Showing posts with label பந்தம். Show all posts
Showing posts with label பந்தம். Show all posts

Monday, March 16, 2015

ஒரு தீயின் ஆரம்பம்.. (சிறுகதையின் பகுதி 3)

விச்சு.! எழுந்துக்கோ! என்ன பண்றது.! நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்! மனசை தேத்திண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்.! மூத்த அண்ணனின் சமாதானங்கள் என் செவியில் விழுந்தாலும், எதுவும் தோன்றாத மனநிலையில் நான் விழுந்து கிடந்தேன். என்னைச் சுற்றி உறவு பட்டாளங்கள் அங்குமிங்கும் நடமாடியபடி இருந்தன. அத்தனை உறவுகளையும் ஒரு சேர பார்க்க விரும்பிய என் அம்மா இது ஒன்றையும் உணராத நிலையில் படுத்து, இல்லையில்லை! படுக்க வைக்கப் பட்டிருந்தாள். அன்று அத்தனை ஜூரத்திலும், தனக்கு ஒன்றுமே நடவாத மாதிரி சில நாட்களில் எழுந்து நடமாடிய அம்மா ஒருமாத அவகாசத்தில் இப்படி தீடிரென, எங்களை பரிதவிக்க விட்டு செல்வாள் என்று நானும் அப்பாவும் நினைத்துக்௬ட பார்க்கவில்லை.! அப்பா பாதி உயிர் போன மாதிரியான அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.“ இனி என்னிடம் வடிப்பதற்கு கண்ணீர் இல்லை!” என சோர்ந்த நிலையில் மயங்கிய கண்களுடன் இருக்கும்  அவரைப் பார்க்கவே மனதை பிசைந்தது. அம்மா! ஏம்மா இப்படி யாருகிட்டேயும் எதுவும் சொல்லாமே, எங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்காத மாதிரி இனி எங்களோடெல்லாம் வாழப் பிடிக்காத மாதிரி..ஏம்மா இப்படி..?” மனசு இதே கேள்வியை கணக்கே இல்லாமல், ஜபித்தபடி புலம்பிக் கொண்டேயிருந்தது. அம்மா எதுக்கும் எனக்கு பதில் தெரியாதென்ற பாவனையில் விழி மூடி மெளனித்திருந்தாள். அம்மா! நீ வரணும்முன்னு எதிர்பார்த்த அத்தனை பேரும் இப்போ வந்துருக்கா பாரு! உனக்கு சந்தோஷமா? இதுக்காவது ஒரு பதில் சொல்லேன்.! நா அன்னைக்கே என் கற்பனையை உன்கிட்டே சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தனுன்னு நினைச்சேன். இப்போ நிஜமாவே இவங்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுறியான்னு, என்னாலே பார்க்க முடியிலேம்மா! ஆனா, நீ கண்டிப்பா சந்தோஷபடுவே! எனக்குத் தெரியாதா? உன் மனசிலே எழுந்த அத்தனை எண்ணங்களின் ஒவ்வொரு எழுத்தையும் கொஞ்சமும் தவறில்லாமே  நீ எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கியே! உன்னோட ஆதங்கங்கள் அனைத்தையும்  என்னிடந்தானே வடித்திருக்கிறாய்? ஆனால், வந்தவர்களுடன் களித்துப்பேசி உலாவி மகிழ நீ இல்லையேம்மா.! மனசு தான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி பேசி என் விழிகளை குமுற வைத்துக் கொண்டிருந்தது. சித்தம் முழுதுமாக கலங்கி இருந்ததில், இதை எப்படி தாங்கிக் கொண்டிருக்கிறோம்? என்ற சுய பச்சாதாபத்தில் கை கால்கள் சொல்லவொண்ணா சோர்வடைந்திருந்தன. யாரோ வந்து என்னப்பா? இப்படியே எத்தனை நாழி? என்று சிறிது உரிமையுடன் அண்ணாவிடம் ஏதோ ௬றிச்சென்றார். அண்ணா கண்ணைத் துடைத்தபடி அவர் பின்னாடி எழுந்து நடந்தான்.

நானும் தள்ளாடும் உடலை சாமாதானப் படுத்தியபடியே, எழுந்து வீட்டின் பின்பக்கம் சென்றேன். ஹாலுக்கு அடுத்த அறையில், “அவ எப்பவுமே அப்படித்தான்.! தன் குடும்பம் நல்லா இருக்கனும்னு ௬ட பாக்காமே எல்லாத்தையும் புகுந்த வீட்டு உறவுக்களுக்கு பாத்துப்பாத்து தானமா கொடுத்துட்டு , தானும், தன் குழந்தைகளும் சந்தோஷபடாமே கஸ்டத்திலே வாழ்ந்தா.!   நம்மகிட்டே மட்டும் அப்ப கொட்டியா கிடந்தது.? உதவி செய்றதுக்கு.! பொழைக்க தெரியாமே கஸ்டப்பட்டா, நாம என்ன பண்றது? என்று தன் தங்கையின் கடந்த கால வாழ்வைச் சொல்லி தன் அண்ணா, அண்ணியிடம், அங்கலாயித்து கொண்டிருந்தாள் பெரியம்மா. அதே பெரியம்மாவுக்கு ஏதோ பணமுடை வந்த போது அம்மா தன் நகைகளை விற்று உதவி செய்ததை நானும் அறிவேன். அந்த உதவிப்பணம் இன்று வரை வந்து சேராதது வேறு விஷயம்.! அதைப்பற்றி எப்போதாவது வீட்டில் பேச்சு வரும்போதும் "கிடைக்கும் போது கொண்டு வந்து தர மாட்டாளா.? கேட்டால் அவ மனசு கஸ்டமாயிடும், பணமா பெரிசு? நாம போகும்போது எதையும் கொண்டுபோக போவதில்லை..!" என்று சாதாரணமாக பேசி, பணத்தை விட மனிதாபிமானந்தான் பெரிது என்று வாழ்ந்த அம்மா அதைப்பற்றி என்றும் கவலையும் படவில்லை என்பதும் நாங்கள் அறிந்த விஷயமே.! அன்று வராத ஆத்திரம் லேசாக மேலெழுந்தது. அம்மா உறவை மட்டுந்தானே விரும்பி யாசித்தாள்.! இவர்கள் பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி இவள் எங்கு பதிலுக்கு உபகாரத்தை நம்மிடம் எதிர்பார்த்து விடுவாளோ?” என்ற யோசனையில் இன்று வரை ஆயிரம் காரணங்களைச் சொல்லி பாராமுகப் படுத்தியது நினைவுக்கு வந்தது.!

அவர்களிடம் எதுவும் பேசப் பிடிக்காமல், பின் பக்கம் சென்ற போது, முற்றத்தில் அருகருகே நாற்காலியில் அமர்ந்திருந்த இரண்டு அத்தைகளும், “அண்ணியோட அக்கா என்ன பேச்சு பேசுறாங்க தெரியுமா? ஏதோ நம்ம வாழ்க்கையை நல்லா அமைச்சு குடுத்துதான், அண்ணாவும், அண்ணியும். வாழவே முடியாத ஒரு நிலைமைக்கு போய்ட்டாங்களாம்.! எல்லாம் நம்ம நேரம்.! நம்ம அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் ஒரு பேச்சு வந்திருக்குமா? அப்படி என்னதான் இந்த புண்ணியவதி ஊர்ல உலகத்திலே இல்லாததையெல்லாம் நமக்கு வாரி வழங்கிட்டாங்க.! எனக்கு வந்த கோபத்திலே…."என்று நான் வந்ததைப்பற்றி ௬ட கவலைப்படாமலோ, இல்லை கவனிக்காமலோ, பேசிக் கொண்டேயிருந்தார்கள். அப்பாவை கைப்பிடித்து வந்த போது சின்ன வயதில் தாயை இழந்து நின்ற இவர்களுக்கு பெறாத தாயாய் மாறி, அந்தப் பெற்றதாய்  செய்யமுடியாமல் போனதையெல்லாம், அதற்கும் மேலாக பார்த்து பார்த்து செய்த, என் அம்மாவின் நிழல் ௬ட இவர்கள் மேல் பட அருகதை யில்லையென்ற  கோபம் என்னுள் எழுந்ததை என்னால் கொஞ்சமும் தடைசெய்ய இயலவில்லை.!

நடை தடுமாற்றத்துடன் அவர்களை கடக்க, பார்க்கப் பிடிக்காமல், உள்திரும்பிய போது, ஆமா.! எல்லாத்தையும் பாவம் பரிதாபம்னு தானம் கொடுத்தே தேச்சிட்டாங்க.! நமக்குன்னு என்ன வச்சிருக்க போறாங்க.! ஒரு நல்ல நகை நட்டாவது மிச்சம் வச்சிருக்காங்களானு தெரியல்லையே ? இந்த ஒட்டை வீட்டையாவது, காப்பாத்த முடியுமான்னு யோசிக்கனும்.! இல்லாட்டி இதுல வர்ற பங்கும் போயிடும்.! என்று கொஞ்சம் சத்தமாகவே அண்ணிகள் இருவரும் சமையல் அறை வாசலில் நின்றபடி முணுமுணுத்தது காதில் சோதனையாக வந்து விழவும், மனதிலெழுந்த கோபம் தீயாக மாறட்டுமா? என்று உக்கிரமாக கேட்டபடி, ஒரடி முன் வைத்தது.

ஹாலுக்கு தடுமாற்றத்துடன் வந்தவுடன், மனசெல்லாம், வருத்தத்திலும், கோபத்திலும் படபடத்தது. உறவுகள் ஆளாளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்தபடி, அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று பாதி உயிருடனிருந்த அப்பாவிடமும், அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அண்ணன்களிடமும், கேட்டபடி இருந்தார்கள். நடுநடுவில்  நீ பசி தாங்க மாட்டாயே.? எவ்வளவு நேரமாகுமோ தெரியவில்லை.? அடுத்து இங்கிருந்து புறப்பாடு ரயிலா? பேருந்தா? எப்போதோ?” என்ற கேள்விகளும், பதில்களுமாய், வேறு பிற உறவுகளின், சுக கஸ்டங்களைப் பற்றிய விவாதங்களுமாய், தங்கள் வியாதிகளையும், இதர பிராயாணங்களை பற்றிய சம்பாஷனைகளுமாய், எப்படியாவது இன்றைய பொழுதை போக்கி கழித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட வேண்டுமென்ற உத்வேகத்துடன் மட்டும் இருப்பதை காண முடிந்தது. ஒருவராவது "உறவுகளின் உள்ளங்களை மட்டுமே விரும்பிய ஒரு ஜீவன், தாம் வந்த போதெல்லாம், காலை முதல் இரவு வரை தமக்கு வேண்டியதை உற்சாகத்துடன் சமைத்து போட்டு, தன்னைப்பற்றி ௬ட கவலையுறாது,  தாம் அங்கங்கு செல்லும் பிரயாணங்களுக்கு உடனிருந்து உதவி செய்து, தன்னலம் கருதாது, தமக்காக பாடுபட்டதே என துளியும் நினைக்காது, அந்த ஜீவனை பிரிந்த உடலுக்கு மரியாதையாக, பரிவாக ஏதாவது பேசி நினைக்க வேண்டாமா.?" என்ற பச்சாதாபம் ஊடுறுவிய எண்ணங்களின்றி, சிந்தனைகளின்றி சுயநலத்தின் மொத்த அவதாரமாக இருந்ததைக் கண்டு என் மனதில் எழுந்த கோபமும், வருத்தமும் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே எழுந்த தீயின் ஜூவாலையுடன் ஒருசேரக் கலந்தது.

மெதுவாக அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தேன். விச்சு! உன்னை அநாதையாக்கிட்டு, நான் மட்டும் கொஞ்ச நேரத்திலே புறப்பட்டுருவேனோ? ஆனா ஒண்ணு! என் பேச்சிலிருந்து இன்று முதல் நீ தப்பித்தாய்? அது வரைக்கும் உனக்கு நல்லதுதானே.?” வழக்கப்படி அம்மா கேலியாக கேட்பது போல் இருந்தது. அம்மா! பாரும்மா! நாள்தோறும் வரவேண்டும் என்று விரும்பிய இந்த உறவுகளுக்கா, நீ தவமாய் தவமிருந்தாய்? உன்னிடம் நிதி நிலவரத்தின் ஆளுமை குறைய தொடங்கியதுமே, உன் அன்பு மட்டுமே மாறாது மிஞ்சி நின்ற மனதை புரிந்து கொள்ளாத இந்த உறவுகள் உன்னை சுற்றிச்சுற்றி வருமென நீ தினம்தினம் ஒரு கனவுடன் வாழ்ந்திருந்தாயே.! நீ உயிருடன் இருந்த போது இவர்களது உதாசீனங்கள் உன்னையும் பாதிக்கவில்லை.! எங்களையும் அண்ட விடாமல் பேசி சமாளித்தாய்.! ஆனால், இன்று இவர்களின் நடவடிக்கைகள், என்னை வெறுப்படைய செய்கின்றதே.! நீ எப்படி இதுநாள் வரை பொறுத்துக்கொண்டாய்? உன் பொறுமை எனக்கில்லையே! ஏன்? ஏம்மா, இவங்க இப்படி இருக்காங்க.? இவர்களைப்பற்றி பேசிப்பேசி நம்மை பற்றி சிந்திக்கவும் மறந்தோமே.! ஒரு வேளை நானும் இன்னும் நல்ல நிலைக்கு வந்து நம் வாழ்வு சிறப்படைந்திருந்தால், இவர்கள் நம்மை மறுபடியும் சுற்ற ஆரம்பித்திருப்பார்களோ, என்னவோ? அதைப் பார்த்தாவது உன்மனசு ஆனந்தமடைந்திருக்குமே அம்மா.! அதற்குள் ஏன் என்னை விட்டுப் போய்விட்டாய்? அம்மா! நீ இல்லாமல் இனி ஒவ்வொரு நொடியும் எப்படி தனித்திருக்கப் போகிறேன்.! தெரியவில்லையே அம்மா..!" மனசுக்குள் அழுகை வெடித்து பிரவாகமாகி, ஒரு ஓரமாய் எழுந்த தீயின் ஜூவாலைகளை அணைக்கப் பார்த்தது.

விச்சு.! அழாதே.! எழுந்துக்கோ.! ஆக வேண்டியதை கவனி.! இப்படியே அழுதுகிட்டே இருந்தா போறுமா.? நேரமாகிறது பார்.! யாரோ பசி அரக்கனுக்கு பயந்து சமாதானபடுத்த அருகில் வந்தவுடன், அணையலாமா என யோசித்த தீ மடமட வென்று எரிந்தது. “தயவு செஞ்சு என்னை அழ விடுங்க! உங்களுக்கெல்லாம் பசியோ, இல்லை வேறு ஏதாவது வேலைகளிருந்தால், கிளம்பி போயிண்டே யிருங்கோ.! எப்போதும் உங்களுக்காகவே  வாழ்ந்த என் அம்மாவை  என்னோட கொஞ்ச நேரமாவது வாழ விடுங்க.! இனி எந்த உறவும் என் அம்மாவை சங்கடபடுத்த வேண்டாம்.! நான் பார்த்துக் கொள்கிறேன் என் அம்மாவை. நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்.! என் அம்மாவின் நினைவுகள் முழுதும் இனி எனக்கு மட்டுந்தான். அதையும் தானமா எடுத்துண்டு போயிடாதீங்க.! அப்பாவும், நானும் இனி அவளோட நினைவுகளிலேயே எப்படியோ வாழ்ந்துடுவோம்.! மனதின் பலவீனத்தில் எழுந்த என் சத்தமான கதறலில் அப்பாவும் வந்து பங்கெடுக்க, வந்திருந்த மொத்தக்௬ட்டமும் ஹாலில் நிரம்பியது. அண்ணன்கள் என் வாயிலிருந்து வெளியேறிய பேச்சில் ஸ்தம்பித்து நிற்க, சொல்லிக் கொள்ளாமல், கிளம்பி விடும் சூழ்நிலையில் இருக்கும் உறவுகள், உண்மையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பலாமா? என்று ௬டிக்௬டிப் பேசி யோசித்துக் கொண்டிருந்தது.” விச்சு.! நீ  ஒருவனே என் உறவு என நினைத்து அப்பாவும் நானும் வாழ்ந்திருக்கனும்டா.! உறவின் கதைகள் பேசிப்பேசி உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். உன்னை இப்படி வருத்தப்பட வச்சதுக்கு என்னை மன்னிச்சுகோடா.!” என்று அம்மா தலையை கோதிவிட்டு ஆறுதல் படுத்துவது மாதிரி எனக்குத் தோன்றியது. “அம்மா! நீயும் என்னை மன்னிச்சிடு.! நானும் உன்னை மாதிரி இது நாள் வரைக்கும் எதுக்குமே கோபப்பட்டதில்லையே அம்மா.! இன்னைக்கு உன் அனுமதியில்லாமே, நீ ரொம்ப விரும்பி அனுசரிச்சி போன இந்த உறவுகளை, அவங்க உன்னைப்பத்தி பேசின வார்த்தைகளை, கேட்டு பொறுக்க முடியாமே, எனக்கு வந்த கோபத்திலே, வருத்தத்திலே வார்த்தைகளை விட்டுட்டேன்என்னை மன்னிச்சுடு..! மனசுக்குள் சொல்லியபடி  நான் விம்மி விம்மி வாய் விட்டு அழுது மனதில் கொழுந்து விட்டெறியும் தீப் பிளம்புகளை முழுதுமாக அணைக்க ஆரம்பித்தேன்சுற்றி நின்ற வேறு உறவுகளை பற்றி கவலைபடாமல், அம்மாவிடம் வருத்தங்களை சொல்லி அழும் போது, உடலின் சோர்வோடு ஒருசேர கனத்திருந்த மனமும் லேசாக, உள்ளுக்குள் ஆரம்பமான தீயின் தாக்கங்கள் படிப்படியாக மறைவதற்கு ஆயுத்தமாகியது..

முற்றும்...

கீழுள்ள இந்த பாடலுக்கும், கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.! ஆனால் எஸ். பி. பியின் இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடித்தமாகையால், இந்த இனிமையான பாடலை பகிர்ந்துள்ளேன். இதன் வரிகளின் அர்த்தங்கள் அன்பை சார்ந்திருப்பதால் இனிதான அந்த குரலுடன் கேட்கும் போது மனசுக்கு இதமாக இருக்கும்.. கேட்கும் அனைவருக்கும் நன்றிகள்...!





Sunday, March 15, 2015

ஒரு தீயின் ஆரம்பம்.. (சிறுகதையின் பகுதி 2)

விதி எப்போதும், ஒரே மாதிரி பயணிப்பது இல்லையே! வாழ்க்கைப் பயணங்கள் தொடர்ந்து ஓட, இடையே. நாங்கள் மூவரும் ஆண் பிள்ளைகளாக பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அம்மாவும் அப்பாவும் எங்களை வளர்க்க எவ்வளவு சிரமங்களை அனுபவித்தார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அப்பா நடத்திக்கொண்டிருந்த வியாபாரத்தில் ஓகோவென்றில்லாமல் ஓடிக் கொண்டிருந்த வண்டி திடீரென சண்டி மாடாய் படுத்ததும், குடும்பத்தை இழுத்துப்பிடித்து சாமாளித்து எப்படியோ எங்களை படிக்க வைக்கவும், வளர்க்கவும், இருவரும் சிரமங்களை அனுபவித்திருந்தார்கள். நல்ல நிலைமையில், ௬டியிருந்த உறவுகள், சிரமத்தின் முகம் கண்டு முகம் சுழித்துக் கொண்டதில் எங்களின் மனங்கள் சலித்துப்போயின. கடைசியில் இருக்கும் இந்த வீட்டைத் தவிர்த்து அப்பாவின் பங்கு என்றிருந்த சொத்துக்கள் சொல்லிக்கொண்டே விடைப்பெற்றன. அப்போதும் அம்மாவுக்கு உறவினர் வாஞ்சை விடவில்லை. பழைய நினைவுகளை அசை போட்ட வண்ணமே யிருந்தாள். உறவுகளின் குறை, நிறைகளை வேறுபடுத்தாமல், நிறைகளை மட்டும் குறிப்பிட்டு அந்நிகழ்வுகளில், தன்னை மறந்து ரசித்து வாழ்பவர்களில் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்.! எனத்தோன்றும் எனக்கு. ஆனால், அது என்னைத்தவிர கேட்பவர் எல்லோருக்கும் புளித்துதான் போயிற்று.

அண்ணன்களுக்கு  நல்ல இடத்தில் வேலைகள் கிடைத்து , குறைந்த இடைவெளியிலேயே, திருமணங்களும் நடந்து முடிந்தது. வந்த மருமகள்கள் எண்ணமோ,  இல்லை அண்ணன்களின் அடிமனது ஆசைகளோ, எதுவோ ஒன்று, அவரவர்கள் வேலையை சாக்கிட்டு தனியாகிப் போயினர். உறவுகள் மாதிரி இவர்களும் சிதறிப் போகிறார்களேயென்று அப்பா, அம்மாவுக்குத்தான் மிகவும் கவலையாய் போயிற்று.! வளர்த்த உறவுகளே வாழ்க்கை நிலையானதும், இவர்களின் உறவின் சுமூகத்தை மறந்த போது, பெற்ற உறவுகளும், அக்காடாவென்று, பிரிந்தது அம்மாவுக்கு சற்று பலத்த அடியாகத்தான் இருந்தது.! அப்பா சுலபத்தில் சமாளித்துக் கொண்டார். அம்மாவுக்குதான் அனைவரையும் அருகமர்த்தி பார்க்க கொடுப்பினை இல்லாமல் போயிற்றே?” என்று அதற்கு வேறு தனியாக விசனபட்டுக் கொண்டாள். அம்மாவின் அன்பை புரிந்து கொள்ளாமலே, அண்ணன்கள் தனியாகினரோ? என்று ஒரோர் சமயம்  எனக்கு ஐயம் எழ, அம்மாவிடம் அது பற்றி விவாதிக்கையில், “நாளைக்கு உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தால் நீயும் அப்படித்தானே போய் விடுவாய் விச்சு !” குரல் உடைந்து சிதறினாலும்  ,அம்மா தான் யதார்த்தமாய் இருப்பதாக காட்டிக்கொள்ளும் பாவனையில், சற்று புன்னகைத்தவாறு பேச்சை மாற்றுவாள். இல்லையம்மா.! அதனால்தான் நான் திருமணமே வேண்டாமென்று இருக்கிறேன்.! நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.!” வார்த்தைகள் அவசரமாக என் வாயிலிருந்து விழுந்த நொடி அம்மா பதறுவாள். போடா! பைத்தியம்.! அப்படியெல்லாம் சொல்லாதே,! நல்ல வாழ்க்கையை அமைச்சுண்டு, ரொம்ப நல்லா வாழனும் நீ.! விச்சு, நீயாவது எப்போதும் எங்களோடையே இருக்கனும்.! என்று தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியபடி, என் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பது மாதிரி சொல்லும் போது அவள் கண்களில் மழையென நீர் கொட்டும். அந்த சமயத்தில், அங்கு வார்த்தைகளின் சங்கமிப்பு  ஏதுமின்றி, கனமான சுமை சுழ்ந்த மெளனத்தில், “என் வார்த்தைகளை கோர்த்த நேரம் தவறோவென,” உள் மனம் சாட, அமைதியாய் அவள் கரம் பற்றி ஆசுவாசப்படுத்துவேன்.

டேய்.! விச்சு! சாதம் ஆறி அவலா போறது.! என்ன யோஜனை உனக்கு? சாப்பிட்டு கையலம்பு.! கையெல்லாம் ௬ட காய்ஞ்சு போச்சு பாரு.! அம்மாவின் சத்தத்துக்கு செவிமடுத்து சுய நினைவையடைந்தேன். அம்மா கட்டிலில் இருந்து எழுந்து சொல்லிவிட்டு சற்று இருமியபடி அப்பாடா.! என்று மீண்டும் படுத்துக்கொண்டாள். கடந்த இருதினமாக அவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றாலும், “ஏதோ இன்னைக்கு ரசமும், ௬ட்டுந்தான் வச்சிருக்கேன் விச்சு.! நாளைக்கு உடம்பு சரியாயிடும். நல்லபடியா சமைக்கிறேன். நாளைக்கு கொஞ்சம் ஜூரம் விட்டுடும்.! அப்பா ௬ட ஊரிலில்லை.! நாளைக்கு வந்துடுவார்.! அதனால்தான் கொஞ்சமா சமைச்சிருக்கேன்.” என்று முணுமுணுத்தபடி, தன் முன்னால் தட்டுவைத்து பரிமாறி சென்றிருந்த சாப்பாட்டை சுவைத்துக்கொண்டிருக்கையில், இதுஎன்ன பகல் கனவு? உள்மனதிலிருந்து இத்தனை எண்ணச்சிதறல்களா? அம்மாவின் பேச்சுக்களை இத்தனை நாள் ரசித்ததில், மனதில் தோன்றிய இந்த கற்பனைகாட்சி, கற்பனையாகவே போகாமல் நிஜமாக உறவுகள் அனைத்தும் அன்போடு ஒருநாள் ஒன்று ௬டி மகிழ்வுடன் இந்த வீடு நிறைத்தால், அம்மாவுக்குத்தான் எப்படி சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்தவாறு, மடமடவென்று உணவருந்தி, இடம்சுத்தம் செய்து இதைப்பற்றிச்சொல்லி அவள் சந்தோஷப்படுவதை பார்த்து ரசிக்கலாம் என்று அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தேன்.

ஏம்மா.! இத்தனை முடியால் இருக்குறச்சே, ஏன் சமையலெல்லாம் பண்ணினாய்.? நான் வந்தப்பறம், வெளியிலிருந்தாவது ஏதாவது வாங்கி வந்திருப்பேனில்லையா? உடம்பை சிரமபடுந்திண்டு ஏன் இப்படி.?” என் ஆதங்கத்தை புரிந்து கொண்டவளாய், “எனக்கு என்ன இப்போ? சாதாரண ஜூரந்தானே.! மாத்திரை போட்டுண்டாச்சு.! நாளைக்கு எழுந்திருக்க மாட்டேனா? எல்லாம் சரியாயிடும்.! நீ போய் படுத்துக்கோ! போ!” என்றவாறு அன்பாக என் கரத்தைப்  தொட்டவளின் கை நெருப்பாயிருந்தது. பதறி எழுந்தவன் அம்மாவை கட்டாய படுத்தி, கைதாங்கலாய் டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்து, அவர் தந்த மருந்து மாத்திரைகளை தந்து, அம்மாவை இரவு முழுவதும்  கண் விழித்துக் கவனித்துக் கொண்டேன். என் பதற்றத்தைக்கண்டு அம்மா கேலி செய்தபடி, செல்லமாக கடிந்து கொண்டேயிருந்தவள், பாசமாய் என்னைப் பார்த்தபடியே,  மருந்தின் பலனாய் சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்.

மறுநாள் அப்பா வந்தும் ௬ட, சேர்ந்தாற்போல், நான்கு தினங்கள் அம்மாவால் எழ முடியவில்லை.! நான்கு நாட்களும் நானும் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு,அப்பாவும், நானுமாக அம்மாவை சிரத்தையாய் கவனித்துக் கொண்டோம். அந்த உபசரிப்பில், அம்மா மிகவும் நெகிழ்ந்து விட்டாள். நீ எதுக்குடா இப்படியெல்லாம் ஆபீஸூக்கு போகாமே இப்படி வருத்திக்கிறே.! எனக்கு என்ன இப்போ! சாதாரண  ஜூரந்தானே.! இந்த வாட்டி ௬ட இரண்டு நாள் பாடாபடுத்துது! அதுக்கு இத்தனை ஆர்பாட்டம் பண்ணறியே!” என்று அம்மா ஈனஸ்வரத்தில் முடியாமல் முனகிக் கொண்டேயிருந்தாள். தனக்கு முன்பு இந்த மாதிரி உடம்புக்கு வந்திருந்தபோது, தன் அம்மா, அத்தை, மற்றும் உறவின் வழி யாரெல்லாம் எப்படி தன்னை பார்த்துக் கொண்டார்கள் என்று பட்டியலிட்டு சொன்னாள். அம்மா.! முடியாமல் அதிகம் பேசாதே.! நீயே உடம்புக்கு எது வந்தாலும் பாராட்டாமல் வேலைகளை செய்வாய்.! அது எங்களுக்கும் தெரிந்ததாயிற்றே.! இந்த வாட்டி கொஞ்சம் அதிகமா உனக்கு முடியலே! அதனாலேதான் நான் லீவு போட்டுண்டு உனக்குப்பண்றேன். நான் உனக்குப் பண்ணாமே வேற யாருக்கு செய்யப்போறேன். நீ அமைதியாய் ரெஸ்ட் எடு.! நாளைக்கு சரியாச்சுன்னா, நீ படுத்துக்கோன்னு சொன்னாலும் , ஒருவேலையும் செய்யாமே படுத்துக்கவா போறே.!” அன்புடன் அவள் தலையை கோதியபடி நான் சொன்னதும், அம்மாவின் விழி ஓரங்களில் கண்ணீர் முத்துக்கள் பிரசவமாயின. “எனக்கு யாருமே வேணாண்டா! நீயும் அப்பாவும், நான் கண்ணை மூடற வரைக்கும் , என் பக்கத்திலேயே……என்ற அம்மாவை மேற்க்கொண்டு பேச விடாது அவள் வாயைப் பொத்தினேன். “அம்மா! இப்போ எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறே.! நாம என்னிக்குமே சேர்ந்துதான் இருப்போம்.! நீ மனசை அலட்டிக்காமே தூங்கு.!” என்றதும் அமைதியாகி தூங்கவாரம்பித்த அம்மாவை பார்த்த போது, அவளின் வார்த்தைகள், தந்த வருத்தம் என் குரலினையும் அடைக்கச் செய்து, என் கண்களையும்  கலங்க செய்திருப்பதை உணர்ந்தேன்.
(தொடரும்...)