கூட்டுக் குடும்பங்கள் சிறந்ததெனினும், தற்போதைய சூழ் நிலைகளில் நம்மால் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொருவரின் வேலைகள், கனவுகள், கற்பனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், அவசியங்கள் போன்றவை விரிந்து பரந்து உலகளவு வியாபித்து விட்டது. நெருங்கிய உறவுகளே எப்போதோ சந்தித்து கை குலுக்கி கொள்கிறோம். அவசியமானதை கைபேசியில் பேசி, கணினி திரையில் மனசுக்கு தோன்றும் போது பார்த்துப் பேசி உறவுகளை தொடர்பில் வைத்துள்ளோம். அதுவும் என்று நம் நினைவிலிருந்து கழன்று கொள்ளுமோ தெரியவில்லை.
இதை எழுதும் போது என் பெற்றோர் (1973ல் இருக்குமென நினைக்கிறேன்.) மதுரையில் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது, திருமணத்தில் சந்தித்த மற்றொரு உறவுகாரர்கள் அவர்கள் வீட்டுக்கு அழைத்ததின் பேரில் அங்கு செல்ல சம்மதித்து அவர்கள் வீட்டுக்கு சென்றார்களாம்.
அது மிகப் பெரியவீடு வீட்டில் நான்கைந்து அண்ணன், தம்பிகள். அவர்களின் மனைவிகள் ஆளாளுக்கு மூன்று நான்கு குழந்தைகள், மனைவிகளின் சொந்தங்கள். கணவர்களின் உறவுகள் என வீடே ஒரு கல்யாண மண்டபமாய் கலகலத்துப் கொண்டிருந்ததாம்.... அண்ணன் தம்பி குழந்தைகள் ஜாடையில் ஒருவரை ஒருவர் ஒத்துப் போனதில், எத்தனை அறிமுகப்படுத்தியும், அவர்களை புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்ததாம்.
அவர்கள் என் அப்பா வழி உறவு என்றாலும், என் பெற்றோருக்கு அனைவரும் அவ்வளவாக அறிமுகமில்லை. என் அப்பாவுக்கு அவர்களின் பெற்றோர் ஒன்று விட்ட வழி உறவுகள்.. அவர்கள வறுப்புறுத்தி அழைத்ததினால் இரவு தங்கி விட்டு மதியம் திரும்பி விட்டனர். மதிய சாப்பாடு பந்தி போல அனைவரும் அமர்ந்து சாப்பிட்டார்களாம். பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருந்தது என வந்த பின் அவர்களின் உறவின் பெருமையை சொல்லி, சொல்லி என் அப்பா அதிசயித்து கொண்டே இருந்தார்.
கிட்டதட்ட 30, 35 பேருக்கு தினமும் சமையல் செய்து பறிமாறி, வீடு வாசல் சுத்தம் செய்து, ஒவ்வொருவரும் அத்தனைப் பொழுதும் அந்த குடும்பத்துக்காகவே கழித்து, நாட் கிழமை என்று பண்டிகை காலங்களையும் வரவேற்று, இதில் எந்த விதமான மனஸ்தாபத்துக்கும் இடம் தராமல் புன்னகைத்து மன மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொண்டு, "எப்படித்தான் இவர்கள்" என நாங்கள் அந்த உறவின் பெருமையை நினைத்து வியந்து போனது இன்னமும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல உள்ளது.
இன்று கணவன் மனைவி அவர்களின் குழந்தைகள், அதற்கு மேல் ஒரு உறவு என்றாலே அந்த வீட்டை ஒரு அதிசய பொருளாக பார்க்கிறார்கள். காலம் மாறி விட்டது. நான் முதலில் சொன்ன காரணங்கள் கூட்டுக்குடும்ப வேர்களை தாக்கி அந்த மரங்களை செல்லரிக்க செய்து வீழ்த்தி விட்டன.
அந்த பெருங்குடும்பத்தை நானும் பார்க்க வேண்டுமென அம்மாவிடம் எத்தனையோ முறை அவர்களைப்பற்றி பேச்சு வரும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை.. வாழ்க்கைப் படகு திசைகள் மாறி பயணித்துதானே போகும். நினைவுகள் மட்டும் வருத்தமான சுமைகள், மகிழ்வான சுமைகள் என சுமைகளை சுமந்து கொண்டு படகுடனே பயணிக்கும்.
(வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.)
அன்று நடக்காத ஒன்றை, தெரியாத முகங்கள் ஏற்படுத்திய உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும் உறவின் பெருமையை அறிய வைக்க இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும் எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது. இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து) ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.
என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு பதிலளித்து எனக்கு புன்னகைக்க மட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும் உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. ) இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு சிரிக்க கற்றுக் கொண்டேன். ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்பிக்கிறேன்.
அனைவரைப் பற்றியும் வலைத்தள உறவுகள் பற்றியும் என் குடும்பத்திலுள்ளவர்களிடமும் கூறியுள்ளேன். நல்லவர்களை பற்றி சிறப்பாக கூறுவது இயல்புதானே. என் வலைத்தள எழுத்துகளுக்கு உதவியாய் இருக்கும் என் குழந்தைகளிடமும் கூறியுள்ளேன். ஒருவேளை மரணம் வந்து என் எழுத்துகளையும், என்னையும் பிரித்தால் அதையும் பகிர்ந்து அனைவருக்கும் தெரிவித்து விடும்படியும் சொல்லியிருக்கிறேன். எதுவும் அவன் செயல் அல்லவா.. நம் கையில் என்ன உள்ளது....
படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.