Showing posts with label கொத்தமல்லி அடை. Show all posts
Showing posts with label கொத்தமல்லி அடை. Show all posts

Thursday, March 15, 2018

கொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.


ஒரு டம்ளர் இட்லி அரிசி, ஒரு டம்ளர் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு இவை நான்கையும் அரை டம்ளர் வீதம் எடுத்துக் கொள்ளவும். இதில் உளுத்தம் பருப்பை மட்டும் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளவும். அரிசிகள், பருப்புகள் இவையை தனியாக அலம்பி ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
................. 



ஊற வைத்த அரிசிகளுடன் கீழே குறிப்பிட்டுள்ள காரங்களை (அவரவர் ருசிகேற்ப கூட குறைத்து)  கறிவேப்பிலை,உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக (சின்ன  ஆட்டுரல்) மிக்ஸியிலோஅல்லது (பெரிய ஆட்டுரல்) கிரைண்டரிலோ அரைத்து எடுக்கவும்.  
................. 




பின்னர் ஊறிய பருப்பு வகைகளை கொஞ்சம் நைசாக அரைத்து இரண்டையும் கலந்து வைக்கவும். கலந்து வைத்த மாவிரண்டும் உப்பு காரம் சேர்ந்து கை குலுக்கி கலந்து கொண்டிருக்கட்டும். 
............... 



அதற்குள் நான்கு  பெரிய வெங்காயத்தை அலம்பி விட்டு கீழே படத்திலுள்ளதை மாதிரி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
............... 


அத்துடன் கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 
............... 


இவ்விரண்டையும்  சின்ன ஆட்டுரலிலேயே போட்டு நைசாக அரைக்கவும். 
................. 


இந்த அரைத்த விழுதை கை குலுக்கி சமரசமாகியிருக்கும் அடை மாவுடன் கலக்கி வைக்கவும். 
.................. 



பத்து பதினைந்து நிமிடங்கள் இதற்கு சைடிஸ் என்ன செய்யலாம் என யோசிக்கும்  வேளையில், மனசு வெல்லமே போதும் என தீர்மானிக்க,  அடைக்கு வெல்லம் மட்டுந்தானா?  என நாக்கு  அதிகப்பிரசங்தனமாக கேள்வி கேட்டு உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க முடிவு செய்ய, அதன் முடிவைக் கண்ட உள் மனது "அவியல் குழம்பை ரெடி செய்'
 பதிவிலும்  போடலாம்"   என  கூக்குரலிட கைகள் தாமாகவே கேரட், பீன்ஸ் முருங்கைக்காய் கோவைக்காய் உருளைக்கிழங்கு  தேங்காய் என      
 கு.சா. பெட்டியில்  உள்ளதை தேர்வு செய்து சுத்தப்படுத்தி நறுக்கி குக்கரில் வேக வைத்து  விசில் விட்டதும் வாணலியிலும்  மாற்றி விட்டது. 
................. 



அதற்கு தேவையான தேங்காய் பச்சை மிளகாய்  கொஞ்சம்  வர மிளகாய்  கறிவேப்பிலை எடுத்துக் கொண்டு,  சி.  ஆட்டுரலில்  போட்டு நைசாக அரைத்துக் கொண்டு  விடவும். 
..................... 



அரைத்த விழுதை வாணலியில் காத்திருக்கும் காய்களுடன் தேவையான அளவு உப்பும், ஓரிரு சிட்டிகை  மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  
............... 


அது சேர்ந்து கொதித்து வரும் போது கெட்டியான சற்றே புளித்த மோரை சேர்க்க வேண்டும். 
................ 


அதுவும் சற்றே ஒரு சேர  கொதித்து வந்ததும் அரிசி மாவு கரைசலை விட்டு அடுப்பை சிம்மில் எரிய வைத்து ஐந்து நிமிடத்திற்கு பின்னர் ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். 
.................... 


இப்போது அவியல் குழம்பு என்ற பெயரில் ஜனனமெடுத்து வாணலியிலிருந்து பாத்திரத்தில் மாறி அடைகளுக்காக தவம் இருக்கும் வஸ்தாகிய அவியல் குழம்பு.. 
................ 



நாங்கள் மூவரும்  சேர்ந்து  தயார் நிலையில் இருக்கிறோம்.  நீங்க ஏன் இப்படி .. ?  இப்படியே  க்ளிக்கி கொண்டேயிருக்க உத்தேசமா? என முறைப்புடன் கேட்க ஆரம்பித்த மாவு. .. 
............... 



 அதனால் அவசரமாக அடைக்கல்லை அடுப்பிலேற்றி  தேங்காய்  எண்ணெய்யுடன் நல்லெண்ணெயும் கலந்து வைத்துக் கொண்டு அடைகள்  சுட மெளனமாக மாவு சம்மதித்ததின் விளைவாய் சுடச்சுட உருவாகிய அடைகள்.......   
............... 
                                      

அதில் இடமில்லையென்று  மற்றொரு தட்டில் ஏறி இடம் பிடித்து வாய்க்குள் பயணிக்க காத்திருக்கும் அட்டைகள்.... 
................... 

                    ஸ்... ஸ்.... ஸ்..... அப்பாடா.......              
                            நாங்கள்  ரெடிப்பா........  
............... 
                                      

நாங்க மட்டும் என்னவாம்? 
நாங்களுந்தான் உங்களுக்கும் முன்பே முதலிலேயே ஆஜர்........
......................  


சண்டைகள் எதற்கு?  நாமும் சாப்பிட ரெடியாகி விடலாமே.