Friday, December 30, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில்  கால் பதித்து நடக்க ஆரம்பிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும், நாம், இந்த வருடம் அதன் முடிவை சந்திப்பதற்குள், இதையெல்லாம். சாதித்து முடிக்க வேண்டுமெனவும், வருடத்தின் முதல் நாள் தொடங்கி  இறுதி நாள் வரை, தினமும் இச்செயல்களை செவ்வனே செய்ய வேண்டுமெனவும்.நமக்குள் என்றும் வாய்பேசாது மெளனித்திருக்கும், சத்தியத்தை சாட்சி  துணையாக அழைத்துக்கொண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொள்கிறோம். ( அதை சாதித்து செயலாக்க முடிகிறதா என்பது வேறு விஷயம்.) சிலருக்கு அந்த வாய்ப்புகள் அமையப் பெற்று, மகிழ்ச்சியையும், நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தையும்  தரலாம். ஆனால், பெரும்பான்மையாக பலருக்கு ஒரிரு மாதங்கள் உறுதிமொழியின்படி நடந்து விட்டு அதன்பின் வருட இறுதியில், தவற விட்ட நாட்களை நினைத்து வருந்தி மறுபடியும் வரும்  வருடத்திற்காக தவம் இருப்பதே வாடிக்கையாக போய் விடுகிறது.

போகட்டும்! .நடந்து வரும் கடந்து போய் கொண்டிருக்கும் 2016 ல் எத்தனையோ வளர்ச்சிகளையும், உன்னதங்களையும் சந்தித்திருந்தாலும்,  சில இழப்புக்களும், இன்னல்களும்  தலைகாட்டி நம்மை  வருத்தியிருக்கின்றன. இனி உதயமாகும்   2017 ம் ஆண்டு எல்லா வளங்களையும்  வாரி வழங்கி அனைத்து மக்கள்தம்  கனவுகளுக்கும், ஆசைகளுக்கும், சாதிக்கும் எண்ணங்களுக்கும் உறுதுணையாக நின்றபடி சிறப்புடன் அமைய, இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். உலக அமைதியும், சகோதர ஒற்றுமையும்  எங்கும் தழைத்தோங்க இறைவனை வேண்டுவோம்.வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும்  என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Thursday, December 1, 2016

ஏனோ இச்செயல் இறைவா...?

ஏனோ இச்செயல் இறைவா…?


காலமும் நேரமும் ஒன்றாக கனிந்தால் தான்
காரியமென்றும் கூடி சேர்ந்து வரும் என்பதை
கணிசமாய் மனமது களிப்பின்றி உணர்த்தினாலும் 
கனிய வைத்திட மனம் தினம் போராடுவதும் ஏனோ.?

சொல்லும் செயலும் செல்லும் வழியெங்கிலும்
வெல்லும்வீழும்!  அது அவன்” துணையுடன் மட்டுந்தான்
என்றெல்லாம் நன்கறிந்தும், “நான்னென்ற அகந்தை
என்றும் முள் பூவாய் மனதில் தினம் பூப்பதும் ஏனோ.?

நீர் குமிழியான நிலையற்ற வாழ்விதுவே என,
நிதமும் மனமே உணர்ந்தாலும், “நானில்லையேல்
எவரும்” இல்லையென்ற மமதை மனதினோரங்களில்
எக்களிப்பாய் தினம் தங்கி குடியேறுவதும் ஏனோ..?

போகும் போது பயனற்ற ஊசியின் முனையும்
போகும் வழிக்கு துணையாகவே உடன் வாராது என,
பட்டிணத்தார் உணர்த்திப் பகன்றதை பலகாலம் கேட்டும்  படித்தும் பகட்டை மனமும் தினம் விரும்பி ரசிப்பதும் ஏனோ.?

நாம் படைத்து விட்ட இந்த மாந்தர்களின் மனப்பக்குவம்
நல்ல பயனுள்ளதாகியதா என்றறியும் ஆவலினால் நீயும்”,
வாழ்வையே தினந்தினம் தேர்வுக் களமாக்கியும்நாங்கள்
வாழ்வியில் தேர்வில் எந்நாளும் தேறாததும் ஏனோ..?

இத்தனையும் தந்து விட்டு நீ மெளனத்தின் நிழலோடு
இருண்ட வாசம் செய்து மெளனமாகி போனதும் ஏனோ.?
விடை அறிய உன் முன்னை வினாக்களை தொடுத்து
விரைவோடு சமர்ப்பித்தும்விடை பகர நீயும் தாமதிப்பதும் ஏனோ.?

அத்தனையும்  புரிய வைத்து,  அன்பாய்  பயிற்றுவிக்க
பரந்தாமனாக   நீயும்,  பார்த்திபன்  நிலையில் நானும்
மீண்டுமொரு முறை கீதை பெற,  நிலைகொள்ளா இம்
மனம் தவிப்பதை  எப்படி .உனக்கு உணர்த்துவேன் இறைவா!


Friday, October 28, 2016

வணக்கம் சகோதர சகோதரிகளே.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
இத்தீபத்திருநாளில் அனைவரின் இல்லங்களிலும்,  உள்ளங்களிலும் தீபச்சுடர் போல் ஒளி பிரகாசித்து,  வாழ்வது சிறக்க ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

                       நன்றி.

Thursday, August 25, 2016

ஆழ்ந்த பக்தி

சுயநலன்கள் ஒவ்வொரு மனிதரையும்  அவர் அறியாமலே,  பிடித்து வாட்டும் ஒரு  நோய்!  அந்த நோயை கடவுளிடம் பக்தியோடிருத்தல் என்ற மருந்தின் மூலம் சற்று புரையோட விடாமல், காப்பாற்றலாம்..

நீ என்னையே அனுதினமும் நினை! ஏனெனில் நான் எப்போதும்  உன்னில்தான் உள்ளேன்.  நீ வேறு , நான் வேறு அல்ல! என்றான் பரந்தாமன்.


துவாரகை  நகருக்குள் நுழைந்த  அந்த   ஏழை  அந்தணனரால்,  தான் காண்பது கனவா,  நனவா  என்று அனுமானிக்க    முடியாமல்   தத்தளித்துக் கொண்டிருந்தார். பார்க்கும் இடங்களெல்லாம்  மாட மாளிகைகளும்,  கூட கோபுரங்களும்  மனதில் ஒரு  வகையாக அச்சுறுத்தின.  எங்கு பார்த்தாலும், செல்வத்தின் செழிப்புதான்!. பின்னே! பரந்தாமனும்,  அவனில் பாதியான செல்வத்தின் நாயகியுமான  திருமகளும் வாசம் செய்யும் புண்ணிய பூமி சுவர்க்கமயமாகத் தானே  திகழும்.  அந்த  ஏழை அந்தணருக்கு மனதிற்குள் பெருமிதம் பொங்கித் ததும்பியது. இளமையில், பால்ய  காலத்து நண்பன், குரு குல வாசத்தில் ஒன்றாக  படித்தவன்,  அழகே உருவானவன், வீர தீரங்களில் வல்லவன், மாயா ஜாலங்களில்  நிகரற்றவன், காண்போரின் மனதையெல்லாம் கவர்ந்தவன், அன்பு தாய், தந்தையரைப் பெற்றவன், அநீதிகளை அழிக்க வென்றே அவதரித்தவன்,  இத்தனைக்கும் மேலே  ஏராளமான சிறப்புக்கள் பெற்ற சாட்சாத்  அந்த பமன்நாராயணனின் அம்சமான கிருஷ்ண பரமாத்மாவை , இத்தனை வருடங்கள் கழித்து காணும் பேறு பெற்றமைக்கு, பிறந்திலிருந்து இதுவரை இல்லாத சிறு கர்வமொன்று, மனதுக்குள்  பந்தாக எழும்பி அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

நகரில்  கிருஷ்ணனின்  அரண்மனையை விசாரித்து  உள்ளே  நுழைந்தாகி விட்டது. வாசலில் கண்ணனை காண தவமிருக்கும்  ஏராளாமானவர்களை எப்படியோ கடந்து இதோ! தன் முறை வரும் வரை  பொறுமை காத்து காவலாளியின் முன் வந்து தடங்கலுடன்,  உள்ளே செல்ல அனுமதியின்றி, தடைபட்டு நிற்கும் அவல நிலை வருமென சற்றும்  நினைக்கவில்லை அந்த அந்தணர்.

"எங்கள் மன்னனை  பார்க்கவெல்லாம்  உன்னை அனுமதிக்க  முடியாது. போ! போ!  போய் உன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்க்கிற தகுதியோடு வா! இல்லையென்றால்,  அவரை காணும்  எண்ணத்தை கைவிட்டு விட்டு  இவ்விடம் நில்லாது  திரும்பிப் போ!'' காவலாளி   தயவு  தாட்சண்யம் இல்லாமல் விரட்டியபடி இருந்தான்..

"தான்  வந்த  நோக்கம்  நிறைவேறாமல்  போய் விடுமோ?  மனது  அனலாக கொதிக்க,  பல  நாட்கள்  பட்டினியாய்  கிடந்த தேகம்  தள்ளாட,  காடு ,.மலை பாராமல்  நடந்தோய்ந்த  புழுதி படர்ந்த  கால்கள் நடுங்க,  கிழிந்த  தன் மேலாடையால் , ஆறாகப் பெருகிய  வியர்வையை  துடைத்தபடி, '' ஐயா !  நீர் போய் இன்னார்  வந்திருக்கிறார் என்றால்,  எம்பெருமான் மகிழ்வடைவார். கண்டிப்பாக என்னை  காண்பதற்கு  ஆவலோடு  என்னை அழைத்து வரச் சொல்லுவார். தயவு செய்து என்னை மறுக்காமல் உள்ளே அனுப்புவதற்கு ஆவணச் செய்யுங்கள்.''  என்றார்  அந்த  அந்தணர்  குரலில்  சிறிது  கெஞ்சல் மிகைப்பட்டது.

அவரது  தோற்றமும்   அழுக்கடைந்த  கந்தல் ஆடைகளினால் , உடம்பை மூடவியலாது  படும்  சிரமங்களுடன்  அவர்  நின்றிருந்த  கோலமும்,   கண்களை உறுத்தினாலும்,. அவர் முகத்தில்  கற்றறிந்த  களை ஒரு தனிக் களையாய் ஜொலித்தை   கண்ட  காவலாளிக்கு, "இவரை  கண்ணனை பார்க்க அனுப்பா   விட்டால், பின் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்  என்ன  செய்வது? அதற்காக கண்ணன் கடிந்து கொண்டால்  எப்படி சமாளிப்பது? ''  என்ற சிந்தனை கொஞ்சம் தலை தூக்கவே,  "சரி! மன்னர் கேட்டால் நான் யார் வந்திருப்பது என்று சொல்வது? அப்படியே கூறிய பின்னும், அவர் காண விருப்பமில்லை என்று சொல்லி விட்டால், நீர் இந்த இடத்தை விட்டு அகன்று விடவேண்டும். சம்மதமா?'' என்ற ஒப்பந்ததத்தின்  முடிவில்  காவலாளி  சற்று தளர்ந்து வந்தான்.

அந்தணருக்கு  அப்போதே கண்ணனை  கண்ட  மாதிரி ஒரு ஆசுவாச உணர்வு ஏற்பட்டது. நிம்மதி பெருமூச்சுடன், அப்பா! நீ நன்றாகவிருப்பாய்!  உங்கள் மன்னனிடம்  சென்று உங்கள் பால்ய சிநேகிதன் சுதாமகன் உங்களை காணும் ஆவலோடு  வந்திருக்கிறான் என்று சொல்லு!  அதற்குபின் அவர் என்னை காண பிரியபடவில்லையென்றால். நான் உன்னை எந்த சிரமத்திற்கும் உட்படுத்தாமல், கிளம்பி விடுக்றேன்.''  என்றார்.

காவலாளியும் அரைகுறை மனதோடு  கண்ணனைக் கண்டு விபரங்கள் சொல்ல மாளிகையுள் பிரேவேசித்தான்.

தங்கள் வறுமை நீங்க  ஏதேனும் பொருள் பெற்று வரும்படி தன்னை இவ்விடம் அனுப்பி வைத்த தன்  மனைவி சுசீலையை ஒரு  விநாடி  நினைத்த போது சுதாமகருக்கு,  தான் அவ்விடத்திலிருந்து  கண்ணனிடம்  பொருள் யாசிக்க கிளம்பும்  முன், தனக்கும் அவளுக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள் நினைவுக்கு வந்தன." என்னதான் பால்ய சிநேகிதன், குரு குலத்தில் ஒன்றாக படித்தவர்கள் என்றாலும், வளர்ந்து வாலிபத்தை எட்டி கிரகஸ்த வாழ்வைத் துவக்கி,  வெவ்வேறான பின்னும், பால்ய நினைவுகளை  சுட்டிக் காண்பித்துக் கொண்டு உதவி கேட்க, சுதாமகருக்கு கொஞ்சமேனும் விருப்பமில்லை!. ஆனால், சுசீலையும் என்ன செய்வாள்?  தான் தினமும் கொண்டு வந்து தரும் சொல்ப தான்யங்களை  வைத்துக்கொண்டு, இருபத்தேழு குழந்தைகளையுடைய தங்கள் பெருங்குடும்பத்தை எவ்விதம் சமாளிப்பாள்? தினமும் கால் வயிறும், ஒரோர் நாள் பட்டினியுமாக  அவர்கள் அனைவரும் பசியின் கொடுமையால்  அழுது அரற்றி  தூங்கிப்போகும் காட்சியை  ஒரு அன்புள்ள தாய் எப்படி சகிப்பாள்?  மிகுந்த   பொறுமைசாலியான  தன் மனைவி நாட்டில் பஞ்சம் வேறு தலைவிரித்து ஆடியவுடன், வேறு வழியின்றி தன்னிடம் , "உதவி செய்ய  உறவுகள் ஒருவரும் இல்லை! குழந்தைகளின் பசி மயக்கத்தை  ஒவ்வொரு நாளும் காண சகிக்கவில்லை. அதனால் குழந்தைகளுக் காகவாவது  தாட்சண்யம்  பாராமல், பார்த்துப்பேசி விட்டு வாருங்கள்! ''என்று பால்ய நண்பன் கண்ணன் நாட்டையாளும் மன்னனாய் இருப்பதை  உணர்த்தி, அவனிடம்  பொருளுதவி பெற்று வர தன்னிடம் வாதம் புரிந்து  அதில் வெற்றி பெற்று,  இதோ! துவாரகையின்  வாசல் வரை வந்து நிற்கும்படி  செய்து விட்டாள்.

வறுமைதான்! என்னசெய்வது? அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். வீடு நிறைய குழந்தை செல்வங்களை கொடுத்தவன் அவர்களை வைத்து சம்ரட்சணை  பண்ணவும் ஒரு உபாயத்தை கொடுப்பானில்லையா? பொறுப்போம்!  என்று மனைவியிடம் தினமும் வலியுறுத்தி, காலம் கடத்தி வந்த சுதாமகருக்கும், நாளாக,  நாளாக நண்பனை காணும்  ஆவல் உந்தித்தள்ள,  ஒரு நாள்  பொறுக்க முடியாமல்  சென்று வருகிறேன்'' என்றவுடன் , இருப்பதில் கொஞ்சம் நல்ல ஆடையை எடுத்து அவரை அணியச் செய்து,  கண்ணனுக்குப் பிடித்தமான அவலை எப்படியோ அங்குமிங்கும் அலைந்து கொஞ்சம் பிரயத்தனத்தில்  ஏற்பாடு செய்து கொடுத்து, நல்ல செய்தியோடு வாருங்கள்!  காத்திருக்கிறோம். என அனுப்பிவைத்து விட்டாள். யாசகம் பெற இயலாது போயினும், நண்பனை  கண் குளிர,மனம் நிறைய தரிசனம் செய்ய வாய்ப்பு வந்ததேயென, கால் கடுக்க ஒடி வந்தவனை இங்கு காவலாளி ஆயிரம் காரணம்  சொல்லித் தடுத்து நிறுத்துகிறான். "வேறு சிறப்பான உடை அணிந்து வந்தால், மன்னனை காண வழிவிடுகிறேன்'' என்கிறான். இதை விட சிறப்பான உடைக்கு தாம் எங்கே போவது?  வந்திருக்கும் அந்த சூழலிலும், தம் நிலை குறித்தெழுந்த சிந்தனையில், இளநகை ஒன்று அவர் இதழ்களில் எழுந்து மறைந்தது.

"தன்னைப்போலவே கண்ணனும் தன்னை மறவாதிருப்பானா?  குரு குலவாசத்தில் தன் ஏழ்மை நிலையை பொருட்படுத்தாமல், தன்னை அரவணைத்து அன்பு செலுத்தியவன் இப்போதும் அதேபோல் அன்புடன் நேசம் காட்டி பேசுவானா? இல்லை ,  மன்னனுக்குரிய குணநலன்களில்,  பால்ய நட்பை மறக்க முயற்சித்திருப்பானா? '' காவலாளி  வெளியே வந்து சொல்லப்போகும் அந்த விநாடிக்காக  உயிர் துடிக்கும் அவஸ்தையோடு காத்திருந்தார் சுதாமகர்.


பரந்தாமன் கண்ணன்  வாயில் காப்போன் வந்து சொன்னதும்,  சிறிதும் தாமதியாது,  வாசலுக்கே  விரைந்து வந்து விட்டான்.  ''வாசலிலேயே அவரை யார் என்று  விசாரித்து அனுப்பு  என்றோ, இல்லை  அவருக்கு வேண்டிய  உதவி யாது? என விபரமாக கேட்டு  அதற்கு வேண்டியதை  தக்கபடி செய்து அனுப்பு !என்றோ  மன்னன் கூறுவான் என்று எதிர்பார்த்து  விபரம் சொல்ல வந்தவன் மூர்ச்சித்து விழாத குறையாக திக்பிரமையடைந்து  நின்று விட்டான். சிறிது தெளிந்து கண்ணனை பின் தொடர்ந்து  அவனும் ஓட  வாசலில் கண்ட காட்சி அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"வா! வா! சுதாமகா ஏன் வாசலோடு நிற்கிறாய்! எபபோது  வந்தாய்?  வந்தவன் நேராக என்னை தேடி வராமல் தாமதித்து கொண்டு  கால்  கடுக்க இங்கேயே ஏன் நிற்கிறாய்?  இந்த  சேவகன்  உன்னை விட மறுத்தானா?  என்றபடி ஓடி வந்து மார்போடு தழுவிக்கொண்ட  கண்ணனைக்  கண்டதும் ,சுதாமகர் ஆனந்தத்தின் உச்சிக்கு சென்று விட்டபடியால், பேச நாவெழும்பவில்லை! கண்களில் நீர்வடிய  கண்ணனின் செய்கையால் மெய் சிலிர்த்து நடுங்கிய தன் தேகத்தை அவன் அணைப்பிற்குள், இன்னும் சற்று ஒடுக்கியபடி,  நாத்தடுமாற கண்ணா,  கண்ணா என்று அரற்றலானார்.

கண்ணன், அன்பின் மிகுதியினால் சுதாமகரை  அரவணைத்து கொண்டபடி., ""சொல்லு சுதாமா, நீ வந்ததை முன்பே தெரிவித்திருக்க கூடாதா?  இந்த சேவகன்தான் தாமதபடுத்தி விட்டானா? கண்ணன் மேலும், மேலும் துருவி கேட்க, தன்னை  ஒருவாறு சாளித்தவாறு, " இல்லை! இல்லை  கண்ணா நான் இப்போதுதான் வந்தேன். உன்னைக் காணவேண்டுமென்று சொன்னதும், அவர் ஓடோடிச் சென்று உன்னிடம்  நான்  வந்திருப்பதை கூறியதும்தான் உன்னை காணும் பாக்கியம் எனக்கு உடனடியாக உன் அரண்மனை வாசலிலேயே கிடைத்தது.'' என்ற சுதாமகரின் பதிலால் பயத்தின் பிடியிலிருந்த காவலாளி நெகிழ்ந்து சுதாமகரை பார்த்து நமஸ்கரித்தான்.


அடுத்து வந்த இருதினங்களிலும், நண்பனின் இனிய  உபசாரங்களில் மூழ்கித் தவித்தார் சுதாமகர். தாம் எங்கிருக்கிறோம்!  தாம் யார்?  எதற்காக இங்கு வந்திருக்கிறோம்!  என்ற சுயசிந்தனை சற்றும் எழாமல் கண்ணனின் நட்பு , பாசம் பெரும் கயிறாக அவரை கட்டிப் போட்டது.  அன்று வாசலில் சந்தித்தவுடன், தன் மனைவி  ருக்மணிதேவியின் உதவியுடன் தங்கத் தாம்பாளத்தில்  தான் தடுத்து நிறுத்தியும்  கேளாமல்,  தன் காலில் நிறைந்திருந்த புழுதியைப் பற்றி கூட  கவலையுறாது,  பாத பூஜை செய்வித்து தன்னை உள்ளே அழைத்து சென்றதிலிருந்து , இன்று வரை அவனுடைய  ராஜ்ஜிய பரிபாலனையை கூட அவசர கதியில் முடித்து விட்டு, தன்னுடனேயே பொழுதைப்போக்கி தனக்கு ராஜ உபசாரம் செய்வதை  மட்டும் கண்ணும் கருத்துமாக எண்ணி  செய்து வந்த கண்ணனை நினைத்து,  நினைத்து மெய்யுருகிப் போனார்.  அன்று வாசலில் நின்றிருந்த    போது  தன்னை சந்திப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வானோ இல்லையோ?  என்று ஒரு விநாடி  அவனை  தான் சந்தேகித்தது எத்தனை பெரிய பாவம்!  அந்தப் பாவத்தை எங்கே கொண்டு கரைக்க போகிறோம்  என்று மனதுக்குள்  அடிக்கடி  சஞ்சலமடைந்தார்.

இவ்விதமாக  இரு தினங்கள் கழிய  மூன்றாவது நாள் சுதாமகருடன்  பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்த  கண்ணன்,  "சுதாமா, நீ என்னை தேடி வந்த நோக்கத்தை இது வரை நான் அறிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை பார்!  நீயும் சொல்லவேயில்லை!  நானும் நாள் கடந்து உன்னை சந்தித்த  மகிழ்ச்சியில் அதைப்பற்றி  கேட்கவில்லை பார்த்தாயா?  என்னால் உனக்கு ஏதாவது உபகாரம் வேண்டுமா?  நீ எது வேண்டினும் தருகிறேன்.'' என்றதும்தான், தன்னுடைய பழைய உலகிற்கே திரும்பினார் சுதாமகர். மனைவியின்  நினைவும,  பசியில் கரைந்துருகும்  குழந்தைகளின் முகங்களும், நினைவுக்கு  வர,  தாம்  யாசகம்  வேண்டி  இங்கு  வந்ததன்  நோக்கம்  ஞாபகம் வந்தது.. ஆனால்,  இத்தனை  பிரியத்துடன்  நட்பை பொழிந்தவனிடம், "பொருளுதவி  வேண்டிதான்  உன்னைக்காண  வந்தேன்.'' என்று  சொல்ல மனம் வரவில்லை.   தன் மனைவி "சென்று வாருங்கள்'' என்று வறுப்புறுத்திய போது கண்ணனை கண் குளிர தரிசிக்க வேண்டும்  என உள்மனதில் ஆசை எழுந்ததை நினைவு கூர்ந்தவராய், "நோக்கம் எதுவுமில்லை பரந்தாமா! உன்னைப்பார்த்து நீண்ட  வருடங்கள்  ஆகிவிட்டபடியால், பார்த்து விட்டு செல்லலாமென  வந்தேன். உன் அளவு கடந்த உபசரிப்பினால், என் பிறவி முழுக்க  பெரும் ஆனந்தம்  கொள்ளும்படி செய்து விட்டாய்!  இந்தப்பிறவியில் உன்னுடனிருந்த இந்த நினைவுகளை ரசித்துக்கொண்டே  காலத்தைகழித்து விடுவேன். பார்த்தாயா!  உன்னுடன் இருந்த இந்த நாட்களில்  என் மனைவி மக்களை மறந்தே  போனேன். என் வரவுக்காக அவர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள்!  எனக்கு விடை கொடு!  நான் கிளம்புகிறேன். '' என்றார்.

கண்ணன் உள்ளூர  நகைத்துக்கொண்டான்.  அத்தனை ஏழ்மையிலும், நண்பனென்ற போதும்,  பொருளுக்காக பிறரை அண்டாத உத்தம குணம் படைத்த தன் நண்பனை நினைக்கையில்,  மனதில்  பெருமிதம் மூண்டது. இவன் எதுவும்  வேண்டாமலே,  இவனுடைய  சிரமங்களை குறைக்கும் காலத்தை கொடுக்கும் கடமை  தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தவராகையால், " சரி சுதாமா! நீ சென்று  வா! உன் மனைவி குழந்தைகளை விசாரித்தாகக் கூறு.! அடுத்த தடவை அவர்களையும் சந்திக்க நான்  பிரியப் படுவதாக  சொல்!  ஆமாம் ! நீ என்னை காணவரும் போது வெறும் கையோடாகவா வந்தாய்? அப்படியே நீ என்னை காணும் ஆவலில் வந்திருந்தாலும் ,  என் அண்ணி அவ்விதம் அனுப்பியிருக்க மாட்டார்களே? ஏதாவது கொடுக்கச்சொல்லி தயாரித்து தந்திருப்பார்களே''என்று அனைத்தும் அறிந்த கண்ணன் கேலியாக வினவவும், சுதாமகருக்கு சங்கடமாகப் போயிற்று.

பழைய அழுக்கான கந்தல் அங்கவஸ்தரத்தில் முடி போட்டு கொண்டு வந்திருந்த அவலை "இதுதான் நான் உனக்காக கொண்டு வந்த வஸ்து ' என்று கூறி அதை எடுத்துத்தர அவமானமாய் இருந்தது.  யசோதையின் மைந்தனாய் அன்றிருந்த இளமை காலத்து நிலையில், வேண்டிய உணவோடு அவலும், அவனின் பிரியமான உணவாக இருந்திருக்கிறது. ஆனால், கண்ணன் இன்றிருக்கும் ராஜ வாழ்வில் இதை அங்கீகரிப்பானா? இதுதான் நாங்கள் உனக்காக தயாரித்து வந்த அன்பின் அடையாளம்'' என்று எப்படி  தருவது என சுதாமகர் தயங்கி நிற்கும் சமயத்தில், கண்ணன் அவரின் மேலாடை மறைவிலிருந்த அவலைக்  கைப்பற்றி, "ஆஹா!! எனக்கு மிகவும் பிடித்தமான  அவலைத்தான் கொண்டு  வந்திருக்கிறாயா? அதுதானே  பார்த்தேன். !அண்ணி  என்னை ஒரு நாளும்  மறந்ததில்லை, என்றபடி ஒரு பிடி  அவலை எடுத்த வாயில் போட்டு மென்றார்.  மற்றொரு பிடியும் வாயில் போட்டபடி ஆஹா! என்ன ஒரு ஆனந்தம். பழைய நினைவுகள் மீணடும்  வருகிறதே சுதாமா'' என்றபடி. மூன்றாவது பிடியை கையில் எடுத்தவுடன், அதுவரை இவர்கள் சம்பாஷனையை அருகிலிருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த ருக்மணி தேவி, "போதும், உங்கள் விளையாட்டு! தங்கள்  சிறு பிள்ளை விளையாட்டை  துவக்கி விட்டால், என்னைக்கூட மறந்து விடுவீர்களே!  எனக்கும் தங்கள் நண்பர் கொண்டு வந்திருக்கும் அவலில் ஒரு பங்கு வேண்டாமா?'' என்றபடி தன் கணவரிடமிருந்த அவலை தான் பெற்றுக்கொண்டாள்.

தான் கொண்டு வந்த  எளிய பொருளை,  கணவனும் மனைவியும் பெருந்தன்மையாக  போட்டி போட்டு உண்பதைக் கண்ட சுதாமருக்கு பரமானந்தமாக இருந்தது.எப்படியோ யாசகம் ஏதும் பெறாமல்..கண்ணனிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கண்ணனுடன்  கழித்து ஆனத்தித்த நினைவுகளை மனதில் இருத்தியபடி  சுதாமகர் தன்  ஊரை  அடைந்தார். மனைவி குழந்தைகளை வறுமையினின்றி எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற கவலையும், நடுநடுவே எழுந்தாலும்,  தான்பெற்ற கிருஷ்ண தரிசனமே, தன் குழந்தைகளை  வறுமை பிடியிலிருந்து   காப்பாற்றி கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் ஊரினுள் கால் பதித்தவர் .தன் ஊரே துவாரகையாக மாறி இருந்ததை கண்டவுடன் திகைத்தப்போனார்.

உற்றமும்  சுற்றமும் ஊரில் உள்ளவர்களும் தன் மனைவி மக்கள் அனைவருமே அடையாளம் தெரியாதபடிக்கு செல்வச்செழிப்புடன் மாறியிருந்த விந்தை கண்டும், தான் துவாரகையிலிருந்து  கிளம்பும் நேரத்தில்தான் ,இவ்வித அதிசயம் நிகழ்ந்தது என சுசீலை கூறவும்,  சுதாமகருக்கு அனைத்தும் புரிந்தது. அள்ள, அள்ளக்குறையாத  மஹாலெஷ்மியின் மணாளன், மாயா ஜாலங்களை பிறந்ததிலிருந்து செய்து  மற்றவர்களுக்காக வாழும் தன்னுயிர் நண்பன் கண்ணனின் அதி அற்புத விளையாடல்களில் இதுவும் ஒன்றென  விளங்கியது.

"பரந்தாமா! எங்களூரின் வறுமை அகல என்னை ஒரு காரண கர்த்தாவாக்கி  நீ செய்த இந்த திருவிளையாடலை என்னவென்று எடுத்துரைப்பேன் . உன்னையே சரணடைந்தவர்களை  நீ என்றுமே கை விட்டதில்லை என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும் '' என்று கண்களில் நீர் வடிய மெய்யுருகி  நின்ற சுதாமகர் முன்னிலும் அதிகமாக இறைவன் கண்ணனிடம் பக்தியுடன் நட்பு கொண்டு  வாழ்ந்து வந்தார்.


நாளை கண்ணன் அவதரித்த நாள்!  (ஜன்மாஷ்டமி)  சுதாமகரை போன்று நாமும் கண்ணனிடம் தூய நட்பு கொண்டு  அவன் மிகவும் விரும்பும் அவலை (நாம் எத்தனையோ பட்சணங்கள் அவனுக்காக செய்து நிவேதனம் செய்தாலும்) அவனுக்கு மனதாற படைத்து ,  எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனையிலும் அவனை மறவாதிருக்க வேண்டி  பிரார்த்தனை செய்து, பூஜிப்போமாக....
                       
                                         வாழ்க இறையருள் .

Friday, August 19, 2016

வடிவம்

  அன்றைய நாளிலிருந்து விதவிதமாக பல்வேறு சிற்றுண்டிகள் வந்தும், இந்த தோசை, இட்லியின் மகத்துவம் குறையவில்லை. இட்லி,,தோசை என்ற நாமகரணம் யார் வைத்து துவக்கினார்களோ தெரியவில்லை?  இந்தியாவின் சிறப்பான பாரம்பரியமான உணவாகிய அரிசியையும், உளுந்தையும், கொண்டு இந்த உணவை உண்டு பண்ணியவர்களை கண்டு வியப்படைய தோன்றுகிறது.  அதிலும் இந்தியாவில் அதிகம் விளையும் நெல்லை வேக வைத்து உமி நீக்கி அதில் உண்டாகும் அரிசியை புழுங்கல் அரிசியென பெயரிட்டு, அதன் மூலம் இந்த இட்லி,, தோசையை தயாரித்து காட்டினர்.அந்த புழுங்கல் அரிசியையும், உளுத்தம் பருப்பையும், 4 க்கு 1 என்ற அளவில் எடுத்துக்கொண்டு, சுத்தப்படுத்தி, ஊற வைத்து ஆட்டுரலில் அரைத்தெடுத்த அந்த, ஒரே மாவை, இட்லிக்கென  தயாரிக்கப்பட்ட இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து இட்லி எனவும்,,வட்ட வடிவ இரும்பு கடாயில் சுற்றி விட எண்ணெய் யின் உதவியுடன் வட்டமாக மாவை எடுத்து தடவி வேக வைத்து தோசை எனவும், பெயரிட்ட புண்ணியாத்மாக்களை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும். காலப் போக்கில் அரவை எந்திரங்கள் விதவிதமாய் பெருகி  ஆட்டுரல்களை மறக்கச்செய்து  விட்டன.  ஆனால் இட்லி,, தோசைகள் மறையவில்லை.  அன்றாடம் வீடுகளிலும்,  உணவகங்களிலும், திருமணம் முதலிய விசேட இடங்களிலும்,  வெளியில் செல்லும் பிரயாண நேரங்களிலும், இவைகளின் சிறப்புகள் குறையாமல்தான் இருந்தது..


  நாளாவட்டத்தில் ஒரே மாவில் தயாரித்து உண்பதை விட, விதவிதமான மாவுகளை கலந்து தோசைகள் தயாரிக்கும் பழக்கங்கள் வந்தது.. அரிசியுடன் உளுந்து மட்டுமில்லாமல், துவரம் பருப்பு,  கடலை பருப்பு முதலியவற்றையும் சேர்த்து சற்று கனமான தோசையாகச்செய்து அதற்கு அடை என்றும்  பெயர் வைத்தும் உண்டு மகிழ்ந்தோம். முழுகோதுமையை அரிசி உளுந்துடன் சேர்த்தரைத்து கலப்பது, வெறும் கோதுமை மாவை,  அல்லது மைதா மாவை அரிசிமாவுடன் கலப்பது, ரவையை அரிசி மாவு மட்டுடனோ, இல்லை, கோதுமைமாவு, அரிசி  மாவு முதலியவற்றுடனோ, கலப்பது என்ற ரீதியில் விதவித சுவையுடன் விதவித பெயர்களுடன் தோசைகள் உருவாகின. அதுபோல் இட்லியும், ரவை கலந்து ரவா இட்லி எனவும், அரிசியை கொஞ்சம் பொடியாக உடைத்துக் கொண்டு, அதனுடன் சுவைக்காக, உப்பு  காரம் என மிளகு,இஞ்சி, பச்சை மிளகாய்  தேங்காய் சேர்த்து காஞ்சிபுரம் இட்லி எனவும், உருமாறத் தொடங்கின.  காலம் செல்ல செல்ல இனி .வெங்காயம் என்ற ஒரு வஸ்துவின் துணையின்றி  இப்புவியில் தலைகாட்ட மாட்டோம் என பெற்ற புகழின் கர்வத்தில் இட்லி, தோசைகள் எடுத்த முடிவை, சுவைக்கு அடிமையான நம் நாக்குகள் ஆமோதிக்க, இட்லி , தோசைகள் ௬ட்டணியாக வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு நம் வாழ்வோடு இணைந்து கொண்டன.


   இப்படியாக இட்லி, தோசைகள் அமர்க்களமாக ஆட்சி செய்து வந்த போது, நம்  காலத்திலேயே இந்த முதலில் உருவான இட்லி, தோசைக்கு சற்றே எதிர்ப்பு கொடி துவங்கி விட்டது. ஆயினும் வீட்டில், இருக்கும் பெரியவர்களின் பேச்சுக்கு  கட்டுப்பட்டு அதை அங்கீகரித்து வந்தோம். உடமபுக்கு.ஒவ்வாமை என்ற பேச்சுக்கு இடமின்றி ஒத்து வருவது  இந்த சிற்றுண்டிதான்! என அன்பு கலந்த கண்டிப்புடன் அவர்கள் ௬றும் போது  மறுக்க இயலாமல், இட்லி, தோசையுடன் ஐக்கியமானோம்.ஆனால் இன்றைய தலைமுறைகள் இட்லி, என்றாலே அந்த இடத்திலேயே காணாமல் போகிறார்கள். தோசைகள் ஒரளவு அவர்களின் பிடித்தமானவை வரிசையில் சேர்ந்து கொள்கின்றன.தற்சமயம்  சோளம், ராகி, கம்பு என அனைத்து வகை மாவுகளும்  ௬டவே   வெங்காயத்திற்கு இணையாக தக்காளி,, காரட் என சில காய்கறிகளும், ௬ட்டணியில் இடம் பிடித்ததாலோ என்னவோ,  தோசையின் மகத்துவம் இன்னமும் குறையாது இருக்கிறது. அந்த வெங்காயத்திற்கே சிறிது போரடித்து நம்மை  விட்டு போகலாமென முடிவெடுத்தாலும், நாம் விடுவதாக இல்லை.! அந்தக் கால ஆட்டுரலில் அரைத்து   விறகடுப்பில் சுட்ட தோசைகள் ஐந்தாறு  மணி நேரத்துக்கு பின்பும், அதே ருசியுடன் நமக்காக காத்துக் கிடக்கும். ஆனால் இப்போது நவீனங்களில் நாம் தயாரிப்பது ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதாக நமக்குநாமே சபதம்  எடுத்தபடி சாப்பிட்டு முடிக்க வேண்டும். இல்லையென்றால், சிரமம் நமக்குத்தான்!. அந்தளவுக்கு ரசாயன கால மாற்றங்கள் உணவுகளை மாற்றி விட்டாலும் இந்த தோசைகளுக்கு நாம் அடிமை ஆகி விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.


  தோசை புராணம் பாடியதும், என் அம்மா சொல்லி மகிழ்ந்த அந்த காலத்திய நினைவுகள் ஞாபகத்தில் வந்து விட்டன அவர்கள் காலத்தில், திருமணமானதும் கணவரின் நலனுக்காக தொடர்ந்து  ஐந்து வருடங்களில் வரும் தை வெள்ளி கிழமைகளில், சுமங்கலி பூஜை நோன்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பூ பழம், வெற்றிலை,பிரசாதமென அவரவர் வசதிக்கேற்றப்ப ஒவ்வொரு வருடங்களும், வெள்ளிக் கிழமைகளில் ஐந்து சுமங்கலிகளுக்கு கொடுத்து விரதத்தை முடிக்க வேண்டும்.அதேபோல்  ஐந்து வருடங்கள் தோசை நோன்பு  என்னும் விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தை வெள்ளிக் கிழமைகளில், பிரசாதமாக (பச்சரிசிதோசைதான்,..பச்சரிசி தோசைக்கு சற்று உளுந்து அதிகமாக போட்டு அரைக்க வேண்டும். புழுங்கல்அரிசி விரதத்தன்று சேர்ப்பதில்லை.) தோசைகளை அம்மனுக்கு சமர்பித்துவிட்டு ஐந்து சுமங்கலிக்கு ஐந்து தோசைகள் வீதம் வெற்றிலை பாக்குடன் வைத்துத்தர வேண்டும். ஒவ்வொரு வருடமும், தோசைகளின் அளவு ௬டி, கடைசி வருடம் தோசை சுடுவதிலேயே, காலை ஆரம்பித்து, பாதிநாள் முடிந்து விடும்... எவ்வளவு பொறுமையம்மா உனக்கு?!!! என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  தற்சமயம் இப்போதெல்லாம் சில வீடுகளில் வீட்டிலிருக்கும் ஓரிரு மனிதர்களுக்காக, மனைவியின் நலன் கருதி பொறுப்பு  கைமாறி விடுகிறது. அந்த" பொறுப்பின்' நலமின்மையும் அன்று அதிகமாக அச்சுறுத்தினால், உணவகங்களின் வெவ்வேறு சிற்றுண்டிகள் அன்றையதினம் உணவறையின் சாப்பிட்டு மேஜையை அணிவகுத்துக்கொண்டு விடும்.

  தோசைகைள பற்றி எழுதியதற்கு ஏதாவது ஒரு தோசையை அறிமுகபடுத்தாமல் செல்வது அழகாகுமா? ஆனால் இந்த வகை தோசையும் அனைவரும் அறிந்ததாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் .

  நவதான்யங்கள் என்பது,  பயிறு,  கோதுமை,   கருப்பு உளுந்து,  காராமணி, , மொச்சை, எள்ளு,  கொள்ளு,  நெல்,  கொண்டைக்கடலை  முதலியவை.


நவதான்ய தோசை அல்லது அடை.:-


  புழுங்கல் அரிசி, பச்சரியும் சமமானஅளவு  (தலா ஒரு கப் என்ற அளவில் ) எடுத்துக்கொண்டு, பச்சைப்பயிறு,  முழு கோதுமை, கொண்டைக்கடலை, காராமணி,  துவரம் பருப்பு,  காணம்,  கருப்பு முழுஉளுந்து, பட்டாணி, கொஞ்சம் வாசனைக்கு எள்ளு, இவை அனைத்தையும்  கலந்து, நாலு கப்   வருமாறு   எடுத்துக்கொண்டு, அரிசிகளையும், பருப்பு வகைகளையும்   நன்கு  கழுவி சுத்தம் செய்து, அவற்றை ஆறு மணி நேரத்திற்குமேல் ஊற வைத்து,  பின்   அரிசியுடன், தேவையான  பச்சை மிளகாய்,  சிகப்பு மிளகாய், உப்பு, பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை, ஒரு மூடி தேங்காயும்  துருவி சேர்த்து ஒரளவு நைசாக அரைத்தெடுத்துக்கொண்டு, பின் பருப்பு வகைகளை ஒரளவு கரகரப்பாக அரைத்துக்கொண்டு,  இரண்டையும் நன்கு கலந்து கொண்டு ஒரிரு மணி நேரத்துக்குள், தோசையாக செய்து சாப்பிடலாம். பிரியமிருந்தால் பொடிதாக நறுக்கிய வெங்காயமும், கொத்தமல்லி தழைகளையும் கலந்து செய்தால் இன்னமும் சுவையாக இருக்கும் தோசைக்கு சுற்றி விட சமையல் எண்ணெய்யுடன், கொஞ்சம் தேங்காய் எண்ணையையும் கலந்து வைத்து சுட்டு எடுத்தால் தோசை இன்னமும் வாசனை தூக்கலாக இருக்கும். இந்த மாவையே சற்று புளிக்க வைத்து செய்யும் தோசையும் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த தோசை அல்லது அடைக்கு, தேங்காய் சட்னியோ, இல்லை, காய்கறிகளை போட்டு செய்யும் அவியலோ, தொட்டுக்கொள்ள மிகப் பொருத்தமாக இருக்கும். இட்லி மிளகாய் பொடி, அல்லது வெறும் பொடி செய்த வெல்லமும், இதற்கு உடன்பாடுதான். அவரவர் மனதையும்,  விருப்பத்தையும் பொறுத்ததுதான் உணவின்  அணிவகுப்புகள் என்பது என்  கருத்து.

இந்த விதத்தில் செய்து பாருங்களேன்.. நன்றி!

பதிவில் போட்ட  படங்கள்  அனைத்துமே  கூகுளில்  சுட்டவைதான்.

படங்கள் நன்றி: கூகுள்


Saturday, August 6, 2016

சிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.

தமிழ் மாதங்களில்  எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு  உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு என்றால் ஆடியில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளும் சிறப்பு வாய்ந்தது. ஆடி வெள்ளியில் வரும் வரலஷ்மி விரதம்,  ஆடி அமாவாசை முடிந்து வரும் நாக சதுர்த்தி,  கருட பஞ்சமி போன்ற விரதங்களும் தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி போன்ற பூஜைகளும் முக்கியமானவை. இந்நாளில் விதவிதமான மலர்களோடு  ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்யும் நாம் கடவுளுக்கு பிடித்தமான பழங்கள் உணவு வகைகளையும் செய்து படைத்து விட்டு அந்த பிரசாதத்தை அனைவருக்கும்  கொடுத்து நாமும் உண்டு மகிழ்வோம்.அப்படி கடவுளுக்கு படைக்கப்படும் உணவு வகைகளில் கொழுக்கட்டையும் பிரதான பங்கு வகிக்கும். கொழுக்கட்டைகள் செய்முறை அனேகமாக அனைவரும்  அறிந்ததே! அனைவரின்  வலைத்தளத்திலும், வலம் வந்து பிரசித்தியானவைதான். இருப்பினும் என் பங்கிற்காக நானும் அறிமுகப்படுத்துகிறேன்.

நல்ல தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு எடுத்துக்கொண்டு  ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு)   வெறும் கடாயில்  சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக்  கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு  ( மண்டை  வெல்லமாக இருந்தால் ஒரு உருண்டை  அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக  இருக்கும். )  கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து  அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக  கடலைப் பருப்பை வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும்   எடுத்துக்கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும்  ருசி நன்றாகவிருக்கும்.  நான் முக்கால்வாசி இந்த முறையில்  செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும்  கொழுக்கட்டைகள் செய்யலாம்.

இவ்விதங்களில் ஒன்றான இரு பருப்புகளின் கலவையால் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே  தட்டில்  உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை  மேல்மாவையும் பூரணத்தையும்  ஒருசேர
தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது  சிறிது அடம்பிடிக்கும்.
இனி  கொழுக்கட்டையின் மேல் மாவு செய்யும் முறை :-

ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு  கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம்  ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு  ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.

அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன்  சிறிதளவு பொடிஉப்பையும்  கலந்து கரைத்துக் கொள்ளவும். பின்  அடி கனமான கடாய் ஒன்றில்  இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய்  விட்டு அடுப்பில்  வைத்து சூடானாதும்  கலந்து வைத்த மாவை அதனுடன் சேர்த்து கைவிடாமல் கிண்டிக் கொண்டேயிருக்கவும். மாவு வெந்து கைகளால் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதம் வரும் போது கீழிறக்கி மாவை பாத்திரம் மாற்றி மூடி வைக்கவும்.இல்லை, ஈரத்துணியில் சுற்றி வைத்தால் இறுகி  செப்பு ( கொழுக்கட்டையின் கிண்ணங்கள்)  செய்வதற்கு வசதியாக இருக்கும்..

சிறது நேரம் கழித்து அந்த மேல் மாவை சிறு  உருண்டைகளாக  எடுத்து நல்லெண்ணெய தொட்டுக் கொண்டு இரு கை விரல்களால்  எடுத்த மாவின் நுனியை  லேசாக அமுக்கியவாறு கிண்ணங்களை தயார் செய்து கொண்டு ஆறவைத்திருக்கும் பூரண உருண்டைகளை செப்பில்  வைத்து எண்ணெய் தொட்டு நன்கு மூடி விடவேண்டும். பூரணம் வெளியில் தெரியாதபடிக்கு மாவினால் நன்கு மூடி விட வேண்டும். இல்லையென்றால்,  கொழுக்கட்டைகள் வெந்ததும் சீக்கிரமாகவே பூரணம் வேறு மாவு வேறாக பிரிந்து விடும். இதை உருண்டையாக மட்டுமின்றி, நீள வாக்கில் செப்பு செய்து நடுவில்  பூரணம் வைத்து இரு ஒரங்களையும் மடித்து பூக்கள் மாதிரி கை விரல்களால் அழுத்தியும் செய்யலாம்.


இவ்வாறு பத்து பதினைந்து கொழுக்கட்டைகள் செய்து இட்லி பானையில் வைத்து  வேக விட்டு எடுக்க வேண்டும். குக்கரில் பீரித்திலும்,  வைத்து எடுக்கலாம். கொழுக்கட்டைகள் அதிகம் வெந்து விட்டால் விரிசல் விழுந்து அதன் உருவம் மாறி விடுவதுண்டு. எனவே நேரம்  பார்த்து கவனமாக எடுத்து ஆற வைக்கவும்.
சரி! இனிப்பு கொழுக்கட்டைகள் ஒரு வழியா பண்ணி முடிச்சாச்சு!  அடுத்து காரமாக உளுந்து கொழுக்கட்டைகளை பார்ப்போமா?

இக்கொழுக்கட்டைகளுக்கும் அதே விதத்தில்தான் மேல்மாவு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பூரணம் செய்ய வெள்ளை முழு உளுந்தை நன்கு கழுவிய  பின்னர் இரண்டு மணி நேரம்  ஊற வைத்துக் கொண்டு பின் நீரை வடித்து அந்த உளுந்துடன் சிகப்பு மிளகாய்  பச்சைமளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் உப்பு முதலியவற்றை   மிக்ஸியில் போட்டு மிகவும்  நைசாகவும்  இல்லாமல் ஒரேடியாக  கரகரவென்றும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும். கார விரும்பிகள் அவரவர்களுக்கு தேவையானபடி மிளகாய்களை கூட்டி குறைத்து வைத்துக்கொள்ளலாம்..இடையிடையே அந்த ஊறவைத்து வடித்த நீரை தெளித்துக்   கொள்ளலாம்.( அளவாக நீர்விட்டு ஊற  வைத்தால் உளுந்தின் சுவையும் சக்தியும் வீணாவதை தவிர்க்கலாம்.) இவ்வாறு   அரைத்ததை பீரித் தட்டுக்களில் சற்று எண்ணெய் தடவி இட்லி மாதிரி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
இந்த உளுந்து இட்லிகளை சற்று ஆற வைத்த பின்.நன்கு உதிர்த்துக்கொண்டு அடுப்பில் கடாயை வைத்து ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்தவுடன் உதிர்த்து வைத்தருக்கும் பூரணத்தை சேர்த்து சிறிதளவு மஞ்சள் பொடியையும் அதனுடன் சேர்த்து மேலும் உதிராக வரும்  வரை புரட்டி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
இப்பொழுது  தயாரித்து வைத்திருக்கும் மேல்மாவை  கிண்ணங்களாக   (செப்பு) செய்து அதனுள் ரெடியாகவிருக்கும்  பூரணத்தை சிறு ஸ்பூனினால் எடுத்து நிரப்பி இரு விளிம்புகளையும் அழுத்தி நீளமான   கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும். பின் இட்லி கொப்பரையிலேயோ  பீரித்திலோ ஆவியில் வைத்து எடுக்கவும்.
இது என் வீட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் வீட்டில் சாப்பிட ஆசைபட்டார்களே என்பதற்காக செய்த  போது  எடுத்த  படங்கள். இன்றுதான் படத்துக்கு தகுந்த பதிவாக்கினேன். பார்த்து படித்ததற்கு நன்றிகள்.Wednesday, July 27, 2016

ஆடிக்கிருத்திகைமுருகா

அண்ணலின் திருப்புகழைச் சொல்லிட அவன் அன்பு

அண்ணனின் மலர்தாழ் பணிந்து ஆரம்பிப்போம்.

அகிலத்தை தன் வயிற்றினிலே ஆழமாக அடக்கியவனை,

அன்புடன் அட்சதைகள் தூவி ஆசிகள் தர வேண்டிடுவோம்.

விசனங்கள் அறவே களையும் வேலனுக்கு மூத்தோனை,

விநாயக மூர்த்தியை நாம் கைக் ௬ப்பித் தொழுதிடுவோம்.

விக்கினங்கள் ஏதுமின்றி அவன் தம்பியவன் துதிபாட, நம்

விருப்பமதை தெரிவித்தே அவனருளை வேண்டி நிற்போம்.

                                               ஓம் விக்கினேஷ்வராய நமஃ
உலகினிற்கே தாய் தந்தையாக விளங்கி அருள்பாலித்து வரும் அம்மையப்பனுக்கு  இரண்டாவது புதல்வனாக, அசுரர்களை வதைத்து மூவுலகையும் காத்து ரட்சிக்கும் நோக்கத்துடன், முருகப் பெருமான் அவதரித்து வளர்ந்து வந்தார். அவ்வாறு வளர்ந்து வந்த போது அதற்குரிய தகுதியான நேரத்தில் அசுரர்களை வதைத்து தேவர்களையும் மூவுலகையும் காத்தருளி,  தெய்வயானை, வள்ளியை இரு துணைவியராய் கொண்டு தம்பதி சமேதரராய் பூலோகத்தில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன்என்ற சொல் வழக்குப்படி இன்றளவும் மக்களுக்கு அருள் வழங்கி வருகிறார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அவ்வாறு சிறு குழந்தையாய் முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு வந்த போது, கார்த்திகைப் பெண்களின் சிறப்புக்கள் பெருமைகள் என்றும் நீடித்திருக்கும் வகையில், அவர்களை கார்த்திகை நட்சத்திரங்களாக வானில் என்றும் சுடருடன் பிரகாசிக்க சிவபெருமான் வாழ்த்தியருளினார். மேலும் அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தற்காக, முருகன்கார்த்திகேயன்என்ற பெயருடனும் அழைக்கப்பட்டார். அவர்களை உலக மக்களும் போற்றி வழிபட வேண்டுமென்பதற்காக, மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த நாளாக கருதப்பட்டு அன்று குன்றுகள்தோறும் அமர்ந்திருக்கும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. அதில் ஆடியில் வரும்ஆடிக்கிருத்திகையும், தை மாதத்தில் வரும்தைக்கிருத்திகையும், மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

தமிழ் மாதங்களில் ஆடியிலிருந்து, மார்கழி வரைதட்சிணாயணம்எனவும் தை மாதத்திலிருந்து, ஆனி வரைஉத்திராயணம்எனவும் இரு புண்ணிய காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆடி முதல் தேதி ஆடிப்பண்டிகையுடன் ஆரம்பித்து பின் வரும் மாதங்கள் எல்லாம் ஒவ்வொரு பண்டிகையாக கழிந்து தைமாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை வரை அனைத்து தெய்வங்களையும் பூஜிக்கும் விஷேடங்களாக வருகிறது. முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகை  ஆரம்பித்து தைக்கிருத்திகை வரைகிருத்திகைவிரதமிருந்து  வேண்டுதலுக் கேற்றபடி காவடிகள் எடுத்து தாம் வேண்டும் வண்ணம் தத்தம் விருப்பங்கள் நிறைவேற முருகனை அன்புடன் தொழுவர். முருகனும் தம் பக்தர்களுக்கு வேண்டியதை அருளி அவர்கள் அன்புடனும், மட்டற்ற நம்பிக்கையுடனும் சுமக்கும் காவடிகளை மனதாற ஏற்றுக்கொண்டு, அவர்கள் விரும்பும் செயல்களை இனிதே நிறைவேற்றி வைப்பார்.

ஒரு சமயம் சிவனின் ஆணையின்படி அகத்திய முனிவர் இரு பெரும் மலைகளை சுமந்து மருத மலையில் வைப்பதற்காக சென்று கொண்டிருந்தார். “ஐயனே.! நானோ குறு முனி என்னால் இந்த செயலை சரியே நிறைவேற்ற இயலுமா”? என்ற அகத்தியரின் சந்தேக கேள்விக்கு, “அன்றொரு நாள் எம் திருமணவைபவத்தைக் காண  மூவுலகிலிருந்தும் ஒருங்கே ஒன்று சேர்ந்த அனைவரின் பாரம் தாங்கமாட்டாமல், வடதிசை தாழ, உலகம் சமனடைய தென்திசைக்கு உன் ஒருவனை மட்டுந்தானே அனுப்பினேன். உன்னால் அன்று நடந்த அதியத்தை மறந்து விட்டாயா.? உன் திறமையை யாமறிவோம்.! அதனால் இந்த செயலும் உன்னால் பாதகமின்றி முடிவடையும். சென்று வா.! என்று புன்னகையுடன் பனித்த ஈசனின் ௬ற்றுக்கு கட்டுப்பட்டு, பணியை முடிக்கும் உறுதியான மனமுடன் அகத்தியர் சென்று கொண்டிருந்தார். அவருக்கும் தெரியும்.! ஐயனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.! இதனால், ஏதோ நன்மைகள் நிகழப் போகிறதென அறிந்தவர்தான்.! அதனால் மறு பேச்சு ஏதுமின்றி மலைகளை சுமந்தபடி தம் பயணத்தை துவக்கினார்.

அவர் செல்லும் வழியில் இடும்பன் என்றொரு அரக்கன் இறைபக்தியுடன் தவமியற்றிக் கொண்டிருந்தான். அவன் அரக்கனே ஆனாலும், நல்லவன் அவனும், அவன் மனைவி இடும்பியும்,முருகப் பெருமானின் மேல் அதிக அன்பு கொண்டு பக்தி செலுத்தி வருகிறவர்கள்.  இடும்பனும் அகத்தியரின் பெருமைகளை முழுதும் உணர்ந்தவன். ஆதலால் தன் இருப்பிடம் ஏகிய அகத்திய முனிவரின் தாழ் பணிந்துசுவாமி, வாருங்கள் .! தங்களது இப்பயணத்தின் நோக்கத்தை அறியலாமா.? தங்களுக்கு இச்சிறியேன் ஏதாவது உதவி செய்ய அனுமதி தாருங்கள். முடிந்தால் நான் இம் மலைகளை தாங்கள் சொல்லுமிடத்தில் சென்று அமர்த்தி விட்டு வருகிறேன்.! என்னிடம் தாருங்கள் .”என பணிவுடன் கேட்கவும், “அப்பா ஈசனின் விருப்பபடி இம்மலைகளை மருத மலையில் வைப்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன். ஆனாலும், நீ எனக்கு உதவ முடிந்தால் எனக்கும் சம்மதமே.!” என அனைத்து விபரங்கள் ௬றியவுடன், இடும்பன் சந்தோஷத்துடன் அகத்தியரை வணங்கி  இரு மலைகளையும் பெற்று, அருகிலிருந்த பெரிய மரமொன்றை தன் பலத்தினால் வேருடன் சாய்தெடுத்து, அதன் இரு முனைகளிலும் இரு மலைகளையும் இணைத்து  தன் இரு தோள்களிலும் சமமாக இருக்கும்படி செய்து, “தாங்கள் இவ்விடமே சற்று இளைப்பாறுங்கள். நான் விரைவில் சென்று இம்மலைகளை அங்கு சேர்பித்து விட்டு வருகிறேன்.” என்று புறப்பட்டான்.

அவனும் செல்லும் வழியில் பழனி மலையில் சற்று ஆசுவாசபடுத்திக் கொள்வதற்காக அந்த இரு மலைகளை வைத்ததும், அந்த மலைகள் வைத்த இடத்திலே பதிந்து கொண்டன. மறுபடி அதை எடுக்க முடியாமல், தடுமாறும் சமயம், முருகனை சிறு பாலகனாக வந்து, அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விளையாடவே, இச்சிறுவனால்தான் தன் பணி பாதிக்கிறது என்ற எண்ணத்தில், முருகனுடன் இடும்பன் சண்டையிட, முடிவில் முருகனின் தாக்குதலில் மரணத்தை தழுவினான். இது விபரம் அறிந்த இடும்பி, தன் கணவனின் பிரிவை தாங்க முடியாதவளாய், அழுது முருகனை துதித்து போற்ற, முருகன் இடும்பனை மீண்டும் உயிர்ப்பித்து தந்து அந்த அன்பான தம்பதிகளை நோக்கி, இடும்பா, உங்கள் பக்தியை மெச்சினோம். இது யாவும் எம்முடைய திருவிளையாடல்தான்.! என் பக்தனான நீ  உன் தோள்களில்  காவடியாய் இரு மலைகளை சுமந்து  உன் பிறவி பாவத்தை களைந்து என்னருள் பெற்றாய்.! இனி  உன் செய்கையை போல் வரும் காலத்தில் எம் பக்தர்கள் அவர்கள் சக்திக்கு உட்பட்டாற் போல், காவடிகளை சுமந்து வந்து  தத்தம் கோரிக்கைகளை என்வசம் சமர்பித்தால், அவைகளை நான் நிறைவேற்றி வைப்பேன். நீயும் இனி அவர்களுக்கு தெய்வமாயிருந்து அவர்கள் சுமந்து வரும் காவடியின் பாரங்களை இலகுவாக்கி  அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை பத்திரமாக என்னிடம் கொண்டு சேர்ப்பாயாக.! இதுவே நீ எமக்கு என்றும் ஆற்றும் தொண்டு.எனக் ௬றி அருளவே மகிழ்வுற்ற இடும்பன் தெய்வமாகி இன்றளவும் நமக்காக முருகன் இட்ட பணியை நிறைவேற்றி வருகிறான். இவ்வாறாக காவடியின் வரலாற்றுப் புகழ் தொடங்கியது
                 

"இடும்பனை காத்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா, கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா"
 என்று தினம் கவசம் பாடி அனைவரும் கந்தவேல் முருகனை துதிப்போம்.


அன்றும், இன்றும் ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகையன்று பக்தர்கள் காவடி சுமந்து தம்முடைய வேண்டுதல்களை முருகனிடம் தந்து வேண்டி பலனடைந்து வருகிறார்கள். நாமும் என்றும் மனித நேயமெனும்காவடியையும், “அன்பு பாசமெனும்மற்றொரு காவடியை தோள்களில் ஏந்திச்சென்று குன்றுகள்தோறும் குடிகொண்டிருக்கும் குமரனை கண்டு தரிசித்து அவனிடம் சமர்பித்துஉலகஅமைதிவேண்டி பெற்று வருவோமா?


வடிவேல் முருகனுக்கு அரோகரா.! சக்திவேல் முருகனுக்கு அரோகரா.!

வண்ணமயில் முருகனுக்கும், ஞானவேல் முருகனுக்கும் அரோகரா!


படங்கள்: நன்றி கூகுள்.