
குடங்கள் காத்திருந்தன!
குடிநீரை சுமந்து செல்வதற்காக!
தண்ணீர் வண்டியும் வந்த பாடில்லை!
தாகம் தீரவும் வழியில்லை!
பாதையின் தொலை தூரத்தில்
பார்வையை பதிய வைத்து
அயற்சியை களைந்து தொய்வின்றி
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!
பகலில் பளு சுமந்து
பழுதின்றி பணியாற்றி
குடிக்கும் குடிநீருக்காக
இரவில் கண்விழித்து
இன்னல் படுபவர்கள்.
ஒரு சாண் வயிற்றுக்காக,
எண் சாணையும் வருத்தி
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அனைத்து வர்க்கமும் பாடுபட்டால்,
அரைவயிறு சோறாவது,
அவ்வப்போது பகிர்ந்துண்ண முடியும்
ஆதரவற்ற இவர்களால்!
எப்போதோ இணைத்த தெருக் குழாய்களில்
எப்பொழுதுமே குடிநீர் வரவின்றி, அதன்
சுவாசங்கள் முற்றிலும் நின்று போனதில்
இவ்விடங்கள் தெருநாய்களின் வாசமானது
இவர்களின் பெரும் துரதிர்ஷ்டம்!
தேர்தல் பல வந்தாலும் அடிப்படை
தேவைகளை பெறவில்லை இவர்கள்!
மாலையும் மங்கிச் சரிந்துவிட்டது...
மயங்கிச் சரிந்தது கண்ணும் மனமும்...
இருள் சூழ்ந்து இனி "நாளை" என பகல்,
இருளிடம் விடை பெற்றுச் சென்றது.
இனி இரவில் சிறிது கண் துயின்றால்,
இயலாமையை சற்று விரட்டி விட்டு
பகலவன் வருவதற்குள் பதறி எழுந்து
பணி செய்ய இயலும் இவர்களால்!
காத்திருப்போரின் பொறுமை
சிதைந்து, முனங்கல்களும்
சினங்களும் தடங்கலின்றி
வெளிவந்தன..முடிவில் வந்தது....
குறை தீர்க்கும் குடிநீர் அல்ல!
குமைந்த நெஞ்சங்களின்
வெறுப்பும் வேதனையும் ஏற்படுத்திய
வெதும்பல்களின் விளைவால் வந்தது
வழி பார்த்திருந்த இவர்களின் விழி நீர்!
இவர்களின் விழிநீரை சேகரித்து
வடித்திட்டு வீதிகளின் குழாய்களில்
வாகாய் ஓட விட்டிருந்தாலும்,
அத்தனை தெருக்குழாயிலும்
அன்புடன் சிறிது நேரம்
ஆதரவாய் கொட்டியிருக்கும்.
இனி நாளை பார்த்துக் கொள்ளலாம்
என்ற( அவ) நம்பிக்கையுடன்
களைப்புடன், கனத்த மனதுடன்,
கலைந்து போனார்கள் அவர்கள்.
குடங்கள் மட்டும் மறுபடியும்
குறைவறவே காத்திருந்தன!
நாளை கண்டிப்பாக (வாரா) வரும்
குடிநீரை சுமப்பதற்காக !!!