வலையுலக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள்.
இன்று நம் அன்பான சகோதரி வல்லி சிம்ஹன் அவர்கள் தபால்காரரைப் பற்றியும் அந்தக்கால கடிதங்களின் சிறப்பைப் பற்றியும் தம் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அவரின் பதிவு பழைய காலத்திற்கே நம்மை கொண்டு சென்றது. அதிலும் பதிவின் முடிவில் "இணையத்தின் இணையற்ற தபால்காரர் நம் வலைப் பதிவுகள். "என அவர் முடித்திருக்ககும் வரிகளை ரசித்தேன். ஆம் . உண்மை.... இப்போது மறுபடியும் நம் எழுத்துக்களை வலைப்பதிவுகள் என்ற தபால்காரர் மூலம் நாம் தினமும் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். நன்றி சகோதரி.
கடிதங்களின் இடத்தை இப்போதெல்லாம் கைப்பேசி பிடித்துக் கொண்டு விட்டது. கடிதம் எழுத இப்போது எவருக்கும் பொறுமையும், நேரமும் குறைவாக உள்ளது. கைப்பேசியில் உடனுக்குடன் பேசி, எத்தனை மலைப்பான தூரங்களையும் நெருக்கமாகி அருகில் வைத்துள்ளோம்.
அப்போதெல்லாம் கடிதங்களில் எழுதும் போது நிறைய விஷயங்கள் இருப்பது போல் தோன்றும். எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுணுக்கி எழுதிய பின்னும், இன்னமும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் வரும். பெறுநர் முகவரி பக்கம் மட்டுமே கோடு தாண்டா நேர்மையோடு முகவரிக்கென்றே ஒதுக்குவோம். "அதையாவது விட்டு வை.....அதிலேயும் கிறுக்கினால், கார்டு போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேராமல் நடுவிலேயே தத்தளித்து தவித்துப் போய் விடும்" என்ற கிண்டலான எச்சரிக்கைகள் வீட்டின் மூத்த உறவுகளிடமிருந்து வந்து விழும் வரை இன்னமும் என்ன எழுதுவது என்று யோசிப்பதை நிறுத்த மாட்டோம்.
அந்த காலத்தில் கவனக்குறைவால் தவறான முகவரிகள், இல்லை, மழை, புயல், (அக்காலத்திலெல்லாம் மழை காலத்தில் அவ்வப்போது வரும் புயலை கடும் சூறாவளி மழை என ஒரே பெயரிட்டுதான் அழைப்போம். இப்போது அதற்கும் விதவிதமான பெயர்கள் கிடைத்து விட்ட மகிழ்வில், வருடத்திற்கு அதன் எண்ணிக்கைகள் நம்மை கேட்காமலேயே அதிகரித்து விட்டன.) போன்றவற்றின் காரணங்களால் கடிதங்கள் அவரவர்களுக்கு சென்று சேராமல் போய் விடும். பதில்கள் வர வில்லையே என மீண்டுமொருமுறை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு எப்படியும் பத்து நாட்கள் ஆகிவிடும். அதற்குள் நம் மனம் படும் பாடு விவரிக்க இயலாது.
அந்த நினைவுகளுடன், திரும்பி வராத இடத்திலிருக்கும் என் அன்னைக்கு ஒரு மடல் என நான் என் மன ஆறுதலுக்காக எப்போதோ எழுதினேன். வல்லி சிம்ஹன் சகோதரியின் பதிவுக்கு கருத்து எழுதும் போது கூட அங்கும் அவர்களைப் பற்றித்தான் (எங்கள் அம்மா) குறிப்பிட்டிருந்தேன்.
திருமணத்திற்கு பின் என்னிடமிருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது மடல்களை எதிர்பார்க்கும் அன்னையின் நினைவு (அந்த உறவு மட்டுந்தான் நம் எழுத்தை, அதன் மகிழ்வை, அதனுடன் இழையோடும் சோகத்தை தனதாக்கிக் கொண்டு, தன் பங்குக்கும் அனைத்தையும் பிரதிபலிக்க செய்யும் சக்தி வாய்ந்தது.) அதிகரிக்கவே இந்த அன்னைக்கு எழுதிய மடலுக்கு முன் மனதிலுள்ளதையும் பதிவாக இங்கு எழுதினேன். இனி அன்னைக்கு ஒரு மடல். ...
கவிதை என்ற பெயருடன் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் கவிதை என நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். ஆரம்ப ஒரு வரியையே இடையில் நிறுத்தாமல் நீண்ட வரியாக எழுதி முடித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.
அன்னைக்கு ஒரு மடல்....
அன்னை தந்தை வளர்ப்பினிலே,
அருமையாய் தினம் வளர்ந்து,
குலப்பெருமை குன்றாமல்,
பிறர் குறையேதும் கூறாமல்,
குன்றில் இட்ட விளக்காக திகழ,
விரும்புமந்த இரு உள்ளங்களுக்காக,
பால் மணம் மறக்கா பருவத்திலே,
பள்ளிப் பாடங்களை
பாங்காய் தினம் கற்று,
மழலை மொழி சொற்களை,
மாற்றியமைக்க பாடுபட்டு,
கற்றதை கண்டு பிறர் களிப்புறவும்,
கல்லாதவைக்கு கடுஞ்சொல்லும் பெற்று,
சற்று, கடுமையும், கனிவுமாக வளர்ந்து,
கடுகளவும் எண்ணம் சிதறாமல்,
கருத்தொன்றி படித்து,
களை எடுத்த நாற்றாய்,
பள்ளிப் பாடங்களை பரிசீலித்து,
பள்ளிக்கு பின் பல்வேறு கனவுகளுடன்,
கல்லூரியில் கால் பதித்து,
கற்றதை மேம்படுத்தி,
பாரினில் பிரகாசிக்க,
பட்டங்கள் பல சுமந்து,
பழுதில்லா பணி தேடி,
தினமும் பல மைல் பயணித்து,
சுமந்த பட்டங்களுடன், சுயமாகி நின்றிட..,
சுகமான ஒரு வேலைக்காக,
ஓராயிரம் சுகங்களை உதாசித்து,
இறுதியில் ஈட்டதொரு,
நல்லதோர் பணியில்,
நாள் பார்த்து அமர்ந்து,
நலங்கள் குன்றினாலும்,
நாள்தோறும் உழைத்து,
நாடு விட்டு நாடு சென்றும்,
நற்பெயர்கள் பலவும்,
நன்கு வாங்கியதில்,
நாட்கள் வருடத்தை சுவைத்திட, ஓரிரு
நரை முடிகளை தலையில் காட்டியதால்,
மனம் பதறிய மாதாவின் சொல் தட்டாது,
அடுத்தவ(ளி)ரின் வாழ்க்கையில்
அ(நா)வசியமாக பிரேவேசித்து,
அனுதினமும் அனுசரிக்க பழகி,
புதிய சொந்தகளை சொர்க்கமாக்கி,
பழைய பந்தங்களை பரணில் கிடத்தி,
பகட்டு வாழ்க்கைக்காக,
பகல், இரவு பாராது,
பணத்தை வாழ்வின் இலட்சியமாக்கி
நோய் துறந்து, பாய் மறந்து,
நேரம் மட்டுமே, நேர்த்தியாய் பார்த்து,
நிமிடங்களை வீணடிக்காமல்,
நிம்மதியை தானமாக்கி,
சற்று நிதானிக்கும் போது
நின்று திரும்பினால்,
நீண்ட வாழ்நாளில்
பாதி காணாமல் போயிருக்க,
நிதர்சனத்தின் கண்கள் சுட்டெரிக்க,
துறந்த நோய்கள் பலவும் துரத்த,
வளர்ந்து விட்ட வாரிசுகளின்,
வசமாகியிருந்த மிகுந்தந்த
காலங்களின் படிகளில்,
வழுக்கி விழுந்து எழமுடியாமல்,
வருத்தத்தின் பிடியில் வசமாகும் போது,
அம்மா, உன் நினைவு வருகிறது.
அம்மா.. .உன் நினைவு மட்டுந்தான்
வருத்தங்களோடு வசமாகினாலும்,
வாசமாக மட்டும் என்னுடன்
வசித்திருப்பேனென்று வருகிறது....
தாயே! அன்று என்னைக் காண நீ
தவித்த சோகங்கள் தளர்வின்றி
இன்று எனைத் தழுவுகிறது.
காத்திருந்து, காத்திருந்து,
கண் மூடிவிட்ட உன்னை,
காண வந்த என்னிடம் இமை மூடிய
கண்களின் வழியே, நீ
கேட்ட கேள்விகள் ஓராயிரம்!
அவற்றிக்கு பதிலளிக்க,
அப்போது தெரியாததால்,
இயன்றவரை பதில்சொல்ல,
இப்போது உனைத் தேடுகிறேன்.
தாயே நீ எங்கிருக்கிறாய்?
தனித்திருக்கிறாயா? உன்
தாயுடன் இருக்கிறாயா? உன்
வயது விளைவித்த
வலிகளின் வலிமையை
விளக்க, உன் வாரிசுகளின்
வரவை விரும்பித் தேடியும்,
வாராத நிலை கண்டு உன்னை
வளர்த்தவளிடம் விமர்சிக்க
வானுலகம் சென்றனையோ?
எந்திரமாக வாழ்ந்த நான் இந்த
எதார்த்த வாழ்வின் விளக்கம் பெற,
எப்படியும் என்னுடைய
தள்ளாத வயதில், மனம் தளர்ந்து,
தவித்துப் போய் நான் வரும்போது,
தாங்கி பிடித்து அமரவைக்க,
தனியிடம் ஒன்று உன் அருகாமையில்
தக்க வைத்துகொள் தாயே....!
எப்படியும் எனக்காக இதை நீ செய்வாய்..
ஏனெனில் நீ தியாகங்களின் சிகரம்....
அது உன்னதங்களின் உயரம்.
சிகரங்களுக்கு பகைமை பாராட்டி
சினம் கொள்ளத் தெரியாது.
இப்படிக்கு,
உன்னிடம் விரைந்து வர விளையும்,
உன் .............
என் பழைய நினைவுகளை (பிதற்றல்களை என்று கூட சொல்லலாம். ) படித்தவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏.
.gif)