Sunday, March 8, 2020

பெண்மணியின் பெருமைகள்.

நிலா நிலை குலைந்து நின்றது.. !
"இந்நிலமாது என்னொளியை, எங்கணம்
தன்னொளியாய் தக்க வைத்து கொண்டாளென்று!!!!" 

நீள்வீச்சு கதிரவன், தன் நிம்மதியை,
நீண்ட பெருமூச்சொன்றில், தொலைத்தது.
"தன் அந்திச் செம்மை எவ்வாறு
தன் நிலை சிறிதும் மாறாது,
தன்னிடம் எதுவும் கேளாது ,
தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
தளிர் மேனியிடம் அடகாகப் போனதென்று!!!!"

வானம் வியந்து போனது! "தான்
வாரியிறைக்கும் வண்ண நிறங்களை,
வார்த்தைகளில் அடங்காத, தன்
வர்ண ஜாலங்களை, வெகு விரைவில் , இவ்
வஞ்சிக்கொடி  எப்படி தன் வசப்படுத்தி கொண்டாளென்று!!!!"

நட்சத்திரங்கள் சற்றே நாணி கோணியது.! 
"நானறியா பொழுதினிலே, நகருமென்னை
நங்கை இவள் சிறிதும் நலுங்காமல்,
காலங்காலமாய் கண் சிமிட்டி, மானிடரை
கவர்ந்திழுக்கும் தன் ஜொலிப்பை,
கண்ணிமைக்கும் நேரத்தில், சிறிது
கண்ணயர்ந்த வேளையிலே,
கவர்ந்து கொண்டது எப்படியென்று!!!!" 

 பெண்ணே ! "உன்னை 
இப்படி இயற்கையோடு இணைத்து,
இயன்ற வரை உனை இகழாமல், 
இன்னும் அனேக விதமாக
பூக்களுடனும் இணைத்து பாக்களாய்,
புகழ வைத்து, இறுமாப்புற செய்தும்,
புதுமைப்பெண்ணாய், நீ புவனத்தில்,
புதுத்தோ் ஏறி புறப்பட இயலாமல்,
புதுமலராகவே உதிர்ந்து நின்றது." 

            அது அந்தக்காலம்!!!!

" இன்று இமயம் தொட்ட குளிர்ச்சியில்,
இதயம் நிறைத்த மகிழ்ச்சியில்,
திக்கெட்டும் கொடி நாட்டி, வெற்றியுடன்,
திக் விஜயம் செய்து வருவது..." 

           இது இந்தக்காலம்!!!!

" இனி இயற்கை எப்பொழுதும்,
இயற்கையாகயிருக்கட்டும்.. ! 
இயற்கையோடிணைக்கும்
இந்த இனிய மதுவுக்கு,
வசப்படாத வண்டாக வளர்ந்து,
வானில் வட்டமிட்டு வருகிறவள்….. நீ….!" 

" படிப்பிலும், பணியிலும்,
பாரினில், சரிபாதியாக,
பரிமளித்து, பட்டங்கள் பல சுமந்து, புது
பரிதியாக பிரதிபலிப்பவள்……நீ….!"

" கடமையையும், கருணையையும், இரு
கண்களாகக் கருதி வீட்டின்,
கண்மணி இவளென கருதும்,
கணிப்பை உருவாக்கியவள்…..நீ…..!" 

" துன்பங்களை, துச்சமாக்கி,
துயர்களை, துகள்களாக்கி,
தூரத்தள்ளி, வாழ்க்கையின்,
தூணாகி போனவள்……நீ…..!" 

" நாட்டுடன், நன்றாய் வீடும்,
நலங்கெடாது சிறப்பாய் வாழ,
நன்மைகள் பல புரிந்து, பாரதியின்,
நல்லதோர் வீணையானவள்…..நீ…..!" 

" காலத்தோடிணைந்த, கணினியில்,
காலம் நேரம் பார்க்காமல், கவனமான
கருத்துடன் காரியமாற்றி,
கணினிப்பெண்ணாக உலா வருகிறவள்……..நீ….!"

"இனி இவ்வையத்தில்,
வாழ்வாங்கு காலம் 
வாழட்டும்  நின் புகழ்,
வளரட்டும் நின் பணி....!"

#########################################################################

மங்கையராய்  பிறந்து 
மாதவம் இயற்றிடும் 
அனைவருக்கும்  மனங்கனிந்த 
மகளிர் தின நல்வாழ்த்துகள். 

இது இன்றைய மகளிர் தினத்துக்காகவே பதிவிடவும்  காத்திருந்த  பழைய பகிர்வு. ரசித்தமைக்கு அனைவருக்கும் என் நன்றிகள். 🙏. 

Monday, March 2, 2020

சண்டைக் கோழிகள்..


இன்றைக்கென்னவோ ஆழ்ந்த தூக்கம் சற்றேனும் பிடிபட்டு வரவேயில்லை. கண்ணிமைகள் சற்று அலுப்பில் அசந்தாலும், "உன் இரவு தூக்கத்திற்கு இன்று விடுப்புதான்.. " என கொக்கரித்தபடி  அந்த  அக்கம்பக்க சச்சரவு சத்தங்கள் ஒன்று கூடி  அமளி செய்தன.

இந்த சண்டைகள் சச்சரவுகள் ஒன்றும் புதிதல்ல.. கடந்த பத்து வருடங்களாக அவ்வப்போது வருபவைதான். சுருங்க கூறினால், கேட்டு கேட்டு அலுத்தே விட்டது. இருந்தாலும், இரவு தூக்கங்களை புரட்டிப் போடுமளவுக்கு இப்போதெல்லாம்  சற்று அளவுக்கதிகமாக  உள்ளது என்ற சந்தேகம் எனக்குள் வந்(லுத்)தது.

"ஏன் இப்படி கொஞ்ச நாளா தினமும்  படுத்துறே.? உன்னையெல்லாம்  இரக்கம் பார்க்காமல் பல்லு பிடுங்கிய பாம்பாக ஆக்கினால்தான் உனக்கு புத்தி வரும்." 

"ஆக்குவே. .. ஆக்குவே.. எங்கே அப்படி ஆக்கு பார்க்கலாம்..... அப்போ உன் நிலைமை எப்படின்னு உனக்கு தெரியுமா? தவிச்ச வாய்க்கு  தண்ணி கூட இல்லாத நிலைமை உனக்கு வந்திடும்.." 

"அப்படியானாலும் பரவாயில்லை. நீ  முந்தி மாதிரி பல்லை இளிச்சிகிட்டு யாரோடையும் பேச முடியாது. அதைப் பார்த்து முதல்லே சந்தோஷபடுறது நான்தான்." 

" இப்படி நாக்கு மேலே பல்லை போட்டு திமிரா  பேசற மாதிரி  பேச உனக்கு எப்படி மனசு வருது.? நாம் முந்தியெல்லாம் அக்கம் பக்கமாய் கூடி  சேர்ந்து பாசத்துடன் ஒற்றுமையா  வாழ்ந்த காலத்தையெல்லாம் மறந்து விட்டாயா?" 

"பல்லை பிடுங்கனும்னு சொன்னவுடன் பாசம் அங்கு பொங்கி வழிகிறதோ ?" என நினைத்த எனக்கு காதை கிழிக்கும் அத்தனை காரசாரமான பேச்சுக்களை கேட்டு கொண்டிருக்கும் அவஸ்தையின் இடையிலும், கடைவாயில் ஒரு  சிறு புன்னகை எட்டிப் பார்த்து மறைந்தது. 

"எல்லாம்  உன்னால்தான்..! தேவையான  நேரங்களில் பல்லை கடித்துக் கொண்டு பேசாமல் இருக்காமல், முந்திரி கொட்டையாய் போய் பேசி  ஏச்சும் பேச்சும் வாங்கி, அப்புறம் அதற்காக பின்பு  பல்லை கடித்து உணர்ச்சிவசப்பட்டு உன் உடம்பை நீயே கெடுத்துக் கொண்டாய்...!  

அப்போதெல்லாம் உன் மேல் உள்ள பாசத்தில் உன்னை தடுக்க வந்த என்னையும் உன் ஆவேசமான வார்த்தைகளால் கடித்து துன்புறுத்தி  என்ன பாடு படுத்தியிருக்கிறாய் ? இப்போ கொஞ்ச நாளா இதே பழக்க தோஷத்தில் என்கிட்டேயே மோதிப் பார்க்கிறே ...! "

" என்னது.. நானா காரணம்? நீதான் மறுபடி மறுபடி கொஞ்ச நாளா என்கிட்டே மோதி வம்பு வளர்க்க பார்க்கிறே... இதோ பாரு....! என் கிட்டேயே,.... என் கிட்டேயே மோதி பாக்கிறியா?  நான் பார்வைக்கு இப்பவும் சுமாராகத்தான் இருக்கேன். ஆனா... "

காரசாரம் மறுபடி காட்டமாக உதயமாக  எனக்குள்  "திருவிளையாடல்" பட வசனங்கள் வந்து போனதில், புன்னகை சற்றே என்னையறியாமல் சத்தமான இளநகையானது கண்டு,  அங்கே சட்டென பேச்சுக்கள் குறைந்து அந்த இருவரும் வாய்க்குள் சத்தம் குறைத்து ஏதோ முணுணுக்கலாயினர். 

நான் நிலை உணர்ந்து என் பல் கொண்டு நாக்கு கடித்து "ஸாரி" என்றதும், மெளனத்தில் தாமதித்த  விவாத மேடை சிறு சலசலப்புடன் மறுபடியும் களைகட்ட ஆரம்பித்தது. 

"பாரு.... தினமும் நம்ப சண்டையாலே அந்த மனுஷன் நிம்மதியாய் சாப்பிட முடியாம, தூங்க முடியாமே அவஸ்தைபடுகிறார் பாரு.....இப்படி அண்டை அசலாரை துன்புறுத்துற மாதிரி குணம் உனக்கு எப்படி வந்தது .? இப்ப உனக்கு திருப்தியா?" 

"அது சரி..! ஏதோ நான் மட்டுந்தான் காரணம் மாதிரி பேசறியே... ! பிறந்ததிலிருந்தே உன்னோடு  பிறந்த மோசம் கொண்ட அந்த ஆசை குணங்கள்தான்  அவரை இந்த பாடு படுத்துகிறது. இதனால் தினமும் இப்படி ஒரு  சண்டை... சே..! 

"ஆசை எனக்கு மட்டுமா? நீயுந்தான்.... ஏன் அவருந்தான்... இந்த ஆசைக்கெல்லாம்" ஆமாம் சாமி" போட்டு ஆரம்பத்திலிருந்தே ஒத்துழைச்சார்.. இதிலே என்னை மட்டுமே குத்தம் சொல்லாதே..! எனக்கு வர்ற கோவத்துக்கு .. உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது..!" 

"உன்னாலே என்ன பண்ண முடியும்..? சின்ன சின்ன  ரணங்களையும், தோண்டித்  துருவி பெரிதாக்கும் வானர புத்திதான் உனக்கும் எப்பவும் இருக்கு...!   நீ என்னை விட வயசுலே  பெருசேன்னு பார்க்கிறேன். இல்லாட்டி எனக்கும் வர்ற  கோவத்துக்கு "உன்னை இழுத்து வச்சு "பளார்" னு ஒர் அறை கொடுக்கலாம்ன்னு" தோணுது." 

" எங்கே கொடு பாக்கலாம்..! ஆனா அதுக்கு முன்னாடி நான் கொடுக்கிற அறையிலே கன்னம் பழுத்துடும்.  தெரிஞ்சுக்கோ...! 

"ஐயோ"! போதும்..! போதும்... ! உங்கள் சண்டை... உயிர் போகாமல் "போகவா" என்கிறது.. " என்றபடி ஏற்கனவே வலியில்  என் வீங்கிய கன்னத்தை பிடித்தபடி எழுந்து அமர்ந்தேன். ஆழ்ந்த உறக்கம் வராமல் போனாலும், குட்டியாய் மயக்கும் தூக்கங்கள் அவ்வப்போது வரப்பார்த்து வலியின் வீச்சுக்கள் வலிமை பெற்றதில்  வராமல் சென்றதில், தலையில் ஆங்காங்கே மழை இல்லா இடி இடித்து மின்னல்களும் ஊடுருவும் வெளிச்சமாக கண்களுக்குள் வெட்டியது. மேலும்   இரவு உறக்கம் முழுமையாக போனதை உணரும் போது மணி சந்தோஷமாக நான்கை காட்டியது. 

இத்தனை நாளாய்  இல்லை.. இல்லை.. இத்தனை வருடங்களாய் அதீத பயத்தினால் அருகிலிருக்கும் "dentist பரந்தாமனை"  😬 காண பயங்கொண்டிருந்த  நான் பகலவன் உதித்ததும் அந்த உண்மையான பரந்தாமனின் அருளால்,  "dentist பரந்தாமனை" 😂  தைரியமாக சென்று கண்டு வர வேண்டுமென முடிவு செய்தேன். ஆனால் "முடிவுகள் என்றும் உன் கையில் இல்லையே..!" என  சச்சரவிட்டவர்கள் மறுபடி சச்சரவிட நெருங்கி வர ஆரம்பிப்பது அரைகுறையான தூக்க கலக்கத்தில் மங்கலாக தெரிந்தது. 

வேறு வழி..! மணி நான்கிலிருந்து ஆறு வரை  அந்த சந்தடிகள் தொடர்ந்தன. ஆறுமணிக்கு ஆதவன் உதித்ததும், அன்றைய கடமைகள் அழைக்க" "கதிரவன் மறையும் வரை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பாரேன்... தானாகவே  குணமாகும்...! இல்லையெனில் பார்க்கலாம்..! என எப்போதும் போல் என் பயங்கள் சொல்லிச் சென்றது. இன்றிரவும் சண்டை கோழிகள் வருமோ என்னவோ..? பார்க்கலாம்...!

எங்கும் / எப்போதும்
எதற்கும் / எதையும் 
படைத்தவன் / படைப்பவன் பரந்தாமந்தானே...! 

படம்.  நன்றி கூகிள்.. 

நன்றி.. பரந்தாமன் அருளினால் இதைப் படிக்கும் அனைவருக்கும். 🙏.