Monday, July 13, 2026

மணம் வீசும் கதம்ப மாலை

 கதம்பம்.

பொதுவாக கதம்பமென்றால், பல் சுவை நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்துத் கலை நிகழ்ச்சியாகத்  தருவது, தத்தம் ஊர்களில் கிடைக்கும் பல்வேறு மணம் வீசும் மலர்களை கதம்ப மாலையாக்கி கட்டி இறைவனுக்குச் சூட்டுவது, பெண்கள் வீட்டின் விஷேடங்களுக்காக அந்த கதம்ப மாலைகளில் வீட்டை அலங்கரிக்கவும், கதம்ப மலர்ச் சரங்களைச் சூடி தங்களை அலங்காரம் செய்து கொள்வது  போன்றவையாலும் அப்பெயர் பெற்றது. 

மேலும், பல்வேறு காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து சமைத்து கதம்ப உணவும் தயார் செய்யலாம். இதையும் கதம்பச்சாப்பாடும், எனவும், எல்லாவிதமான காய்களை சேர்த்துச் செய்யும், கூட்டுக்கு கதம்ப கூட்டு எனவும், கதம்ப சாம்பார் எனவும் வகைப்படுத்தி ரசிப்போம். உண்போம். 

இங்கு (பதிவுலகில்) நம் பதிவுலக நட்புகளும், கதம்பமென்ற பெயரில், பல செய்திகளை தொகுத்து வாரம் ஒருமுறையோ, இல்லை மாதமிருமுறையோ தருகின்றனர். முன்பிருந்தே அவ்விதம் அடிக்கடி நானும் ஏதாவது எழுத நினைப்பேன். (ஆமாம்..! ஒரு செய்தியையே ஒழுங்காக முடித்துத் தர இயலவில்லை. இதில் உனக்கு பல செய்திகளை கதம்பமாக கட்டி எழுதும்  ஆசை வேறா? என என் மனது பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து  கண்டிக்கிறது./ கர்ஜிக்கிறது.😡 👺. :)) ) ஆனால், என்னால் இப்போதெல்லாம் என்னவோ எழுதவே இயலாமல் போய் விட்டது. அத்தோடு, சென்ற பதிவுக்கு முன் பதிவுக்கு வந்தவர்களை வரவேற்கவும், அவர்கள் கருத்துக்கு பதில் கருத்து தரவுமே அவகாசங்கள் ஏதும் இல்லாமல் போய் விட்டதை நினைத்து உண்மையிலேயே மிகவும். வருத்தமடைகிறேன்.இந்த இடத்தில் என் சகோதர சகோதரிகள் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும். 🙏. 

ஆனால், முன்பு போல் என் நட்பு பதிவர்களின் அனைத்து தளங்களுக்கும் சென்று கருத்துக்கள் மட்டும் அளித்து வருகிறேன்.அதுவே சில சமயங்களில் ஒரிரு பதிவுகளுக்கு என் பல பிரச்சனைகளில் செல்ல இயலாமலும் போய் விடுகிறது. அதற்கும் மன்னிக்கவும். 

சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தன் சிறப்புமிக்க கவிதைகள், அசத்தலான சிறுகதைகள், போன்றவைகளை  பதிவர்களாகிய நாங்கள் நேசிக்கும் "எங்கள் விருப்பமான எ. பியில்" வியாழனன்று சிறந்த பலர் படிக்காத செய்திகளை தொகுத்து கொடுப்பதுடன், செய்தியின் இணைப்பை இணைத்தும் தருகிறார். வெள்ளியிலும் அவ்வாறே அவர் பதிவு அலங்கரிக்கப்படுகின்றன. அமர்க்களப்படுகின்றன. அதிசயக்கப்படுகின்றன. ஆச்சரியப்படுத்தவும் வைக்கின்றன. 

அது போலவே வார முதல் நாளான திங்களில், "தின்ன தின்ன ஆசை" பிறக்கும் வண்ணம் பலரின் கைவண்ணங்களையும், அவரின் சொந்த தயாரிப்புகளையும் அவர் தளத்தில் பகிர்வதை காண முடியும்.

பின் மறக்கவியலாத பல சிறந்த எழுத்தாளர்களின்  பொக்கிஷங்களுடன், எழுத்தின் சிறப்பை உணர்த்(தி)த வரும்  இன்றைய (பதிவர்கள்) எழுத்தாளர்களின் பட்டியலோடு, மறுநாளைய செவ்வாயும் அங்கு மலர்கிறது. இங்கும் பல நேரங்களில் அவர் எழுதிய அற்புதமான கதைகளும், அன்று  கொடிகட்டிப் பறக்கும். 

நவகிரஹங்களில் படிப்பறிவான புதனின் பார்வையோடு, பதிவர்களின் பண்பட்ட கேள்வி பதில்கள், பக்குவப்பட்ட, பல உள்ளங்களின் தொகுப்பாக வெளி வரும் புகைப்படங்கள், சிறந்த சிந்தனை சிறதல்களுடன் வெளி வரும் கதைகள், அனுபவங்கள் என சகோதரர் கௌதமன் அவர்களின் முயற்சியில், மணம் வீசும் மலரொன்று புதன்தோறும் தன் மணம் பரப்பி நம் மனங்களை கொள்ளை கொள்ளும். 

வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி, ஞாயறாகிய இரு நாட்களும்  பல்சுவை களஞ்சியமாக திகழ்ந்து வரும் சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் தெய்வ பக்தியுடன் கலந்த  அறிவு பூர்வமான எழுத்துக்கள் அங்கு மலர்ந்து மணம் வீசுகின்றன. அவரால் அவர் சிறப்பாக சென்ற இடங்களில் எல்லாம் படமெடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நடமாடும் உண்மை சித்திரமாக அங்கு ஒளி வீசி கொண்டிருக்கின்றன. தெய்வீக பக்தியுடன், நாம் பார்த்தறியாத பல இடங்களிலுள்ள,பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை அறிமுகப்படுத்துவதிலும், பழங்கால சரித்திரங்களை நன்கு படித்தறிந்து அலசுவதிலும் இவருக்கு நிகர் இவரே. 

மேலும்  வாரம் ஒரு சிறந்த கதையாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் அதே சனிதோறும் எபியில்  பங்களிக்கிறார். பல சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை அவரால் படித்தறிய முடிகிறது. அவருடன் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் சகோதரர் ஜீவி அவர்களும் கைகோர்த்து கொண்டு பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தந்து படிப்பவர்கள் மனதை சந்தோஷமடைய வைக்கிறார்கள். 

இதில் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் தன் வலைத்தளத்தில், பல அனுபவங்கள்,அவர் எழுதிய சிறுகதைகள், ஆன்மிக கட்டுரைகள் என பகிர்ந்தளிக்கிறார். 

அதுபோல், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் தன் வலைப்பூவில், உளவியல் சம்பந்தமான கட்டுரைகள், அருமையான, யதார்த்தம் மிகுந்த பல சிறுகதைகள், தான் பார்த்து ரசித்த இடங்களின் இயற்கை வனப்புக்களைப் பற்றிய கட்டுரைகள், சிறந்த கற்பனை கதைகள் என எழுதி படிக்கும் வாசகர்களை மகிழ்வுறச் செய்கிறார். 

தன் வாழ்வின் சிறப்பான அனுபவங்களை, கதையாகவும், கவிதையாகவும் ஒருசேர திரட்டித் தந்து நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல மனமும், பண்பு நிறைந்த குணமும் கொண்டவரான சகோதரர் கில்லர்ஜி அவர்களின் பதிவை நாம் படிப்பதே ஒரு வரமென நினைக்க வேண்டுமென்ற வண்ணம்  அவரின் அற்புதமான கற்பனைகள் அவர் பதிவுகளில் சிறகடிக்கின்றன. என் ஆரம்பகால வலைத்தள வருகையிலிருந்து இன்று வரை என் எந்தவொரு பதிவுகளுக்கும் தவறாமல் வந்து படித்து, சிறந்த கருத்துகளை தந்து, என் எழுத்துக்களை ஊக்கமுற செய்தவர் இவர். இவரின் அன்பான நட்பும் என்னை மேன்மையுற செய்கிறது. 

தாம் "சந்தித்ததை, சிந்திக்கச் செய்யும்" வண்ணமாய் தன் எழுத்தால் கம்பீரநடை போடும் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்கள் தான் இதுவரைச் சென்ற பயணங்களின் கட்டுரைகள், மற்றும் பல செய்திகளைச் சொல்லும் கதம்பங்கள், தன் நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாக தம் நட்புகளின் அருமையான  எழுத்துக்கள் என அனைத்தையும் அவர் தம் வலைப்பூவில்  பகிர்ந்தளிக்கிறார். 

அவரின் துணைவியான ஆதி வெங்கட் அவர்களின் சிறப்பான பகிர்வுகளும், புதுமையான சமையல்களுடன் கலக்கி வரும் அவரின் எழுத்துக்களும் அவர் வலைப்பூவை சிறப்புறச் செய்கின்றன. அவர்களது குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக திகழ்கிறது.

சகோதரி கோமதி அரசு அவர்கள், அவர்கள் "பக்கமாக" அவர்கள் வலைப்பூவில் பல பதிவுகளுடன் சிறப்பாக பங்களித்து வருவதை வாழ்த்தவோ, பாராட்டவோ வார்த்தைகளே கிடையாது. அவர் பறவைகளின் நேசராக, பாசம் மிகுந்த அன்னையாக, நட்புகள், உறவுகள் அனைவரையும் எப்போதும் "வாழ்க வளமுடன்" என்ற அன்பான ஒரு  வார்த்தையாலேயே கட்டிப் போடும் அழகை விவரிக்க என்னிடம்  வார்த்தைகளே இல்லை. மாறாக என் பணிவான வணக்கங்களை அவருக்குத் தெரிவித்து மகிழ்கிறேன். 

சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் வலைத்தளம் மிக பிரசித்தி பெற்ற வலைத்தளம். அவரது "எண்ணங்களாக" அவரது பதிவுகளில் மலரும் மலர்கள் அனைத்தும் அதிக நறுமணமுள்ளவை.  அதில் அவரின் வாழ்வியல் அனுபவங்கள், ஆன்மீகம், சிறப்பான சமையல் என அவரின் பங்களிப்புகள் ஏராளமானவை. அவரது திறமையை பார்த்து அப்போதிலிருந்து இப்போது  வரை வியக்கிறேன். மதிக்கிறேன். அவர் என் நட்பானதை நினைத்து  மனது கொள்ளாத பெருமிதமும் அடைகிறேன். 

மேலும் வலைத்தளத்தில் தாம் அறிந்தவற்றை, நமக்குப் புரியும்படி தமது தெள்ளிய தமிழில், யார் மனமும் கோணாதபடிக்கு சிறந்த பதிவுகளை தந்து வரும் கோதரர் துரைசெல்வராஜ் அவர்களது எழுத்துக்களும் சிறந்த வகையை சார்ந்தவை. எத்தனை நயமான  குடும்ப கதைகள், கவிதைகள், என இவரின், கற்பனை சிந்தனைகளிலிருந்து தோன்றி வந்துள்ளது என்பதை கணக்கிடவே இயலாது. அது தவிர ஆன்மீகம், இறைபக்தி என்ற ஊற்று இவரின் மனதில் புறப்பட்டு, எழுத்தால் அது ஏனைய பதிவர்களை தெய்வ பக்தியில் மனம் குளிரச் செய்வதும் இவரின் வாடிக்கைகளில் ஒன்று. இவரின் எழுத்துக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். 

பதிவர்கள் வரிசையில், நீண்ட காலமாக தன் அனுபவங்களை, கதைகள் மாதிரியும், அவ்வப்போது உண்மை நிகழ்வாகவும், அன்புடன் சொல்லி வரும் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களது திறமையை மனம் நிறைந்து எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் அவர்களின் ஆன்மீக பதிவுகள், சமையல் பதிவுகள் என தம் பதிவை அலங்கரிப்பதில் வல்லவர். மொத்தத்தில் இவர் அன்பே உருவானவர். இவருடன் சமீப காலமாக நான் பெற்ற நட்பும், என்னை பெருமையடைய வைக்கும். 

அதிரடியாக வந்து பல கருத்துக்களை, பதிவுகளுக்கு தந்து தன் நகைச்சுவைப் பேச்சால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சகோதரி அதிரா அவர்களின் வலைப்பூவும், மறக்கவொண்ணா அவரின் பல திறமைகளை பறைசாற்றும். திறமையான அவரின் சமையல், பல அறிவார்ந்த விஷயங்கள், என பகிர்ந்தளிப்பதே அவர் பதிவுகளின் நோக்கம். அவரின் பதிவுகளை படிப்பதே நம் அறிவுக்கு விருந்தாக அமையும். மேலும் தன் நகைச்சுவைப் பேச்சால் நம் இதயங்களை கட்டிப் போடும் நுணுக்கங்கள் அறிந்தவர். வலையுலகில் இவரின் நட்பும் நான் செய்த பெருந்தவமே. 

இன்னமும் நான் முதலில் வலைத்தளமொன்றை ஆரம்பித்த போது, என் ஒவ்வொரு பதிவுக்கும் விடாமல் வந்து ஊக்கம் மிகுந்த கருத்துக்களைத் தந்து என் எழுத்துக்களை சிறப்புறச் செய்த "திருக்குறள் வித்தகர்"சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், மற்றும், கவிதையிலும்,,பல நல்ல கருத்துள்ள பதிவுகளாலும் தன் வலைத்தளத்தை செவ்வனே நடத்தி வரும்  சகோதரர் யதோ ரமணி அவர்கள், மற்றும் சிறந்த தன் வலைத்தளத்தில் பல செய்திகளையும், சிறப்பான கட்டுரைகளையும் தம் அனுபவங்களையும்  பகிர்ந்து வரும் சகோதரர் திரு.   DR.B.ஜம்புலிங்கம் வர்கள் என அனைவருக்கும்  என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு.🙏. 

இது போக நான் எப்போதேனும் படித்து ரசித்த பதிவுகள்,மற்றும் அதன் உரிமையாளர்களான பதிவர்களுக்கும்,அதுபோல் என் பதிவுக்கும் அவ்வப்போது வந்து என்னை என் எழுத்துக்களை உற்சாகப்படுத்தி சென்றிருக்கும் அன்பான பதிவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

மேலும் நான் வலைத்தளம் ஆரம்பித்த போது வந்து கருத்துக்கள் தந்த பல பதிவர்கள் எதனாலேயோ அவர்களால்  வர இயலாமல் போய் விட்டது என் துரதிர்ஷ்டமே. 

இப்போது இவர்களின் அறிமுகங்கள்  ஏன் என அறிமுகமானவர்களுக்கே ஒரு கேள்வி வரலாம். என் வலைத்தள பிரவேசத்திற்குப் பின் எனக்கு கிடைத்த, என்றுமே வாடாத மணம் வீசும் மலர்கள் இவர்கள். அதனால் இவர்களைக் கொண்டே சிறந்ததொரு கதம்பமாக மாலை சூடி இங்கு  தொடுத்துள்ளேன். 

ஏனெனில் நான் என் வலைத்தளமென்ற ஒன்றை  ஆரம்பித்து, இந்த வருடத்துடன் பதினாறு வருடங்களாகி விட்டன. இது வரை நான் எழுத்துலகில்  சாதித்தது (வெறும் பூஜ்யந்தான்)  ஒன்றுமில்லையென்றாலும், இந்த காலகட்டத்தில், சிறப்பு மிக்க இத்தனை வலைத்தள நட்"பூ"களைப் பரிசாகக் பெற்றுள்ளேன். இன்று வரை இவர்கள் அனைவரும் நான் ஏதோ கோணல்மானலாக எழுதி வரும் என் எழுத்துக்களுக்கு உரமாக,உயிராக இருந்துள்ளனர்./ இருக்கின்றனர். அதனால், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த ம் ர் மாலை என் மனதில் ஒரு பதிவாக உருவானது. 🙏. 

இப்படியொரு கதம்பமாலை தொடுத்ததில் என் கவனப்பிசகாக ஏதேனும் தவறிருந்தாலும், குறையிருந்தாலும் அனைவரும் என்னை மன்னிக்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏.