Showing posts with label உலகில் உதித்த நாள். Show all posts
Showing posts with label உலகில் உதித்த நாள். Show all posts

Wednesday, April 7, 2021

விரும்பும் வேண்டுதல்.

பல்லாயிரம்  ஏன்.. அதற்கும் மேலாக பல கோடி செயல்கள் தன்னால்தான் நடக்கிறது என்று இந்த மானிடம் தற்பெருமை கொண்டு தறிகெட்டு சுய மகிழ்ச்சியில் இல்லை, பிறர் புகழ்ச்சியில் பாடி, ஆடி மகிழ்ந்திருந்தாலும், உலகில் இரண்டு விஷயங்கள் (பிறப்பு, இறப்பு) கண்டிப்பாக இறைவன் என்றொருவன் நம்மை (மானுடப் பிறவியை) ஆட்டுவிக்கும் கலையில் தேர்ச்சிப் பெற்று நம்முடனேயே இருப்பதை உணர்த்தி சொல்கிறது. 

மனம், பணம், பயிற்சி, முயற்சி, பெருமை, சிறுமை, வாழ்வு. தாழ்வு, எல்லாவற்றிலும் நம்மை பிணைத்தெடுக்கும் நூல் "அவன்" கையில்தான் உள்ளது. அதனைக் கொண்டு பொம்மைகளாகிய நம்மை ஆட்டி "அவன்" பெறும் மகிழ்ச்சி "அவனுக்கு" மட்டுமே உரித்தானது. 

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். 

செய்ய முடியாதவன் போதிக்கிறான். 

இது இன்றைக்கு நான் படித்த வாசகம். இதில் முடிந்தவனின் / முடியாதவனின், சாதிப்பதும்  போதிப்பதும் "அவன்" யோசனையில் வந்ததுதானே....! ஆக "அவனின்றி ஓர் அணுவும் அசையாது." 

ஆகா..! இவர்கள் இன்று போதிக்க ஆரம்பித்து விட்டார்களே..!  "ரம்பத்தை" எப்போதும் கையில் வைத்திருக்கும் இவர்களுக்கு இன்று "ரொம்பவும்" முத்தி விட்டதா....? என நீங்கள் எண்ணும் முன்,  உண்மையை சொல்லி விடுகிறேன். இன்றுதான் இந்தப்பதிவுக்கு நாள் நன்றாக இருப்பதாக  என் ஆஸ்தான ஜோதிடர் (அதுவும்" அவன்"தான்) சொன்னார்.  (அதனால்தான் இந்த அவசரப் பதிவும், அதன் விளைவாய்  கூடவே தொத்திக் கொண்ட என்னுடைய முந்தைய பதிவும்.) ஏனென்றால்் என்னை இந்த நாளில்  உலகத்தில் தான் விளையாடும் ஒரு பொம்மையாக உருவாக்கியவன் "அவன்"தானே....! 

இதோ என் முந்தைய பதிவு. இதில் "என்"என்ற வார்த்தையில் அகங்காரம் தெரிகிறது.  மன்னிக்கவும். அதனால் அவன் எழுத வைத்தப் பதிவு என்றே  இதனை குறிப்பிடுகிறேன். 


முருகா, 
உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள்என்னைக் 
கொஞ்சம் பார்த்தும்
பாராமலுமிருக்க
மற்ற இரு முகத்தின்,
இரு விழிகளின்,
ஓரப்பார்வை
என்னைச்சிறிது
தொட்டும்
தொடாமலுமிருக்க
தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் 
முழுப்பார்வையும்,
முழு திக்கிலும்
பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும்
முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக 
உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல்
என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து 
உன்னிடமிருந்துமறு
மொழியொன்றையும்
தினம் தினம் 
எதிர்பார்க்கின்றதே!


 பறவையாய் நான் 
பிறந்திருந்தாலும்என்
பறக்கும் திறனினால்
பந்தென கிளம்பி,
உன்னைச்சுற்றும் 
சில பறவைகளோடு,
உள்ளம் களிக்க 
உன்னைத் தொட்டுஎன்
சிறகுகளால்உனை 
தினம் வருடி,
சிறகடித்துவானில் 
வட்டமிடும் பிற
பறவைகளோடுஒரு 
பறவையாய்உன்னை
பலகாலம் பரவசமாய் சுற்றி 
வந்திருபபேன்.


 

மலர்களாய்நான் 
மலர்ந்திருந்தாலும்,
மணம் வீசும் அச்சிறு 
பொழுதில்உன்
மார் மீதும்தோள் மீதும்
மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் 
மாறி மணந்திருக்க
மகிழ்ந்திருப்பேன்.
வசமுள்ள மனதுடனே,  
உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும்நான்
வாழும் வரை வசித்திருப்பேன்


மேகமாய்நான் 
ஊர்ந்திருந்தாலும்
மோகமுற்ற மனதுடனேகடும்
வேகமாய் அவ்விடம் விட்டு 
நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் 
விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் 
அணைந்திடவே,
தங்கு தடையில்லாநீர் 
தாரையாகியிருப்பேன்.



வான் நிலவாய் நான் 
நீ(வாழ்)ந்தி(யி)ருந்தாலும்,
நீக்கமுற நிறைந்திருக்கும்
என்
தண்ணொளியால்
உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு 
மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம்
உன்னை
இரசித்துகரையாமல்
கரைந்திடவும்,
இமையோன் மைந்தா
உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் 
பெற்றிடவும்,
இயன்றவரை 
முயன்றிருப்பேன்


உமையவளின் அருமைந்தா!
உன்னைச் சுற்றிச் 
சூழ்ந்திருக்கும்மற்ற
மரங்களினிடையே
ஒரு மரமாக
மண்ணோடு நான் 
நின்றிருந்தாலும்என்
கிளைகள் ஆடும் 
அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக 
நான் கலந்துஉன்
காதோடு தினம் உறவாடி
என்னை
"காக்ககாக்க!," என்றே 
துதி பாடிநின்
கழலடியை மறவாதிருக்க 
பண் பாடிஎன்
மனதின்எண்ணமெல்லாம்இந்த
மால் மருகனை விட்டகலாது, என்றேனும் ஒருநாளில்,
மண்ணின் மடியில் 
சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் 
வரத்தை,
கண் மூடிமனம் கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம்
எந்தன்
கந்தனை வேண்டியபடி
நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் 
களித்திருப்பேன்.


ஆனால், 
இவற்றிலொன்றிலும்
நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் 
மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு 
காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு
உன்னைத்
தொடவும் நேரம்  
பிறக்கவில்லை!
தொடரவும்வழி 
அமையவில்லைஎன்னைத்
தொடர்ந்து வரும் 
பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது
இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்
தற்சமயம் நின் கருணைஅக்
கட்டவிழ்த்து போனதில்
உந்தன்
காட்சி கிடைத்திட
என் கவலை அகன்றிட,
கந்தாஎனை நோக்கி 
இனியேனும்மனம்
களிப்புற கருணைக்கண் 
திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் 
சிரத்தையோடிருக்க,
கந்தனேஉன் சிந்தைதனில்நீ
எந்தனையும்சற்று 
நினைத்திருக்க, வேண்டுமென
வந்தனையோடு 
துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்
என்
மரணம் என்னை தொடும் 
வரைஉன்னை
மறவாத வரம் தந்தருள 
வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை
தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் 
போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து 
யாசிக்கின்றேன்.!!!!

இதைப் இப்பிறவியில் "அவன்" தந்தருள வேண்டுமென இந்நாளில் மட்டுமல்ல.. . . எந்நாளும் வேண்டிக் கொள்கிறேன். 🙏. மனிதபிறவிக்கென்றே தோன்றும் சுயநல எண்ணங்கள் எனக்குள்ளும் எழுவது இயல்புதானே.. ! இன்று இதை அன்போடு படிக்கும் வலைத்தள உறவுகளின் பண்பான உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 🙏.