Friday, December 31, 2021

வேண்டுதலும், வாழ்த்துகளும்.

என் அன்பான  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் நாளை உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் 2022ம் ஆண்டில் நம் இன்னல்கள் அகற்றி, எவ்வித தொந்தரவுகளற்ற வாழ்வை ஒவ்வொரு நாளும்  அந்த இறைவன் தந்திட வேண்டுமாய் பக்தியுடன் அவன் தாழ் பற்றி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.  

பொதுவாக வாழ்க்கை என்பது இரு தண்டவாள கம்பிகளில் பயணிக்கும் ஒரு ரயில் வண்டியை போன்றது. இதில் அத்தண்டவாள கம்பிகளைப் போல  இந்த இன்பம், துன்பம் இரண்டும் நம் வாழ்வில்  சமமாக வரலாம். இல்லை, ஒன்று சற்று மேலோங்கி, மற்றது கீழிறங்கி நம் மனதை சலனப்படுத்தியோ / சந்தோஷபடுத்தியோ/சங்கடப்படுத்தியோ/காயப்படுத்தியோ மறைந்திருந்து வேடிக்கைப் பார்க்கலாம். எதுவாக இருப்பினும் நம் பயணத்தில் கவனம் செலுத்தி, நம் பயணத்தின் பொறுப்பாளரிடம் (கடவுள்)  முழு நம்பிக்கை வைத்து  பயணத்தை தொடர்தோமானால், சுமூகமாக இந்தப் பயணம் தன் திசை நோக்கி நகரும். 

நமக்கென்று நிர்ணயத்ததை "அவன்" இந்த பயணத்தில் கண்டிப்பாக தரத்தான் வேண்டும். நாமும் அதன் விதிகளின்படி எவ்வித மாற்றங்களுமின்றி அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நாம்  ஒரு பிறவியாக இந்த உலகில் தோன்றும் முன்னே கண்களுக்கு தெரியாத எழுத்து வடிவிலிருக்கும் ஆரம்ப "விதி" களுக்கு முன் "அவனுக்கும்", நமக்குமாக எழுந்த ஒரு உடன்படிக்கை. இந்த ஒப்பந்தத்தை எவராலும் மீற முடியாது. ஆனால், ஒவ்வொருரின் மனதிலும்  பரமாத்மாவாக  ஜீவாத்மாவுடன்  அமர்ந்திருக்கும் "அவனிடம்" நம் நிறைகளை/குறைகளைச் சொல்லி சந்தோஷமோ/ வருத்தமோ அடையக் கூடிய உரிமையை மட்டும் "அவன்" பரிபூரமானமாக நமக்கு தந்துள்ளான்.அதன்படி யாவும் நலமாக, யாவரும் நலமாக இருக்க அந்த விதியின் துணையுடன், "அவன்" துணையும் நமக்கு  வேண்டுமென்ற  பிரார்த்தனையை மட்டும் தினமும்  வைத்துக் கொண்டேயிருக்கலாம். மற்றது "அவனருள்." "அவன்" விருப்பம்.  "அவன்" உரிமை.      

      சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... 

இது இன்ப, துன்பங்கள் கலந்த நம் வாழ்க்கை மாதிரி, இரு பொருட்கள் கலந்த, அனைவரும் அறிந்த ஒரு இனிப்புதான். அனைவரும் தத்தம் வீடுகளில் அடிக்கடிச்  செய்து உண்டு மகிழ்ந்த ஒரு பதார்த்தந்தான்.... ஆயினும், எப்போதோ நான் செய்த இந்த இனிப்பின் துணைபோடு, இப்போது வரும் வருடத்தை நாம் வரவேற்போமா? நன்றி. 🙏. 

மாலாடு.. 


உடைத்த கடலை அல்லது பொட்டுக்கடலை ஒரு கிண்ணம் (ஒன்றரை டம்ளர்) அளவு. 


ஜீனி  அதே டம்ளரில் முக்கால் அளவு. இதுவே போதும். ஆனால், இன்னமும் தித்திப்பாக வேண்டுமென்பவர்கள் ஒரு டம்ளர் நிறைய என்ற அளவோடு எடுத்துக் கொள்ளலாம். 


முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மிருதுவாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் பொடி செய்த ஏலக்காய் தூளையும் சேர்த்து பொடித்து கொள்ள வேண்டும். 


பின் ஜீனியையும் அதேப் போல் மிருதுவாக பொடித்துக் கொள்ளவும். 


இது நெய்யில் வறுத்து சேர்க்க முந்திரி பருப்பு. மற்றும் உலர்ந்த திராட்சை உடைத்தது. 


முதலில் கடாயை அடுப்பிலேற்றி, தணிந்த அளவு அடுப்பை பற்ற வைத்து, அந்த சூட்டில் கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். 


பின்  அத்துடன் உலர்ந்த திராட்சையையும்  போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். 


பின் அதே கடாயில் இரண்டு  குழி கரண்டி அளவு நெய்யை உருக வைத்து லேசாக புகை வரும்படி காய்ச்சிக் கொள்ளவும்.
 

பொடி செய்த உடைத்த கடலை, ஜீனியையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துப் போட்டு கலந்து வைத்து கொள்ளவும். அத்துடன் உருக வைத்த  நெய்யையும் வறுத்து வைத்திருக்கும் முந்திிரி,  திராட்சையையும் கலந்து கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருக்கும் போதே எல்லாவற்றையும் கைகளால் கலந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்


கை பொறுக்கும்  அளவிற்கு சூடு இருப்பதால் மாலாடு உருண்டை வடிவத்திற்கு அழகாக வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உருண்டை சரியான அமைப்பில் வரவில்லை எனத் தோன்றினால், அதற்கு மேலும் நெய் தேவைப்படும் பட்சத்தில் ஓரிரு ஸ்பூன் நெய்யை சூடாக்கி சேர்த்துக் கொள்ளலாம். 


சற்று அழுத்தம் கொடுத்து பிடிக்கும் போது உடையாமல் சேர்ந்து வரும். 


பிடித்து வைத்த ஒரு மாலாடு உருண்டை. 


இது மொத்த மாவையும்  அதே சூடோடு பிடித்து வைக்கப்பட்ட பல மாலாடு உருண்டைகள். 


நீங்களும் இந்த புத்தாண்டில் இனிமை சேர்க்க இனிப்பு அளவோடு இருக்கும் இந்த மாலாடு என்ற இனிப்பை எடுத்துக் கொள்ளலாமே ...! அன்புடன் எடுத்து சாப்பிட்டு பார்த்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். . 🙏.. 

Friday, December 10, 2021

சாலையும், ஞானமும்.

 


1.) குடியிருப்பு  வசதிகளாக

குடியேற இருப்பிடங்கள்

குறைவற இருப்பினும், 

மக்கள் எவரும் 

பாதையாகவேனும்

பாவித்து பயணிக்காத 

சாலையின் வெறுமை

மனதிலும் வெறுப்பேற்றி

மடியாமல் நடை போடுகிறது.. ... 

###################################

2.) சாலை  வெறுமை  என்ற 

இந்த கண்ணாடியில்

மனதில் கலந்து விட்ட

வேதனைகளின் கனத்த  

பிம்பங்கள் ஏனோ 

பிரதி தினமும் இங்கு

பிழையின்றி பிரதிபலிக்கின்றன.... 

###################################

3.) கெளதம புத்தருக்கு  

போதி மரத்தடியில்

ஞானம் கற்பித்து 

தனக்கு இணையாக்கிய 

இறைவன் மனமிறங்கி

இந்த சாலை சூன்யத்தில்

சற்றே அஞ்ஞானமகற்றி 

அந்த ஞானமென்ற

சூட்சுமத்தை  நமக்கும் 

பட்சமாக கற்பித்தால்,

புத்தரின் பாதத்தில் 

அவரை விரும்பியபடி 

வீற்றிருக்கும் ஒரிரு

தூசி துகள்களில், 

ஒரு துகளுக்கு கண்டிப்பாக

நாமும் இணையாகலாம்.....

###################################

4.) மரங்கள் அடர்ந்திருந்த போது 

மக்களுக்கு நிழலாக, 

மண்ணிற்கு அரவணைப்பாக, 

மலர்களுக்கு பிறப்பிடமாக, 

மகிழ்வின் கீதமிசைத்து கொண்டு  

தன் மனதின் இனிமையோடு 

அதன் அவசர மடிவையும் 

அதி விரைவிலேயே 

சந்திக்காது இருந்திருக்கும். 

ஆனால், தனித்துவமான

வீடுகளின்  உதயத்திற்காக, 

விதி செய்யும் சதிக்காக, 

மட்டற்ற மரங்களை பலி தந்தும், 

மக்களின் வேண்டுதல்கள்

பரிபூரணமாகாத அதிருப்தியிலும்

பிற பட்டுப்போன  மரங்களும் 

பார்த்துப் பதறாத 

பரவச பார்வையிலும். 

பூத்துக் குலுங்கும் ஏனைய

மற்ற மரங்களும் மண்ணோடு

மண்ணாக இங்கு மடிந்து 

மக்கிப் போயிருக்கின்றன..... 

###################################

இதற்கு முன் இங்கு வந்த போது கட்டுமானங்கள் இல்லாத இந்த வெறும்  இடங்களில், சாலைகளில்  பறவைகளும், கால்நடைகளுமாக பறந்து / நடந்து  மகிழ்ந்திருந்ததை  ரசித்திருக்கிறேன். ஒரு வருட இடைவெளிக்குப் பின் நிறைய கட்டிடங்கள் இங்கு முளைத்திருந்த போதும், இந்த வெறிச்சென்ற சாலையை கண்டதும் என் கைப் பேசியில் படமெடுத்து விட்டேன். படத்தை எடுத்துப் பார்த்ததும் நாலு வரி எழுத வேண்டுமென என்னுள் உதயமான வார்த்தைகள் அந்த கட்டிடங்களின் சிமிண்ட் கற்களைப் போல சேர்ந்தெழுந்து வரிசையாக நின்று கொண்டன.  படம் குறித்த கவிதையை போலான (இந்த இடத்தில் சிறப்பான வார்த்தைகளுடன் சரளமாக கவிதைகளை புனையும் சகோதரர்கள் ஸ்ரீ ராம் அவர்களும், துரைசெல்வராஜ் அவர்களும் என் ஒழுங்கற்ற வார்த்தை கோர்வைகளுக்கு  மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) வரிகள் உங்களுக்கும் ஏதோ  பிடித்திருக்குமென நினைக்கிறேன். படித்து கருத்திடும் நட்புறவுகளுக்கு என் பணிவான நன்றிகள்.. 🙏.

 இதை எழுதி வைத்து விட்டேனே தவிர  பல மாதங்களாக வெளியிடும் எண்ணமே வரவில்லை. ஆனால் எ. பியில் சென்ற வெள்ளியன்று  பகிர்ந்த  பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கர்ணன் படப்பாடல் என் மன நிலையை மாற்றி விட்டது.  

"என்னையே சரண் என்று நீ முழுமையாக நம்பி விட்டால், உன்னுடையது என இந்த உலகில் எதுவுமில்லை" என்ற கீதாசாரம் மிகுந்த அந்த பாடலில், மன்னரும் நானே மக்களும் நானே. . மரம் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...துணிந்து நில் தர்மம் வாழ... என்ற வரிகளினாலும்,  காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... என்று தன் கடமையைை செய்ய அர்ஜுனனுக்கு போதிக்கப்படும்  இறுதி வரிகளினாலும்  இந்தப் பதிவு  தைரியமாக இன்று அரங்கேறுகிறது. "இன்றிருப்பார் நாளையில்லை" என்ற ஞான விளக்கங்களும் பக்க வாத்தியங்களாக உடனிருந்து இதை அரங்கேற செய்துள்ளது. எல்லாம் அவன் செயல். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏.

Tuesday, November 30, 2021

விருந்தும், மருந்தும்.

 வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே.

அந்தக் காலத்தில் மருந்தும், விருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். .அதன் அர்த்தம் உண்மையில் உணர்ந்து சொல்லப் பட்டதுதான் போலும் . 

எதிர்பாராமலோ இல்லை, எதிர்பார்த்தோ, விருந்தாளிகள்  வீட்டிற்கு வந்து விட்டால்,((அது போல் எதிராளி அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சரி..இதே நிலைமைதான். .. ) அன்று முழுவதும் உபசாரம் காலை, மதியம், இரவு என தடபுடலாக இருக்கும். தனக்கு தெரிந்த சமையல் ஐட்டங்களை எல்லாம் வந்த விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டுகளை  எப்படியாவது பெற்று விட வேண்மென்ற  அவா அன்று முழுவதும் ஓய்வில்லாமல் வீட்டிலிருப்பவர்களை உழைக்கச் செய்து விடும். 

வரும் மறுநாளுடன் இரண்டொரு நாட்களில் கொஞ்சம் நார்மலாகி, வெளியில் எங்காவது கோவில், குளம், பூங்கா, சினிமா என்ற பயணங்களுடன் மாறுதலுக்கு ஒரு பொழுது அவர்களுக்கு (கவனிக்கவும்.. வந்து சந்தோஷிக்கும்  விருந்தினர்களுக்கு அல்ல....)  பிடித்தமான உணவகங்களுக்கு அழைத்துச் செல்லல், அங்கு அவர்களுக்கு (இங்கும் விருந்தாளிகளுக்கு அல்ல....) பிடித்தமான உணவை வாங்கி தருவது என பொழுது முடிந்து விடும். 

மூன்றாவது, நான்காவது நாளில், இல்லை ஐந்தாவது நாளில், காலை எழுந்திருக்கும் போதே வந்த விருந்தினரை விட வீட்டிலிருப்பவர்களுக்கு ஒரு சோம்பல்,  இனம் புரியாத ஒரு கடுப்பு இவைகள் அன்றைய சூரிய உதயத்துடன் அவர்களுக்குள்ளும் உதயமாகி விடும். இரண்டொரு நாள் உபசாரத்தின் பலனாக அன்று சிம்பிளான உணவே போதுமென அவர்களே முடிவு செய்து விடுவார்கள். 

மறுநாள் வந்தவர்கள் பெட்டியை கட்டும் போது, "இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு போகலாம்... அதற்குள் காலில் கஞ்சியை கொட்டிக் கொண்ட மாதிரி என்ன அவசரம்?  எப்போது வந்தாலும் இப்படித்தான் நீங்கள் அவசரப்பட்டு செல்கிறீர்கள்....அடுத்த முறை வரும் போது ஒரு வாரம் தங்குகிற மாதிரி வாருங்கள்.... இன்னும் நிறைய இடங்களுக்கு உங்களை சுற்றிப்பார்க்க அழைத்துப் போக வேண்டுமென நினைத்தோம் ...தெரியுமா? " என்ற உபசார வார்த்தைகளை  அள்ளி வீசுவார்கள். (அதுவும் அவர்கள் கிளம்புவதை உறுதி செய்து கொண்ட பின்தான்...:) )  ) வந்த விருந்தாளிகளுக்கும் தெரியும். இது வெறும் உதட்டளவில் இருந்து வரும்  வாய் வார்த்தைதான்... உள்ளத்திலிருந்து வரவில்லை என்பது.... அவர்களும் புன்னகையுடன்" அதற்கென்ன....! அடுத்த முறை வரும் போது தங்கி விட்டால் போச்சு....! நீங்களும்  எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் அரக்கப்பரக்கத்தான் கிளம்பி விடுகிறீர்கள். நிதானமாக தங்கிச் செல்லும்படி ஒரு முறையாவது வாருங்கள்." என்று அன்பொழுக மறுமொழி சொன்னாலும், உள்ளுக்குள்  எங்கே அந்த மாதிரி வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வும், எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தபடி இருக்கும். இவர்களுக்குள்ளும் அதே உணர்வு இருக்கையில் எப்படி அந்த மாதிரி செல்வார்கள். 

ஆக விருந்தோம்பல்கள் இந்த மாதிரியான எண்ணங்களுடன் நாட்களை கடத்தி விடும் என்பதை நிஜமாக என் அனுபவத்தின் மூலமாக நான் இங்கு சொல்லவில்லை. (நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.... :) ) இது விருந்தோம்பல்கள் செய்தவர்கள், விருந்தோம்பலில் திளைத்தவர்கள் என ஒவ்வொருவரும் கதையாகவோ/ கற்பனையாகவோ, எழுதி/ சொல்லி, கேள்விபட்டதை மட்டுந்தான் சொல்கிறேன். 

முன்பு  இந்த விருந்தோம்பலை குறித்து  ஒரு கதை எப்போதோ சிறுவயதில் படித்தது நினைவுக்குள்  வருகிறது. 

ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வேறு உறவுகள் இரண்டொரு நாள் தங்கிச் செல்வதாக வரும் கடிதம் (அந்த காலத்தில் கடிதந்தானே. )  கண்டு, அவர்கள் வருவதையும், அவர்களுக்கு உபசாரங்கள் செய்வதை விரும்பாதவர்களாவும் , அவர்கள் கடிதம் போட்டதே வந்து சேராத மாதிரி காட்டிக் கொள்வதற்காவும் அவர்கள் வருவதற்குள் பக்கத்து ஊரிலிருக்கும் வேறு ஒரு உறவினர் வீட்டுக்கு  இரண்டு நாட்கள் தங்கி வரலாமென அவசரமாக கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அங்கு அவர்களும், அன்றுதான் இதைப்போல் எண்ணம் கொண்டவர்களாக அருகிலிருக்கும் ஊரில் உள்ள  வேறொரு சொந்த உறவின் வீட்டுக்கு கிளம்பி போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டொரு நாள் ஆகுமென கூறிச் சென்றதாகவும், பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று தங்க விருப்பம் கொண்ட அந்த உறவு  யாரென இவர்கள் விசாரிக்கும் போது, பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கு   தெரிந்த வரையில் ஊர், பெயர் எனச் சொன்னது  தாங்களாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். வேறு வழியின்றி திரும்ப கிளம்பி தங்கள் வீட்டிற்கே சென்றால், அங்கு "இரு பக்க மேளமே" என எண்ணி அக்குடும்பத்தின் தலைவரும்  தலைவியும் பேசிக் கொள்வதென்று கதை  மிகவும் நகைச்சுவையாக இருக்கும். கதையின் பெயர் "விருந்து சாப்பாடு." என நினைக்கிறேன். யார் எழுதியது என்றெல்லாம் நினைவில்லை. எங்கள் அம்மா பள்ளி கோடை விடுமுறை நாட்களில், இது போன்ற நகைச்சுவை கதைகளை படித்து சொல்வார்கள். எழுத்தின் சுவாரஷ்யத்தில் நாங்களும் மறுபடி படிப்போம். அதனால் ஏதோ நினைவிலுள்ளது. 

அதே போல் சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதை ஒன்றும் நினைவில் உள்ளது. 

ஒரு புதிதாக திருமணமான மாப்பிள்ளை தன் மாமியார் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு விருந்தோம்பலுக்கு செல்வார். அவர் மனைவியும் தன்னையும், கணவரையும்,  விருந்துக்கு அழைக்க வந்த தன் தாய் தந்தையருடன் தங்கள் வீட்டுக்கு வரும்படி  வறுப்புறுத்தி கணவரை அழைத்து விட்டு, தன் தாய் தந்தையாருடன் தன் அம்மா வீட்டிற்கு ஒரு வாரம் முன்பாகவே சென்றுள்ளார். எனவே இந்த மாப்பிள்ளை அடுத்த வாரத்தில் ஒருநாள், தன் அம்மாவிடம் தான் ஒரு வாரத்திற்கும், மேலாக அங்கு சென்று தங்கி விட்டு வரும் போது தன் மனைவியையும் அழைத்து வரப் போகிறேன் எனச் சொன்னதும், தாயின் முகத்தில் தெரிந்த கவலை கண்டு, "என்னம்மா. . நான் அங்கு சென்று கொஞ்ச நாட்கள் போல தங்குவது உனக்கு பிடிக்கவில்லையா? எனக் கேட்டதும்,  "மகனே, நீ உன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதில், எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் " விருந்தும், மருந்தும் மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் "என்ற (மூத்தோர் சொல்வாக்கு) பழமொழி உனக்கு தெரியாதா? அதை நினைத்தேன் கவலை வந்தது" என்றாள் தாய். 

"அம்மா. அவர்கள் வீட்டில் அனைவரும் வருந்தி, வருந்தி அழைக்கிறார்கள். நம்மை விட அதிகப்படியாக வயல் வரப்பும், கன்றும், மாடுமாக இருக்கும் அவர்களை விட, நாம் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்தான்.. ஆனாலும் அவர்கள் விரும்பிதானே இங்கு வந்து மணமுடித்தார்கள். எனவே அங்கு எனக்கென்றும் ராஜ உபசாரந்தான் நடக்கும். எனவே வீணாக கவலைப்படாதீர்கள்." என சமாதானபடுத்தியதும், அம்மா சொல்வாள். 

" மகனே, உன் நம்பிக்கைக்கு ரொம்ப சந்தோஷம். உனக்கு நல்ல உபசாரங்கள் செய்வார்கள் என நானும் நம்புகிறேன். நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு கிடைக்கும், பெருமைகள் என்னை மிகவும் சந்தோஷபடுத்துவதைப் போன்று உன் அவமானங்கள் என்னை காயமும் படுத்தும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். சரி.. போய் விட்டு வா.... ஆனால், அங்கு உனக்கு இலையில் என்று வெறும் சோறும், பருப்பில்லாத குழம்பும், அலட்சியமாக வந்து  அமர்கிறதோ அன்று கிளம்பி வந்து விடு... அதற்கு மேல் அங்கிருந்தால்  உனக்கும்  சரி, எனக்கும் அங்கு மதிப்பில்லை.. " என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தாள். 

இவர் அங்கு கிளம்பி போனதிலிருந்து இரண்டொரு நாள் அந்த மாமியார் வீட்டில் உண்மையிலேயே ராஜ உபசாரந்தான். காலை விதவிதமான பலகாரங்களுடன், மதியம், இரவென தலைவாழை இலை போட்டு, சிறப்பான உணவுகள் பறிமாறியதுடன், வெள்ளி டம்ளரில் பாயாசமுமாக அமர்க்களமான உபசாரங்களுமாக திணறிப் போனார் நம் மாப்பிள்ளை. 

மனைவியின் அன்பிலும், மாமனார். மாமியாரின் மரியாதையிலும், மனைவியின் உடன் பிறந்தவர்களின்  அன்பான கேலி குறும்பு கலகலபேச்சுகளிலும் இவர் உலகத்தையே மறந்து விட்டார் என்று கூடச் சொல்லலாம்.( இதில் தன் அம்மாவின் நினைவு எங்கிருந்து வரும். அந்த நேரம் வானத்திலிருந்துதான் நீ உதித்தாய் என யாராவது சொன்னால் கூட ஆமென்று தலையாட்டி ஆமோதித்து விடுவார்.) 

மேலும் வந்த  இரு தினங்களில், இனிப்புகள், வடை பாயசத்தோடு என உணவுகள் தினுசு, தினுசாக இல்லையென்றாலும், வாய்க்கு ருசியாக பலவித காய்களோடும், கனிகளோடும் உபசாரமாக இருந்தது 

அந்த நாட்களும் மறுநாளுக்கு  நகர அன்று அதுவரை உணவருந்தும் வேளாவேளைக்கு மாமனாரோ, இல்லை, புடவை தலைப்பை இழுத்து போர்த்தியபடி மரியாதையுடன் வந்தழைக்கும் மாமியாரையோ தவிர்த்து அந்த ஐந்தாவது நாள், அவர்களின் கடைக்குட்டி பையன் வந்து மாப்பிள்ளை தங்கிருந்த அறையை தட்டி, "வாங்க.. தட்டு போட்டாச்சு. அப்பா சாப்பிட அழைக்கிறார்.. " என அழைத்ததும்தான் கொஞ்சம் அங்குள்ள இங்கிதம் புரிய ஆரம்பித்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அது வரை தலைவாழை இலையிருந்த இடத்தில் ஒரு தட்டும் டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. தட்டில், வெறும் சோறும், பருப்பில்லாத ஒரு புளிக்குழம்பும் ஆங்காங்கே காய்ந்தும், சில இடங்களில் காயாதபடிக்கு ஒரு சுட்ட அப்பளமும் வந்தமர்ந்தவுடன் தன் அன்னையின் நினைவு லேசாக வந்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அதுவரை அவர் முதலில் இலையில் கை வைத்து சாப்பிட ஆரம்பிப்பதற்காக பல தடவைகள் அவருக்காக காத்திருந்த மாமனார், "வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க.. என்றபடி, அன்று சாப்பிட்டு முடிந்தற்கான அறிகுறியுடன் எழுந்து கையலம்ப பின்பக்கம்  போனார். அருகிலிருந்த மனைவி," அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அதான் இன்னைக்கு சமையல் சரியில்லை. இவ்வளவுதான்....இன்னைக்கு அம்மாவால் பண்ண முடிஞ்சது.. " என்றபடி சொன்னாலும், "இது பண்ணியதே பெரிய விஷயம்" என்ற  அலட்சியம் வெளியில் கிளம்பி கொண்டிருந்த மாமியாரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 

" அதன் பின் அன்று மாலையே  வலுக்கட்டாயமாக, உடனடியாக தன்னுடன் தீடிரென கிளம்ப மறுத்து சில நாட்கள் கழித்து, தன் தந்தையுடன் வந்து சேருகிறேன்.. " என்ற தன் மனைவியை, மேலும் வறுப்புறுத்தாது அவள் விருப்பப்படி அவளை அங்கு விட்டு விட்டு தன் அம்மாவின் அறிவுரையை நினைத்து வியந்தபடிக்கு தன் ஊருக்கு அந்த அன்பான தாய்க்கு மகனாகிய அந்த மாப்பிள்ளை வந்து சேர்ந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ. .. ...? 

இந்தக் கதை ஒரு மனிதரின் மான அவமானங்களை குறிப்பிடுவதற்காக எவராலோ கற்பனை செய்யப்பட்டு செவி வழி  கதையாக சுற்றி வந்ததோ, அதுவும் தெரியாது. ஆனால், விருந்து என்பது செய்பவர்களுக்கும், சாப்பிடுவர்களுக்கும் பொதுவாக நீண்ட நாட்களுக்கு நிலைத்து  நின்று எடுபடாது என்பதை புரிய வைக்கிறது. 

அது சரி...! இதற்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம் எனப் பார்த்தால், அந்த காலத்திலிருந்தே உடல் நிலை பாதிக்கும் போது, மூன்று வேளையோ, இல்லை அதிகப்படியாக மூன்று நாட்களுக்கோ மருந்தை கையாள சொல்லி, மருத்துவர்கள் தருவார்கள். அதற்குள் அந்த நோயும் அந்த மூன்று வேளை, இல்லை மூன்று நாட்கள் மருந்துக்கு கட்டுப்பட்டு, படிப்படியாக நம்மை விட்டு அகன்று விடும். விருந்தும் தினசரி ஒரேடியாக விதவிதமாக திகட்டும்படி சாப்பிட்டால், வயிறு ஒவ்வாமை வந்து விடும். அதனால், இந்த விருந்துக்கும், மருந்துக்கும் ஒரு முடிச்சு போட்டு அந்தக்கால பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்தனர். (அப்பாடா.. கடைசியில் பதிவின் தலைப்புக்கு  ஏற்றபடி ஒருவழியாக விளக்கம் தந்து விட்டேன் என நினைக்கிறேன். :) ) 

இதில் சில உபாதைகளுக்கு சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலரை நலம் விசாரிக்கும் போது," ஏதோ இந்த மருந்துகளின் துணையால்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். " என்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேதோ உபாதைகள் வந்து படுத்திக் கொண்டேயிருக்கும். (சற்றேறக்குறைய என்னைப் போல என வைத்துக் கொள்ளுங்களேன். . ) எதற்கென்று மருத்துவரை அணுகி, எதற்கென்று மருந்து சாப்பிடுவது? அப்படியே போனாலும், நம் பாலாஜிக்கு  விவேக் (கடவுள் அல்ல... ஆனால், அவரும் அப்படித்தான் சொல்வார். :)) சொல்வது போல் "ஏதாவது ஒண்டிரண்டு உபாதைகள் எனச் சொன்னால் பரவாயில்லை. உன் வியாதிகளுக்கு ஒரே ஒரு மருந்துதான்  தீர்வு" எனச் சொல்லி விடுவார்களோ என கொஞ்சம் தயக்கமாக உள்ளது.... :) எப்படியோ எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமாக வாழ அவரவர்களுக்காவும், மற்றவர்களுக்காகவும் இடைவிடாது இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.🙏.

ஏதோ எனக்குள் தோன்றிய சாதாரண எண்ணங்களை பகிர்ந்துள்ளேன்.  இப்போதுள்ள இந்த காலகட்டத்தில் மேற்சொன்ன கதைகளின்படி எதுவும் நடவாது. நகைச்சுவையாக எழுதி பகிர்ந்ததை நகைச்சுவைக்காக படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Monday, November 1, 2021

பட்டறிவு..

வாழ்க்கையில் ஒரு மனிதர் முன்னேற பல துணைகளுடன் (பணம், அதிர்ஷ்டம், குடும்ப சூழல்கள், இத்யாதி. .. இத்யாதி.. ) சுயஅறிவின் துணையும் வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன்படி படிப்பறிவு, கேள்வியறிவு என்பனவற்றின் மூலம்  நாம் சிறு வயதிலிருந்தே படிப்படியாக கற்கிறோம். அது போக அனுபவ அறிவு  (பட்டறிவு) என்பதும், அதனுள் முக்கியமான ஒன்று.  இந்த மாதிரியான  அனுபவங்களை நாம் அந்த சிறு வயதில் பெற முடியாவிட்டாலும்,நம் குடுபத்திலிருக்கும் பெரியவர்களின் வாயிலாக கேட்டு அறிந்து தெளிந்திருக்கிறோம்.  ஆனால்,  "மூத்தோர் சொல் அமிர்தம்" என்று மரியாதை, இனம்புரியாத ஒரு அன்பு, பாசம் நிமித்தம் கேட்டுக் கொண்டிருந்த அந்த அனுபவ அறிவுகள் நாளடைவில்  தேய் பிறை நிலவாக   தேய ஆரம்பித்து விட்டன. 

இப்போதும் அவைகளில் சிலவற்றை பேணி விரும்பும் போதும், சில வகைகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கவும் படுகிறது. காரணம் மாறி வரும் கலாச்சாரங்களும், "நாம்தான் கற்று தெரிந்து  கொண்டிருக்கிறோமே... இதைவிடவா இந்த அனுபவ அறிவுகள் கைக் கொடுக்கப் போகிறது" என்ற அலட்சிய மனப்பான்மைகளுந்தான்... என நினைக்கத் தோன்றுகிறது. 

இப்படியான அனுபவ அறிவை அந்த காலத்திலிருந்தே சாதாரணமாகச் சொல்லி, அறிவுறுத்துபவர்கள் இருந்தார்கள். / இருக்கிறார்கள்.  அதை அதிகப்படியாக வலியுறுத்தி, கூடவே நிறைய அறிவுரைகளை கூறுபவர்களும் உண்டு.  ஆனால், இந்த பிறர் கூறும் அறிவுரை (சொல்பவர்  யாராக இருந்தாலும்) என்பது பொதுவாக ஒரு மனிதருக்கு பிறந்ததிலிருந்தே கசக்கும் மருந்தாயிற்றே...!  (அதிலிருந்துதான் நம்மை ஆளுமை செய்யும் ஒரு நோய்க்கு எதிரியாக கசப்பு மருந்தை கண்டு பிடித்தார்களோ என்னவோ...?) அதுவும் இந்த அனுபவ அறிவை ஒதுக்கித் தள்ள ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 

வாழ்க்கை நாளும் நகரும் காலத்தில் இந்த அனுபவங்கள் வெவ்வேறு வகையில் ஒவ்வொருவரும் விதவிதமாக பட்டு தெரிந்து கொள்வதுதான். ஆனால்,அப்படி பட்டு தெரிந்து கொள்ளும் போது, நம்முடைய வாழ்க்கையின் அனுபவ துவக்கத்தில் பலமுறைகள் சொல்லி அறிவுறுத்தியவர்களின் சிரமங்கள், மற்றும் சுலபமான முறைகளையும், மேலும் இன்ப துன்பங்களையும், இப்போது புரிந்தவர்களாய், அதையும் சேர்த்து, பிறரிடம் பகிர நினைக்கிறோம். அதை விரும்பத் தகாததுவாக விடுவதும், விருப்பமுடன் ஏற்றுக்கொள்வதும், நம்மிடம் கேட்பவர்களின் அதிர்ஷ்டங்களுடன், நம் குருட்டு அதிர்ஷ்டமும் இணைந்துள்ளதை காட்டுகிறது. . 

பொதுவாக வாழ்க்கையே ஒரு அனுபவ  கல்விதானே.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடங்களில்  தேர்ந்து சிறந்த முறையில் வல்லவராகிறோம். சிலவற்றை சரிவர கற்றுத் தேறாமல் மனவுளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால், இதை கற்றுத் தருபவன் (கடவுள்) நம் அறியாமைகளை கண்டு, தன் எழுதுகோல் ( விதி) கொண்டு  திருத்துகிறான். திருத்த முற்படுகிறான். திருத்துவான். ஏனென்றால் "அவன்" அனைவருக்கும் நல்லதையே கற்பிக்கும் ஆசான். "அவன்" கடமையை "அவன்" மெளனமாக செய்து கொண்டேதான் இருப்பான் என்ற நம்பிக்கைதானே இந்த மனித உள்ளங்களில், "அவனால்" தோற்றுவிக்கப்பட்ட அச்சாணி வேர்.... அந்த வேர்கள் பட்டு உளுத்துப் போகாமல் இருக்க "அவன்" அருளை வேண்டி நாளும் பிராத்திப்போமாக...  

வாழ்க நலம்.... 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..🙏. 

என் சிந்தனைகளின் இறுதியில் முத்தாய்ப்பாக நான் படித்த கதை ஒன்றையும் (நீங்களும் ஏற்கனவே  படித்திருக்கலாம்.)  பதிவின் தொடர்புடையதாய் இருக்கவே அதையும் பகிர்ந்திருக்கிறேன். 

இதோ அந்த ப(பி)டித்த கதை:-

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..

அற்புதம் என்றார் மேலாளர்.. 

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. 

காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..  ஆஹாவென

இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..

வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..

காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..

முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..

அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..

இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே....! 

இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்..

அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று..

ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு..

வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்..

அடடே.. இது எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..

வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்..

ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப் போல் கழட்டி எறியலாம்தானே..

இப்படி செய்தால் வாழும் வரை நாட்களும் ஒரளவு இனியதாக கழிய வாய்ப்பிருக்கிறது  அல்லவா..? வாட்சப்பில் வந்த இந்த கதைச் செய்தி எனக்கு படிக்கையில் பிடித்தது. இதைப் பகிரும் போது என் எண்ணங்களாக ஒரு சிறு பதிவையும் மேலே எழுதி சேர்த்து பதிந்தேன். என் எண்ணங்களை படிப்பவர்களுக்கும் இந்தக்கதையை படிப்பவர்களுக்கும், ஏற்கனவே இதை படித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

அனைவருக்கும் என் அன்பான அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

Tuesday, October 19, 2021

ரெசிபி படங்களின் அலப்பறைகள்.

 பூரிக்கும் பூரியுடன் கோஸ் கூட்டு.அன்பான வணக்கம் சகோதர சகோதரிகளே. 

அனைவரும் நலமா? அனைவருடனும் நலம் விசாரித்து உரையாடித்தான் வருகிறேன். ஆனாலும், நான் இங்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. அதனால், இந்த தளத்திற்கு வருகை தந்து படிக்கும் உங்கள அனைவரையும் நலம் விசாரிப்பது முறையல்லவா?  கடந்த  வாரங்களில் ஒரு திங்களில் திங்கப் பதிவாக எ. பியில் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களின் அருமையான செய்முறையில் அமைந்த கோஸ் புலாவ்வை ரசித்து படித்ததும் மனதுக்குள் , யதேச்சையாக என் டிராப்டில் நான் சும்மா எடுத்து சேகரித்து வைத்திருந்த கோஸ ரெசிபி படங்களைப் பற்றிய நினைவுகள் வந்தது. அப்போதே சென்று  பார்த்தும் பார்க்காத மாதிரி அமைதியாக அவைகளை பார்வையிட்டு விட்டு வந்து விடலாமென்று படங்களை பார்வையிட ஆரம்பித்தேன். உடனே, அவைகள் தாங்க முடியாத சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டன. 

"என்ன ஒரே சந்தோஷம்..?" என நான் புரியாமல் மீண்டும் அமைதியாக கேட்டவுடன், "நீண்ட நாட்கள் கழித்து எங்களை பார்க்க மறுபடி வந்திருக்கிறாய்.... இன்று எங்களை  வெளியே கை கோர்த்தபடி  உலாவ விடுவாய் அல்லவா?" அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் இந்த மகிழ்ச்சி... . "என்றது கோரஸாக. 

" அட... .! நான் ஏதோ ஒரு ஆர்வத்தில் உங்களை என் கைப்பேசியில் வளைத்து சிறை பிடித்து, இந்த சிறையிலும் அடைத்து விட்டேன். இந்த உங்களின் பயன்பாடுகள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் அனைவருமே அறிந்ததுதான்...! இதையெல்லாம் போய் பிரகடனப்படுத்தி எழுதி உங்களை சிறப்பித்து வெளியே நடமாட விடுவேன் என கனவில் கூட நினைக்காதீர்கள்... . " சட்டென பதில் தந்த என் பேச்சு சற்று காட்டமாக இருந்தது போலும்..

" ஆமாம். ..காற்றில்லாத இந்த அறையில் ஏகப்பட்ட எங்கள் உறவுகளுடன் கிடந்து தவிக்கிறோம்...எப்போதடா வெளியேறுவோம் என வெளியே செல்லும் ஆவலுடன் காத்திருக்கும்  நாங்கள் ஒவ்வொரு நாளும் தூக்கமில்லாது விழித்தபடிதான் உள்ளோம். இதில் எங்களுக்கு கனவு வேறேயா.. .  ?" என் கோபமான பேச்சில் அவைகள் முணுமுணுப்பாக பேசிக் கொண்டன. 

" என்ன.. முணுமுணுப்பு..? வித்தியாசமாக நான் ஏதாவது உங்களை வைத்து புதுப்புது ரெசிபிகளை செய்திருந்தால் எப்போதோ,, என்  சொந்த காணி நிலத்திலும், வரவேற்கும் எ. பியின் வளாகத்திலும் உங்களை சுதந்திரமாக நடமாட விட்டிருப்பேனே..!  எடுத்தது எல்லாம் அத்தர் பழசுதான். இதைப்போய்  எப்படி உங்களுக்கு பொருத்தமாக வார்த்தைகளை ஜோடித்து உங்களை அலங்காரமாக்கி வெளியில் விடுவதாம்......? பேசாமல் இங்கேயே இருங்கள்...அவ்வப்போது நான் மட்டும் வந்து பார்த்துக் கொள்கிறேன். "என் அசுவாரஸ்யமான பேச்சில் அவைகள் சிறிது நேரம் மெளனமாயின. 

தீடிரென சலசலப்பு அதிகமாயின. அதில் பூரி படங்கள் கொஞ்சம் ஆணவத்தில் தோய்தெடுத்த மாதிரி, "என்ன. .. இப்போது நாம் அழகாக இல்லையா? அதுவும் நான்...!! ஏதோ  இவர்கள் இதுவரை எழுதி கிழிக்கும் அழகிற்கு நம் உதவியால்தான் மற்றவர்களுடன் அதை பகிர்ந்து திருப்தி அடைய முடிந்திருக்கிறது... அதையெல்லாம் மறந்த மாதிரி என்ன ஒரு அகங்கார பேச்சு பார்த்தாயா? இதற்குத்தான் நாம் இவர் நம்மை படங்கள் எடுக்கும் போது ஒத்துழைக்காமல் இருக்க வேண்டுமென்றேன். கேட்டீர்களா.. ?"  என்றபடி தன் சகாக்களுடன் என் காதில் படும்படி இரகசியமாக பேசின. 

" ஆமாம்... உங்களால்தான், உங்கள் புண்ணியத்தால்தான் ஏதோ கிறுக்கி தள்ளுகிறேன்.. அதற்கென்ன இப்போது...? அதற்காக.... "

" இல்லையில்லை... இந்த மாதிரி எங்களை சிறை வைத்துக் கொண்டு இருப்பதை விட நாங்கள் உருவாகிய விதத்தை வெளிக்காட்டினால், உங்களுக்கும் கொஞ்சம் பேரும்...புக.... ." மற்ற சகாக்கள் பூரிக்கு பரிந்து முன் வரும் முன் இடைமறித்தேன்.. 

" பேரும் புகழுமா. .? இருக்கிற கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுக்காலாம்'னு பார்க்கறீங்களா. . ? என நான் கேலியாக கேட்டவுடன், 

"புகழ்ச்சிகளா? அந்த ஆசைகள் வேறு இருக்கிறதா என்ன? இந்த மாதிரியான டயலாக்கெல்லாம் நாங்கள் எவ்வளவு கேட்டு பார்த்தாச்சு தெரியுமா? ஏதோ... எங்கள் சாக்கு வைத்து உங்களுக்கும் அது கிடைக்குமா என யோசிக்கிறோம். அது போகட்டும்.... இப்போ எங்களுக்கு வேண்டும் சுதந்திர காற்று... இல்லாவிட்டால் எங்கள் சங்கத்தில் முடிவெடுத்து இனி நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு சிக்காத வகையில் என்ன செய்யலாம் என ஆலோசிப்போம்..." அவைகள் பேச்சில்  இப்போது பாரதியின் கனத்த  காட்டம் அதிகமாக தெரிந்தது. 

" சங்கமா? அப்படி வேறு வந்தாச்சா? சரி.. சரி.. நாம் பகை மறந்து சமாதானமாகி போவோம்...! என் மன/உடல் உபாதைகளில் என்னால் இதுவரை உங்களை கண்டுக்காமல் இருந்து விட்டேன்... அது என்னவென்றால், என நான் பச்சைக் கொடி காட்டி "பாக்யராஜ் பாணியில் என் சோக கதையை கேளு தாய்க்குலமே... ."  என நான் ஆரம்பிப்பதற்குள்," அடாடா.. நிறுத்து...!! யாருக்கு வேண்டும் உன் சோகக் கதைகள்...? அந்த நேரத்தில் சீக்கிரம் எங்களை அலங்கரிக்கும் வேலையை ஆரம்பி..ம்ம்ம்." என மிரட்டலான குரலில் கட்டளையிட்டபடி வரிசையில் வந்தன படங்கள். 

வேறு வழி...? நான் மாட்டிக் கொண்டதைப் போன்று நீங்களும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.. என உள் மனசு சிந்திப்பதற்குள் கை தட்டச்சில் வார்த்தைகளை பதிய ஆரம்பித்து விட்டன. என்றேனும் மனசு சொல்வதை  நாம் கேட்டால்தானே ... :) ஆனாலும், ஒரு சந்தோஷம். ( இது நமக்கு மட்டுந்தான்.. ஹா.ஹா.ஹா ) இரண்டுமே அனைவருக்குமே தெரிந்த ரெசிபிதானே என்று படங்களின் விவரணைகளை வார்த்தைகளை கொண்டு அலங்கரிக்கவில்லை. படங்களை மட்டும் கோர்வையாக்கி  தந்திருக்கிறேன். (அந்தக்கால படம் பார்த்து புரிந்து கொள்வது போல..புரிந்து கொள்ள வேண்டும்  .. 😇😇.. ) என்ன....! இதில் இந்தப் படங்களுக்குதான் இன்னமும் கோபங்கள் அதிகரித்திருக்கும்.... அதையும் (நாம்தான்) நீங்களும் என்னுடன் சேர்ந்து அதற்கு  ஆதரவான கருத்துக்களை 👏👏 தந்து  சமாதானமாக்க வேண்டும்.  எனக்காக செய்வீர்களா.. ?. 🙏. 

பி. கு  .  இந்த பதிவை எப்போதோ எ. பியில் வல்லி சகோதரி பதிவை ரசித்ததும் எழுதி விட்டேன். ஆனால் என் பேத்திக்கு தீடிரென உடல் நிலை சரியில்லாமல் போனதினால், வெளியிட முடியவில்லை. இப்போது அவள் உங்களைனவரின்  அக்கறைபான ஆசிர்வாதங்களில் நலமாகி வருகிறாள். நன்றி. இதைப் படிக்கும் அன்பான உங்களனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும். 🙏. 

நன்றியுடன் 
உங்கள் சகோதரி 
கமலா ஹரிஹரன். 

Monday, October 11, 2021

நடப்பதெல்லாம் நலமாக வேண்டும்.

 வணக்கம் சகோதர சகோதரிகளே..

அனைவருக்கும் நவராத்திரி  நல்வாழ்த்துக்கள். அனைவரும் இந்நன்நாட்களில் அம்பிகையை வழிபட்டு, நலமாக வாழவும், உலகம் நன்மைகள் பெறவும்,  அந்த மகிஷாசுரமர்த்தினியை, மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

தொடர்ந்து ஒரு வார காலமாக என்னால் வலையுலகிற்கு வர இயலாமல் போய் விட்டது.  சென்ற ஞாயறன்று இரவு மணி ஏழு அளவில் என் பேத்தி( மகள் வயிற்றுப்பேத்தி)  மகன் வயிற்று பேரன் பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  கட்டிலிலிருந்து வாட்ரோப் பக்கமாக கீழே விழுந்து விட்டாள். விழுந்ததில் வாயெல்லாம் ரத்தமாக இருந்ததை கண்ட நாங்கள் எங்கு அடி எனத் தெரியாமல் அனைவரும் பதறி விட்டோம். உடன் மகளும், மகனும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று ஞாயறாகையால்  உடனடியாக சரியான மருத்துவர்களை சந்திக்க இயலவில்லை. காயத்தை சுத்தப்படுத்தி வெறும் பிளாஸ்டர் போட்டு மறுநாள் காலை வரச்சொல்லி அனுப்பி விட்டார்கள். அன்று இரவு 12மணி வரை இங்கு பேய் மழை வேறு. . சென்றவர்கள் திரும்பி வர இயலாமல் ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. மறுநாள் காலை அவர்கள் வரச் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட டாக்டரை சென்று சந்தித்ததில், வாயின் மோவாய்கட்டைக்கு கீழ் உதட்டின் உட்பகுதியில், நல்ல அடி (பற்கள் குத்தி) என கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மூன்று தையல் போட்டு மருந்து கொடுத்து  கொடுக்கச் சொல்லி அனுப்பினார்கள். நான்கு பற்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அது இனி விழுந்து முளைக்கும் பற்கள் என்பதால் அவ்வளவாக பெரிய பாதிப்பு ஏற்படாது என்றார்கள். மோவாய்கட்டை கீழ் உதட்டின் வெளிப்பக்கமும் காயம்.. அதை இரண்டுடொரு நாள் கழித்து பார்த்து பிறகு  வேண்டுமானால் தையல் போடலாம் என்று சொல்லியும் அனுப்பினார்கள். 

எனக்கு ஒரு வார காலமாக ஒரே டென்ஷன். , சிறு வயதில் நானும், சரி... எங்கள் குழந்தைகளும் சரி, கீழே விழுந்து எழுந்து காயங்களை சந்தித்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், இப்போது என்னால் இதையெல்லாம் சந்திக்க உடம்பிலும், மனதிலும் கொஞ்சமேனும் திராணி இல்லை. கண்குத்தி பாம்பாக குழந்தைகளை கவனித்து வரும் போதே இப்படி விதி அந்த சமயத்தில் கண்களை கட்டி விட்டு வேடிக்கை பார்த்து விட்டதே  என ஒரே கவலை.. வருத்தம். 

6 வயது குழந்தை அந்த தையல்வலிகள், பல் வலிகள் என பல வலிகளை  எப்படி தாங்கினாளோ என நினைத்து நினைத்து மனம் துவண்டு விட்டது. நான்கு நாட்கள் அவள் அன்ன ஆகாரம் எதுவும் சாப்பிட முடியாமல் அவஸ்தைபட்டு விட்டாள். சாதாரண நாட்களே அவள் உணவை அவ்வளவாக  விரும்பி சாப்பிட மாட்டாள். மிகவும் ஒல்லியாகத்தான் இருப்பாள். 

அதன் பின் சென்ற வியாழன்று அவர்கள் கூறியபடி மருத்துவரிடம் சென்ற போது வெளிப்புற காயம் ஆறிவருகிறது எனவும், தானாகவே மூடிக்கொண்டு விடும் எனவும் சொன்னதில், ஒரு ஆறுதல் வந்தது. தையல் ஏதும் தேவையில்லை என்றதும், ஒரு பதற்றமும் நீங்கியது. இப்போது இரண்டு நாட்களாக குழந்தை நலமாகி வருகிறாள். ஏதோ சாப்பிடுகிறாள்." தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று" என்பதை போல குழந்தை நல்லபடியாக உடல்நலம் தேறி வருவது கண்டு இப்போது நிம்மதி வருகிறது. 

அதனால்தான் என்னால் வலைத்தளத்திற்கு வர முடியவில்லை. நான் வராத காரணத்தை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில், இதை என் தளத்தில் எழுதி இருக்கிறேன். கடவுளின் அன்பான அக்கறையினாலும், உங்கள் அனைவரின் நல்ல நட்புறவுகளின் அன்பினாலும், அவள் இனிவரும் காலங்களில் ஆயுள், ஆரோக்கியத்தோடு, நோய் நொடி  ஏதுமின்றி திடகாத்திரமாக வளர்ந்து நல்ல வாழ்க்கையை வாழ வேண்டுமென இந்த நவராத்திரியில் அம்பிகையை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். விரைவில் அனைவரின் பதிவுகளுக்கும் இயல்பாக வருகிறேன். அனைவருக்கும் என்  அன்பான  நன்றிகள். 🙏.

 நன்றியுடன், 

உங்கள் சகோதரி

கமலா ஹரிஹரன். 

Sunday, July 25, 2021

இனிப்பு போளி....

 பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..

ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், சரஸ்வதி பூஜை, தீபாவளி, போகி பண்டிகை என விஷேட தினங்களில் கண்டிப்பாக இந்த போளி  வடை, பாயாசத்தோடு இணைந்து  மதிய உணவோடு ஐக்கியமாகும். இப்போது அப்படியெல்லாம் பண்ணவும் இயலவில்லை. வடை, பாயாசமே சாப்பிட முடியாத அதிகப்படியான  உணவாக போய் விடுகிறது. மற்றும்  அன்றைய தினத்தில் செய்வதற்கு நேரமும் இருப்பதில்லை. இதைப் போல்  இடைப்பட்ட நாளில் ஆசைக்காக என்றைக்காவது இதை செய்து சாப்பிட வேண்டியுள்ளது. அப்படி ஒருநாள் தீடிரென தனித்து உதயமான போளி இது. 


முதலில் கடலைப் பருப்பை அரை டம்ளர் எடுத்து கொண்டு வெறும் கடாயில் சற்று  சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 

வறுத்ததை ஒரு தடவை அலம்பிய பின் கொஞ்சம்  அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு ஊற விடவும். 


ஒரு 25 (நல்ல வேளை.. இந்த தடவை  கணக்கில் கோட்டை விடவில்லை. எண்ணி வைத்தது சரியாக உள்ளது.:) ) பாதாமை எடுத்துக் கொண்டு அதையும் அலம்பி அந்த கடலைப் பருப்புடன் சேர்ந்து ஊற விிடவும்


க. பருப்புடன் சேர்ந்து சமர்த்தாக "நாங்கள் ஊறிக் கொண்டிருக்கிறோம்". ..என எவ்வித பிணக்கும்  காட்டாது ஒத்துழைத்த பாதாம் பருப்புகள். 


ஒரு அரைமணிநேரம் ஊறிய பின் அதே தண்ணீருடன் இரண்டையும் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு ஒரளவு வாசனை வரும் வரை  வேக வைத்துக் கொள்ளவும்..


இது போளி மாவு. "மைதா உடம்பிற்கு கெடுதலாயிற்றே... .பேசாமல், கோதுமை மாவை சிபாரிசு செய்து விடலாமா....?" என்ற நம் யோசனையை புரிந்து கொண்ட மாதிரி  சற்று சோகமாக இருந்தது. "ஒரு நாள்தான் என்னை சேர்த்துக் கொள்ளுங்களேன்.... நான் என்ன அவ்வளவு பொல்லாததுவா. ...?முன்பெல்லாம் என்னை வைத்து, தோசை, பரோட்டா என்றெல்லாம் செய்து என்னை மகிழ்விக்கவில்லையா...? என கெஞ்சும் குரலில்  நியாயமாக கேட்டதும் மைதா மாவு கொண்டு கலந்து வைக்கப்பட்ட போளி மாவு

    

மைதாவுடன் மஞ்சள்தூள்  உப்பு, ந.எண்ணெய் கலந்து  தேவையான தண்ணீர்விட்டு நல்ல தளர்வாக கலந்து வைத்ததும், மைதாவுக்கு உண்டான சந்தோஷத்தை சொல்லி மாளவில்லை. "எண்ணெய் மினுமினுப்புடன் நான்  எவ்வளவு அழகு பார்த்தாயாா?" என கலக்கும் போதே ஆயிரம் முறை கேட்டு விட்டது. 


"ஆன்லைன் வர்த்தகத்தில் தேங்காய்கள் வாங்குவதால், சின்னதான இந்த தேங்காய்தான்  எனக்கு அன்றைய தினம்  கிடைத்தது.....பெரிய தேங்காயாக வந்திருந்தால் தேங்காய்ப்பூ கணிசமாக கிடைக்கும். சமயத்தில் அதுவும் இளசாக வழுக்கையாகவும் அமைந்து விடும். எதுவுமே நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து தான் அமையும்.. . ஆனால்,...." மேற்கொண்டு என்னை விமர்சிக்க விடாமல்  தடை செய்தது ஒரு குரல்." சரி..  சரி.... ரொம்ப அலட்டிக்காதே...! இந்தளவிற்கு நான் கிடைத்ததே உன்னுடைய அதிர்ஷ்டம்தான்.  . என்னைத்தான் தேர்ந்தெடுத்து என் உடல் மனம் வலிக்கும் வரை உடைத்து விட்டாயே...! பின் என்ன  அங்கலாய்பபு...? " மூடியிருந்தாலும்  தேங்காய், அதன்  ப(சி)ல்லுகள்  இருந்த  தைரியத்தில் வாய்க்குள் முணுமுணுத்தன.) 


பின் என்ன.. .? தேங்காய் சொன்னது போல், மேற்கொண்டு அங்கலாய்காமல்,  உடைத்த தேங்காயிலிருந்து அதன் ப(சி)ல்லுகளை அகற்றி எடுத்தேன்.  (எப்போதும் நான்  தேங்காயை பொடிதாக துருவி விடுவேன். அன்று கொஞ்சம் பிற வேலைகள் அதிகம். அதனால் மிக்ஸியில் போட்டு விடலாம் என ப(சி) ல்லுகளாக எடுத்துக் கொண்டேன்.) " போதுமே உன் பெருமை....! எப்படியோ என்னிடமிருந்த சொத்துக்களை  அகற்றி என்னை வெறும் ஓடாக்கி விட்டாய்... என தேங்காய்  மறுபடியும் என்னை கோபத்துடன் முறைக்க,   நல்லவேளை. ..! அதிலிருந்து வெளிவந்த தேங்காய் ப(சி)ல்லுகள்  அந்த  முழு தேங்காயைப் போல், "என்னை அதிகம் பேசாதே.... ... அங்கலாய்காதே... ..." என்று கடுப்புடன் சொல்லாமல் என் சொல்லை  ஆமோதிக்கிற மாதிரி மெளனமாகவே பல்லிளித்து   கொண்டிருந்தன....." 


இந்த அளவு தேங்காய்க்கு இந்த அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்... . கூடவே க. ப. பருப்புகள் வேறு இருக்கிறதே..! வெல்லம் அதன் இனிப்பான குணத்தைப்போல மெளனத்துடன் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருக்கிறது. 


முதலில் மிக்ஸி ஜாடியில், தேங்காய் சில்லுகளை பொடிதாக்கி துருவி எடுத்துக் கொண்ட பின் அதற்குள் ஊறி வெந்த  க. பருப்பு. பாதாம் பருப்புகளை, அதனுள் போட்டு அதையும் நைசாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில், துருவிய தேங்காயையும், வெல்லத்தையும் போட்டு கொஞ்சமாக.... தண்ணீர் கலந்து..... (அந்த தேங்காய் உடைக்கும் போது கிடைத்த தேங்காய் தண்ணீரே போதும். .) வெல்லப் பூரணத்தை நன்றாக வதங்க  விடவும். 


வெல்லப் பூரணம் நன்றாக வெல்லம் சேர்ந்து வதங்கும் சமயத்தில் பொடித்து வைத்திருக்கும் பருப்பு  கலவைகளை அதனுடன் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
 
 

தேங்காய், வெல்லம், பருப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் பூரணத்துவம்  பெற்று விட்டோம் என மகிழ்கிறது. தேங்காயும் தன் கோபம் தவிர்த்து மற்றவைகளுடன் சினேகமாக இணைந்து கொண்டது. 


இறுதியில் தன்னுடன் சேர்ந்த ஏலக்காய் பொடியின் வாசனையில்  அந்த வெல்லப்  பூரணம் மிகுந்த மகிழ்வையடைந்தது. 


"இந்த சந்தோஷத்துடனேயே  சற்று நேரம் பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் என் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், உங்களை  கலந்து  வைத்திருக்கும் மாவுடன்் சேர்த்து  "போளி" என்ற பெயரை உங்களுக்கு சூட்டி விடுகிறேன். .." என்றதும், ஒன்றுடன் ஒன்று கைகுலுக்கிபடி "காத்திருக்கிறோம்" என்றது  வெல்லப் பூரணம். 


கொஞ்ச நேரத்தில் என சொல் கேட்டு உருண்டைகளாக மாவும், பூரணமும் தட்டில் அமர்ந்தபடி " பிறந்த சொந்த கதை, இங்கு வந்த கதை" என அளவாளாவி .கொண்டிருக்கிறது. போளி தட்டிச் சுட  வாழை இலை மிகவும் நன்றாக இருக்கும். சுடும் போது தோசைக்கல்லில் எடுத்துப் போட அமைப்பாகவும் வரும். அந்த இலை வாசனையே ஒரு தனிச்சுவை. ஆனால் நினைத்தவுடன் வாழை இலைக்கு எங்கே போவது? .  அதனால்் நெய் வந்த அலுமினிய கவரை தேர்ந்தெடுத்து கொண்டேன். மைதா மாவு உருண்டையை ந. எண்ணொயை கைகளில் தொட்டுக் கொண்டு மாவை பரத்தி, 


அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடிக் கொண்டு சுற்றிலும் உள்ள மாவை , நல்ல வட்டமாக மூடிக்கொண்டு மாவோடு சேர்த்து வட்டமாக தட்டி, 


எடுத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் போட்டு சிவக்க வெந்ததும், 


மறுபுறம் திருப்பி, போட்டு, சுற்றிலும் கொஞ்சம் நல்லெண்ணெய்  விட்டு மறு புறமும் வெந்ததும் எடுத்து, .


இப்படி தட்டில் அடுக்க வேண்டியதுதான். சூடாக சாப்பிடும் போதே போளியில் நெய் விட்டு சாப்பிடலாம். நான் தோசைக் கல்லில் எண்ணெய்க்கு பதிலாக நெய் விடுவதில்லை. சூடு ஆறியதும் உறைந்து விடும். அதனால் சுட்டெடுத்து பின் சூடாக சாப்பிடும் போது அவரவர் விருப்பப்படி நெய் விிட்டுக் கொள்ளலாம்.. என்பது என் கருத்து. 


"இப்போது எப்படி.... நான் அழகாக இருக்கிறேனா?" எனக் கேட்கும் போளிகள். 


நீங்களும் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாமே. .. .. .! போளி எப்படி உள்ளதென அன்புடன் கருத்துரைகளை தாருங்கள். நன்றி. 🙏. 

அன்புடன் வந்து தெரிந்த சாதாரண பக்குவமானலும், பதிவை படித்து, சுவையான போளிகளை எடுத்துக் கொண்ட அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். 🙏. 

Saturday, July 10, 2021

அனுபவ பதிவு.

வணக்கம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.

அதென்னவோ  நான் எழுதினால், எப்போதுமே எனக்கு நீ.. ண்... ட.. பதிவுகள், கதைகள், படங்கள் பல விதங்களுடன் எடுத்த சமையல் குறிப்பு பதிவுகள் என வந்து விடும். என்றேனும் ஒருநாள் நானும் சுருக்கி எழுதலாம் என நினைத்து எழுதியதை,  வெளியிடலாம் என ப்ரிவியூவில் போய் பார்க்கும் போது அதை பார்த்ததுமே  மனசு "அட.. சே.. ! என்ன கஞ்சத்தனம் உனக்கு.. இவ்வளவு சின்னதாகவா எழுதுவது.? " என இடிக்க ஆரம்பிக்கும். சரியென்று... மறுபடி வெளி வந்து ஒன்றிரண்டு வாக்கியங்களை உருவாக்கி, இல்லை, பதிவு சம்பந்தபட்ட வேறு ஏதேனும் சேர்த்து நிறைய உருவாக்கி விட்டோமோ எனஅச்சத்துடன் மறுபடி ப்ரிவியூவில் சென்று பார்க்கும் போது "இப்பத்தான் சூப்பர் ."..  என அந்த மனசு குதூகலிக்கும். ஆனால் படிக்கும் போது உங்கள் அனைவருக்கும் "என்ன... இந்த சகோதரி எல்லா பதிவுமே மிதி வண்டி மாதிரி எழுதாமல், தொடர் வண்டி மாதிரி நீ.. ள.. மா..க எழுதுகிறார்களே.." எனத் தோன்றும் என்பதை என் உள் மனசு உணர வேண்டாமோ....... ?  சரி.. அதுதான் போகட்டும்.... எல்லோரும் எழுதும் பதிவுகளிலும் என் கருத்துரை மட்டும் வித்தியாசமாக  பெரியதாக  இருப்பதையாவது இந்த மனசு  புரிந்து கொண்டதா என்றால் அதுவுமில்லை. எனக்கு மட்டுந்தான் கருத்திட்டு விட்டு படிக்கும் போது நீளமாக இருப்பது தெரியும். அந்த  நீ... ள.. மே.... என்னை அங்கிருந்து விரட்டி வெளிகொண்டு வந்து துரத்தி விடும். 

சரி. ... இந்த தொடர்கதை என்ற பதிவை (நானும். அவரும்)  பாகமாக பிரித்து போடலாம் என நான் நினைத்தவுடன், ஏதேதோ சம்பவங்கள் நடந்து பதிவை போட விடவில்லை. சரி.. ஒருவழியாக அதற்கான நேரம் என்ற ஒன்று வந்ததும், சற்றே நெடுங்கதையாக  எழுதியதை, பிரித்து  (இதிலாவது ஒவ்வொன்றும் சிறிதாக காணக் கிடைக்குமே என அற்ப சந்தோஷம்... எனக்கு மட்டுமில்லை...  படிப்பவர்களுக்கும்  வருமே என்ற ஒரு சந்தோஷம்.. வந்தது. ) தினமும் ஒரு பதிவாக ஆறு நாட்கள் தொடர்ந்து போட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலும் எழுதி, ஆங்காங்கே சென்று பிறரின் பதிவுகளை படித்து, அதற்கும் கருத்துக்கள் தந்து இதெல்லாம் இந்த கைப்பேசிக்குள் என்னால் முடியுமா...?" என  நான் எப்போதும் போல் தயங்க, மனசு "உன்னால் முடியும் "என்ற தன்னம்பிக்கை ஊட்டி  வெளியிட வைத்தது. 

ஆனால், நாலாவது பதிவிலே ஆட்டம் ஆரம்பித்து விட்டது. வழக்கமாக வரும்  தலை, பல் வலிதானே என சமாளித்து வரும் போது, ஜுரமும் என் வலிகளுடன் தன் தலையை பிடிவாதமாக காட்ட,  ஐந்தாவதில் கொஞ்சம் திண்டாட்டந்தான். தொடர் கதையையும் உடனுக்குடன் தந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். நாள் விட்டுப் போனால் படிப்பவர்களுக்கு நினைவிருக்க வேண்டாமா? என்பது என் எண்ணம் வேறு.....! அதனால் எப்படியோ ஆறாவதையும்  அன்றே வெளியிட்டு விட்டேன். 

அன்று இரவு முழுவதும் எனக்கு  நல்ல ஜுரம். கொஞ்சம் கூட தூங்கவேயில்லை. அன்று இரவிலிருந்து மறுநாள் காலை, மதியம் என ஆயுரவேத மருந்து சாப்பிட்டதில், மறுநாள் மாலைக்கு மேல் கொஞ்சம் கடுப்பாகி அது என்னை விட்டு விலகியது. உடம்பு அதன் வலியில் கண்மூடி  படுக்க மட்டுந்தான் அனுமதி கேட்ட வண்ணம் இருந்தது / இப்பவும் இருக்கிறது. அதனால் அன்று என்னால் அனைவருக்கும் உடன் பதிலளிக்க இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும். அதனால்தான் பதில் கருத்து தர  தாமதமாகும் என்பதை மட்டும் பதிவில் குறிப்பிட்டேன். 

இப்போதெல்லாம், மனசாட்சிக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, லேசான ஜுரம் வந்தாலே பயப்படுகிறோம்...அது வேறு.. ஜுரத்தை விட உடம்பை பலகீனமாக்குகிறது. (எங்களை இந்த மாதிரி  சாதாரண  ஜுரத்திற்கு பிறந்த வீட்டிலிருக்கும் போது சிறுவயதிலிருந்தே ஆங்கில டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது. காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு எடுத்து,அதில் லிங்க செந்தூரத்தை அளவோடு கலந்து கொடுப்பார்கள். (எங்கள் மாமாதாத்தா நல்ல நாட்டு வைத்தியர். ,அவர் தயாரித்து தரும் நாட்டு மருந்துகள், தலைக்கு தேய்த்து குளிக்கும் மூலிகை எண்ணெய்கள் என எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்கும். 

எந்த ஒரு உபாதைகளும் எங்களில் யாரையாவது கிட்ட வந்து பயமுறுத்தினால், கடிதம் எழுதி துவரங்குறிச்சியில் இருந்த  (அந்தக் காலத்தில் கடிதந்தானே.  . .) அவரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவோம்...அவரும் வந்து உடனிருந்து நாட்டு மருந்துகள் வாங்கி தயாரித்து தந்து எங்களை நலமாக்கி விட்டுத்தான் பிறகு செல்வார்..) மதியம், இரவு உணவு  புழுங்கல் அரிசி கஞ்சிதான். (அப்போதுதான் விதவிதமாக சாப்பிட வேண்டுமென நாக்கு பரபரக்கும். எப்போதும் சாப்பிடச்  சொல்லி, நாம் வேண்டாமென மறுத்த பிடிக்காத உணவை கூடவாவது தர மாட்டார்களா என மனசு ஏங்கும். ) இரவு அவர் ஆலோசனைபடி மிளகு, சுக்கு, திப்பிலி, நறுக்குமூலம், நிலவேம்பு, அக்கரா,  சித்தரத்தை என்ற மருத்துகளை உரலில் இடித்து  பொடி செய்த பின் அதைக் கொண்டு தயாரிக்கும் கஷாயம் என  ஜுரம் இரண்டு நாட்களில் சொல்லாமல் வந்தது போல், சொல்லாமல் ஓடியும் விடும். மழை நாட்களில்  கபத்துடன் கூடிய ஜுரம் வந்தால் ஆடாதொடை இலை, துளசி இலைகளும் அந்த   கஷாயத்தில் ஐக்கியமாகும்.. . (எப்போதாவது சில சமயங்களில் எங்களுக்கே போக்கு காட்டும் சில   விடாத ஜுரத்திற்கு ஆங்கில மருந்துகளை நாடி  குணப்படுத்தி கொண்டுள்ளோம்.. ) ஒரு நாள் அடிக்கும் ஜுரமே ஆறுமாத பலத்தை அபகரித்து கொண்டு விடும் என எங்கள் பாட்டி சொல்வார்கள். 

திருமணமான பிறகு வாழ்ந்த காலத்தில்  நடுவிலெல்லாம் இந்தமாதிரி நீடிக்கும்படியான காய்ச்சல் எங்களுக்கும் சரி.. எங்கள் குழந்தைகளுக்கும் சரி வந்தால், சமயத்தில்  ஆங்கில மருத்துவரிடம் சென்றிருக்கிறோம். பின் அவர்கள் தரும்  மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடுவோம். சரியாகி விடும். குழந்தைகளுக்கு பொதுவாக ஊசியெல்லாம் போட மாட்டார்கள். பெரியவர்களுக்கு காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து ஊசி உண்டு. ஊசிக்கும் அடங்காவிடில் டெஸ்ட் உண்டு. மறுபடியும் டெஸ்டுக்கு ஏற்ற மருந்து, ஊசி என உண்டு இல்லையென ஆக்கிய பின் விடாக்கண்டனான ஜுரம் வேறு வழியின்றி ஓடி விடும். இப்போதுதான் இந்த பயங்கள் வந்திருக்கின்றது. 

அப்புறம் அந்த காலத்தில் வெறும் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவரிடம் செல்லும் போது நிறைய பேர் என்ன சாப்பிட வேண்டுமென எப்போதும் விடாப்பிடியாக ஜுரததில் சாப்பிடும் உணவை பற்றிய கருத்தை கேட்பார்கள். அவரும், காஃபி, கஞ்சி, ரொட்டி, இட்லி, வெந்நீர் என்று சொல்லி சலித்துப் போவார்.  (இவர்கள் கொடுக்கும் வைத்திய  தட்சணையான ஐந்து ரூபாய்க்கு அவர் ( மருத்துவர்) ஜுர அளவை கணக்கிட்டு, மருந்துகள் எழுதி கொடுத்து, "பயப்பட வேண்டாம் .. இரண்டு நாளில் சரியாகி விடும்.. . .." என்ற தைரியமளிக்கும பேச்சுக்களைத் தவிரஅவரை நிறைய பேச வைக்கும் எண்ணம் இவர்களுக்கும் இருக்குமோ என்னவோ?) குடும்ப மருத்துவராக ஆகி விட்டால், அவரே இவரிடம் தொடர்ந்து வரும் இவர்களைப் பற்றிய குடும்ப விஷயங்களை பற்றி கேட்டு தெரிந்து அளவளாவிய பின்தான் நிம்மதியாவாரோ என்னவோ அதுவும் தெரியவில்லை. எப்படியோ நோயாளிகளுக்கும், அவர்கள் அடிக்கடிச் செல்லும் மருத்துவருக்குமிடையில்  மனிதநேய பண்(உடன்) பாடு இருந்தால் சரிதான்....! 

மருத்துவர் கடைசியாக தான் பரிந்துரைத்த மாத்திரைகளுடன் அந்த மிக்ஸரை கலந்து தரும்படி  தன்னுடைய உதவியாளரை( கம்பெளண்டர் )  சொல்லும் போது இவர்கள் (நோயாளிகள்) லாலாகடை மிக்ஸரை கற்பனையில் நினைத்துக் கொண்டு,, அத்தனை ஜுரத்திலும், நாக்கின் சுவையை கூட்ட உதவிய மருத்துவரை வாழ்த்துவார்கள். இது குறித்து அந்த கால திரைப்படங்களிலும் சரி,, பத்திரிக்கைகளிலும் நகைச்சுவை பகுதிகளாக வந்திருக்கிறது. இப்போதெல்லாம் அந்த மாதிரி மருந்தெல்லாம் இருக்கிறதா என்று கூட தெரியாது. 

 இந்த தடவை அனுபவத்தில் மனதிலுள்ளதை ஒரு  பதிவாக எழுத உதவிய அந்த ஜுரத்திற்கும் அவசியம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கொஞ்சமாவது சின்ன பதிவாக வந்திருக்கின்றதா ?) படிக்கும் அன்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

பி. கு. இப்போது பூரண நலமாகி விட்டேன். உடல்நலம் பாதித்த மறுநாளே எழுதி வைத்த பதிவு இது. தொடர்கதை இறுதிக்கு  என்னிடமிருந்து பதில் கருத்துகள் வரவில்லயே என  நீங்கள் எதிர்பார்த்திருக்கும் போது வந்திருக்க வேண்டியது. "வழக்கப்படி நீ.. ள. ம்.... மற்றும் தாமதம் என்றேன் நான். நீ.. ள. மா? இன்னும் எனக்குள்ளும் நிறைய விஷயங்கள் இதைப்பற்றி உள்ளது. அதை உனக்கு நினைவுபடுத்தி எழுத வைக்கலாம் என நினைத்தேன். சரி... போ.... எப்படியோ உருப்படியா எழுதியது வெளியாகிறதே என்றது மனசு." 😁😁😁😀... நன்றி. 🙏. 

Sunday, July 4, 2021

தொடர் கதை... நானும், அவரும்.

கதையின் 6 ஆவது (நிறைவு) பகுதி... 

வந்தும், வராது ஏமாற்றிக் கொண்டிருந்த மழை அன்று காற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு இரவின் நடு ஜாமம் வரை தன் மனம் போனபடி கடுமையாக பெய்த சந்தோஷத்துடன் சற்று ஓய்ந்தது. மழை விட்டும், தூறல் விடாத, புலர்ந்தும், புலராத அந்த அதிகாலை பொழுதில், என்னைச் சுற்றி, ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது... "நல்லவேளை,.. . அவர் வீட்டின் மேல் விழுந்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் வந்து விழுந்ததே.... .! எத்தனையோ முறை இதை வெட்டுமாறு நாம் அவருக்கு எடுத்துச் சொல்லியும் அவர் இதன் மேல் வைத்திருந்த அன்பு காரணமாக மறுத்து வந்ததற்கு பிரதிபலனாக, இது அவரை காப்பாற்றி விட்டது.. "என்று என்னை புகழ்ந்தும், எனக்கு பாராட்டுரைகள் கூறி கொண்டும் இருந்தார்கள்.

இரவில் அடித்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எல்லோரும் கூறியுள்ளபடி, அவர் வீட்டின் மேல் சாய்ந்து விழாமலிருக்க, ஒவ்வொரு நொடியும், இறைவனை வேண்டிக் கொண்டு, மரண அவஸ்தையுடன் ...... மரமாகிய நான்..... பட்ட வேதனை, காலையில் கண் விழித்ததும், சாலையின் குறுக்கே, நான், விழுந்து கிடந்ததை கண்டு களிக்கும், இவர்களுக்கெங்கே புரிய போகிறது. எப்படியோ.... எனக்கு உயிரை தந்து வளர்த்தவருக்கு, கெடுதல் விளைவிக்காமல் இம்மண்ணுலகை விட்டு மறைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேரோடு நான் விழுந்து விட்டாலும், எனது ஆணிவேரும் மண்ணும் சற்று உறவாடி கொண்டிருந்ததால், எனது உணர்வுகள் முழுவதும், அற்று போகாத அந்த நிலையில் என் உள்ளம் அவரைத் தேடியது. "எங்கே அவர்.  .? அவருக்கு உடம்பு பூரண குணமாகி நலமுடன் இருக்கிறாரா. . .? என்னைச் சுற்றி இத்தனை பேர்கள் இருந்தும் அவரைக் காணவில்லையே...? என்னவாயிற்று அவருக்கு... சத்தம் கேட்டு இதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்திருப்பாரே. .. . இன்னமுமா உறங்கி கொண்டிருக்கிறார்??? என் உணர்வுகள் முழுவதும் செத்துப்போவதற்குள் அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாமே....  ... "என்று நான் அங்கலாய்த்தபடி மனம் தவித்த போது, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த சுசீலாவின், ஓ.... வென்ற அலறலில், என்னை சுற்றியிருந்த அத்தனைக்்  கூட்டமும் அவர் வீட்டுக்கு ஒடியது. "ஐயோ!!! என்னவாயிற்று அவருக்கு.... தெரியவில்லையே..?" என்று உள்ளம் கீழே விழுந்து கிடந்த அந்த நிலையில் கூட பதறியது.

சாலையின் குறுக்கே நிகழ்ந்த என் சாவு வாகனங்களின் பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால், மதியம் வேருடன் உறவாடியபடி மடிந்தும், மடியாமலும், கிடக்கும் என் உடலை வெட்டி அப்புறப்படுத்த கையில் கோடாரியுடனும், இதர ஆயதங்களுடனும் நான்கைந்து பேர்கள் என்னிடம் நெருங்கினார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள், அவரகள் கையிலிருந்த கோடாரியை விட பலமாக என்னுள் இறங்கின........

இரவு பெய்த பேய் மழையிலும், அவரை சந்தித்து அவர் உடல் நலத்தை பற்றி விசாரித்து அவருக்கு உணவு கொடுத்துச் சென்ற குமாரிடம்,,,, "தனக்கு இப்போது பரவாயில்லை. .. மிகவும் களைப்பாக மட்டும் இருக்கிறது. நன்கு உறங்கி எழுந்தால் நாளை காலை சரியாகிவிடும்....." என்று ௬றி அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இந்நிலையில் காலையில் வீட்டின் முன் இத்தனை அமர்களமாயிருந்தும் அவர் எழுந்து வராத நிலை கண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லாமென்று, சுசீலா அவர் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காமல் போகவே, அவர் படுத்திருந்த அறை ஜன்னல் வழியே அவரை பார்த்து விட்டு, அவரது நிலை கண்டு சந்தேகித்து.... ஓ... வென்று கத்தியிருக்கிறாள்.

வீட்டின் உட்பக்கம் பூட்டியிருந்ததால், கதவு உடைத்துக்கொண்டு அனைவரும் சென்று பார்த்ததில், அவர் உயிர் இரவு உறக்கத்திலேயே பிரிந்திருந்தது... நேற்று வரை நல்லாயிருந்த மனிதர் இப்படி திடீரென்று போய் விட்டாரே...! எத்தனை நல்ல மனிதர்.....ஒருவரிடமும் கோபபடாமல், அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து வாழ்ந்தவர்....

"இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே கஸ்டந்தான்... !!!! நல்லவர்களுக்குத்தான் இந்த மாதிரி நல்ல சாவு கிடைக்கிறது.. ஆனால் நமக்குத்தான் மனசு தாங்கவில்லை.... ரொம்ப கஸ்டமாயிருக்கு...! அவர் பையனுக்கும் உறவுகாரங்களுக்கும் தகவல் தந்திருக்கிருக்கிறார்கள்.  இன்று இரவுக்குள் அவர்கள் வந்து விட்டால், நாளை காலை அவர் கிளம்பி விடுவார். அதற்குள் இந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி விட்டால் நல்லது...."

பெருமூச்சு விட்டவாறு கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் பேசப்பேச என் இதயம் சுக்கு நூறாக வெடிப்பதை நான் உணர்ந்தேன்...." ஐயோ!!! இரவெல்லாம் மழை, காற்றுடன் நடந்த பெரும் யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன் என்று இறுமாந்து போயிருந்தேனே....! ஆனால் என்னுடன் போட்டியிட்டு கொண்டு அந்த எமனும் ஜெயித்து விட்டானே..... .! அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அவர் மனதின் வேதனைகளை மனதோடு கேட்கும் ஒரு அனுபவம் கிடைத்தது...... அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன் இப்படி செய்து விட்டாய்???" என் உடம்பில் பட்ட வேதனையையும், படும் வேதனையையும், பொருட்படுத்தாமல் மனம் பரிதவித்தது. "கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணை பிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக் கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின...

மறுநாள்.... நானும், அவரும்.... இந்த பிறவியில் வெவ்வேறு ஊர்திகளாயினும் ஒரு சேர பயணமாவோம் என்று நினைத்த போது அத்தனை வருத்தத்திலும், இனம்புரியாத ஒரு துளி ஆனந்தம் உதயமானது.

"நானும், அவரும்" என்ற இக்கதை நிறைவுற்றது.

நடிகர் திரு. விவேக் அவர்களின் தீடீர் மறைவு கொஞ்சம் அனைவரையுமே உலுக்கி விட்டது. நல்ல நடிகர். அந்தந்த நகைச்சுவை பேச்சுக்களுக்கு தன் முக பாவங்களில், நடிப்பை தந்து பேசி சிரிப்பை வரவழைத்தது மட்டுமின்றி, பகுத்தறிவு விஷயங்களில் சிந்திக்கவும் வைத்தவர். அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களை தன்னால் இயன்றவரை மிளிர வைத்தவர். அவர் பசுமை திட்டமான மரம் வளர்ப்பில் மரங்களை நேசித்ததும், அவர் நம் மனதில் நிலையாக நின்றிருக்க ஒரு காரணம். 

நடிகர் திரு விவேக் அவர்களின் மறைவு செய்தி ஏனோ முன்பு எழுதிய இக்கதையை   எனக்கு நினைவுபடுத்தி மீண்டும் பதியச் செய்தது. நல்லதொரு கலைஞர்... மரங்களின் நேசர்...இயற்கையின் அபிமானம் பெற்றவர்.. என்றெல்லாம் எண்ணியதாலோ  என்னவோ.... 🙏.

அன்றே கதையை பகுதியாக பிரித்து வெளியிட நினைத்தேன். இயலவில்லை. நாம் நினைப்பது ஒன்றாயினும், இறைவன் தான் நினைப்பதைதானே இறுதியில். நடத்தி வைக்கிறான். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.... 🙏... 

இக்கதையை அப்போது ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தந்தோடு மட்டுமின்றி, உடன் வந்த அவரது வலைச்சர ஆசிரியர் அறிமுகத்தில் என்னையும் என் எழுத்தையும் சிலாகித்து எழுதி, அங்கும் இந்தக் கதையை பிரகடனப்படுத்தி என்னை கெளரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்கள்தான். நன்றி. நன்றி கில்லர்ஜி சகோதரரே. . 🙏..

இந்தக் கதையை இப்போது படித்து கருத்துக்கள் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

தொடர் கதை....

கதையின் 5 ஆவது பகுதி

ஒரு மனிதன் பிறக்கும் போதே சுயநலத்துடன்தான் பிறக்கிறான்... அவன் தேவைகள், அவன் ஆசைகள் இது மட்டுமே நிறைவேறினால் போதும் என்ற மனதுடன்தான் வளர்கிறான்... வாழ்கிறான்...  பிறந்த குழந்தை  தன் அன்னையின் அரவணைப்பிலிருந்து இறங்கி நடக்க கற்றுக் கொள்வது கூட, தான் விரும்பும் இடத்திற்கெல்லாம் தவழும் சுயநலத்திற்காகத்தான், இருக்குமோ....? 

இப்படி தன் ஆசைக்காக, தன் தேவைக்காக, தான் விரும்பியபடி வாழ  ஆரம்பிக்கும் மனிதன் சுயநலத்தின் பிடியில் படிப்படியாக முழுவதுமாக சிக்குகிறான். தன்னை பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனும், குடும்பத்துடனும், இதர சொந்த பந்தங்களுடனும், தன் குழந்தைகளுடனும், தான் வாழும்போது இதே சிந்தனைதான் அவன் மனதில் மேலோங்கி நிற்கிறது.  இறுதியில் வாழ்நாளின் கடைசியிலும் தன் வாரிசுகளை சார்ந்தே இருக்க வேண்டுமென நினைக்கிறான். மடிந்த பின்பும் தன் சந்ததியினர் தன் நினைவு நாளை நினைவாக நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டுமென எண்ணுகிறான். அந்த அளவுக்கு அவன் சுயநலத்துடன் ஒன்றி போகிறான்.... ..    

இப்படி பிறப்பிலிருந்து, இறப்பு வரை தனக்காக மட்டுமே வாழ ஆசைப்படும் மனிதர்கள் வாழும் போது தன்னுடன் வாழும் மற்றவர்களின் உணர்வுகளை மட்டும் ஏன் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள்.? சரி....... அப்படி அதை உணர்ந்து அந்த குணத்தை சிறிது  கஸ்டப்பட்டேனும் மாற்றியமைத்தானேயானால் அவன் உலகில் வாழத் தெரியாதவனாகிறான்..  . "திறமையற்றவன்....  ஒன்றுக்கும் உதவாதவன். .. உபயோகமில்லாதவன்...." இன்ன பிற பட்டங்களை பிறர் சுலபமாக தர அதையும் சுமக்கிறான்.... அப்படி சுயநலமாக வாழும் போதும்  மனிதனே மனிதனுக்கு பெரும் பகையுமாகிறான்...... ஆதி பிறப்பிலிருந்து தோன்றிய இந்த மனித வர்க்கங்களின் சுபாவங்கள்தாம் எத்தனை விசித்திரமானது...!!! 

மனதில் தோன்றிய இந்த சிந்தனைகள் சதாசிவத்தின் உள்ளத்தை முள்ளாக குத்தி வருத்தியது... "யோசித்து பார்த்தால், நானும் ஒரு வகையில் அப்படிப்பட்ட சுயநலவாதிதானே...!" என்று உண்மையை நினைத்த மாத்திரத்தில் மனசின் மைய பகுதியில் சுரீரென்று வலித்தது.... "நான் வளர்த்த பையன், என் வளர்ப்பு மகனானலும், அவன் என்னையே தஞ்சமென அண்டி இருக்க வேண்டும். வயதான என்னை நான் கண் மூடும் கடைசி காலம் வரை என் சொந்த வீட்டிலேயே சேர்ந்திருந்து அன்புடன் அனுசரித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில்தான், அவனுக்கு வேண்டியதெல்லாம் நான் பார்த்து, பார்த்து செய்தேனோ...? " என நினைத்த போது இதயம் வெடித்து விடும் போலிருந்தது... 

கண்கள் கலங்க அருகிலிருந்த மரத்தை தழுவி கொண்டார்.... . கைகளால் அதன் சொரசொரப்பை வாஞ்சையுடன் தடவியபோது உள்ளம் சற்று லேசாகியது. அண்ணாந்து சற்றே வீட்டின் பக்கமாக வளைந்திருந்த மரத்தை அதன் உச்சி வரை பார்த்தார். இந்த மரங்கள்தான் எத்தனை மேன்மையானவை.....   "பொதுவாக  உயரமான மனிதரை... மரம் மாதிரி வளர்ந்திருக்கிறாரே தவிர அறிவு வளரவில்லை..." என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான்..... 

தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது. மரங்களுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மரத்தின் பெருமை விளங்குமாறு, அதனை அத்தனை உயரமாக படைத்திருக்கிறான் இறைவன்......! " எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால் உன் மாதிரி மனிதனை உனக்கே உரித்தான நேயத்துடன் கவனித்து கொள்ளும் உன்னைப்போல்  ஒரு மரமாக உன்னருகிலேயே பிறக்கவேண்டும்..... " என்று முணுமுணுத்தவாறு கண்களில் நீர் மல்க மீண்டும் அன்புடன் மரத்தை லேசாக அணைத்துக் கொண்டார் சதாசிவம்.

அவர் சொன்னதை ஆமோதித்து அவரை அமைதிபடுத்துவது போல் மரத்திலிருந்து சில இலைகள் அவர் மீது விழுந்து பின் தரையை தொட்டன.. . .மனஉளைச்சல் தந்த அலுப்பின் காரணமாக கட்டிலின் விளிம்பில்  சாய்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார் சதாசிவம். 

"உன்னையும், அவனையும் ஒரே மாதிரியான பாசத்துடன்தானே வளர்த்தேன்... அவன் மனதில் மட்டும் இத்தனை வேறுபாடுகள் இருப்பதாக ஏன் அனைவரும் குறைச் சொல்கிறார்கள்.? அவன் தன்னிடமிருக்கும் பாசமெனும் கிளைகளை ஏன் அவ்வப்போது யாரும் பார்க்காமலேயே வெட்டிக் கொள்கிறான். 

தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்து  சில உறவுகளின் பாராமுகத்திலும், சில உறவுகளின் பராமரிப்பிலும் எப்படியோ வளர்ந்து, நான் காலூன்றிய போது, நல்ல உண்மையான அன்புக்கு ஏங்கிய போது, அந்த உண்மையான பாசத்தை என் மனைவியின் வடிவில் இறைவன்  கைப்பிடித்து  கொடுத்தாள். அதன் பின் எங்களுக்காக உங்கள் இருவரையும் அதே பாசத்தின் பிணைப்பில் கட்டுண்டு வளர்த்த போது, அவன் மட்டும் ஏன் இப்படி மனதளவில் வேறானான்.....?

எத்தனையோ சிரமங்கள், மனைவி பிரிந்ததும் ஏற்பட்ட சோகமான எத்தனையோ நினைவுகளை அவனோடு கூட அதிகம் பகிராத வேதனைகளை, மனதோடு உன்னிடம்  சொல்லி, பகிர்ந்த போதெல்லாம்.,.... எங்கள் அன்பை புரிந்து கொள்ளும் உன் இயல்பான ஆற்றலோடு, உனக்கு மட்டும் பேசும் சக்தியையும் இறைவன் தந்திருந்தால், நீ எத்தனை ஆறுதலாக என்னோடு வாய் விட்டு பேசி இருந்திருப்பாய்.... !"  கண் மூடி தான் வளர்த்த  மரத்தோடு பேசிய  அவரை, அவர் பேச்சை, அவர் மனதை புரிந்து கொண்ட மனோபாவத்துடன் மரத்தின் கிளைகள் மேலும் அசைந்து, பல இலைகளை அவர் மீது உதிர்த்து தானும் அமைதி பெற்று கொண்டு, அவரையும் ஆசுவாசபடுத்தியது......  !!" 

இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின.. .. இன்றும்,.... அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது, தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், அவள்  அன்பின் பிரிவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. 

நண்பர் பாலு எச்சரித்து சொன்ன விஷயங்கள் வேறு மனதை லேசாக சலனப்படுத்தியது..... .! பட்ட பகலில் எல்லோரும் பார்க்கக் கூடிய பொது இடத்தில் இப்படி சிறு குழந்தையாக உணர்ச்சிவசபடுகிறோமே என்ற வெட்கத்தில் கண்களை அவசரமாக துடைத்தபடி திறந்த போது கண்கள் திறக்க முடியாமல் எரிந்தன. காலையில் சற்று குறைந்திருந்த காய்ச்சல் இப்போது மறுபடி அதிகமாயிருந்தது. 

சுசீலா கஞ்சியுடன் கொடுத்துச் சென்றிருந்த , சாப்பிட மறந்து விட்டிருந்த  அந்த  மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டுமென்று நினைத்த போதில், "எதற்காக மாத்திரை சாப்பிட்டு அப்படி இந்த உடம்பை பாதுகாக்க வேண்டுமென்ற" வெறுப்பு ஒரு கணம் தோன்றியது.... "யாருக்கும் சிரமம் கொடுக்காமல், என்னையும் சிரமபடுத்தாமல், என்னை அழைத்துக் கொண்டு போய்விடு..." என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க, ஓரிரு மழைத் துளிகள் முகத்தில் வந்து விழுந்தது.

கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார். மதியம் அடித்த வெயிலுக்கு பலத்த மழை வரும் போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது.. ..கருமை அதிகம் படர்ந்த சூல் கொண்ட மேகங்கள் துரிதமாக ஆங்காங்கே பரவி விரிந்து அழகான நீலவானத்தை தன் மழை மேகங்களினால் மேலும் கறுப்பாக்கி விடும் லட்சியத்தை மிக விருப்பமான மனதுடன்  நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன... 

காய்ச்சல் வேகத்தில் எழுந்து நிற்கவே முடியாத  சிரமத்துடன் எழுந்து நின்ற சதாசிவம் குடித்து முடித்திருந்த கஞ்சி பாத்திரங்களையும், மாத்திரை கவர்களையும் ஒரு கையில் எடுத்தபடி, மற்றொரு கையால் கயிற்று கட்டிலை மடித்து அருகிலிருக்கும் வீட்டு சுவற்றில் சாய்த்து விட்டு தள்ளாடியபடி நடந்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்..

தொடர்ந்து வரும்.. .