Showing posts with label கீதாச்சாரம். Show all posts
Showing posts with label கீதாச்சாரம். Show all posts

Thursday, April 26, 2018

மஹாபாரதம் உணர்த்திய உண்மைகள்....


கீதையில்  கடமையை செய்..... பலனை.எதிர்பாராதே!  என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்தமா... கூடவே இரு மனங்களையும், அதாவது ஒரு செயலை செய்யும் பக்குவமான உள்ளத்தையும், அந்த செயலை செய்தால் ஏதேனும் திருப்பங்கள் உண்டாகுமா எனறு எதிர் நோக்கும் உள்ளத்தையும் ஒருங்கே தந்து விட்டான் நம்மை படைத்த ஆண்டவன். ..  ஆததால் எந்த ஒரு செயலையும் கடமையாக மட்டுமே எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மிடம் உள்ளதா என்பதே ஒரு கேள்விக்குறி?. கடமையை செய்யும் போதே மனசு அடுத்ததாக பலன் ஏதாவது இருக்கிறதா,.... இல்லையா......என்ற சிந்திக்க ஆரம்பிக்கும் போதே  அச்செயல் கடனாகி விடுகிறது.

நமக்கென உண்டாகி இருப்பது..... இதனை நாம் செய்தால்தான் இது பரிபூரணம் அடைந்து சிறக்கும் என உணர்ந்து செய்யும் செயலே கடமை.

இதை எதற்காக  நாம் செய்யவேண்டும்? இந்தளவிற்கு இதில் கவனம் செலுத்தினால் போதும்... என்று மனமொவ்வாமல்  சுவாரஸ்யமின்றி செய்யும் செயலே கடன்.  என்பது என் கருத்து.

அவ்வாறு கடமையாக விரும்பியும், கடனாக வெறுத்து ஒதுக்கியும் இராமல் இறைவன் விட்ட வழி எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும்.. என்று எதிலும் கவனமின்றி      பற்றற்று இருப்பதும் பலன் ஒன்றும் நல்காது என்கிறது கீதை.

இப்பிறப்பில் உனக்கு விதித்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதில் இன்பங்கள், மகிழ்வுகள் சந்தோஷங்கள்  இப்படி எது வந்தாலும் அதையும்,  துன்பங்கள் துக்கங்கள் துயரங்கள்  எது வரினும் அதையும் ஒன்றாகவே பாவித்து  அப்போதும் உன் கடமையின்று வழுவாது அதற்குண்டான  பலனையும் எதிர்பாராது, அமைதியாக உன் செயலை செய்து கொண்டே இரு.  அதுதான் சிறந்த பற்றின்மை என்கிறது கீதாச்சாரம்.

இவ்வாறாக நிறைய ஆன்றோர், சான்றோர் உலகில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இதிகாசங்களில் ஒன்றான மஹா பாரத காலத்தில் அக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களில் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஆனால் அவரவர்  குணாதிசயங்களிலிருந்து மாறுபடாமலும் இருந்து  தம்முடைய கொள்கைகளை நிறைவேற்றி உள்ளார்கள்.ஒவ்வொருவருடனும்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒவ்வொரு காலகட்டத்தில் அவர்களுடன் விவாதித்து அவரவர்களின் கர்ம வினைகளை உணரும்படி செய்து அருள் பாலித்திருக்கிறார். அவர்களும் நடத்துவிப்பவனின் எண்ணப்படி நடப்பது நடந்துதான் தீரும். இடையில் நாம் ஒரு கருவிதான் என்ற சரணாகதி மனப்பான்மையுடன் வாழ்ந்து நமக்கு ஒரு பாடமாக இருந்திருக்கிறார்கள். அப்படி தெய்வத்தின் அருகாமையில் அவன் நிழலில் வாழ்ந்தவர்களாகிய அவர்களே ஏகத்திற்கும்  துக்கங்களையும், சங்கடங்களையும், சந்தித்திருக்கும் போது சாதரண மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்..... நாம் வாழும் இந்த வாழ்விலும் ஒரு கணத்தில்  மாறி மாறி வரும் சந்தோஷம், துயரங்கள் போன்றவற்றை ஒரே நிலையில் நிறுத்தி சமமாக பாவிக்கும் மனோதிடத்தை தந்தருள வேண்டும் என மனமுருகி ஸ்ரீ கிருஷ்ணரின் பாதம் பற்றி பிரார்த்திக்கிறேன்.பாரத போரின் போது பார்த்திபனின் மனசஞ்சலம்  போக்குவதற்காக, அவன் சமமான மனநிலை எய்துவதற்காக அவன் அருகாமையிலிருந்து, கீதோபதேசம்  செய்தவர், நல் வழிகளை எடுத்துச் சொல்லி காண்டீபனை ஒரு கர்ம வீரனாய் ஆக்கியவர், இப்போது நம்முடைய மனதிலிருந்தபடியே  இதமாக எடுத்துக்கூறி நம் மன சஞ்சலங்களையும் களைவார் என்று நம்புவோம்..

          அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்...

இவ்வாறு அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்  என்று சொல்லும் போது படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் செய்த நற்செயல்களை மட்டுந்தான் அவனிடம் சமர்பிக்க வேண்டும். அது பன்மடங்காகப் பெருகி நம்மையே வந்தடையும். மாறாக அறிந்தறியாமல் செய்யும் தவறானதொரு செயலின் விளைவையும், அவனிடம் அர்ப்பணித்தால்  அது பன்மடங்குக்கும் மேலாக பெருகி நம்மிடமே சரணடைந்து விடும். ஏனெனில் நம்முள் இருப்பவனும், நம்மை நன்குணர்ந்தவனும் அவனல்லவா... ..................................................................................................................................... ................... .......

பின் வரும் வாசகங்களை படிக்க நேர்ந்தது. அதை படித்துணரும் போது என் மனதில் தோன்றியதையும் பக்தியுடன் எழுதி, படித்த வாசகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னுடன் படிப்பீர்கள் என  நம்புகிறேன்.
படிப்பதற்கும்   படித்ததற்கும்  மிக்க நன்றி.


மகாபாரதம் உணர்த்தும்.   உண்மைகள்....
********************************************
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
-------------------------------
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்..
--------------------------------
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....
------------------------------
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
- சகுனியாய்...
------------------------------
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...
-------------------------------
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....
------------------------------
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...
------------------------------
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...
------------------------------
கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...
------------------------------
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..
------------------------------
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....
------------------------------
பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....
------------------------------
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....
------------------------------
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..
------------------------------
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ
------------------------------
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....
------------------------------
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...