ஆச்சு
! மூன்று மாதமும் ஆச்சு !அம்மா இல்லாத அந்த வீடே நன்றாகயில்லை !மனசு முழுக்க கல்லை
கட்டி தொங்க விட்ட மாதிரி இருந்தது
அவனுக்கு அப்பா இல்லாத குறை தெரியாமல் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தாள்.! சிறுவனாய் இருக்கும் போது விபரம் அறியாதவயதில் தன் தந்தையின் போட்டோவைப் பார்த்து “அம்மா! எனக்கு மட்டும் ஏம்மாஅந்த கடவுள் நிஜமான அப்பாவை கொடுக்கலே! பக்கத்து வீட்டு ராஜாவுக்கு அவங்க அப்பா என்னெல்லாம் வாங்கித்தறார் தெரியுமா? அவன் அவங்கப்பா ௯ட போயிட்டு வந்த இடமெல்லாம் சொல்லி சொல்லி பெருமை அடிச்சுக்கிறான்! எனக்கு மட்டும் ஏம்மா இப்படி! " என்று மனம் கொள்ளா துயருடன், அழுகை வெடிக்க கேட்ட அவனை ஒரு நிமிடம் கண்ணீருடன் சேர்த்து அணைத்துக் கொண்ட அவன்தாய் “இருடா!!!கண்ணா,! என்று அவனை அமர்த்தி விட்டு உள் அறைக்கு சென்றவள் சிறிது நேரத்தில் அப்பாவின் ஆடைகளை அணிந்து வந்து ,இப்போது பாரடா ! இனி நான்தான் உனக்கு அப்பாவும், அம்மாவும்! இனிஉனக்கு அப்பா இல்லையென்ற வருத்தம் வரவே ௯டாது! இனிமேல் நீ அழவே ௯டாது என்று ௯றியவள் அன்றிலிருந்து தாயுடன் தந்தையுமாகி போனவள்.!.
அவளுடன் வளர்ந்த நாட்களை ஒரு
வசந்த காலம் எனலாம். அவனுக்காக பார்த்து பார்த்து
சமைப்பதிலிருந்து, அவனுக்கு
பிடித்த உடைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து நல்ல படிப்பை
கொடுத்து அவனை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரும்வரை
அவள் அயராது தாயும் தந்தையுமாக
செயல்பட்டாள். அம்மாவின் நல்ல பண்புகளுடன் கலந்து வளர்ந்தமையால் அவனிடமும்
முடிந்தவரை நல்ல குணங்கள் குடியேறியிருந்தது.
தங்கள் வீட்டை ஒருபகுதி வாடகைக்கு
விட்டு அதில் வந்த வருமானத்தையும்,
தன் தந்தை வழிவந்த கொஞ்சம் நிலத்தையும் வைத்துக் கொண்டே மிகவும் சிக்கனத்துடன், அதே சமயத்தில்
தன் மகனின் தேவைகளுக்கும் பங்கம் வராமல், தன் ஒன்று விட்ட அண்ணனின் உதவியுடன், மகனின்
படிப்பை முடித்து
அவன் ஒரு நல்ல வேலையில் அமர்ந்ததும், அந்த தாய் பெருமூச்செறிந்து நிதானிக்கையில், தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து,
அவனுடைய திருமணத்திற்கு பேச்செடுக்க ஆரம்பித்தாள்.
தனக்காக அவள் தெரிந்தவர்களிடமும், மாமாவிடமும் சொல்லி,
தனக்கு ஓரு நல்ல மருமகளை தேடச்சொன்ன அந்த நேரத்தில் ஒருநாள் அவன் தன் அலுவலகத்தில்
தன்னுடன் பணி புரியும்
பெண்ணை பற்றி ௯றி அவளை தனக்கு திருமணம் செய்து வைத்தால்
தன்வாழ்க்கை நன்றாக இருக்குமென்றும் அவளும் இதை விரும்புவதாகவும், தாங்கள் காதலிப்பதை
நாசூக்காக தன் தாயிடம் சொல்லியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட அவன் தாய் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், அந்த பெண்ணின் பெற்றோர்களுடன் பேசி அவர்களின் சம்மதத்துடன் அவன் திருமணத்தை
நன்கு நடத்தி விட்டாள்.
தாயும், தாரமும் இருகண்களாக அவன் வாழ்க்கை நன்றாகத்தான்
ஒடியது. சில வருடங்களில் பிறந்த தன் பேரனை ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்தாள் அவன் தாய்! சந்தோசமாக
போய் கொண்டிருந்த அவர்கள் மேல் அந்த காலம் கண் வைத்ததின் விளைவாய், சிறுமனக்கசப்புகள்
அவ்வப்போது தலை தூக்கின! யாரை விட்டுக்கொடுப்பது என்ற எண்ணத்தில் அவன் நடுநிலை நாயகமாக நின்றாலும், அவன் தாயும் அவனுடன் சேர்ந்து ஒத்துழைத்தாலும், சில சமயங்களில் பிரச்சனைகள்
தன்னையறியாமல் எழுந்தது. குழந்தையை வைத்துக்கொண்டு, மனைவியின்
உறவுகளை
சுற்றிக்கொண்டு, இப்படிசிறிது சிறிதாக எழுந்து முளைத்த பிரச்சனைகளுக்கு இடம்கொடுக்காமல்
அவன் தாய் லாவகத்துடன்
ஒதுங்கி சமாளித்தாலும், கசப்புக்கள் வளரத்தான்
செய்தன! நமக்கு ஒருவரை சுத்தமாக பிடிக்கவில்லை என்றால், அவர் செய்யும் வேலைகளில் குற்றம்
கண்டுபிடித்து அவரை குற்றவாளியாக்கி பழி தீர்த்து கொள்ளுவது காலங்காலமாய் வரும் மனித
இயல்புகளில் ஒன்று! அது காலத்தின் கோலம்! அது அவன் வீட்டில் அரங்கேறமாலிருக்க அவன் செய்த
முயற்சிகள் வீணாயின!
தனக்காக வாழ்ந்து, இன்னமும் தனக்காகவே
வாழும் தாய் ஒருபுறம்!
தன்னை விரும்பி கைபிடித்து தன் வாழ்வை அவனுடன் இணைத்துக் கொண்ட மனைவி ஒருபுறம்! என்று அவன் பாசத்தில் தடுமாறுவதை கண்ட அவன் தாய் அவன் வேதனையை பொறுக்கமாட்டாதவளாய், ஒருநாள் அவனிடம், “நான் உன் மாமாவை பார்த்து நாளாச்சு! ஒரு நடை போய் அவரை பாரத்துவிட்டு இரண்டொரு நாள் தங்கி விட்டு
வரட்டுமா? என்னைக் கொண்டு அங்கு விட்டு வருகிறாயா?” என்று அவனிடம் கேட்டதும், தடையொன்றும்
௯றாமல், சரி! என்றபடி அவளை அழைத்துக் கொண்டு மாமன் ஊரில் விட்டுவிட்டு வரும் போது மனசாட்சி உறுத்தியது “உன்னை ஒரு கணமும் விடாது வளர்த்து உன் நலனே தன் நலனென்று வாழ்ந்தவளை, உன்மன
நிம்மதிக்காக இப்படி அவள் சொன்னதை உடனே ஆமோதித்து கொண்டு விட்டு வருகிறாயே!” என்ற மனசாட்சியின்
உறுத்தலுக்கு “இன்னும் இரண்டு நாட்கள் தானே!” என்று சாமாதானம் செய்து கொண்டான்.
ஆனால் “அலுவலக சுமையும்,
எதிர்பாரமல் வந்த மனைவியின்
உறவு வழி விசேடங்களும், தன் தாயை பார்த்து, அழைத்து
வரும் நாட்களை தள்ளி வைக்கும்” என அவன் எண்ணவில்லை!
இருபது நாட்கள் கழித்து தன்னை வந்து அழைத்து செல்ல வந்திருக்கும் அவனை பார்த்தவள்,
அவன் முகத்தில் பிரச்சனைகளற்ற நிம்மதியும் ,பூரிப்பும் குடிகொண்டிருப்பதை சூட்சுமமாக
உணர்ந்து கொண்டவளாய், “தான் இன்னும் சில நாட்கள் இங்கு தங்கி வருகிறேனென்று சொன்னதை,
அவன் அவசரமாய் மறுத்தாலும், வீட்டின் நிம்மதி கணநேரம் சுயநலமாய் கண்முன்னே வந்து, தாய்
சொல்லுக்கு மறு பேச்சு சொல்லி தட்டாமல் இன்னும் ஓரு வாரம்கழித்து மறுபடிவந்து அழைத்துப்
போவதாக ௯றிவிட்டு வரச் செய்தது.
அன்று விடுமுறையை மனைவி, குழந்தையுடனும் மகிழ்ச்சியுடன்
கழித்து விட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவனுக்கு அந்த செய்தி வந்தது. அவன்
நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் இடையூறாக அவன் தாய், தான் இருக்க விரும்ப வில்லை என்று அவள் நினைத்ததை, ஆசைப்பட்டதை, ஆமோதித்த அந்த விதி அவளை தன்னிடமே அழைத்து சென்று விட்ட
சோகத்தை தாங்கிய செய்தி வந்தது. அதிர்ச்சியில் உறைந்து விட்ட அவனுக்கு அழுகை வரவில்லை!
மனம் பக்குவமான துறவியின் மனநிலையில் செயல்பட்டான் .
உறவுகளும், நட்புகளும்
அம்மா இல்லாத குறையை
போக்க அருகில் வந்து அணைத்து அம்மாவை நினைவு௯ர்ந்து அழவைக்க முயற்சி செய்து தோற்றுப்
போயின! அக்கம் பக்கம் இருப்பவர்கள் அம்மாவின் தியாகத்தையும், பாசத்தையும் கட்டுரையாக
சொல்லி அழுது கண்ணீரை வரவழைக்கமுயன்றனர். அப்போதும் அவனுக்கு அழுகை வரவில்லை! “இந்த
காலத்து பிள்ளைங்களே, இப்படிதான்! அந்தம்மா! இவனுக்காக ஓடா தேஞ்சி அப்பா இல்லாத குறை தெரியாமே எப்படியெல்லாம் வளர்த்துச்சி! இவன் ஒரு சொட்டு கண்ணீர் விடறானா பாரு! கொஞ்சம்
௯ட நன்றி இல்லாத ஜன்மம்!” என்று காது பட கேவலமான முறையில் என்னென்னவோ பேசியும் மனம்
கல்லை விட கனமாக கனத்த ஓர் உணரச்சியுடன், இயந்திரமாக நடமாடினானே தவிர ஓரு முறை ௯ட குமுறும்
அழுகை வரவல்லை!
ஆச்சு! எல்லாம் ஆச்சு!
அம்மாவின் காரியங்கள் முடிந்து சொந்த பந்தங்கள் துண்டுதறி தோளில் போட்டுக்கொண்டு, சொல்லிக்கொள்ளாமல்,
இவர்களை தனிமையாக்கிய பின் கடமை நிமித்தம்
வேலைக்கும் அதே கனத்த மனத்துடன் சென்று வர ஆரம்பித்தான், அவனது மெளனம் கலந்த செய்கைகள்
அவன் மனைவிக்கு
கொஞ்சம் பயத்தை த் தர அவனை பழைய நிலைக்கு மாற்ற முயற்சித்தாள்.
மனைவியின் அரவணைப்புகள் அவனை அடியோடு
மாற்றவில்லை! இரண்டு வயது நிரம்பிய மகனின் இனிமையான
மழழை மொழிகளும் அவன் மனதை கவரவில்லை! காலம் கண்ணை
மூடிக்கொண்டு “எனக்கென்ன?” என்பது போல் ஓடியது.
மூன்று மாதங்களும் நகர்ந்து விட்டது. அவன்
மனைவி ஒரு நாள் அருகில் வந்தமர்ந்து கொண்டபடி , “என்னங்க! நீங்க இப்படியே பழசை நினைச்சுகிட்டே
உக்காந்திருந்தா, எப்படி? அப்பறம் உங்களுக்கு ஒரு சந்தோசமான விஷயம், உங்கம்மா எங்கையும் போகலை! இன்னும் ஆறுமாசத்தில் நம்மோட நம்மவீட்டுக்குதான் வரப் போறாங்க! என்ன புரிகிறதா? என்று சற்று வெட்கத்தால் சிவந்த முகத்துடன்௯றியபோது
அவன் முகம் லேசாக மாறியது! அப்படியா? என்றவன்
டாக்டரிம் போய் வந்தியா? என்று கொஞ்சம் கருணையுடன் விசாரித்ததை கண்டு அவன் மனைவி சற்று மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் வந்த அடுத்த நாட்களிளும் அவன் இறுக்கம்குறையால் அமைதி காத்ததை
பார்த்து சற்று பயந்தாள்.
அன்று அலுவலகம் விடுமுறையாததால் ஏதோ சாப்பிட வேண்டுமேயென்று
சிறிது கொரித்து விட்டு வாசல் அறையில் அமர்ந்திருந்தான்
அவன் .குழந்தை அவனருகில் பொம்மையை வைத்துக்கொண்டு
விளையாடிக்கொண்டிருந்தது. உள்ளேயிருந்து வந்த அவன்
மனைவி சோர்வான முகத்துடன் “என்னங்க! எனக்கு முடியலே! கொஞ்சம் நல்லா தூங்கினாத்தான் சரியாயிருக்கும் நீங்க குழந்தையை
பார்த்துக்கோங்க! மதியம் அவனுக்கு சாப்பாடு வச்சிருக்கேன்,
அழுதா கொஞ்சம் சாப்பிட வச்சு சிரமம் பாக்காமே தூங்கபண்ணிருங்க! ப்ளீஸ்!” என்று கெஞ்சினவுடன்,
அவன் லேசான இரக்கத்துடன் , “சரி! நான் பார்த்துக் கொள்கிறேன், நீ தூங்கி நல்லா ஓய்வு
எடு”, என்று அவளை அனுப்பி விட்டு குழந்தையை எடுத்து மடியில் வைத்தபடி அவனுடன்
விளையாட ஆரம்பித்தான்.
நேரம் போனதே தெரியவில்லை!
நீண்ட நாட்களுக்கு பின் குழந்தையோடு குழந்தையாகி போனான். பசியில் அழுதவனுக்கு சோறுட்டி பின் தூங்க வைக்க
முயற்சிக்கையில், குழந்தை அம்மாவிடம் செல்ல வேண்டுமென்று அடம் பிடித்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை! நீ தூங்கி எழுந்ததும் அம்மாவிடம்
செல்லாம்! என்று எவ்வளவோ ௯றியும் கேட்காத குழந்தை, அம்மாக்கு ஜூரமா? ஒரு தடவை தொட்டு
பாத்துட்டு வந்துடறேன், என்று ௯றியபடி உறங்கும் அம்மாவை பார்த்து விட்டு வந்து அவன்
மடியில் படுத்துக் கொண்டது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் அவன் நீண்ட நேரம்
தோற்றுத்தான் போனான்.
குழந்தை அவனிடம் ஏதேதோ கேள்விகளை
கேட்டு கொண்டேயிருந்ததேயன்றி
தூங்கும் எண்ணத்தை சுத்தமாக கைவிட்டிருந்தது.
டடி! நம்ம பாத்தி உன்க்கு யாரு?
குழந்தையின் கேள்வி அவனுள் தாக்கத்தை உண்டு பண்ண, உன் அம்மா உள்ளே இருக்காளில்லியா
!அந்த மாதிரி அவ எனக்கு அம்மா! “டடி! அன்னிக்கு
உன்ம்மா அதா நம்ம பாத்தி தூங்கிட்டேயிந்தா! நீ எங்கயோ
பாத்தியை டாடா ௯ட்கிட்டு போனியே! அந்த பாத்தி இப்ப எங்க
டடி? திப்பி வலலையா?” குழந்தை மழழையில் திக்கி திணறிகேட்டவுடன் அவனுக்கு இதயம் வலித்தது. இதோ! பாரு நீ இப்போ தூங்க போறியா! இல்லையா?
அவன் சற்று கோபத்துடன் உரக்க ௯றியும் குழந்தை மசியவில்லை!
“போ ! டடி !உன்க்கு அம்மாவேந்தமா?அம்மா
௯ட நீ “கா” வித்துட்டியா!
ஆனா என்கு எந்தம்மா வேநும். நா தூங்கனா நீ எந்தம்மாவைம்
டாடா கொந்து வித்துடு வந்துருவே! அப்ப என்க்கும் எந்தம்மா இல்ல! ம் ம் அம்மா வேநும்! நீ இவ்ளவு பெச்சு
பைனா ஆயித்தே! உன்கு அம்மா வேநாம் ! அதா நீ அழவ இல்ல! என்கு எந்தம்மா வேநும் ! இல்லாத்தி
நாஅழுவே! குழந்தை
மடியிலிருந்து இறங்கி கையை ஆட்டி தன் மொழியில் சொல்லி
அழுததும் அவனை இழுத்து அணைத்தபடி “அம்மா” என்று கதறினான்
அவன்.
அம்மா! இந்த குழந்தையாகவே நான் இருந்திருக்க ௯டாதா? நம் இருவரின் உறவுகளும் அப்படியே இருந்திருக்குமே! என்னை ஏன் வளர்த்து
பெரியவனாக்கினாய்? உன் அருமை தெரியாமல் அறிவு மழுங்கி இன்று உன்னை இழந்து விட்டேனே! மறுபடியும் உன்னை எப்போது பார்க்க போகிறேன் அம்மா? உன்மடியில் ஒரு குழந்தையாய் எப்போது மாறப் போகிறேன்? உன் அன்பு முழுவதையும் எனக்கே எனக்கென்று எப்போது சுவாசிக்க போகிறேன்? என் நிம்மதி வேண்டி உன் வாழ்நாளை இழந்தாயோ! நீ இல்லாமல் இனி நான் எப்படி இருக்க போகிறேன்? உன்னை வேண்டுமென்றே
தொலைத்த பாவியாகி விட்டேனே!
அம்மா.. அம்மா...
நன்றி கூகிள் |
மனதில் இதுநாள்
வரை கல்லாக கனத்த உணர்வு கண் வழி கண்ணீராக கரைய, அழும் தன் மகனை அணைத்தபடி மனம் விட்டு அழுதான்.. அன்று வராமல் உறைந்து கிடந்த அழுகை மொத்தமாக இன்று குமுறிக்கொண்டு வெளிவர, விழித்தெழுந்த அவன் மனைவியும் அவன் நிலை கண்டு பரிதவிக்க, அவன் கதறிய ஒலி அக்கம் பக்கம் கேட்க, அங்கு இருப்பவர்களையும் பதறி அடித்துக் கொண்டு,
அவன் வீட்டு வாசலுக்கு வரச்செய்தது...
அழுகைகள் அங்கே சங்கமித்தன...
நன்றி கூகிள் |