Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Thursday, November 24, 2022

இனிய அனுபவங்கள்.

 ரவா வெல்ல கேசரி புராணம்...


ஸ்ரீ விக்னேஸ்வரனே அனைவருக்கும் துணை

அருள் மிகும்  விநாயகர் இந்த தடவையும் என் பதிவில் இடம் பெற வந்து விட்டார். அதுவும் முன்னாடி பதிவிலேயே (கதைப் பதிவுக்கும், அதற்கடுத்த  முந்தைய பதிவுகளுக்கும்) தங்கள் விருப்பமாக கருத்துக்கள் சொன்ன  என் அன்பான சகோதர சகோதரிகளின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கி வந்த அவருக்கு என் பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். 🙏. 

அவரை வரவழைத்த உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

இந்த பாம்பே ரவையை கேசரி செய்து சாப்பிட்டு எல்லோருக்கும், பழக்கந்தான்.. அதிலும் ஒரு ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு நன்னாளில், இது இல்லாமல், இதன் அனுமதி இல்லாமல் அந்த காலத்தில் எந்த வித இனிப்பும் தலை காட்ட முடியுமா? போதாகுறைக்கு வாழைக்காய் பஜ்ஜியையும் இது துணைக்கு அழைத்துக் கொள்ளும். அதன் துணை இதற்கு ஒரு வாழ்க்கைத்துணை மாதிரி. பெயர் பொருத்தமும் பஜ்ஜி ஜொஜ்ஜி என இணையாகவும், பொருத்தமாகவும்  வைத்துக் கொண்டபடி அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணை களை தேர்ந்தெடுக்கும் சமயங்களில் இதன் உலா அக்காலத்தில்  தொடரத்தான் செய்தது. ஆனால், காலங்கள் மாற மாற வேறு இனிப்புகள், காரங்கள் இதன் இடத்தைப்பிடித்து இவைகளின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டன. அதன் பின்னும் வந்த காலத்தில், ஒரு காப்பி, டீ, ஏதாவது பழ ஜூஸ், இல்லை வெறும் தண்ணீர் என்ற காலங்கள் மாறி, மேற்படி பையனும், பெண்ணும் உயர்தர உணவகத்தில் விலையுயர்ந்த ஒரு காஃபியை வாங்கி சிறிது சிறிதாக நீண்ட நேரம் அருந்தி, பெரிது பெரிதாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தங்கள் ஒப்புதல்களை பெரியவர்களுக்கு தரும் நாளை தீர்மானித்து, முடிவில் சேர்ந்தோ, அல்லது விலகியோ போகும் நவநாகரீக காலங்கள் என்று இப்போது வந்த பின் இந்த ரவை கேசரி வெட்கி தலைகுனிந்து இந்த சுபமான வைபவங்களுக்குள் கலந்து கொள்ளாமலே விலகி விட்டதோ என நான் நினைக்கிறேன். (தப்பித்தவறி இதற்கு இருந்த மதிப்பு இன்னமும் அநேக இடங்களில் நிலையாக இருந்தால், இதைப்பற்றி  இப்படி எழுதும் என்னை மன்னித்து விடுமெனவும் ஆணித்தரமாக நம்புகிறேன். :)))) ஏனென்றால் ரவா கேசரி எங்களுடைய பிடித்தமான உணவு. முன்பு நாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்த போது, சனி ஞாயறுகளில், மாலை ஏதாவது ஒரு காரமான ஸ்நாக்ஸாக வடை, பஜ்ஜி உ. கி. சேர்த்தோ , இல்லை உளுந்து போண்டா, குணுக்கு போன்றவற்றையோ செய்யும் போது இனிப்பான இது எங்களை மறக்காது அடிக்கடி இதுவும் வந்து உடன் சேர்ந்து கொள்ளும். ) 

எனக்கு தெரிந்து எனக்கும் சரி, என்னை சார்ந்த  என் இனிய சுற்றங்களுக்கும் இந்த ரவை கேசரி படலம் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவதாக தொடர்ந்தது . சென்னையிலிருந்து  என் கணவர்  என்னை பெண் பார்க்க வரும் போது காலை நேரம். பத்து பதினொன்று என அந்த நேரத்தில் கேசரியும், பஜ்ஜியும் அத்தனை பேருக்கும் முன்னால் அமர்க்களமாக அணிவகுத்து நின்றன. இத்தனைக்கும் காலை சீக்கிரமாகவே எழுந்து காலை டிபனை (வழக்கப்படி இட்லிதான்) முடித்து விட்டு வீட்டிலிருந்த நாங்கள் அனைவரும்  காத்திருந்தோம். அவர்களும்  (அவர்கள் அக்கா வீட்டிலிருந்து) காலை டிபனை முடித்து விட்டு வந்திருந்தார்கள். பெண் பார்க்கும் வைபவங்கள் முடிந்த பின் பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், உடனே மாலை நிச்சயதார்த்தம் என முடிவானது. ஏனென்றால் அப்போது சென்னையிலிருந்து அடிக்கடி வந்து போவது கொஞ்சம் கடினம். அவர் அலுவலகத்தில் அடிக்கடி விடுமுறையும் எடுக்க இயலாது என்பதினால், பெரியவர்கள் கலந்தாலோசித்து இந்த அவசர முடிவு. 

அன்றைய மாலைக்குள் எங்கள் அம்மா (அப்போதெல்லாம் யாரையும் உடனடியாக சமையலுக்கு அழைக்கும் வசதி கிடையாது) வடை பாயாசத்துடன் இனிப்பு வகைகளையும் செய்து சமையலையும்  (அதுவும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலைகளில் ) தடபுடலாக முடித்து நிச்சயதார்த்தத்திற்கு மனையிலும் அப்பாவுடன்  வந்தமர்ந்தார். அதற்குள் வாத்தியார் ஏற்பாடு, பிற வேலைகள் என அப்பாவும், அண்ணாவும் மன்னியும் பயங்கர பிஸி. வீட்டிலேயே நடைபெற்ற அந்த அவசர விழாவுக்கு அக்கம் பக்கம் உறவினர்கள், தெரிந்தவரகள் என நிறைய பேர்களை விழாவில் கலந்து கொள்ளவும் , சாப்பிடவும்,  அழைத்திருந்தோம் .மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் பத்து பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். மனையில் வைக்க சீர்  பட்சணங்களும் (அதை முதல்நாளே நிச்சயதார்த்திற்கென அம்மா, பாட்டி செய்து வைத்து விட்டார்கள். "என்னம்மா இது  இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு  என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.)  தயார் நிலையில் இருந்தன. 

இத்தனை பேருக்கும் சமையல், வீட்டிலுள்ள எங்களுக்கு காலை டிபன், பின் இடையில் வந்தவர்களுக்கும் இனிப்பு காரத்துடன் டிபனும் (இட்லிகளும்) என பரபரப்புடன் அவர்கள் (எங்கள் அம்மாவும், பாட்டியும். ) விடாமல் செய்ததை என்னால் இன்னமும் மறக்க இயலாது. இப்போது உள்ளவர்களால் இப்படி தனியாக அத்தனையும் செய்யவே இயலாது. நல்லவேளை...! என் முதல் பெண் பார்க்கும் படலத்துடன் அத்தனையும் சுபமாக முடிந்தது. மேலும் நிறைய தடவைகள் இந்த பஜ்ஜி கேசரி சிரமங்களை என் பெற்றோருக்கு நான் தர வைக்கவில்லை அந்த இறைவன். 

திருமணமாகி எங்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்திற்கு பின் என் புகுந்த வீட்டின் ஒரு சுற்றத்திற்காக  ஒரு இடத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கு சென்றிருந்தோம்பெண் வீட்டுக்காரர்கள்  ஏற்கனவே எனக்கு மிகவும்  அறிமுகமானவர்கள். (அக்கம்பக்கமாக ஒரு இடத்தில் முன்பு ஒரு சமயம் நாங்கள் குடியிருந்ததில் ஏற்பட்ட  நெருங்கிய நட்பு) நாங்கள் உறவு என கூட்டமாக அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போனதோ கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர். அத்தனை பேருக்கும் அவர்கள் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜிகள், நெய் சொட்ட கேசரி என அமர வைத்து போதும் போதுமென தடுத்தும் அன்போடு விடாப்பிடியாக பறிமாறினார்கள். பிறகு நல்ல பெரிய டம்ளர்களில் காஃபி. மயங்கி கீழே விழாத குறையாக சாப்பிட்ட (சாப்பிட வைத்தார்கள்) பிறகு பெண் பார்க்கும் படலம் முடிந்தது. 

அந்தப் பெண்ணை நான் ஏற்கனவே பல தடவைகள் பார்த்து பேசியுள்ளேன். ஆனால், மாப்பிள்ளை உறவுகள்  அப்போதுதான் பார்க்கிறார்கள். இறுதியில் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேண்டாமென மாப்பிள்ளை பையன்  சொன்னதும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. (அடாடா.. அவர்கள் வீட்டில் அன்று  தின்றதிற்காகவாவது ஒத்துக்கொள்ள கூடாதா? என்று என் மனதிற்குள் அந்தப்பையனிடம் பல முறை கேட்டு கேட்டு அலுத்து விட்டேன்.) என்னசெய்வது? "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற மாதிரி பிறக்கும் போதே இதையெல்லாம் முடிப் போட்டல்லவா இறைவன் அனுப்பி வைக்கிறான். 

பெண் வீட்டுகாரர்களுடன் அநநிகழ்வுக்குப் பின்னும் நான் பேசி பழகினேன். எனக்குத்தான்  சங்கடமாக இருக்கிறதென்று  வருத்தமாக அவர்களிடம்  சொல்லும் போதெல்லாம் அவர்கள்தான்" "இது எல்லாம் உலகில் சகஜந்தான்" என என்னை சமாதானபடுத்துவார்கள். அவர்களின் நல்ல மனதை எண்ணி நானும் அவர்களுடன் எப்போது பேசும் போதும் வியந்திருக்கிறேன். இன்று அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி நலமாக, வளமாகத்தான் இருக்கிறார்கள். இதைதான் "இறைவன் செயல்" என்கிறோம். 

அட......! இன்னமும் இவர் தலைப்புக்கு வரவில்லையே...!  என நீங்கள் எண்ணலாம். நான் இப்போது ஒரு தினம் இதைச் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு செய்தேன். கடவுளுக்கும் நேவேத்தியமும் செய்யலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாத என்னைப் போன்றவர்களும் இது மாதிரி செய்தால் கொஞ்சம் (கொஞ்சந்தான்) சாப்பிடலாம் என்ற நினைப்பில் வெல்லம் சேர்த்து செய்தேன். 

இதைப் பகிர நினைக்கும் போது, இந்த கேசரி  சம்பந்தபட்ட நிறைய புகைப்படங்களை நான் எடுக்கவே இல்லையே என்ற நினைவு வந்தது. அதனால், என் மனதின் எண்ணங்களும் ரவையோடு சேர்ந்த வெல்லமாய் உடன் கலந்து  பதிவாக வந்து விட்டது. ரவையின் அளவுடன் கண்ணளவாக வெல்லம் கரைத்து வடிகட்டி சேர்த்து கிளறும் போது நெய்யும் சேர்த்து நன்றாக வந்த இந்த வெல்ல கேசரியை நீங்களும் கொஞ்சம் எடுத்து சுவைக்கலாமே.. மேலும் மு. ப. , ஏலப்பொடி போட்டவைகளை படங்கள் எடுக்கவேயில்லை.அதறகாக என்னை மன்னிக்கவும். ஆனாலும் சுவையாக வந்த கேசரிக்காக நீங்கள்  அனைவரும் இந்தப் பதிவையும் படிப்பீர்கள் என அன்புடன் நம்புகிறேன். உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 


   
வெல்ல கேசரியையும், என் சுவையான  அனுபவ எண்ணங்களையும் முறையே பார்த்து படித்து ரசித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான நன்றி... 🙏.. .

இது இப்போது எங்கள் வீட்டின் சின்னக் குழந்தைகளுக்காக கிளறிக் தந்த ரவா ஜீனி கேசரி. நான் வெல்ல கேசரி பதிவை எழுதி முடித்ததும் அதற்குப்போட்டியாக இதுவும் வந்து விட்டது.



குழந்தைகளுக்கு மு. ப. உடைத்து வறுத்துப் போட்டால் அது அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை. தனியே எடுத்து வைத்து விடுகின்றனர். அதனால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வறுத்து இறுதியில் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இதையும் கேசரியுடன் கலக்க  வைத்திருக்கிறேன். 


பதிவை படித்து இரண்டு விதமான கேசரிகளை எடுத்துச் சுவைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏. .