், மாசாமாசம் என் செலவுக்கு நீ பணம் குடுக்கப் போக, அப்பதான் எனக்கு அந்த யோசனை வந்தது. உன் வீட்டுகாரரோட நண்பர்  ஆரம்பிச்சு நடத்திகிட்டு வர்ற இல்லத்திலே ஒரு வேலை கேட்டப்போ, எனக்கு வயசானாலும் பரவாயில்லைன்னு அங்கேயிருக்கிற குழந்தைகளை பாத்துக்கிற வேலை வாங்கி கொடுத்தே!   நா இப்போ கவலை இல்லாமே சாப்பிடவும் செய்றேன். குழந்தைகளை பார்த்து அவங்க சந்தோஸத்தை பார்த்து  அவங்களை மாதிரியே கவலை இல்லாத ஒரு மனுஸியா வாழ்ந்துகிட்டும் வர்றேன். இதெல்லாம் உன் தயவில்லாமே எனக்கு கிடைச்சிருக்குமா?  போகட்டும்! எது வரைக்கும் வாழ்வு போறதோ அது வரைக்கும் போகட்டும்!  இவ்வளவு கஸ்டபடுத்தின ஆண்டவன் என் கடைசி நிமிஷத்தை எப்படி....அவளை முடிக்க விடாது அவள் வாயை பொத்தினாள் கோகிலா.

"போதும் அத்தை! கடைசி புராணமெல்லாம்! இப்ப என்ன உனக்கு  தெம்பு இருக்கிற வரை, இல்லையில்லை! உனனோட சந்தோஸத்துக்கு மட்டுந்தான் நீ இந்த வேலையிலே சேர விட்டேன் .நீ இப்ப உம்னு சொன்னா கூட என்னோட அழைச்சிண்டு போய் உன்னை ராஜாத்தி மாதிரி பாத்துப்பேன். வர்றியா?" எங்கண்ணா பண்ணிய தப்பை நான் செய்ய மாட்டேன். அவனை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு! உன்னை பத்தரமா பாத்துக்குவான்னு அம்மா சொல்லி சொல்லி பூரிச்சிட்டிருந்தா!  ஆனா அவன் இப்படி உன் தலையிலே கல்லைத்தூக்கி போடுவான்னு யார் கண்டா? அம்மா இருக்கிற கடைசி காலம் வரைஅதை சொல்லிண்டேயிருந்தா!  அவன் எங்கேயிருக்கானோ!  ஆனா உனக்கு அவன்பண்ணின பாவத்துக்கு வேண்டாம்! கடவுள்பாத்துப்பான்! ஆனா நா இப்ப கடவுள் புண்ணியத்திலே நா நல்லாயிருக்கேன். உன்னை கண் கலங்காமே பாத்துக்க வேண்டியது  என் பொறுப்பு. நீ எதுக்கும் கவலை படாதே! " என்றாள் கோகிலா லேசாக கண் கலங்கியவாறு.

" கோகி  எதுக்கு பெரியவார்த்தை யெல்லாம் சொல்றே! யாரும் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணலே! அததது நடக்கிற விதத்திலே நடந்துதான் தீரும். யாருமே எந்த செயலுமே மனசாற நினைச்சு பண்றது கிடையாது.  ஏதோ நினைப்புலே அவங்க அறியாமே பண்றது  கூட தெய்வ சங்கல்பந்தான். அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேதான் ஆகனும். நா அவனை இப்படியெல்லாம் நினைச்சதே கிடையாது எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கட்டும்.. என்று பார்வதி கூறியதும், "உன் மனசு யாருக்கும் வராது அத்தை!" என்றபடி அவளை அன்போடு அணைத்துக் கொண்டாள் கோகிலா.
(தொடரும்...)

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 1


Wednesday, February 28, 2018

பிராயச்சித்தம்.....

அவன் பயணித்திருந்த பயணம் கடமையின் நிமித்தம் ஏற்பட்டது எனலாம். இல்லை, மனதுக்குள் எழுந்த மனிதாபிமான விளைவாகவும் இருக்கலாம். ஆனால், இது கண்டிப்பாக ஒரு பிராயச்சித்தமாகும் என்று அடிக்கடி தனக்குள் கூறிக் கொண்டான். ஆச்சு!  நாளை காலை அங்கு சென்று சேர்ந்ததும். அருகிலிருக்கும் அந்த ஊரையடைந்து தேடிப்பிடித்து தன் பிராயச்சித்தத்தை நிறைவேற்றி விடலாம். மனது பீறிட்ட  மகிழ்ச்சியில் உடலில் ஒரு வலுவேறியது போன்ற சந்தோஸம் வந்தது.

"அவங்க என்னோட வருவாங்களா? " இந்த கேள்விக்கு ராஜுவால் பதிலேதும் கூற முடியவில்லை. ஆனால் அவர் கண்களில் கண்ணீருடன் தோன்றிய பாவம், "நீ அழைத்து வந்து விட்டால் அதை விட சந்தோஸம் நமக்கு இந்த பிறவியில் வேறொன்றுமல்லை என்றுதான் தோன்றுகிறது!" எனக் கூறியதை நினைவு கூர்ந்தவனுக்கு,  " இருக்கும் இருப்பிடத்தை எப்படியோ விசாரித்து தெரிந்து கொண்டாயிற்று!  ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் கூறி அழைத்து செல்ல அருகதை உள்ளவனா நான். தெரியவில்லை! ஆனாலும் , செய்த பாவங்களுக்கு பரிகாரமாக எப்படியாவது எங்களை சேர்த்து வை இறைவா!" என வேண்டிக் கொள்ள தோன்றியது.


பார்வதி சாப்பிட்ட பின் நாலு பாத்திரங்களை கழுவி வைத்தாள்.அதை பிறகு கூட நிதானமாக தேய்த்துக் கொள்ளலாம். யாரும் கேட்கப்போவதில்லை. ஆனாலும் அப்படியே பழக்கப்பட்டக்  கைகளுக்கு  சாப்பிட்டவுடன் சற்று அமர, சாய்ந்து கொள்ள அனுமதிக்க  தோன்றவில்லை. ஒற்றை மனுஸிக்கு என்ன சாப்பாடோ? என்று தினமும் அலுத்துக் கொண்டாலும்,  பத்துபத்தரைக்குள் வயிற்றில் எரியும் நெருப்பை அணைக்க அடுப்பில் நெருப்பை  ஏற்றி வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். ஒரு முறை சமைப்பதையே இரு தடவையும் சாப்பிட்டு ஒரு நாளின் பொழுதை கழித்துக்கொண்டிருந்தாள்.காலை மாலை இரு வேளைகளிலும் அருகிலிருக்கும் கோவில்களுக்கு சென்று கடவுள்களிடம் சிறிது பேசி விட்டு வருவதையும் தன் வாடிக்கையாக வைத்திருந்தாள.

"இந்த கடவுள் நம்பிக்கைதான் உங்களை இந்த அளவுக்கு
இத்தனை வயதிலும், திடமாய் வைத்திருக்கிறது.'  என்று   தெரிந்தவர் அறிந்தவர் விமர்சிக்கும் போது ஒட்டிய கன்னம் சற்றே அகல லேசாக சிரிப்பாள்.

"வேறே வழி! எனக்கு இத்தனை கஷ்டம்   தந்துட்டான்!  அதையெல்லாம் சமாளிச்சுக்கற தைரியமும் இவகிட்டே இருக்ககா இல்லையான்னு , அவன் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதான் அவன்கிட்டே தினமும் போய் நின்னு "பாத்துக்கோப்பா சமாளிசிண்டுதான் இருக்கேன்'னு  ஆஜர்  கொடுத்திட்டு வர்றேன்" என்று பதில் கூறி விட்டு நகர்வாள்.

உள்ளுக்குள்  ஆறாய் பொங்கும்  சோகங்களை யாரிடம் கூறி ஆற்றிக்கொள்ள முடியும். சொன்னால், "எங்களுக்கில்லாததா? என்பார்கள். நம் கஸ்டத்தை அவர்களிடம் சொல்லி ஆற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும் போது, அவர்களின் சோகங்கள் என்றுமில்லாமல், அன்றுதான் அதிகம் அவர்களுக்கு நினைவுக்கு வர,  "பழகிக்கோ ! அப்படித்தான்... .. என்ன செய்வது? "என்றபடி மனச்சுமையை அதிகரிப்பார்கள். .தீயினுள்  இட்ட  இரும்பை அடித்தடித்து வளைப்பதை போல்  படைத்தவன் அடித்து வளைக்கிறான். ஏனப்பா இப்படி? .. என்று  அவனிடமே சென்று முறையிட்டு வந்து விட்டால்,  பாரங்கள் சற்று குறைந்தாற்போலவும், இருக்கும். மனதும் இறுகி இரும்பை போல் உறுதியாக ஜொலிக்கும்.  என்று உள்ளுக்குள்சொல்லிக்கொள்வாள் பார்வதி.

பிறந்த வீட்டில் சற்று சிரமங்களுடன் வளர்ந்து வந்த பார்வதி, புகுந்த வீடு வந்ததிலிருந்து கொஞ்சம் செளகரியத்தை அனுபவித்து  வந்தாள்  எனலாம்.
சந்தோஸமாய் வாழ்க்கையை கழித்து வந்த போது, அதை கெடுப்பது மாதிரி தன்னையும், கணவரையும் பத்து மாதம் சுமந்தெடுத்த  உறவுகளை அடுத்தடுத்து தன்னிடம் அழைத்துக் கொண்ட கடவுளிடம் மனம் விசனப்பட்டு புலம்பியபடி இருந்தாள்.  ""திருமணமாகி , பத்து  வருடங்கள் ஆகி விட்டன! உனக்கு ஒரு குழந்தையை கொடுக்க மாட்டானா அந்த ஆண்டவன் ? ''என்று தன்னையும், கணவரையும் நினைத்து விசாரப்பட்டுக் கொண்டிருந்த அந்த உயிர்களை தன்னிடத்தே வரவழைத்து கொண்ட மகிழ்ச்சியிலிருந்த கடவுள்களை,  "ஏன் இப்படி பண்ணிட்டே?  என் மேலே உனக்கென்ன அவ்வளவு கோபம்! "என்று தினமும் கேட்பதையே வாடிக்கையாய் வைத்திருந்தாள்.

பார்வதியின் தாக்கங்கள் ஒருவேளை அந்த கடவுளை பாதித்ததோ என்னவோ, அவள் வயிற்றில் வாரிசொன்றை சுமக்க வைத்தான். "மனக்கவலைகளுக்கு மருந்தாக இறைவன் தந்திருக்கிறான்.இனி கவலையேதும் படாதே!  என்று உற்றார் உறவினரின்  ஆறுதல் மொழிகளில்., அவள் மனந்தேறி காலத்தின் ஓட்டத்தில், கலந்து  இருபது வருடங்கள் ஒடிய பின் ஆண்டவன் மறுபடி அவளை சோதித்தான். தன் ஒரே மகனுடன், தன் ஒன்று விட்ட நாத்தனாரின் ஐந்து குழந்தைகளில், மூன்றாம் மகனையும், அவளின் வறுமை காரணமாக தத்து எடுத்து வளர்த்து வந்தாள்.  தன் மகனை விட  அவனிடம் பாசம் வைத்து வளர்க்க, அவனும் இந்தக்குடும்பத்துடன் நன்கு ஒட்டிக்கொண்டான். இருவரும் சகோதர வாஞ்சையுடன், ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். "அந்த வளர்ப்பு மகனே உனக்கு போதும்! சொந்த மகன் எதற்கு? "என்று நினைத்த ஆண்டவன் மறுபடி ஒரு புயலில் அந்த வீட்டை தத்தளிக்க செய்தான்.  உறவுகளுக்கு எப்படி சமாதானம் செய்வது எனத்தெரியவில்லை!..... அடிமேல் அடி விழுந்த வேகத்தில் கணவரின் உடல் நிலை பாதிப்படைய  "நீ எப்படியோ சமாளிச்சுக்கோ! என்று மேலும் ஒரு புயலை  அவளுக்கு  தந்தபடி அவரும் மறைய. தன் வளர்ப்பு மகனை ஒரே கைப் பிடியாக நம்பியபடி மனதை இரும்பாக மாற்றிக்கொண்டு, அங்கிருக்க பிடிக்காமல், இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள்.
(தொடரும்...)

Saturday, March 7, 2015

அம்மா



அம்மா…!


ம்மா அங்குமிங்கும், டென்சனாய் பறந்து கொண்டிருந்தாள். நாலு மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து வருவதாக தகவல் நேற்றே வந்து விட்டது. அம்மா அந்த எண்ணத்தில் நேற்றிலிருந்தே முழ்கி விட்டாள். இன்று மதிய உணவு முடிந்ததிலிருந்தே, வருபவர்களுக்காக, இனிப்பு கார வகைகளை தயாரிப்பதிலிருந்து ,பூ ,பழம்,இத்யாதி வாங்கி வர வெளியிலும், அலைந்து கொண்டே, நடுநடுவே வீட்டிலும் அனைவரையும் விரட்டியபடி காலில் சக்கரம் இல்லா குறையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்..! “ஏம்மா .! இப்படி? கொஞ்சம் ௬லாதான் இரேன்.! என்றான் சந்துரு.

னக்கென்னடா தெரியும்.! அந்த காலத்தில் இப்படி கல்யாணம் பேசி முடிக்க வருகிறார்கள் என்றால், வீடே அமர்க்களப்படும். பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, என்று உறவுகள் சூழ அன்றே கல்யாண களை கட்டி விடும். பெண்ணை கட்டிக்கொடுத்து கண்ணாற வாழ்றதை பாக்கறது என்றால் சும்மாவா.? நீ அப்படியே நின்னுகிட்டு இருக்காமே, அந்த சேரையெல்லாம் அப்படி சோபா பக்கத்துலே வரிசையா போடு. ! அவங்க வீட்டுலேயிருந்து எத்தனை பேர் வர்றாங்களோ? நேத்து பேசும் போது எப்படியும் ஆறு பேர் கண்டிப்பான்னு அவங்க வீட்டிலே சொன்னாங்க.! இன்னைக்கு ௬ட ரெண்டு பேர் சேர்ந்திருக்கலாம்.! என்ற அம்மா பதிலெல்லாம் எதிர்பாராமல், காற்றினும் வேகமாக வாசல் பக்கம் சென்றாள். வாசலில் நின்று கொண்டிருந்த அப்பாவை ஏதேனும் வேலை வாங்கத்தான் இருக்கும்என சந்துரு லேசாக சிரித்துக் கொண்டான். 

அம்மா எப்போதுமே இப்படித்தான்.! இந்த கல்யாண பேச்சுகள் ஆரம்பித்தலிருந்து, ஒவ்வொரு தடவையும் கேசரியும், பஜ்ஜி அல்லது வடைகளாக பண்ணி வைத்துக் கொண்டு அவர்களை நல்ல நேரத்தில் வரவேற்பதிலிருந்து, வந்து பார்த்து விட்டு போன பின், அவர்களின் விருப்பத்தை அப்பாவை விட்டும், தானும் நாசூக்காய் பல தடவை கேட்ட பின் அவர்கள் ஒத்து வரவில்லை யென்றால், “போகிறது! அவர்ளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் பண்ண கொடுத்து வைக்கவில்லை.!” என்று சாமாதானம் சொல்லியபடி வேறு இடத்தில் பேச ஆரம்பித்து விடுவாள். சந்துரு ஒவ்வொரு தடவையும் சொல்லி பார்த்து விட்டான். “சாதரணமாக இரும்மா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணாதேவென்று.” அம்மா கேட்டால்தானே! 

உள்ளிருந்து தங்கை சியாமளா அலங்கார தேவதையாய் எட்டிப் பார்த்தாள். வெளியிலிருந்து அதே பரபரப்புடன் வந்த அம்மாவிடம், “அம்மா.! நான் எப்படி இருக்கிறேன்.? இது போதுமா? இன்னும் கொஞ்சம்…” என்றதும் சந்துரு பொறுமை இழந்தவனாய், “போதாது! பேசாமே ப்யூட்டி பார்லருக்கு போய் கல்யாண பெண் மாதிரியே மாறி வா!” என்றான் சற்று கடுப்பாக.

பாரும்மா.! இவனுக்கு என்ன வந்தது.? என்னை எப்படி கிண்டல் அடிக்கிறான் பாரு! என்று பதிலுக்கு அவள் கத்த, “சந்துரு! அவளை ஏன் வம்புக்கு இழுக்கிறே.! ஆமா நீ ஏன் இப்படியே இருக்கே.! நீ முதல்லே நல்ல டிரஸ் பண்ணிட்டு வா.! அவங்க வர்ற நேரம் ரெடியா இருக்க வேண்டாமா.? என்று அம்மா பதிலுக்கு பேச ஆரம்பிக்கும் போதே வீட்டு ஃபோன் அடித்தது.

அப்பா எடுத்துப் பேசியதில், “கல்யாணம் பேச வருகிறவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் சற்று தொலைவுக்கு அப்பால் இருப்பதாகவும், எப்படி வர வேண்டுமென விபரமாக வழி கேட்கவும், அப்பா சொல்லி முடித்ததும், அம்மா பரபரப்பின் உச்சிக்கே போய்விட்டாள்.

சந்துரு.! சீக்கிரம் டிரஸ் மாத்திகிட்டு வா.? என்னங்க வாசல்லே போய் அவங்களை வரவேற்க ரெடியா நில்லுங்க.! நானும் இப்ப வந்திடுறேன். சியாமளா.! கொஞ்சம் என் ௬ட கிச்சனுக்கு வா, உனக்கு ஒரு சின்ன வேலை.! என்றவளாய் பதினாறு வயது பெண் மாதிரி உள்ளே ஓட, சந்துரு வேறு வழியின்றி ஆடையை மாற்ற தன் அறைக்கு நகர்ந்தான்.
  
ஆச்சு.! வந்தவர்கள் வந்து, பார்த்து பேசி, அம்மாவின் கைமணமான பஜ்ஜி, காப்பியை புகழ்ந்து கொண்டாடி, வீட்டை சுற்றிப் பார்த்து இன்னும் ஒரு அறை கட்டியிருக்கலாமே, எப்போது வாங்கினீர்கள்.? என்ற மாதிரியெல்லாம், பொதுவாக பேசி, சொந்தங்களின் ஊரைக் கேட்டு, அந்த ஊரில்தான் என் ஒன்று விட்ட அண்ணா இருப்பதாகக் ௬றி, ஓ அவரா..? நல்லா தெரியுமே..! என்று அவரை நினைவு ௬ர்ந்து, முடிவில் நாம் ஒருவருக்கொருவர் நெருங்கி விட்டோம்.! ஏற்கனவே பாதி சொந்தமாகி விட்டோம். இனியும் எதையும் தள்ளிப்போடாமல் திருமணத்தை முடித்துக் கொண்டு, இன்னும் நெருங்கிய சொந்தமாகி விடுவோம்..! என்ற ரீதியில் பேசிச் சென்று பத்து நாட்களாகி விட்டது. அதன் பிறகு அவர்கள் வீடு சென்று பத்திரமாக சேர்ந்தாக வந்த தகவலோடு, அதன் பிறகு ஒரு பேச்சில்லை.! தொடர்பில்லை..!

என்னங்க..! அவர்களுக்கு ஃபோனை போட்டு பதிலை கேளுங்க.! வந்து பாத்திட்டு போய் பத்து நாளாச்சு.! இப்படி தகவல் சொல்லாமே இருக்காங்களே..!” என்னத்தான் செய்றது ..? என்று அம்மா அப்பாவிடம் வருத்தத்துடன் அங்கலாய்பாய் பேசிய அன்றைய தினம் சந்துருவும் விடுமுறையில் வீட்டிலிருந்ததால், சற்றுகோபத்துடன் கத்த ஆரம்பித்தான்.

அம்மா.! ஏம்மா இப்படி செய்றே.? இதை வேலையா போச்சு உனக்கு.! இப்படி கஸ்டப்பட்டு கல்யாணத்திற்கு யார் அழுகிறார்கள் இப்போது.? இப்படி பேசி, பேசி உங்களையும் தாழ்த்திக் கொண்டு,.. என்று முடிக்கும் முன், அம்மா அவசரமாய் அருகில் வந்து அமர்ந்தபடி, “சந்துரு..! அப்படியெல்லாம் பேசாதேடாகல்யாணங்கறது புனிதமான பேச்சு. இதில் அழுகை, கஸ்டம் அப்படியெல்லாம் சொல்லாதே.! உங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்குறது எங்க கடமையில்லையா..? என்றாள் லேசாக கண் கலங்கியபடி.

சரிம்மா..! அதுக்காக நாம ஏன் இப்படி மாறணும். பொதுவா பொண்ணுங்க வீட்டிலேதான், இப்படி ஒரு எதிர்பார்ப்பு, பயம், அவசரம் எல்லாம் இருக்கும். இங்கே எல்லாம் மாத்தியிருக்கே.? இதுவே சியாமளாவுக்கு நாம இப்படியெல்லாம் நடந்திண்டிருந்தா சரி..!

காலம் மாறிப் போச்சு சந்துரு! நாம இவ்வளவு மாறுதலா இருந்துமே,  இங்கே நம்ம பொண்ணை வாழ அனுப்பலாமா? வேண்டாமான்னு, அவங்க வீட்டுலே எப்படி யோசிக்கிறாங்க பாரு..? மாறி வர்ற இந்த கால கட்டத்திலே, அவங்க அவங்களே தங்களுடைய இஸ்டத்துக்கு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிற, அதை சுதந்திரம்னு சொல்லறதா? இல்லை பக்குவமன்னு சொல்லறதான்னு தெரியாத ஒருநிலை வந்தாச்சு.! இன்னும் நம்ப வீட்டுலே, உன் அப்பா வழியிலும் சரி! என் வழியிலும் சரி! எங்க அப்பா, அம்மா பேச்சை மதித்து அவங்க காட்டிய பாதையில்தான் எங்க வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு குறைவுமில்லை.! அதே மாதிரி நீங்க ரெண்டு பேரும் இது வரைக்கும் எங்க பேச்சை எதுக்கும் தட்டாமே வளர்ந்து வர்றீங்க.! அப்படியிருக்கும் போது உங்க இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கையை அமைக்க வேண்டியது எங்க கடமையில்லையா..? இரண்டாவது, உனக்கும் நான் அம்மாதான்!. சியாமளாவுக்கு பண்ற மாதிரி உனக்கும் செஞ்சு வரப் போற பொண்ணை தேடறதல்லே என்ன தப்பு.? எப்படியோ உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைச்சு சியாமளிக்கும் நல்ல இடத்திலே அமைஞ்சுடுத்துனா, நாங்க நிம்மதியா இருப்போம்.! என்னங்க நா சொல்லறது நியாந்தானே.? என்று நீண்ட விளக்கத்துடன் அப்பாவையும் தன் பக்கம் நியாயம் சொல்ல அழைத்தாள் அம்மா.

பாசம் மிகுந்த தன் அம்மாவை பார்த்தபடி, தங்கள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென துடிக்கும் அந்த இரு உள்ளங்களின் அன்பை மறுத்து ஏதும் சொல்ல முடியாத மனமுடன் அமைதியாயிருந்தான் சந்துரு..! இவள் மட்டுமில்லை.! இந்த உலகத்துலே பிறந்த ஒவ்வொரு பெண்ணும், வளர்ந்து பெரியவர்களானதும், தன் பாசம் முழுவதையும் தன் குழந்தைகளுடன் பங்கிட்டு அவர்களுக்காகவே வாழ்ந்து சந்தோசமடைகிறார்கள். அந்த மனோபாவத்தை, பக்குவத்தை அவர்கள் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.. என்ற சிந்தனை அவன் மனதில் ஓடியது. ௬டவே, தன் அம்மாவின் குணத்திற்கு ஏற்ற மருமகளும், மருமகனுமாய், வந்து அமைய வேண்டுமே, என்ற ஆதங்கமும் வந்து சேர்ந்து கொள்ள. அந்த தாயின் பாசத்திற்காக அதை சுமூகமாக நிறைவேற்றி வை.. எனக் கடவுளிடம் வேண்டும் போது, அப்படித்தான் நடக்கும்! என்ற நம்பிக்கை கீற்றும் அவன் மனதில் உதயமானது.

வணக்கம்...

அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! மகளிர்தினப் பதிவாக அன்னையரைப்பற்றியா...? என எண்ண வேண்டாம்..
அனைத்து மகளிரும், ஒரு அன்னையராவது இயற்கைதானே..!
மகளி(ன்)ரின் சிறப்பே அன்னை என்ற வார்த்தையில்தானே அடங்கி உள்ளது..

நன்றி
 

   படங்கள் ------- ௬குள்.!  நன்றி.!