Sunday, December 29, 2019

இயற்கை சீற்றம்.

2004-ம் வருடத்திற்கு பிறகு எப்போதுமே ஒவ்வொரு வருட கடைசியான டிசம்பர் 26 ம் தேதி மறக்க முடியாத சுனாமி தினம். மக்கள் கண்மூடி அசந்திருந்த அந்த வேளையில், எத்தனை உயிர்களை  கடலரசன் அசுரத்தனமாக பெரும் பசி கொண்டு விழுங்கி ஏப்பம் விட்ட இந்த துக்க நாளை நாமெல்லோரும் அவ்வளவு சுலபத்தில் மறக்கவும் முடியாது.....!விதியை  மன்னிக்கவும் இயலாது.....! 

தற்சமயம் வந்த  கிரஹண செய்திகளை படித்து கேட்டுக் கொண்டிருக்கையில், "இந்த அதி அற்புத கிரஹணத்தால், வெள்ளம். மற்றும் இயற்கை சீற்றங்கள் வரும் என்ற பயம் உண்டாக்கும் வாட்சப் செய்திகளை நம்ப வேண்டாம்..!" என்பதாக ஒருவர் பேசினார். "மக்கள் ஏன் அத்தகைய பதட்டம் தரும் செய்திகளை பரப்ப வேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? இந்த மாதிரி எச்சரிக்கை செய்திகளை கேள்விப்பட்டதுமே பாதிக்கபட்ட மக்கள் மனதில் ஏற்கனவே பட்ட அவஸ்தைகளும்,வேதனைகளுந்தானே நினைவு வரும். என்றெல்லாம் சிந்தனை வந்தது. 

சுனாமி வந்த பின்பும் நிறைய முறை இதே பயமூட்டும் செய்திகள் உலா வந்தன. ஓரிரு சமயங்களில் "இன்று சுனாமி வந்தாலும் வரலாம்"  என்பதாக சொல்லி அரசு மக்களுக்கு பயனுள்ள வகையில் எச்சரிக்கை கொடுத்து கடலோரத்தில் இருக்கும் அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாத்தாலும், அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரு கலக்கமாகத்தானே இருந்திருக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பழைய நினைவுகள், பிறருக்கு அதை புதிதாக சந்திக்கும் பயம், கவலை, இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு,மேலும்  அதை பார்க்க ஆர்வம் என ஏகப்பட்ட கலவைகளுடன் மக்களின் சூழ்நிலைகள்  இருக்க, சீறிப்பாய்ந்து ஆர்வத்துடன்  வர இருந்த சுனாமி அலைகளும் சற்று அவ்வப்போது எச்சரிக்கையுடன்  பதுங்கிக் கொண்டதும் மிகவும் நல்லதற்கே...! 

அப்போது என் மனஅலைகளுடன் கடல் அலைகளுமாக எழு(திய)ந்தது இது. 


அலைகளின் ஏக்கம்.....ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் வந்து கரையை
ஆராய்ந்து பார்த்து விட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாகி  கொண்டன. 

என்ன இது?

ஏன் இந்த மாற்றம்?

அன்றாடம் தன் அழகை ரசிக்கவரும்
ஆயிரம் பேர்களில் இன்று
ஒருவர் கூட இல்லாமல்,
ஓய்ந்து இருக்கின்ற கடற்கரை,

சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே,
சூனியமான புல்வெளிதரைகள்,
ஆர்ப்பரிக்கும் தன் சத்தத்தையே சிறிது 
அமிழ்த்தி விடும் ஆரவாரக்கூச்சல்கள்,

எதுவுமின்றி ஏகாந்தநிலையில்

ஏன் இந்த மாற்றம் ?


தனக்கு தானே கேள்விகளை தொடுத்தபடி,
தளர்வின்றி மறுபடியும், மறுபடியும்
மண்ணில் முதல் நாள் பதிந்த
மனிதர்களின் காலடிதடத்தை
அழித்து விட்டு சென்றபடி இருந்தன
அந்த கடலலைகள்.

அதற்கு தெரியவில்லை !
அதனுள்ளிருக்கும் அடிமட்டத்திலிருந்து
அதிர்ந்து எழும்பும்
ராட்சத பேரலைகள்
ராப்பகல் என்ற பேதமின்றி
கரையை தொட்டு விட்டு
கடந்து விடும் எண்ணமின்றி
"சுனாமி" என்ற பெயரில் அனைத்தையும்
சுருட்டிக்கொண்டு போய்விடும் 
அந்த அவலச்செயல்களும்,
அதன் கொடூர தாண்டவங்களும்,
அதனின் விளைவால் நிகழ்ந்த
அகோரமான சோகங்களும்,
விடியலில் ஆரம்பித்த விபரீதங்களும்,
விபரீதத்தின் விளைவால் எழுந்த
விரக்திகளின் வலியையும்,
விளையாட்டாய் தினமும் வந்து போகும்
அந்த அலைகள் அறியவில்லை.

இன்றும் அந்த அவல ஓசையையும் அதன்
இறுதி அர்த்தத்தையும் உணர்ந்த
காவலர்களின் கட்டளைக்கு பணிந்து
கண்காணாமல் ஒழிந்திருந்த மக்களின்
கலக்கமும், மனப்பதட்டமும்
கடற்கரையை காலியாக்கி விட்ட
சோகம் புரியாமல் மீண்டும் மீண்டும் வந்து
சோர்வில்லாமல் கரையில் மனிதர்களை, 
தேய்ந்த  நிலவொளி வெளிச்சத்திலும்
தேடிப்போனது அந்த கடலலைகள்....

இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.🙏 🌑😎🌙Friday, December 20, 2019

வெண்டைக்காய் கூட்டு...

வெண்டைக்காய் பிட்லை... 
இது ஒரு விதம்.... 

கொஞ்சம் , முத்தல் இல்லாத ரொம்பவே  இளசுமில்லாத  (கொஞ்சம்  லேசாக குழப்புகிறேனோ.! ரொம்ப இளசாக இருந்தால் கொதிக்கும் போது  உடைந்து கரைந்து உருவமில்லாது போய் விடும்.அதுதான் நடுவாந்திரமாக அமைந்தால், தன் சுயஉருவத்துடன்  சாப்பிடும் போது அதன் சுவையும் தனியே தெரியும்.) வெண்டைக்காய் அரைக்கிலோ வாங்கி சுத்தமாக அலம்பி, (சுத்தமாக அலம்புகிறேன் பேர்வழியென்று தண்ணீரை அதிகமாக செலவழித்து விட வேண்டாம்.. இப்போதெல்லாம் தண்ணீர் வெண்டையை விட மிகவும் காஸ்ட்லி. ) துணியால் துடைத்துக் கொண்டு பின் பருமனாகவும் இல்லாமல், ஒரேடியாக பொடியதாகவும் வராமல் பார்த்து அரிந்து கொள்ளவும். (  "அடாடா .!! என்ன ஒரு புகழ்ச்சி .! வெண்டைக்கே "எனக்கு இவ்வளவு பில்டப்பா" என்ற நாணம் சிறிது வந்திருக்கும்.) 

ஒரு குக்கரில் சாதமும், (பின்னே பிட்லை பண்ணும் போது, சாதம் வேண்டாமா?இதை சூடான சாதத்தில் நெய் விட்டோ, இல்லை ந. எண்ணெய் விட்டோ சேர்த்து சாப்பிட்டால் தானே இந்த பிட்லைக்கே ஒரு பெருமை.  உடைத்த அரிசி உப்புமா, இட்லி, தோசைக்கும் இது பொருந்தி வரும்.) அதன் மேல் தட்டில் துவரம்பருப்பு கால் டம்ளரும், க. பருப்பு ஒரு கரண்டியும் சேர்த்து வைத்து வேகுமாறு ரெடி பண்ணிக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் சிறிது வேர்க்கடலை போட்டு கொஞ்சம் வறுத்து எடுத்து கொண்ட பின், நான்கு பருப்பும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு (து. ப, க. ப, பா. ப, உ. ப)  வெந்தயம் அரை ஸ்பூன், அவரவர்களுக்கு எவ்வளவு காரமோ அந்தளவிற்கு மி. வத்தலையும் எடுத்துக் கொள்ளவும். நான் ஒரு பத்து வத்தல் எடுத்திருப்பேன். (இது அவ்வளவாக காரமில்லாத நீட்டு வத்தல்.) 

 ஒரு ஏழெட்டு மிளகையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது அவரவர் விருப்பம். விருப்பமில்லாதவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மிளகு கபத்தை நீக்க வல்லது. ஜீரண சக்தியை கொடுப்பது. மருத்துவ குணம் வாய்ந்தவைதான் நம் அஞ்சறைப் பெட்டியில் (ஐந்து + அறை +பெட்டி) அமைதியாக அமர்ந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

அத்தனையும் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்தவுடன் அதே கடாயில், கறிவேப்பிலை பிரட்டி வைத்தவுடன் கொஞ்சம் துருவிய தேங்காய் லேசாக வறுத்து அதனுடன் சேர்த்து சற்று ஆற வைத்து கொள்ளவும். 

இடையில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை  ஆய்ந்து சுத்தபடுத்தி நன்றாக அலம்பி வைத்துக் கொள்ளவும். 

அந்த கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஒரு ஸ்பூன் உ. ப போட்டு வெடித்ததும், நறுக்கிய வெண்டையை போட்டு கொஞ்சம் வதக்கிய பின்  கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டு மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.  

அதற்குள் வறுத்த வேர் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த சாமான்களை போட்டு ஒரளவு நைசாக அரைத்து புளிவாசனை போன வெண்டைக்காயுடன் கலந்து பின்னர் வாசம் வரும்வரை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 

பின்பு வேர்க்கடலை பொடியை சிறிது தண்ணீருடன் கலந்து அதில் விடவும். வெந்த பருப்பையும், நன்கு மசித்து விட்ட பின் மேலும் ஐந்து நிமிடம் எல்லாமாக கலந்து கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதையும் சேர்க்கவும். கடைசியில் பச்சையாகவே சிறிது பெருங்காய பொடி அல்லது கட்டிப் பெருங்காயம்  பொடித்துப் போட்டு, சிறிது சிம்மில் வைத்து நன்கு கொதித்த வாசனை வந்ததும், பச்சையாகவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அந்த சூட்டில் தேங்காய் எண்ணெயின் வாசனை கலந்து கமகமக்கும்.


வறுத்த பருப்புகள். மி. வத்தலுடன் கறிவேப்பிலை சகிதமாக தட்டில் காத்திருக்கின்றன.


எண்ணெய்யில் கடுகுடன் வதங்கும் வெண்டைகாய்கள் தன்னுடன் இணையும், புளி ஜலத்திற்காக காத்திருக்கின்றன.


வென்னீரில், ஊற வைத்த புளி, புளிகரைசலாக மாற காத்திருக்கின்றன.


சுத்தப்படுத்தி, அரிந்து வைக்கப்பட்டிருக்கும் கொத்தமல்லி தழைகள் "நமது முறை எப்போதோ" என்ற சிந்தனையில் காத்திருக்கின்றன.


புளிஜலத்தில் மஞ்சள்தூள் உப்புடன் கொதித்த கொண்டிருக்கும் காய்கள் மேற்கொண்டு சொந்தம் கொண்டாட வரும்  அரைத்த மசாலா விழுதுக்காக காத்திருக்கின்றன.


வறுபட்ட வேதனையில் காத்திருக்கும் பருப்பு வகைகளுக்கு துணையாக நானும் வந்து விட்டேன் என்ற ஆறுதல் மொழிகள் பேசியபடி தேங்காய் துருவலும் காத்திருக்கின்றன.


வறுத்த வேர்கடலைகள் முன்னுரிமை பெற்ற சந்தோஷத்தில் மிக்ஸியில் காத்திருக்கின்றன.


முதலிலேயே "நீ குளித்து முடித்து புகழ் மாலை சூடி அலங்கரித்து வரும் முன்பிலிருந்தே நான் வெந்து, நொந்து அமர்ந்திருக்கிறேன் ." என்று வெண்டைகாய்களுடன் மானசீகமாக பேசியவாறு, சற்று கடுப்புடன் வெந்த பருப்புகள் காத்திருக்கின்றன.


" அதை இதை என சேர்த்து என்னை முழுமையாக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னமும் என்ன மீதமிருக்கிறதோ தெரியவில்லை.! என யோசித்தபடி கடாயில் கூட்டு தயாரிப்பான வெண்டை குழுமம் காத்திருக்கின்றன.


ஒரு வழியாக எல்லா பொருட்கள் சேர்ந்து ஒரு பெயர் கிடைத்த மகிழ்விலிருக்கும் "வெண்டைக்காய் கூட்டு/பிட்லை/" சந்தேகத்திற்கிடமின்றி நாம் சாப்பிட காத்திருக்கின்றன.

காத்திருப்பதில்தான் மகிழ்ச்சி வருகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் ஏதோ ஒன்றிற்காக காத்திருக்கிறோம். வரும் அதனை எதிர்பார்த்தபடி அனைத்தும்  நன்மைகளாக நடகக வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு காத்திருக்கிறோம்.

இதனை இந்த முறையில், இல்லை, வேறு விதமான முறையிலும் அனைவரும் செய்து ருசித்திருப்பீர்கள். எனினும்  இந்த பக்குவம்  உங்களுகெல்லாம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்து விட்டு, வரும் கருத்துகளுக்காக நானும் காத்திருக்கிறேன்.  நன்றி... 🙏... 

Saturday, December 14, 2019

நானும் எழுதுகோலும்...

             
          என்(னை) ஊன்று(ம்) கோலும் கூட.... 


பிறந்தவுடன் கண் திறந்தேன்! அரும் 
பிறவி இதுவென்று உணர்ந்தேன்!
தாயின் மாறாத அன்புடனே, 
தந்தையின் மாசற்ற அறிவையும் 
தடையின்றி சுவாசித்தேன்..!
அடைக்கலமும் இதுதானென்று
ஆத்ம திருப்தியுடன் 
அறிந்து கொண்டேன்..!

நிறங்களை நிமிடத்தில் 
கண்டு கொண்டேன்..!
நிதசர்சனங்கள் இவையெல்லாம் 
என உணர்ந்து கொண்டேன்..!
கானம் பலவும் காதுடன் கேட்டேன்!
காதிலும் தேன் பாயுமென 
புரிந்து கொண்டேன்!

பாடும் பறவைகளுடன் பறந்தேன்!
பக்குவமான மனம் அமைய பெற்றேன்!
பச்சைப் புல்வெளியைப் பார்த்தேன்!
பகைமையில்லா மனதுடன் 
பரவசமாகி போனேன்!
தெய்வங்களை தரிசித்தேன்!
தென்றலெனும் வாழ்வடைந்தேன்!

நீலவானம், இரவு வானத்தில் 
நீலமாணிக்கமாய் விண்மீன்கள்,
நீரின் அசைவுகள், அதில்
நீங்காது நீந்தும் மீன்கள்,
உதிக்கும் சூரியன், அதில்
உதயமாகும் பொழுது,
உயர்ந்த மலைகள், அதை
வருடும் அந்திச்செம்மை,
இரவின் இருள், அதன்
குரலாய் மெளனமான நிசப்தம்,
இருண்ட வானம், அதன்
வேராய் பெருமழை,
மரங்களுடன், மலர்கள், அதை
தழுவும் மதியின் அழகு,
மதிய வெயில், அதன் இறுதியாய்
மங்கிய மாலை வேளை,
அடர்ந்த காடு, அதை
அன்போடு குளிர்விக்கும் அருவி,
அழகிய சோலை, அதை
அலங்கரிப்பு செய்யும் மலர்கள்,

இவை அனைத்தும்,
அழகென்று உவகையுற்றேன்!
இயற்கை தந்த சீதனமென்றும்
தெரிந்து கொண்டேன்!   
அதிசயத்து, பலமுறை 
வியந்து நின்றேன்!
இது அற்புதமான உலகமென்றேன்! 
இன்னும் எத்தனையோ, 
படைப்பு கண்டேன்!
" படைத்தவனை"தவிர்த்து 
இப்படைப்பை உருவாக்க வேறு 
எவராலும் எளிதில்லை இது.. !
எனவும் புரிந்து கொண்டேன்!

அள்ளக் குறையாத
பல பல மொழிகள்
பயிலவும் நினைத்தேன்! 
ஆயினும் அருமையான தமிழ் மொழி பால்
ஆசையுடன், அளவிற்கடங்காத 
காதலும் கொண்டேன்!

காட்சிகளின் தாக்கங்கள்,
கனவிலும் வந்து களிநடனம் புரிய,
கண் விரட்டும் உறக்கத்தையும்,
களைந்தெறிந்து, கற்பனை உலகில் 
காலமெல்லாம் மிதந்திருந்தேன்!

கண்ணில் கண்டதை கவி பாடினேன்!
கதைகள் புனைந்து களிப்புற்றேன்!
காகிதத்தில் அதை பதித்து வைத்து,
கருத்துக்ளுக்கு காத்திருந்தேன்!
கசடுகள் நிறைந்த கவியென்றும்,
கட்டுக்கதைகள் இவையென்றும்,
கசப்புடன் காலம் சொல்லிச் செல்ல,
கனமான மனதுடன் உடல் நொந்தேன்!

இத்தனை பார்த்தும், ரசித்தும்,
இன்னும் ஏகமாய், ரசித்துப்
பார்க்க நினைத்தும், நான்
மறந்து போனது ஒன்றுதான்! மற்ற,
மனிதரின் மனதை ரசிக்கவில்லை!
மமதையில்லா உள்ளம் பெறவில்லை!
மகிழ்ச்சியில், மனமது நிறைந்திட, அவர்தம்
மனவியல் படிக்கத் தவறி விட்டேன்!

எது எப்படியாயினும், இன்று வரை,
என்னுடன் உறவாடும் எழுதுகோல், என்
உறவை பிரிய மனமின்றி, தன்
உயிரையும் எனக்கு தந்தபடி, "உன்
உற்றத் தோழனாய் நானிருக்க,
உவகையான,உள்ளத்துடன்,
உன் உதிரம் உலர்ந்து போகும் வரை.
உலகில்  நீ ரசித்ததை எல்லாம்
உண்மையுடன் உணர்த்தி விடு! அது
உன்னதமாகும் ஒரு நாளில்!!" என்றது!

அது அன்புடன் சொன்னதில்,
அகம் குளிர்ந்து, ஆசையாய்,
அதை அரவணைத்து, என் மனதின்
ஆறா தழும்பையும், ஆற வைக்க,"என்
ஆறாம் விரலாய் நீ இரு.. !!" 
என யாசித்தேன்.  

ஆறுதலாகவே அது"அவ்விதமே
ஆகட்டும்" என அனுகிரஹித்து"என்
ஆயுள் பரியந்தம்  உன்னுடன்
ஆதர்சமாக வாழ்வேன்" என்றது. 

இது மீள் பதிவு என்றாலும், சில திருத்தங்களுடன் ஏதோ ஒரு மனத்திருப்திக்காக மறுபடியும்.... 
படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .🙏. 

Thursday, December 5, 2019

நான் ரசித்த அழகிய காட்சிகள்.


அழகானர்ள்.

கதிரவனால் களையான வானம்.
 என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று "வலை" க்குள் வேறு  மேகப் பொதிகளை  தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்ட அழகான வானம்.

"இதற்கு மேல் இடமில்லை. இனியும் பிடி"வாதம்"பிடித்தால் உனக்குத்தான் சேதம்...!" என்று எச்சரிக்கிறதோ இந்த பாத்திரம்.


நீர் ததும்ப ததும்ப இருந்த இந்த தூக்கு வாளியைப் பார்த்ததும், தண்ணீரை லாரியில் கொண்டு வந்து விடும் போது காசு கொடுத்து வாங்கி பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்திய தண்ணீர் கஸ்டங்கள் நினைவுக்கு வரவே அது எச்சரிப்பது போல் ஒரு புகைப்படம்.


பொதுவாக மூன்றாம் பிறை பார்ப்பது நல்லதென்று கூறுவர். (அரிதானதும் கூட..  ஆனால் நாலாம் பிறை நம் கண்களுக்கு பளிச்சென்று தெரியும். (நாலாம் பிறையை பார்த்தால் நாய் படும் பாடு என்பது ஒரு பழமொழி..) இந்த தடவை கார்த்திகை மூன்றாம் பிறையன்று கொஞ்சம் மேகங்கள் கலைந்து, கலைந்து இடம் விலகி "பிறை என்னை சீக்கிரம் படம் எடுத்துக் கொள்" என்றது.

அதுவும் இந்த கார்த்திகை மாதம்  சகோதரி அதிரா அவர்கள்"கார்த்திகைப் பிறை" என்ற பட்டத்தை சுமந்து கொண்டு "கார்த்திகை பிறையை" அடிக்கடி நினைவூட்டவே, அவசரமாக எடுத்த படங்கள் இது.. அன்று அந்த நேரத்தில் இந்த "பிறை" படங்களை நான் வளைத்து வளைத்து எடுக்கும் போது சகோதரி அதிரா அவர்களுக்கு கண்டிப்பாக  "பொறை" ஏறியிருக்கும்..( உண்மைதானே சகோதரி..!)

இதை எழுதி வைத்து மூன்று தினங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஏதோ நேரமின்மைகள் காரணமாக வெளியிடவில்லை. ஆனால், அதற்குள் நான் நினைத்தது போல், அழகிய பிறையாக இருந்தவர், அன்னக்கிளியாக மாறி விட்டார். ஹா. ஹா. ஹா.
"இது ஒரு பொன் மாலைப்பொழுது.."
வானமகள் நாணுகிறாள்..
வேறு உடை பூணுகிறாள்..
வானம் எனக்கொரு போதி மரம்..
நாளும் எனக்கது சேதி தரும்."  என்ற அருமையான பாடல் என் மனதிற்குள் ஓடுகிறது.

ஒரு மாறுதலுக்காக நான் பகிர்ந்த எல்லாவற்றையும் நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
ரசித்த/ரசிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... 🙏....