Showing posts with label நற் குணங்கள். Show all posts
Showing posts with label நற் குணங்கள். Show all posts

Saturday, February 17, 2018

நற்குணங்கள் . 3 கர்வமில்லா மனது.




இறைவன் மனிதருக்கு அளித்திருக்கும் பகுத்தறிவுகளில் ஒன்று புத்திசாலித்தனம். இதை மனிதர்கள் எதற்கும் மிகவும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டாலும், இயல்பாகவே மனிதருடன் தங்கியிருக்கும் வஞ்கசம், சூழ்ச்சி பொறாமை கோபம் என்ற கெட்ட இயல்புகள் சற்று மிகுதியாக தலையெடுக்கும் நேரம் இந்த புத்திசாலித்தனம் காணாமல் போய் அவர்கள் பாதி விலங்காகி விடுகிறார்கள், சிறிது நேரத்திலோ , சில நாட்களிலோ இத்தகைய துர்குணங்கள் விலகி சாதரணமான பின்,” ஐயோ! பொறாமையில்கோபத்தில். இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொண்டு விட்டோமே! என்று வருந்தும் அந்த நேரம் அந்த புத்திசாலித்தனம் மனிதரிடம் மறுபடி சரணடைந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் செய்த பிழை எத்தனை இன்னல்களை பிறருக்குள் விதைத்து அறுவடை செய்து விட்டிருக்கும். அதன் பலன்களை அனுபவித்தவர்கள் வாழ்வும், மனமும் எவ்வளவு துன்பங்களை சுமந்திருக்கும் என்பதனை தீயகுணங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு, இறைவன் தந்த பகுத்தறிவை  மட்டும்  பயன்படுத்தி சிந்தித்தால் புரியும்.

அதே போல் அந்த திறமை (புத்திசாலித்தனம்) நம்மிடம் நிறைய உள்ளது. அதனால் நம்மை போன்றவர்கள் எவருமில்லை என ஆணவப் படும் போதும் கர்வமென்ற அந்த குணம் அளவுக்கதிகமாக மனதில் இடம் பிடித்து திறமையென வளர்ந்திருக்கும் அந்த விருட்சத்தின் வேர்களை சுலபமாய் தின்று நம்மை வேரில்லா மரமாக்கி பலமில்லா மனிதனாக கீழே சாய்க்கிறது. அதனால் நம்மால் முடிந்த அளவு அந்த கர்வமற்ற மனதை நமதாக்கிக் கொண்டால் செல்லும் இடமெல்லாம் நம்முள் நிறைந்திருக்கும் புத்திசாலிதனமெனும் ஆற்றலை பயன்படுத்தி நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை தினம் ஒரு வெற்றியாக்கி  வாழலாம் இல்லையா.? இதனால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் எல்லாவித பெருமைகளும் நம்மை கேட்காமலேயே  குவியும், ஒரே ஒரு கெட்டதை நீக்கினால் பல நல்ல குணங்களும் பல நல்ல விசயங்களும் நம்மைச் சுற்றியபடியே  நடமாடிக் கொண்டிருக்கும் அல்லவா.?

ஒரு கதை..

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் போரின் வெற்றிக்காக சிவபெருமானை வேண்டி தவமிருந்து பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக தவம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்பட்டான். போகும் வழியில் தன் ரதத்திலிருந்தபடியே காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டே ராமேசுவரம் சென்றடைந்தான். அங்கு கடலில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தன்கடமைகளை முடித்துக் கொண்டவனாய் அங்கிருந்து கிளம்பும் போது அருகிலிருந்த மலையில், ராம பக்த ஹனுமான் ராம, ராம, என்னும் பெயரை பயபக்தியுடன் உச்சரித்த வண்ணம்  தவம் செய்து கொண்டிருந்ததைக்கண்டு அருகில் சென்றுஏய் கிழக் குரங்கே! நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்.? என்றான் அலட்சியமாக.

ஹனுமான் தன் நிலை கலைந்து, அர்சுனனை ஏறிட்டு பார்த்து, அமைதியுடன், “அப்பா, என் பெயர் ஆஞ்சனேயன்! நான் வாயு புத்திரன்.  கடலில்  கற்களாலேயே பாலம் அமைத்து இராவணனை வென்ற என் அய்யன் ஸ்ரீராமனின் அடிமை.!  என்றான் அன்போடு.
இப்படி ராமனை பெருமையாக அறிமுகப்படுத்தியதை கேட்ட அர்சுனன் கேலியான குரலில்,  உன் ராமன் கற்களாலேயே பாலம் அமைத்ததற்கு பதிலாக தன் முயற்சியினால் வில்லினால் பாலம் அமைத்து சேதுவை கடந்திருக்கலாமே!  அவரும் என்னைப் போல் வில் வித்தையில் சிறந்தவர் இல்லையா.? என்றான் கர்வம் கலந்த ஏளனமான குரலில்.

தன்னை அவமானமாக என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ளும் குணமுடைய அனுமனுக்கு தன்னுயிர் ராமனை கேலியாக பேசியது  கோபத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் பொறுமையாக, வில்லினால் உண்டாக்கும் அம்பு பாலங்கள் என்னைப் போன்ற குரங்கினங்கள் ஏறிச் சென்று சேதுவை கடப்பதற்குள் அவை கடலில் மூழ்கி விடும்,. அதனால் என்னய்யன் ராமசந்திர பிரபு கற்களாலேயே பாலம் அமைத்தார். நீ என்ன என் ராமபிரானை விட சிறந்த வில் வித்தை கற்றவனா?என்றான் சற்றே கோபமாகஅனுமன்.

அர்சுனனின் கர்வம் ௬டியது. சிரித்துக் கொண்டே, “நான் யார் தெரியுமா? வில்லுக்கு விஜயன் என பெயர் எடுத்தவன். நன்றாக வில் வித்தை கற்றவன் தான் நினைக்கும் வண்ணம் எதையும் செய்து முடிக்கும் திறமை இல்லையென்றால் அவன் வில்வித்தை கற்றதலினால் என்ன பயன்? சரி! இப்போது பார்கிறாயா? இந்த கடலில் உன் பார்வை படவே வில்லினை தொடுத்து அம்புகளினால் ஒரு பாலம் அமைக்கிறேன். எங்கே, உன் பலம் கொண்டு குதித்தோ, ஆடியோ அதை உடைந்தெறிந்து விடு பார்க்கலாம்.! என்றான் கர்வமாக.

அனுமனும் இளநகையுடன், “நீ அம்புகளினால் கட்டும் பாலத்தில் நான் ஏறி நின்றதுமே உடைந்து நொறுங்கி விட்டால் என்ன செய்வாய்? ஏன் என் கால் கட்டை விரலால் அழுத்தியதுமே உன் பாலம் நீரில் மூழ்கி விடுமே.! அப்போது என்ன செய்வாய்?” என்றான்.

அப்படி நான் கட்டும் பாலத்தை நீ உடைத்து விட்டால், நான் அடுத்த நொடி இதே இடத்தில் அக்கினியை வளர்த்து , அக்கினிப் பிரேவசம் செய்து என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். இது சத்தியம். அவ்வாறே அம்பு பாலம் கடலில் மூழ்காமலிருந்தால், பதிலுக்கு பந்தயமாக நீ என்ன செய்வாய் சொல். !’ என்றான் அர்சுனன்

அர்ஜுனா, நீ உருவாக்கும் அம்பு பாலத்தை என் கால் கட்டை விரலினால் கடலில் மூழ்கச் செய்வேன். அப்படி நடக்க வில்லையென்றால், உன் ரதத்தின் கொடியிலிருந்து கொண்டு போரில் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன். இதுவும் உறுதி!” என்றான் அனுமன்.

அனுமன் எதிர்பார்த்ததை விட அழகான பாலத்தை கட்டுவேன் என மனதில் உறுதி பூண்ட அர்ஜுனன், தன் காண்டிபம் என்ற வில்லினை ஏந்தி அம்புகளை சரமாரியாகத் தொடுத்து எழில்மிக்க ஒருபாலத்தை உருவாக்கினான். பின் பெருமையுடன் அனுமனை நோக்கி, இப்போது இப் பாலத்தின் உறுதியை நீ எப்படி வே்டுமானாலும் பரிட்சித்துப் பார்த்துக் கொள். எனறான் கர்வமான  குரலில்.

அனுமன் தன் மனதில் ராமனை நமஸ்கரித்தபடி, “ராமா, நான் என்றும் உன் அடிமை.! இனி உன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்.” என்றவாறு, ராம, ராம, என்று ஸ்மரித்தவாறு, கடலில் நூறு யோசனை தூரம் அர்ஜுனன் கட்டியிருந்த பாலத்தின் ஒரு நுனியை தன் கால் கட்டை விரலால் லேசாக ஒரு அழுத்து அழுத்தினார். அவர் அப்படிச் செய்ய வேண்டுமென காத்திருந்த மாதிரி  அந்த அம்புகளால் ஆன பாலlpம். பொலபொலவென உதிர்ந்து கடலுக்குள் போயின.

அதைப் பார்த்த வீராதி வீரனான அர்ஜுனனுக்கு அவமானத்தால் எண் சாண் உடம்பும் கூனிக்குறுக, திகைத்து மனம் சோர்ந்தான். சபதத்தின்படி அவன் தான் இறக்க நேரிடுமே என கவலையுறவில்லை!. பாசுபத அஸ்திரத்தை பெற வேண்டி தவம் செய்ய புறப்பட்டுச் சென்ற தன்னைக் காணாது தன் சகோதரர்கள் தேடி அலைவார்களே. !என்னுடைய இந்த முடிவை யார் சென்று அவர்களுக்கு தெரிவிப்பார்கள்?  ஐயோ! வந்த இடத்தில் தன் செருக்கினால். இப்படி ஒரு சம்பவம் நிகழ தான் காரணமாகி விட்டோமே.! என்றெல்லாம் நினைத்து வேதனையுற்றான்.

இந்த ஆணவம் என்பது ஒருமனிதனை இப்படித்தான் சீரழித்து விடும். ஒரு மனிதன்  எவ்வளவு புத்திசாலிதனமாக, பலவானாக, மேதையாக, போற்றப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதிக கர்வமும் செருக்கும் அவனுக்கு வரும் சமயம், அவன் அறிந்த நல்லவிஷயங்களை, அவனுடைய சமயோசித்த அறிவை முடக்கி அவன் கண்களுக்கு மாயத்திரையிட்டு, அவன் அறியாமலே அவன் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டுச் செல்லும். இதுதான் இந்த கர்வத்தின் உண்மை ஸ்வரூபம். எந்நாளும் இது சாத்தியமில்லை எனினும் கர்வம் தலை ஏறாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை அர்ஜுனன் மாமனிதன். இறைவனின் அன்பை, அருகாமையை பெற்றவன். அவன் கதியே இவ்வாறெனில், சராசரி மனிதர்களின் நிலை நினைத்துக் ௬ட பார்க்கமுடியவில்லை.

அர்ஜுனன் தன் சபதபடி அக்னியை மூட்டி அக்னிப் பிரேவசத்திற்கு சித்தமானான். அனுமனும் மனம் இரக்கமுற்றவனாய், வேண்டாமென எத்தனையோ ௬றி தடுக்கப் பார்த்தான். அர்ஜுனன் தன் கடைசி நிமிடத்தில் தன் நணபனும், வழிகாட்டியுமான கிருஷ்ணனை நினைத்தபடி, இப்படி ஆகுமென்று நான் சிறிதும் நினைக்கவில்லையே.! இனி நீதான் என் சகோதரர்களை முன்னின்று காத்தருள வேண்டும் என்று மனமுருக நினைத்தபடி அக்னியை வலம் வரும் சமயம், அந்த மாயக்கிருஷ்ணன் தன்னுருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மசாரி வேடத்தில் அங்கு தோன்றி யார் அது? அர்ஜுனன் மாதிரி தெரிகிறதே.! ஏனப்பா உனக்கு என்ன பிரச்சனை.! ஏன் அக்னி பிரேவசம் செய்யதுணிகிறாய்? என்று ஒனறுமறியாதவர் போல் வினவ, அர்ஜுனனும், ஆதரவாக கேட்ட அவரிடம் நடந்ததை விவரித்தான்.

கிருஷ்ணனும், முகபாவத்தை பாவமாக வைத்துக் கொண்டபடி, “ஐயோ.! அர்ஜுனாஉன் நிலைமை இப்படி ஆகி விட்டதே.! ஆனால் யாருமில்லாத இடத்தில் நீஙகளிருவரும் நடத்திய போட்டியில் ஒரு நியாயம் இல்லையே.! போட்டி என்றால் ஒரு நடுவர் இருந்து அவர் கண்காணித்து தீர்ப்பு  சொன்னாலன்றோ, அது போட்டியாகும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் நடுவராக இருக்கிறேன். மறுபடி போட்டியை நடத்துங்கள். யாருக்கு வெற்றி தோல்வியென நான் முடிவு ௬றுகிறேன். எனவும், அவர் சொல்லுக்கு மறுத்து ௬ற இயலாது, அவருக்கு கட்டுண்டவர்களாக இருவரும் மறுபடி போட்டிக்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த முறை கண்ணனை மனதினில் நினைத்துக்கொண்டு அர்ஜுனன் அம்புகளை  கொண்டு பாலத்தை அழகுடன்  விரைவாக கட்டி முடிக்க, சென்ற தடவை பெற்ற வெற்றிக்களிப்பில், தன்னால் முடியாதது என்ன இருக்கிறது ? என்பது போல், அனுமன் கால் பெருவிரலினால் பாலத்தின் மீது அழுத்த , பலன் ஏதுமின்றி பாலம் உடையாது போகவே, பாலத்தின் மீது ஏறி நின்று குதித்தும் தன் பலம் கொண்ட கைகளினால் ஆட்டியும் பார்த்து பின் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட மனதினராய் கீழிறங்கினார்.

அப்போது பிரம்மசாரியாக வந்த  கிருஷ்ணன் தன்னுருவை கிருஷ்ணனாகவே மாற்றிக்கொண்டு , "அர்சுனா நீ  முதல் முறை என்னை நினைக்காது உன் முபற்சியினால்  மட்டும் வென்று  விடலாம்  என்றுஎண்ணினாய் உன்னுள்ளிருந்து உன்னை ஆட்டுவிப்பவன் ""நான்'' என்பதை  நீ மறந்ததினால் திறமையுடன் உன் வில்லிருந்து அம்புகள் புறப்பட்டு  பாலத்தைச் சிறப்பாக கட்டியும், தோல்வியைத் தழுவினாய்!  அதே சமயம்  மறுமுறை நீ என் மீது வைத்த நமபிக்கையினால்,  என்னை நம்பி நீ உருவாக்கிய பாலத்தை அனுமனால் அசைக்கக் கூட இயலாமல் செய்து விட்டது. உன் சிறிது நேர கர்வம் உன் உயிருக்கே  பங்கம் விளைவிக்கக்கூடிய செயலாகி விட்டது பார்த்தாயா பார்த்திபா''  என அன்புடன் கேட்கவும், " உண்மைதான் பரந்தாமா! கணநேரம் என் செருக்கு கூடியதால்  நடக்க கூடாததெல்லாம் நடந்து விட்டது. என்னை மன்னித்தருளுங்கள் மாதவா!'' என அர்ஜுனன் மனப்பூர்வமாக மண்டியிட்டு வணங்கினான். 


தோல்வியால் துவண்டிருந்த அனுமானை நோக்கிய கிருஷ்ணன் புன்னைகைத்தபடி அனுமனின் அருகில் சென்று  அவர் தோள்களை பற்றி அணைத்தவாறு ," ஆஞ்சனேயா! இன்னுமா நீ என்னை அறியவில்லை! நான்தான் உன் ராமன்!" என்றபடி ராமராக வில் ஏந்திய கோலத்தில் காட்சி தரவும், "அண்ணலே" என்றபடி அனுமன் அவர் கால்களில் விழுந்தார்.

அவரை தூக்கி நிறுத்திய கிருஷணன்," ஆஞ்சனேயா! திரேதா யுகத்தில் என் அவதாரம் முடிவற்ற நிலையில் நீ என்னிடம் கேட்டாய் !"பிரபோ ! நெஞ்சிலேயே சுமந்து கொண்டிருக்கும் தங்களை மறுபடி எப்போது காண்பேன்!? அந்த பாக்கியம் என்று நடக்கும்? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி வருந்தினாய் ! மறுபடி அதர்மம் தலைதூக்கும் பொழுதில் துவாபர யுகத்தில் கண்ணனாக பிறப்பேன். அப்போது ஒரு சந்தர்பத்தில் எனனை தரிசிக்கும் பாக்கியம் உளக்கு கிடைக்கும் என உன்னிடம் கூறினேன் நினைவிருக்கிறதா ? அர்சுனன் கட்டிய பாலத்தை தகர்த்தெறியும் போது நீ என்னிடம் உன் செய்கையின் பொறுப்பை ஒப்படைத்தாய். அதனால் உன் கால் விரல் பட்டதுமே பாலம் பொலபொலவென உதிர்ந்து போனது. மறுமுறை உன் செய்கையை மட்டும் நினைத்தபடி என்னை மறந்தததினால், உன் பலம் அவ்விடத்தில் செயலற்று போயிற்று. உன் பலமே நான்தான். நான் அனைத்துமானவன் சகல உயிர்களுக்குள்ளும் நான் அடக்கமானவன். நானே ராமன். நானே கிருஷணனுமாவேன். என்ற கிருஷ்ணன் மாறி மாறி இரு அவதாரங்களையும் மெய்பித்து காட்சி தந்திட, அனுமனும் அர்சுனனும் போற்றித் தொழுதனர்.

அனுமனும் மஹா பாரத போரில் தன் வாக்கின்படி அர்சுனனின் தேரில் இருந்த கொடியில் இருந்தபடி அவனுக்கு உதவிகள் புரிந்து போரில் ஜெயமடைய வைத்தார். அனுமன் கொடியில் இருந்தால் அர்சுனனுக்கு வீழ்ச்சியடையா வெற்றிகள் தேடி வருமென்பதற்காகவே, கிருஷனன் நடத்திய நாடகங்களில் இதுவும் ஒன்று... அனுமன் கொடியில் இருந்ததினால், அனுமன் கொடியுடையவன் என்ற பேரும் புகழும் பெற்றான் அர்சுனன்.

இவ்வாறு சிறு கர்வத்தினால்,. இறையம்சம் பெற்றவருக்கும். இறைவனுக்கு நெருக்கமானவருக்குமே திறமைகள் இருந்தும் செய்யும் செயல்களில் தடுமாற்றங்கள் நிகழ்ந்த போது, சாதாரண  மனிதர்களாகிய நாம் கர்வமோ. ஆணவமோ அடைந்தால் என்ன ஆகும் என்பதை  உணர வேண்டும் . எனவே எபபோதும் தன்னடக்கத்துடன்  பணியாற்ற இறைவன் பூரண நல்லாசிகளை நமக்கு எந்நாளும் வழங்க வேண்டும்.
ஒருபோதும் படைத்தவனை மறவா பக்குவத்தை பெறுவோமாக.......