Sunday, May 12, 2019

அன்பென்றால், அன்னை....

அன்னை ..


ஸ்ரீ கிருஷ்ணனை தன் நெஞ்சில் சுமந்து காலங்காலமாய் அன்னைகளுக்கு உதாரணமாய் வாழ்ந்த தெய்வத்தாய் யசோதைக்கும். யசோதையாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் இப்பதிவு.

பத்து மாதங்கள்  தன்னுடனே நம்மையும் சேர்த்து, ஒரு சுகமான சுமையாக சுமந்து பெற்றெடுத்து,ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதுகாப்பாய் வளர்த்து, நம் சந்தோஷ தருணங்களை தனதாக்கி கொண்டு, நாம் படும் இன்னல்களையும்  தன்னுடையதாய் நினைத்து வருந்தி நமக்காவே வாழ்ந்து வரும் ஒரு ஜீவனின் பெயரை அன்னை.. அம்மா...தாய்.. மாதா.. என்று சொல்லலாம்.

அன்னை என்றாலே இயற்கையாகவே தன் குழந்தைகள் மேல் பாசம் மிகுதியாகவே வந்து விடும் போலிருக்கிறது. இப்படி அன்னை, தந்தையின் அன்புதான் நம்மை உலகில் வாழ்வதற்கு ஒரு ஜீவாதாரமாக இருந்து  காத்து வருகிறது.

நேற்று அன்னையின் அன்பை பற்றி  அன்னையர் தினப்பதிவாக எழுதலாம் என நினைத்து ஆரம்பித்தேன். காலையில் ஆரம்பித்த வேலை முடிவில்லாமல் செல்ல என் குழந்தைகள் (மகன்கள், மருமகள்கள்) ஆசைக்காக மதிய உணவாக புளியோதரை, கூட்டு, சாம்பார் என சாப்பாட்டு ஐட்டங்கள் தயாரித்தபின், மாலை அவர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் என்னையும் வரச் சொல்லி அழைத்துப் போகும் போது  தட்ட முடியாமல் ஒரு  அன்னையாக  அவர்களுடன் சென்றதில் நான் எழுத வேண்டுமென்று ஒதுக்கியிருந்த  என்"நேரம்" "ஆமாம் .! எந்நாளும் அன்னையர் தினந்தானே" என்று என்னிடம் சொல்லிக்கொண்டே நகர்ந்து விட்டது. .. அதனால் நினைத்ததை வளவளவென எழுதாமல்,  சுருக்கமாக விட்டதில் தொடர்ந்து இன்றைய அன்னையர் தினமும் அவ்வாறே சொல்லிச்சென்று விட்டால் என்ன செய்வதென  சட்டென முடித்து விட்டேன். (சுருக்கமான பதிவை விரும்பி படிப்பவர்கள் என்னை பாராட்டுவர்களாக...! ஹா. ஹா. நன்றி. நன்றி.)

எ. பியில் சகோதரி கோமதி அரசு அவர்கள் எழுதிய விமர்சன பகுதியை படித்ததோடு, வலைத்தளம் வந்து வேறு எதையும் படிக்க இயலாத ஒரு சூழ்நிலை. அனைவரும் இந்த அன்னையை மன்னிக்கவும்..

நேற்று என் அன்னையை என் வாழ்வில் தொலைத்து விட்டு வருந்திய  நாளும் கூட ... வயிற்றில், கைகளில், மனதில் என தன் காலம் முழுவதும் என்னை சுமந்தவர், என் காலம் முழுக்க வருத்தத்தை சுமக்க வைத்து விட்டு என்னை விட்டு அகன்ற நாள்.. எவ்வளவு வருடங்கள் ஓடினாலும் அன்னையை மறக்க இயலுமா? ஒரு வாரமாகவே (நானும் ஒரு அன்னையாகி கடமையாற்றி வரும்போது கூட)  இந்நினைவுகள்தான் என் மனதுள் சுற்றி வந்து கொண்டிருந்தது.  அன்னையின் அன்பை இழந்து விட்டாலும், அன்னையின் அன்பில் திளைத்த நினைவுகளோடு வாழ்ந்து வருகிறேன். 

சொல் வழக்கில் தெய்வத்திற்கும், முதலிலேயே "மாதா" வந்து வார்த்தையை முழுமையாக்குகிறாள். எனவே பெற்றெடுத்தவள் என்றும்  முதலில் தெய்வமாகிறாள்.

இந்தப் பாடல் அன்னையின் அன்பை, தியாகத்தை கூறுவதுதான். ( திரு. கண்ணதாசன் எழுதி, எம். எஸ். வி இசையில், டி. எம் . செளந்தரராஜன் பி. சுசீலா இருவரின் கம்பீரமான குரலில், "கண்ணா நலமா" என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். இது எனக்கு பிடித்தமான பாடல்.) இன்னமும் எத்தனையோ அன்னையின் சிறப்பைப் பற்றி பாடல்கள் இருந்தாலும், இதை இங்கு பகிர்வதில்  மகிழ்ச்சியடைகிறேன். பாடல் நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்ததெனினும், இப்போதும் இதை கேட்கும் உங்களுக்கு  பிடித்திருக்குமென நினைக்கிறேன். கேட்டு ரசிப்பதற்கும், ரசித்ததற்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
நான் முன்பு என் அம்மாவோடு இணைத்து யசோதை தாயிடம் வேண்டுவதாக (கவிதை என்ற பெயரில்) எழுதியதை படிக்க இங்கே சுட்டி காண்பித்ததில் படிக்கவும். ( அன்புடன் படித்ததற்கும் அனைவருக்கும் நன்றி.)

அனைத்து அன்னையர்களுக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்களும். வணக்கங்களும். 🙏.. நன்றி.. 

Wednesday, May 1, 2019

உழைப்பாளர் தினம் – சிறுகதை 1)

வலையுலக  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது
அனைத்து நாடுகளிலும் பல் வேறு இயக்கங்கள் தோன்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க பெரும்பாடுபட்டது

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போரட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

நன்றி விக்கிப்பீடியா.... 

இன்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு இனத்தின் நிலை.. ஆனாலும் உழைப்புக்கு உதாரணமாய் சுட்டிக் காட்டப்படுபவர்கள்..  இது பழைய பதிவெனினும், இன்றைய தினத்திற்கானது. அதனால் மீண்டும் ஒருமுறை அனைவரின் பார்வைக்காகவும், சில திருத்தங்களுடன் பகிர்கிறேன். இதை "மீண்டும் ஒருமுறையா" என சோர்வில்லாமல் படிக்கும் அனைவருக்கும்  மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உழைப்பின் கதை... 

"என்னங்க  இன்னைக்கு  பாட்டுக்கு உழைக்கப் போகலையாவாசலில் சோர்வாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் மனைவி. 

     உம்ம்ம்... போகணும். என்னவோ காலையிலேயே சோம்பலா இருக்கு! இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படிநம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறதுதினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.

     "உம்ம்ம்... புரியுது அந்த காலத்திலேயே இருந்து நாம ஓடியாடி வேலை செஞ்சவங்கதானே! (பெருமூச்சுடன்) ம்ம்..இதோ கிளம்பறேன். நீ புள்ளைங்களை பாத்துக்கோ.! "என்றபடி கிளம்ப எத்தனித்தான் அவன்.

   " பாத்து போயிட்டு வாங்க! வழியிலே ஓரமாவே நடந்து போயிட்டு வாங்க! இப்ப நீங்க புறப்பட்டு போன தான் பொழுது போறதுக்குள்ள வீடு திரும்ப முடியும். வானம் வேற கறுத்து கிடக்கு! இந்த மழை வேற வந்துடாமே இருக்கனும்.!" என்று அவன் மேல் அக்கறையுடன் பேசினாள் அவள்.

    "மழையாஅது எங்கே இப்பெல்லாம் ஒழுங்கா பெய்யுதுஅந்த காலமெல்லாம் போயாச்சு! இப்பெல்லாம் முந்தி மாதிரி எதுவுமில்லை! இந்தோபார்..! ஏதோ புயல் வந்து ஊரெல்லாம் ஒரே மழைவரப் போகுதூன்னு என அன்னைக்கு  பேசிகிட்டாங்க.! இப்ப இரண்டு நாளா அதுவும் இல்லைன்னு வேறே சொல்றாங்க.! ஒன்னும் புரியலே போ.! 

நமக்கும் ஒரு இடத்திலேயும் ஒழுங்கா முந்தி மாதிரி உழைக்க முடியலே! நேத்திக்கு ௯ட ஒரு இடத்துலேஅரிசி பருப்புன்னு மூட்டை மூட்டையா சாமான்களைஏத்திகிட்டும்இறக்கிட்டும் இருந்தாங்க! சரி! நமக்கு ஏதாவது உழைப்புக்கு ஒரு வேலை இருக்குமான்னு போனேன். அங்கிருந்த எல்லாரும் விரட்ட மிதி படாத குறையாக ஓடி வந்துட்டேன். அதேமாதிரி அவங்கவங்க வீட்டிலேயும் அவங்களுக்கு பிடிச்ச வேலைகாரங்களை வச்சுகிட்டு சுத்தபத்தமா இருக்கனும்’னு விரும்புறாங்க! நம்ம தேவையை புரிஞ்கிட்டு  நம்ப உழைப்புக்கேத்த மாதிரி நாம செய்ற வேலையை எங்கே மதிக்கிறாங்க? என்றான் சலிப்புடன் அவன்.

   "புள்ளைங்களும் பாவம்! நேத்து அப்பா என்ன கொண்டு வந்திருக்காருனு ஆசையா கேட்டதுங்க! வீட்லே ஒரு குந்துமணி அரிசி ௯ட இல்லைன்னு நான் எப்படி சொல்ல முடியும்நேத்து சின்னவன் ரொம்ப பசிக்கிதுன்னு என் காலை சுத்தி சுத்தி வந்தான். உங்களையும் காணமா! அதனாலே அவனுக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிபண்ணலாம்னு போயி அலைஞ்சதுதான் மிச்சம்...." என தன் அனுபவத்தை சோகத்துடன் ௯றினாள் அவள்.

  " அப்படியெல்லாம் சின்னபுள்ளைங்கள தனியா வீட்டுல விட்டுட்டு போவாதே.! உனக்கும் முந்தி மாதிரி இப்பெல்லாம் முடியலை! அப்படியிருக்கும் போது ஏன் வெளியில போற? நான் போய் என்னாலே ஆனதை வீட்டுக்கு கொண்டு வரேனில்லியா? "அவன் சற்று கோபமாக கேட்டான்.

   "இல்லே! நேத்து புள்ள ரொம்ப பசின்னு சொன்னதினாலே தான் போனேன். இல்லாட்டி நீங்க தினமும் சம்பாரிச்சு கொண்டு வர்றது நமக்கு வயித்துக்கும்பாடுக்கும் சரியாதானே போறது! மத்தபடி முந்தி மாதிரி நாளைக்குனு எங்கே வச்சுக்க முடியுது? ம்ம்... நீங்க இப்படி சிரமபடுறதை பாக்கும் போதுதான் எனக்கு மனசு தாங்கல!" என்று அவனை சமாதான படுத்தியவள், “ஆமாம் அப்பவே என்னமோ சொல்ல வந்தீங்களே?” என்று ஞாபகபடுத்தினாள்.

  " ஆமாம்! அதாவது இன்றைக்கு உழைப்பாளர் தினமாம்! நேத்திக்கு வேலைய தேட போகும் போது நாலுபேர் சொல்லிகிட்டிருந்தது காதிலே விழுந்திச்சு! அந்தகாலத்துலே, "உழைப்புக்குன்னா இவர்கள்தான்னு" நம்மளை சுட்டிக்காட்டி பேசிட்டு இன்னைக்கு அவங்களை அவங்களே பெருமைபடுத்திக்கிறாங்க! ஏன் நாமெல்லாம் உழைக்கிற வர்க்கம் இல்லையா? எப்படியோ போகட்டும்! இந்த மட்டுக்காவது, எங்கோ ஒரு இடத்துல, எப்பவாச்சுமாவது  உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு உதாரணமா நம்மளை காட்டாறாங்களே!!


""இப்படி ஒரு தினத்தை வச்சு கொண்டாடுறாங்களே! அன்னிக்காவது நமக்கெல்லாம் ஒரு இனிப்பு, ஹும்.. ஹும்.. வேண்டாம்மா, ஒரு சின்னமிட்டாயாவது கொடுக்கலாம்ன்னு அவங்களுக்கு தோண்றதா? போகட்டும்! அவங்க நல்லா வாழ்ந்துட்டு போகட்டும்! நாமதான் அன்னியிலேருந்து இன்னைய வரைக்கும், உதைபட்டும் மிதிபட்டும் சாவறோம். ஒருநாள் வெளியிலே போயிட்டு வர்றதுக்குள்ளே அன்னைக்கு உசிரு நம்மகிட்டே இருக்குமான்னு தெரியலே! நம்ம பொழைப்பு அப்படி! படைச்சவன் அவங்களையும் நம்மளையும் அப்படி படைச்சிட்டான்! இரண்டாவது நாம் வாங்கி வந்த வரம் ( இதைச் சுட்டினால், இதன் இரண்டாவது கதையும்  இத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை காணலாம்.) அப்படி! சரி! நான் புறப்படறேன். நீ பத்திரமா இருந்துக்கோ!! "என்றபடி மனைவியிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் அருகிலிருக்கும் ஒரு  வீட்டின் கதவு  மூடியிருப்பினும், படிகளின் ஒரமாக உள்நுழைந்து தனக்கும், தன் குடும்பத்துக்கும் உணவு தேடுவதற்கான வேலையை கவனிக்க வேண்டி , உழைப்பாளியான அந்த கடமை தவறாத கணவனான அந்த எறும்பினம் அந்த வீட்டினுள் மெள்ள பயணித்தது.

நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2)


கதையினுள் உட்கதை

"கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி?" என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

" நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்த கடவுள்  நம்மை படைக்கும் போது, நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வேண்டிய வரத்தை  வாங்கிக் கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?"

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது" என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், ""அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்"! என்றவுடன், அந்த துணிச்சல் குரலுக்குடையவரை தவிர்த்து மற்றவர்கள்  தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தனர். 

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலுக்குரியவரையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், "வெறும் நன்றிதானா?" என்று மறுபடியும்  அந்த குரல் மறுபடி எகத்தாளமாக கேட்க, "சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், "நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா?" என்று கேட்டதும் ஒரு நிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! இந்த செயலினால் தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

"சரி!" என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த தைரியமான குரலுக்குரியவருடன் அவர் உற்ற நண்பனும் "நானும் வருவேன்" என ஒட்டிக் கொண்டு புறப்பட்ட, "சரி போனால் போகிறதென்று அவரையும் அழைத்துச் சென்ற அந்த தைரியவான் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தார்.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் தைரியமான குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, அந்த தைரியவானும், "சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்ட பின் , "சரி! ஒழுங்காக கூறி வரத்தை பெற்றுக் கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன்." என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டார். .

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் "முடிந்ததா? கடவுள் வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்குரியவரிடம் அவர் நண்பன் தான் கேட்ட வரத்தை சொன்னதை கேட்டதும் அவரின் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டார். தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று வரம் பெற வந்தவர்  பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த தைரியவான் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, நம்மினத்திற்கு நல்லது செய்கிறோம் என செருக்குடன் சென்ற நான் என் நிலை உணராமல், பேராசையுடன் செயலாற்றியதில் , நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். ” என்றபடி அரற்றி அழுத அந்த எறும்பினம் துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.
நன்றி கூகிள்.