Showing posts with label விஷ்ணு. Show all posts
Showing posts with label விஷ்ணு. Show all posts

Thursday, April 2, 2020

ராம நாமம்.

ஸ்ரீ ராம ஜெயம்.

விக்கினங்களை களைபவனே..
ஸ்ரீ விநாயகப் பெருமானே...! உனை
வாயாற பாடுகின்றேன். தப்பாமல்
வந்தெமக்கு வாரி நின் அருளை
வான்மழை போல் தந்தருள்வாய்..

பிறவிப் பிணிகளை களைந்து, மீண்டும்
பிறவா வரம் மட்டும் தர வேண்டி
பிரியத்துடன் பிரார்த்தித்து நிற்கிறேன்.
பிறிதொன்றை வேண்டிலேன். ஆனால்,

கண்ணுக்கு தெரியாமல் எந்நேரமும்
கதிகலங்க வைக்கும், "கரோனா" அசுரனை
கணங்களுக்கு  அதிபதியே..! உன்
காலடியில் வைத்து கசக்கி எறிந்து விடும்
கருணைக்கு கணநேரமும் ஆகாதுனக்கு..

அந்த உமையவளின் அன்பு மகனே.. ,
அகில உலகமும் நன்மை பெற்றிடவும்,
ஆறுதல் தந்து  ஆங்காங்கு காத்திடவும்
அங்குசம் வீசி, அடிமை கொண்டு விடு
அவ்வசுரனின் அசையாத அஸ்திவாரத்தை..
அதை மட்டும் உன்னிடம் இன்று
அன்புடனே மறுபடி வேண்டுகிறேன்.



ஜெயம் என்ற வார்த்தை நம் மனதை உற்சாக படுத்தும்.  கூடவே ராம நாமமும் சேர்ந்து விட்டால், கேட்கவே வேண்டாம்
பொறுமையின் அவதாரம் ஸ்ரீ ராமபிரான். அவருடன் அவர் மனைவியாக இணைந்த சீதா பிராட்டியும்  பொறுமையின் மறு அவதாரமாகிய பூமாதேவியின் மகளாக ஜனித்து பொறுமைக்கு மறு பெயராக விளங்கியவர்.

பாசத்திற்கு அடையாளமான தந்தை, தாயுடனும், நியாயம், தர்மம், அன்புக்கு இலக்கணமாக பிறந்த உடன் பிறப்புகளுடனும், பொறுமையின் சிகரமான சீதா தேவியுடனும் வாழ்ந்து ஒரு சிறந்த சக்கரவர்த்தியாக ராஜ பரிபாலனம் நடத்தி, மானிட வர்க்கத்திற்கு  ஒரு உதாரண புருஷனாக இருநது வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமபிரான்.

அவர் வாழ்வில் அனைத்துமே அன்புதான். அன்புக்கு மட்டுந்தான் அங்கே அங்கீகரிப்பபு. அவரின் அன்புக்கு அனைவருமே கட்டுப்பட்டார்கள்.  அவர்களின் அன்பில் இவரும் கட்டுண்டார். வாழ்வின் இடையில் தோழமையாக வந்த
குகன், சுக்ரீவன், ஹனுமான், வீபீஷணன் என அனைவருமே இவரது அன்பெனும் மழையில் நனைவதற்காக பிறவி எடுத்து காத்திருந்தவர்கள். அகல்யை, சபரித்தாய் இருவரும் தாங்கள் எடுத்த பிறவியில். ராமரின் பாததுளிகள் பட்டு தங்களது  பிறவி பெருங்கடலை கடப்பதற்காக காத்திருந்தவர்கள் .

பகவான் விஷ்ணு ஏழாவதாக மனித அவதாரம் எடுத்து மனிதர்களுக்கு புகட்டிய நீதி போதனைகளை நாம் மறக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராமரின் பிறந்த நாளான நவமி திதியில் நாடு முழுவதும். அவரவர் இல்லங்களில் அவரை கொண்டாடி கோவில்களுக்கும் சென்று அங்கும் அவரை வணங்கி வந்தோம். இவ்வருடம்  அவ்விதம் கொண்டாடும் சூழ்நிலைக்கு  தடங்கல் வந்துள்ளது.

அசுரர்களை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஸ்ரீ மஹாவிஷ்ணு  மனிதனாகவே எடுத்த அவதாரங்களில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மனிதர்களுக்கு பரிச்சயமானவையாக கருதப்படுகிறது. அவ்விதம் இப்போது  அசுரனாக முளைத்திருக்கும், "கொரோனா" என்ற அசுரனை சம்ஹரித்து  உலக மக்களை தன் அன்பால் வழி நடத்தி, இந்த அசுரனின் பிடியில் சிக்கியவர்களை நல்லவிதமாக பலப்படுத்தி  செல்ல நாம் அனைவரும் அவரது பிறந்த நாளான  இந்த நன்னாளில் ஒன்று கூடி அவர் நாமத்தைச் அன்புடன் சொல்லி பிரார்த்திப்போம். அவர் கண்டிப்பாக நமக்காக வருவார். ஏனென்றால் அவர் அன்புக்கு எந்நாளும் கட்டுப்பட்டவர். 🙏🙏🙏🙏🙏🙏.

ஸ்ரீ ராம. ராம, ராம  ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ஸ்ரீ ராமச்சந்திர பிரபோ... என தாரக மந்திரமாகிய ராம நாமாவை ஜபிப்போம். நம்மை சுற்றி ஒலிக்கும் இந்த நாமங்கள் நம் நல்வினையை  பலப்படுத்தட்டும். 🙏🙏🙏

அவசரமாக ஏதோ மனதுக்கு பட்டதை எழுதிய பதிவிது.. .இதில்  அட்சர பிழைகள் ஏதும் இருந்தால் பொறுத்தருளுங்கள் . அனைவருக்கும் அன்பான நன்றிகள். 

Sunday, June 14, 2015

அமிர்தம்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்த சரிதம்.

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை மிகுதியாக, அசுரர்களால் தேவர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்த்துப் போரிட சக்தி இல்லா தேவர்கள் ௯டி யோசிக்கும் போது, பிரம்மன், இந்திரன், நாரதர் போன்றோர் தேவர்களின் நன்மையை உத்தேசித்து, “பாற்கடலை கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால், தேவர்கள் மிகுந்த பலமடைவர்அதன் பின் அவர்களை ஜெயிக்க யாராலும் இயலாது.!” எனச் சொல்ல, தேவர்கள் பாற்கடலில் அமிர்தம் கடையும் யோசனைக்கு சம்மதித்தனர். ஆனால், பலமுடன் இருக்கும் அசுரர்களும் தங்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், காரியம் விரைவாகவும், சுலபமாகவும் முடியும் என தேவர்கள் அனைவரும் ஏக மனதாக நினைக்க தேவர்கள் சார்பில் அசுரர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது

அழைப்பை பெற்ற அசுரர்களும் ஒன்று ௯டி, இந்த தேவர்களுக்கு உதவுவது போல் நாமனைவரும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அமிர்தம் கடைவோம். அமிர்த கலசம் கையில் கிடைத்ததும், தட்டிப் பறித்துக் கொண்டு, அதன் பலனை முழுவதுமாக நாம் அடைந்து விடலாம். ஏற்கனவே பலமிழந்த தேவர்களுக்கு ஒரு சொட்டு ௯டத் தராமல் நாமே அனைத்தையும் உண்டு விடலாம். பாவம் தேவர்களுக்கு வேலை மட்டும் மிஞ்சும். அமிர்தம் முழுவதும் நமக்குத்தான்.! அதன் பின் அமிர்த பலத்தின் பெரும் உதவிகொண்டு அவர்களை அடித்துத் துரத்தி விட்டு மூவுலகத்தையும் நாமே ஆண்டு வரலாமென", அசுரர்களின் குரு சுக்ராச்சாரியாரின் முன் அழகாய் முடிவெடுத்தனர்.

மஹா விஷ்ணுவின் உறைவிடமாகிய திருப்பாற்கடலில், அமிர்தம் கடைய அவரின் அனுமதியோடு, “அமிர்தம் உங்களுக்குத்தான்.! அசுரர்களின் முழு உழைப்போடு அவர்களின் கண் முன்னாலேயே, அமிர்தம் மொத்தமும் உங்களை வந்தடையும். கவலை வேண்டாம்.! " என்ற பரந்தாமனின் ஏக  ஆசியோடு, தேவர்களும், அசுரர்களும் ஒன்று கலந்து குறிப்பிட்ட வேளையில் ஒரு மனதாக இறங்கினர். பெரிய மலையாகியமந்திர கிரியைமத்தாக அமைத்துக்கொண்டு. பரமேஷ்வரனின் கழுத்தை அலங்கரிக்கும் நாகாபரணமாகியவாசுகிஎன்ற பாம்பை கயிறாகக் கொண்டு, நல்லதொரு நாளாம் தசமி திதியன்று, மும்மூர்த்திகளையும் தொழுதவாறு தேவர்கள் அமிர்தம் கடையத் துவங்கினர்.


ஒரு கால கட்டத்தில் மந்தரகிரி மலை பாற்கடலில் மூழ்கத் தொடங்க, தேவர்கள் எம்பெருமான் நாராயணனைத் துதிக்க, மகாவிஷ்ணு பெரும் ஆமை வடிவை எடுத்து மந்தரகிரியின் அடிபாகத்தை தன் முதுகில் தாங்கிப் பிடித்தவாறு மலை மூழ்குவதை தவிர்த்து நிறுத்தினார். இதுவே அனைவரையும் காப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரமாகிய ௯ர்ம அவதாரம் ஆகும். தேவர்கள் நாராயணனை மேலும் துதித்தபடி தெய்வ சிந்தனையுடன் இருந்தனர்.

வாசுகியின் சிரமத்தைக் குறைக்க அதன் வால் பகுதியை பிடிக்கச் சொல்லி அசுரர்களை தேவர்கள் கேட்டுக்கொண்டும், ஆணவத்தின் பிடியிலிருந்த அசுரர்கள் அதைக் கேளாது வாசுகியின் தலைப் பகுதியை பிடித்துக் கொண்டனர். அவர்களின் அசுர பலத்தின் அழுத்தமும், மூர்க்கதனமாக இழுக்கும் வேதனையும் பொறுக்காது, எரிக்கும் விஷத்தை வாசுகி கக்கியது. மூவுலகினையும், அழிக்கும் ஆலகால விஷமாக அது பரவி உருவாக, அதன் பிடியிலிருந்து தப்பிக்க, அனைவரையும் காத்தருள சர்வேஸ்வரனை தேவர்கள் துதித்துப் போற்ற, கைலாய நாதனாகிய ஈஸ்வரன் அந்த விஷத்தை எடுத்து வருமாறு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரருக்கு ஆணைப் பிறப்பிக்க, சுந்தரர் விரைந்து பாற்கடல் சென்று அந்த விஷத்தை தன் சக்தியினால், உருட்டி நெல்லிக்கனியளவு கையில் ஏந்தி வந்து சர்வேஸ்வரரிடம் சமர்ப்பித்தார்.
சுந்தரர் கொண்டு தந்த விஷத்தை யாருக்கும் தொந்தரவின்றி அழிக்க எண்ணம் கொண்ட ஈஸ்வரன் தன் வாயிலிட்டு அமுதமென விழுங்கினார். அவர் வயிற்றினில் இருக்கும் அண்ட சராசரங்களையும் அதில் வாழும் எண்ணற்ற கோடி ஜீவன்களையும் காக்க வேண்டிஇறைவனின் அருகிலிருந்த பார்வதி தேவி சட்டென தன் திருக்கரத்தால், நாதனின் கழுத்திலேயேவிஷம் அமிர்தமாக மாறட்டும்என வேண்டிக்கொண்டு அவர் கழுத்தை தடவ தேவியின் வேண்டுதலால், விஷம் அமிர்தமாக மாறி ஈஸ்வரனின் திருகழுத்தை கருநிறத்தோடு அலங்கரித்தது. அன்றிலிருந்து இறைவன் "திருநீலகண்டன் எனப் பெயர் பெற்றார். இப்படியாக அவ்விஷமானது இறைவனுக்கும் சிரமம் ஏற்படுத்தாது, எவ்வுயிருக்கும் ஆபத்தை விளைவிக்காது அழிந்து போனது.


பாற்கடலிலிருந்து அனேக விதமான ஔஷதங்கள் உதயமாகி, தேவந்திரன் மகாவிஷ்ணு, மற்றும் அனேகரிடம் தத்தம் விதிப்படி சரணடைந்தன. இறுதியில் அமிர்த கலசம் ஏந்தி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து உதயமாக, தேவர்களுடன் போரிட்டு ஜெயித்து அக்கலசத்தை அசுராள் பிடுங்கிச் சென்றார்கள். தேவர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்க, மகாவிஷ்ணு மாயையாகிய மோகினி அவதாரத்துடன் வந்து அசுரர்களை மயக்கி ஏமாற்றி, பின் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறி அவர்களின் தேக பலக்குறையை நிவர்த்தி செய்தார். அதில் சுவர்பானு என்பவன் அசுரனாக இருந்தாலும் மகாவிஷ்ணுவின் சூழ்ச்சி புரிந்து தேவர்கள் போல் உருமாறி சூரிய, சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து அமிர்தம் பருகினான். அப்போது மோகினி உருவத்திலிருந்த மகாவிஷ்ணுவுக்கு சூரிய, சந்திரன் அவன் அசுரன் என குறிப்பால் உணர்த்த அதைப் பார்த்த மகாவிஷ்ணு தன் கையிலிருக்கும் அகப்பையால் அவன் தலையை கொய்து எறிந்தார், தலை வேறு , உடல் வேறாகினும் அமிர்த பலத்தால் உயிருடனிருந்த சுவர்பானு பின் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு வேண்டி விமோசனமும் வேண்ட, மனமிறங்கி மகாவிஷ்ணு அவர்களின் அங்கஹீனமான உருவத்தை திருத்தியமைத்து உடலிழந்த உருவத்திற்கு பாம்பின் உடலையும், தலை இல்லா உடலுக்கு பாம்பின் தலையையும் தந்து ராகு, கேதுஎன்ற பெயருடன் இன்றளவும், நவகிரகங்களில் அவர்களும் ஒன்றாகும் அருளைத் தந்தார் .

தேவர்களுடன் இணைந்து அமிர்தம் பருகிய காரணத்தால், ராகுவும், கேதுவும் தங்களின் அசுர குணம் மறைய பெற்றவர்களாய், மற்றைய கிரகங்களுடன் இணைந்து மக்களுக்கு அவரவர் வினைக்கேற்ப நல்லதைச் செய்து வருகின்றனர். ஆனாலும், சூரிய, சந்திரன் காட்டிக் கொடுத்தமையால்தான், விமோசனம் பெற்றாலும், தன் தேகம் வித்தியாசமான தோற்றத்துடன் இருவேறாக ஆகியது என்ற ஒரு மனக்குறையில், மன விரோதத்தில்  சுவர்பானு ஆண்டுதோறும், அவர்களை உலகத்தில் பயணிக்கவிடாது ஒரிரு முறைகள் தன் சக்தியைக் கொண்டு மறையச்செய்ய வரம் பெற்றதாகவும், அந்நிகழ்ச்சியே, சூரிய, சந்திர கிரகணமென்றும் புராணங்கள் உறுதிப் படுத்துகின்றன.


இந்த தேவர்கள் அமிர்தம் உண்ட சரிதத்தை நான் விவரித்து எழுத வேண்டுமென  நினைத்ததின் காரணம், நான் ஒரு செய்தியை படித்ததுதான். அன்று ஈஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை அழிக்காது பெருகவிட்டால் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து என்பதற்காக  நமக்காக அதை தானே உண்டு அது அமுதமாக மாறி, திருநீலகண்டர் எனும் காரணப் பெயருடன், திருவிளையாடல் புரிந்து அனைவரையும் அன்போடு காத்து ரட்சித்தார் என்கிறது வியக்க வைக்கும் புராணங்கள்.
ஆனால் இன்று அமுதமாய் இனிக்கும் ஒரு உணவே ஆலகால விஷமாய் மாறி ஓர் உயிரை மாய்த்த சம்பவத்தை குறித்த ஒரு செய்தியை கண்ட அதிர்ச்சியில்  (வாட்சப்பில் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வந்த ஒரு செய்தி.) காலத்தின் கோலம் இப்படி மாற்றி விட்டதே என்ற வருத்தத் தோடு அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்தச் செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
                
                  இருப்பினும், வந்த அந்தச்செய்தி இதோ….

நண்பர்கள் கவனத்திற்கு...படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...

                                                                               படித்ததற்கு நன்றிகள்....

Tuesday, May 5, 2015

முருகா! உனையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

இந்த உலகம் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற ரீதியில் இயங்கி வருவதாக இந்து மத புராணங்கள் மெய்படுத்துகின்றன. இதில் படைத்தல் தொழிலை மும் மூர்த்திகளில் முதல்வரான பிரம்மா எல்லா உயிர்களையும் அதன் வினைப் பயன்களைக் கொண்டு மறுபிறவி எடுத்து வாழ்வதற்கான பணிகளை செய்து வந்தார். அவருக்கு படைத்தல் தொழிலில் உதவியாக இருக்க வேண்டி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு மகன்களை தன் மனதிலிருந்து உதிக்க செய்து, மானசீக புத்திரர்களாக உருவாக்கி தான்  படைத்து வரும் பணியில் ஈடுபடுத்த முனைந்தார், ஆனால் அவர்கள் உலகத்தின் மீது எவ்வித பற்றுமின்றி தந்தையின் படைக்கும் தொழில் மேலும் இச்சையின்றி, எந்த விதமான ஆசைகளுமின்றி, ஞான மார்க்கத்தின் மேல் அதீத பிடிப்புடன் தவத்தில் ஈடுபட்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டு ஞானிகளாகி விட்டனர்.

ஒரு நாள் இதில் சனத்குமாரரை தன் மகனாக பிறப்பெடுக்க வைக்கும் நோக்கத்தில் பரமேஷ்வரரும், பார்வதி தேவியும் தவத்தில் ஈடுபட்டிருந்த சனத்குமாரர் முன் தோன்றினார்கள். எவ்வித ஆசைகளின்றி, எவ்வித நோக்கமுமின்றி, தவத்தில்  அமர்ந்திருந்த சனத்குமாரர், இவர்களை கண்ட பின்னும், “நான் இவர்களை வேண்டி தவம் ஏதும் செய்ய வில்லையே இவர்கள் எதற்கு இங்கு வர வேண்டும்?” என்ற சிந்தனையோடு, மீண்டும் ஏதும் பேசாமல் தன் நிஷ்டையை மேலும் தொடர்ந்தார். தங்களை கண்டு விட்டும், காணாதது மாதிரி கண்மூடி அவர் அமர்ந்திருந்த நிலைகண்டு, “சனத்குமாரா.! நீ ஆசைகளற்ற பெரிய மகா ஞானியாயிருக்கலாம். ஆனால் உலகத்தை காத்து ரட்சிக்கும், மாதா பிதாவாகிய நாங்கள் வந்த பின்னும் வாருங்கள்எனக் ௬றி வரவேற்கும் பண்புடன் நடந்து கொள்ளாவிடினும், வந்த நோக்கம் என்னவென்று கேட்காத அளவுக்கு உன் கர்வம் மிகக் ௬டி விட்டதா? என சிவ பெருமான் கோபப் படுவது போல் பேசினார்.
அதற்கு அவர் இந்த உலகத்தில் அனைவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன். அதில் நீங்களும் ஒருவர்தான்! இதில் கர்வம் எங்கிருந்து வந்தது? மேலும், நான் ஏதும் எதிர்பார்த்து தங்களை வேண்டி தவமிருக்க வில்லையே.! அதனால்தான் அமைதியாயிருந்தேன்.” என்று அஞ்சாமல் பதிலுரைக்க, அவர் அஞ்சாமைக்கண்டு உள்ளுக்குள் மகிழ்வுற்ற சிவபெருமான்., “சரி! நாங்கள் வந்தது வந்து விட்டோம். உனக்கு ஏதேனும் வரம் தர பிரியப் படுகிறோம், கேள்! என்ன வரம் வேண்டும்? என்றார்.
  
ஆசைகளின் மிகுதியில் அதை வேண்டினால் அல்லவா இந்த வரம் பெறும் முயற்சிகள் எல்லாம். ! அவர்தான் எந்த ஆசைகளும் இல்லாதவராயிற்றே.! இதைக்கேட்டு சனத்குமாரர் சற்றும் அஞ்சாது நகைத்தார். “வரமா? எனக்கா? நான் விருப்பு வெறுப்புகளற்றவன். எனக்கெதற்கு வரங்கள்.? உங்களுக்கு ஏதாவது வேண்டுமாயின் கேளுங்கள்! அதை வரமாக நான் தருகிறேன். என்றார் சிறிதும் அச்சமின்றி.

அவர் அச்ச படாமல் பேசுவதையோ, பட்டும் படாமல் பேசுவதையோ சிவபெருமான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஒரு நிகழ்வுக்காகத்தான், இந்த வார்த்தையை சனத்குமாரரிடம் பெற வேண்டித்தானே சிவபெருமானும் அங்கு வலுகட்டாயமாக எழுந்தருளியிருக்கிறார்.

எனவே புன்னகையுடன், சரி.! நானே கேட்கிறேன் . நீ என் மகனாக வந்து பிறக்க வேண்டும். அந்த வரத்தை கொடு! என்றார்.
கொடுப்பதை தவிர வேறு ஏதும் பெற்றறியாத சனத்குமாரர் சரி! ஆனால், நீர் மட்டுமே என்னை பெற வேண்டும். ஒரு தாயின் சம்பந்தம் இல்லாமல்தான் நான் பிறக்க வேண்டும். இதோ உங்கள் அருகிலிருக்கும் தாய் உமா தேவியும் என்னிடம் ஏதும் கேட்கவில்லை.
ஏதும் கேட்காத போது ஒருவருக்கு எந்த வரமும் தரக் ௬டாது என்கிறது சாஸ்திரம்!. எனவே அந்த தாய் வயிற்றில் கர்ப்பமாக என்னை சுமந்து பெறாமல், நீங்களே என்னை தோற்றுவிக்க வேண்டும் என்றார்.
இதைக்கேட்ட பார்வதிதேவி மிகவும் வருத்தமுற்றாள். இதோ பார்.! சனத்குமாரா.!  இது நியாயமேயில்லை.! சிவமும், சக்தியும் சரி பாதிதானே.! ஒரு கணவர் என்பவரின் எண்ணங்களுக்குள் மனைவி என்பவளும் அடக்கந்தானே! என்னையும் உத்தேசித்துதானே அவர் உன்னிடம் வரம் கேட்கிறார். நான் வேறு தனியாக உன்னிடம் வரமாக ஏதாவது கேட்க வேண்டுமா? என்றதும், தாயே! ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது ஒரு நியதி அல்லவா.! முன்னொரு காலத்தில் பஸ்மாசூரனுக்கு உன்கணவர்அவன் கையை யார் தலையில் வைத்தாலும் எரிந்து சாம்பலாகி விடவேண்டும்என அவன் தவமிருந்து கேட்ட வரத்தை அவன் கேட்டவுடன் தந்து விட்டார். அந்த துஷ்டன் உன் கணவரையே சோதித்துப் பார்க்க யத்தனித்தான். அந்த நேரம் உன் கணவர் அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைய, நீயோ துக்கத்தில் தண்ணீராய் மாறி சரவண பொய்கை என்ற நீர் நிலையானாய்.! இனி வரும் பொழுதினில் நான் உன் கணவரின் நெற்றிக் கண்ணிலிருந்து தீயின் ஜ்வாலையால் உருவாக, அதை சரவணப் பொய்கையாகிய நீர் நிலையில் உன்னிடமே அவர் சேர்ப்பார். எப்படியும் உன்னிடம்தான், உன் தொடுதலில்தான், நான் வளர்வேன். இப்போது உனக்கு திருப்தியா.? என்றதும், பரமேச்வரனும் பார்வதி தேவியும் அக மகிழ்ந்து அப்படியே ஆகட்டுமெனஆசிர்வதித்து விட்டு வந்த நோக்கம் நிறைவேறிய மகிழ்வில் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்ற பின் தன் தந்தை பிரம்மாவை சந்தித்து சனத்குமாரர் விபரங்களைச் சொல்ல, “சனத்குமாரா, நீ எல்லாம் அறிந்தவன்.! நீயோ சென்ற பிறவியில் அசுரர்கள் தேவர்களை துன்புறுத்துவதை வேதங்களில் படித்து மனம் கொதித்து அவர்களை அழிக்க மாட்டோமா? என்று ஆவேசபடுவாய்.! அந்த நிலைக்காக இப்போது உன்னை தன் மகனாக ஏற்று, “மரணம் ஏற்படவே ௬டாது. அப்படியே வந்தாலும் அது சிவனின் குமாரனால்தான் மட்டுமே தன் மரணம் ஏற்பட வேண்டும்என்ற வரத்தைப் பெற்றிருக்கும், பதமாசுரனையும் அவனை சார்ந்த அரக்கர்களையும் வதைக்க உன்னை பயன்படுத்திக் கொள்ள சிவபெருமான் நடத்தும் நாடகம் இது.! நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே மாறி விடும் தத்துவத்தை குறிக்கும் செயலும் இதுதான்.! புரிந்து கொள்.! என பிரம்மா விளக்கமாக ௬றினார்.
அதன்படி ஆசைகளற்ற சனத்குமாரர், முருகனாக சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகளாக ஆறு குழந்தைகளாக தோன்றி சரவணப் பொய்கையில் வளர்ந்து உமா தேவியால், ஒரே குழந்தையாய் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ந்து வாலிப பருவத்தில் பத்மாசூரன் முதலிய அரக்கர்களை அழித்து தேவர்களை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து, உலகையும் காத்தருளினார். இந்தக் கதை திரிபுரா ரகஸியம் என்ற கிரந்த நூலில் உள்ளதாக ௬றி முடிகிறது. 
இன்றளவும் நாம் அந்த ஆறுமுகனை, அன்று தேவர்களையும் மூவுலகையும் அரக்கர்களிடம் இருந்து காத்த முருகனை, கந்தா, கடம்பா கார்த்திகேயா, அழகா, மால்மருகா, சிவகுமரா, என்று, அகமும் புறமும் உருகி வழிபட, நம் மனதில் உருவாகும் கோபம், சூழ்ச்சி. வஞ்சகம், பொறாமை அகங்காரம், ஆணவம், போன்ற கெட்ட குணங்களாகிய அரக்கர்களை அழித்து நம் மனதில் நல்ல சிந்தனைகளை, விருட்ஷமாக வளர்ந்து தழைக்க விதைப்பவரும் அவர்தான்.
நமக்காகயாமிருக்க பயமேன்என்று ௬றியபடியே மயில் வாகனம் ஏறி உலகெங்கும் சுற்றி வந்து, புன் முறுவலுடன் வேல் கொண்டு நம் வினை தீர்க்கும் முருகனை நம் சிந்தையில் என்றும் நிலையாய் நிறுத்தி ஆனந்தமாய் வழிபடுவோமாக….!

வேலிருக்க வினையுமில்லை.! மயிலிருக்க பயமுமில்லை..!
முருகா சரணம்  முத்தமிழ் வித்தகா சரணம்.

இந்தக்கதையை முருகனின் முன்னவதாரக்கதையை படித்ததும் பகிர்ந்து கொள்ளஅவன்தான் எனக்கு ஆணையிட்டான். முருகனின் துணையால், ‘அவன்அருளினால் நான் எழுதும் பக்குவம் பெற்றேன். ஒவ்வொரு தடவையும்அவனைபற்றி நான் எழுவதை மட்டும்  பூக்களாக்கிமலர்ச்சரத்தோடு வலையில்ஏற்றிவிடுவான். மரங்கள் செடி கொடிகளுக்கு உயிர் இருந்தும் காற்றிருந்தால்தான் அசையும். அதுபோல், என் இயக்கங்களும், சிந்தனைகளும் செயல்பட்டாலும், கந்தனின் அருள் என்ற காற்றினால்தான் நானும் எழுத்துலகில் பிரேவசமானேன். இந்தப் பிறவிக்கு இதுவே போதும் கந்தா.!
முருகா, முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்.!
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்.!
அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா.!
முருகன் இல்லாவிட்டால் மூவுலகும் ஏதப்பா.!