Thursday, May 6, 2021

இஞ்சி புளிக்காய்ச்சல்.

 இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை

"இப்போதுள்ள காலகட்டத்தில், "காய்ச்சலுக்கெல்லாம்" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும்  என்ன....! அந்த உண்மையான  "காய்ச்சலை" கட்டுப்படுத்தும் தன்மை எனக்கிருக்கிறது என்பதில் எனக்கும் நிறையவே பெருமைதான் என இஞ்சி  தன்னுடன் இணையும் புளியிடம்  இரகசியமாக கூறி கேலியுடன் நகைக்குமோ....?" 


இதற்கு முதலில் தனியா( கொத்தமல்லி விரை) ஒரு பெரிய கரண்டி, கடுகு ஒரு ஸ்பூன், உளுந்தம்பருப்பு ஒரு பெரிய ஸ்பூன், வெந்தயம் பெரிய ஸ்பூன் என்ற அளவு எடுத்துக் கொண்டு கடாயிலிட்டு எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து ஆற வைக்கவும். 


பிறகு சிகப்பு வத்தல் பத்து எடுத்து (அடாடா .. இப்படி எண்ணி எடுக்கப்பட்ட  எங்களில் எப்படி ஒன்று குறைந்து போனோம்... "என நினைத்து நினைத்து வியந்து கொண்டிருப்பவை .. ! ! ) தனியாக அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கருக்காமல் வறுத்து ஆற வைக்கவும். 


இஞ்சியை அலம்பி தோல் சீவி நறுக்கி அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். 


முதலில் வறுத்த தனியா, பருப்பு, வெந்தய கலவையை  மிக்ஸியில்  பொடித்து வைத்துக் கொண்டு, மிளகாயையும் நன்கு பொடி செய்து கொள்ளவும். பிறகு அதையும் எடுத்து வைத்தப்பின் இஞ்சியை தண்ணீர் விடாது அரைத்து வைத்துக் கொள்ளவும். 


இது  இறுதியில் இஞ்சியை பொடிக்க தயாராகி கொண்டிருக்கும்  படம்..(நான் எப்படியோ முதலில் வந்து விட்டேனே... என கீழே இருப்பவர்களுடன் பெருமைபட்டுக் கொள்ளுமோ ...?) 

 

இது தனியா, பருப்பு வெந்தயம் கலவை  பொடியை தயாராக்கிய படம்.  ( மேலே என்னைத்தான் படத்தின் ஹீரோவாக  முதலில் காட்டினார்கள். இப்போதும் பொடியாகி நடுவில் வந்து விட்டேன். உன் பெருமை உன்னோடு... அதனால் எனக்கொன்றும் கவலையில்லை. .." என இது அடக்கமாக, இல்லை, அதன் பெருமையை கண்டு அடக்க முடியாமல் பதில் சொல்லுமோ ...? 

   

இது வறுத்த மிளகாய் வத்தல் பொடி... என்னவோ போங்க...! உங்க பெருமையும், புகழும்...யாருக்கு வேணும் இதெல்லாம்..? நமக்கெல்லாம் சிறு வேடங்கள்தான்... இறுதியில் வரும் படத்திற்குத்தான் மொத்தப் புகழும்..... ( நாங்களே... எங்களுடன் வந்த அந்த ஒன்று எங்கே போய் தப்பித்தது என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறோம்...") என அலட்டிக் கொள்ளாமல் ஆனால், சற்று காட்டமாக பேசுமோ இது.. ...?


இது இரண்டு பெரிய கோலி அளவு புளி எடுத்து ஊற வைத்து கரைத்த புளி கரைசல். 


அடியேனும் நான்தான்...!! முதலில் "காய்ச்சல் கலவையில்" ஐக்கியமாக காத்திருக்கிறேன். என்ற பெருமையுடன் இது பகிருமோ..? 


இது " அகத்தை சீராக்கும்" பணி என்னுடையது என்ற உறுதியில் அமைதியாக காத்திருப்பவை என்பதால் எதைப்பற்றியும் கவலையுறாது யோக நிலையில் உள்ளது
 

பின் கடாயில் நான்கு  ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதில் அரை ஸ்பூன் கடுகு போட்டு, அது கோபத்தில் படபடவென வெடித்ததும், அதை அமைதிபடுத்த அமைதியாய் இருக்கும் சீரகத்தையும் அதனுடன் சேர்த்து, புளிக்கரைசலை, மஞ்சள் தூளுடன்  கடாயில் அதனுடன்  சங்கமிக்க செய்யவும். 


பிறகு பெருமை பேசியும், பெருமை படாமலும் இருக்கும் மேற்கண்ட தயாரிப்புகளை, அந்த புளிக்கரைசல் சற்று கொதித்ததும், முறையே வத்தல்,  இஞ்சி, இறுதியில் ஹீரோவென கூறிக் கொள்ளும் பொடி வகைகள், என கலந்து கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி என அனைத்தையும் சேர்த்ததும், அனைத்தும் சேர்ந்து ஒரு புரட்சி செய்த பின் "இஞ்சி, புளிக்காய்ச்சல்  ரெடி" என அது குரல்  கொடுக்கும். 

சூடு ஆறியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொண்டு விடலாம்." சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி தோசைக்கு எதற்கும் நான் உத்திரவாதம் என பொன்னிறமாக அது மின்னிக் கொண்டே கூறும் அழகே அழகு... "
இதில் பச்சை வேர்கடலையும்  சிறிது வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து இறுதியில் கலந்து  கொள்ளலாம்.. அப்படி செய்தால் இன்னமும் (நான் இந்த தடவை  சேர்க்கவில்லை. அதன் கையிருப்பு கொஞ்சமாக இருப்பதால், வேறு எதற்காகவாவது தேவைபடுமென அதை வீணில் பெருமைப்பட வைக்கவில்லை... :))  அதனால் வேர்கடலை என்னை மன்னித்து விடுமென உறுதியாக நம்புகிறேன்.)  சுவையாக இருக்கும். நாவிற்கும். சமைக்கும் பதார்தத்திற்கும் சுவையூட்டும் அதையும் விட்டு வைப்பானேன். ..!!

இது நீங்கள் அனைவரும் ஏற்கனவே நிறைய தடவைகள் வீட்டில் செய்து ருசி பார்த்திருப்பவைதான்...! அதிசயமில்லை... ஆனாலும் என் தளத்தில் பதிவுகள், கதைகளுக்கிடையே ஒரு வித்தியாசமான சமையல் பதிவாக இருக்கட்டுமென இஞ்சி புளியின் காய்ச்சலை  அளவுகோல் இல்லாமலேயே  "அளந்திருக்கிறேன்...." :) கொஞ்சம் கூடுதலாகவும் "அளந்திருக்கிறேனோ. .. .? :) ஆனாலும், அன்புடன் படிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏. 

 பி. கு.. 
என்னவோ.. எங்கும், எப்போதும்  பார்த்தாலும் இந்த தொற்று செய்திகள். நாங்கள் எங்கும் வெளியில் செல்வதேயில்லை.  வீட்டிற்கு தேவையானது எல்லாமே ஆன்லைன் வர்த்தகத்தில்தான் வாங்குகிறோம். வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பதால் கவனமாக இருக்க இப்படி ஆண்டவன் அருள் புரிகிறார். மனம் அமைதியாக இருக்கவே இந்த மாதிரி பதிவுகள் எழுதுவதும். படிப்பதுமாக காலம் நகர்கிறது. இறைவன் இந்த தொற்றை விரைவில் அழித்து மக்களுக்கு பழைய மன/உடல்  பலத்தை தர வேண்டுமாய் தினமும் பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். விரைவில் நம் அனைவரின் பிராத்தனைகள் கண்டிப்பாக பலிக்கும். 🙏. 🙏.