Showing posts with label கார கொழுக்கட்டைகள். அறுசுவை. Show all posts
Showing posts with label கார கொழுக்கட்டைகள். அறுசுவை. Show all posts

Tuesday, November 19, 2024

நட்புக்கான பதிவிது

காரசாரமான கொழுக்கட்டைகள். 

இந்த கார கொழுக் கட்டைக்கு
 பூரணம் செய்ய வெள்ளை முழு உளுந்தை ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு, நன்கு கழுவிய பின்னர் இரண்டு மணி நேரம் தேவையான தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டு பின் நீரை வடித்து அந்த உளுந்துடன் சிகப்பு மிளகாய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் உப்பு முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு மிகவும் நைசாகவும் இல்லாமல் ஒரேடியாக கரகரவென்றும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும். 

"கார விரும்பிகள்" அவரவர்களுக்கு தேவையானபடி மிளகாய்களை கூட்டி குறைத்து வைத்துக் கொள்ளலாம்.. இடையிடையே அரைக்கும் போது அந்த ஊறவைத்து வடித்த நீரை தெளித்துக் கொள்ளலாம். (அளவாக நீர்விட்டு ஊற வைத்தால் உளுந்தின் சுவையும் சக்தியும் வீணாவதை தவிர்க்கலாம்.) இவ்வாறு வடை பதத்திற்கு கெட்டியாக    அரைத்ததை இட்லி தட்டுக்களில் சற்று எண்ணெய் தடவி இட்லி மாதிரி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

பிறகு கொழுக்கட்டை மேல் மாவு செய்ய இரண்டு டம்ளர் அரிசியை அலம்பி ஊற வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பெரிய தட்டிலோ, துணியிலோ உலர விட வேண்டும். பின் அதை மிக்ஸியில் நன்கு நைசான மாவாக அரைத்துக் கொண்டு, அந்த மாவில் தேவையான நீர், மற்றும்  உப்பையும் கலந்து கரைத்துக் கொண்டு, பின் அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் சிறிது நல்லெண்ணெய விட்டு சற்று காய்ந்ததும், கரைத்த மாவை அதில் விட்டு கை விடாமல் நன்றாக பந்து போல் கிளறினால், கார  கொழுக்கட்டைகளுக்கான மிருதுவான மேல்மாவு கிடைக்கும். 

முன்பே வேக வைத்திருக்கும் இந்த உளுந்து இட்லிகளை சற்று ஆற வைத்த பின், நன்கு உதிர்த்துக்கொண்டு அடுப்பில் வேறு ஒரு கடாயை வைத்து ஒரு கரண்டி ந. எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன் உதிர்த்து வைத்திருக்கும் பூரணத்தை சேர்த்து சிறிதளவு மஞ்சள் பொடியையும் அதனுடன் சேர்த்து மேலும் உதிராக வரும் வரை புரட்டி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.(நான் அரைத்த மாவுடனே ம. பொடி கலந்து விட்டேன்.) 

இப்பொழுது தயாரித்து வைத்திருக்கும் மேல்மாவை கிண்ணங்களாக (செப்பு) செய்து அதனுள் ரெடியாகவிருக்கும் பூரணத்தை ஒரு சிறு ஸ்பூனினால் எடுத்து நிரப்பி, இரு விளிம்புகளையும் விரல்களில் எண்ணெய் தொட்டுக்கொண்டு மெல்ல அழுத்தி நீளமான கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும். பின் இட்லி கொப்பரையிலேயோ, குக்கர் பீரித்திலோ ஆவியில் வைத்து எடுக்கவும்.

இதுவே சுவையான கார கொழுக்கட்டைகள். இதற்கு ஜோடியாக விஷேட நாட்களில், இனிப்பு கொழுக்கட்டைகள் (தேங்காய், வெல்லம் சேர்ந்த பூரணம் வைத்து செய்யும் கொழுக்கட்டைகள். ) உடன் இருந்தால்தான் இது நன்றாக சோபிக்கும் என்பது என் கருத்து. ஆனால், மாலை நேர சிற்றுண்டிக்கென  காப்பி, தேனீர் அருந்தும் நேரத்தில் இதை மட்டும் செய்து சாப்பிட்டாலும், நன்றாகத்தான் இருக்கும். 

இந்த மேல் மாவு (அரிசி மாவு) மீந்து விட்டால் அதிலும் தேவையான உப்பு, மிளகாய் தூள், கொஞ்சம் தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி,மற்றும்  கறிவேப்பிலை பொடிதாக அதனுடன் அரிந்து சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டுக்களில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து சாப்பிடலாம். இதுவே அம்மணி கொழுக்கட்டை எனப்படும். இதை புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். இப்போது "அது இந்த அம்மணியிடம் என்ன சொல்வதென்ற எண்ணத்தில்" எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. ஹா ஹா ஹா.அதனால் பகிர முடியவில்லை. மற்றொரு முறை செய்யும் போது புகைப்படங்களுடன்  பகிர்கிறேன். 

இந்த இரு கொழுக்கட்டைகளுமே நல்ல காரசாரமாக இருக்கும். (அவரவர் விரும்பியபடி காரங்களை கூட்டிக் குறைக்கலாம்.) ஆனால்,பொதுவாக சிலருக்கு அதிக காரம் ரொம்ப பிடிக்கும், சிலருக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். சிலருக்கு இரண்டுமே அளவாக இருந்தால்தான் பிடிக்கும். சிலர் இனிப்பை தவிர்த்து காரமானதை மட்டும் எடுத்துக் கொள்வர். இது அவரவர் மன/உடல் நிலையை பொறுத்த விஷயங்கள். 

நம் சகோதரி அதிராவுக்காக இதை மட்டும் என் கொழுக்கட்டை பதிவிலிருந்து  போட்டோக்களை எடுத்துப் மீள் பதிவாகவும்,  சில(நிறைய) வற்றை மீண்டும் புதிதாக  எழுதியும், இணைத்துப் பதிந்துள்ளேன்.  

அப்போது அதிரா சகோதரி என் வலைதளம் வந்து என்னுடன் பழக்கமாகவில்லை. எனவே இப்போது வந்து இந்த கொழுக் கட்டைகளைத் பார்வையிட்டு ரசித்து, (கண்களால் எடுத்து சுவைத்து ) மற்ற நட்புறவுகளுடன் தங்களின் நல்ல கருத்துக்களையும் தாருங்கள் அதிரா சகோதரி.

பதிவை படித்து ரசிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.