Showing posts with label சிட்டுக்குருவி. Show all posts
Showing posts with label சிட்டுக்குருவி. Show all posts

Saturday, March 21, 2026

தாமதங்களின் பிடியில் மலர்ந்த கதம்பம் .

இன்று (20 மார்ச் மாதம்) சிட்டென பறந்து சிறகடிக்கும் சிட்டுக் குருவிகளுக்கான தினம்  என்பதை யாவரும் அறிவோம். (இன்று என்பது இதை எழுதும் போது...ஆனால் சில, பல வேலைகளினால் நானும் இப்பதிவை நேற்றே முழுதாக முடிக்க இயலாமல்,சட்டென அமர்ந்து, பறந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் சிட்டுக்குருவியாய் தாவி, தாவி இன்றுதான் (21 ஆம் தேதிதான்) முடிக்கிறேன். ( இன்றும் காலையிலிருந்து வெளியில் வேலைகளின் காரணமாக சென்று விட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தோம்.) 

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினங்கள் என கண்டு பிடித்தவர்கள் இன்று (இந்த மார்ச் 20ஆம் தேதி) இந்தப் பறவைக்கான  தினத்தை அறிவித்தது எப்போது என எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பறவைகள் கீச், கீச்சென மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி, அங்குமிங்கும் சிட்டாகப் பறப்பதை சிறு வயதிலிருந்தே பார்த்து ரசித்திருக்கிறேன் 

எங்கள் பிறந்த வீட்டில் பின்பக்கம், முன்பக்கம், முற்றமென சுற்றிலும் மரங்கள், இயற்கை சூழல்களை ரசித்தபடி  கவலையின்றி வாழ்ந்ததில், இந்தப் பறவைகளின் நேசம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. 

பின்னர் என் பத்தொன்பதாவது வயதில் திருமணமானவுடன் புறப்பட்டு வந்த சென்னை வாசத்தில், புகுந்த வீட்டின் புதுப் பொறுப்புக்கள், அவ்வளவாக முகம் பழகாத புது உறவுகளின் ஆதிக்கங்கள், பிறந்த வீட்டின் பிரிவு, (அப்போதெல்லாம் நினைத்தவுடன் இப்போது போல் கைப்பேசியில் பேச முடியாதே..! மனதின் பிரிவின் சோகத்தை பற்றி ஒரு கடிதம் எழுதி அது அவர்களுக்குப் போய் சேர்ந்து, அவர்களிடமிருந்து பதில் கடிதம் வரும் வரை காத்திருந்து, வந்த பதிலைப்பார்த்ததும் மனமுருகி ஒரு பாட்டம் மனதிற்குள் அழுது எனறல்லவா காலங்கள் நகர்ந்தது.:(((  ) அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் என வாழ்க்கை முழுதாகவே இதையெல்லாம் ரசிக்க இயலாது திசை திரும்பித்தான் போனது என்பதையும் சொல்ல வேண்டும். 

இந்த கால தேச வர்த்தமானங்களில், பிறப்போடு இருக்கும் ரசிப்புத் தன்மைகளும் குறைந்து போகுமோ என்னவோ..? அவ்வப்போது பிறந்தகம் செல்லும் போது, கடமைகள், உறவின் பாசங்கள் என்ற வலை விரிப்பில், இந்த நிஜமான பறவைகள் ஏதும் வந்து  விழாதபடி, மனதை எது கட்டிப் போட்டது..? என அப்போது யோசிக்கவில்லையென்றாலும், இப்போது யோசிக்கிறேன். (காலம் கடந்த யோசனை என சொல்கிறீர்களா .?) ஆனால், சினிமா படங்களில் சிட்டுக்குருவி பற்றிய பாடல்கள், மனதை தொடும். (மேலும் எதையும் படிக்கக்கூட இயலாத குடும்ப கால்கட்டுகள்... காலத்தை கரையச் செய்தது. ) 

இப்போது வலைத்தள அறிமுகங்களுக்குப் பின் சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படிக்கும் போது இந்த சிட்டுக்குருவியின் நினைவுகள் என் மனதை மிருதுவாக வந்து தொடுகின்றன. அந்த தாக்கத்தில், நானும் ஏதோ  சிட்டுக்குருவியைப் பற்றி ஒரு சில பதிவை எழுதியுள்ளேன். என்ற பெருமிதமும் சில சமயங்களில் வந்து போகின்றன. 

இன்று நான் ஏற்கனவே மகன் வீட்டில் இந்த  சிட்டுக்குருவியை நோக்கிப் பேசி, வடித்து வைத்த ஒரு கவிதையை (அட..!  இது என்ன கவிதையோ என என் மனம் அங்கலாய்கிறது. "இதெல்லாம் ஒரு கவிதையென வீணாக பீற்றிக் கொள்கிறாயே..!" என மனதின் ஓரத்தில் ஒரு குரல் எழும்பி, இதை இத்தனை நாட்கள் தடை செய்து வைத்திருந்ததை நான் மட்டுமே உணர்வேன். ) இன்றைய நாளில் வெளியிடலாமா என்ற அற்ப ஆசையை, சகோக்கள் துரை செல்வராஜ், கோமதி அரசு அவர்களின் எழுத்துக்கள் தூண்டி விட்டு விட்டன. எனவே கவிதையோடு என் எண்ணங்களும் தொடர்ச்சியாக.... 


 

இதோ அந்த கவிதை.
 

கூண்டுக்குள் கிளியாக

குந்தி அமரும் இனமல்ல நீ..!

படபடவென்று பறந்து எங்களின்

பார்வையை பரிசோதிக்கும்

பட்டுடல் பறவை நீ...! ஆனால்

இங்கு பார்த்து ஏன் குடி வந்தாய்.. ? 

வாழ்ந்து பார்க்கும் ஆசையா? 

இல்லை, இயன்றவரை

வாழ்ந்துதான் காட்டுவோமே என்ற

பேராசையா.? உன் 

சின்ன சின்ன அலகால், தினம்

சின்ன சின்னதாய் இளம்

இலைகளை கிழிக்க எத்தனை

இன்னல்கள் பட்டாயோ... நீ.. ? மேலும் 

உனக்கு உற்சாகமளித்து

இன்முகம் காட்டி வரவேற்க

நன்மனம் கொண்டோராகவும்

நாங்களில்லையென அறியாயோ..? 

அதிலும், அன்றாடம் 

சமையலில எழும் புகையை

சாதூர்யமாய் வடிகட்டி தன்

சாகசத்தை மெய்படுத்தும்

சாதனத்தை ஏன் சற்றும்

சந்தேகமின்றி குடிப்புகும் 

சந்தோஷத்தோடு தேர்ந்தெடுத்தாய் . .

ஒவ்வொரு நாளும் பல தினுசாக

சமையலின் விதங்களிலும் கசியும்

ஒவ்வொரு துளி எண்ணெய்யும்

பகட்டான பார்வைக்காக

பளிங்கு போல வடிவமைத்த 

பிளைவுட் மரவடிவுகளில்

பாங்காக வந்தமருவதை தடுக்க 

பார்த்துப்பார்த்து வாங்கி

பதித்த  சாதனமல்லவா அது..! 


சென்ற வருடம் உன்னைப் போன்றே

செதுக்கிய அழகுடைய, அந்த 

மஞ்சள் விழியழகி, மைனாவின்

மறைவுக்கு வழி வகுத்தது இந்த

வழிதான் என்பதையும் அறியாயோ..? 


இந்த இடம் போதுமா என்ற ஆலோசனை வேறு நடக்கிறது. 



கூடிக்கலந்து ஆலோசனைகள்.. 


பின் வந்த துயர் கண்டு  அவைகளும் மனம் கலங்கிப் போதல்...எங்களையும் அதன் முடிவு கண்டு மனம் கலங்கச் செய்ததுடன், சுத்தம் செய்பவரை அழைத்து அந்த புகைப் போக்கி குழாயையே வேறு மாற்றி அங்கெல்லாம் சுத்தபடுத்திய செலவு மூன்று ஆயிரங்களை வேறு தொட்டது. 
. . . 

என்னவோ போ..!  உங்களினத்தை

எப்படியோ இவர்(எங்)களோடு 

வாழ்ந்து மு(ம)டி என ஆணையிட்ட 

அந்த இறைவனை

எஞ்சிய இவ்வாழ்வின்

ஓர் நாளில் நான் காண வேண்டும். 

பாவ மன்னிப்புக்களை அந்த

பரமனோடு கூட்டிக் கழித்து

பகிர்ந்து பேசும் அந்நாளில் 

"உன் படைப்பில் இனியாவது, 

இச்சுதந்திரப் பறவைகளுக்கு 

இம்மண்ணின் மனிதர்களின் 

சுயநலன்களைப் பற்றி  விளக்கிச்

சுட்டிக்காட்டி, இனி 

மனிதரோடு அண்டி வாழாமல், 

மற்றைய ஜீவன்களோடு 

மனம் ஒன்றி வாழ்" என

இரக்கத்தோடு வரமளிக்க  

இயலாதென மட்டும்

மறுத்து விடாதேயென

இறைஞ்சி கேட்க வேண்டும். 🙏. 


எப்போதும் போல் என் மனதில் எழுந்த இக்கவிதையை (அறுவையை) படித்து கருத்து தெரிவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். 🙏. 


கிராமங்களில் இன்றும் குருவி கூட்டை கலைப்பது பாவம் என்கிறார்கள். ஒரு சிலர் கூட்டை தொட்டு கும்பிடவும் செய்வார்கள். இப்படியெல்லாம் சொல்லி வைத்தால் தான் மனித இனம் மற்றொரு இனத்தை தொந்தரவு செய்யாது என்ற காரணத்திற்காக சொன்னார்களா? என தெரியவில்லை.

குருவி கூடு கட்டினால் அடிக்கடி விஷேச எண்ணங்கள் ஏற்படும் அதாவது மன அழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இல்லாமல் எப்போதுமே புத்துணர்வாக இருக்க முடியும். வீட்டில் சுறுசுறுப்பாக பறவை இனங்கள் இருக்கையில், அதனை பார்க்கும் போது நமது மனமும் லேசாகி விடும்.

மலேசியா போன்ற நாடுகளில், காடுகளில் வாழ்ந்து முடித்த பறவையின் கூட்டை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதன் விலையோ லட்ச கணக்கில்.. இதனை வாங்கி வீடுகளில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து விரைவில் விஷேச நிகழ்வுகள் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

நம்மூரில் ஒன்றை பின்பற்றினால் மூடத்தனம் எனும் சொல்பவர்கள், வெளிநாட்டில் அதே செயலை செய்யும் போது மறுப்பு தெரிவிக்காமல் நம்புகிறார்கள். அப்படியென்றால் நமது முன்னோர்கள் குருவி கூட்டை தொட்டு கும்பிட்டதும் கூட்டை கலைத்தால் பாவம் என சொன்னதெல்லாம் சரிதான் போல... 

இத்தகவல்களுக்கு நன்றி. கூகுள். 

பின் குறிப்பொன்று.. நான் இந்த வருடம் பதிவுகள் எழுதியே மாதங்கள் பல ஆகிறது. எத்தனையோ பதிவுகள், மேலும், சென்ற வருடம் பிரயாணங்களில் சென்ற கோவில்களைக்குறித்து  பதிவுகள் என எழுத தினமும்  நினைப்பேன். என்னவோ ஒன்றைக்கூட எழுத இயலாமல் போய் விடும். சரி...! அதுதான் அப்படியென்றால் என் வலைத்தள நட்புகளின் எல்லோரின் எல்லா  பதிவுகளுக்கும் உடனடியாக செல்ல முடியாமல், தாமதமும் ஆகி விடும். இருப்பினும் எப்படியோ மாலைக்குள் படித்து மறுநாளேனும் கருத்துகள் கூறி விடுவேன். (இதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும்.)

இப்போது கூட ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரு பத்து நாட்கள் அடங்கிய நெடுந்தூர பயணம் வந்துள்ளது. (அது நல்லபடியாக சென்று வந்த பின் அந்தப்பயணம் பற்றி/ அதைப்பற்றியாவது பகிர இறைவன் அருள வேண்டும்.) அதற்கான யத்தனங்களில் நேரம் பறக்கிறது. எனவே ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து மாதத்தின் பாதி நாட்களுக்கு மேல் என்னால் நம் நட்புகளின் பதிவுகளுக்கு வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான, பணிவான நன்றிகள். 🙏. 

Monday, July 27, 2020

எனக்குமா...! இந்த தந்தையர் தினம்.. .


வணக்கம் நட்புறவுகளே...
தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து  விட்டது.  ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம்  வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ..இது மனிதர்களாகிய நமக்கு மட்டுமில்லை.... மற்ற ஜீவராசிகளுக்கும் அது ஒரளவு வளரும் வரை அன்னை தந்தையின் அக்கறை  கலந்த கண்காணிப்பான பாசம் அத்தியாவசியமாகிறது.

முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து தன் இனங்களை காப்பாற்றி காக்கும் பாசமுள்ள   பறவையினங்களும், குட்டிகளை சுமந்து  ஈன்று பிரியத்துடன் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்களுக்கும்,  தன் பாசத்தை  அவைகள் ஒரளவு வளரும் வரை தனது வளர்ப்புகளுக்கு தரும் வகையில்தான் இறைவன் அவைகளுக்கும் சிலவற்றை உணர்ந்தறியும் பகுத்தறிவையும்  அமைத்து வைத்திருக்கிறான் இதில் அயராது தன் இணையுடன் பாடுபடும் அந்த தந்தை இனங்களுக்கும் அப்படி ஒரு பாசப்பங்குகள்  உண்டெனில் அவைகளுக்கும் தந்தையர் தினமென்ற ஒன்றில்  ஒர் தனிச்சிறப்பு உண்டல்லவா.. ? இப்படியெல்லாம் கீழுள்ள சிட்டுக்குருவிகள் என்னை யோசிக்க வைத்தது.

இந்த சின்னஞ்சிறிய பறவைக்குத்தான் என்ன சுறுசுறுப்பு, கடமை உணர்ச்சி. காலை நேரத்தில், முந்திய  இரவே பேசி வைத்து கொண்டதை போன்று வேறு எந்த நோக்கமுமின்றி, நேராக கூட்டமாக வளர்ந்திருக்கும் தாவரங்களுக்கிடையே  அடையாளம் கண்டு அங்கு சென்று  தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .)  மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..

அதுவும் ஒரு பறவை வந்ததும், மற்றொரு  பறவை அதற்கெனவே காத்திருந்த மாதிரி விருட்டென்று பறந்து அந்த புல் பறித்து வர வேகமாக பறந்து செல்கிறது. அது வந்ததும் இதுவும் அப்படியே....காத்திருந்தது போல.. ! இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில்... நடுவில் சிறிதேனும் அயர்ச்சியோ. சோம்பலோ காட்டவில்லை.  அதற்கு பசியே எடுத்தாலும்  அதற்கு கூட நேரம் ஒதுக்காது போலிருக்கிறது என இவைகள்  விடுவிடுவென எங்கோ மேல் மாடியில் கூடு கட்டும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நான் எண்ணி வியந்து கொண்டேன்.


"அப்பாடா.. நம் சிறு அலகிலிருந்து இது எங்காவது நழுவி விடுமோ என்ற பயம் போக்குவதற்காகவே இந்த ஜன்னல் கம்பி கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நேரம் இதில் அமர்ந்து விட்டு செல்லலாம். ஆண்டவா..! இதை கொண்டு போய் எனது வீட்டிற்கு பக்க பலமாக அமைக்க  சேர்க்கும் வரை, இது என் அலகிலிருந்து நழுவி விடாமல் இருக்கச் செய்து விடு. என்று பிரார்த்திக்கிறதோ... " இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி.


" இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் எத்தனை தடவை இந்த கம்பியில் வந்து வந்து அமர்வது? இன்னும் கொஞ்ச தூரந்தானே.. ! இது எப்போதையும் விட கொஞ்சம் பளுவாகத்தான் இருக்கிறது..! கஸ்டப்படாமல் ஒரு செயலை முடிக்க இயலுமா.. ? இருந்தாலும் ஒரு எம்பில் எழுந்து பறந்து விடலாம். இதோ.. முயற்சித்தே விடுகிறேன்..!" என்கிறதோ இந்த சின்னச் சிட்டு.


" இவர்களுக்கென்ன ஜாலியாக  பிற மனிதர்களின் உதவியுடன் வீடு கட்டிக் கொண்டு வெய்யில், மழை, குளிர் என்ற சீதோஷ்ண நிலை பற்றியெல்லாம், கவலையில்லாமல் உள்ளேயே  சகல வசதியும் செய்து கொண்டு அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். எங்கள்  குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு  யாரையும் உதவிக்கு  அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி, வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம். அவ்வளவுதான்.. ! அவரவர் விதிப் பயன்களை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. "என்ற தத்துவங்களில் சிறிது நேரம் லயித்து செலவிடுகிறதோ..? இந்த சிங்கார சின்னச்சிட்டு.


" என்னத்தான் தத்துவங்களை நான் உதிர்த்தாலும், எங்களுக்கும் சபலங்கள் உண்டு. சண்டை சச்சரவுகள் உண்டு. அதையும் மீறி இந்த அன்பு, பாசம் எங்களுக்குள்ளும் உண்டு. அதுவும் உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு அடைக்கலமாய் இடம் கொடுப்பதால், உங்களிடம் நன்றியும் உண்டு. இந்த நன்றியுணர்வை எங்களுக்கு தந்த அந்த ஆண்டவனுக்கும் நன்றி. இன்னமும் கடமை முடியவில்லை வரட்டுமா? எனக்காக அவள் காத்திருப்பாள்.." என்றபடி பறந்து செல்ல தயாரானது அந்த சின்னக்குருவி.


இந்த சிட்டுக்குருவிகளை பார்த்து புகைப்படங்கள் எடுத்து வருடமாகி விட்டது. படங்களை பதித்து பதிவாக எழுததான் இத்தனை தாமதமாகி விட்டது. இதைப்பற்றி பதிவாக  எழுத நினைக்கும் போதெல்லாம், எனக்கு சகோதரி  "கோமதி அரசு அவர்களின்" நினைவுதான் வரும். அவர்களும் இப்படித்தான் பறவைகளைப்பற்றி ஏதாவது அபிமானமாய் பதிவுகளை எழுதிக் கொண்டேயிருப்பார் என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அவரும் "ஜன்னல் வழியே" என பறவைகளைப் பற்றி  நிறைய பதிவுகள் எழுதிவிட்டார். "பறவைகளின் பாச மலரான" அவருக்கும் அந்தப் பறவைகளின் நன்றியோடு என் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு கவிதை (அதற்கு கவிதை என்றுதான் நான் பெயர் வைத்துள்ளேன்.) அவ்வாறு இல்லையென்றால் இந்த குருவிகளும், என்னை மன்னித்து விடட்டும். 


சிட்டுக்குருவி கவிதை.... 

சின்னஞ்சிறு உன் தேகம் கண்டு
சிட்டுக்குருவி என ஆனாயோ..இல்லை, 
சிட்டென பறக்கும் உன் திறன் கொண்டு
சிகரமாய் உன் பெயர் அதுவானதோ. .. 
இன்றும் விருட்டென்று நீஅங்குமிங்கும் 
பயந்தும், பாய்ந்தும் செல்லும் அழகில்
பட்டான உன்  மேனியழகு கண்டு
பரவசமாகுது என் உள்ளம். 

சிறுமி நான்  உனைக் கண்ட நாளதில்

"சிட்டான உன்னைப்போல் அதுவும் ஓர்
சிட்டு என்பதால், அதன் பெயர்
சிட்டுக்குருவி" என்ற என் தாயின் 
சின்ன அறிமுகம்... உன்னுடனான  
சிறந்த நட்பாய் விரிந்தது. உன்
சின்னஞ்சிறிய அலகால் நான் இடும்
சிறு உணவுப் பருக்கைகளை நீ 
சிதறாமல் கொத்தும் அழகை
சிறிது நேரமாவது தினமும்  நான் 
சிந்தையொன்றி பார்த்துவந்தது என்
சிறு வயது நினைவிலிருந்து இன்னும் 
சிறிதேனும் விலகவில்லை. 

நடுவில் நான் உன்னைத் தேடிய

நல்லதோர் நாட்களில், நீ என்னை
நாடி வந்து பசியாற இயலாமல், 
என் பட்டிண வாசங்கள் உன்னை
என் பார்வையில் படாமல்
எங்கோ பதுக்கி வைத்திருந்தது.

கூடு கட்டி குடித்தனம் அமைக்க இந்த

கூச்சல் நகரம் உனக்கு தோதில்லை 
போலுமென என் மனதை தேற்றிய 
போதினிலே, காலப்பொழுதுகள்
பழுதாகி அமைந்த காரணத்தால், 
போலிகள் இல்லாத ஓர் இடம் தேடி,
"போய் வருகிறேன்"எனவும் சொல்லாது
உன்னினங்கள் கிளம்பி போய் விட்டதை
உன்னிப்பாய் கவனித்து கேட்டதில் ,
உயிர் போன வேதனை என்னுள்ளே ... 
உள்ளம் துடிக்க எழுந்ததை
உளமார நீ உணர்வாயா .. ! என்  
உள்ளங்கவர்ந்த சிட்டுக்குருவியே..! 

ஆண்டுகள் பலவும் கடந்த பின்பு, 

ஆறுதல் பெற்று நாங்கள் இன்புற 
மீண்டு வந்த உன்னைக் கண்டதுமே 
மற்றுமோர் பிறவி எடுத்து வந்த 
மட்டற்ற மகிழ்வு இன்று எங்கள் 
மனதினில்  இடம் பிடித்து அமர்கிறது. 

காக்கை. குருவி எங்கள் இனமென

களிப்புடன் நல் பாடல் தந்த கவி
பாரதியின் சொல் வாக்கை மீறி, இனி நீ 
வேற்றிசை  சென்றே வாழ்ந்திடும்
பிற வேறெந்த எண்ணங்களும் 
பின்னாளில் கொள்ள  வேண்டாம். 
பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி, 
பாசமுள்ள பறவைகள் இதுவென்று  
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்  
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும் 
பேறொன்றை மட்டும்,  அந்த 
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...! 

சிறப்பு பிராத்தனைகள்....
ஏதோ எனக்கு தெரிந்த உரைநடை கவிதை என்ற பெயரில்,  சில  பல வார்த்தைகளை வரிசையாக கோர்த்து வடித்துள்ளேன். இதில் யாரும் நெற்றிக்கண் என்ற ஒன்றை  திறவாமல், அப்படியே திறந்தாலும், இதிலுள்ள குற்றங்களை மட்டும் சத்தமின்றி பொசுக்கி, குறைகளை உருவாக்கியவரை சுட்டெரிக்காமல் ,காத்தருள வேண்டுமாயும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் கூடவே நக்கீரரையும் மனமுருக வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 
🙏. 😀😁😀😁. 🙏.