Friday, April 27, 2018

நினைவுகள்....

காலங்களுக்கு ஏற்றபடி பழக்க வழக்கங்கள் எத்தனையோ  மாறுதல்கள் வந்தாலும், பழைய நினைவுகள், அதனுடைய சுவையான அனுபவங்கள், அதன் நிழலாக சின்ன சின்ன சந்தோஸங்கள்  இத்தனையும் ஞாபகம் வராமல் இருப்பதில்லை.

சின்ன வயதிலிருந்தே எனக்கு பிள்ளையார் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு விருப்பமாய், பய பக்தியாய், ஒரு உறவின் அருகாமையோடு அதைவிட மேம்பட்டு சொல்லப்போனால்,  இதமாக தோளணைக்கும் சினேகிதத்தோடு, அவருடன் உரையாடி வணங்கி மகிழ்வது என் பழக்கம் . ( இதிலென்ன அதிசயம் எங்களுக்கும் அப்படித்தானே! ! என்று அனைவரும் எண்ணலாம்...)  உண்மை. !அனைவருக்கும் அவரது எளிய மனப்பான்மை மிகவும் பிடிக்கும். அவருக்கு பெரிய அழகான கோவில்கள்தான் வேண்டுமென்பதில்லை . சின்னதாய் இடமிருந்தாலும்,  நாலுசுவர்களுக்கு மத்தியிலும், நாலு கம்பியில் சட்டமடித்த சின்ன கதவுக்கு அப்பால் வீட்டு வெளிவாசல் மதில்சுவரகளில் சிறிதளவு இடத்தில் கூட தன் தேவையைபற்றி  கவலையுறாது புன்னகைபூத்த விழிகளோடு நமக்காக அமர்ந்திருப்பார். சிலுசிலுவென காற்றடிக்கும் குளக்கரையிலும், அரச மரத்தின் கீழும் நாம் எங்கெல்லாம் அழைக்கிறோமோ அங்கெல்லாம் அவர் வரத் தயங்குவதில்லை. கடும் வெய்யிலோ, கடும்பனி பெரும்மழையோ எதையும் பொருட்படுத்தாது நமக்காக மரத்தடியில் அமர்ந்து நாம் வேண்டுவனவற்றை அருள தயங்குவதில்லை. அண்ட சராசரங்களையும், பஞ்ச பூதங்களையும்  தன்னுள் அடக்கியவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகி விடுமா என்ன......

''பிடித்து வைத்ததெல்லாம் பிள்ளையார்'' என்ற பேச்சு வழக்குபடி எந்தப் பொருளைக்கொண்டும் அவரை நினைத்து பிடித்து வைத்தாலும், அந்த பொருளில் அவர் ஆவாஹனம் ஆகி நம்முடைய பூஜைகளை ஏற்றபடி, வேண்டும் வேண்டுதல்களை பரிபூரணமாக தந்தருள்வார். ஆடம்பர அலங்காரமெல்லாம் அவருக்கு தேவையில்லை.  வாசமுள்ள மலர்களால்  அவரை பூஜித்தால்தான் நம் வாழ்வை சிறக்க செய்வார் என்றில்லை. எளிய  அருகம்புல் மாலையானாலும், எருக்கன்பூவில் தொடுத்த மாலையானாலும், மகிழ்வோடு அணிவித்தால் போதும்  மனமுவந்து ஏற்றுக்கொள்வார். எளிய தெய்வம், முழுமுதல் தெய்வம், யானை முகத்தோன், கண நாதா இப்படி என்ன வேண்டுமானாலும் இவரை சொல்லலாம்.. ஓம் எனும் ஒரு மந்திரத்தில் அடக்கமானவர்.
இந்தப் பிள்ளையாரை பற்றி கேட்டு சொல்லி வளர்ந்ததினால், என் மகளுக்கும் பிள்ளையார் என்றால் மிகவும் இஸ்டம். அவளின் பதிநான்காவது வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு பிள்ளையார் படம் வெறும் வெற்றுத்தாளில் 
வீட்டில் இருக்கும் கலர்பென்சில்களை கொண்டு வரைந்த படம் இது. முழுமனதாக விருப்பமாக வளர்ந்திருக்கிறாள். பிள்ளையாரை பற்றி  நிறைய சொல்லியிருப்பதால் அவள் உள்ளத்திலிருப்பது அப்படியே படமாக  அவர் அவதரித்திருப்பதாக எனக்கு தோன்றியது. வேறு மாற்றங்கள் செய்தால் படத்தின் தன்மை மாறுபட்டு விடும் என்பதினால், எவ்வித திருத்தங்களும் செய்யாமல், (கலர் மாற்றம்) அப்படியே பூஜையறையில் படங்களோடு வைத்திருந்தேன். ஊர், வீடு மாற்றங்களினால், பேக்கிங் பண்ணும் போது அது புத்தகங்களோடு கலந்திருந்து விட்டு இப்போதுதான் மறுபடியும் என் கண்ணில்பட்டது. இதை பார்த்தவுடன் அன்றைய நாளின் நினைவுகள், அவளை பாராட்டியது அத்தனையும் நினைவுக்கு வந்தது. பழைய நினைவுகள் என்றுமே இனிதானவையில்லையா ? அந்த இனிமையை ஒரு பதிவாக உங்களுடன் பகிர்ந்துள்ளேன். என் மகள் வரைந்த பிள்ளையாரை நீங்களும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

மிகவும் நன்றியுடன் 
உங்கள்  சகோதரி.....Thursday, April 26, 2018

மஹாபாரதம் உணர்த்திய உண்மைகள்....


கீதையில்  கடமையை செய்..... பலனை.எதிர்பாராதே!  என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்தமா... கூடவே இரு மனங்களையும், அதாவது ஒரு செயலை செய்யும் பக்குவமான உள்ளத்தையும், அந்த செயலை செய்தால் ஏதேனும் திருப்பங்கள் உண்டாகுமா எனறு எதிர் நோக்கும் உள்ளத்தையும் ஒருங்கே தந்து விட்டான் நம்மை படைத்த ஆண்டவன். ..  ஆததால் எந்த ஒரு செயலையும் கடமையாக மட்டுமே எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மிடம் உள்ளதா என்பதே ஒரு கேள்விக்குறி?. கடமையை செய்யும் போதே மனசு அடுத்ததாக பலன் ஏதாவது இருக்கிறதா,.... இல்லையா......என்ற சிந்திக்க ஆரம்பிக்கும் போதே  அச்செயல் கடனாகி விடுகிறது.

நமக்கென உண்டாகி இருப்பது..... இதனை நாம் செய்தால்தான் இது பரிபூரணம் அடைந்து சிறக்கும் என உணர்ந்து செய்யும் செயலே கடமை.

இதை எதற்காக  நாம் செய்யவேண்டும்? இந்தளவிற்கு இதில் கவனம் செலுத்தினால் போதும்... என்று மனமொவ்வாமல்  சுவாரஸ்யமின்றி செய்யும் செயலே கடன்.  என்பது என் கருத்து.

அவ்வாறு கடமையாக விரும்பியும், கடனாக வெறுத்து ஒதுக்கியும் இராமல் இறைவன் விட்ட வழி எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும்.. என்று எதிலும் கவனமின்றி      பற்றற்று இருப்பதும் பலன் ஒன்றும் நல்காது என்கிறது கீதை.

இப்பிறப்பில் உனக்கு விதித்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதில் இன்பங்கள், மகிழ்வுகள் சந்தோஷங்கள்  இப்படி எது வந்தாலும் அதையும்,  துன்பங்கள் துக்கங்கள் துயரங்கள்  எது வரினும் அதையும் ஒன்றாகவே பாவித்து  அப்போதும் உன் கடமையின்று வழுவாது அதற்குண்டான  பலனையும் எதிர்பாராது, அமைதியாக உன் செயலை செய்து கொண்டே இரு.  அதுதான் சிறந்த பற்றின்மை என்கிறது கீதாச்சாரம்.

இவ்வாறாக நிறைய ஆன்றோர், சான்றோர் உலகில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இதிகாசங்களில் ஒன்றான மஹா பாரத காலத்தில் அக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களில் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஆனால் அவரவர்  குணாதிசயங்களிலிருந்து மாறுபடாமலும் இருந்து  தம்முடைய கொள்கைகளை நிறைவேற்றி உள்ளார்கள்.ஒவ்வொருவருடனும்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒவ்வொரு காலகட்டத்தில் அவர்களுடன் விவாதித்து அவரவர்களின் கர்ம வினைகளை உணரும்படி செய்து அருள் பாலித்திருக்கிறார். அவர்களும் நடத்துவிப்பவனின் எண்ணப்படி நடப்பது நடந்துதான் தீரும். இடையில் நாம் ஒரு கருவிதான் என்ற சரணாகதி மனப்பான்மையுடன் வாழ்ந்து நமக்கு ஒரு பாடமாக இருந்திருக்கிறார்கள். அப்படி தெய்வத்தின் அருகாமையில் அவன் நிழலில் வாழ்ந்தவர்களாகிய அவர்களே ஏகத்திற்கும்  துக்கங்களையும், சங்கடங்களையும், சந்தித்திருக்கும் போது சாதரண மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்..... நாம் வாழும் இந்த வாழ்விலும் ஒரு கணத்தில்  மாறி மாறி வரும் சந்தோஷம், துயரங்கள் போன்றவற்றை ஒரே நிலையில் நிறுத்தி சமமாக பாவிக்கும் மனோதிடத்தை தந்தருள வேண்டும் என மனமுருகி ஸ்ரீ கிருஷ்ணரின் பாதம் பற்றி பிரார்த்திக்கிறேன்.பாரத போரின் போது பார்த்திபனின் மனசஞ்சலம்  போக்குவதற்காக, அவன் சமமான மனநிலை எய்துவதற்காக அவன் அருகாமையிலிருந்து, கீதோபதேசம்  செய்தவர், நல் வழிகளை எடுத்துச் சொல்லி காண்டீபனை ஒரு கர்ம வீரனாய் ஆக்கியவர், இப்போது நம்முடைய மனதிலிருந்தபடியே  இதமாக எடுத்துக்கூறி நம் மன சஞ்சலங்களையும் களைவார் என்று நம்புவோம்..

          அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்...

இவ்வாறு அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்  என்று சொல்லும் போது படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் செய்த நற்செயல்களை மட்டுந்தான் அவனிடம் சமர்பிக்க வேண்டும். அது பன்மடங்காகப் பெருகி நம்மையே வந்தடையும். மாறாக அறிந்தறியாமல் செய்யும் தவறானதொரு செயலின் விளைவையும், அவனிடம் அர்ப்பணித்தால்  அது பன்மடங்குக்கும் மேலாக பெருகி நம்மிடமே சரணடைந்து விடும். ஏனெனில் நம்முள் இருப்பவனும், நம்மை நன்குணர்ந்தவனும் அவனல்லவா... ..................................................................................................................................... ................... .......

பின் வரும் வாசகங்களை படிக்க நேர்ந்தது. அதை படித்துணரும் போது என் மனதில் தோன்றியதையும் பக்தியுடன் எழுதி, படித்த வாசகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னுடன் படிப்பீர்கள் என  நம்புகிறேன்.
படிப்பதற்கும்   படித்ததற்கும்  மிக்க நன்றி.


மகாபாரதம் உணர்த்தும்.   உண்மைகள்....
********************************************
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
-------------------------------
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்..
--------------------------------
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....
------------------------------
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
- சகுனியாய்...
------------------------------
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...
-------------------------------
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....
------------------------------
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...
------------------------------
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...
------------------------------
கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...
------------------------------
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..
------------------------------
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....
------------------------------
பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....
------------------------------
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....
------------------------------
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..
------------------------------
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ
------------------------------
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....
------------------------------
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...

Saturday, April 14, 2018

நற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....


ஆசைதான் அழிவுக்கு காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. அதிலும் பேராசை பெரு நஷ்டம்  எனும் பழமொழியும் நாம் அனைவரும் உணர்ந்ததே..  இருந்தாலும் எந்த  ஒரு விசயத்திற்கும் நாம் அதை முன்னிறுத்திதான் அழகு பார்த்து ரசித்து விட்டு அழிவு வரும் போது அல்லலுருகிறோம்....

"ஆசைப்படு...உன் தேவையை உணர்ந்து அதற்கு மட்டும் ஆசைப்படு...  தேவையில்லாமல் பேராசை வளர்த்து பெருந்துயரம் அடையாதே ."  என பார்த்திபனுக்கு கீதை சொன்ன கிருஷ்ணபரமாத்மாவிலிருந்து அன்றைய  நற்சான்றோர்கள்  இன்றைய அறிஞர்கள் நம் வீட்டு அனுபவமெய்திய பெரியோர்கள் அனைவரும்  இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.

பெற்ற வரத்தின் மூலம், தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்  விந்தை கண்டு  ஆசையின் அதிதீதமாகிய  பேராசையால் தன் மகளை தங்கமாக்கி  தவறிழைத்தவரின் கதைகள், 

கடவுள் தந்த வரத்தால்  தினம் ஒரு பொன்  முட்டையிட்டு தினசரி வாழ்வை செழிப்பாக்கி கொண்டிருந்த அதிசய வாத்தை,   
அத்தனை முட்டைகளை மொத்தமாக அதன் வயிற்றிலிருந்து எடுத்து விட்டால், பெரிய பணக்காரனாக ஆகி விடலாம் என்ற பேராசை காரணமாய் அதை கொன்று தினசரி வாழ்வையும் இழந்து பரம ஏழையான ஒரு ஏழையின் கதைகள்,  

இப்படி எத்தனையோ அனுபவ கதைகள் கண்டும், கேட்டும்,   நம் ஆசைகளை பேராசைகளாக மாற்றும் முயற்சியில் நாம் இன்னமும் தோற்காமல் வென்று கொண்டேதான்  இருக்கிறோம். 

இந்த பேராசைகள் நாளடைவில் தன்னலத்திற்காக,  தன்னல எண்ணங்களை நமக்குள் விதைத்து பயனில்லாத  மரமாக்கி, அதன்  ராட்சத வேரூன்றி இலை செழித்து, தலை விரித்து ஆடுகின்றன..அந்த சுயநலத்தின் விளைவுகள் பெரும்பான்மையாக குடும்பத்தில் சிதைவுகளுக்கு வழிவகுத்து,  அங்கு நிம்மதியெனும் வசந்தத்தை ஆழ குழியிலிட்டு  புதைத்து விட்டுச் செல்கின்றன... அந்த மரங்களை பயனற்றதாக்கி, வேரோடு களைய நாம் ஆசை விதைகளை  நம்முள் என்றும் தூவாமலிருக்க, நம்மை படைத்த ஆண்டவனை தினமும் பிராத்திப்போமாக... 

இந்த தமிழ் வருட பிறப்பிலிருந்தாவது இந்த பேராசை விதைகளுக்கு  என் மனது இடம் தராமல்  இருக்க வேண்டிக்கொண்டு,, தமிழினிய சீராட்டல்களுடன் வரும் சித்தரை வருட நாளில் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.


வாழ்க தமிழமுதம் ...

வளர்க தமிழுணர்வு... 

வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


படித்ததில் பிடித்ததால் ஒரு சிறு கதையை இங்கு பகிர்ந்து.கொண்டுள்ளேன். 
இதையும் படிக்கும் அனைவருக்கும் மிகவும் நன்றிகள்

ஒரு அருமையான கதை... 

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன் எரிந்துகொண்டிருந்தது  ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறார்கள் ? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
கூறினான்.

இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 
அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
"அதே வீடு தான் " ,
"அதே நெருப்பு தான் " ,
ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.

"" சிறிது நேரத்தில் வணிகனின்  இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே  ஏன் இப்படி கவலையில்லாம  சிரிக்கிறீர்கள்?  நாங்கள் விற்ற இந்த  வீட்டிற்கு முன்பணம் மட்டுமே  வாங்கியுள்ளோம்.  முழு தொகை இன்னும் வரவில்லை.
"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி  பணத்தை தருவானா என்பது சந்தேகமே”  என்றான். .

 "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்."தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம்  மீண்டும் அவனை வாட்டியது.

"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
  மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.  “தந்தையே கவலை வேண்டாம். இந்த  வீட்டை வாங்கிய மனிதன் மிகவு நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
ஆகையால் நான் பேசியபடி முழு
தொகையை கொடுப்பது தான் நியாயம்
என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
தெரிவித்தான்.

"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
 கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
 மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
 மீண்டும் காணாமல் போய்விட்டது.
"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று    வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

=========================≠==============

 " இங்கு எதுவுமே மாறவில்லை
" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",
" இது என்னுடையது என்று நினைக்கும்
  போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
" இது என்னுடையது அல்ல என்று
 நினைக்கும் போது உங்களை சோகம்
 தாக்குவது இல்லை. .

"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
"ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
  இல்லை. அனைத்துமே அழிய கூடியது.
 "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட   காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது  வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது

======================================

இதைத்தான் அனைத்து மதமும்   சொல்கிறது
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...

படித்தமைக்கு மிக்க நன்றிகள். 


========================================

Tuesday, April 3, 2018

அரிசி சேவை......


நான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி தேவையான அளவு உப்பு சேர்த்து  கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.  
அரைத்த மாவை கொஞ்சம் நீர்க்க இதுபோல்
கரைத்து வைத்துக் கொள்ளவும். 


 தோசை மாவு பதத்திற்கும் சற்று நீர்க்க இருக்குமாறு அரசியும் துருவிய தேங்காயும் சேர்த்து அரைத்தெடுத்த மாவு.......  


தேன்குழல் அச்சில் ஓமப்பொடி தட்டுடன் 
சிறந்த சேவை செய்வதற்காக காத்திருக்கும் புண்ணிய கருவிகள்......  


 ஒரு கடாயை அடுப்பிலேற்றி அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி  சற்று காய்ந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை அதில் விட்டு கை விடாமல்  கொழுக்கட்டைக்கு  கிளறுவதை போல் கிளறி வைத்துக் கொள்ளவும். 


சூடு ஆறுவதற்கு முன்பாக கிளறி வைத்த மாவை எடுத்து குழலில் இட்டு இட்லித் தட்டில் இது போல் பிழிந்து  கொள்ள வேண்டும். சூடு ஆறுவதற்குள் முடிந்த அளவு பிழிந்து விடவும். ஆறிய மாவு கெட்டியாகி விட்டால் பிழிவது சிரமம். 


பிழிந்ததை குக்கரில் ஒரு பத்து நிமிடம் வைத்து ஆவியில் வெந்ததும்  எடுத்து தட்டில் கொட்டி விடவும். இப்படியே கரைத்து வைத்துள்ள மாவை சேவைகளாக்கி கொள்ளவும்.  அதன் பிறகு நம் விருப்பபடி  விதவிதமாய் தேங்காய் சேவை, வெல்லச்சேவை  லெமன் சேவை தயிர்சேவை என்று தயாரித்து கொள்ளலாம்.  


ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,  காய்ந்த மிளகாய் இரண்டு ஆகியவற்றை போட்டு தாளித்ததும்  பச்சை மிளகாய் இரண்டு, கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளி சேர்த்து  தேங்காய்  துருவல் ஒருகரண்டி போட்டு வதங்கியதும், உதிர்த்த சேவையை சேர்த்து உப்பு தேவைப்பட்டால் கொஞ்சம்கலந்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்ட பின்   அடுப்பை அணைத்து விடவும்..
சுவையான தேங்காய் சேவை ரெடி..... 


நான் முன்பெல்லாம் சேவை செய்தால், இந்த மாதிரி ஒரு நான்கு விதமாய் செய்வேன்.  இந்த  தடவை மிகவும் சுலபமாக இதை மட்டுந்தான் செய்தேன். கடைசியில் இந்த சேவை பிழியும் போது பிழிய வராமல் அடம் பிடித்த மாவை கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன், பெருங்காயம் ஒரிரு  சிட்டிகை,  கறிவேப்பிலை கிள்ளி சிறிதளவு சேர்த்து, நன்கு கலந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். நல்ல சுவையான காரக் கொழுக்கொட்டையையும் சுவைக்கலாம்.

நான் அதை படமாக்க மறந்து விட்டேன். அடுத்த தடவை நிறைய வெரைட்டி  சேவைகளுடன் சந்திக்கிறேன்... 
நன்றி.