Sunday, August 19, 2018

மை (MY) மா

இதை பதிவில் போட வேண்டுமென்று எழுதி நாட்களாகி விட்டன. அதன் பின் ஏதேதோ இடுக்கைகள் தற்செயலாய் அமைந்து விட்டன. ஆனால் எந்த ஒரு செய்கைக்கும் ஒரு காரணம் வந்து, பிடிமானமாக நின்று தள்ளி விடும். இல்லை தள்ளிக்கொணடு போகும். இது இயற்கையின் நியதி. அதுபோல்,  சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவில் அடுத்தடுத்து, ஜீரா மைசூர்பாகு, மொறு மொறு மைசூர்பாகு என இரு பதிவுகள் வெளி வந்த காரணம், என் இந்த பதிவையும் பிடிவாதமாக தள்ளி வெளி கொணர்ந்தது.  நன்றி சகோதரி தங்களுடைய மைசூர் பதிவுகளுக்கு.. 
என் பேத்தியின்( மகளின் மகள்) மூன்றாவது பிறந்த நாளுக்கு ஒரு இனிப்பு செய்யலாமென்று இருந்தேன். வழக்கப்படி அதுவா, இதுவா என்று ஆயிரம் இனிப்பு பட்டியல்..  ஆயிரமா? அவ்வளவு செய்வீர்களா...என்று நீங்கள் அதிசயப்பது புரிகிறது... (அதில் ஒன்று கூட உருப்படியாக வரும் என்பதற்கு அப்போதைக்கு என்னிடம் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லை என்பது வேறு விஷயம்....) அப்புறம் கேக் வேறு இருக்கே, வேறு இனிப்பு எதற்கு? பேசாமல் பாயா (கூடவே "சம்" சேர்த்து கொள்ள வேண்டும்.)  வைத்து விடு என்ற ஆலோசனைகள் வேறு நடுநடுவில்..  நீலகிரி எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகர் "சோ" வின் காமெடியை பார்த்த பின் (டி. வியில் அந்தப் படம் நான்கைந்து முறை பார்த்தாகி விட்டது.)  நாங்கள் அப்படித்தான் அதை விளிப்பது வழக்கம். சரி.. என நானும் மனதுக்குள் "மை"யை (எழுதும் "மை" "இங்க்" அல்ல... மைசூரின்  நிஜமான "மைசூர்பாகை" ) நினைத்துக் கொண்டு மெளனமாயிருந்து விட்டேன்.  இதை சிம்பிளாக செய்கிறேன் என்றால், இது எதற்கு அம்மா? இதை விட லட்டு, பாதுஷா என்று "ஆயிரத்தில் ஒன்றாக" மறு சுழற்சி மறுபடியும் ஆரம்பித்து விடும்.

சிறிது  நேரத்தில் அவரவர் பணிகளில் அவரவர் மும்முரமாக , என் பணி துவங்கியது. வேறென்ன? "மை" சூரை சீரமைக்கும் பணிதான்...

ஒரு கிளாசில் கோபுரமாக கடலைமாவு சலித்து எடுத்துக்கொள்ளவும். அதை அளவில் 2, அல்லது  இரண்டரைஅளவு சர்க்கரையும் எடுத்துக்கொள்ளவும். மாவை வெறும் கடாயில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, லேசான பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.


அதே அளவு கிளாஸ் நிறைய நெய்யை உருக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்


ஒரு பெரிய அகலமான தட்டில் உருக வைத்த நெய் கொண்டு அதன் விளிம்புகளிலும் நெய் படுமாறு நன்றாக தடவி வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் சூடான "மை" துண்டுகள் சிரமமின்றி ஒரே மாதிரி உருப்பெறும். 


கடலை மாவை வறுத்த பின் நெய் உருக வைத்து எடுத்து கொண்ட அதை கடாயில் தயாராக எடுத்து வைத்திருக்கும் இரண்டரை அளவு சர்க்கரையை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


சர்க்கரை பாகு பதமெல்லாம் அவசியமில்லை.  நன்கு கரைந்து, போட்ட சர்க்கரை (ஜீனி) உருகி வந்த நிலையில், வறுத்து வைத்திருக்கும் கடலைமாவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாதபடிக்கு, கை விடாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். நல்ல கெட்டியாகும் வரை உருக வைத்திருக்கும் நெய்யையும், அடிக்கடி விட்டு கிளற வேண்டும். ஒன்று சேர்ந்து பூவாக சற்று நுரைத்து வரும் தருணத்தில், நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி, நன்றாக ஒரே மாதிரி சற்று அழுத்தி நிரப்பி விடவும்.


வறுத்த பின்பும் மறுபடியும் சலித்து வைத்திருக்கும் கடலை மாவையும் சேர்த்து, கை விடாது கிளறும் போது அந்தப் படம் எடுக்க முடியவில்லை. (எங்கே..? கிளறுகிற பதந்தான் கைகளை விடாது பிடித்திருக்கிறதே ... . இரண்டாவதாக உதவிக் கரங்களை நாடலாமென்றால், அவரவர்கள் அவர்கள் பணியில் மும்மரமாக நான் கிச்சனில் "மை" யை கிளறியது கூட அறியாமல் ஈடுபட்டிருந்தார்களே...  அதனால் "போனஸாக" அதே படம் மறுபடியும் இடம் பெற்று மகிழ்கிறது.


ஒரு பத்து நிமிடம் தட்டில் கொட்டியவை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், நமக்குப் பிடித்த கோணத்தில், சிறு சிறு துண்டுகளாக ஒரே மாதிரி வெட்டிக் கொள்ளவும். சதுரமாகவோ, முக்கோணமாகவோ, நீளவாக்கிலோ, எப்படியோ வட்டத்திலிருந்து வேறுபட்ட வடிவமாக பிரித்து அவரவர் விருப்பபடி அதை மாற்றிக் கொள்ளவும்.மேலும் ஒரு ஐந்து நிமிடத்தில் அந்த தட்டுடன் எடுத்து வேறு ஒரு தட்டில் கவிழ்த்தால், "மை" துண்டுகள் பொல பொலவென அழகாக நாம் விரும்பி வெட்டிய உருவத்தில் உதிர்ந்து விடும். அதற்குதான் அந்த தட்டில் ஆரம்பத்தில் சிறிது தாராளமாகவே நெய்யை தடவச் சொன்னேன்.

நான் அந்த கிளறிய கடாயிலேயே கவிழ்த்து ஆரம்பித்த முதல் இடத்திலேயே "மை"யை சரணாகதி ஆகும்படி பணித்து விட்டேன். அதுவும் இன்றைய தினம் நான் சொன்ன பேச்சுக்கு மறுபேச்சின்றி கட்டுப்பட்டது. (புகைப்படங்களுக்கு போஸ் தரும் ஆவலினால் வேறு,  அதன் வால்தனத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு அமைதியாக என்னுடன் ஒத்துழைத்தது.) அதற்கு ஒரு நன்றி.. தேங்கஸ் "மை" ம்மா...(நான் அதற்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.)


அப்புறமென்ன... அழகாக தட்டில் வரிசைப் படுத்திய "மை" கள் பேத்தியின் பிறந்த நாளுக்கு "நாங்க ரெடி..... நீங்க........ யா? என்றது.


இதெல்லாமே, இத்தனை நேரம்  "மை"க்காகவும்," My" காகவும், பொறுமையுடன் உடனிருந்து பார்த்து கேட்டு ரசித்த உங்களுக்காகத்தான்... யோசிக்கவே வேண்டாம்.. எடுத்துக் கொள்ளுங்கள்... சுவையில் எப்படி இருக்கிறது? பதிலாகவே சொல்கிறேன் என்கிறீர்களா?  மிக மிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளேன்  நான் மட்டுமல்ல... "மை" ம்மாவுந்தான்.

                                     🎆🙏🎆
                                     நன்றி ..
===================🌼===================
நன்றி படம் மட்டும்=======கூகுளுக்கு நன்றி................

                                     

Monday, August 13, 2018

நோய் விரட்டி....

அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியது. மழை ஒரு நிலையில்லாது  ஈரக் காற்றின் உதவியோடு, நசநசத்து பெய்து.. குளிருக்கு துணையாக  "நான் இருக்கிறேன் உனக்கு" என்றபடி தோளில் கை போட்டு நட்புணர்ச்சியோடு புன்னகைத்துக் கொண்டிருந்தது.

சாலையில் அவ்வப்போது ஓடிக் கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் அனைத்தும், கூடி பேசிக்கொண்டவை போல், ஒன்றன் பின் ஒன்றாக  தன் சத்தத்தை நிறுத்த ஆரம்பித்து வெற்றி கண்டு விட்டது. ஐப்பசியின் முன்னிரவு  நேரம் பின்னிரவு நேரத்தை சற்று தொடர்ந்து களைப் பேதுமின்றி பயணித்து களிப்புடன் நெருங்கும் பொழுதும் ஆரம்பித்தாகி விட்டது... எங்கோ ஒரு மரத்தில் ஆந்தை அலறும் சப்தம் விட்டு விட்டு கேட்டதும் நின்று போக,  சாலையோரத்து சின்ன சின்ன மரம் செடிகளின் மறைவில்  சுவர் கோழிகள்  ஓயாது போட்ட  கிர்...கிறீச்..கிர்.. கிறீச்.. என்ற சப்தமும் நிசப்தத்தின் வருகை கண்டு அதிர்ந்து போனதில், அரண்டு போய் நின்றிருந்தன.

மெளனம் தான் அழகாய் இருப்பதை கொஞ்சம் கர்வத்தோடு தனக்குத்தானே புகழ்ந்து  கொள்வது கண்ட சிலீரென்ற காற்று, ஒரளவு உயரமான மர இலைகளின் ஊடே மோதி சற்றே சலசலப்பை உண்டாக்கி, மெளனத்தின் கர்வங்கொண்ட  மனதின் பொறுமையை சோதித்து சந்தோஸமடைந்தன.

இந்த கால கட்டத்தில்தான். மனித சஞ்சாரம் இல்லாத  இந்த நேரத்தில்தான், இவைகளின் நடமாட்டம் தீவிரமாகப் இருக்கும்.... இருளில் விழிகள் எட்டி துழாவும் போது, விழி தட்டி கண்ணிணுடேயே படர்ந்து பரவிப் போகும்.  வர்ணனைகளை கேட்டதோடு சரி.. ஒரு தடவையும், பார்த்ததோ  பிடித்ததோ இல்லை... ஆயிற்று.. இன்று இதை சந்திக்கத்தானே இந்த நேரம்  பார்த்து காத்திருந்து வந்தாகி விட்டது.

அத்தனை நிகழ்விலும்  சரக்.. சரக்....கென  பாதச்சேர்ந்த செருப்பின் ஓசை சிறிது  கண்ணயர்ந்த இருளையே  திடும்மென விழித்துக் கொள்ள வைத்தது.  மிரளும் இருட்டும் கலையாதிருக்க வேண்டும். கலைந்து போகாத இந்த இருளுக்குள், "அதை"  எப்படி அடையாளம் காண்பது? வெள்ளை உருவில், புகை மாதிரி கண்ணுக்கு தெரிந்து "பிடிக்க" ப் போகும் போது கைக்கு அகப்படுமா? இல்லை கைத் தட்டி பறந்து மறைந்து விடுமா?

இல்லை, சாதரண உருவில் நடந்து வந்து, "என்னை உனக்குப் பிடிக்கிறதா? நான் முன்னால் போனால் ஓடி வந்து பிடிக்கிறாயா?  இல்லை.. உன்னை ஓட விட்டு நீ களைப்படையும் போது  சத்தமின்றி நான் வந்து நிற்கும் போது  பிடிக்கிறாயா? எப்படி வசதி" என்று கேட்குமா?

அதுவுமில்லாது,  தலை விரித்துப் போட்டபடி, பற்பசை கொண்டு  பல் துலக்கும் கோலத்தில், இரண்டு நீண்ட பல்லை மட்டும் வாயோரங்களில் காட்டி,  பயங்கர சிரிப்பொன்றை உதிர்த்து, மற்ற பற்களை சிரித்த பின் காட்டியபடி ,வக்ரமான  முகத்துடன்  மெதுவாக  காற்றில் வேண்டுமென்றே மறையுமா ? இதை முன் பின் பார்த்திருந்தாலாவது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.  ஐயோ... எப்படி இருக்குமென்று தெரியவில்லையே...

குறிப்பாக இவற்றை எந்த பாலில், ஆண், பெண் என்ற எந்த பாலில் அடையாளம் கண்டு பிடித்துக் கொண்டு பிடிப்பது?  எது பிடிக்க இலகுவாக வசப்படுமென அறிந்து கொள்ளாமல் இந்த நடு நிசியில் வந்து இப்படி  தடுமாற வேண்டுமா?  உள்ளெழுந்த  நினைவுகள் படபடவென திட்டி தீர்ப்பதற்குள் ,  இருளில் ஏதோ ஒரு பறவை வழி தடம் மாறி வந்து "கீறீச்" சென அலறி முகத்தில் "பட்"டெனஅறைந்தபடி பறந்து சென்றது. மனசு முழுக்க திகில் வெள்ளம் திடிரென பிரவாகமாய்  பாய்ந்து வந்து நின்று ஒரு உலுக்கு உலுக்கியது. . . சிறிது முடியாமல் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இருட்டு மையை விழி நிறைய வேண்டிய மட்டும் அப்பிக்கொண்டு,  இரு கை கொண்டு வழித்தெடுத்த ஒரு இடைவெளியில், விழி கூர்ந்த போது, வெள்ளை உருவொன்று கையசைத்து "வா" "வா" என்றபடி நகர்வது மங்கலாக புலப்பட்டது. "யார் நீ" என்ற வினாவுக்கு, சற்றும் பயமேதும் கொள்ளாமல், அருகில் வந்து பற்கள் இல்லா வாயை  "ஆ" வென "வி" ரித்துக் காட்ட "ஓ நீதானா அது" என்றபடி கை நீட்டி பிடிக்க உத்தேசிக்கும் போது, பளாரென்ற ஓர் அறை கன்னத்தில்  விழுந்தது.

இதை எப்படி பிடிப்பது .... 

ஒரே குழப்பமாக இருந்தாலும். உடலின் வலியோடு, தலை கழன்று போகும்படியான வலியும், கண்கள் இரண்டும், இரு அருவிகளாக மாறாத பாறாங்கற்களாக, சிக்கித் திணற, கற்களுக்கிடையே  ஊறும் நீரை உள்ளடக்கி, விடும் மூச்சை,  வாய் வழி மூச்சாக்கி, மூக்கின் வழி சுவாசத்தை, கடந்த இருபது நாட்கள் வரை மரணத்தின் வசமும் தராமல், தானும் பெருக்கெடுத்து ஓடி  நாசியின் நலனை சரி வர பாதுகாக்கா மலும், பெரும் சோதனைக்குள்ளாக்கி, இரவின் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை கை பிடித்து நரகத்தின் வாசலுக்கே கொண்டு விடும் இந்த நீர் தே(தோ)சத்திற் காக இதை பிடிக்கத்தான் வேண்டும் போலும்.

சற்று நகர்ந்து மரமொன்றின் இடை வெளியில், அதன் அசைவு மறுபடி தெரிய பிடிக்க விரையும் போது, ஒரு பெரிய கல் தடுக்கி சட்டென மண்ணை கவ்வி விழுந்ததில். படபடக்கும் இதயம் சுய நினைவை திருப்பி இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து கண்களை மலரச் செய்தது....

வேறு ஒன்றுமில்லை... "மாத்திரை போட்டால், ஒரு வாரம்... போடாவிட்டால் ஏழு நாட்கள்" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய நோயாகிய  ஜலதோஷம்,  இந்த தடவை  வந்த தென் மேற்கு மழை தீவிரத்தைப் போல் கடந்த இருபது நாட்களாக கடைசி பாராவில் சொல்லியதை போல் சற்று வெறி  பிடித்தால் போல் தாக்க உறவுகள் "ஆவி"யையும் கூடவே பிடித்தால் உங்களுக்கு கொஞ்சம் சரியாக வாய்ப்புள்ளது என்று வலியுறுத்தி  கூற, நானும் ஒவ்வொரு நாளும் படுக்க போகும் முன், என் "ஆவி" யை தொலைந்து விடும் அவஸ்த்தையை பட்டாலும்,  சரி!  நாளை "பிடித்து" பார்க்கலாம், என தள்ளிப் போட்டு கொண்டே வந்தேன். "ஆவி"பிடித்தல் என்ற வார்த்தை என்னுள் "நமக்கும் பேய் கதைகள் எழுதும் ஆற்றலை உண்டாக்கி கொள்ளலாமே " என எண்ணியதில்,  இரவு வராத  நித்திரையில் சிறிது கற்பனையை தோற்றுவித்தது. அதன் விளைவே இந்த பதிவு.

அனைவரும்,
என்னுடன், 
வந்து
அறு(ஆ.வி)வையை, 
ப(பி)டித்ததற்கு, 
நன்றிகள்.
   
              ==================😀===================


Friday, August 3, 2018

பயணித்த காதல்....

சகோதரர் கில்லர்ஜி அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் என்ற பதிவில், மாற்றுத் திறனாளிகளின் உன்னத குணங்களைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும், அவர்களின் தன்னம்பிக்கை குறித்து நான் எழுதி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதை உடனே பதிவிட்டு விட்டேன்.

நினைவூட்டியமைக்கு, 
நன்றி சகோதரரே..... 

பயணித்த காதல்..... 

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில், 
            அமர்ந்து வர 
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேர்களை
பார்வை  என்ற உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்
பாசத் தொல்லை பொறுக்காமல்,
மாறா என் உள்ளத்தை முற்றிலும்
மாற்றிக்  கொண்டு மறுத்தளிக்காது

பரிச்சியத்தின் பாசப்பிணைப்பை
மொழிகளில் அல்லாது வெறும்
விழி வழி பரிமாறிய என்னைப் பற்றிய
விபரங்கள் அறிய நீ அழைத்த
விலாசத்திற்கு ஓடி வந்தேன்... என்
விதி அங்கு தான் விளையாடியது.

பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
பரிதாபத்தை உணர்ந்த உன் 
பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை 
பாவை நான் அன்று உணரவில்லை.

இதோ... இன்றும் உனக்காக
அதே பேருந்தில் பயணிக்கிறேன்
ஆனால் உன் வருகை தான் ஏனோ..  
அரிதிலும் அரிதாகி விட்டது.

இன்று அரிதாய் அமர கிடைத்த
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும்
என் விழிகள் கண்டது உன் உருவை...
எங்கு போனாய்....என்னவனே.. என
கண்ணின் மொழியில் கேட்பதற்கு முன்
வழித்தடம் மாறிய வேறொரு பேருந்தில்
மற்றொரு மங்கையின் தோள் சாய்த்து
மயக்கத்தின் போதையில்  நீ மிதந்தாய்...

அவளின் இரு அதரங்கள் சப்தித்த
அசைவுகளில் அமிர்தமாய் இடை வரும்
ஒலி கற்றையின் ஓசையின் பால்... நீ
ஒடுங்கி கிடந்த கோலம் கண்டு
என் சப்தநாடியும் ஒடுங்கி போனது.

உன் உள்ளத்தின் உதாசீனத்தை
உணர்ந்த என் ஊமை விழிகள்
உணர்ச்சிகளை கட்டுபடுத்த இயலாது
உடைப்பெடுத்துக் கொண்டது.

மௌன மொழிகளின் மேன்மையை
உணராத, நீ... மன்னிக்கத் தகாதவன்.
பாசமொழிகளை பயன்படுத்தி நேசம்
பரிமாறி, வஞ்சித்த உன்னை அந்த
பாசமே என்றும் மன்னிக்காது.

இழிவான உன் செய்கையால்
இடிந்துபோன என் உள்ளத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டுவர
இறுகிய என் மனதில் பயணித்த வரிகள்..
                           
                                    இதோ....
"நீயோ.. மாற்றுத்திறனாளி !
அவனோ ஏமாற்றுவதில் திறனாளி !
தீயில் விழுந்தும் கருகாமலர் நீ !
திறமையுடன் திசை திரும்பும் 
தீயினும் கடுமையான தீ அ(ய)வன்..

இனி உன் வாழ்வு வசந்தமாகும்
வழியில் சந்தித்த அவன் வரவினால்.. 
விதி உனக்கு சாதகத்தை தந்ததன்றி,
பாதகத்தை ஈன்று தந்து பாரினில்,
பறைசாற்றிக் கொள்ளவில்லை...
மனதை மாற்றிக்கொள் ! மனம் மகிழ,
மகாராணியாக வாழ்வாய். "
                              இப்போது

மன தைரியம் கொடுத்த 
மாற்று வழி" தன்"னம்பிக்கையில்
நீ இல்லா பேருந்தில், உன்
நினைவுகளை மறக்கடித்து
நிம்மதியாக பயணிக்கிறேன்...