Tuesday, September 15, 2020

ஸ்ரீகிருஷ்ண பக்தி.

 முன்னுரை 

இக்கதையை அனைவரும் படித்து அறிந்திருப்பீர்கள். நானும் இதை எத்தனையோ எழுத்தாளர்களின் வர்ணிப்பில் ஆழ்ந்து படித்திருக்கிறேன். அன்றிலிருந்தே என் எழுத்தில் இக்கதையை எழுத நான் ஆசைப்பட்டதை உணர்ந்த கண்ணன் இப்போதாவது என்னை எழுத வைத்து விட அவனும் நினைத்தான் போலும்.. .! சரி.. .இதை  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு (கோகுலாஷ்டமி) எழுதலாமென நான்,  நினைக்கும் போது அவனே எங்கள் விட்டில் அவன் வந்த கதையை எழுத வைத்து விட்டான்.  போன வாரமும் வந்து முடிந்த ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்திக்குள் எழுதி முடித்து விடலாம் என்று ஆரம்பித்த கதை தடைப்பட்டு அவனருளால் இன்றுதான் முடிவுற்றது. 

ஆரம்பமும், முடிவும் அவனேயாகி நிற்கும் அவன் துணையின்றி, ஒரு துரும்பும் அசையாத போது, நம் வாழ்வில் நடக்கும் கதையின் நகர்வும், நாம்  நிர்ணயக்கும்  ஒவ்வொரு செயலும்,  அவனுடையதல்லவா?அப்படியிருக்கும் போது நம்மை இப்படி  எழுத வைத்துப் பார்ப்பதும், ரசிப்பதும் அவன் பொறுப்புத்தானே...! தவிர இந்த நாள் என்றில்லாமல் என்றுமே அவன் நாள்தானே. ..! ஒவ்வொரு நாளுக்குள்ளும் நின்று நம்மை நகர்த்துபவனின் மாய சக்தியை உணர்வது மட்டுமே நம் கடமை. ....!   பிற அனைத்தும் அவனின் செயல்தானே....!

ஸ்ரீ கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச நந்த கோப குமாராய ஸ்ரீ கோவிந்தாய நமோ நமஃ. 

ஒரு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில். இரவுநேரம் ஸ்ரீமத்பாகவத உபன்யாசம் நடைபெற்று கொண்டிருந்தது. அன்றைய தினம் பாகவதத்தில்  ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும், மாடு மேய்க்க அன்னை யசோதாவிடம் அனுமதி பெற்று, அன்புடன் அன்னை கையால், காலை பலகாரங்களை உண்டபின் ஒரு கானகம் வழியாக மாடுகள் சகிதம் சென்று கொண்டிருப்பதை பாகவதர் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் அணிந்த அணிகலன்கள் அந்த கானகத்தின் இருளையும் போக்கவல்லதாக எப்படி ஜொலிக்கிறது.. . அவர்களுடன் மேனி எழிலுடன் அது எவ்வாறு போட்டியிட்டு ஜெயிக்கப் பார்க்கிறது என்பதை மெய்யுருக தமது பாணியில் சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லி கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஊரில் திருட வந்த ஒரு திருடன் "ஊர்மக்கள் அனைவரும் இங்கு குழுமியுள்ளனர். இப்போதுதான் நான் சென்று திருட முடியும்" என்று  நினைத்தவன். தற்செயலாக அந்த பாலகர்கள் சிறந்த நகை நட்டுக்களுடன் தனியாக கானகத்தில் தினமும்  வருகின்றனர் என்று பாகவதர் வலியுறுத்திக் கூறும்  செய்தியில் கவரப்பட்டு ஒரு நொடி யோசித்தான். 

"இந்த ஊரில் இன்றிரவு முழுவதும் வலை வீசிி தேடும் பொருளை விட அந்த பாலகர்கள் தனியாக வரும் காட்டை இந்த பாகவதர் மூலமாக தெரிந்து கொண்டால், ஒரே நாளில் மிக சிறந்த செல்வந்தனாகி விடலாம்... அடேயப்பா...! எவ்வளவு நகைகளை பட்டியலிட்டு கூறுகிறார். தலையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கீரிடங்கள், காதுகளில் வைர குண்டலங்கள், மார்பில் வைரக்கற்களால் இழைக்கப்பட்ட பொன்னாபரணங்கள், இடுப்பில் ஒட்டியாணம், காலில் பொற்சலங்கைகள், இது போக அந்த சின்னஞ்சிறு பாலகன்  கிருஷ்ணனின் கைகளில் உள்ள தங்கப் புல்லாங்குழல் அத்தனை விலைமதிப்புள்ளதாம்... இத்தனையும் தரித்துக் கொண்டு யாருமில்லாத அத்துவான காடு வழியாக தன்ந்தனியராக"..இது மட்டுமேஅந்த திருடனின் மனதில் மறுபடி மறுபடி ஓடிக் கொண்டேயிருந்தது." அங்கு சென்று அந்த பாலகர்கள் மடக்கி எல்லாவற்றையும் அபகரிக்க எவ்வளவு  நேரமாகப் போகிறது.. . .? அனேகமாக நான் நாளையே பெருஞ் செல்வந்தன் ஆகி விடுவேன்." ஆனந்தமான கற்பனைகளில் அவன் கண்கள் அசர மேற்படி பாகவதர் சொன்னதை அவன் செவி மடுக்கவில்லை. 

ஒரு மட்டும் நள்ளிரவில் அவர் தன் உரை முடித்து, அமர்ந்திருந்த ஊர்மக்கள் கலையத் தொடங்கியதும், தன் வீடு திரும்ப  கோவில் வாசலில் கோவில் நிர்வாகிகள்  அமர்த்தி தந்திருந்த மாட்டு வண்டியில், ஏறுவதற்காக வந்தவரை, "ஐயா. . ஒரு நிமிஷம்.. ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். இப்படி தனியாக வருகிறீர்களா? என்ற திருடனை பார்த்ததும்,  "சரி..! என் பாகவதத்தில் இவனுக்கு ஏதும் சந்தேகம் வந்துள்ளது போலும்"... என்று நினைத்தபடி அவனுடன் சென்றார். 

கோவில் பின்புறம் யாருமில்லாத இடத்திற்கு வந்ததும், "ஐயா..நான் ஒரு திருடன். இன்று தங்கள் பேச்சில் நிறைய நகைகளுடன் வந்த இருபாலகர்களைப் பற்றி கூறினீர்கள்..! அவர்கள் எங்கு எந்த காட்டில் வருகிறார்கள். எனக்கு அடையாளம் காட்டுங்கள். அவர்கள் அணிந்து வரும் நகைகளை நான் கொள்ளையடிக்க வேண்டும். செல்வந்தனாக வேண்டும். வேண்டுமானால அதில் கொஞ்சம் உங்களுக்கும் தருகிறேன்." என்றான் திருடன். 

பாகவதருக்கு அவன் திருடன் என்றதும் ஒரு நிமிடம் உடம்பு வெலவெலத்தது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு,  "அப்பா.. அவர்கள் புராணங்களில் வருகிறவர்கள். கதை மாந்தர்களான கடவுள்கள்.. அவர்களை நாம் நேரில் காண முடியாது.. நான் ஏதோ என் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி புராண கதைகளை விரிவாகவும், இடையில் என் கற்பனைகளையும்  கலந்து சொல்லி வருகிறேன். இதில் உண்மையாக அவர்களை நான் எப்படி அடையாளம் காட்டுவது? என்று சிறு நகைப்புடன் கூறவும் திருடனுக்கு மிகையான கோபம் எழுந்தது.

"ஐயா. . நான் இப்படி சாந்தமாக கேட்டால் சொல்ல மாட்டீர்கள். அவர்களை காப்பாற்ற நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். என் கோபத்தை இப்போது செயலிலும் காட்டப் போகிறேன். நீங்கள் அவர்கள் வரும் வழியை சொல்லாவிட்டால் இப்போதே உங்களை கொன்று விடுவேன்." என்றபடி தன் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து அவர் கழுத்தில் வைத்தான். 

பாகவதருக்கு கத்தியை கண்டதும் பாதி உயிரே போய் விட்டது." அடேய் இருப்பா..! நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையிலேயே அவர்கள் கடவுள்கள்.. அவர்களை இந்த மானிடப்பிறவியில் கண்களால் காண முடியாது" என்றெல்லாம் மறுபடியும் அவனுக்கு புத்தி சொல்ல வந்தவர், அவன் கத்தியை தன் கழுத்தில் வைத்து கண்டிப்பாக அழுத்தி விடுவான் என்பதை அவன் விழிகள் சிவந்து கோபமுற்ற பார்வையில் உருளுவதை பார்த்ததும், வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொண்டார். 

" அப்பா. . என்ன இது? இதற்கெல்லாம் நீ கத்தியை காட்டுவாயா? எனக்கும் அவர்கள் வரும் விபரம் தெரியுமேயன்றி, எந்த காடு என்பது விபரமாக தெரியாது . அது இதோ எதிரில் இருக்கும் இந்த காடாக கூட இருக்கலாம். நீ அங்கு சென்று காத்திரு. ஒரு வேளை அவர்கள் இந்த வழியாக  வந்தாலும் வரலாம்." என்று தட்டுத்தடுமாறி ஒரு சமாளிப்புக்காக சொன்னதும்,  "சரி!.. உன் பேச்சை நம்பி இப்போதே போகிறேன். நாளை காலையில் நீ சொன்ன அந்த கண்ணன் வருவானில்லையா? அப்படி வரவில்லையென்றால், நான் திரும்பவும் இங்குதான் வருவேன். அதற்குள் அவர்கள் எந்த காட்டில் வருவார்கள் என்பதை யாரிடமாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வந்தவுடன் விபரம் சொல்ல ஏதுவாக இருக்கும். இப்போது நீங்கள் போகலாம்.." என்றபடி அவரை விடுவித்தான் திருடன். 

அவனிடமிருந்து தப்பித்த பாகவதருக்கு உடம்பு கைகால்கள் சில்லிட்டு விட்டது." "சே..! திருடனாக மட்டுமில்லாமல், சரியான பைத்தியகாரனாகவும் இருக்கிறான்.என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறானே..! கிருஷ்ணரின் நகைகளாம்...! இவன் போய் கொள்ளையடிக்கப் போகிறானாம்...! நாம் வேறு இன்னமும் சில நாட்கள் இங்கு வந்து பாகவதம் செய்ய ஒப்பந்தமாகி உள்ளது. அதை முடித்து விட்டால் அவன் கண்களிலிருந்து தப்பித்து நம் ஊருக்கு சென்று விடலாம். அது வரை இப்படி ஏதாவது சொல்லி தப்பிக்க வேண்டும். கண்ணா.. நீதான் எப்படியாவது என்னை காப்பாற்ற வேண்டும்"என்றெல்லாம் மனதுக்குள் புலம்பிக் கொண்டே தம் இருப்பிடம் போய் சேர்ந்தார். 

அங்கு திருடன் உடனே  அந்த நள்ளிரவிலும் அந்த காட்டிற்குள் பயணித்தான். மறுநாள் விடிந்தவுடன் தனக்கு கிடைக்கப் போகும் செல்வங்களையும், அதற்கு காரணமாக அந்த இரு சிறுவர்களையும் நினைத்தபடி பயமின்றி அந்த காட்டுக்குள் சென்று கொண்டேயிருந்தான் . 

அடர்ந்த காடு.. .. . திருடனுக்கு இருட்டை பற்றி கொஞ்சமும் பயமில்லை.. ஆனால், காட்டு மிருகங்கள் வந்து தாக்கி விடுமென்ற ஒரு சிறு பயத்திற்காக, ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அங்கிருந்து மிக லேசாக புலரும் அதன் வடிவ அடையாளம் கொண்டு கிழக்கு திசை நோக்கி  பார்த்தபடியிருந்தான். அந்த பாகவதரும் கண்ணன் கிழக்கு திசையிலிருந்து வரும் போது எப்போதும் தினமும் உதிக்கும் ஆதவனை விட ஆயிரம் கோடிப் பிரகாசமாக கண்ணன் நடந்து  வருவதாக குறிப்பிட்டிருந்தது நினைவில் நின்றதால் கிழக்கு திசையைத் தவிர அவன் கண்கள் வேறு திசையை நோக்கவில்லை. 

இடையே விடியலில் நேரத்தில் கண்கள் தூக்கத்தில் சிக்கித் தவிக்கும் போது, விழிகளை அழுத்தி கசக்கியபடி, கண்ணனின் நகைகளையும், அவன் உருவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து"இதோ அந்த பாலகன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் வரவை வழிமேல் விழி வைத்திருந்து பார்க்க வேண்டாமா? அதற்குள் நீ அலுப்பில் அசந்தால் எப்படி. .?" என்று தன் விழிகளை வைதபடி தனககுள் கடிந்து கொண்டான். 

அன்றிரவு நீண்ட நேரம் போனது மாதிரியே உணர்ந்தான். மறுபடி மரத்திலிருந்து இறங்கி, ஏறினான். "என்ன இது? இந்த கண்ணன் நேரத்தில் வந்து விடுவானா.. தெரியவில்லையே? " என தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான். பொழுது விடியும் நேரம் நெருங்குவதறகு அறிகுறியாக புள்ளினங்கள் தத்தம் குரல் இனிமையை வெளிக்காட்டி, தம் காலை வணக்கத்தை இயற்கைக்கு சமர்பிக்க ஆரம்பித்தன.  

சூரியன் இரவின் அணைப்பில் சற்று சேர்ந்திருந்த தன் தேகச்சோம்பலை உதறி  விட்டு தான் போர்த்தியிருந்த இரவு போர்வையை சிறிது விலக்கி பார்த்து விட்டு, இவ்வுலகம் ஒவ்வொரு நாளும், தன் வருகையை ஒரே மாதிரி எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்பதை சந்தோஷமாக உணர்ந்தவனாய், தன் இயல்பான ஒளிக் கிரணங்களை மெல்ல தன்னைச் சுற்றிலும் பாய்ச்சியபடி வான வீதியில் உலா வருவதற்கு ஆரம்ப ஆயுத்தமாக  தன் கால்களை பதிக்க ஆரம்பித்தான். 

"இந்தக் கண்ணன் இன்று தாமதிக்கிறானா? இல்லை, இன்று வர வேண்டாமென நினைத்து விட்டானா? சூரியனை தோற்கடிக்கும் ஒளியுடன் அவனுக்கு முன் இந்த கானகத்தில் கால் பதிப்பான என அந்த பாகவதர் கூறினாரே.. ! ஒரு வேளை அவர் இரலென்றும் பாராமல்,, அவன் வீடு சென்று ஏதாவது எச்சரித்து சொல்லித்தான் அவன் இன்று  வராமல் இருக்கிறானோ. ..! விடிந்ததும் அவன் வரவில்லையென்றால் அவர் இருப்பிடம் சென்று விசாரிக்கும் போது, அவர் மட்டும் அப்படி சொல்லியிருப்பது தெரிய வந்தால், அக்ஷணமே அவரை கொல்லாமல் விடக் கூடாது...! " என்றெல்லாம வாய் விட்டு பல்லை கடித்து புலம்பியபடி கிழக்கு திசையையே உற்றுப் பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் பளபளத்தன. 

அங்கே பாகவதர் சொன்ன மாதிரி ஆயிரம் கோடி பிரகாசமாய் ஒரு ஒளி பிரகாசித்தது. அதைக்கண்டு தன் கிரணங்களை அதட்டி சுருட்டிய மாதிரி சூரியன் தன் ஒளிப்பாய்ச்சலை சற்று மங்கிப் போகச் செய்தான். மீண்டும் சற்று இருளான அந்த இருளில். கண்ணனும், அவன் சகோதரனும் கை கோர்த்தபடி, வந்து கொண்டிருப்பதை அந்த திருடன் கண்டான்.

அந்த பாகவதர் வர்ணித்த மாதிரி அவர்கள் அணிந்திருந்த நகைகள் வேறு மேலும் இருளை விரட்டி ஒளியூட்டின. அந்த திருடன் விழி அசைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ணனின் கையிலிருந்த தங்கப் புல்லாங்குழல் என்ற கருவியிருந்து  வந்த இனிய இசை நாதத்தில்  அவன் கண் மூடி மெய் சிலிர்த்து சிறிது நேரம் சமைந்து போனான். "என்ன இது? அவர்கள் வருவதற்குள் மரத்திலிருந்து கீழிறங்கி, பதுங்கியிருந்து தீடிரென அவர்களை வழிமறித்து நகைகளை பறிக்க வேண்டுமென்ற எண்ணமின்றி, முன்பின் தெரியாத, இது வரை கேட்டிராத இந்த இசையில் இப்படி மயங்கி கண்மூடி இருக்கிறோமே" என்று சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்தவனாய் வெட்கி தன் அசட்டுத்தனத்தை புறந்தள்ளி விட்டு மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அதற்குள் கண்ணனும், மிக அருகில் வந்து  விடவே, ஆச்சரிமுற்று அவனைப் பார்த்த திருடன் அவனை வழிமறிப்பதை விட்டு விட்டு அவன் அழகிய முகத்தை பார்ப்பதொன்றே தான் வந்த காரியத்தில் ஒன்றென நினைப்புடன் அவனை பார்த்தபடியே நின்றிருந்தான் . 

"என்ன இரவிலிருந்தே எங்களை எதிர்பார்த்தபடி மரத்தில் சிரமமான வாசமோ?" தன்னருகில் வந்தவன் தன்னுருவத்தை கண்டும் சிறிதும் பயமின்றி இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று நினைக்காத திருடன்  சற்று பிரமித்தான். 

ஒருவாறு சமாளித்தபடி, "ஆமாம்.  நீங்கள் யார்? இந்த இருட்டுப் பிரியாத நேரத்தில், இத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டு, தன்னந்தனியராக பெரியவர்களின் துணையில்லாமல், யாரேனும் கள்வர்கள் வருவார்களே என்ற பயம் சிறிதுமின்றி காட்டு வழியே இப்படி வரலாமா? என்று கேட்ட திருடன் தன் குரலிலும், இப்படி ஒரு கனிவு எப்படி வந்தது என ஆச்சரியமடைந்தான். 

"கள்வர்களா ? யார் அவர்கள்? நாங்கள் இதுவரை அவர்களை பார்த்ததேயில்லை. அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தானா. .? ஐயோ. எனக்கு பயமாக இருக்கிறதே. ...!" சற்று பயந்த மாதிரி கண்ணன் நடிக்கவும், திருடனின் மனதில் அளவற்ற பாசம் அவன் மேல்  பிரவாகமாக எழுந்து ஆர்ப்பரித்து பொங்கியது. 

" குழந்தைகளா.. .! பயந்து விடாதீர்கள்.  இவ்வளவு அழகான குழந்தைகளை இத்தனை நகைகள் இட்டு இந்த இருட்டுப்பிரியாத நேரத்தில் அனுப்ப உங்கள் பெற்றோருக்கு எப்படி மனசு வந்ததோ. .? இதோ பாருங்கள்.. நான் சொல்வதை கேட்டு பயந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்தவுடன் உண்மையை மட்டும் சொல்ல வேண்டுமென ஏதோ எனக்குள் தோன்றுகிறது. நான் கூட ஒரு கள்வன்தான். அதுவும் அந்த பாகவதரின் பேச்சைக் கேட்டு உங்களையே வழிமறித்து உங்கள் நகைகளை அபகரிக்க வந்தவன்தான் . .! ஆனால்,, உங்கள் முகத்தைப் பார்த்ததும்  எனக்கு அந்த ஆசையே போய் விட்டது. எப்படியென்றும் தெரியவில்லை...." என்றபடி கண்ணனின் மோவாயை தொட்டவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வில் சிலிர்த்துப் போனான். 

நீ கள்வனா...! அப்படியென்றால் இந்த நகைகளெல்லாம் உனக்கு வேண்டுமா? நாங்கள் தர முடியாது என்றால், வலுவில் எங்களை அதட்டி மிரட்டி அதையெல்லாம் அபகரிப்பாயா? கண்ணன் இன்னமும் பயந்தது போல் நடிக்க, "ஐயோ.. அப்பா. . இதென்ன இப்படி கேட்கிறாய்?உங்களைப் போய்  அதட்டி மிரட்டுவேனா? நான் உங்களை பார்ப்பதற்கு முன்பு வரை களவன்தான். .. இப்போதுதான் எனக்கு அந்த எண்ணமே இல்லையே. ..! என்றான் திருடன் பரிதவித்த குரலில். 

கண்ணன் ஒரு புன்முறுவல் பூத்தபடி,  "அப்பாடி... நான் பயந்து விட்டேன். நீ நல்ல திருடன்தான். ஆனால், நீ ஆசைப்பட்டு இங்கு வந்த காரணப்படி, எங்கள் நகைகளை பரிசாக உனக்குத் தருகிறோம். வாங்கிக் கொள்...! என்றான். 

" இல்லையில்லை. .. எனக்கு வேண்டாம். எனக்கு அந்த ஆசையே முற்றிலுமாக போய் விட்டது. உன்னைப் பார்த்துக் கொண்டே இந்த பிறவி முழுவதும் இப்படியே இருந்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், அது சாத்தியமல்லவே ... .! இவ்வளவு அழகான உங்களை கண்ட நொடியிலிருந்து எனக்குள் இத்தனை மாற்றமா? உங்களைப் பெற்றெடுத்த அந்த புண்ணியவான்களுக்கு நீங்கள் குழந்தைகளாக இருக்க வேண்டாமா? பத்திரமாக போய் வாருங்கள். இந்த திருடன் மீது இந்நேரம் உனக்கும் பாசம் வந்திருந்தால் எனக்காக ஒரு உபகாரம் செய்வாயா? "என கண்ணனின் அழகு முகத்தைப் பார்த்தபடி கைக் கூப்பி கெஞ்சினான் அந்த திருடன். 

அவன் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. 

" என்ன செய்ய வேண்டுமென்று கூறு.. ! என்னால் முடிந்தால் கண்டிப்பாக அதைச் செய்கிறேன்" கண்ணன் அன்புடன் அவன் கைத் தொடவும், மறுபடி ஒரு மின்சாரம் பாய்ந்தது திருடனின் உடலில். 

ஒரு நொடி பேச மறந்து அந்த தொடுவுணர்வு தந்த இன்பத்தில் திளைத்த திருடன், "அப்பா,  தினமும் நான் இங்கு வந்து விடுகிறேன். நீயும் மறக்காமல், இவ்வழியே வந்து உன் அழகான முகதரிசனத்தை எனக்குத் தருவாயா.  ? அது ஒன்றே எனக்குப் போதும்.. .! உன்னிடம் நான் வேண்டுவதும்  அதுவேதான்..."வேறு எதுவும் எனக்கு வேண்டியதில்லை.. .. எதையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஆசைகளும் இல்லை. ...." மேற்க் கொண்டு பேசவும் முடியாமல், தன்னை கட்டுப்படுத்த தெரியாமல்,  திருடன் உணர்ச்சிவசப்பட்டு குமுறி  குமுறி அழலானான். 

கண்ணன் முகத்தில் மந்தகாசம் இன்னமும், கூடியது. அருகிலிருக்கும் சகோதரனைப் பார்த்து சிறு நகைப்பொன்றை வீசினான். 

" சரி. . உன் விருப்பம் அதுவானால் நானும் உடன்படுகிறேன். ஆனால் தினமும் அல்ல.. உனக்கு வேண்டும் போது, நீ நினைத்தவுடன் வருகிறேன். அதற்கு பிரதி உபகாரமாக நான் தரும் இந்த நகைகளை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீ சொல்வதை நான் கேட்பேன்." என கண்ணன் தன் பேச்சால் திருடனை மடக்கவும், திருடனும், அரைகுறை மனதோடு சம்மதித்தான். 

கண்ணனின், மற்றும் பலராமனின் நகைகள் கை மாறின. தன் மேல் பட்டு அங்க வஸ்திரத்தில், கண்ணன் தலையிலிருந்த கீரிடத்திலிருந்து, காலில் அணிந்திருந்த சலங்கை கொலுசு வரை அனைத்தையும் கழற்றி முடிந்து கொடுத்தான். ஒவ்வொன்றாக அவன் களையும் போது. திருடன் தவித்தான். "வேண்டாமப்பா... .அதை மட்டும்  கழற்றாதே.. இது போதும் எனக்கு... . நீ இவ்வளவு பிடிவாதமாக தருவதினால்தான் இதையெல்லாம் வாங்கியேக் கொள்கிறேன். உன் தரிசனம் வேண்டும் போது கிடைப்பதற்காகத்தான் இதற்கு ஒப்புக் கொண்டேன்." என அவன் உணர்ச்சி வசப்பட்டு கூறுவதை புன்னகையுடன் கேட்டபடி, "பரவாயில்லை.. பெற்றுக் கொள். எங்களிடம் இதைப் போன்று நகைகள் ஏராளமாக உள்ளது. தவிர நீ இன்று ஒன்றுமில்லாமல் வெறும் கையை வீசிக் கொண்டு உன் வீட்டிற்கு சென்றால், உன் உறவுகள் கோபித்து தூஷனை செய்யமாட்டாார்களா? அதனால் நான் விருப்பமாாகத் தருவதை பெற்றுக் கொள்் " என சமாதானபடுத்தியபடி அவன் தந்ததை பெற்றுக் கொண்ட திருடன் கண்ணனை  பிரிய மனமின்றி கண்ணனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர்களை திரும்பித் திரும்பி பார்த்தபடியே அந்த அதிகாலை பொழுதில் அந்த கானகத்தை விட்டு தன் உயிரைப்பிரிந்த ஒரு மனோ பாவத்துடன் வெறும் கூடான தன்னுடலை மட்டும் சுமந்தபடியான உணர்வுடன்  நடந்து சென்றான். 

காலையில் கண் விழித்த பாகவதருக்கு நேற்றிரவு நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. இன்றும் அந்த திருடன் வந்து என்னவெல்லாம் சொல்வானோ? "நேற்று இரவெல்லாம் அந்த கானகத்தில் காத்திருக்க வைத்து விட்டாயே. .! பொய்யா சொல்லுகிறாய்? எங்கே அந்த குழந்தைகள்? அவர்களை நீ எங்கே ஒளித்து வைத்து விட்டாய்?" என்று கையிலிருக்கும் கத்தியை எடுத்து காட்டி எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப் போகிறானோ. ..! நினைப்பு ஒரு பக்கம் நடுக்கத்தை தந்தாலும், மாலை கோவில் உபன்யாசம் சொல்வதற்கு செல்கிற வரை வேறு எங்காவது சென்று  அவன் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென தன்னை வெளியில் செல்ல தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். 

அப்போது வாயிற்கதவை தட்டும் சப்தம் கேட்கவே. "யார் இந்த நேரத்தில்" என்றவாறு கதவை திறந்தவருக்கு உயிரே போனது மாதிரி இருந்தது. யாரை நினைத்தபடி இவ்வளவு நேரம் விசனமடைந்தாரோ, யார் கண்ணில் படாமல் மாலை வரை எங்காவது சென்று விட விருப்பப்பட்டாரோ, அவனை வாசலில் வந்து நிற்கவும் பாகவதருக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. 

" நீயா"என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து தட்டுத்தடுமாறி வருவதற்குள், அவன் "ஐயா..! என்றபடி அவர் காலில் வேரறுந்த மரமாய் விழுந்தான். 

" எழுந்திரப்பா. .என்ன இது.. ? என்னவாயிற்று உனக்கு ..ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்? "என்றபடி அவர் பதற திருடன் எழுந்து," ஐயா. . உங்களால்தான் நான் அவர்களை காண முடிந்தது. ஆகா.. .என்ன ஒரு அழகு.. .! என்ன ஒரு கனிவு. .! ஆகா..  நான் பெற்ற அந்த சுகானுபவத்தை  எப்படி விவரிப்பேன்..! இந்தப் பிறவியில் நான் செய்த பாவங்கள் எல்லாம் அகன்ற மாதிரி, வேறு ஒரு புதுப் பிறவி எடுத்த மாதிரி, அவர்களை தரிசித்த அந்த ஒரு தொடியில். .உணர்ந்தேன். இதோ என் மேனியெங்கும் இப்போதும் எப்படி சிலிர்க்கிறது பாருங்கள். .! இந்த அனுபவம் உங்களால்தான் கிடைத்தது. அதனால்தான் உடனே உங்களை காண நீங்கள் தங்குமிடம் விசாரித்துக் கொண்டு இங்கு வந்து விட்டேன். "அவனின்  பரிதவிப்பான வார்த்தைகளின் பொருள் பாகவதருக்கு இருந்த மனோ நிலையில், அவருக்கு சற்றும் விளங்கவேயில்லை. .

" இருப்பா. .. யாரைக்கண்டாய்? எங்கே கண்டாய்? உணர்ச்சிவசப்படாமல் மெள்ள விபரமாகச் சொல்லு... .! என அவர் கொஞ்சம் பதற்றத்துடனே அவனை ஆசுவாசபடுத்தியதும், "அதான் ஐயா... நீங்கள் நேற்று கோவிலில் எல்லோருக்கும் சொன்னீர்களே. ..  அந்த தங்கமயமான அற்புத குழந்தைகள் ஏராளமான நகைகளுடன் தெய்வீக ஒளியுடன் கானகத்தில் காலை நேரத்தில் தினமும் தவறாது வருவார்கள் எனக் கூறினீர்களே.. ! அவர்களைத்தான் சந்தித்து விட்டு வருகிறேன்.  . அதைப் பற்றித்தான் கூறியும் கொண்டுள்ளேன்." என அவன் விளக்கவும், பாகவதருக்கு ஒரு நொடியில் மூர்ச்சை வரும் போலிருந்தது. 

என்ன உளறுகிறான் இவன்..? கண்ணனை நேரில் கண்டானா? அதுவும் நான் கதையில் சொன்ன அங்க அடையாளங்களுடன். ..அப்படியே கண்ட மாதிரியல்லவா பிதற்றுகிறான். . ஒரு வேளை இரவெல்லாம் விழித்திருந்ததில், வந்த ஏமாற்றம் அவனை இப்படி பேசும் நிலைக்கு கொண்டு வந்து விட்டதோ? இந்த நிலையில் இவன் மேலும் எனக்கு ஏதாவது துன்பங்கள் தருவானோ?" அவருக்கு இன்னமும் பயம் அதிகரித்தது.

" அப்பா... நீ சாட்சாத் அந்த பகவான் கண்ணனையா கண்டாய்?  கொஞ்சம் தெளிந்து யோசித்துப் பேசப்பா.. அவர்கள் கடவுள்கள்.. அவர்களை நீ எப்படி நேரில் காண முடியும். .?  அவர் பயத்துடன் வார்த்தைகளை உகுக்கவும், "ஐயா.. .நீங்கள் நம்ப மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். அதனால்தான் அவன் விரும்பி எனக்குத் தந்த அவனுடைய அணிகலன்களை உங்களுக்கு காண்பிக்க, எனக்கு விருப்பமில்லாத போதும் அவனிடமிருந்து பெற்று வந்தேன். அதையெல்லாம் பார்த்தாவது என் கண்களை நம்புங்கள். ." என்றபடி தன் கையில் வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, அதில் கண்ணன் தன் பட்டு பீதாம்பரத்தில் கட்டித்தந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவன் நகைகளை எடுத்து பரப்பி வைத்தான். 

பாகவதருக்கு இப்போது தன் கண்களை நம்ப முடியவில்லை. அவர் தினமும், அவர் வாழ்நாளில் இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல், எந்த நகைகளை பற்றி விஸ்தாரமாக விவரித்து  பாகவத பிரவசனம் செய்தாரோ அந்த நகைகள் கண்முன்னாடி ஜொலித்தன.  வைரங்கள், ரத்தினங்கள் பதித்த கீரீடம், ஒட்டியாணம் முதற்கொண்டு கண்ணனின் அங்கம் தழுவும் நகைகள், கூடவே கண்ணனின் புல்லாங்குழல், பாதச்சலங்கைகள்.... அவரால் நம்பவே முடியவில்லை. .ஒரு நிமிடத்திற்கு மேலாக அவர் இந்த உலகில் இல்லாமல்  இருந்த அனுபவத்தை உணர்ந்தார்.

 "ஐயா.  .. இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?" திருடனின் கேள்வியில் மறுபடி இந்த உலகத்துக்குள் வந்தவர், சற்று சுதாரித்து கொண்டு, "நான் இத்தனை வருடமாக அவனையே நினைத்து,, அவனுடனே வாழ்ந்து, அவன் நாமாவையே ஸ்மரித்து, அவனைப் பற்றியே எப்போதும் பேசி, அவன் புகழைப்பாடி வாழ்நாளை கழித்து வருகிறேன். எனக்கு ஒரு வேளையாவது  காட்சியளிக்காதவன் ஒரு இரவில், உனக்கு எப்படி காட்சி தந்து தன் நகைகளையும் கழற்றித் தந்தான்?  என்னால் இன்னமும் உன்னை நம்ப இயலவில்லை. நீ எங்கிருந்து இந்த நகைகளை, நான் அவனைப்பற்றி சொன்ன கதைகளுக்கேற்ப கொண்டு வந்தாய் என எனக்கு மேலும்  சந்தேகம் வருகிறது. ..!"என அவர் முடிக்கவும் திருடனுக்கு சற்று கோபம் வந்தது. 

" ஐயா...! நான் நேற்று வரை பயங்கர திருடன்தான். எந்த ஒரு பொய்ச் சொல்ல அஞ்சியதில்லை. சமயம் வரும் போது பிறரை தாக்கி, காயப்படுத்த சங்கட பட்டதேயில்லை.... அப்போது அவர்கள் துன்பத்தைக் கண்டு பரிதவிக்கவும்,  ஈவு இரக்கம் காட்டி, அவர்களை  விட்டு விடவும் செய்ததில்லை. ஏனென்றால் என் தொழில் திருட்டுத்தான்...அதில் இதெல்லாம் பார்த்தால் எனக்கு லாபமில்லை. எந்த வித பயனுமில்லை..! அதனால்தான் நீங்கள் சொன்னவுடன் அந்த குழந்தைகளைப் பிடித்து, அவர்கள் நகைகளை அபகரித்து பெரும் லாபமடையத்தான் ஆவலுடன் உங்களிடம் வழி விசாரித்துக் சென்றேன். இன்று அதிகாலை வரை எனக்கு அந்த எண்ணம் ஒன்றுதான். ...! ஆனால் அந்த மாயக்குழந்தைகளை பார்த்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. என் மனதையே, அதில் இருந்த திருட்டுத்தனத்தையே  அவர்கள் கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு அமைதி மட்டுந்தான் என் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த மனதை உங்களிடம் காட்டிச் செல்லவே நான் இங்கு வந்தேன். 

நாளை மறுபடி அவர்களை சந்தித்து இந்த நகைகளையெல்லாம் அவர்களிடமே தந்து விட்டு, ," நான் எப்போதும் அவர்களுடன் இருக்கும்படி ஒரு உபாயம் சொல்லுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லையென்றால் அங்கேயே அவர்கள் கண்முன்னால் என் உயிரையும் மாய்த்துக் கொள்ளுவேன். அதைக்கண்டு அவர்கள் மனம் மாறினாலும் சரி..! இலலை. .இதோடு என் இந்தப் பிறவி முடிந்து போனாலும் சரி. .! அவ்வளவுதான்....! நான் போய் வருகிறேன் ஐயா... எனக்குள் இந்த அனுபவம் வந்ததற்கு நீங்களும் ஒரு காரணம்...உங்களுக்கு என் நன்றி.. " என்றபடி அவன் புறப்படலானான்.  

பாகவதர் தான் பிரசங்கம் கேட்டதைக் போன்ற உணர்வையடைந்தார்." அப்பா. ..என்னை மன்னித்து விடு. உன்னை சந்தேகப்பட்டது தப்புதான்.. என்னையும் உன்னுடன் அழைத்துச்செல். நானும் இந்தப்பிறவியில் நான் அன்றாடம் வழிபடும் கண்ணனை தரிசித்த பேறையடைகிறேன். மறுக்காமல் நானும் உன்னுடன் வருவதற்கு சம்மதித்து அழைத்துச் செல்கிறாயா...." என்று அன்புடன் கெஞ்சிக் சொல்லவும் அன்று இரவு அவரையும் அழைத்துப் போவதாக திருடன் வாக்குரைத்தான். 

மறுநாள் வெள்ளி முளைக்கும் நேரம். கானகத்தில் அதே இடத்தில் திருடனுடன் பாகவதரும் காத்திருக்க, திருடனின் மனமெல்லாம் " குழந்தைகளா. . நேற்று சொன்னது போல் இன்று நீங்கள் எனக்கு தரிசனம் தர விரைவில் வந்து விடுங்கள். உங்களை பார்க்காத ஒவ்வொரு நொடியும்  நான் அனலில் இட்ட புழுவாக துடிக்கிறேன். இந்த பாகவதர் வேறு இன்று காலை நான் எத்தனை முறைச் சொல்லியும், என்னை நம்பவில்லை.  இப்போதும் என்னை சோதனை செய்வதற்காகத்தான் என்னுடன் வந்திருக்கிறாரா என்றும்  தெரியவில்லை... ஆனாலும், எனக்கு உங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது. இதோ. .! உங்கள் நகைகளை உங்களிடம் தரவே வந்திருக்கிறேன். எனக்கு இந்த நகைகள் வேண்டாம். என் குடும்பம் வேண்டாம். உங்களின் அருகாமை மட்டும் எப்போதும் வேண்டும். அதுவே நான் உங்களிடம் வேண்டுவது...  அதை மட்டும் இன்று வந்து எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள்.. . " என்று கண்ணனை நினைத்தவாறு இருந்தது. 

பாகவதரின் மனமோ," இவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் புறக்கணிக்கவும் இயலவில்லை. நேற்று மாதிரியே கண்ணன் இன்றும் நான் நினைத்தவுடன் இங்கு வருவான் எனறு இவன் கூறுகிறான். இவனிடம் உள்ள நகைகளெல்லாம் கண்ணனின் நகைகளாக நாம் வர்ணனையில் படித்தது போல் இருக்கிறது. ஆனால், கடவுள் அவதாரமாகிய கண்ணன், நான் நித்தமும் துதித்து வணங்கி வரும் எம்பெருமான், இப்போது இந்த திருடனுக்கு ஒரே இரவில் காட்சி தந்திருக்கிறான் என்பதை நம்பவும் கஸ்டமாக இருக்கிறது. ம்.  . ம்.  பார்க்கலாம். இன்னமும் கொஞ்ச நேரத்தில் இவன் சாயம் வெளுத்து விடுமே.. .! " என்று மனதுக்குள்  புலம்பியபடி இருந்தது. 

பறவைகளின் சலசலப்பில் கதிரவன் கண் விழித்து விட்டான் கிழக்கு திசை இருளை தன்னிடமிருந்து அன்றைய இரவு வரை பிரித்து வைக்க ஆசைப்படுவதாய், இருட்டுடன் பேசி வாக்கு வாதம் செய்வதைக் கண்டதும், சமாதானபடுத்த பகலவன் தான் வருவதாக பறவைகள் மூலம் தூது அனுப்பினான். 

திருடனின் கண்கள் கண்ணனை காண ஆவலாய் பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கிலிருந்து ஜோதி ரூபத்திற்கிடையே அழகே ஒர் வடிவம் எடுத்தது போல், அண்ணனும் தம்பியுமாக பேசிக் கொண்டே  கைக்கோர்த்தபடி வந்து  கொண்டிருப்பதை திருடன் கண்டான்..திருடனுக்கு மறுபடி நேற்று போல், உடம்பெல்லாம் சிலிர்த்தது. கண்ணன் தன் புல்லாங்குழலில் இனிய நாதத்தைப்  பரப்ப அந்த ஓசைகேட்ட புள்ளினங்கள், ஆதவன் தமக்கிட்ட  தூதை மறந்து அவன் கானத்திற்கேற்ப தம் இறகுகளை அசைத்தபடி வான வீதியில், வலம் வந்தன. 

கண்ணன் இசைத்த இசையில் கள்ளுண்டவனை போல் திருடனும் மெய் மறந்தான். சட்டென அருகிலிருக்கும் பாகவதரின் நினைவு வர, "ஐயா. .! .இதோ நான் வேண்டியபடி குழந்தைகள் வந்து விட்டனர். எத்தனை அழகு..! இவர்களை பார்ப்பதை விடவா இந்த உலகில் வேறு இன்பம்.. ? என்னை நம்ப மாட்டேன் என்றீர்களே...! இதோ நீங்களும் அவர்கள் வரும் அழகை ஆசைதீர பார்த்து மகிழுங்கள். அவன் இசையென்ற கானம் பாடி உலகை மயக்கியவாறு வரும அழகை கண் குளிர கண்டு களியுங்கள். அருகில் வந்ததும் குழந்தைகளின் அழகையும், அவர்களின் அமிர்தம் போன்ற பேச்சையும் கண்டு, கேட்டு பருகுங்கள்... " திருடன் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தவாறு கூறினான். 

பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கு கண்ணன் வருகிறான்? எப்போதும் போல் பொழுது புலர்வதற்கு கிழக்கு திசை ஆயததமாகிக் கொண்டிருப்பதை தவிர்த்து அவர் கண்களுக்கு அவன் காட்டிய அத்திசையில் ஒன்றும் புலப்படவில்லை. பறவையினங்கள் அன்றாடம்  வழக்கப்படி, தம்  இசைத் திறமையை உலகிற்கு பறைச்சாற்றியபடி சுற்றி வருவதை தவிர்த்து வேறு எந்த கானமும்  அவர் காதை தழுவவில்லை. 

அதற்குள் கண்ணன் அவர்கள் அருகில் வந்து விட்டான்." என்னப்பா.. ..! இன்று மறுபடியும் உடனே வந்து எனக்காக காத்திருக்கிறாய் ? நேற்று தந்த நகைகள் போதாதா? இந்தா. . .! இன்று நீ அழைத்தவுடன், உனக்காக இன்னமும் நிறைய நகைகளோடு வந்திருக்கிறோம். வேண்டியதைப் பெற்றுக்கொள்..  ."  கண்ணனின் குறும்புடன் பேசியதைக்  கேட்டதும் திருடன் மனம் பதறினான். 

"குழந்தைகளே... ! உங்களை காணவே இன்று  அழைத்தேன். நீங்கள் இல்லாமல் என்னால் இனி வாழ்வே முடியாது. இந்த நகைகள் யாருக்கு வேண்டும்.? நேற்று உங்களை பார்த்த நொடியிலேயே அந்த ஆசைகள் போய் விட்டதே. .!  நேற்றே உன் விருப்பத்தினால்தான் நகைகளை எடுத்துச் சென்றேன். அதுவும் உன்னை அடையாளம் காண்பித்த இந்த பாகவதருக்கு அதை காண்பித்து அவருக்கு நன்றி கூறத்தான்.எடுத்துச் சென்றேன்.  இதோ. . ..! அந்த நகைகளையும் திருப்பி கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள். எனக்கு இந்த பிறவி முழுக்க உன்னழகை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை மட்டும் தந்து விடு. . அது போதும்..!" கண்ணின் சின்னக்கைப்பற்றி அவன் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு அழுதான்..

யாருடனோ பேசுவது போல், தனக்குத் தானே அவன் பேசிக் கொள்வதையும், அழுவதையும் கண்ட பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் மனம் பேதலித்து விட்டதா? என தாம் சந்தேகப்பட்டது சரியோவென தோன்றியது.

உடனே பாகவதர் திருடனை நோக்கி, "என்னப்பா யாருடன் பேசுகிறாய்? அப்போது குழந்தைகளின் அழகைப் பருகச் சொன்னாய்.  .! இப்போது பித்துப் பிடித்தவன் போல் தானாகவே பேசிக் கொண்டிருக்கிறாயே.. .! இங்கு உன்னையும், என்னையும் தவிர வேறு யாரும் இல்லையே. ..! என்று வினவவும், கண்ணனும்  பலராமனும் கலகலவென சிரித்தனர். 

"ஐயா. .. இதோ கண்ணெதிரே நிற்கும் இந்த அழகு தெய்வங்களை உங்களால் காண முடியவில்லையோ ?. என் கண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னீர்களே ... உங்கள் கண்ணன் உங்களெதிரே நின்று பேசுவதை உங்களால் பார்க்க முடியவில்லையா... ? ஆச்சரியமாக உள்ளதே...! என்ற திருடன் கண்ணனைப் பார்த்து, "குழந்தைகளே....! எதற்காக உங்களுக்கு இந்த நாடகம்.? என் பார்வைக்கு  தெரியும் நீங்கள் தினமும் உங்களைப் பாடி, பூஜித்து வரும் இவர் பார்வைக்கு தென்படாமல், இருப்பது ஏன்? நேற்று உங்களை கண்டதை நம்பாத இவரை இன்று உங்களை காணச் செய்வதாக கூறி அழைத்து வந்திருக்கிறேன். அவரை பாவம் ஏமாற்றலாமா.?  அவரால்தானே எனக்கு இந்த மாற்றம் கிடைத்தது. நீ அவர் கண்களுக்கும்  கண்டிப்பாக தெரிய வேண்டும்.. "  திருடனின் கனிவான பேச்சு கண்ணனை புன்னகையுடன் பேச வைத்தது. 

அவர் தினமும் என்னை நினைப்பவர்தான். ஆனால் உன் ஒருநாள்  நம்பிக்கைதான் அதை விட சிறந்ததாக என்னை இங்கு அழைத்து வந்து உன்னால் என்னைக் காண வைத்தது. என்னைப்பற்றி சிறிதும் அறியாத  நீ  நான் இருப்பதை நம்பி என்னையே அன்று முழுவதும் நினைத்து, நான் இங்கு வருவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தாய்....! அந்த நம்பிக்கைதான் உனது ஆன்ம பலம்... அவரை அதே நம்பும் உணர்வோடு உன் கரங்களை பிடித்துக் கொள்ளச் சொல். ...!நீயும் என் கரத்தைப் பிடித்துக் கொள். அப்போது அவர் கண்களுக்கும் நான் தெரிவேன்.." என்றதும்," ஐயா.. இதோ நம் அருகில் நிற்கும் குழந்தைகளை காண முடியவில்லையா?  என் கையைப்பிடித்து கொள்ளுங்கள்..."என்று சொன்னவுடன் பாகவதர் அவன் கையைப் பிடிக்க, திருடன் மெய் சிலிர்க்க கண்ணனைத் தொட, பாகவதருக்கு கண்ணனின் திவ்ய ரூபம்  புலப்பட்டது. அவனின் அழகிய வதனத்தில் மதிமயங்கிய அவரும் திக்குமுக்காடினார். கூடவே" கண்ணா, இத்தனை நாள் நான் உன்னை வணங்கி வந்ததின் முழுப்பலன் கிடைத்து விட்டது. ஆனால் ஒரே ஒரு வருத்தம். உன் மகிமையை உணராத இந்த திருடனுக்கு ஒரே நாளில் தரிசனம் தந்த நீ எனக்கு மட்டும்  இத்தனை சோதனைக்களுக்குப் பிறகு  அதுவும் இவன் கைகளைப் பிடித்ததால்தான் காட்சி என வைத்திருக்கிறாய்...! அது மட்டும் ஏன் என  விளக்குவாயா ? என பக்தியுடன் கண்ணீர் மல்க கேட்டார். 

"பாகவதரே.  உம்மையும் நானறிவேன். உமது பக்தியின் பெருக்கையும் நான் உணர்வேன். நீங்கள் நாள்தோறும் என்னைத் துதித்து, பூஜைகள் செய்து. என்னைக்குறித்து மக்களுக்கு உபன்யாசங்கள் செய்து வழிபட்டு வருவதையும் அறிவேன். ஆனால் என்றேனும், ஒரு நாள் நான் உம்மெதிரே வருவேன் என என் மீது நம்பிக்கை வைத்தீரா?நீங்கள் தந்த வர்ணிப்பில் அந்த நம்பிக்கை அவனுக்கு வந்தது. அந்த நம்பிக்கையின் சக்திக்கு நான் கட்டுப்பட்டேன். அவ்வளவுதான். .! இதுதான் அவனின் ஆன்ம பூஜை. .என் மீது அன்பு செலுத்திய உங்கள் இருவருக்கும் நிச்சயமாக நற்கதி இப்போதே நான் தந்தேன். அவரவர்கள் வினைப்பயன் முடிந்ததும் என்னை வந்தடையுங்கள்... அதுவரை இந்த மானிடப்பிறவியின் கடமைகளை முடித்து, பிறவி முடியும் வரை என்னை கண நேரமும் மறவாதபடி நினைத்துக் கொண்டேயிருக்கும் வரத்தை அருள்கிறேன் .. " என்றபடி புன்னகையுடன் கூறிய மாயக் கண்ணன்  நொடியில் மறைந்தான். கண்ணனின் விளக்கத்தில், பக்தியின் இரு வேறு பிரிவுகள் பாகவதருக்கும், திருடனுக்கும் விளங்கின. அவனுடன் கூடிக் களிக்கும் நாளை நினைத்தபடி, வரும் நாட்களை அவனை நினைத்து அவனுடனான பக்தி மார்க்கத்தில் பிணைத்திருந்து, அவன் அழைக்கும் வரை அவன் சொல்படி அவரவர் கடமையை ஆற்றி இருக்க வேண்டி, பக்தி உணர்வுகளில் முழ்கியபடி அக்கானகத்தை விட்டு தத்தம் இல்லம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். 

இக்கதையின் மூலம் ஆன்ம பக்தியை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணரின் சேவடிகளை நினைத்தபடி நாமும் அவன் ஒருநாள் வந்து நம்மை கடைத்தேற்றி அழைத்துச் செல்வான் என நம்பிக்கை கொண்டு, அவனிட்ட கட்டளைப்படி வாழவும்  அவனருள் பூரணமாக கிடைக்க வேண்டுமென அவன் பாதங்களை பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன். . . ...

சற்றே நெடிய கதையாயினும், இக்கதையை அன்புடன் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.