Friday, November 6, 2020

கொலு நினைவுகள்...

வருடாவருடம் தொன்றுதொட்டு வரும் பண்டிகைகளை  நினைவு தெரிந்த நாளிலிருந்து நாமும் அலுக்காமல், சளைக்காமல் சந்தோஷமாக, மிகுந்த உற்சாகமாக கொண்டாடித்தான் வருகிறோம். இதில் ஏதாவது மனக்குறைகள் வந்து விடும் போது  (அதுதான் வராமல் இருக்குமா? இல்லை, அதை வரவழைத்துக் கொள்ளாமல்தான் நாம் விடுவோமா ? அதுதானே மனித மனத்தின் இயல்பு.. .:)) அடுத்த தடவை இன்னமும் சிறப்பாக  அந்த பண்டிகைகளை கொண்டாடி விட வேண்டுமென்ற ஒருவிதமான கற்பனை  எண்ணங்களைை அந்த வருடத்திலிருந்தே வளர்த்துக் கொள்வதும் நம் பழக்கமாயிற்றே.....! இதனாால்  நேர்மறை எண்ணங்களோடு அடுத்த வருட வரையிலான நாட்கள் நம்மோடு ஓடி வரும் என்ற நம்பிக்கையும் நம்முள்...! அது போல், அந்த நம்பிக்கை, நம் பலத்தின் ஆணிவேராக இருந்து, வரும் வருடத்தையும்  கண்மூடி திறப்பதற்குள் விரைவாக அழைத்து வந்து நம்மிடம் ஒப்படைத்து விடும் .

நவராத்திரி கொலு வைபவங்கள் என்றுமே எனக்குப் பிடித்தமானது. வருடாவருடம்  கொலு வைக்கும் பழக்கம் அம்மா வீட்டிலிருந்தே உண்டு. இங்கு புகுந்த வீடு வந்த பின்னும் அம்மா சீதனமாக தந்த பொம்மைகளை கொண்டு கொலு வைக்க மாமியார் தந்த உத்தரவின் பேரில் வைத்து வந்தேன். அவ்வளவாக வருடங்கள்தோறும் பொம்மைகள் வாங்காவிடினும், சில வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றிரண்டாக வாங்கிச் சேர்த்து தொடர்ந்து வைத்து வந்தேன். கடந்த ஏழெட்டு வருடங்களாக ஏதோ தட்டிப் போய் விட்டது. இந்த தடவை தெய்வாதீனமாக எல்லாப் பண்டிகைகளும் உண்டெனினும் படிகள் அமைத்து கொலு வைக்க இயலவில்லை.  வீட்டில் சின்ன குழந்தைகளாக (பேரன் பேத்திகள்) இருப்பதால், கொலுவை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் கொஞ்சம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் வைக்கலாம் என்ற எண்ணம். அடுத்த வருடம் அதற்கு நேரம் நல்லபடியாக வாய்க்க வேண்டும் என பிரார்த்தித்தபடி. இந்த வருட நவராத்திரி நாட்களை  அம்மன் ஸ்லோகங்கள், தினமும் என்னால் முடிந்த நிவேதனங்களுடன், கொண்டாடி எப்போதும் போல், சரஸ்வதி பூஜை புத்தகம் வைத்து பூஜித்து, விஜயதசமி மாவிளக்கு வைத்து பூஜை செய்து நிறைவாக பண்ணினோம். 

இது எங்கள் அண்ணா வீட்டு கொலு படங்கள். அருகிலிருந்தால் நேரில் சென்று கொலுவை ரசித்து தரிசனம் செய்து ஆசிகள் பெற்று வருவேன். இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு தூரம் செல்லவும் முடியாது. எனவே அவர் இந்த தடவை நான் பார்க்க வேண்டுமென்று எடுத்தனுப்பிய படங்களை "எங்கள் வீட்டு"  கொலுவாக, (வழக்கப்படி தாமதமாக . ஆனால் நல்ல வேளை தீபாவளி முன்னர்.. ) பகிர்கிறேன். இதை என்றோ எழுதி வைத்து விட்டேன். அதை வெளியிடவும், "அவன்" நினைக்கும் நேரந்தானே எப்போதும் சரியான நேரமாக அமையும்.....! கொலுவைப் பார்த்து 👌ரென்று  ரசிப்பவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 


கொலுவிருக்கும் பொம்மைகள்... 
இது அதையே காணொளியாக தொகுத்தது.  சரியாக வந்திருக்குமென்று நம்புகிறேன். 

இதையும் பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏.