Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, August 15, 2025

நாங்களே எங்களைப் பற்றி...!

 முருகா.. முத்துக்குமரா.. வேலவா... 

இந்த வருடம் ஆடி மாதத்தில் மிகவும் விஷேடமாக இரண்டு கிருத்திகை நட்சத்திரம் வந்திருக்கிறது இரண்டிலுமே முருகப்பெருமானின் கோவில்களில் பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை, காவடிகள் எடுப்பதென பூஜைகள் செய்து, விரதமிருந்து  கொண்டாடி வருகின்றனர்.ஒரு சில பிரபல  கோவில்களில் மாதத்தின் முதலில் வந்த கிருத்திகையன்றும், சில பிரபல கோவில்களில் நாளையும் என பக்தர்கள் பக்தியுடன் முருகனை போற்றித் துதித்து  கொண்டாடுகின்றனர். 

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரமே நம் முருகனுக்கு உகந்த நாள் என்றால், ஆடி மாதமும், தை மாதமும் வரும் கிருத்திகை மிகச்சிறந்தது என அனைவரும் அறிந்ததே..! தமிழ் வருட முதலில் வரும் ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை தட்சிணாயண புண்யகாலத்தில் வருகிறதென்றால் மற்றொன்று தைக்கிருத்திகை உத்திராயண புண்யகாலத்தில் தை மாதத்தில் வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. 

சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முருகப் பெருமானை வளர்த்தெடுத்ததால் சிவ பெருமான் இவர்கள் ஆறு பேரையும் சிறப்பிக்கும் விதமாக அவர்களை கார்த்திகை நட்சத்திரமாகவும், அன்றைய நாள் முருகனுக்குரிய விரதமாக போற்றப்படவும் வரமளித்தார். அதனால் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை வேண்டிய விரதம் இருந்தால் கார்த்திகை பெண்களின் அருளாளும், முருகப் பெருமானின் அருளாளும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஆறுமுகமும், அழகிய விழிகளும், நீண்ட புருவமும், நீறிடும் நெற்றியும், பன்னிரு கண்களும், பரந்த தோள்களும், பவளச் செவ்வாயும் பார்த்தால், பார்த்த உங்களின் பார்வையை அகற்றத் தோன்றாமல், இருக்கச் செய்யும் முருகப் பெருமானாகிய நான். ..! 
முருகன் என்றால் அழகன் என்ற மறு சொல்லும் எனக்குண்டு. அந்த அழகில் மயங்கி என்னை நாடி வரும் உங்களை நிலைத் தடுமாறி விடாமல் அணைத்துக் கொள்வதே என் தந்தை, தாய், நான் தோன்றிய நாள் தொட்டு எனக்கிட்ட கட்டளை. அதன்படி நான் நித்தமும் செயலாற்றி வருகிறேன். 


எங்கள் இறைவனின் கையிலிருக்கும் வீரம் மிகும் வேலும் மயிலாகிய நாங்களும் உங்களுக்கு என்றுமே துணையென  இருப்போம். வாருங்கள்..! அந்த கந்த வேளின், அவர் கையில் நிரந்திர வாசம் செய்யும் வேலோடு தரிசனம் பெறலாம். அதற்காகத்தான்,  இந்த வரவேற்புக்காகத்தான் கோவிலின் வாசலிலேயே நாங்கள் தினமும்  காத்திருக்கிறோம். 


இதோ..! கோவிலுக்கு முன்பாக முகஸ்துதி கூறி, வரவேற்ற என் தம்பியின் வாகனமான  மயில்களை கடந்து பல படிகள் ஏறி  வந்ததும் நான்தான் பஞ்சமுக கணபதி என்ற பெயருடன் இங்கே குடிக் கொண்டுள்ளேன். என் தம்பி கந்தனுக்கு நான் எப்போதுமே ஒரு பக்கபலம். அவனை நாடி, தேடி வரும் பக்தர்கள் என்னைத்தான் முதலில் வழிபட வேண்டுமென்பது அவன் விருப்பம். அவன் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாதபடிக்கு என்னை அவனது  அன்பினால் கட்டி வைத்திருக்கும் ஆசைமிகும் தம்பி அவன். அவனுக்காக இங்கு நான்தான் முதலில் அமர்ந்துள்ளேன். 


என்னை நீங்கள் மதித்தாலும் சரி, மிதித்தாலும் சரி, அதைக்குறித்து சற்றும் கவலைப்படாமல், சந்தோஷமாகவே உங்களை எங்களின் தெய்வமான முருகனிடம் கொண்டு சேர்த்து  அவனருளை நீங்கள் பெற உதவுவேன் அதற்கெனவே அமைக்கப்பட்ட நான் இப்பிறவியில் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ..! "எனக் கூறும் அழகான படிக்கட்டுகள் நாங்கள். 

ஆனால் ஒன்று "படியாக நான் மாற வேண்டும். மெய்யடியார்கள் திருப்பாதம் முத்தாட வேண்டும்." என்ற பாடலின்படி என்றும் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும்,இப்படி படிகளாக மட்டும் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்." 


உங்களுக்கு படியேற உதவிய நாங்கள் மலையில் குடிகொண்டிருக்கும் என்னப்பன் முருகனை சந்தித்து அவரை தரிசித்த மகிழ்வோடும், நிம்மதியுடனும், இறங்கி வரவும், (உங்களை இறக்கி விடவும்) என்றென்றும் உதவியாக இருக்கிறோம். 

எனக்கு காவலாக எப்போதும் என் நலனுக்காக என்னுடனே இருக்கும் என் அண்ணனுக்காக மலை மேலேயும் அவர் அமர்ந்து  கொண்டிருக்கும் சன்னதியின் விமானம் இது..! 


ஐயனும் அம்மையும் என்றுமே என்னருகில்தான். தந்தையின் துணையுடன், தாயின் அரவணைப்புடன் இங்கு எப்போதுமே என் ராஜ்ஜியம். 


கொடிய அசுரர்களை அழிக்க எனக்கு வேல்  வழங்கி, ஆசிர்வதித்த எங்கள் தாயின் ஆயுதமான சூலமும், அதனுடன் இணைந்து, தந்தையின் கையில் இணை பிரியாது அமர்ந்திருக்கும் உடுக்கையையும் கொண்டு, அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் சேர்ந்து செய்து அமைக்கப்பட்டதால், இது இந்த கோவிலையே அழகுறச் செய்து பெருமிதப்படுத்துகிறது. 


இது தந்தை, தாயின் அடையாளம். "வேலுண்டு வினையில்லை" என என்னை நீங்கள் குறிப்பிடுவது போல், "சூலமும், உடுக்கையும்" , அவர்களின் கையிலிருக்கும் வரப்பிரசாதங்கள். அவர்களை பக்திப் பா(பரவ)சத்தோடு வழிபடும் போது, உங்கள் முற்பிறவியின் சூழ்நிலைகளால்,  உங்களுக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும் இந்த "உடுக்கை" அடித்து நொறுக்கி, விலக்கி வைக்கும். உங்கள் தீவினைகளை குறித்தந்த பயங்களை அந்த "சூலமும்" அச்சமின்றி போகுமாறு அகற்றி அப்புறபடுத்தும். அதைக் குறிப்பிட வேண்டியே அவர்கள் இந்த ஆயுதங்களை கையிலேந்தி உங்களை அன்போடு காத்து வருகிறார்கள். 


இது தந்தை, தாயின் இருப்பிடம்/ வசிப்பிடம். முதலில் மலையேறும் போதே கீழே அண்ணனை தரிசித்த கையோடு, பிறகு படியேறி அப்பா, அம்மாவை கண்டு மகிழ்ந்து பிறகு என்னைப் பார்க்க வருவதுதானே முறை. என்ன சொல்கிறீர்கள்.? 


இமயமலையைப்  போன்ற அமைப்போடு பக்தர்கள் உருவாக்கி தந்திருக்கும் இந்த இடத்தை காணும் போது எங்கள் தாய் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். 
 

கொஞ்சம் என் இருப்பிடத்தை சுற்றியுள்ள இயற்கையையும் உங்கள் ரசனைப்படி ரசித்து விட்டும் வரலாம். 


இதோ..! மலை மேலேயும் என்னருகில் அண்ணன் கணேசன் ஆசையுடன் குடி கொண்டுள்ள இடம். அவரை காணாது அப்படியே என்னிடம் வருவதற்கு நானும் விரும்ப மாட்டேன். எனவே அவரை பிரியத்துடன் வணங்கி பின் அவர் ஆசைப்படி அவர் சன்னதியை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு மேலே வாருங்கள். 


"என் அண்ணன் இல்லாமல் நானா? எங்கும் எத்திசையிலும், எத்தனை விதமான வடிவங்களுடன் அவர் என்னைச் சுற்றிலும் தெரியுமா?" என்ற சந்தோஷமும் எப்போதும் எனக்குண்டு. 


எத்தனை விதமான வடிவங்களில் அவர். "பிடித்து வைப்பதெல்லாம் பிள்ளையார்" என்ற சொல்லுக்கு ஏற்றபடி அவர்  பக்தர்களின் கைவண்ணங்களினால் விதவிதமான வடிவெடுத்தபடி என்னருகில் அமர்ந்திருக்கிறார். 


எத்தனை முறை சுற்றி வந்தாலும், எந்த வடிவத்திலும் அவரைக்காண வரும் பக்தர்கள் சலித்துக் கொள்வதில்லை. என்பது நிஜம். என்னைச் சுற்றிலும் அவர்தான் ஆர்வத்தோடு, அங்கிங்கெனாதபடி ஆக்கிரமித்திருக்கிறார். 


சற்று மேலே அண்ணாந்து பார்த்தால், இதோ..! என் ஆறுபடை ஸ்தலங்கள் அழகாக வரையப்பட்ட  உருவங்களோடு ஒன்றிணைந்த  ஓவியங்கள்


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


மலை மேலேறி, கோவிலின் பல இடங்களை சுற்றியப் பின்னர் என் கருவறை தரிசனமும் உங்களுக்கு இல்லாமலா?  வள்ளி, தெய்வானையின் ஆசிகளோடு என் பரிபூரண ஆசிகளும் என்றும் உங்களுக்காக....!


இக்கோவிலை குறித்த தரிசன பகிர்வு முருகன் அருளால், இன்று என் பதிவில் வடிவுகொண்டு வந்தமை(வந்தமர்)ந்ததும் நிச்சயமாக ஒரு தெய்வ சங்கல்பந்தான்.  இப்பதிவின் மூலம் அனைவருக்கும் ஆடிக்கிருத்திகை முருகனின் தரிசனமும் பரிபூரணமாக கிடைத்திருக்குமெனவும் "அவனருளால்"நம்புகிறேன்.🙏. 

அண்ணனோடு என்றும் உறைபவா சரணம்.🙌. 
முருகா சரணம். 🙌
முக்கண் மைந்தா சரணம்.🙌
உமையவள் குமரா சரணம்.🙌
கார்த்திகை பாலா சரணம்.🙌
சரணம். சரணம். சரணமப்பா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Thursday, January 9, 2025

அன்னையின் அருள்.

எண்ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்... என்பது  பழமொழி.  (எண் ஜாண் என்பது எட்டு ஜாண். ஒரு ஜாண் என்பது அவரவர் கை விரல்களை விரித்து கட்டை விரலில் இருந்து சுண்டு விரல்  வரையுலுமான அளவு என்பது எல்லோரும் அறிந்ததே...! இது அவரவர் கை விரல்களுக்கு ஏற்ப, அவரவர் உடம்பு (சிரசிலிருந்து, ஆரம்பித்து குதிங்கால் வரை) எட்டு ஜாண் அளவு என்பதாக முடியும்.) 

அது போலவே எண்ஜாண் உடலில் உள்ள ஒரு ஜாண் வயிறும் முக்கிய பிரதானந்தான். ஒரு நாளேனும் வயிற்றிக்கு போதிய உணவு இல்லையேல் நம் உடல் பலம் தளர்ந்துதான் போகும். ஆனால், அதற்காக வயிறு கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு இரண்டொரு நாட்கள் பட்டினியாக இருக்கவும் இயலாது. 

ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்!

இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய்! ஒரு நாளும்

என் நோவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே.

உன்னோடு வாழ்தல் அரிது!' 

என்ற ஔவை பிராட்டியின் பாடலின்படி வயிற்றுக்கு வேண்டியதை அவ்வப்போது ஈவது நம் கடமையாகும். 

"செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிக்கும் ஈயப்படும்." 

இது அறிவுரையாக திருக்குறளில் கூறப்படுவது. "எப்போதும் கேள்வி ஞானந்தான் அறிவு விருத்தி பெற மிகச்சிறந்தது. அப்படியான கேள்வி ஞானங்களை கேட்க இயலாத துரதிர்ஷ்டவசமான அந்த சூழ்நிலையில், சிறிதளவு உணவை உன் உடல் தளர்ச்சியாக போகாமல் இருப்பதற்காக, உன் வயிற்றிக்கும் கொடு..!"என்பதாக கூறப்படுவது. 

அதுபோல் சிரசில் (தலை) இறைவன் படைத்திருக்கும் மூளை ஒழுங்காக வேலை செய்தால்தான் அந்தந்த சமயத்திற்கேற்ப சூட்சுமமான அறிவும், அதன் பயன்களும் ஒருவரை முழுமையாக வந்தடையும். அதே சமயம் நம் மனதில் அநாவசியமாக தோன்றும் கர்வம் (தன்னைப் போல அறிவில் சிறந்ததாக யாருமில்லை  என ஒப்பிடும் ஆணவம்) பலம் பெற்றால் மூளையின் செயல்பாடுகளும் சற்றே அகங்காரம் கொண்டு மாறுதல் கொள்ளும். அதனால்தான் நம் அறிவுக்கும்,(மூளைக்கும்) நம் மனதிற்கும் (எண்ணங்களுக்கும்) சம்பந்தமுண்டு என்பார்கள்.

"ஆகா.... வருட ஆரம்பத்தில் ரம்பமாக போர் அடிக்கிறீர்களே..! ஏன் இப்படி..?" என்பதற்குள் விஷயத்திற்கு வருகிறேன். 

இந்த இரண்டும் நம் வாழ்நாள் உள்ள வரை நம்முடன் இணைந்திருப்பவை. முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரண்டிற்காக உலகத்தையே காத்து ரட்சிக்கும் பார்வதி பரமேஸ்வரர் இடையே ஒரு தர்க்கமே நடந்துள்ளதாம் . . "அனைவரும் உண்ணும் உணவே  ஒரு மாயை" என்பதாக சிவபெருமானும், இல்லை...இல்லை.. உணவு இல்லையேல் உலகத்தில் ஒரு ஜீவனும் எழுந்து நடமாட இயலாது. உலகம் மொத்தமும் ஸ்தம்பித்து நின்று விடுமென" பதிலுக்கு பார்வதி தேவியும் வாதிட்டனர்.

பொதுவாக இருவருக்கிடையே (அதுவும் தம்பதியினர்) ஒரு வாதம் என்று வந்து விட்டால் அது பிரச்சனையை முடிவாக  கொண்டதாகத்தான் அமையும்  இந்த உலகத்திற்கே மாதா, பிதாவாகிய  இருவரிடையே எழுந்த வாக்குவாதமும் இவ்விதமே ..! 

வாதத்தின் இறுதியில் கோபம் கொண்ட அம்பிகை சிவனை விட்டு விலகிப் போக, சிவனாரும் "உணவு ஒரு மாயை" என்பதை அனைவரும் உணர்வதற்காக  அண்டசராசரங்களையும் தன்  கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி வைத்தார். பார்வதி தேவி சொன்ன மாதிரி உலகம் ஸ்தம்பித்தது. தட்ப வெப்ப நிலைகள் மாறுதல்களை சந்தித்தன. சூரிய சந்திரன், அஸ்டதிக்பாலகர்கள் உட்பட அனைவரும் தம் கடமையை செய்ய மறந்தனர். தாவரங்கள் செழித்து  வளரவில்லை. பயிர் பச்சைகள், செடி, கொடிகள் தம் நிலை மறந்து கிடந்தன. மக்கள் பசியால் தவித்தனர். இந்த பயங்கர நிலை கண்டு உலகத்தின் மீது இரக்கம் கொண்ட அன்னை பார்வதி தேவி அன்னபூர்ணேஸ்வரியாக உரு கொண்டு உலகத்தின் பஞ்சத்தை போக்கி, மக்களுக்கு உணவளித்து/ உணர்வளித்து உலகத்தை பழைய நிலைக்கு கொண்டு வந்தாள். அதற்காக இந்த பூமியிலேயே தங்கி விட்டாள். இதுவும் அன்னையின் ஒரு விளையாட்டுதான் என தேர்வர்கள் துதிபாட அன்னை பரமேஸ்வரி அகமகிழ்ந்து மக்களின் பசிப்பிணி நீக்கி அருள் பாலித்தாள் சிவனும், அன்னையின் ஆசிகள் பூரணமாக இந்த உலகத்திற்கு கிடைக்க ஒரு வழியை உண்டாக்கிய திருப்தியில் திளைத்தார். இவ்விதம் இவர்களின் விவாத தர்க்கம் நல்ல விதத்தில், பயனுள்ளதாக முடிவடைந்தது. 

இந்த அன்னை அவ்வாறு குடி கொண்ட இடம் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் கலசா எனும் வட்டத்தில் உள்ள ஹொரநாடு என்ற ஊரில் உள்ளது.



அன்னபூர்ணேஸ்வரி.🙏. 

###############################

இந்தக் கோவில் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. கோவிலில் மூலவராக இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி சிலை அகத்தியரால் எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையானது சிதிலமடைந்து காணப்பட்டதால், அந்த சிலை புதுப்பிக்கப்பட்ட பின்பு, அம்மனுக்கு ‘ஆதி சக்த்ய மஹா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி’ என்று புதிய பெயரை சூட்டி அழைத்து வந்தனர். இந்த சிலை முழுவதும் தங்கத்தால் ஆனது. அன்னபூர்ணேஸ்வரி தாய் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

######################################

இந்த செய்தி,மற்றும் இந்த ஒரு படம் மட்டும் இணையம். நன்றி கூகுள். 

ஆக கூடி எண்ஜாண் உடம்பிற்கு வயிற்றின் பிரதானத்தைப் பார்த்தோம். இனி சிரசு...! ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதனால்  சற்று அகங்காரம் மேற்பட சிவனை மதியாது "நீங்கள் நான்கு திசைகளிலுமாக என்னை சுற்றி வந்து வழிபட வேண்டும். அப்படியும் பூரணமாக என்னை சுற்றி வர இயலாது. ஏனெனில் என்னுடைய ஐந்தாவது தலையை எப்படி வழிபடுவீர்கள்" என ஒரு சமயம் கர்வமாக கேட்டு ஏளனமாக நடந்து கொள்ளவே, சிவன் மிகவும் கோபம் கொண்டு பிரம்மாவின் ஒரு தலையை தன் வலது கைகளாலேயே கிள்ளி கொய்தார். அதன் வலி பொறுக்காத பிரம்மா," இந்த தலை தங்கள் கைகளிலேயே கபால ஓடாக நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும்...! எவர் இதன் நிறைய பிக்ஷை வழங்கியும், அது நிரம்பாமல் வழிந்து ஓடிக் கொண்டேயிருக்கும். ஆனால், என்றைக்கு இந்த ஓடு நிரம்ப தானியத்தை வழியாமல் நிரப்ப முடிகிறதோ அன்று வரை இந்த கபால ஓடு தங்கள் கைகளை விட்டு விலகாது" என சாபமிட்டார். சிவனும் அந்த சாபத்தின்படி கைகளில் அந்த கபால ஓட்டை (சிரசை) சுமந்தபடி பிச்சாடனராக மூவுலகும் வலம் வந்தார். தேவர்கள் அனைவரும் ஓடு நிரம்ப பிக்ஷை தந்தும் அந்த சிரசாகிய ஓட்டில் தானியம் (உணவு) முழுவதுமாக நிரம்பியும் நிற்காமல் வழிந்து ஓடியதால், அவர் கைகளை விட்டு அந்த ஓடு அகலவில்லை. 

இறுதியில் இந்த கோவிலில் உள்ள அன்னபூரணேஸ்வரியின் அருட்பார்வையால்தான், தானியங்களால் கபால ஓடு நிரம்பி வழியாமல் நின்று சாப விமோசனம் அடைந்ததால், அந்த கபால ஓடு அவர் கைகளை விட்டு தானாக அகன்றது. இவ்விதம் அந்த சிரசின் (ஓட்டின்) அகங்காரத்தையும் இந்த அன்னபூரணேஸ்வரி (உணவு மாதா)  களைந்தாள் என்பது வரலாறு. ஆக நம்  எண்ஜான் உடலுக்கு சிரசும், வயிறும் எவ்வளவு முக்கியமென இந்த இரண்டு புராண கதைகளும் நமக்கு ஒரு பாடமாக உணர்த்துகிறது. 

இந்த பிரசித்தி பெற்ற கோவிலுக்கு இப்போது நாங்கள் குடும்பத்துடன் தீடிரென ஒருநாளில் முடிவாகி புறப்பட்டு சென்று வந்தோம். எங்களை தீடிரென வரச் சொல்லி அழைத்ததும் கண்டிப்பாக அந்த அன்னை அன்னபூர்ணேஸ்வரிதான். அதனாலேயே அவள் அருட்பார்வை தரிசனமும் சிறப்பாக கிடைத்தது. 

டிசம்பர் 25ம் தேதியன்று இரவில் பயணம். நடு இரவில் சுற்றி வளைத்து மலை ஏறும் போது உலகமே தட்டாமாலையென ஆடியது. நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டு சென்ற வண்டி  ஓட்டுனரின் கைவண்ணத்தில் சட்சட்டென பாதையின் சரிவான விளிம்புகள் கண் முன்னை வந்து பயமுறுத்த வளைந்து, வளைந்து சென்று ஒரு மட்டும் காலை 6 மணியளவில் கோவில் இருப்பிடத்தை அடைந்தோம். அங்கு நான்கு மணி நேரத்திற்கென்று முன் கூட்டியே (முதல் நாளன்று) ஏற்பாடு செய்த ஒரு தங்குமிடம் சென்று குளித்து விட்டு குறிப்பிட்ட நேரத்தில் கோவிலை அடைந்தோம். 

அன்னையின் தரிசனத்தை மறக்கவோ, வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 🙏. கேட்பவர்க்கு மட்டுமின்றி, கேளாதோர்க்கும் கேட்காமலேயே தன்னருளை தரும் அன்னை அன்னபூர்ணேஸ்வரி தன் அருளை பூரணமாக தந்தாள். அன்னையே..! அனைவருக்கும் உன்னருளை வாரி வழங்கிடு என பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டோம்.🙏. 

கீழே காணும் இவை நான்கும் என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள். 





                            பனி சூழ்ந்த அடர்வனம்.  

ஆனாலும் நாங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை (இங்கு வந்த புதிதில்) சென்ற போது அங்கிருந்த பனிபொழிவு இப்போது இல்லை.அப்போது இதே காலை வேளையில் பனி பார்வையை மறைத்தபடி கண்களின்  முன்னால் பெய்தது. குளிர் பயங்கரமாக தாங்க முடியாமல் தாக்கியது. இப்போது  பனியினால் வெறும் புகைமூட்டந்தான். குளிரும் அவ்வளவாக இல்லை. காரணம் அங்கும் காடுகளை அழித்து கான்கீரிட் கட்டிடங்கள் பல உருவாகி விட்டன. 

மலர்ந்த இப்புத்தாண்டில் முதலில் இறை சம்பந்தப்பட்ட பதிவை வழங்க வைத்த இறைவனுக்கு என் பணிவான நன்றி. நாங்கள் அந்த இரண்டு மூன்று  தினங்களில் மேற்கொண்டு சென்ற இடங்களை இறைவன் அருள் இருந்தால் ஒவ்வொன்றாக பகிர்கிறேன். 🙏. 
இதை படிக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள்.🙏. 

Sunday, September 15, 2024

எதிர்பாராத தருணங்கள்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 

கடந்த நான்கைந்து நாட்களாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்கவும். 

கடந்த புதனன்று எதிர்பாராதபடி எங்களுக்கு ஒரு கோவில் பயணமொன்று அமைந்து விட்டது. திங்கள் மாலை தீடிரென திட்டமிட்டபடி அப்பயணம் புதன் அன்று காலை கிடைத்தது. அது இறைவனின் அற்புத செயல்களில் ஒன்றாகும். அப்பயணம் தந்த அலைச்சல்களில, எனக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றால், எங்கள் பேத்திக்கு( மகளின் மகள்) வெள்ளி காலையில் இங்கு வந்த பின் நல்ல ஜுரம். பாவம்..! அந்த அலைச்சலில் அவளுக்கும் உடல்நலக் குறைவு வந்து விட்டது. எங்களிடம் கைவசம் இருந்த மருந்துகளை தந்தும், குணம் ஆகாததால், நேற்று மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்த பின் இன்றுதான் எழுந்து அமர்ந்திருக்கிறாள். அந்தக் கவலைகளிலும் என்னால் எப்போதும் வருவது போல் முறையாக வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும். 

ஒரு சிறு குன்றிருக்கும் இடமெல்லாம் ஆட்சி செய்வதும், அருள் புரிவதும் குமரன் என்பது பழங்கூற்று. ஆயினும், அனேக மலைகளும் "அவன்" வாசஸ்தலங்கள்தாம்.அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில மலைகளும், அவன் தந்தைக்கும், மாமனுக்கும் பெயர் பெற்றவையாகும் என்பதும் யாவரும் அறிந்ததே..!  மலைகளின் அழகும், அதன் தரிசனங்களும் நம் மனதிற்கு மகிழ்வூட்டுபவை. ரசிக்க வைப்பவை. அப்படி ரசிக்க வைத்த ஓரிடத்திற்கு செல்லும் வாய்ப்பு தீடிரென சற்றும் எதிர்பாராமல் இறைவன் அருளால் கிடைத்தது. அதற்கு இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள். 🙏. 



இந்த ஒரு மலை அல்ல.... 

இந்த இருமலைகளும் மட்டுமல்ல... 


ஏழு மலைகளும் ஒன்று சேர்ந்து கூடுமிடமாகிய... 


அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது. 


அந்த ஏழுமலைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனருளால்,அவன் பாதம் பணிந்து வணங்கி அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சென்று வந்தோம். 

கடந்த புதன், வியாழனுமாகிய இரு தினங்களும் மனதை எவ்வித கவலைகளுமின்றி, நிச்சலமாக இனிமையாக இருக்க வைத்ததும் அவனருளே.. 

இது அவனே அழைத்த எதிர்பாராத பயணம் என்பதினாலும், அவனருள் இல்லையென்றால் எதுவும் நடக்க சாத்தியமில்லை என்ற சத்தியமான  உண்மையாலும், அன்று அவ்வளவு கூட்டத்திலும் பகல் முழுக்க காத்திருந்ததற்கும், பின் எங்களுக்கென்று  தந்த அந்த நேரமாகிய பொழுதினில் இரவு மூன்று மணி நேரம் இடிபட்டு, காத்திருந்ததற்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான தரிசனத்தை தந்தான். 

எனக்கு அவ்விடம் விட்டு அகன்று வர கிஞ்சித்தும் மனமில்லை. அவனுடனே கலந்து விடும் பேராசை பேய்கள்  மனத்துள் வந்து தாண்வமாடின. ஆயினும், "அவன்" என் பிறப்போடு இடட கடமைகளை  முடிக்காது உயிர் பிரிய இந்த உடலுக்கு விருப்ப (உரிமையுமில்லை) மில்லை என்பதினால், மறுநாள் வியாழன் மதியம் தன் மைத்துனர் காளஹஸ்தி நாதரையும் தரிசிக்க வைத்து இரவு பத்திரமாக வீடு திரும்பச் செய்தான். நாராயணா.... இப்பிறப்பில் மட்டுமல்லாது வரும் எப்பிறப்பிலும் உன்னை என்றும் மறவாத வரம் தா..! உன் கருணையே கருணையப்பா. கோவிந்தா..! கோவிந்தா..! 🙏. 🙏. 



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த அன்னமயயா படத்தில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் அன்னமைய்யாவாகவே வாழ்ந்திருப்பார். அவரின் மனமுருகிய நடிப்பில் கண்களில் கண்ணீரையும், இறைவனை நெருங்கி அணுகும் நல்ல கருத்தையும் மனத்துள் தோற்றுவிக்கும் திரைப்படம் இது. எனக்கு மிக மிக (இப்படி எத்தனை மிகப் போட்டாலும் தகும்.) பிடித்தமான திரைப்படம். 

இந்த இறுதி காட்சியில் வரும்  அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க இன்னமும் எத்தனை ஜென்மங்கள் பிறந்திளைக்க வேண்டுமோ ? "விண்டவர் கண்டிலர்.. கண்டவர் விண்டிலர்."என்பது போல இறைவனை கண்ணால் (அகம், புறம்) காண்பதற்கு எத்தனை பிறவிகள்தோறும் எத்தனைமாயிரங்கள் புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ? இதே நினைப்புடன் நானும் இப்பூவுலகில் காத்திருக்கிறேன். அவனும் அதற்கான நம் நேரம் வரும் போது கண்டிப்பாக அதற்கு ஒரு வழி காட்டுவான். 🙏.

அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய நன்நாளில் இப்பதிவை எழுதி பகிரச்செய்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நமஸ்காரங்களும், நன்றியும். 🙏.

இப்பதிவை படிக்கும், படித்து கருததிடும்  என் அன்பான நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

Friday, September 6, 2024

விநாயகர் அருள்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். 


ஸ்ரீவிநாயகப் பெருமானே சரணமப்பா. சரணம்.
 🙏. 

1) கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.🙏. 

இதன் பொருள். 

யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், நமக்கு வரும் இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின் திருவடிகளை வணங்குவோம்.🙏. 

2) மூஷிக-வாகன மோதக-ஹஸ்த

காமர-கர்ண விலம்பித-ஸூத்ரா |

வாமன-ரூப மஹேஸ்வர-புத்ர

விக்ன-விநாயக பாத நமஸ்தே ||🙏. 

இதன் பொருள்:

எலி வாகனத்துடன் கையில் வைத்திருக்கும் மோதகப் பிரியராகவும்,  பெரிய விசிறி போன்ற காதுகளுடனும், மற்றும் நீண்ட புனித நூலை அணிந்திருப்பவரும், வாமனரைப்போல உயரம் குறைவாக இருப்பவரும். மற்றும் ஸ்ரீ மகேஸ்வரரின் மகனுமாகியவரும், தனது பக்தர்களின் தடைகளை உணர்ந்து அதை  நீக்கும் வல்லமையுடையவருமான ஸ்ரீ விக்ன விநாயகரின் பாதங்களை வணங்கிக் கொள்வோம். ஸ்ரீ விக்ன விநாயகருக்கு அனேக கோடி நமஸ்காரம். 🙏. 

3) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா! 🙏. 

இதன் பொருள்.

நாம் அனைவரும் தெய்வமாக வழிபடும் (கோமாதா) பசுவின் பாலும், சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற தேனீக்களால் தேர்ந்தெடுப்பட்டு சேர்த்த நல்ல தேனும், சுவையான கரும்புகளின் கனிச்சாற்றைக் கொண்டு நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை காய்ச்சி எடுத்த பாகும், அதற்கு தோதாக அதனுடன் சேர்க்கப்படும் அரிசி, பருப்பு வகைகளும் கலந்து உனக்குப் பிடித்தமான பல இனிப்புகளை செய்து நான் உனக்குத் தருவேன்.

அழகெல்லாம் ஒரு சேர நிறைந்தவரும், மதிநுட்பம் மிகுந்த யானையின் முகத்தைக் கொண்ட எம்பெருமானே, நீ அதற்குப் பதிலாக மூவகையான சங்கத்தமிழ் எனும் அமிழ்தத்தை எனக்குப் பரிசாக தருவாயா? . 


பிரபல பாடகர் சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்களை மெய்யுருகி கேட்டால், நம் கண் முன் இறைவனே வந்து நிற்பது போல் உணர்வோம் . அந்த அளவிற்கு  அமைந்தது அவரின் குரல் வளம். 🙏 அது அவருக்கு அந்த ஆண்டவன் தந்த வரப்பிரசாதம். 🙏 இந்தப் பாடலும் இன்றைய நல்ல நாளில், நமக்கு பக்தி பரவசமூட்டும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்து விநாயகபெருமான் நம் கண் முன் வருவதை உணர்ந்து  தரிசிப்போம் 🙏

விநாயகர் குறித்து என் அறிவுக்கு எட்டிய விதத்தில் தந்திருக்கும் இப்பதிவை ரசிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

நன்றி கூகுளுக்கும். 

Saturday, April 22, 2023

கடலைக்காய் திருவிழா. .

ஓம் கணபதியே நமஃ. 

ஓம் நமசிவாய நம ஓம். 

வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே 

இது பசவன்குடி புல்டெம்பிள் நந்திகேஸ்வரர், தொட்ட கணபதி ஆலயம் குறித்த பகிர்வு. இந்த வருடம் பிறந்தது முதல் என்னால் வலையுலகிற்கு இயல்பாக வர முடியாத நிலைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடத்திலும் எப்போதும் போல் ஏதாவது பதிவுகள் கொஞ்சமாகவேனும் எழுத வேண்டுமென  எண்ணியிருந்தேன். அது கைகூடவில்லை. ஏனெனில் இறைவனின் விருப்பந்தானே எப்போதும் நம்மை அசைக்கும் கருவி. இருப்பினும்  இன்று என்னை எழுத வைத்த அந்த இறைவனுக்கு என் மனம் நிறைந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். 

என் நட்புகளாகிய நீங்களும்  வலையுலகில் பதிவெனும் எழுத்துகளோடு என் வரவை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

சகோதரி கோமதி அரசு அவர்கள் என்னை ஏதாவது பதிவு எழுதச் சொல்லி இரண்டு மூன்று முறை வலியுறுத்தி கூறி விட்டார்கள். அவர்களின் அன்புக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன்.(நன்றி சகோதரி. உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள்தான் மீண்டும் என் கைகளில் பதிவெனும் ஓலையில் எழுத  எழுத்தாணியை கொண்டு தந்துள்ளது.) 

எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். 

இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும். பயணம் முடிந்து விடும். 

மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும். 

இந்த திரைப்பட பாடல் வரிகள் எனக்கு மிக, மிக பிடிததமானவை. ஏனோ இதையும் இங்கு குறிப்பிடவும் விருப்பம் கொண்டு பதிந்து விட்டேன். 

நல்லதாக இனி எழுதும் பதிவுகளின் மூலமாக இப்போதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் வந்துள்ளேன். ஆனாலும் என்னை தினமும் மறவாத உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு. 🙏. 

இந்த பசவன்குடி கோவிலுக்கு முன்பு இங்கு வந்த புதிதில் அடிக்கடி சென்றுள்ளோம். (அந்த இடத்திற்கு இரண்டு கி. மீ தொலைவிலேயே அப்போது நாங்கள் இருந்ததினால், அடிக்கடி கால் நடையாகவே நடந்து சென்று விட்டு வந்து விடுவோம்.) இப்போது இன்னமும் தொலைவில் எங்கள் ஜாகை அமைந்து விட்டபடியால், ஓலாவில் எப்போதாவது பயணித்து தொட்ட கணபதியையும், நந்திகேஸ்வரையும் தரிசித்து விட்டு வருகிறோம். நடுவில் தொற்று காரணமாக இரண்டு மூன்று வருடம் எங்குமே செல்லவில்லை. அருகிலேயே ஒரு பெரிய பூங்கா இருப்பதால், மகன், மகளின் குழந்தைகளுக்கு ஓடி விளையாட ஒரு இடமும் கிடைத்த மாதிரி இருக்குமென்பதால் இந்த மாதிரி அந்த இடத்திற்கு அன்று விஜயம். 



இது தொட்ட கணபதி ஆலயம். 



அருள் தரும் பெரிய பிள்ளையார். ஒரே பாறையில் உருவாகி பெரிதான உருவத்துடன் அருள் புரியும் இவரை கோவில் வாசலிலிருந்தே அழகாய் சேவிக்கலாம். விநாயகரே எளிமையானவர். அதிலும் இவரை சந்திப்பதும் மிக எளிது. அடிக்கடி வெண்ணெய் காப்புடன் இவரது பிரதியோக தரிசனம் அனைவரும் கிடைக்கும். 



இதுதான் அழகிய பெரிய உயரமான நந்திகேஸ்வரர். பெங்களூரை நிர்மானித்த  நிறுவனர் கெம்பே கவுடாவால் 1537 ம் ஆண்டில், 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமுமாக ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட கம்பீரமான  சிலை. 

விநாயகரை வழிபட்டு விட்டு சற்றே உயரமான பாறை மேல் படிகளின்
மூலமாக ஏறினால் இவரை தரிசிக்கலாம். எல்லா சிவன் கோவிலிலும் நந்தி தேவர் சிவனை வணங்கியபடி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.இங்கு எம்பெருமானையும், தன்னையும் வணங்கப்போகும் மக்களை வரவேற்றபடி அவர் திருக்கோலம் கொண்டுள்ளார். கோவிலுக்குள் நுழைந்ததும் கம்பீரமாக காட்சி தரும் நந்திதேவரை வணங்கிய பின் அவரை சுற்றி வலம் வரும் போது, சர்வேஷ்வரன் லிங்க வடிவில் சிறியதாக அருள் காட்சி தருகிறார். நந்தியின் பின்பக்கமாக அமர்ந்திருந்து தன் வாகனமான நந்தி தேவருக்கு முதலில் தனிச்சிறப்பை தந்து, அவரை மக்கள் முதலில் ஆராதிப்பதைக் கண்டு, அதில் ஆனந்தம் அடைந்து அருள் பாலிக்கிறார்

இங்கு நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடர்ந்து மூன்று, நான்கு நாட்களாக நடக்கும். அப்போது மக்கள் கூட்டம் எப்போதும் சாலைகளில் நடக்கக் கூட இயலாமல் இருக்கும். போக்குவரத்து பேருந்துகளும் இடம் மாற்றி சுற்றிச் செல்லுமென கேள்வி. 

முன்பு, (கிட்டத்தட்ட 300,400 வருடங்களுக்கு முன்பு) பெங்களூரின் அக்கம்பக்கம் உள்ள கிராம விவசாயிகளின் ஆதாரமான கடலைத்தோட்டத்தின்  விளைச்சல்களை தொடர்ந்து ஒரு காளை மாடு சேதமாக்கியதில், விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்ததினால், இந்த நந்தி தேவருக்கு ஒவ்வொரு  வருடமும் நிலக்கடலை அறுவடையானதும், தங்கள் வண்டிகளில் கொண்டு வநது படைத்து விட்டு, மக்களுக்கும் குறைந்த விலைகளில் போணி செய்து வியாபாரம் செய்வதாய் வேண்டிய பின், அந்தக் காளையினால் பயிர்கள் சேதமின்றி வளர்ந்து விவசாயிகள் தங்கள்  கவலைகளிலிருந்து மீண்டு நல்ல நிலையை அடைந்தார்களாம். அதிலிருந்து இந்த முறை பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறதாம்.  இதை இங்கு வந்த பின் கேள்விபட்டுள்ளேன். ஆனால், அந்த சமயத்தில் அங்கு சென்றதில்லை. 

இது இப்போது நந்திகேஷ்வரரை தரிசிக்க பெரிய விநாயகரை வணங்கி விட்டு மேலே ஏறும் போது பக்கவாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தத்ரூபமாக கடலைக்காய் திருவிழாவை காட்டும் அழகிய சிலைகள். முன்பெல்லாம் நாங்கள் சென்றபோது  இல்லை. இப்போது புதிதாக அமைத்திருக்கிறார்கள் போலும். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்த வண்ணம் சென்றோம் . இதைக்குறித்து எனக்கு தெரிந்த தகவல்களோடு, இதையும்  இங்கு பகிர்ந்துள்ளேன். 





















என்ன.. சகோதர, சகோதரிகளே, படங்களை ரசித்தீர்களா? அப்படியே அங்குள்ள பிரபலமான உணவகத்திற்கு  சென்று மசால் தோசைகள்  உண்பதற்காக வழக்கப்படி பெயர் கொடுத்து, உணவகத்திற்கு  வெளியே நிறைய நேரம் காத்திருந்த பின் எங்கள் இருக்கை கிடைத்ததும் உள்ளே சென்று தோசையை சாப்பிட்டு வீடு  வந்தோம். ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் இங்கு வந்ததும் சென்று சாப்பிட்ட அந்த ருசி நிறையவே மிஸ்ஸிங். தினசரி எல்லாம் மாறும் போது இது மட்டும் மாறாதிருக்க இயலுமா?ஆனால் விலை மட்டும் ஏற்றம். பதிவை ரசித்து கருத்திடப் போகும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏.

Wednesday, November 9, 2022

மனதினுள் கடத்தல்.

 
நம்மையும் மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டிருப்பதை உலகம் தோன்றியதிலிருந்து நாம் உணர்ந்து கொண்டுதான் வருகிறோம்.அதை  நமக்கு பிடித்தமான கடவுள்கள் பெயர் சொல்லி அழைப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை தந்து விட்டால். பதிலுக்கு உனக்கு அதை தருகிறேன்.. இதை தருகிறேன்.. என்று வியாபார நோக்கோடு பேச்சு வார்த்தையும் நடத்திக் கொள்கிறோம்.

 ஆனால், உண்மையில் நம்மிடம் எதையும் எதிர் நோக்காத தாயன்பு கொண்டவன் இறைவன். அவன் நம்மிடத்தில் விருப்படுவனவெல்லாம் ஆழமான பக்தி, அசையாத நம்பிக்கை அவ்வளவுதான்.!
மாதா, பிதா, குரு,.தெய்வம்  என்று நாம் வரிசை படுத்துவதில், எல்லாவற்றிலும் அவனே முதன்மையானவனாக ஆகிறான். 

===============================================================================  "தாயினும் சாலப் பரிந்து" என்றவிடத்தில் அவன் தாயினும் மேலாகிறான். 

"அன்னையாகி. தந்தையாகி," என்று சொல்லும் போது அன்னையுடன், தந்தையும் அவனேயாகி நம்மை காக்கும் அனைத்துப் பொறுப்பையும் சுமக்கிறான். 

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்," என்னுமிடத்திலும்  இறைவன் தன்னிருப்பிடத்தை மெய்ப்பிக்கிறான். 
  
"இறுதியில் தெய்வமாக" நின்று  நமக்கு வேண்டியதை நம் பாப புண்ணிய கணக்கோடு நமக்கு பகிர்ந்தளிக்கிறான்
================================================================================ இப்படி நான்கு நிலைகளிலும் நம்முடன் உறவாடுபவனிடம், வியாபார யுக்தியோடு, நாம் செயல்படுவது சரியா? இறைவனை கண் முன் கண்ட பல மஹான்கள் பக்தி மலர் கொண்டு மட்டுமே பூஜித்தார்கள். அந்தந்த பிறவிகளில் அவர்கள் அவ்வாறிருக்க, அதற்கு முந்தைய  பிறவிகளில் எத்தனை நல்ல சத்சங்க பலன்களுடன் தவமியற்றினார்களோ? 

சமய குரவர் நால்வரும், ஆழ்வார்கள் பன்னிருவரும், அறுபத்து மூன்று  நாயன்மார்களும், இன்னமும் அத்தனை மஹான்களும், ஆன்மிகம் கண்ட பல பெரியவர்களும், ஆண்டவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், பக்தி மட்டும் கொடுத்து பதிலுக்கு  எதையும் வேண்டா நிலையில் அடி பணிந்தார்கள். இவர்களை படித்தாவது இனி வரும் பிறவிகளில் கரை சேரும் எண்ணஙகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றால்,  அது ஒரு துளியேனும் சாத்தியபடுவதற்கு  ஒரு பொழுதேனும் சம்மதிக்க மறுக்கிறது.  

காரணம்... நம் மனம். 

 நம் மனதில் பரிபூரணமாக குடி கொண்டிருக்கும்  கடவுள் நம் அன்பு கடத்தலில் "உள்கட"ந்து பயணித்து நம்மை பூரணமாக அரவணைத்துக் கொள்வார். . ஆனால்  அவர் கடக்கும் பாதையை செப்பனிடாமல்  சேறும் சகதியுமாக (ஆசா பாசங்கள்) கற்களும், முட்களுமாக (சுயநலம், குரோதங்கள்) வைத்திருக்கிறோமே என எண்ணுகிறேன். இவைகளை சுத்தம் செய்து விட நேரத்தை எதிர் நோக்கும் போது,  மேலும் மேலும், ஆசாபாசங்களை கொண்டு குழைத்தெடுத்த சேறும், சகதியுமாக ஆகிறது மனம்...!! இதையும் இந்தப் பிறவியில்  இறைவன்தானே இவ்வாறு அருளுகிறார் என நினைக்கும் போது, இந்தப் பிறவியிலும்  நல்வழிபடுத்த "அவன்"ஆயுத்தம் ஆகவில்லை என்ற அப்பட்டமான உண்மையும் புலப்படுகிறது. 

மஹான்களில் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ ராகவேந்திரர்  பற்றை தொலைத்து இறைவனிடம அன்பை மட்டுமே கொடுத்து பதிலுக்கு எதையும் எதிர்நோக்காத  உள்ளத்துடன் அவனுடன் ஐக்கியமானார்.  ராக வேந்திரர் திரைப்படத்தில் வரும் "அழைக்கிறான் மாதவன்" என்ற இந்த பாடல், மனம் கசிந்துருகி கண்ணீரோடு அடிக்கடி கேட்பேன். இந்தப் பாடல் இடம் பெற்ற இப்படத்தில் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்த நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், அவரால் இயன்ற வரை ஸ்ரீ ராகவேந்திரரை நம் கண் முன் கொண்டு வந்து தந்துள்ளார். பாடகர் திரு. யேசுதாஸ் அவர்களின் குரலினிமை, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும், உள்ளத்தை கரைந்துப் போகும்படி செய்கிறது. 



இந்த பாடலில்  வருவது போல் "அவன் அழைக்கின்றான் "என்பதை உணரும் சந்தர்ப்பம்  உண்டாவது எந்த பிறவியிலோ? 
அழைத்தால் வருகிற இயல்புடையவன் ஆண்டவன்.  ஆனால்  வரவேற்று அணைத்துக்கொள்ளும் பக்குவம் வராத போது, அவன் அழைப்பிற்கான நேரத்தையாவது  எதிர் நோக்கி கொண்டிருக்கும் அந்த சமயம் , வாய்ப்பதாவது எப்போதோ

ராகவேந்திரர் இறையோடு ஐக்கியமாகி அருளுகின்ற "மந்திராலயம்" செல்லும் வாய்ப்பு  ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுமின்றி தீடீரென எங்களுக்கு கிடைத்தது எங்களது பெரும் பாக்கியமே! அதை என் வாழ்வில்  என்றுமே மறக்கவே இயலாது. 


படங்கள் நன்றி கூகுள். 

"
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே". 🙏. 

பின்வரும் கதையை படிக்க நேர்ந்தது எனக்கு இந்த நினைவுகளை மீட்டு இந்த பதிவை உருவாக்க வைத்தது. எனது பதிவையும், நான் படித்த இந்தக் கதையையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 


கடவுளுக்கு பலி.
"""""""""""""""""""""''""""""""'
குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தன. அவ்வப்போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான்  ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த குரு, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

"எதற்காக? என்று கேட்டார் குரு."

"பண்டிகை வரப்போகிறதே!  இறைவனுக்கு  பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன்.

"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

இதைக் கேட்ட குரு எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

"என்ன இது?" என்றான் குயவன் கோபமாக.

"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ". குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு?  அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

அவன் படைத்த 'உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய்"... இப்படி நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்....

நான் படித்ததில் பிடித்த இக்கதையில் வருவது போல் இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய ஆசைதான் வேண்டுதலாக மாறி, சமயத்தில் பிறரையும், எப்போதும் நம்மையுமே கஸ்டபடுத்துவதாகவே அமைகிறது.

 குருவருள் அனைவருக்கும்  துணையாக  இருக்க இன்றைய வியாழனில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.