Thursday, April 30, 2020

சிகப்பு பூசணியும், சில கதைகளும்.

பறங்கிக்காய் ..


வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று சிகப்பு பூசணி

இதன் மருத்துவ குணங்கள்.

 இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ.,ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
நன்றி  ஆ. விகடன்.

இது நிறைய நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தையும் உள்ளடக்கியது. உச்சி முதல் உள்ளங்கால் வரை  அனைத்திற்கும் நலம் பயக்கும் வண்ணம் இதன் பயன்கள் சிறந்து விளங்குகிறது.

இந்தப் பூசணியில் அந்தக்காலத்தில் தோல் நீக்கி, உள்ளிருக்கும் விதைகள்அடங்கிய பகுதியை நீக்கி, கெட்டியான காய் பகுதியை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் சற்றும் யோசிக்காமல் அருகிலிருக்கும் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அற்புத உணவாக போகும். இல்லையென்றால் , குப்பைகளோடு மக்கி சிறந்த உரமாகிப் போகும்.

இந்த இடத்தில் அனைவருமே அறிந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தடவை விதுரர் இல்லத்திற்கு அவரைக் காண சென்ற போது, வந்த கிருஷ்ணரை அன்போடு வரவேற்று, அவருக்கு உண்ண வாழைப் பழங்களை விதுரர் உரித்து கொடுக்கலானார். கிருஷ்ணரின் அழகில், அவருடைய தேஜஸில் மெய்மறந்து அவருடன் பேசிக்கொண்டே உரித்தப் பழங்களை கீழே போட்டு விட்டு  வெறும் தோலை மட்டும் கொடுக்க கிருஷ்ணரும் அதை அமிர்தமாய் உண்ணவே, ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து கண்ணீர் பெருகியோட விதுரர் மன்னிப்பு கேட்டதும், கிருஷ்ணர், "இதற்கெல்லாம் வருத்ப்படுகிறீர்களே..! கோகுலத்தில் வளர்ந்த போது, தாய் யசோதை பழங்களை எங்களுக்கு கொடுத்து விட்டு அதன் தோல்களை எங்கள் ஆவினங்களுக்கு கொடுக்க, அது சுவைத்து உண்ணும் போது  எனக்கும் அந்த தோல்களின்பால் மிகவும் ஆசை உண்டாயிற்று. ஒருநாளேனும் இப்படி தோல்களை மட்டும் சாப்பிடும் ஆசையை கட்டுக்குள் வைந்திருந்தேன். இன்றுதான் அந்த  ஆசையும் உங்களால் நிறைவேறியது."என்றாராம்.

அப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தோல்களை சாப்பிட்டிருக்கும் போது, நாமெல்லாம் சாப்பிட கூடாதா என்ற எண்ணம் எவரோ ஒருவருக்கு வந்ததும் இந்த பூசணி தோல்களின் மகத்துவமும், அதனுள் இருக்கும். A. to. Z  சக்திகளும், என் புத்தியிலும்  பரவி விடவே அன்றிலிருந்து நானும்  தோல்களை கால்நடைகளுக்கு தருவதில்லை. இரண்டாவதாக கால்நடைகளும், நான் சென்னை வந்த பின் வீட்டிற்கு அருகில் கூப்பிடு(ம்) தூரத்தில்  கண்களுக்கு தென்படவுமில்லை.

அம்மா வீட்டில் இருந்த போது அருகில் ஒருவர் நிறைய ஆவினங்களை வளர்த்து வந்தார். அந்த ஆவினங்களுக்குதான், எங்கள் வீட்டிலிருந்து, தினமும் அரிசி அலம்பிய கழனி, சாதம் வடித்த கஞ்சி, சற்று சேதமாகும்  பழங்கள்,காய்கறிகள், இந்த காய்கறிகளின் தோல்கள் என  சத்துக்கள் பலவும் தானமாக போகும். பதிலுக்கு வாசல் தெளிக்க எச்சிலிட என பசுவின் சாணம் எங்களுக்கு பண்டமாற்றாக கிடைக்கும்..

சென்னை வந்த பின் வாடகைக்கு இருந்த ஒட்டு குடித்தனத்தில், ஆவினங்களை  கண்ணில் காணாது, நீரிலிருந்து   வடித்த சாதங்கள் என்று பிரிக்காமல், அரிசி வானெலி குக்கரில் கலவையாக சாதமாக,  (அப்போதுதான் வெங்கலப்பானையில் சாதம் தவிர்த்து, வானெலி குக்கரில் சாதம் வைத்து சாப்பிட்டேன்.) அரிசி அலம்பிய நீரை, "கோகுலத்து பசுக்களா ... ஓடி வந்து குடியுங்கோ.. " என்று என் பாட்டி சொல்லித் தந்த முறையில் சொல்லி பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதில் சமையல் செய்த பாத்திரங்களை முதலில்  கழுவ வைத்துக் கொண்டு, (எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு) வாழ்க்கையை ஓட்டி விட்டாகி விட்டது.

அப்போது இந்த காய்கறிகளின் (சவ், சவ், சிகப்பு பூசணி பீர்க்கங்காய் ,) தோல்களும் , சுவையான உணவாகிப் போயின.( ஆனால் என்னைப் போன்றவர்களின் சேவைகளினால்தான் ஆவினங்கள் பிளாஸ்டிக் கவர்களின் மேல் நாட்டம் கொண்டு விட்டது என எவரேனும் குற்றம் கூறி விடாதீர்கள். ஹா. ஹா. ஹா.)

சரி.. நாம் இப்போது நம்மினங்களுக்கு இந்த பறங்கியின்  முழு உபகாரத்தைப் பற்றி விளக்குகிறேன். இந்த காயை வாங்கி நன்றாக கழுவி, விட்டு, கொஞ்சம் தோலுடன் பட்டையாக எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் பகுதியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.


பாக்கியிருக்கும்  கெட்டியான பகுதிகளை சிறு துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியான பாத்திரத்திலோ , இல்லை, கடாயிலோ சிம்மில் வைத்து சரியான பக்குவத்தில்  வேக வைத்துக் கொள்ளவும். பூசணி நன்றாக வெந்து குழைந்து விட்டால் கூட்டு பார்ப்பதற்கு கூ(பா) ழாகி விடும். (அப்படியே பாழானாலும் விட மாட்டோம் அது வேறு விஷயம்...! ) அத்துடன் தேங்காய் துருவல், மி. வத்தல்,  சீரகம் ஒரு ஸ்பூன், தனியா ஒரு ஸ்பூன், ஒரு ஈர்க்கு அலம்பிய கறிவேப்பிலை அத்தனையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும், அரை ஸ்பூன் அரிசி மாவு கலந்து விட்டு, மற்றொரு கொதி வந்ததும், ஒரு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கடுகு, உ. ப தாளித்து கூட்டாகிய அதில் கொட்டி இறக்கினால், அந்த கூட்டின் வாசனைக்கு, வானத்து  தேவர்கள், (பொதுவாக வானத்தில்தான் தேவர்கள் உள்ளதாக எத்தனைப் படங்களில் தவறாது பார்த்திருக்கிறோம். :) ) "இங்குதான் நாம்  விரும்பி உண்ணும் அமிர்தம் உள்ளதா? " என்று பேசிக்கொண்டபடி வானத்தின் மேலிருந்து இறங்கி வருவதை  உணரலாம்.


பின் வேறு ஒரு கடாயில், மி. வத்தல் நான்கைந்து, ஒரு ஸ்பூன் கடுகு, தலா உ. ப, க. ப ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொண்டு, கோலி அளவு புளி, தேவையான உப்புடன், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு நாம் மேலே  ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும், பறங்கிக்காயின் தோல் +உள்ளிருக்கும் விதைகள் அடங்கியப் பகுதியையும் சேர்த்து அரைத்து எடுத்தால், பறங்கித்துவையல் தயார்.

சூடான சாதத்தில் நெய் சேர்த்து இந்த துவையலை கலந்து கொண்டு அந்தப் பறங்கி  கூட்டையும் தொட்டுக்கொண்டபடி டூ இன் ஒன் பாணியில், சாப்பிடும் போது, இதற்கு நிகர் இதுவே எனத் தோன்றும்.

இந்த இடத்திலும் நாயன்மாரின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதுவும் யாவரும் அறிந்த கதைதான்.

இளையான்குடி மாற நாயனார் சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர். செல்வந்தராக இருந்த போது  தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்து பெருமகிழ்ச்சியடைந்த வந்த அவரது பெருமையை உலகிற்கு உணர்த்த  எண்ணம் கொண்ட  சிவனாரின்  லீலைகளினால், அவர் வறுமைப் பிடியில், சிக்கியப்போதும், தினமும் ஒரு அடியார்காவது எப்படியோ உணவளித்து சிவத் தொண்டாற்றி வந்தார். 

அப்போது விடாது பெய்யும் ஒரு அடைமழை காலத்தில்  ஒரு நாள் காலை தொடங்கி இரவு வரை சிவனடியார் எவரையும் காணாது. அதனால் தானும், தன் மனைவியும் எதுவும் உண்ணாது, விசனத்துடன் சிவநாமத்தைச் சொல்லி உறங்க எண்ணிய போது, சிவனே ஒரு அடியவர் கோலத்தில். மழையில் நனைந்தபடி, அவர் இல்லத்தை அணுகி, "பசிக்கிறது உணவு ஏதேனும் கொடு" என்றவுடன் பதறி எழுந்தார். 

அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து மாற்று உடுப்பு தந்து உபசரித்த பின், இரவில் அவர் பசி போக்க என்ன தயாரிப்பது என்ற கவலையில், மழையில் நனைந்தபடி ஓடி, தன் வயலில் அன்று மதியம் விதைத்த செந்நெல் விதைகளையும், வளர்ந்து மழையில் சாய்ந்திருந்த கீரைகளையும் சேறோடு மிதந்து கொண்டிருந்ததை திரட்டி/பறித்து வந்து தம் மனைவியிடம் தந்ததும், அந்த அம்மையார், பொறுமையாக அடுப்பெரிக்க விறகில்லாமலிருந்தும், வீட்டின் மேற்கூரையின்  ஓலைகளை பிரித்தெடுத்து அதைக் கொண்டு அடுப்பெரித்து, தன் கணவர் கொண்டு வந்து தந்த நெல் விதைகளையும், நீரால் சுத்தம் செய்து உரலில் குத்தி அரிசியாக்கி, கீரைகளை ஆய்ந்து விதவிதமான வகைகளில், அறு சுவையோடு சமைத்தார். அத்தனையும் விரைவில் முடித்து அன்போடு சிவனடியாருக்கு உணவு  படைத்தவுடன், அவர்களது அன்பைக் கண்டு ஆனந்தமடைந்த சிவபெருமான் உமாதேவி சகிதம் காட்சி தந்து, இளையான்குடி மாற நாயனாரையும், அவர் மனைவியையும், தம்முடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார். 

இப்படி ஒரே காயை வைத்து பல விதமாக செய்யும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து வீட்டில் சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் முன்னதாக கூறிய சிவனடியார் கதையில்  பலன் ஏதும் எதிர்பாராத அன்பு மட்டுந்தான் கலந்திருந்தது. நான் செய்வதில், சோம்பேறித்தனம்  கஞ்சத்தனம், எப்படி உள்ளதென அனைவரும் சிலாகித்து பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கும் குணம் இப்படி பலதும் உள்ளதெனவும் கூறிக் கொள்வேன்.

இன்று உங்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு பூசணி பதிவையும் போட்டு விட்டேன். கண்டு, ரசித்த கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏 . 

Friday, April 17, 2020

காலத்தின் மாற்றம் - 2

 சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் நம் கலாசாரமாகிய எச்சில் பத்து பற்றி உண்மை நிறைந்த விஷயங்களை  மிகவும் அழகாக எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

நான் ரசித்துப் படித்தேன் என்பதை விட நாங்கள் வாழ்ந்த அந்த காலத்திற்கு சென்றும் வந்தேன். ஆனால், இந்த விஷயங்களில் இருந்த கட்டுப்பாடுகள் நம் முன்னோர்களான  பெற்றோர்களின் வயதான ஒரு கால கட்டத்திலேயே சற்று தளர்வடைந்து விட்டது எனவும் சொல்லலாம். ஏனெனில். கல்வி, கல்விக்கேற்ற பதவி, அதை வகிக்கும் இடங்கள், அந்தந்த இடங்களின் சூழ்நிலைகள், அந்த சூழ்நிலைக்கேற்ப நாகரீகமான வாழ்வுக்கு தேவையான  பணத்தேவைகள், புதுமையை விரும்பும் இளைய தலைமுறை மக்களின் மன மாற்றங்கள், அதனால் சடாரென்று அவர்களால் எடுக்கப்படும்  தீடிர் முடிவுகள், இத்தனையும் நம் சுவையான  பழைய கலாச்சார எழுத்துக்களை  கொண்ட  பல பக்கங்களை வேகமாக புரட்டி, வாழ்க்கைப் புத்தகத்தின் புது பக்கங்கங்களில் தன் நாகரீகம் என்ற மையினால் புதிது புதிதாக எழுத ஆரம்பித்து விட்டன என்பதும் நிதர்சனமான உண்மை.

நிறைய இடங்களில், இன்னமும் பழைய கட்டுப்பாடுகள் கட்டுக்குலையாமல் இருக்கலாம் / இருக்கட்டும். அவர்களின் கட்டுப்பாட்டு  செயல்களுக்கு என் பணிவான வந்தனங்கள். அவைகளை இப்போதைய காலகட்டங்களிலும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பான நன்றிகள்.

நான் இந்த பதிவை எப்போதோ எழுதியது. "காலத்தின் மாற்றம்" என்ற தலைப்பில் பகுதி ஒன்றை மட்டும் வெளியிட்டேன். இரண்டாவதாக எழுதியது டிராப்டிலேயே  தான் வெளியாகும் "காலத்திற்கு" காத்திருந்தபடி தவமியற்றி கொண்டிருந்தது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை பார்த்ததும் இதை வெளியிடும் ஆசை வந்தது. இதுதான் எதற்கும் ஒரு நல்லபடியான  " நேரம் காலம்" என்பது வர வேண்டும் என நம் பெரியோர்கள்  சொன்னதும்  உண்மையாக  இங்கு பலித்துள்ளது. .

காலத்தின் மாற்றம் 1

இது முதல் பகுதிக்கான சுட்டி. இதை கிளிக்கி  படிப்பவர்களுக்கு முதலில் என் அன்பான வந்தனங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது காலத்தின் மாற்றம். 2.


நான் சென்ற பதிவில் குறிப்பிட்டபடி நாகரீகத்திற்கு ஏற்ற மாதிரி பெண்கள் எப்படி வாழ்வில் மாறுதல்களை சந்தித்து  வந்தார்கள்/வருகிறார்கள். என்பது குறித்து எழுத ஆரம்பித்தேன். 

        நான் கூறியபடி என் பாட்டி காலத்தில் கணவன் உட்பட வீட்டின் பெரிய மனிதர்கள் யார் வந்தாலும், முக்கியமாக ஆண்கள் வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் வீட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக அந்த குடும்ப தலைவரின் மனைவி, (அல்லது அந்த வீட்டின் மருமகள்கள்) எழுந்து நிற்க வேண்டும். வந்தவர்கள் உடை மாற்றி, தாக சாந்தி செய்து, சிரம பரிகாரம் செய்து, வெளியில் சென்று வந்த விபரங்களை பற்றி (அவர்களுக்கு மனமிருந்தால்,,) அவர்கள் கூறுவதை செவிமடுத்து, அது சாப்பிடும் வேளையானால், அவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்கள் படுத்து உறங்க ஆரம்பித்த பின்தான், இந்த மனைவியானவள். (மருமகள்கள்) தன் வயிற்றில் எழும் பசியை போக்கி, கால் கடுக்க நின்ற கால்களுக்கும் சிறிது ஓய்வை தர வேண்டும். (அதற்குள் ,வேறு வேலைகள் (கட்டளைகள்) வீட்டின் பெரியவர்கள் மூலமாக, முளைத்து, பசியையும் ஓய்வையும் சிறிது நேரம் தள்ளி வைக்கும்.) இல்லையெனில் நன்கு படுத்து உறங்கி கொண்டிருக்கும் நபர் அந்த காலத்தில் மின் விசிறிகள் இல்லாததால், “ஐயோ! இந்த வேர்வையில் தூக்கம் கலைகிறதே! இந்தாடி பெண்ணே! கொஞ்சம் விசிறி கொண்டு வீசி வீடேன்!” என்று கத்த மறுபடியும் கால் கடுக்க நின்றபடி அவர் தலை, முதல் கால் வரை காற்றை பெறச் செய்யும் வைபவத்தை நிகழ்த்த வேண்டும். அவர் அந்த காற்றில் நித்திரை உலகில் மீண்டும் பயணித்த பின்பும் அவர் மறுபடியும் இந்த உலகத்துக்கு எரிச்சலுடன் வந்து விடக் கூடாதேயென்று, மிகுந்த பொறுமையுடன் சேவை செய்து கொண்டிருக்க, வந்த பசி வயிற்றில் இரைச்சலுடன் மோதி, தோல்வியுடன் ஓட, பின் வந்து போன பசிக்கு சிறிது உணவை அளித்து விட்டு பிற வேலைகளை முடித்துக் கொண்டு இந்த மனைவியானவள், (மருமகளானவள்) தன் உடலுக்கு கொடுக்கும் ஓய்வுக்கு நிகராக வேறு ஒரு பொருள் இந்த உலகில் கண்டிப்பாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என்றெல்லாம், என் பாட்டி தான் வாழ்ந்த வாழ்வை சொன்னதை கேட்டு உங்களுடன் பகிர்ந்த எனக்கே மூச்சு முட்டுகிறதே! பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்?           
      
        
          அந்த காலத்தில் இளவயதின் தன் அனுபவங்களை சொல்லி வளர்த்ததாலோ, இல்லை, பார்த்து வளர்ந்ததாலோ, என்னவோ! என் அம்மா காலத்திலும். அதே மரியாதையை பெரியவர்களுக்கு தந்து வாழ்ந்து வந்தார்கள். என் தந்தைக்கும் தந்தை வீட்டின் பெரிய உறவுகளுக்கும், என் அம்மாவும் அதே மரியாதையை தந்தார்கள். ஆனால், பாட்டியின் காலத்தை விட சற்று பரவாயில்லை! என்று சொல்ல கேட்கும் எனக்குத்தோன்றும். ஆனாலும், எனக்கு தெரிந்து என் அம்மா என் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொண்டார்கள். எனக்கு விபரம் தெரிந்து என் தந்தை வெளியே சென்று விட்டு வீட்டினுள் நுழைந்ததும், என் அம்மாவுடன் சேர்ந்து என் பாட்டியும் (அம்மாவின் அம்மா) மருமகனுக்காக மரியாதை நிமித்தம் சிரமத்துடன் எழுந்து நிற்பார்கள். (பழக்கதோஷம்! விடுவதற்கு மனம் இடம் தரவில்லை!)  
      
            “அதெல்லாம் ஒன்றும் எழுந்து நிற்க வேண்டாம். மரியாதை மனதிலிருந்தால் போதும்! செய்கையில் தேவையில்லை! என்று என் தந்தை எவ்வளவோ தடுத்தும் கேட்க மாட்டார்கள். இதற்காகவே என் தந்தை வெளியிலிருந்து வரும் போதெல்லாம் சிறிது நேரம் வாசல் திண்ணையில் அமரந்து விட்டுதான் வருவார். (அதற்குள் வீட்டினுள் படுத்துக்கொண்டோ, இல்லை கீழே அமர்ந்து ஏதாவது வேலையிலோ ஈடுபட்டிருக்கும் என் பாட்டி, வாசலில் அமர்ந்திருக்கும் மருமகனை கண்டதும் வருகையை உணர்ந்தவளாய், அவசரப்பட்டு எழுந்து நிற்காமல் நிதானமாக எழுந்திருக்க முயற்சிப்பார்கள் இல்லையா?) இந்த இடத்தில் மாமியாரை தன் அம்மாவாக நினைத்து மதித்த என் தந்தையை நினைக்கும் போது இப்போதும் என் மனம் நெகிழ்கிறது.
            
             இதையெல்லாம் பார்த்து பார்த்து வளர்ந்தலோ, என்னவோ! என்னிடமும் அந்த குணம் திருமணமாகி புகுந்த வீடு சென்ற பின்பு நிறைய வருடங்கள் வரை ஒட்டிக்கொண்டிருந்தது. பெரியவர்களை கண்டதும், எழுந்து நிற்பது, அவர்கள் அருகில் சரிசமமாக அமராதிருப்பது, அவர்கள் உணவு அருந்தும் வரை, நின்று கொண்டே பறிமாறுவது, போன்ற செயல்களை சிரத்தையுடன் செய்து வந்தேன். (“அட! ரொம்பத்தான் தற்பெருமை!” யாரோ சொல்வது காதில் லேசாக விழுவதால், இத்துடன் நிறுத்துகிறேன்.)  காலப்போக்கில் வருடங்கள் உருண்டோட, இயலாமை காரணமாக “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று மனதை தேற்றி மாறக் கற்று கொண்டேன்.    

              அதன் பிறகு வந்த காலங்களில் தங்கள் புகுந்த வீட்டின் பிற உறவுகளுக்கு, எதிரிலேயே தங்கள் கணவனுக்கு இணையாக அமர்ந்து நாலு பேர் முன்பாக தோள் தட்டி பேசி மகிழ்ந்த என் புகுந்த வீட்டின் மற்ற பிற உறவுகளை கண்டு வியந்துதான் போனேன். காலந்தான் எப்படியெல்லாம் மாறி விட்டது? என்று ஆச்சரியப்பட்டு போனேன். (உண்மையைச் சொல்கிறேன்! நாமும் திருமணம் ஆன புதிதில், இப்படியெல்லாம் இல்லாமல் போய் விட்டோமே! என்ற சின்ன தாக்கம் அக்கணம் எனக்குள் வந்து போனதை தடுக்க இயலவில்லை/) என்  கணவரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. என் கணவரும் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்பவர்தான். “நீ செய்வது சரிதான்!” என்பது போல் பதில் வரும். எதற்கு வம்பு! என்று அமைதியுடனே காலத்தோடு விரைய கற்று கொண்டேன்.
    
             என் காலத்திலேயே கணவரை பேர் சொல்லி அழைக்கும் நாகரீகம் வந்து விட்டது. மரியாதைகள் மங்க ஆரம்பித்து விட்டது. “தலை தட்டுவது மாதிரி எப்படித்தான் கணவன் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ? நம் காலத்திலெல்லாம் இப்படியா?” என்று என் அம்மாவும், மாமியாரும் சொல்லிச் சொல்லி அங்கலாய்பார்கள். அவர்களின்  நியாயமான வருத்தம் என்னையும் தொற்றிக்கொள்ளும். (உண்மையாகவே சொல்கிறேன்!!!. நம்புவது உங்கள் விருப்பம்.)  

            இப்படியாக என் காலம் கழிந்து கொண்டிருக்க, நம் அடுத்த தலைமுறையின் காலங்கள் உதயமாகி விட்டன/ இவர்களின் கலாசாரத்தை மட்டுந்தான் என்னால் கண்டுணர முடியும் என நினைக்கிறேன். அதன் பிறகு மாறும் பழக்க வழக்கங்கள் எவ்வளவோ! யாருக்குத்தெரியும்? பொதுவாக இப்போதுள்ள ஆண்களும், பெண்களும் காலத்திற்கு தகுந்த மாதிரி, அன்றிலிருந்தே, நிறைய மாறுதலுக்கு தயாராகி விட்டார்கள். 

           காலங்கள் மாற மாற மாறும் கலாசாரத்தையும் ஜீரணித்து கொண்டு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். வேறு வழி? இல்லையென்றால் பிரச்சனைகள் பெரிதாகி ஒருநாள் வெடிக்கும். வெடித்த குப்பைகளின் அசுத்தத்தின் இடையே வாழ்வதை விட, விட்டு கொடுக்கும் சுபாவங்களை, (இதில் யார் விட்டுக் கொடுப்பது? சந்தேகமற நாம்தான்.. ஹா ஹா ஹா. மேலும் நமக்குத்தான் இது தெரியும்...) வளர்த்துக்கொண்டு, அதனிடேயே வாழ்வது பெருமையல்லவா? அந்த காலந்தான் அனைவருக்கும் (என்னையும் சேர்த்துதான்) யோசிக்கும் தன்மையையும் தந்தருள வேண்டும்.

முந்தைய பதிவினையும், இப்போதைய பதிவினையும் படித்தவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏. 

Saturday, April 11, 2020

துணைகள்.

கத்திரிக்கா...பச்சை கத்திரிக்கா...

இந்த கத்திரிக்காய் சில பேருக்கு உயிரை விட பிரதானமானது. அப்படி  உயிரைக்கூட சமயத்தில் துச்சமாக கருதி துணிச்சலாக இருப்பவர்களிடம்," நீ இன்று சாப்பிட வர தாமதாமாகும்னு சொன்னியா. .! அதனாலே இன்று செய்த கத்திரிக்காய் கறி தீடிரென வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு போட்டு தீர்ந்து விட்டது.. கொஞ்சந்தான் இருக்கு.. உனக்கு ரொம்ப பிடிக்குமென்று தெரியும். நாளை மறுபடி இதே மாதிரி செய்கிறேன். அப்போது வேண்டியதை போட்டுக்கோ" என்று வீட்டுக்குள் வந்து சாப்பாட்டறையில் அமர்ந்தவுடன் அவர்களின் அம்மாவோ, இல்லை வீட்டிலுள்ளவர்களோ பாசத்துடன் சொன்னாலும், மனம் கேட்காது வருத்தத்தில் தளர்வடைந்து விடும்.

நாளை வரை காத்திருக்க பொறுமை இல்லாமையா? இல்லை நாளை மறுபடியும் இந்த கத்திரிக்காய் சமையலில் இடம் பெறுமா என்ற சந்தேகமா? இரண்டில் ஏதோவொன்று  அவர்களின் மனவுறுதியை குலைத்து, தளர்வடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த கத்திரிக்காய்.

இந்தளவிற்கு இந்த கத்திரிக்காயின் பிரதாபங்களை நிறுத்தி என் செய்முறையை பார்ப்போமா?
அன்று நான் என்னிடமிருந்த நீளமான பச்சை கத்திரியையும், சதாரண வயலட் கத்திரியையும் சேர்த்து களமிறக்கினேன். இரண்டையும் நன்கு கழுவி வட்ட வட்ட துண்டுகளாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டேன். ஒரு பெரிய கோலி அளவு புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்தெடுத்த நீரையும், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான உப்பும் கலந்து அதில் கத்திரிக்காய் துண்டுகளை ஊற வைத்தேன் .


கடந்த வியாழக்கிழமை எங்கள் ப்ளாக்கில் மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள "எது பொருத்தம்" என்ற  விவாதம், இல்லையில்லை.. "எது சூப்பர் என்ற கருத்துக்கள்... ஆகா..! என்னப் பொருத்தம்.. நமக்குள் இந்தப் பொருத்தம்" என்று அழகிய பாட்டு பாடியப்படி ஓடிக் கொண்டிருப்பதை, கேட்டு மகிழ்ந்து  போனஸாக இருக்கட்டுமென இன்னொரு படமும் "இடையில் நானும்" என்றபடி கூடவே வந்து விட்டது. இவை இரண்டும் இரட்டை குழந்தைகளாம்... எங்களைப் பிரிக்கக்கூடாது என ஒரே சண்டை வேறு .! வேறு வழியின்றி இரண்டாகப் போட்டு விட்டேன்." (ஒரு படத்தையே எத்தனை முறை?" என முறைப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்...🙏. கூப்பி கேட்டுக் கொள்கிறேன். ஹா.ஹா.ஹா.)


மூன்று ஸ்பூன் கொத்தமல்லி விரைகள், ஒரு ஸ்பூன் தலா, க. ப, உ. ப, து. ப (மூன்று பருப்புகளையும் ) என ஒரே அளவு எடுத்துக் கொண்ட பின், வேண்டிய சிகப்பு, மிளகாய் அவரவர் காரத்திற்கு தகுந்தாற்போல்  எடுத்த அத்தனையும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்தெடுத்துக் கொண்டேன். பின் அதை ஒரளவு கரகரப்பாக அரைத்து அந்த பொடியையும் அந்த புளி ஜலத்தில் ஊறிக் கொண்டிருக்கும் கத்திரிக்காயுடன் பிசறி ஊற வைத்தேன்.




ஒரு அரைமணி நேரம் அத்தனையும் சேர்ந்து ஊறியதும், கடாயில் கொஞ்சம் ந. எண்ணெய் ஊற்றி கடுகு, உ. ப தாளித்து கொண்டு அதில் இந்த கத்திரிக்காய்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்தபடி காய்களை பிரட்டி கொடுத்தால், சிறிது நேரத்தில் பிரவுன் கலருக்கு மாறும். அப்போது பெருங்காய பொடி சேர்த்து இன்னமும எண்ணெய் விட்டு நன்றாக திருப்பி கொடுத்தபடி இருக்க சற்று மொறு, மொறு கத்திரிக்காய் கறி ரெடி.


இது எப்போதோ எழுதி, கொஞ்சம் முடிக்காமல் இருந்து விட்டேன்.  எ. பியில் அன்றைய தினம்  மோர் சாதப்பதிவை பார்த்ததும், கூடக்குறைய சேர்த்து / குறைத்து நேற்றைய  அதற்கு துணையாக என் பதிவில். வைத்து அலங்கரிக்க விரும்பினேன். அது  "நான் மட்டும் தனியாகவா ? அதுவும் இந்த "அமைதி நிலைமையில்"  என்னை மட்டும் போய்   ஆர்ப்பரிக்க சொல்கிறாயா?" என சற்று கோபத்துடன் படபடக்க,  சரி..! சரி..! கோபப்படாதே..! என அதை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி விட்டு, அன்று  எங்கள் வீட்டில் இரவு "அதே வெறும் மோர் சாதத்திற்கு" தொட்டுக் கொள்ள  செய்த குடமிளகாய் கறியையும் உடன் அனுப்ப முடிவு செய்தேன்.


குடமிளகாய் 2, வெங்காயம், பெரிதாக 1 என் கணக்கில் எடுத்து கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி, கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணேய் விட்டு கடுகு  உ. ப தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கியவுடன், குடமிளகாயையும், சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கூடவே இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் அதன் மேல் பூ மாதிரி தெளித்து ஒன்று போல் கலந்த பின் கொஞ்சம் சமையல் எண்ணெய் தாராளமாக விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை தட்டு போட்டு மூடி வைத்தேன். அவ்வப்போது திறந்து ஒரு பிரட்டலில் நன்கு வெந்து கறி மிகவும் அழகாக ஒன்று சேர்ந்து வந்தது.


சரி.. இரண்டையும் ஒன்று சேர்த்து வெற்றித் திலகமிட்டு "நல்லபடியாக போய் வாருங்கள்" என அனுப்பி வைக்கும் நேரத்தில், மழை. காற்று தன் என்ற நண்பர்களின் துணையோடு, நெட் என்ற பகைவன் (எனக்கு அவன் எப்போதும் நண்பனாயினும், அப்போதைக்கு என் பதிவை முழுமையாக்க ஒத்துழையாமல் தடை செய்தவன் பகைவன்தானே.. ! ஹா.ஹா.ஹா.  ) வந்து அனுப்ப தடை விதித்து  விட்டான். சரி..! போகட்டும் மறுநாள் கடமைகள் முடிந்த கையோடு அனுப்ப அமர்ந்தால், அதே நேரம்... அதே பகைவன்.... அதற்கும் மறுநாளாகிய  நேற்று மதியம் வாழைத்தண்டை ஏதாவது செய்து விட்டு  பதிவை முடித்து விடுவோம் என்று ஆரம்பித்த போது, "குடமிளகாயோடு உங்கள் வீட்டுக்கு நானுந்தானே வந்தேன்...! என்னை மட்டும் அவர்களோடு அனுப்ப உனக்கு என்ன  தயக்கம்?" என பரிதாபமாக கேட்டதில், அதை உருமாற்றி  வடிவமத்த "வாழைத்தண்டு குனுக்கையும்" அதன் முக மலர்ச்சி ஒத்துழைக்க ஒரு படமெடுத்து இவர்களுடன் இணைத்து விட்டேன்.


இப்படியாக எ. பியின் அல்லது  "எங்கள் குடும்பத்தின்" மோர் சாதத்திற்கு இணையாக கிளம்பி வந்திருக்கும் இவர்களை வாழ்த்தி பாராட்டுக்கள் தருவீர்கள் என நம்பிக்கையில், இன்று அதேநேரம் பகைவன் வருவதற்குள் என் பதிவுக்கு இவர்களை அனுப்பி விட்டேன். பாராட்டுக்கள் அளிக்கும் அனைவருக்கும் என்னுடையது மட்டுமின்றி இவர்கள் சார்பிலும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

இப்படி👌என்றா, இல்லை இப்படியா👍. இல்லை அதற்கும் ஒருபடி மேலாகவே இப்படியா👏. எவ்வாறாயினும்🙏 இப்படி ஆர்வம் மேலிட காத்திருக்கிறேன். 

Sunday, April 5, 2020

ப(பி)டித்த கதை.

ஸ்ரீ ராம ஜெயம்.

தெரிந்த புராணம்…
தெரியாத கதை!

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். 

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். 

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். 

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன். 

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான். 

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

 ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

🙏ஸ்ரீ ராம ! ஜெய ராம !
 ஜெயஜெய ராமா !🙏


இது வாட்சப்பில் எனக்கு வந்த கதை. இந்த கதை எனக்குப் புதிது. ஸ்ரீராம நவமி அன்று இரவு ஒரு 9 மணி வாக்கில் நான் படிக்க நேர்ந்தது. அன்று மாலை வரை என்ன எழுதுவது என நான் சற்று குழம்பிய நேரத்தில் இது வந்ததை கவனிக்க விடாமல், கொடிய கொரோனாவிற்காக பிரார்த்தனை செய்து என்னை எழுத வைத்தார் ஸ்ரீ ராமர். இல்லாவிடில் இதையும் என்னை பகிர வைத்திருப்பாரோ என்னவோ..!  எல்லாம் அவன் செயல் அல்லவா?. 🙏. இதைத்தவிர நம் கைகளினால் வேறெதும் பலனில்லை. 

இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் இந்த மாதிரி வாட்சப்பில் வந்து படித்திருக்கலாம். இதை என் பதிவிலும்  பகிர ஆசை வந்து அன்புடன் பகிர்ந்தும் விட்டேன். இங்கு  இதைப் படிப்பவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, April 2, 2020

ராம நாமம்.

ஸ்ரீ ராம ஜெயம்.

விக்கினங்களை களைபவனே..
ஸ்ரீ விநாயகப் பெருமானே...! உனை
வாயாற பாடுகின்றேன். தப்பாமல்
வந்தெமக்கு வாரி நின் அருளை
வான்மழை போல் தந்தருள்வாய்..

பிறவிப் பிணிகளை களைந்து, மீண்டும்
பிறவா வரம் மட்டும் தர வேண்டி
பிரியத்துடன் பிரார்த்தித்து நிற்கிறேன்.
பிறிதொன்றை வேண்டிலேன். ஆனால்,

கண்ணுக்கு தெரியாமல் எந்நேரமும்
கதிகலங்க வைக்கும், "கரோனா" அசுரனை
கணங்களுக்கு  அதிபதியே..! உன்
காலடியில் வைத்து கசக்கி எறிந்து விடும்
கருணைக்கு கணநேரமும் ஆகாதுனக்கு..

அந்த உமையவளின் அன்பு மகனே.. ,
அகில உலகமும் நன்மை பெற்றிடவும்,
ஆறுதல் தந்து  ஆங்காங்கு காத்திடவும்
அங்குசம் வீசி, அடிமை கொண்டு விடு
அவ்வசுரனின் அசையாத அஸ்திவாரத்தை..
அதை மட்டும் உன்னிடம் இன்று
அன்புடனே மறுபடி வேண்டுகிறேன்.



ஜெயம் என்ற வார்த்தை நம் மனதை உற்சாக படுத்தும்.  கூடவே ராம நாமமும் சேர்ந்து விட்டால், கேட்கவே வேண்டாம்
பொறுமையின் அவதாரம் ஸ்ரீ ராமபிரான். அவருடன் அவர் மனைவியாக இணைந்த சீதா பிராட்டியும்  பொறுமையின் மறு அவதாரமாகிய பூமாதேவியின் மகளாக ஜனித்து பொறுமைக்கு மறு பெயராக விளங்கியவர்.

பாசத்திற்கு அடையாளமான தந்தை, தாயுடனும், நியாயம், தர்மம், அன்புக்கு இலக்கணமாக பிறந்த உடன் பிறப்புகளுடனும், பொறுமையின் சிகரமான சீதா தேவியுடனும் வாழ்ந்து ஒரு சிறந்த சக்கரவர்த்தியாக ராஜ பரிபாலனம் நடத்தி, மானிட வர்க்கத்திற்கு  ஒரு உதாரண புருஷனாக இருநது வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமபிரான்.

அவர் வாழ்வில் அனைத்துமே அன்புதான். அன்புக்கு மட்டுந்தான் அங்கே அங்கீகரிப்பபு. அவரின் அன்புக்கு அனைவருமே கட்டுப்பட்டார்கள்.  அவர்களின் அன்பில் இவரும் கட்டுண்டார். வாழ்வின் இடையில் தோழமையாக வந்த
குகன், சுக்ரீவன், ஹனுமான், வீபீஷணன் என அனைவருமே இவரது அன்பெனும் மழையில் நனைவதற்காக பிறவி எடுத்து காத்திருந்தவர்கள். அகல்யை, சபரித்தாய் இருவரும் தாங்கள் எடுத்த பிறவியில். ராமரின் பாததுளிகள் பட்டு தங்களது  பிறவி பெருங்கடலை கடப்பதற்காக காத்திருந்தவர்கள் .

பகவான் விஷ்ணு ஏழாவதாக மனித அவதாரம் எடுத்து மனிதர்களுக்கு புகட்டிய நீதி போதனைகளை நாம் மறக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராமரின் பிறந்த நாளான நவமி திதியில் நாடு முழுவதும். அவரவர் இல்லங்களில் அவரை கொண்டாடி கோவில்களுக்கும் சென்று அங்கும் அவரை வணங்கி வந்தோம். இவ்வருடம்  அவ்விதம் கொண்டாடும் சூழ்நிலைக்கு  தடங்கல் வந்துள்ளது.

அசுரர்களை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஸ்ரீ மஹாவிஷ்ணு  மனிதனாகவே எடுத்த அவதாரங்களில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மனிதர்களுக்கு பரிச்சயமானவையாக கருதப்படுகிறது. அவ்விதம் இப்போது  அசுரனாக முளைத்திருக்கும், "கொரோனா" என்ற அசுரனை சம்ஹரித்து  உலக மக்களை தன் அன்பால் வழி நடத்தி, இந்த அசுரனின் பிடியில் சிக்கியவர்களை நல்லவிதமாக பலப்படுத்தி  செல்ல நாம் அனைவரும் அவரது பிறந்த நாளான  இந்த நன்னாளில் ஒன்று கூடி அவர் நாமத்தைச் அன்புடன் சொல்லி பிரார்த்திப்போம். அவர் கண்டிப்பாக நமக்காக வருவார். ஏனென்றால் அவர் அன்புக்கு எந்நாளும் கட்டுப்பட்டவர். 🙏🙏🙏🙏🙏🙏.

ஸ்ரீ ராம. ராம, ராம  ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ஸ்ரீ ராமச்சந்திர பிரபோ... என தாரக மந்திரமாகிய ராம நாமாவை ஜபிப்போம். நம்மை சுற்றி ஒலிக்கும் இந்த நாமங்கள் நம் நல்வினையை  பலப்படுத்தட்டும். 🙏🙏🙏

அவசரமாக ஏதோ மனதுக்கு பட்டதை எழுதிய பதிவிது.. .இதில்  அட்சர பிழைகள் ஏதும் இருந்தால் பொறுத்தருளுங்கள் . அனைவருக்கும் அன்பான நன்றிகள்.