Saturday, November 23, 2019

தகுதி...!


வீடு ஒரு மாதத்திற்கும் மேலாகவே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. தினமுமே பரபரப்புத்தான். காலையில் பள்ளிச்செல்லும் குழந்தை பரத், ஆபீஸ் வேலைக்கு பறக்கும் மகன், மருமகள் என ஒவ்வொரு நாட்களுக்கும் விரைவுக்கு பஞ்சமில்லை. இப்போது அதற்கும் ஒருபடி மேலாகவே அனைவரும் அதனுடன் ஓடிக் கொண்டிருந்தனர். நாட்களும் "இவர்களின் உத்தரவு பெற்றா நான் நகர வேண்டும்... " என்ற ஒருவித  கர்வ மனப்பான்மையில்  மெள்ள நகர்ந்து செல்லாமல் விரைவாக ஓடிய வண்ணம் இருந்தது.

ஆச்சு..! காலையிலிருந்து காப்பி, டிபன், சமையல் வேலை,  நடுநடுவே சமையலயறை சிங்கிலிருக்கும் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது, இடையே வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளை எடுத்து காயப் போடுவது என  " "என்னுடன் ஓடிய காலை நேரம் மதியத்தை தொட்டு விடவா?" எனக் கேட்டுக் கொண்டே போய் தொடவும்  ஆரம்பித்து விட்டது. குழந்தை வினோத்  தூங்குகிறான். அவன் எழுவதற்குள் காலை வேலைகளை முடித்து விட்டால் மறுபடி பரத் வந்ததும், இருவரும் சேர்ந்து உறங்கும் போது, மதிய,  மாலை நேரங்களில் பாக்கி வேலைகளை முடித்து விடலாம்.  இப்படி பம்பரமாக சுழன்று யாருககாக இத்தனை வேலைகளை பண்ணுகிறோம் என்று மனசு ஆயாசபடும் போது, சிறிது நேரம் ஏதாவது ஒரு புத்தகத்தை புரட்டுவது  என் பழக்கம். அப்படி ஒரு புத்தகத்தை கைகள்  பிரித்ததும் கண்கள் மேயத்துவங்கின.


இந்த கர்வம் என்பது மனித குலத்திற்கு இயல்பான ஒன்று. (வாழ்க்கையில் வித விதமான செல்வங்களான குழந்தை செல்வம், கல்விச் செல்வம், வாழ்க்கையில் செளகரியமாக வாழ்வதற்கு ஆதாரமான பணச் செல்வம், எதுவுமே நினைத்தபடி கிடைத்து விடும் போது வரும் பெருமைப் செல்வம், முதிர்ந்த அறிவு வரவர தன்னைப் போலவே அனைவரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஞானச்செல்வம் என இத்தனை செல்வங்களும் ஒருவனுக்கு படிப்படியாக கிடைக்கும் போது, இது தனக்கு மட்டுந்தான் அமைகிறது என்ற கர்வ குணமும், ஒவ்வொரு மனிதனிடம் தானாகவே அடிமையாகி விடுகின்றன. ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்தே இந்த குணம் தோன்றி விடுமோ? "எனக்கு திருமணம் ஆனவுடனே இந்தக் குழந்தைச் செல்வம் நான் நினைத்தபடி எனக்கு கிடைத்து விட்டது பார்த்தாயா?" என்ற எண்ணம் மனிதர்களிடையே வளர வளர அந்த குழந்தையுடன் சேர்ந்து அதுவும் வளர்ந்து விடும் போலிருக்கிறது. 

இத்தனைக்கும் மூலக்காரணம் அவரவர் கொடுப்பினை, இறைவன் தரும் வரங்கள் என்ற அதிர்ஷ்டம்தான் என்பதை புரிந்து கொண்டால், இந்த கர்வம் உணரப்படும் ஒரு பொருளாக மாறி விடாதா? அப்பொருளை உணர்ந்த பின் நமக்கென்று வாய்ப்பதை சுலபமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரும் போது அந்த மமதை இருக்குமிடம் தெரியாது நசிந்து விடுமே..!! 

ஏன் மனித குலம் அதை புரிந்து கொள்ள மறுக்கிறது.? புரிந்து  கொள்ளாதது மட்டுமின்றி, பிறருக்கும் நம் போன்ற கைப்பிடி இதயந்தானே.. !!அதை நொறுங்கச் செய்கிறோமே என்ற  பச்சாதாப எண்ணங்களையும் அந்த  மமதை தூரத்தில் தள்ளிவைத்து அழகு வேறு  பார்க்கிறது...! நரம்பில்லாத   நாக்கை சுழற்றி வார்த்தைகள் எனும் பந்தைக் கொண்டு பிறரை அடிக்கும் போது  சுவற்றில் அடிபட்ட பந்துக்களாய் அவை திரும்பி வந்து தங்களையும்  தாக்க எவ்வளவு நேரமாகும் என்பதை செருக்கின்  அறிவு சிறிதேனும் ஏன் புரிந்து கொள்ளாது போகிறது..? 

இந்த மாயை நிரம்பிய  உலகத்தில் வாழும் ஒவ்வொரு நொடியும் மனமானது இறைவனை நினைத்தபடி இருந்தால்,  ஆணவம், மமதை, கர்வம், செருக்கு என்ற இந்த குணங்கள் தலை தூக்கி மனம் வீசும் புயல் காற்றுக்கு தோதாக ஆடி யாருக்கும் சேதத்தை விளைவிக்காமல், செல்லரித்த வேரற்ற மரங்களாய் வீழ்ந்து விடும் இல்லையா?

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி விட்டு எழுந்தேன். மனம் ஏனோ ஒரு நிலையில்லாமல் தவித்தது. வாழ்ந்த காலங்கள் வரிசையாய் நினைவுக்கு வந்தன. இதில் கர்வம் கொள்ளும் அளவுக்கு  என்று நடந்திருக்கிறது...?  அதற்கும் ஒரு தகுதி வேண்டுமே...! அந்த தகுதி தானாகவே வருமா? இல்லை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

மனசு சுற்றி, சுற்றி வந்து பழையனவற்றை நினைத்துப் பார்த்தது. . "தினமும்  வேகமாக  சாப்பிட்ட உணவை அசை போடும் மாடு கூட ஒரிடத்தில் அமர்ந்தபடி எதையும் நினைக்காமல், கொள்ளாமல் அசை போடுவதிலேயே குறியாக மனதை வைத்துக் கொள்ளும்." ஆனால் அந்த சக்தியும் மனிதருக்கு இல்லை. மனம் அலை பாய்ந்தபடி அசை போடக்கூட நேரமில்லாமல் மென்மேலும், பாரங்களை ஏற்றியபடி, ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றில்லை.. என்றைக்குமே அது அப்படித்தான்..!

 பன்னிரெண்டரை மணிக்கு ஸ்கூல் வேன் வந்து விடும்.. இரண்டு மாடி படிகளில் இறங்கி  வீட்டு வாசலில் இறக்கி விடும்  குழந்தை பரத்தை அழைத்து வர வேண்டும். அதற்குள் உறங்கி கொண்டிருக்கும் வினோத்தை எழுப்பி அவனுக்கு கொஞ்சம் வயிற்றுக்கு ஏதாவது ஆகாரம் தந்து விட வேண்டும். அப்புறம் பரத் வந்ததும், அவனுடன் இவனும் மல்லுகட்டத் தொடங்கி விட்டால் ஏதும் சாப்பிட மாட்டான். மறுபடி தினசரி கடமைகளில்  சக்கரமாக மனது சுழல ஆரம்பித்தது.

என்னங்க...! நீங்க வர்ற திங்கள் கிழமைக்கு லீவுக்கு சொல்லிட்டீங்களா? இன்னமும் ஒரு வாரந்தானே இருக்கு..! நல்லபடியா இந்த "இண்டர்வியூ" லே செலக்ட் ஆகணும். அப்பத்தான் நல்லாயிருக்கும். " மருமகள் என் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரத்துக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்த நான்  "வினோதா..! இப்பவே அவன் ரொம்ப களைச்சு வர்றான். இது  ஒத்துக்குமான்னு கொஞ்சம் பாத்துக்கம்மா..!" என்றதும், அவள் முகம் லேசாக மாறியது.

"நீங்க கொஞ்சம் இதிலெல்லாம் தலையிடாமே இருங்க.." என்ற முகபாவம் வார்த்தைகளில் சற்று மெருகேற, "நானும் எவ்வளவு நாளா சொல்லிகிட்டே இருக்கேன். உங்க பையன் ஆரம்பத்திலே எடுத்த இந்த முடிவு சரியில்லைன்னு.. எங்க ஆபீஸ்லே கூட வேலை பாக்கிறவங்க இதை விட பெரிய இடமெல்லாம் ட்ரை பண்ண கூடாதான்னு கிண்டல் பண்றாங்க..! இத்தனைக்கும் உங்க பையனுக்கு அன்னைக்கு தேதியிலே லீவு கூட கிடைச்சிடும்....! எனக்குத்தான் போராடி வாங்கனும். ஏன்னா என்னோட வேலை அப்படி...!! என்றதும் என் மகனுக்கு லேசாக  வந்த கோபம் கொஞ்சம் திசை திரும்பி என் மேல் அடித்தது.

"அம்மா...! உனக்கொண்ணும் தெரியாது. நீ இன்னமும் அந்த காலத்திலேயே இருக்கே..! உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு..! எதுக்கு எல்லாத்தியும் மூக்கை நுழைச்சு அவஸ்த்தை படுறே..! என்றபடி எழுந்து  அவன் அறைக்குள் போனான்.

எனக்கு காரணமில்லாமல், கர்வத்தின் நிலைபாடு பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒரே குடும்பத்தில் பிரிக்க முடியாத பந்தத்தில் இருந்தால் கூட, தன்னை விட ஊதியக் குறைவோ, இல்லை, வேலைகளின் தரக்குறைவோ பிறருக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலே அதுவும் கூட ஒரு வித கர்வத்தை எதிராளி மனிதருக்கு உண்டாக்கும் என்று தோன்றியது. இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை எனவும் புரிந்தது.

எப்போதும் போல், வார்த்தைகளின் தாக்கம்  கொஞ்சம் வலித்தாலும், இயல்பாக அதை தாங்கி பழக்கப்பட்ட மனது சமாதானபடுத்திக் கொண்டது.  ஒன்றுமே  தெரியாததால்தான், கணவருக்கு வந்த குறைந்த சம்பளத்தில், செட்டும் கட்டுமாக குடும்பம் நடத்தி, தனக்கென்றோ, தன் கணவருக்கென்றோ, எதுவும் ஆசைப் பட்டதை வாங்கிக் கொள்ளாமல் வாழ்ந்து, மகனையும், மகளையும் படிக்க வைத்து இருவருக்கும் தகுந்த வாழ்க்கைத் துணைகளை தேடி வைத்த பின்னர், தீடிரென வந்தழைத்த காலனின் பின் சென்ற கணவரின் மறைவையும் தாங்கியபடி, தன் உழைப்பை இவர்களுக்கு மட்டுமே அளித்தபடி இப்படி  உலாவ முடிகிறதோ...!! மனதில் எப்போதும்  தானாக வந்து மறையும் சின்ன சின்ன  கோபங்கள்  இன்றும் தலைகாட்டி மறைந்தன. தன் மனதும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கர்வத்தின்பால்  நிரந்தரமாக வசப்பட்டு விடுமோ? என எண்ணிய அடுத்த கணம்  மெல்லிய இளநகை என் மனதுள் உருவாக அங்கிருந்து பேசாமல் நகர்ந்தேன்.

மறுநாள் காலை எழுந்தவுடன் ஆபீஸுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வினோதினி பரத்தை  பள்ளிக்கு ரெடி செய்து விட அவன் எழுப்பச் சென்றவள் "ஐயோ..! ஏன் இப்படி குழந்தைக்கு அனலா கொதிக்குது..! சங்கர்...சங்கர்... இங்கே வாங்களேன்..!" என்றலறிய கூச்சலுக்கு, குளியலறைக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்த என் மகனும், இவர்கள் ஆபீஸ் புறப்படுவதற்காக சமையல் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நானும் பதறி அடித்துக் கொண்டு படுக்கையறைக்குள் சென்றோம்.

குழந்தைக்கு தீடிரென காய்ச்சல் வந்தது எல்லோருக்குமே கொஞ்சம் பயத்தை ஊட்டியது. குழந்தையை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று வந்த பின், சற்று தாமதமாக, அவர்கள் இருவரும் அலுவலகம் புறப்பட்டு சென்றார்கள். போகும் போது என்னென்ன மருந்துகள் தர வேண்டுமென மாறி, மாறி இருவரும் பத்து தடவை கூறிய பின் "என்னதான் அவனுக்கு சாப்பிட கொடுதீர்கள்? ஏதாவது அவனுக்கு ஒத்துக் கொள்ளாததையெல்லாம் அவன் கேட்டவுடனே எடுத்து தந்திடுவீங்களா? இரண்டு பேரை பாத்துக்க முடியல்லையா உங்களுக்கு? அதை விட உங்களுக்கு வேறே என்ன வேலை? எனக்கு இப்படியெல்லாம் அடிக்கடி  லீவு எடுக்க முடியாது.. நான் ஒருத்தி இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிலைன்னா , உங்க மகன் சம்பளத்தை கொண்டு எப்படி நினைச்சபடி நல்லா வாழறதாம்.! அதனால்தான் இப்படி படிச்சு படிச்சு சொல்றேன். " என்று படபடத்தபடி புறப்பட்டுச் சென்றாள் வினோதினி.

இரண்டொரு நாளில், மருத்துவர்  தந்த மருந்துகள் உதவியுடன் பரத் குணமாகி வந்தான். தினமும் காலை வேலைக்குச் செல்லும் முன், "என்னங்க..  நாள் நெருங்கிடுச்சு..! கொஞ்சம் தயார் படுத்திக்கோங்க.. எனக்கு டயமே இல்லை.. நான் வந்துதான் சொல்லனும்னு அலட்சியமாக இருக்காதீங்க!!" நல்ல வேளை! பரத்துக்கு குணமாயிண்டு வர்றது. இப்போ பார்த்து இப்படி ஆயிடுச்சேன்னு ரொம்ப கவலையாயிருந்தது...! என்று என் மகனை விரட்டியபடிச்  சென்றாள் விநோதினி. அவள் உஷ்ணப் பார்வைகள் என் பக்கம்  திரும்பும் நேரமெல்லாம்  " நீதான் இதற்கு காரணம்...! என்பது போல் சுட்டதாக எனக்குத் தோன்றியது.

அன்று காலை புலபுலவென சீக்கிரமே விடிந்து விட்டதாகத் தோன்றியது. "ஒரு வாரத்தின் பரபரப்பு  இன்னுமும் கொஞ்ச நேரத்தில் நான் அடங்கி விடுவேன்" என பயமுறுத்தியதில், ஓடும் ஒவ்வொரு விநாடிகள் கூட நிமிடங்களுக்கு சற்று பயந்தது மாதிரி தெரிந்தன.

"எங்கே போனாய் வினோ? உன்னைக் காணோமேயென்று பார்த்து சிறிது நேரம் தேடியதில் நான் தயார்படுத்திக் கொள்ள தாமதமாகி விட்டது. சொல்லிக் கொண்டு போகக் கூடாதா? ஃபோனை வேறு வீட்டிலேயே வைத்து விட்டு அப்படி எங்கே போய் விட்டாய்.? " என்ற என் பையனின்  உரத்த குரல் கேட்டு அத்தனை நேரம் அவளை காணோமே என்று நினைத்த நானும் வாசல் பக்கம் வந்தேன்.

" நீங்க அதுக்குள்ளே கிளம்பியாச்சா? வேறே எங்கேப் போகப் போறேன்? நீங்க குளிக்கிறதுகுள்ளே பக்கத்திலே பிள்ளையார் கோவிலுக்குச் சென்று ஒரு சுத்து சுத்திட்டு, தரிசனம் செய்து ஒரு சிதறு தேங்காய் போட்டு வந்தேன். போற வேலை நல்லபடியா நடக்க வேண்டாமா? என்று  விநோதினி திரும்பி என்னை பார்த்தவள் "ஒரு இருபத்தோரு கொழுக்கட்டையாவது பண்ணி, வீட்டு பிள்ளையாருக்கு இன்று கை காட்டி விடுங்கள். இன்னைக்கு கிளம்பறதுக்கு எத்தனையோ தடைகள்..! நாலு பக்கமும் நம்மாலானதை கடவுளுக்கு செய்தால்,  "இண்டர்வியூ" நாம எதிர்பார்க்கற மாதிரி சுமுகமாக அமையும்."  என்றாள் உத்தரவு பொதிந்த குரலில்.

நான் மெளனமாக தலையசைத்தேன்.

வெளி நாடு சென்று நல்லபடியாக வாழ்ந்து வரும் மகளும், மருமகனும்  தம் வாழ்க்கை தம் வசதி என வாழ்ந்து வருகின்றனர். என்றைக்காவது இந்த அம்மாவின் நினைவு என் மகளுக்கு வரும் போது ஃபோனில் அரைமணி நேரம் மகள்   பேசுவாள். குழந்தைகளையும் பேச சொல்வாள். குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, பிற திறமைகள் என்ற  பெருமைகளே அதில் பாதி நேரம் எடுத்துக் கொள்ள, மீதியில் சிறிது நலம் விசாரிப்பும், பெரும்பான்மை "நானோ இங்கிருக்கேன். என் மாமியார், மாமனாரே மூணு மாசத்துக்கு மேலே இங்கு தங்க முடியாம கிராமத்து நிலம், வீட்டையும் பாத்துக்க முடியாம போயிட்டும்,வந்து கிட்டும்  இருக்காங்க...! நீ எப்போதும் அண்ணனிடமும், அண்ணியிடமும் அனுசரித்து நடந்து கொள்..! இதுதான் உனக்கும் நல்லது..! "என்ற ரீதியிலும், பேச்சு முடியும்.

மகனும், "தன் குடும்பம்" என்ற பக்குவம் வரப்பெற்றவனாய், எந்த ஒரு கருத்துக்கும் "எதற்கும் பேசாமல் இரு.! எதையும் கண்டுக்காதே.. ! அதுதான் உனக்கும், எனக்கும் நல்லது. !!" என்று மட்டும்  பேசியே நகர்ந்து கொள்வான்.  ஆக இருவருக்கும் நம் அம்மா என்பவள் தங்கள் "அடக்கு முறையில் இருப்பவளே" என்ற எண்ணங்களில் ஊறிப் போய் பல வருடங்கள் ஆகி விட்டன.

அன்று படித்த புத்தகத்தின் வாக்கியங்கள் கண் முன் நிழலாடின.  அம்மாவைத் தவிர்த்து, பிறரை நோக வைக்காத மனம் கொண்டபடி இவர்கள் இருவரையும் நல்லபடியாகத்தான்  வளர்த்திருக்கிறோம்" என்ற கர்வங்கூட ஒரு சில சமயம் எனக்கும் வந்திருக்கிறது. அது மட்டுமல்ல.. !! "என்னால்தான், என் ஒருத்தியால்தான் இத்தனையும் சமாளித்து கொண்டு, எதையும் பொருட்படுத்தாது ஒரு நல்ல "அம்மாவாக"வாழ முடிகிறது "என்ற செருக்கும் அவ்வப்போது  வந்திருக்கிறது. வேறு எந்த பொழுதிலும், பிறந்ததிலிருந்து எதற்கும் கர்வம் காட்டாத மனம் இந்த இரு நேரங்களில் அந்த கர்வம் தானாக வந்து போவதை என்னால் தடுக்க இயலவில்லை. என்பதே மாபெரும்  உண்மையாய்    விஸ்வரூபம்  எடுத்து தோன்றி மறைந்தது.

இதோ...! காலை வேலைகள் இனிதே முடித்த கையோடு டிபனையும் சாப்பிட்டு விட்டு, குழந்தை வினோத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அவசரமாக என் மகனும், மருமகளும்  பரத்தையும் அழைத்துக் கொண்டு "இண்டர்வியூ" க்கு கிளம்பி விட்டனர் அவர்கள் வருவதற்குள் குழந்தை வினோத்தை கவனித்து உறங்க பண்ணி விட்டு, மதிய சமையலை முடித்து,  மருமகள் விருப்பபடி கடவுளுக்கு கொழுக்கட்டை செய்து படைத்து, குழந்தை "பரத்துக்கு" அவர்களின் விருப்பப்படியே அந்தப் பெரிய பள்ளியில்   நடக்கும் இந்த அட்மிஷன்   "இண்டர்வியூ" வில் வெற்றிப் பெற்று  அவனுக்கு பிரி. கே .ஜி க்கு நல்லபடியாக இடம் கிடைத்து அவனும் நன்றாக படித்து பெரிய ஆளாக வர  பிரார்த்தனைகள்  செய்ய ஒரு நல்ல அம்மாவாக  மட்டுமில்லாமல் ஒரு நல்ல பாட்டியாகவும் தயாரானேன்.

முடிந்தது..... 🙏....