Showing posts with label லால்பாக். Show all posts
Showing posts with label லால்பாக். Show all posts

Tuesday, February 20, 2024

கண்களுக்கு விருந்து.

பெங்களூர் லால்பாக் எப்போதுமே ஒரு தனிஅழகுதான். அடர்த்தியான மரங்களும், வண்ணமிகு பூக்களுமாக பார்வையில் கண்கொள்ளா காட்சிகளாக விழ, காலாற நடந்தாலே மனதின்  இறுககங்கள் சற்று குறையும்.இங்கு வந்த பின் சில  தடவைகள் சென்றுள்ளோம். ஆனால், வருடந்தோறும் ஆகஸ்ட் ஜனவரி மாதங்களில வரும் மலர் கண்காட்சிக்கென்று சென்று ரசித்ததில்லை. முதலில் செல்லும் போதெல்லாம் அங்குள்ள பசுமையை கண்களால் ரசித்து விட்டு வந்ததோடு சரி... அப்படி கண்கள் எடுக்கும் புகைப்படங்களும், மனதில் சிறிது காலம் பதிந்திருந்து, பிறகு நாங்கள் வேறு மற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு கண்கள் இயந்திரதனமான எடுத்து தள்ளும் புகைப்படங்களின் பாதிப்பால் மாயமாகி மறைந்து போகும். இப்போது (இப்போது என்றால்.. சமீபத்தில் அல்ல...! இது ஒரு வருடத்திய (வருடம் சென்ற வருடமா, அதற்கு முந்தைய வருடமா என நினைவில்லை. வருடத்தை எப்படியாவது நினைவுபடுத்தி கூறினால், என்னை அடிக்கவே வந்து விடுவீர்கள்.:)))) ) நவம்பரில் சென்று வந்த போது எடுத்த படங்கள்..) என் கைப்பேசியில் நிறைய படங்களை என் கண்களுக்கு அவ்வளவாக வேலையை தராமல் எடுத்து குவித்து விட்டேன். (இப்படி ஆங்காங்கே எடுத்த படங்கள் அளவுக்கதிகமாக என் கைப்பேசியில்  தங்கி இருப்பதாக கூகுளாரும், என் குழந்தைகளும் நாளும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.அது வேறு விஷயம்.. .. ) அதை அவ்வப்போது என் பக்கம் பகிரவும் சமயங்கள் எனக்கு வாய்க்கவில்லை. 

 சகோதரி கீதாரெங்கன் அவர்கள் அவரின் தளத்தில் கொஞ்ச மாதங்களுக்கு முன் லால்பாக் மலர் கண்காட்சி படங்களைபகிர்ந்து கொண்டதை பார்த்ததும்,,  (அவர் அவரின் பதிவில் பகிரந்தே வருடங்கள் ஆகிவிட்டது. இதில் அவர் பதிவை பார்த்ததும் என்ற வசனம் ஒரு உலகமகா ரீல்.... என முணுமுணுக்க வேண்டாம். ஹா ஹா.) எனக்கும் நான் அங்கு ஏதோ எடுத்ததையெல்லாம் பகிரலாமே எனத் தோன்றியது. அடர்த்தியான பெரிய மரங்களும், நீண்ட பல வயதான மரங்களை வைத்து செய்த மரச்சிற்பங்களுமாக இங்கு  நிறைந்துள்ளதை பொதுவாக அனைவருமே (அதிலும் இங்குள்ளவர்கள்) அறிந்திருப்பீர்கள். இருப்பினும், என் கைப்பேசியில் ஏதோ  தலை சிறந்த புகைப்படக்கலை நிபுணர் மாதிரி நான் எடுத்ததை பகிரலாமே என பகிர்ந்து விட்டேன். 

ஆழமாக வேரூன்றி அங்குமிங்கும் ஓடியவாறு  இருக்கும் பல பல வருடங்களை கடந்த மரங்கள் பிரமிபூட்டுகின்றன. பால்கனியில் ஒரு தொட்டியில் ஒரு செடியை வாங்கி வைத்து விட்டு தினமும் அது வளருகிறதா,.. தினமும் நாம் விடும் தண்ணீர் அதற்கு போதுமா.... வேறு என்ன உரம் வைக்கலாம்.. என தெனாலிராமன் குதிரை வளர்த்த விதமாக நா(ம்)ன் வளர்க்கும் போது, இவ்வளவு பெரிய மரமாக வளர எப்படியெல்லாம்  பராமரித்து வருகிறார்கள் என ஒவ்வொரு மரங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன பூத்துக் குலுங்கும் பல வகையான பூக்கள், நடந்து செல்ல ஒழுங்கான பாதைகள் அமைத்தல் என இந்தப் பூங்காவின் பராமரிப்பு கண் கொள்ளா காட்சிதான். நடப்பதற்கு மட்டும்  கால்களில் நல்ல வலு இருந்து விட்டால், சுற்றி வர ஒருநாள் போதாது. 

நானே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? புகைப்படங்களை (ஏற்கனவே நேரில் பார்த்து ரசித்திருப்பினும்) பார்க்க வேண்டாமா என நீங்கள் கேட்பது புரிகிறது. (இப்படியாவது ஒரு பதிவு எழுத காரணம் கிடைத்து விட்டதென எழுத ஆரம்பித்த போது  சந்தோஸப்பட்டேன். .இப்போதுதான் இதை வெளியிடும் சந்தர்ப்பம் அமைகிறது. அதற்கு சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ) 































நம் பதிவுலகில் சகோதர, சகோதரிகள் கேமிராவில் எடுத்துப் பதிவாக்கும் புகைப்படங்களுக்கு முன் இது வெறும் சாதாரணந்தான். ஆனாலும், பதிவை படித்து படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்னமும் அங்கு எடுத்த படங்களை அடுத்தப் பதிவில் பகிர்கிறேன். (என்ன கொடுமைப்பா.... இது... என நீங்கள் பொறுக்க இயலாமல் கூவுவது கேட்கிறது... ஹா ஹா.) நன்றி.