Showing posts with label பொங்கல் வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label பொங்கல் வாழ்த்துக்கள். Show all posts

Sunday, January 31, 2021

பொங்கல் திருநாள்....



இது பொங்கல் மலர் மின்னூலுக்காக தயாரானது என் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் ஏகப்பட்ட டிபன் வகையறாவை போட்டு அசத்தி உள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கும் இதை என் தளத்தில் போட வேண்டுமென்ற ஆசையுடன் ஆவலும் எழுந்தது. 

பொங்கல் மலர் மின்னூலில் அனைவரது படைப்புகளையும் எனக்கு முழுமையாக தடையில்லா நெட்வொர்க் வந்தவுடன் படிக்க வேண்டும். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மலரை அருமையாக தொகுத்து தயாரித்த சகோதரர் கெளதமன் அவர்கள், மற்றும் எ. பி ஆசிரிய பெருமக்களுக்கு எனது அன்பான நன்றிகள். 

பொங்கல் மின்னூலை என்னைத்தவிர அனைவரும் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதை இங்கும் பார்வையிட்டு படிப்பவர்களுக்கும் என பணிவான நன்றிகள். 🙏. 

அனைவருக்கும்
  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள் அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வரட்டும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது முதுமொழி. அதன்படி உலகத்தை தன்  விருப்பப்படி ஒருவருட காலமாக அசைத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கொடிய  தொற்று நோய் முற்றிலும் அகன்று, மக்கள் இயல்புடனும், நலமுடனும் வாழ இறைவன் நல்ல வழியை இந்நாளிலிருந்து  தர வேண்டுமாய் அனைவரும் மனமாற பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

இந் நன்நாளில் கண்களுக்கும், வயிற்றிக்குமாய் ஒரு சிறு விருந்து. இவ்விரண்டும் நிறைந்தால், மனதும் ஆனந்தமான நிறைவடையும் அல்லவா? 

காக்கும் கடவுள் கணேசனை மனமுருக  முதலில் அழைப்போம். . தூக்கிய துதிக்கையே துணை நமக்கு என நம்புவோருக்கு, அவனருள் கண்டிப்பாக என்றும் உண்டு. 🙏.🙏. 


அடுத்து செங்கதிரும்... 

முழுமதியும்...... 

சேர்ந்தணைந்த சுந்தரனின் அருளும் கண்டிப்பாக நம் வாழ்வில் வளம் சேர்க்கும். 🙏.🙏. 

பிறகு மலர்ந்து மணம் வீசி வரும் பொங்கல் திருநாளை,  மங்களகரமான கோலங்கள் இட்டு பசும் மஞ்சளோடு வரவேற்கலாம்.. 




முதலில் இனிப்பான பால் கொழுக்கட்டைகள்.  

பச்சரிசி மாவை வென்னீர் சேர்த்து வேக வைத்துக் கொண்டு, சிறு உருண்டைகளாக செய்து, ஆவியில் வைத்து ஒரளவு வேக வைத்துக் கொண்டு, பால், மற்றும் கொஞ்சம் தேங்காய் பாலுடன், சேர்த்து மீண்டும் கொஞ்சம் கொதிக்க வைத்ததும்,வேண்டிய வெல்லமும் சேர்த்து, அந்த வெல்ல  வாசனை போகுமளவிற்கு (வெல்லம் முழுமையாக கரைந்தால் அதுதான் அடையாளம்)  கொதிக்க வைத்துக் கொண்டு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால், இனிப்பான பால் கொழுக்கட்டைகள் தயார். 


அடுத்து இனிப்பான சேமியா கேசரி, மற்றும் உருளை கிழங்கு போண்டா. 

சேமியாவை தேவைக்கேற்ப எடுத்து வறுத்துக் கொண்டு, அத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, அத்துடன் ஒரிரு சிட்டிகை கேசரி பவுடரையும் சேர்த்து பின், வேக வைத்துக் கொண்டு, சர்க்கரை ஒன்றரை பங்கு அதனுடன் சேர்த்து நெய் விட்டு அடி பிடிக்காமல் கிளறி ஏலக்காயும் சேர்த்த பின்  மு. பருப்பு, உலர்ந்த திராட்சைகளை நெய்யில் வறுத்து போட்டு இறக்கினால், சுவையான சேமியா கேசரி பார்க்கவே அழகாக இருக்கும். 

உ. கி நான்கைந்து வேக வைத்துக் கொண்டு, தோல் நீக்கிய பின், பொடிதாக அரிந்த வெங்காயம், ப. மிளகாய் இவற்றை எண்ணெய்யுடன் வதக்கி, அத்துடன் உதிர்த்த உ. கி சேர்த்து, உப்பு, காரப்பொடி கலந்து நன்கு வதக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

கடலைமாவையும், அரிசி மாவையும், பஜ்ஜி மாவுபோல கலந்து வைத்துக்கொண்டு, அந்த உ. கி உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால், உகி போண்டா தயார். கூடவே தேங்காய் சட்னியும் செய்து சுடசுடப் பரிமாறலாம்... 


அடுத்து இலையில் பரிமாற சேப்பங்கிழங்கு கறி, ரோஸ்டாக வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம். 

சேப்பங்கிழங்கு மண் போக நன்றாக அலம்பி குக்கரில் வேக வைத்து எடுத்து நன்கு ஆறியதும், தோல் நீக்கி ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்..கடலை மாவை, கொஞ்சம் அரிசிமாவுடன் கலந்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்துடன் பஜ்ஜி மாவு மாதிரி கரைத்துக் கொண்டு, அதில் சேப்பங்கிழங்கு துண்டுகளை முக்கி எடுத்து அடுப்பில் காயும் எண்ணெய்யில்
பொரித்தெடுத்தால் நன்றாக ரோஸ்டாக கரகரவென்ற சுவையுடன் வரும். எண்ணெய் அதிகம் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் கடாயில், கொஞ்சம் எண்ணெயில் முக்கி எடுத்த மாவுடன் கிழங்குகளை ஒன்றிரண்டாகப் போட்டு சிறு தீயில் வைத்திருந்து அடிக்கடி திருப்பி கொடுத்து கரகரப்பாக எடுக்கலாம். பொறுமையுடன் இதை அனைத்தையும் முடிக்க கொஞ்சம் நேரமாகும்.




அடுத்தாக இலையில் பரிமாற இரண்டாவது கறியாக புடலங்காய் உசிலி செய்யலாம். 

குருவி புடலங்காய் இரண்டோ, மூன்றோ வாங்கி நன்கு அலம்பிய பின் பொடிதாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். து. ப அரை டம்ளர், க. ப இரண்டு, மூன்று பெரிய ஸ்பூனாக சேர்த்து அலம்பி ஊற வைத்தபின், அத்துடன் சிகப்பு மிளகாய், ப. மிளகாய், உப்பு  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்ந்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு அதை இட்லி தட்டுக்களில் வேக வைத்து உதிர்த்த பின், கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு. உ. ப தாளித்து உதிர்ந்த பருப்புக் கலவையை  நன்கு உதிர்த்துக் பிரட்டி கொண்டு அத்துடன் வெந்த புடலங்காய்களைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி எடுத்தால் அருமையான புடலங்காய் உசிலி தயார். 
 

த்துடன்  வாழைப்பூ வடையும் செய்தால் இரண்டு இனிப்புடன் நான்கு காரம். 

வாழைப்பூவை  கள்ளன் ஆய்ந்து நன்கு அலம்பி வைத்துக் கொள்ளவும். , ஏற்கனவே ஊற வைத்த, அரை கிளாஸ் பச்சரிசியை, உப்பு, மி. வத்தல், ஒன்றிரண்டு பச்சை மிளகாயுடன் கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்த ஒரு கிளாஸ்( இது மொத்தமாக கலந்த கலவை) நான்கு பருப்பு வகைகளையும்,(அதாவது உ. ப, து. ப, க. ப, பா. பருப்பு வகைகளையும்) அரைத்துக் கொண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் அலம்பி வைத்திருக்கும் வாழைப்பூவையும் அரைத்தெடுத்து கொண்டு, அனைத்தையும் கலந்த பின் சிறுவடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.

பொங்கலன்று,  வழக்கமான இனிப்பான சர்க்கரை பொங்கலுடன், வெண் பொங்கலும் தயாரித்து கொண்டு, அதனுடன் மேற்கூறிய வகைகளையும் செய்து வைத்துக் கொண்டு பொங்கும் மங்கலம் எங்கும்  தங்குக என வேண்டியபடி, இறைவனுக்கு படைத்த பின் அனைவரும் உண்டு மகிழலாம். 

பொங்கலன்று இத்தனை ஐயிட்டங்களா...? எனத் திகைக்க வேண்டாம். சாதரணமாக அன்று மதிய சாப்பாடாக சர்க்கரை பொங்கல், வடை, அப்பளம்,  இரண்டு கறி, கூட்டு, தயிர் பச்சடி, ரசமென சாப்பிடுவது அன்றைய நாள் தொட்டு  இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கம். ( இப்போது அந்த பழக்க வழக்கங்கள் மங்கி வருகிறது. செய்யவும் நேரமில்லை. சாப்பிடவும் முடியவில்லை.) அதனால்தான் கிராமங்களில், பொங்கலன்று "பால் பொங்கியாச்சா.. வயிறு வீங்கியாச்சா.. " என்று கேட்பதும் ஒரு வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக காய்கறிகளை வைத்தே இப்படி செய்யலாம் (இந்த ஒவ்வொன்றையும் இப்படி  செய்ய அன்றைய தினம் நேரம் கிடைப்பதும் அரிதுதான்) என இப்படி இத்தனை சமையல் தினுசுகளை பதிவிட்டேன். 

இன்னமும் என் விருப்ப இனிப்பான மைசூர் பாகையும் படங்களுடன் செய்முறையாக இதனுடன் இணைக்க மறந்து விட்டேன். அதையும் இணைக்கலாமென்றால்..... (ஆகா.. இதென்ன எல்லோரும் எங்கே ஓடுகிறீர்கள்...! ஹா.ஹா.ஹா சும்மா ஒரு  பேச்சுக்குத்தான் சொன்னேன்.  இல்லை.. .இல்லை.... இவ்வளவே அதிகம். மேலும் இரு இனிப்புக்களே, அன்றைய விஷேட தின இனிப்பான சர்க்கரைப் பொங்கலுடன் போதுமென்று நினைக்கிறீர்களா..! சரி. சரி.. 👍👍.) 

பி. கு... அன்றைய தினம்  உத்தராயண புண்ணியகாலம் என்பதினால், வடை, போண்டா போன்றவற்றிக்கு  வெங்காயம் தவிர்ப்பவர்கள் அதை தவிர்த்து செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் சில  எண்ணெய்  பலகாரங்கள் எப்போதோ எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டிக்காக தயாரித்தது. அந்தப் படங்கள், விவரணைகளுடன்  இந்தப் பொங்கல் சிறப்பு(சிறப்பிதழு)டன் "நானும் வருவேன்" என பிடிவாதமாக வந்து சேர்ந்து கொண்டது. சரி.. போனால் போகிறதென தவிர்க்க முடியாமல், நானும் அவைகளையும் சேர்த்து பகிர்ந்து கொண்டேன்.

 இரண்டாவதாக நாம் வாழும் இந்த மண்ணுக்கு நன்றி சொல்லும் விதமாய் மண்ணுக்கு மேல் விளையும், பயிர்கள்,  செடி, கொடிகள் நமக்குத் தரும் காய்கறிகள், பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் கரும்பு, பூக்கள்  பழம், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள் இலைகொத்துகள், மாவிலை, வேப்பிலை, வாழையிலை, போன்றவற்றிக்கு முக்கியத்துவம் தருவது போல், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகளான கிழங்கு வகைகளையும் பிரியத்துடன்  இன்றைய தினம் (பொங்கலன்றும், அதன் மறுநாளும், )  உணவில் சேர்ப்பதை அவசியமாகவும். வழக்கமாகவும் கருதுவோம்.  எனவேதான் இதன் பேச்சுக்களுக்கு மதிப்பளித்தேன்.   ("எங்களை வைத்துதான் இந்தப் பதிவே....அதை மறந்து விடாதே... ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதே.. ...! போதும்.. போதும்..!! உன் பிர(பரி)தாபம் .. " என்று  அவைகள் கொஞ்சம் மெதுவாக இல்லாமல், சத்தமாகவே  கோபத்துடன் முணுமுணுப்பது என் காதுகளில் மட்டுந்தானா ? இல்லை, உங்களுக்குமா ? ஆனால், உங்களுக்கு அது ஏற்கனவே  கேட்டிருக்கும் எனவும் ஐயமுற நினைக்(நம்பு)கிறேன்.😀😁 😁. )  

 எப்படியிருந்தாலும் இந்தப் பதிவு,  சிறப்பாக 👌உள்ளதாவென உங்களிடமிருந்து அன்புடனான  👏👏 தட்டல் கருத்துக்களை எப்போதும் போல் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி.... கமலா ஹரிஹரன். 

அனைவருக்கும் மீண்டும் நன்றியுடன் கூடிய என் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🙏. 🙏. 


Saturday, January 13, 2018

தை மகள் வருகை

வணக்கம் வலையுலக நட்புறவுகளே!

அனைவருக்கும்  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.




தைமகளின் வருகை.....


தங்க மகள் போன்ற தை மகளாம்,
தளிர் நடை பயின்று வந்தாளாம்.
பூமித்தாயின் இன்முகம் காட்டிய
பாசமிகு  வரவேற்றலில், குளிர்வூட்டும்
புன்சிரிப்பில், அகம் மலர கண்டாளாம்.
பொங்கும் மங்கலம் இனியென்றும்
எங்கும் எதிலும் தங்குமென பூரித்து
மனமகிழ்வு  கொண்டாளாம்.

பசுமை செறிந்த செடி கொடிகளையும்,
பழுத்து நிறைந்த பழவினங்களையும்,
பூத்துக் குலுங்கும் மலர் வகைகளையும்,
பரவசமாக  பார்த்ததுமே, இத்தனையும்,
பூமித்தாயாம் எனதன்னை எனக்காக  
தந்த சீதனமென  பெருமையுடன் நின்றாளாம்.

தாயின் ஏனைய  செல்வங்களை,
தனித்தே சென்று சந்தித்துப் பேசி
நலம் நவின்று விட்டு வருவோமென,
துள்ளும் நடையில்  சுற்றி வருங்கால்,
பழையன  முற்றிலும் களைந்தகற்றி,
புதியன மட்டிலும்  புதிதாய் படைத்து, தன்
வரவுக்கு கட்டியமாய்  பல வண்ணங்களையும்
வார்த்தெடுத்து வைத்திருப்பதும், கண்டு

மங்களம் நிறைந்த மணமான மஞ்சளையும்,
மதிமுகம்  கொண்ட  பண்பான பெண்டிரையும்,
கொஞ்சிடும் அழகில்  மழழைகள் அனைவரையும்,
விஞ்சிடும் பொருளனைத்தும் ஒருங்கே புதைந்த
வீரத்தமிழையும், அத்தமிழர்தம் மரபும் , கண்டு

புத்தம் புது துகில்களை மாந்தர்களும்
பூரண மன நிறைவோடு தாம் உடுத்தி,
புதுப்பானை நிறைத்த புத்தரிசி பொங்கலையும்,
தித்திக்கும் நல் கரும்பை தோகையுடனே வைத்து,
திகட்டாத நல்லெண்( ண )ணெய் தீபச் சுடர்களோடு,
களிப்புடனே பண்டிகையை கொண்டாடி பின்னர்,
களமிறங்கும் வீர செயலனைத்தும், கண்டு

பொங்கிய மகிழ்வில் மனமது நிறைய,
பொங்கும் மங்கலம்  இனியென்றும்,
எங்கும்  எதிலும் தங்கி நிற்கட்டுமென
வாயார வாழ்த்திச் சென்றனளாம்.



பொங்கும் மங்கலம் எங்கும் தழைத்திட வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.











Thursday, January 14, 2016

இயற்கை கடவுள்


தட்சிணாயனம் ஆறு மாத காலம் முடிந்து உத்தராயணம் துவங்கும் நாளே தைத்திங்களின் முதல் நாள். தினமும் சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைந்து முறையே ஏற்படுத்தும் பகல் இரவுகளில் மனிதன் முதற்கொண்டு சகல ஜீவ ராசிகளும் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,, ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும், தை முதல் ஆடி வரை உத்தராயணம் பகல் பொழுதாகவும், நம் புராணங்கள் பகருகின்றன.
பொதுவாக இறை வழிபாட்டில் நம் கவலைகளையும், மனதின் எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக இறைவனிடம் ஒப்படைக்கும் சமயத்தில், நம் மனதில் ஓர் இனம் புரியாத நிம்மதி உண்டாகும். தேவர்களில் ஒருவரான இந்த இயற்கைக் கடவுளாம் சூரியனை தினமும் வழிபட்டு வருவது சிறப்பாயினும், தை மாதத்தின் முதல் நாள் அதற்கு  மிகவும் உகந்தாக கருதப்படுகின்றது. அந்த தை மாதத்தில், சூரியன் தென் திசையிலிருந்து வட திசை வாயிலாக தன் பயணத்தை துவக்குகிறார். ஆண்டின் முதல் ஆறு மாத காலம் தானியங்களின் வளம் பெருக, பூமியின் செழிப்பிற்காக மழையிலும், பனியிலுமாக தன் ஒளி குறைத்துக்கொண்டு பயணிக்கும் சூரியன் பிரகாசமான ஒளியுடன் தை மாதம் முதல் பவனி வருவதால், அன்றைய தினம் அவருக்கு நம் நன்றியை செலுத்தும் விதமாக சிறப்பாக வழிபட்டு வருவது பொங்கல் பண்டிகையாக உருவானது.
நம் வாழ்வின் இருளை அகற்றி, ஆடி துவங்கி மார்கழி வரையிலான காற்றையும், மழையையும், குளிரையும் களைந்தெறிந்து விட்டு புதுப்பொலிவுடன் பிரகாசமாக துவங்கும் இந்நாளில், நாம் ஒருவருக்கொருவர் மனதாற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு மனித நேயங்கள் எந்நாளும் தழைத்தோங்க, அச்சூரியக்கடவுளின் பாரபட்சமற்ற தன்னலமற்ற பகல் இரவு என்று தோன்றும் கடமையின் செயலைப் போல நாமும் அன்புடன் செயலாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நம்முன்னோர்கள் துவக்கி வைத்த பண்டிகையாகக் ௬ட இருக்கலாம்.
நாராயணனின் அம்சமாக விளங்கும் சூரிய நாராயணனை வணங்குவது நம் தேக ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கை வளத்திற்கும் நல்லது.  சூரியனை, ஆதவன், அருணன். பாஸ்கரன் என்றும், உதித்தலின் காரணப் பெயராக, பகலவன், செங்கதிரோன் என்றும் இன்னும் ஏராளமான பல பெயர்களிலும் விளிப்பர். அவரின் போற்றுதலுக்குரிய ஆதித்திய ஹிருதயம்படித்து தினமும் அவரை வழிபட்டு வந்தால் நம் கண் பார்வை நம் வாழ்நாள் உள்ளளவும் சிறப்பாக அமையும்.
 இதிகாசங்களில் ராமாயணத்தில் ஸ்ரீ ராம பிரான் பதினான்காண்டு வன வாசத்தில் சூரியனை வழிபட்டு ஆதித்தய ஹிருதயம் ஜபித்து தன் பகையை வென்றார் எனவும், மஹாபாரதத்தில், பிதாமகரான பீஷ்மர் பாரத போரில் அடிபட்ட நிலையிலும், அம்பு படுக்கையில் காத்திருந்து, உத்தராயணம் துவங்கும் தை மாத்தில், சூரியனின் ரதம் வடதிசை திரும்பும் அந்நாளில், சப்தமி திதியில் தம் உயிரை உடலை விட்டுப் பிரியச் செய்தார், எனவும் ௬றுகிறது. மேலும் மனித குலத்திலும் உத்தராயணத்தில் மரணம் ஏற்பட்டால், இறைவனை அடைந்து பிறப்பில்லா முக்தியை அடையலாம் என்பதும் ஒரு நம்பிக்கையாக பேசப்படுகின்றது.
இவ்விதமான சிறப்புக்களை பெற்ற இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டுடன் இணைந்து ஆரம்பிக்கும் இந்த தைத்திருநாளை, தமிழர் திருநாளை, சங்கடங்கள் தகர்த்தெறியும் மஹா சங்கராந்தியை  சூரிய நாராயணனின் அருள் பார்வையுடன் அனைத்து வளங்களும் முழுமையாக அமையப் பெற்று, அனைவரும் களிப்புடன் கொண்டாட அவன்அருளையை வேண்டித்தொழுகிறேன்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

 படம்: நன்றி கூகுள்.