வணக்கம் அனைவருக்கும்
உலகில் நாம் தோன்றியவுடன் நம்முடனே ஒட்டியபடி பிறப்பது இந்த ஆசைதான். ஆசைக்கு என்றும் அழிவில்லை. பிறந்த குழந்தை தன் தாயின் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நேசிக்க தொடங்குவதிலிருந்து இந்த ஆசை ஆரம்பிக்கிறது ஒரு உடல் அழிந்த பின் கூட அதன் ஆசாபாசங்கள் விடாது தொடர்வதாய் நம்பபடுகிறது. அதற்காக மறைந்த அந்த உடலுக்கு அவர்தம் சந்ததியினர் விருப்பபட்டோ, இல்லை, விருப்பபடாமலோ, அல்லது மறைந்த அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி பூர்த்தி செய்யும் முகமாகவோ, அவர்களின் வருட நினைவு நாளை நினைவாக திவசம் என்ற பெயரில் செய்து வருகின்றனர். அது அவரவர்களுக்கு பிடித்தமான விருப்பங்களை பொறுத்தும். மாறுபட்ட முறையிலும் அமையும். எனக்கு தெரிந்து ஒருவர் வேறு எந்த படாடோபமுமின்றி தந்தை, தாயின் நினைவு நாளில் ஒரு வழியற்றவர்களின் இல்லத்திற்கு சென்று அங்கிருப்போர்களுக்கு அன்றைய உணவுக்கு சிறிதேனும் வழி செய்வார். அதுவும் வருடந்தோறும் என்பதில்லை. அவருக்கு எப்போது எந்த வருடம் செளகரியபடுகிறதோ அப்போது. அதற்கே அவரை பாராட்ட வேண்டும்.
இப்படியாக உலகில் ஒவ்வொருவருடைய ஆசைகள் உள்ள போதிலும், மறைந்த பின்பும் பலவிதம். ஆசைகள் அதன் நிலை மாறி பேராசைகள் ஆவதில்தான் துன்பமே விளைகிறது. அதை எத்தனையோ கதைகள் மூலமாகவும், புராண கதைகள் மூலமாகவும் அறிந்துள்ளோம். ஆனாலும் இந்த பேராசைகள் ஒருவரை அழிக்க வேண்டுமென்று இருந்தால் அதுதான் அவர்களின் மாறுபடும், இல்லை மாற்றமே இல்லாத விதியாகவும் அமைந்து, அவர்களின் சிறப்பற்ற வாழ்க்கைக்கு ஒரு சாட்சியாகவும், ஒரு காரணமாகவும் ஆகி விடுகிறது. சிலசமயங்களில் அவர்களே தெய்வாதீனமாக நன்றாக வாழ்ந்து அனுபவித்து விட்ட பின்னர், ஒரு பாவமும் அறியாத அவர் சந்ததியினரை அது வாட்டி வதைக்கிறது. ஆக ஐம்புலன்களின் மூலமாக ஏற்படும் ஆசைகளை அடக்கி எந்த ஒரு மனிதப்பிறவி ஞான மார்க்கத்தில் பயணிக்கிறாரோ அவர் துன்பமற்ற வாழ்வை பெறுவார் என்பது திண்ணம் என்றும் நாம் அந்த கண்ணன் காட்டிய வழியில் படித்து அறிந்துள்ளோம். இருப்பினும் அது இயல்பாகவே நம்மால் கடைப்பிடிக்க முடிகிறதா?
"என்னடா.. இந்த ஞானோபதேசம்? நாம் அறிந்த விஷயங்களை மறுபடியும் இப்படி அரைத்த மாவாய் எதற்கு இப்போது.... என நீங்கள் மனதுக்குள் நினைப்பதற்குள் இப்போது விஷயத்துக்கு வருகிறேன்."
எனக்கு ரங்கநாதனை தரிசிக்க ஸ்ரீ ரங்கம் செல்ல வேண்டுமென ரொம்ப நாளாக (நாட்கள் என்றால் ஓரிரு நாட்களில்லை. .ஒரு மாத நாட்களில்லை... . ரொம்ப வருடங்களாக.... ஒரு 365 ஐ 12க்கும் மேலாக பெருக்கினால் எவ்வளவு வருமோ அந்த அளவு நாட்களாக..இல்லை அதற்கும் மேலாகவே. .. என்றும் வைத்துக் கொள்ளலாம். ) ஒரு ஆசை உண்டாகி விட்டது. எப்போதோ எங்கள் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போது, வேறு உறவுகளின் விஷேட நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து போகும் வழியில் திருச்சியில் இறங்கி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும், சமயபுரம் கோவிலுக்கும் எட்டிப் பார்த்து விட்டுச் சென்றோம். நாளடைவில் அது கனவு மாதிரி மறந்தே போய் விட்டது. இத்தனைக்கும் அந்தக் கோவிலைப் பற்றிய, ஸ்ரீராமரிடம் அளவு கடந்த மிகுந்த பக்தியும் பற்றும் கொண்ட விபீஷணனின் (இலங்கை வேந்தன் இராவணனின் தம்பி. ) சற்றே கவனக்குறைவால் உண்டான கோவில் இது என்ற விபரத்தைத் தவிர வேறு ஒரு விபரமும் இன்றுவரை தெரியாது. இந்த ரங்கனை தரிசிக்கும் ஆசை நாளாக, நாளாக எனக்குள் எழுந்தது எப்படி என்று விளக்கமாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு தாபமாய் அந்த எண்ணம் உண்டாகி விட்டது. அதை நான் மட்டும் நினைத்தால் எப்படி? "அவனும்" நினைத்தால் அல்லவா அது நல்லபடியாக நிறைவாக நடந்தேறும்.
சதா எந்நேரமும் சிவனை நினைத்தபடி இருந்த சிவ பக்தராகிய நந்தனாருக்கே எப்போது சிவ தரிசனம் கிடைக்க வேண்டுமென்று சிவபெருமான் நினைத்தாரோ அப்போதுதான் அவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. அதுவரை அவர் பட்ட அல்லல்கள் ஒரு காவியமாய் இன்றும் அவர் பெயர் சொல்லியபடி புகழ் பெற்று நிற்கிறது. சரி... எப்போதும் சிவனையே நினைத்தபடி "அவனை" காணும் ஆவலையே தன் மூச்சாக கொண்டபடி இருந்த அந்த புனிதமான சிவ தொண்டரும், பந்த பாசங்களோடு, ஜீவனை வளர்த்தபடி அன்றாடம் குடும்ப கடமைகளின் நடுவே "அவனை"யும் எப்போதோ நினைத்தபடி, இந்த பாழும் உலகப் பற்றில் மூழ்கி அதிலிருந்த விடுபடவும் தெரியாது / விரும்பாது இருக்கும் நானும் ஒன்றாகி விட முடியுமா? ஏதோ உதாரணத்திற்கு அவரைச் சொன்னேன். அவர் பெயரை நினைத்து உச்சரித்து எழுதிய "இந்த ஒரு நிமிடமேனும் கடல் போன்ற எனது ஏகப்பட்ட பாவங்களில் ஒரு துளியையாவது போக்கி விடப்பா" என பகவானை இப்போது பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். 🙏.
இந்த ஆசை என் இளைய மகன் திருமணம் நவம்பரில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடந்த போது அதிகமாகியது. ஆனால் அப்போது திருமண வேலைகளிலும், அந்த வருடம் பெய்த பயங்கர மழையினால் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி போக, வரவே நேரம் சரியாக இருந்தது. மேலும் கோவிலுக்கு அப்போதைய முதல்வரின் வருகையால் கோவிலுக்குச் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் இருந்தமையால் மற்றொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என உறவுகளின் அறிவுறுத்தல்களில் திரும்பி வந்தாகி விட்டது. ஆக அப்போதும் "அவன்" என்னை அவனைப்பார்க்க அனுமதிக்கவில்லை.
அதன் பின்னும் என் ஆசை கடந்த வருடங்களில் பேராசையாக மாற முயற்சித்தபடி இருந்தது. எனினும் என் ஆசையை "அவன்" கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தான். இந்த தடவை என் மகன் மருமகள் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு முன்பே என் ஆசையை அவர்களிடம் சொல்லி காண்பித்துக் கொண்டேயிருந்தேன்.( ஏனெனில் என் மருமகளின் தாய் வீடு திருச்சிதான்)
அவர்கள் வந்த நேரம் என் விதி வசத்தால், விடாது கருப்பாக தொடர்ந்த என் உடல் நலக்குறைவுகள் பற்றியும், அதனால் மைசூருக்கு செல்லும் வழியில் ஸ்ரீ ரங்கபட்டினம் சென்று அங்கேயாவது அந்த ரங்கநாதனை தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்கு "அவன்" தரவில்லை என்பதையும் என் முன் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
இப்படியாக அவர்கள் வந்த பின் நாட்கள் நகர்கையில் ஒரு நாள் என் மகன் "நானும் என் மனைவியுடன் திருச்சிக்கு சென்று விட்டு, பிறகு திருநெல்வேலிக்கும் செல்லப் போகிறேன். இப்போது தொற்றும் அவ்வளவாக குறைந்துள்ளது. எல்லாமே மூன்று நான்கு நாட்களுக்குள் செல்லும் பயணந்தான். ஆங்காங்கே ரயிலிலும், பஸ்ஸிலும், வாடகை காரிலுமாக பயணம் உன்னால் வரமுடியுமா?" எனக் கேட்டதும் என் ஆசை அதன் சிறகுகளை கன்னாபின்னாவென்று பயங்கரமாக விரித்தபடி, என் உடல்நலக் குறைவையெல்லாம் கவனிக்காது உதாசீனப்படுத்தி "இதை விட்டால் உனக்கு எப்போதும் சமயமே வராது. ஒதுக்காமல், ஒதுங்கி விடாமல், உடல் நலத்தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சென்று வா"வென கடுங்கோபம் கொண்டு அவசரமாக விரட்டியது. நானும் உடனே சரியென சம்மதம் சொல்லவும், எங்களுடன் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவருக்குமே இந்த புறப்பாடு பிடித்துப் போனதில், ஒவ்வொருவராக எங்களுடன் இணைந்தனர். பிறகென்ன.... அலுவலக விடுமுறையான அந்த நான்கு நாட்களுக்குள் சென்று திரும்ப வேண்டுமென்ற ஒரு கட்டாயத்துடன் திருச்சியில் என் மருமகளின் தாய் வீட்டிற்கு புலர்ந்தும் புலராத ஒரு காலையில் சென்று விழுந்தோம். அங்கு தங்கிய நாட்களில் எங்களை அன்புடன் உபசரித்து நல்லதொரு தெய்வ தரிசனங்களுக்கு வழி வகுத்து தந்த மருமகளுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள் எப்போதும். எங்களின் தீடிர் வருகையால் அவர்களுக்கு சிரமங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன். 🙏.
அன்று உடனே குளித்து முடித்து, டிபன் சாப்பிட்ட கையோடு ரங்கனின் தரிசனத்திற்காக கிளம்பும் போது என் ஆசை சிறகு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தில் படபடவென அடிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
அன்று வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் எனக்கு நம் சகோதரி கீதா சாம்பசிவம் நினைவு வந்து கொண்டேயிருந்தது. இங்குதான் அவரும் கோவிலுக்கு அருகில் எங்கோ வசித்து வருகிறார் எனக் சொல்லியிருந்தார். ஆனால் அவரின் முகவரி எனக்குத் தெரியாது. நான் முன்பு அவரிடம் ஒருமுறை ஸ்ரீரங்கம் வர ஆசையாக இருக்கிறதென்றும், அப்படியே வரும் போது தங்களையும் சந்திக்கும் ஆவலும் இருப்பதாகவும் வலைத்தள பதிவுகளில் எங்களுக்குள் நடந்த கருத்துரையாடல்களில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஒரு முன்னறிவிப்பும் இல்லாது இப்படி தீடிரென கிளம்பிய பயணத்தில், அதுவும் வீட்டின் அத்தனை உறவுகளுடன் வரும் போது அனைவரோடும் சென்று எப்படி அவர்களை சந்திக்க இயலும் என்ற மன சமாதானத்தையும் எனக்குள் சொல்லிக் கொண்டேன். "மற்றொரு முறை இதே பாக்கியம் வாய்க்கும் சந்தர்ப்பத்தை "அவன்" தந்தால் அந்த சந்தர்ப்பத்தில் உங்களை தவறாது வந்து சந்திப்பேன் சகோதரி" என மனதுக்குள் அவரிடம் மன்னிப்பும் கேட்டபடி கோவிலுக்கு விரைந்தோம். மன்னிக்க வேண்டுகிறேன் சகோதரி.... 🙏.
நேரடியாக கோவிலினுள் சென்று ஆளுக்கு 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு நீண்ட க்யூவில் வளைந்து வளைந்து பயணித்தோம். முதலில் எங்கு செல்ல வேண்டும் எப்படி முறைப்படி செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. அரங்கனை அந்த நேரத்துக்குள் தரிசிக்கும் ஆவல் மட்டுமே அப்போது மனதுக்குள். வரிசையில் நின்றபடி அனந்த சயனத்திலிருந்தபடி அருள் பாலிக்கும் அரங்கனை நெருங்கி விட்டோம். "சற்று ஆறஅமர கண்குளிர நிம்மதியாக தரிசிக்கும் வாய்ப்பு இங்கும் குறைவுதான் போலிருக்கிறது என்ற எண்ணம்தான் வரிசையில் செல்லும் போது எங்களுக்குள் எழுந்தது." "ம்..ம். சீக்கிரம்.. சீக்கரம் போங்க" என்றபடி விரட்டாத குறையாக தள்ளி விடும் கோவில் காவலர்கள். "எப்படி அவனை முகம் பார்த்து பாதம் வரை மனதில் இருத்தி வைக்கப்போகிறோம்" என்ற கவலை மனதில் தத்தளிக்க இருகரம் கூப்பி வைத்த விழிகளை எங்கும் நகர்த்தாமல் கால்கள் படிகளில் இடறி விடாமல்," இத்தனை நாள் தவத்தை புரிந்து கொள்ளப்பா ரங்கநாதா" என்று மனதோடு அரற்றியபடி கூட்டத்தோடு நகர்ந்தேன். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த அதிசயம்." அவன்" பாதங்களின் அருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு பட்டாச்சாரியார் என் கைகளை ரங்கனுக்கருகில் பற்றியிழுத்து "நீ எங்கே இப்படி" என்று என்னை கேட்டபடி "அவனை" முகம் முதல் பாதம் வரை முழுதுமாக தரிசிக்க வைத்தார். ஒரு நொடி தடுமாறிய பொழுதில் ரங்கனின் விழிகள் என் விழிகளோடு சந்தித்து ஆசிர்வதித்தன . ஆகா.. ஆகா... நாராயணா.. கோவிந்தா.. ரங்கநாதா... என மனது சிலிர்த்து மெய் உருகும் போது அதே பட்டாச்சாரியார் சுதாரித்து கொண்டபடி "நீயா.. போ.. போ.. என்றபடி கூட்டத்தோடு பிடித்து தள்ளி விட்டு விட்டார். அந்த ஒரு நொடி தரிசனத்தை என் உயிருள்ள வரை மறக்க இயலாது. இப்போது இதை உங்களுக்கு தெரிவித்து எழுதும் போதும் எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்த ஒரு நொடி அவருள் இருந்தது அந்த ஸ்ரீரங்கன் என்பதை அவர் அப்போது உணர்ந்தாரோ இல்லையோ, நான் இன்று வரை உணர்கிறேன். "வருட கணக்காக என் மனத் தவிப்பை உணர்ந்தவனாக "அவன்" நடத்திய நாடகம் இது... " என தினமும் விழி கசிய வீட்டில் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்.
தரிசனம் முடிந்து வெளியில் வந்து அமர்ந்த போதும், என் மனதின் சிலிர்ப்பு குறையவில்லை. தாயாரையும், தன்வந்திரி நாராயணரையும் தரிசித்து விட்டு (மற்ற சன்னதிகள் பெரும்பாலும் மூடியிருந்தன) மறுபடியும் மாலை வேறு ஒரு இடத்திற்கு பயணம் என்பதினால் தாமதிக்காமல் வெளியில் வந்தோம். வீட்டுக்கு திரும்பி வரும் சமயம் அனைவரிடமும் "இன்று எனக்கு பிறந்த நாள்.இந்த நாளில் எனக்கு அரங்கனின் அன்பு பார்வை எப்படி மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது" என சொல்லிக் கொண்டே வந்தேன்."உனக்கு வரும் ஏழுதானேம்மா பிறந்த நாள்" என்ற மகன்களிடம் "ஆமாம் ஆனால் இன்று ஜென்ம நட்சத்திரம். முன்பெல்லாம் இந்த நாளில்தான் நாம் பிறந்த தினம் என்போம். இன்றைய இந்த நாளில் தெய்வமே மனமுவந்து என்னை நோக்கி ஆசிர்வதித்ததை மறக்க இயலாத நாள் " என்றேன். அன்றைய தினம் என் ஆயுளில் எனக்கு மறக்க முடியாத பிறந்த நாள்தான். நாராயணா... நாராயணா...
ஊருக்கெல்லாம் சென்று திரும்பி வந்தவுடன் நம் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் ஸ்ரீ ரங்கனின் பதிவாக நிறைய வெளியிட்டார்கள். நானும் அதே மெய்சிலிர்ப்புடன் படித்து வந்தேன். அதில் ஒரு பதிவாக பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்தான் (அன்றுதான் விபீஷ்ணன் ராமர் தனக்களித்த பள்ளி கொண்ட ரங்கநாதனை விமானத்தோடு தான் ஆளும் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது தன்னுடைய மதிய நியமநிஷ்டைகளை முடித்துக் கொள்ளும் பொழுதினில் கீழே வைத்து விட ஸ்ரீரங்கனின் விருப்பபடி ரங்கன் அங்கு ஸ்தாபிதம் ஆன கதையை விவரித்து கூறியிருந்தார்.) அந்த ரங்கநாதன் அங்கு பள்ளி கொண்டான் என்ற புராணத்தை சொல்லியிருந்தார்கள். அந்த பங்குனி மாத என்னுடைய பிறந்த நாள் நட்சத்திரமாகிய அந்த நட்சத்திரத்தில்தானே பகவான் தன்னையும் அங்கு ஸ்தாபிதம் ஆக்கிக் கொண்டு என்னையும் அருள் பார்வை பார்த்திருக்கிறார் என எண்ணிய போது அன்றிலிருந்து விவரிக்க இயலாத ஆனந்தம். இன்னமும் என்னுள்ளம் அந்த சம்பவத்தின் சந்தோஷ சிலிர்ப்பில்தான் உள்ளது. 🙏.
இப்போது என் ஆசை நிச்சயம் மேலும் பேராசையாக மாறி இருக்கிறது. ஆனால் இது துன்பங்கள் இல்லாத பேராசை. மீண்டும் ஸ்ரீரங்கனை கண் குளிர மனம் சிலிர்க்க ஒரு தடவை தரிசிக்க வேண்டும். ஆனால் இந்த தடவை "அவன்" மீண்டும் "பந்த பாசங்களோடு வாழும் வரை போராடு" என என்னைப் பிடித்து தள்ளி விடாமல் "என்னுடனேயே வந்து விடு" என அழைத்துக் கொள்ள வேண்டும். நடக்குமா? அதையும் "அவன்" செய்வானா? அவனின் "கணக்குப்" புத்தகத்தை எனக்காக சிரமம் பாராமல் மாற்றியமைப்பானா என்ற மனத் தவிப்புடன் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். 🙏. நாராயணா. நாராயணா. நாராயணா. ரங்கநாதா. .🙏🙏🙏🙏.
எங்கள் மகனுடன் அவசரமாக சென்று வந்த இடங்களைப் பற்றி எழுதுகிறேன் என சென்ற பதிவில் கூறியிருந்தேன். ஆனால், இதுவரை என்னை இதுபற்றி எதுவும் எழுத விடாமல் இருந்தவன் இதை உங்கள் அனைவரோடும் இன்று பகிர்ந்து கொள்ளும் இந்த வேளையை நினைவுபடுத்தி எழுத வைத்ததும் "அவன்தான்" என மனப்பூர்வமாக நம்புகிறேன். "அவன்" தானே நம்மை என்றும் ஆட்டுவிப்பவன். பக்தியினால் என் மனம் இன்புற்ற இந்தப்பதிவை பொறுமையாக படித்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.