Tuesday, June 29, 2021

தொடர் கதை...

வணக்கம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும். எனக்கு வாரத்துக்கு ஒன்றாகவாவது  புதிதாக ஏதேனும் பதிவுகள் எழுதும் ஆவல் அப்போதிலிருந்து  இப்போது வரை என்றுமே உள்ளது.  முன்பு அது ஒரளவு கைகூடி வந்தது. ஏனோ கொஞ்ச நாட்களாக அது தடைப்பட்டு போகிறது. (மன, உடல் பாதிப்புகள்தான் காரணம்) சிலவற்றை எழுதி பாதி, பாதியாக நிறுத்தி உள்ளேன். அதனை நல்லபடியாக முடிக்க இறைவன்தான் துணையாக வர வேண்டும். இப்போது பதிவுலகில் அனைவரையும் என்னால் முடிந்த வரை தினமும் அவர்களின் பதிவுகளை படித்து கருத்துக்கள் இட்டு என் எழுதும் ஆவலை இறைவன் நிறைவேற்றி வைக்கிறான். அதற்கு "அவனுக்கு" என் தாழ்மையான நன்றிகள். இன்றைய பதிவும் மறு பதிவானலும் பரவாயில்லையென  இப்படி என்றோ ஒருநாள் பதிவிட்டு உங்களை சந்திக்கும் ஆவலில் வர முயற்சித்திருக்கிறேன் .கதைகள் பற்றிய பதிவுகளை படித்ததும், நாமும் ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாமே என்ற எண்ணமும் காரணம். இப்பதிவுக்கு வந்து கருத்துக்கள் தந்து ஊக்குவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இந்தக்கதை நான் வலைப் பதிவில் கால் பதித்த போது  எழுதியது. அதை எப்போதும் போல் நீ.. ண்.. ட.. கதையாக எழுதியதில்  படிப்பதற்கு எவருக்கும் விருப்பம்  இருந்ததில்லை. அப்போது எனக்கு வலைத்தள நட்புகளும் குறுகிய வட்டம். ஆனாலும், அந்த சமயத்தில் என் வார்த்தைக்கு மதிப்பு தந்து நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி வந்து இக்கதை படித்து கருத்திட்ட ஒரே ஒரு சகோதரருக்கு என். 🙏. எப்போதும். அவரும் வந்து இப்போது இதை படிக்கலாம். அதற்கு அவருக்கு இப்போதும்..🙏. ஆனால், இப்போது அவரும் அதை வெளிக்காட்டாமல் படித்தால் "அது யார்" என்பது சஸ்பென்ஸாக இருக்கும். கதையின் இறுதிப் பகுதியில் நானே அவரைக் குறிப்பிடுகிறேன்.  

அன்று அவரின் ஆலோசனைபடி கதையை கூறாக்கி (கூராக்கி அல்ல..) அப்படியே தந்திருக்கிறேன்.  இப்போது படித்து கருத்திடும் சகோதர சகோதரிகளுக்கும் அன்பான என் நன்றிகள். 🙏. 

தோ ந்தக்தை.....

கதை பகுதி. 1.

பகல், வெயிலின் தகிப்புக்கு ஈடு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டு வாசலிலிருக்கும், பெரிய மரத்தடியிலிருந்த கயிற்று கட்டில் அந்த வீட்டின் சொந்தகாரரும், பெரியவருமான சதாசிவத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. 

"நானுந்தான். .....! பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவரை பார்க்காமலிருப்பது கண் இருந்தும் குருடனாய் இருப்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளேனும் பார்க்காமல் இருக்கும் உறவா எங்களுடையது. 

பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா அவர் வீட்டின் கதவை தட்டி "மாமா, மாமா" என்று குரல் உசத்தி அழைத்து விட்டு பதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாள்.

சதாசிவம் அந்த ஊருக்கு வேலை மாறுதல் காரணமாக வந்தவர், அந்த வேலை அவ்வூரிலேயே நிரந்தரமாக ஆனவுடன், இந்தவீட்டை கட்டிக்கொண்டு தன் மனைவியுடன் குடியேறினார். இயற்கையின்பால் அவர் கொண்ட பற்றின் காரணமாக, அவர் வீட்டின் முன்னும் பின்னும் செடிகொடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்தன. அன்பான நல்ல மனைவி, வீடு, நிறைந்த வேலை, என்று வாழ்க்கை வசதிகளை அவருக்கு தந்த இறைவன், கொடுக்க மறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அவர் அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல் தன் உறவுக்கார குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஊரில் பழகியவர்களும் உறவும் நச்சரித்த காரணத்தால், மிகவும் சிரமத்துடன் நான்கு குழந்தைகளுடன், வறுமையில் காலம் கழித்து வந்த அவருடைய ஒன்று விட்ட சகோதரி முறையுடைய அகிலாவிற்கு கடைசியாக பிறந்த ஆண்குழந்தையை, அவள் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். குழந்தையும் அவரிடமும், அவர் மனைவியிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவருடைய முழு கவனமும், குழந்தையுடன் இருக்க, அவர் இதுநாளும் வளர்த்து வந்த செடி கொடிகள் சரேலென்று காணமல் போயின. ஆனாலும் வீட்டு வாசலிருந்த மரம் மட்டும், "நீ என்னை கவனிக்காது விட்டாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்" , என்று பாசத்துடன் அவரை அரவணைத்து கொள்வது போல, அவர் வீட்டின் மேல் சாய்வது போன்ற தோற்றத்துடன் வளர ஆரம்பித்தது. குழந்தையும் மரமும் ஒரு சேர நன்கு வளர்ந்தன.

வருடங்கள் உருண்டோடி சதாசிவத்தின் பையனை வாலிபனாக்கியது. அவனை நல்ல முறையில் படிக்க வைத்து, அவனின் படிப்புகேற்ற ஒரு வேலையும் கிடைத்தவுடன், அவனுக்கு உரிய வயதில் ஒரு திருமணத்தையும் நடத்தி, சிலவருடங்களில் பேரனுடனும் கொஞ்சி மகிழ்ந்தார் சதாசிவம். 

கணவருடன் அவர் மனம் கோணமல் இதுநாள்வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்த அவர் மனைவி தன் கணவரையும், வீட்டையும் மகன், மருமகளிடம் ஒப்படைத்து விட்டு திருப்தியுடன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாள். அன்பான மனைவியின் மறைவுக்குப்பின் வயதின் மூப்பும், தனிமையும் சேர்ந்து கொள்ள சதாசிவம், தன் மகனையும், வாசலில் இருக்கும் மரத்தையும் துணையாக கருதி வாழ்ந்து வந்தார்.

கட்டில் சப்தம் கேட்டு கலைந்தேன். சதாசிவம், "அப்பாடா, என்று முனகியவாறு வந்தமர்ந்தார். அவர் முகம் மனச்சோர்வை வெளிக்காட்டியது. அவர் உடல் நலமில்லாமலிருப்பதை முகம் கண்ணாடியாய் காட்டியது என்னை வருத்தியது. மனைவியின் மறைவுக்குப் பின் மனிதர் மிகவும் தளர்ந்துதான் போய் விட்டார், என்ன செய்வது,. ..? என்று நான் வருந்தி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா இவரை பார்த்ததும் ஓடிவந்தாள். 

"மாமா, இப்ப உடம்பு எப்படியிருக்கு? காலையிலே நான் வந்து கதவை தட்டிப் பாத்தேன். நீங்க எந்திரிக்கலே, ஒரே கவலையாயிருந்திச்சி, இப்ப காய்ச்சல் குறைஞ்சிருக்கா? எப்படியிருக்கு மாமா", என்று வாஞ்சையுடன் விசாரித்தாள்.

"பரவாயில்லையம்மா, பாவம்; உனக்குத்தான் சிரமம். உன் வீட்டிலுள்ளவர்களை கவனிச்சிக்கிறது போறாது"னு, நடுநடுவே என்னை வேறே பார்த்துக்க வேண்டியதாயிடிச்சு, எல்லாம் என் நேரம்", என்று நொந்து கொண்டார்.

"இதுலே என்ன கஷ்டம் மாமா. .. , என் அப்பாவை நான் கவனிக்க மாட்டேனா, அதுமாதிரிதான் இதுவும்... இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க,.! " என்றவள்," உங்களுக்கு சாப்பிட இன்றாவது இட்லி எடுத்து வரட்டுமா?" என்றாள் அக்கறையுடன்.

"வேண்டாம்மா, கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிட்டுகிறேன், அப்புறமா, நேற்று மாதிரி வெறும் கஞ்சி மட்டும் போட்டு கொடு போதும். இட்லிபெல்லாம்  வேண்டாம்.... வாய்க்கு இன்னமும் ஒன்றும் பிடிக்கவில்லை... ." என்று அவளை தடுத்தார்.

" சரி மாமா, உங்க விருப்பம்...  நான் உங்க வீட்டை பெருக்கி சுத்தபடுத்துறேன்", என்றபடி அவரின் அனுமதிக்கு காத்திராமல் அவர் வீட்டினுள் சென்றாள் சுசீலா.

"பாவம், இந்த பெண்... மகனும் மருமகளும் தவிர்க்க முடியாத உறவு வீட்டின் திருமணத்திற்கு ஒரு வாரம் அவரை தனிமையில் விட்டு சென்ற பின் இவள்தான் பாசத்துடன் அவரை கவனித்து கொள்கிறாள். இதில் இரண்டு நாட்களாக சற்று உடல் உபாதை வேறு... " என்று சதாசிவம் மனம் கனிந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அடுத்த தெருவிலிருக்கும் அவருடைய நண்பர் பாலு சற்று வேகமாக, ஓடி வராத குறையாக மூச்சிறைக்க வந்தார்.

தொடர்ந்து வரும்....